search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    அழகர்மலை உச்சியில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதையொட்டி சாமி அன்னவாகனத்தில் எழுந்தருளினார்.
    அழகர்மலை உச்சியில் முருகபெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில், அவ்வையாருக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு நாவல் மரத்திலிருந்து முருகப்பெருமான் காட்சி தந்த புனித ஸ்தலமாக புராண வரலாறு கூறுகிறது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் போது ஸ்தலவிருட்சமான நாவல் மரம் முன்பு சூரசம்ஹாரம் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா முக்கியமானது.

    இந்த வருடத்திருவிழா நேற்று காலை பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், மற்றும் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. பின்னர் உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி அன்னவாகனத்தில் கோவில் பிரகாரத்தில் எழுந்தருளினார். இதில் சுற்றுவட்டார பகுதி, வெளி மாவட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கமான பூஜைகளும், காமதேனு வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. நாளை 10-ந் தேதி காலையில் யானை வாகனத்திலும், 11-ந் தேதி ஆட்டு கிடாய் வாகனத்திலும், 12-ந் தேதி சப்பர வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 13-ந் தேதி காலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்ஹார விழா குதிரை வாகன புறப்பாட்டுடன் நடக்கிறது. மாலை 4.35 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெற்ற பின்பு, 5.40 மணிக்கு முருகபெருமான் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து, ஸ்தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார காட்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் சாந்த அபிஷேகம் நடைபெற்ற பின்பு மறுநாள் காலை 10.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவத்துடனும் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாக்காலங்களில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
    அறுபடைவீடுகளுள் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று காலை காலசந்தி பூஜை, விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி-தெய்வானை, முத்துக்குமாரசுவாமி ஆகியோர்களுக்கு காப்புகட்டு நடந்தது.

    அதைத்தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலில் உச்சிகால பூஜையில் மூலவருக்கு காப்புகட்டும், மலைக்கோவிலில் உச்சிகால பூஜையின் போது கல்ப பூஜையும் நடந்தது. அதன்பின்னர் விநாயகர், மூலவர், உற்சவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், கொடிமரம், மயில், நவவீரர்கள் ஆகியோருக்கு காப்புகட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பின்னர் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்புகட்டு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காப்பு கட்டிக்கொண்டனர். மூலவர், பரிவார தெய்வங்கள் மற்றும் பக்தர்களுக்கு கோவில்குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணிய குருக்கள், சந்திரமவுளி ஆகியோர் காப்பு கட்டிவிட்டனர்.

    7 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் சின்னக்குமாரர், சண்முகர் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். வருகிற 13-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு மலைக்கோவில் நடைதிறப்பும், உடன் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜை, படையல், நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. பின்னர் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், மதியம் 3 மணிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் விசேஷ பூஜைக்கு பின்பு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், பின்னர் சின்னக்குமாரர், வில்-அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீரபாகு, நவவீரர்களுடன் சேர்ந்து போருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கந்தசஷ்டி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வள்ளி-தெய்வானையுடன் சண்முகர் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    அதன் பின்னர் மலைக்கோவில் நடை அடைக்கப்படும். தொடர்ந்து சின்னக்குமாரர், தங்க சப்பரத்தில் எழுந்தருளி பாதவிநாயகர் கோவில் வந்து அடைதல் நிகழ்ச்சியும், பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பாதவிநாயகர் கோவில் வந்தடையும் நிகழ்ச்சியும் நடைபெறும். அதனை தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலில் குழந்தை வேலாயுத சுவாமியிடம் சக்திவேல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படும். தொடர்ந்து சக்திவேல் பாதவிநாயகர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு பெரிய தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரரிடம் வைத்து தீபாராதனை நடத்தப்பட்டு போருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அன்றைய தினம் மாலை 6 மணிக்கு அடிவாரம் வடக்கு கிரிவீதியில் யானைமுக சூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோப சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும். முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளலும், சின்னக்குமாரர் சந்திப்பும், தீபாராதனையும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவும் இரவு 9 மணிக்கு மலைக்கோவில் சம்ரோஜனை பூஜைக்கு பின்பு ராக்கால பூஜை நடைபெறும். விழாவில் வருகிற 14-ந்தேதி காலை 9 மணிக்கு சண்முகர், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணமும், அன்று இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    கந்தசஷ்டி விழாவையொட்டி வருகிற 13-ந்தேதி மலைக்கோவிலில் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கந்தசஷ்டி விழாவையொட்டி மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகார திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் மாலை 6 மணிக்கு சமய செற்பொழிவு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீசுவரர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. 45 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விழா நடக்கிறது.
    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீசுவரர் கோவில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கோவில் நிர்வாகம் மற்றும் அய்யர்மலை சூரசம்ஹார விழா அறக்கட்டளை சார்பில் கந்த சஷ்டி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதில் சூரசம்ஹாரத்திற்கு முக்கியமான ஒன்றான சூரனின் சிலை மற்றும் 4 முகங்களான கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், பானுகோபன், சூரபத்மன் ஆகியவை சுவாமிமலையில் செய்யப்பட்டு அய்யர்மலை ரத்தினகிரீசுவரர் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதையடுத்து கந்த சஷ்டி விழாவுக்காக கடந்த 4-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று முன்தினம் மலைமேல் இருந்து வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து விழா நேற்று தொடங்கியது. 7 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை விக்னேஷ்வரபூஜை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மாலையில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு மலையை சுற்றிலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது. சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் கந்த சஷ்டி விழா, சூரசம்ஹாரம் நடப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கந்தசஷ்டியையொட்டி புன்னம்சத்திரம் அருகே உள்ள பாலமலை முருகன் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பழச்சாறு, சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். வருகிற 13-ந் தேதி மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    இதேபோல், வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டியையொட்டி 18 வகையான பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கரூர் வெண்ணெய்மலை முருகன் கோவிலிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 9.30 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமிக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகருக்கும் காப்பு கட்டப்பட்டது. இதனையடுத்து முருகப் பெருமானின் பிரதிநிதியாக கோவில் முதல் ஸ்தானிகர் வசந்த் பட்டர் தனது கரத்தில் காப்பு கட்டி விரதம் தொடங்கினார்.

    பின்னர் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், ரமேஷ், சொக்கு சுப்பிரமணியன், செல்லப்பா ஆகிய பட்டர்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டினர். காப்பு கட்டிக் கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப மிளகு, துளசி, பால் மற்றும் ஒரு வேளை சாப்பாடு ஆகிய விரதங்களை கடைபிடித்தனர்.

    திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகின்ற 12-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவிலுக்குள் ஆலய பணியாளர் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக முருகப்பெருமானின் தாயாரான கோவர்த்தனாம்பிகையிடமிருந்து சக்திவேலை பெற்று கம்பத்தடி மண்டபத்தில் உள்ள மகாநந்தியை வலம் வந்து, சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் முருகப் பெருமானின் திருக்கரத்தில் வேல் சமர்ப்பிக்கப்படுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ந் தேதி மாலை 6 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்ஹாரம் நடக்கிறது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 14-ந் தேதி காலை கிரிவல பாதையில் சட்டத் தேரோட்டமும், மாலையில் கருவறையில் முருகப் பெருமானுக்கு தங்க கவசம் அணிவித்தலும் நடக்கிறது. மேலும் சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், துர்க்கை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படி செய்யப்படுகிறது. மேலும் கருவறையில் பாவாடை தரிசனம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை பொறுத்தவரை தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாற்றப்படும். பின்னர் மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடை சாற்றப்படுகிறது. இந்த நடைமுறை திருவிழாக்காலங்களிலும் தொடருகிறது. இதில் கந்தசஷ்டி திருவிழாவில் மட்டும் ஆண்டு தோறும் 6 நாட்கள் திருவாட்சி மண்டபம் மற்றும் வெளி பிரகாரம் மற்றும் கோவிலின் பிரதான முன்வாசல் திறந்தே இருக்கும். காரணம் சஷ்டி விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலிலே தங்கி இருப்பதால் தான் என்பது குறிப்பிடத்தக்கது

    கந்தசஷ்டி திருவிழாவையொட்டி கோவிலுக்குள் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் 6 நாட்கள் தொடர்ந்து தினமும் காலையில் யாகசாலை பூஜை நடக்கிறது. இதில் பூஜை செய்யப்பட்ட எந்திர தகட்டை பக்தர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று கூறி சூரசம்ஹாரம் நாளில் ஒலிபெருக்கி மூலம் கோவில் நிர்வாகம் ஊழியர் கள் பக்தர்களுக்கு அறிவிப்பு செய்வார்கள். யாகசாலையில் பூஜிக்கப்பட்ட எந்திர தகடு மகிமை என்பதால் அதை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்லுவார்கள்.

    கந்த சஷ்டியையொட்டி சண்முகர் சன்னதியில் தினமும் காலை 11 மணிக்கும், மாலை 5 மணிக்கும் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு 6 நாட்களும் தலா 4 மணிநேரம் சண்முகார்ச்சனை நடக்கும். இதை விரதமிருக்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்ய கோவிலுக்குள் 7 இடங்களில் பிரமாண்ட டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தவிர தெய்வம், கந்தன் கருணை, வருவான் வடிவேலன், திருவிளையாடால் உள்ளிட்ட பக்தி சினிமா படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
    விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் பிரசித்திபெற்ற கொளஞ்சியப்பர் கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது.
    விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் பிரசித்திபெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சித்தி விநாயகர், கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கொளஞ்சியப்பர் தங்க காப்பு அலங்காரத்திலும், சித்தி விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி தினசரி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி காலையில் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வெள்ளித்தேர் புறப்பாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இதேபோல் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, விருத்தாசலம் வேடப்பர் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி பெருவிழா தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    கலியுக தெய்வமாக, அடியார்கள் நாடிய பொழுதெல்லாம் துணையாகத் திகழ்பவர் தமிழ்க் கடவுள் முருகன். கந்த சஷ்டி தொடங்கும் இன்று அவரது பெருமையை அறிந்து கொள்ளலாம்.
    கலியுக தெய்வமாக, அடியார்கள் நாடிய பொழுதெல்லாம் துணையாகத் திகழ்பவர் தமிழ்க் கடவுள் முருகன். ‘சேயோன் மேய மைவரை உலகம்’ என்று முருகப் பெருமானின் பெருமையையும் குன்றுதோறும் குமரன் கொண்டாடப்படுவதையும் தொல்காப்பியம் பேசும். தேவேந்திரன் தொடங்கி அருணகிரிநாதர், இராமலிங்க வள்ளலார், பாம்பன் சுவாமிகள் தொடர்ச்சியாக, கந்தக் கடவுளின் அருளால் உயர்வு பெற்றவர்கள் ஏராளம்.

    கந்தனுக்கு ஆறுமுகங்கள்; இதனாலேயே, ஆறுமுகர், ஷண்முகர், ஷடானனன் போன்ற திருநாமங்கள். முருகனுக்கு ஏன் மூவிரு முகங்கள்?

    நம்முடைய உள்மனக் குரலுக்கு விடையளிப்பதுபோல், பரமேஸ்வரனும் பரமேஸ்வரியும் இதே விஷயத்தைப் பேசிக் கொண்டார்கள். ‘இந்தப் பிள்ளைக்கு ஏன் ஆறுமுகங்கள்?’ என்று அம்மைவினவ, ஐயன் விடை கூறினார்: ‘எமக்கு ஐந்து முகங்கள்; உனக்கு ஒரு முகம் தேவி; ஐந்தும் ஒன்றும் இணைய, ஆறானது’ என்றாராம். சிவனாருக்கு ஐந்து முகங்கள். இவற்றோடு அம்பிகையின் அழகுமுகமும் சேர, பிள் ளைக்கு ஆறுமுகங்கள் கிட்டினவாம்.

    இதற்குள் இன்னும் ஏதேனும் தாத்பரியம் உண்டா? உண்டே!

    சிவனாரின் ஐந்து முகங்களும் ஒவ்வொரு திசையைப் பார்த்தவை; மொத்தத்தில், வெளிப்புறம் பார்த்தவை. ஆனால், அம்பிகையின் முகம் உள்முகம் பார்த்தது; அதாவது, அதோமுகம். நம் ஒவ்வொருவரின் ஜீவசக்தி ஆகிற அம்பிகை, நமக்குள்ளேயே நம்முடைய ஆற்றல் சக்தியாகச் சுருண்டு, தன்னுடைய முகத்தை உள்முகமாக வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது சக்தி தத்துவம். அப்படியானால், ஐயனும் அம்மையும் இணைந்து உருவாக்கும் ஆறு முகங்களுக்கு என்ன பொருள்?

    இப்பொருளை விளங்கிக்கொள்ளும் முன்னர், நம்முடைய அன்றாட வாழ்க்கையின் செயல்கள் சிலவற்றைச் சிந்தித்துப்பார்க்கலாம். நிறைய பணம் செலவாகிறது; கையிருப்பு குறைகிறது. - என்ன செய்வோம்? - மாதம் தொடங்கி, பனத்தை எங்கே, எப்படி எதற்காகச் செலவழித்தோம் என்று கணக்கெழுதுவோம்; வேண்டாத செலவுகள் கண்ணுக்குப் புலப்படும்; ஆராய்ந்து பார்த்து இனி மேல் குறைத்துக் கொள்வோம். நேரம் வீணாகிறது; வேலைகளைச் சரியாகச் செய்யமுடியவில்லை - என்ன செய்வோம்? - காலை முதல் இரவு வரை என்ன செய்தோம் எப்படிச் செய்தோம் என்று எழுதிப் பார்ப்போம்; தேவையில்லாத அரட்டை, கோபதாபம் போன்றவை தெரிய வரும்;

    அவற்றைக் குறைத்தால் நேரம் நிறையக்கிடைக்கும் என்பது புரியவரும். நம்முடைய குணத்தைப் பற்றி உறவினர்கள் குறை கூறுகிறார்கள் - என்ன செய்வோம்? - இரவு உட்கார்ந்து நம்மை நாமே எடை போட்டுப் பார்ப்போம்; தவறுகளைக் குறைத்துக் கொள்ள முயற்சிப்போம். அப்படியானால்... எந்தச் செயலையும் சூழலையும் அலசி ஆராய்ந்து நம்மை நாமே எடை போட்டுப் பார்த்தால், குறைகள் பலவற்றைக் களையலாம்; மேம்பாடு பெறலாம். அதாவது, உள்முகச் சிந்தனை வெற்றியைத் தரும். உள்முகச் சிந்தனையும் அதன் வெற்றியும் தாம் கந்தக்கடவுள்.

    எந்த நிலையிலும் நம்மைச் சுற்றி என்ன உள்ளது, என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகப் புறம் நோக்கிய முகங்கள்; அதே சமயத்தில், நமக்குள் என்ன இருக்கிறது என்பதைக் கண்டாராய்ந்து கொள்வதற்காக அகம் நோக்கிய முகம்; புறப்பார்வையால் தெரிவு பெற்று, அகப்பார்வையால் தெளிவு கொண்டு, இரண்டாலும் குறைகளைக் களைந்தால் நிறைவு கிட்டும். - அத்தகைய நிறைவே ஞான பண்டிதனான முருகன்.

    முருகனுடைய அவதாரம் ஏன் நிகழ்ந்தது?

    சூரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காகவே கந்தக் கடவுள் அவதாரம் எடுத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த சங்கதிதானே என்கிறீர்களா? சூரபத்மன் என்னும் அரக்கனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் முறையிட்டார்கள். சிவஅம்சம் மட்டுமே தன்னை அழிக்கமுடியும் என்று வேறு சூரன் வரம் வாங்கியிருந்தான். சூரனை அழிப்பதற்காகவே, சிவனுடைய நெற்றிக்கண்ணிலிருந்து சிவ குமாரராகக் கந்தக் கடவுள் அவதாரம் எடுத்தார். சூரனோடு போர் செய்வதற்கு முன்னாள், சூரனின் சகோதரர்களோடும் உறவினர்களோடும் போரிட்டு அவர் களை அடக்கினார்; அழித்தார். பின்னர், இறுதியாகவே சூரனையும் அழித்தார்.

    முருகனுடைய இந்த வரலாற்றில் நாம் அறியவேண்டிய அற்புதங்கள் யாவை?

    சூரனைப் பற்றி சிறிது காணலாம். அசுரர்களுக்குத் தலைவனாக இருந்தவன் அசுரேந்திரன். இவன் நல்லவன். நல்ல வழியில் வாழவேண்டும் என்று எண்ணியவன். அதே நேரத்தில் தன்னுடைய குலகுருவான சுக்ராசார்யரிடமும், பொதுவாகவே பெரியவர்களிடமும் மதிப்பு வைத்தவன். இவனுக்கு மகள் ஒருத்தி பிறந்தாள். குருவினிடத்தில் குழந்தை வளர்ந்தால் நன்மை கிட்டும் என்றெண்ணி, அந்த மகளை சுக்ரரிடம் ஒப்படைத்தான்.

    அவரோ அசுரகுரு. அசுர குலம் தழைக்க வேண்டுமென எண்ணினாரேயன்றி, தர்மம் தழைக்கவேண்டும் என்று எண்ணினார் இல்லை. ஆகவே, அந்தப் பெண்ணுக்கு ‘மாயை’ என்று பெயர் சூட்டி (பெயரே சரியில்லையே!), மாயாஜாலங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். பருவப் பெண்ணாக அவள் மலர்ந்ததும், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த மாமுனிவர் காச்யபரை அடையாளம் காட்டி, அவரை மயக்கி, அவர் வழியாகக் குலத்தைப் பெருக்கி, அசுரகுலம் விரியும்படி செய்யச் சொன்னார்.

    வளர்ப்புத் தந்தையின் வார்த்தை களைச் சிரமேற் கொண்ட மாயை, தவம் புரிந்த காச்யபரை மயக்கினாள். இர வின் முதல் ஜாமத்தில், இருவரும் அழகிய மானுடர்களாக இருந்த நிலையில் அவர்களுக்குப் பிறந்த மகனே அழகில் சிறந்தவனாகவும் ஒளி படைத்தவனாகவும் விளங்கிய சூரன். இரவின் இரண்டாம் ஜாமத்தில் அவல் பெண் சிங்கமாக மாற, அவரும் அதற்கேற்ப ஆண் சிங்கமாக மாற, அப்போது தோன்றிய மகனே சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசுரன்.

    இரவின் மூன்றாம் ஜாமத்தில் அவள் பெண் யானையானாள்; அவர் ஆண் யானை ஆனார்; அவர்களுக்கு அப்போது பிறந்தவன் யானைத் தலை கொண்ட தாரகாசுரன். இரவின் நான்காம் ஜாமத்தில், அவள் பெண் ஆடாக, அவர் ஆண் ஆடாக, அப்போது ஒரு மகள் பிறந்தாள்; அவளே ஆட்டு முகம் கொண்ட அஜமுகி (அஜம்-ஆடு).

    இந்தக் கதையைக் கேட்கும்போது மனத்துக்குள் ஏதோ குடைகிறதல்லவா? ஆமாம், சூரனும் அவனுடைய சொந்தக் காரர்களும் வேறு யாரோ அல்ல. நமக்குள் இருக்கும் பலவிதமான வக்கிரங் களும் குற்றங்களும்தாம்! எப்பேர்ப்பட்டவர் காச்யபர் - அவரே மாயைக்கு மயங்கினார். முதலில் மறுதலித்தவர் பின்னர் மயங்கினார். அறிவு சரியாக வேலை செய்யும்போது மாயைகளையும் மாயை போன்ற வசதி-ஆடம்பரங்களையும் மறுதலிக்கிற நாம், பின்னர், பேராசை,-மயக்கம்-,ஆசை,-சினம்-, இறுமாப்பு போன்ற குணங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மாயாஜாலத்தில் வீழ்ந்து விடுகிறோம்.

    அத்தகைய தருணங்களில் நமக்குள் துளிர்விட்டு ஜனிப்பவர்களே சூரனும் அவனு டைய சொந்தக் காரர்களும். காச்யபர்தான் தேவர்களுக்கும் தந்தை; சூரன் போன்ற அசுரர்களுக்கும் தந்தை. அசுரத்தனம் தலை தூக்காமல் நல்ல குணங்களும் தவமும் (தவம் என்பது சுயக்கட்டுப்பாடு, ஆடம் பரமின்மை) தலை தூக்கும் என்றால் நாமும் தேவர்கள் ஆவோம்; அசுரத்தனம் ஆட்டம் போட்டால் அசுரர்கள் ஆவோம்.

    சூரனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவன் இருந்தான்; அவன் பெயர் கிரவுஞ்சன். அவன் மலைபோல் வடிவம் எடுத்துக் கொள்வான். அந்த வழியாக வரக்கூடியவர் களைத் தன் னுடைய பள பளப்பால் மயக்குவான். ஆங்காங்கே தென்படும் பளபளப்பான குகைகளுக்குள் அவர்கள் புகு வார்கள். அவ்வாறு புகுந்தவுடன், குகையின் திசையை மாற்றி அவர்களை உள்ளுக்குள்ளேயே அழித்துவிடுவான்.

    அவன்போலத்தான் நம்மிடம் இருக்கும் ஆடம்பரமும் ஆட்டம் பாட்டமும் - ஏதோ மலைபோல் பெரியவர்கள் என்றெண்ணிக் கொண்டு, நம்மை நாமே உயர்த்திக் கொண்டு, வெற்றுப் பளபளப்பிலும் வேண்டாத மினுமினுப்பிலும் மயங்கிப்போகிற தன்மை. நம்முடைய தூய ஆன்மாவை மயக்கி ஆங்காங்கே இழுத்தடித்துக் கடைசியில் விழுங்கியே விடுகிற கிரவுஞ்சத்தனம்.
    அஜமுகி ஆட்டுமுகம் கொண்டவள். ஆடு சாது போல் தோற்றம் தரும்.

    ஆனால், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும். அறியாமை என்பதைக்கூட அறிந்துகொள்ளாமல், ஏதோ தனக்குத் தான் எல்லாம் தெரிந்ததுபோல் குதிக் கும்; முட்டும். அஜமுகி துர்வாசரை நாடி அவரை அராஜகமாக வசப்படுத்தியதால் தோன்றியவர்கள் வாதாபி, இல் வலன் என்னும் இரு மகன்கள். மூர்க்கத் தனமான அறியாமை துர்வாசச்சினத் தோடு சேர்ந்தால் பிறரைத் துன்பப்படுத் தும் குணங்கள் வந்துவிடும்.

    சூரனும் அவனுடைய சகோதரர் களுமாகச் சேர்த்து மொத்தம் மூவர். தாரகன் இளையவன்; யானைத்தலைக்காரன். யானை புத்திசாலி விலங்கு. ஆனால், தான் புத்திசாலி என்னும் நினைப்பிலேயே மதம் கொள்ளும். மனித புத்தியும் அப்படித்தான். தனக்கு எல்லாம் தெரியும் என்னும் எண்ணத்திலேயே மதம் பிடித்து அலையும். இளையவனுக்கும் மூத்தவனான சூரனுக்கும் நடுவில் சிங்கமுகன். சிங்கம் நேர்மையான விலங்கு. வீரமானது. ஆனால், காட்டுக்குள் சிக்கியதாலேயே அதன் வீரமும் நேர்மையும் வீணாகிப்போகின்றன. மனி தனுக்குள்ளும் அவ்வப்போது நேர்மையும் நியாயமும் வீரக் குரலும் தலை தூக்கும். ஆனாலும், பல நேரங்களில் அவற் றைப் பயன்படுத்தாமல், அதர்மக் காட்டுக்குள் சிக்கியே அவை அமுங்கிப்போகும்.

    தாரகன், சிங்கமுகன், சூரன் ஆகிய மூவரும் ஆன்மாவைப் பற்றி நிற்கும் மூன்று மலங்கள் (பாவ அழுக்குகள்) என்று கொள்ளலாம். ஜீவன் என்னும் ஆன்மா, கடவுள் என்னும் பரமனை விட்டுப் பிரிந்திருக்கிறது. இது மீண்டும் அங்குதான் சேரவேண்டும். ஆனால், இதைச் சேரவிடாமல் செய்பவை இந்த மூன்று மலங்களே ஆகும். முதல் மலம் - ஆணவ மலம். இந்த ஜீவன், தான் பரமனுடைய ஒரு துளி என்பதை உண ராமல், ஏதோ தான் ஒரு தனிப்பிறவி என்றும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றும் எண்னிக்கொண்டு, ‘நான் நான்’ என்று பீற்றிக்கொள்ளும் தன்மையே ஆணவம். இதையே அஹங்காரம் (அஹம்=நான்;அஹங்காரம்=நான் என்னும் நினைப்பு) என்கிறோம்.

    இரண்டாவது மலம் - கன்ம மலம். ஜீவன் பரமனிடமிருந்து பிரிந்தபோதே, ஜீவனைச் சுற்றிக்கொண்ட முதல் உறை ஆணவம் என்று வைத்துக் கொண்டால், அடுத்த உறை கன்மம் எனலாம். கன்மம் என்பது என்ன? கர்மவினை அல்லது முற்பிறவிகளில் செய்துவிட்ட வினைகளின் பயன். ஒரு ஜீவன், மனித உடலுக்குள்ளோ விலங்கு உடலுக்குள்ளோ அல்லது வேறேதேனும் வடிவத்திற்குள்ளோ நுழைவதற்கு எது காரணம்? அந்த ஜீவன் செய்திருக்கும் கர்மவினைகளே காரணம் இல்லையா? ஆகவே, நம்முடைய பிறப்பை நிர்ணயிக்கும் உறையாகக் கன்ம மலம் சூழ்கிறது.

    இதற்கும் அடுத்ததாகச் சூழ்வது மூன்றாவது மலமான மாயாமலம். இது என்ன? எதைக் குறிக்கிறது? ஜீவன், கர்ம வினைகளின் பயனாக, ஓரளவுக்கு நல்ல கர்மங்கள் செய்திருந்ததால், மனித உடலுக்குள் புகுந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். அழகிய மனிதப் பிறவி எடுக்கிறது. ஆனால்... தான் பிறந்த இடத்தை வைத்து எவ் வளவு மதம் கொள்கிறது? என் வீடு, என் அதிகாரம், என் செல்வம், என் பிள்ளைகள், என் பலம், என் சுற்றம் என்று தன்னுடைய உலக இருப்பைக் கொண்டு எத்தனை மதம் - இதெல்லாம் மாயைதானே! வீடும் வாசலும் வசதியும் வாய்ப்பும் போதையேற்றும் மாயைகளில்லையா?

    மாயாமலம், கன்ம மலம், ஆணவ மலம் ஆகிய மூன்றும் அழிந்தால், ஜீவன் நிரந்தரமாகப் பரமனிடம் ஐக்கியப்பட்டுவிடும். இதுதான் சூரன் கதை.
    சகோதரரும் உறவினரும் அழிந்த பின்னரும், தன்னுடைய வர பலம் முடிந்துவிட்டது என்று தெரிந்தும், விடுபட்ட ஓரிரு சொந்தக்காரர்கள் ஆலோசனை சொல்லியும், எதற்கும் அடங்காமல், தன்னுடைய ஆணவத்தில் ஆட்டம் போட்டான். சிவகுமாரனை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணி, மாறுவேடங்களில் சண்டையிட்டான். எந்த வேடத்திற்கும் கலங்காமல் கந்தக் கடவுள் போர் செய்ய. . . . கடைசியில், வடிவத்தை மாற்றிக்கொண்டு மாமரமாக மாறினான். மரமாக நிற்கும்போதே சூரனுடைய ஆர்ப்பாட்டமும் தன்னால் முடியும் என்னும் அசைவுகளும் அடங்கிவிட்டன.

    மாமரத்தைத் தம்முடைய சக்தி வேலாயுதத்தால் பிளந்தார் முருகப்பெருமான். மரம் பிளவுபட்டது; ஒரு பாதி சேவலானது; மறுபாதி மயிலானது. சேவலை எடுத்துத் தம்முடைய கொடியில் சூட்டிய முருகப்பெருமான், சேவல் கொடியோன் ஆனார்; மயிலை எடுத்துத் தம்முடைய வாகனமாக்கி, மயில் வாகனனும் ஆனார்.

    இறுதிவரை ஒட்டிக்கொண்டிருந்த ஆனவ மலம், அசைவு அடங்கியபோது அழிந்தது. ஆணவமும் அற்றுப்போன அந்த ஜீவன், சேவலும் மயிலுமாகிப் பணிந்தது. இரண்டையும் தம்முடன் இணைத்துக் கொண்டார் பரம்பொருள்.

    நிறைவாக ஒன்றை நினைத்துப் பார்க்கலாமா? சூரன் வதம் என்று யாரும் சொல்வதில்லை. ராவண வதம் என்றும் வாலி வதம் என்றும் இரணியன் வதம் என்று சொல்வதுபோல் சொல்வதில்லை. சூர சம்ஹாரம் தான்! ஹாரம் என்பது மாலை; சம்+ஹாரம் என்றால் நல்ல மாலை. அழுக்குகள் அழிந்த உயிரை, கந்தக் கடவுள் தமக்கான மாலையாகச் சேர்த்துக் கொள்கிறார். தமக்கான ஆபரணம் ஆக்கிக் கொள்கிறார்.
    தீபாவளிக்கு திறக்கப்பட்ட ஹாசனாம்பா தேவி கோவிலில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் தான் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலின் நடை ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். இத்தகைய புகழ்பெற்ற இந்த கோவிலின் நடை தீபாவளியை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் கோவிலில் தினமும் ஹாசனாம்பாவுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கோவில் நடை திறந்து நேற்றுடன் 7-வது நாள் ஆகிறது. நேற்றும் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) மட்டும் தான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் (9-ந்தேதி) கோவிலில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. வருகிற 10-ந்தேதி சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    வயலூர் முருகன் கோவிலில் இன்று(வியாழக்கிழமை) கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    புகழ்பெற்ற முருகன் கோவில்களில் வயலூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழா இன்று(வியாழக்கிழமை) தொடங்கியது. வருகிற 14-ந் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது.

    விழாவையொட்டி இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும் அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு ரக்‌ஷா பந்தனமும்(காப்பு கட்டுதல்), அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.

    நாளை(வெள்ளிக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை காலை 8 மணியளவில் சிங்காரவேலர், கேடயத்தில் திருவீதி உலா வருகிறார். அதனை அடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கு லட்சார்ச்சனையும், மதியம் சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. அன்றைய தினங்களில் இரவு 8 மணிக்கு சேஷம், ரிஷபம், அன்னம், வெள்ளிமயில் போன்ற வாகனங்களில் உற்சவர் சிங்காரவேலர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

    11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், 12-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 13-ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும், அதனை தொடர்ந்து 10.40 மணிக்கு சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அதனையடுத்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.

    14-ந் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், ஆராதனையுடன் சண்முகார்ச்சனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. #Thiruchendur #MuruganTemple #Kanthasasti
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    இன்று 8-ந் தேதி திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுதல், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. இன்று மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    2-ம் திருவிழா 9-ந் தேதி முதல் 5-ம் திருவிழாவான 12-ந் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.



    6-ம் திருவிழாவான 13-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் மற்ற காலங்கள் வழக்கம் போல் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்கிறார்.

    7-ம் திருவிழாவான 14-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 5மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும் இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

    திருவிழா காலங்களில் கோவில் கலையரங்கில் காலை மாலை சிறப்பு சமய சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.#Thiruchendur #MuruganTemple #Kanthasasti
    விழுப்புரம் மாவட்டம் அந்திலி லட்சுமிநரசிம்மர் கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லை, எதிரிகளால் உண்டாகும் பிரச்சினைகள் விலகும்.
    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்திலும், அரகண்டநல்லூர் அருகே 2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது அந்திலி லட்சுமிநரசிம்மர் கோவில்.

    இந்த கோவில் அரசமரத்தடியில் கருட வடிவிலான சிறிய பாறையின் மீது அமைந்துள்ளது. கோவிலில் நரசிம்மர் மீது ஆண்டு முழுவதும் சூரிய ஒளி படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது மிக சிறப்பு அம்சம் ஆகும். மகாவிஷ்ணு தனது நரசிம்ம அவதாரத்தில் தூணில் இருந்து தோன்றி இரணியனை அழித்து பக்த பிரகலாதனை காப்பாற்றினார். அப்போது மகாவிஷ்ணு கருட வாகனத்தை பயன்படுத்தவில்லை.

    எந்த சூழ்நிலையிலும் தன் மீதே அமர்ந்து பயணம் செய்யும் மகாவிஷ்ணு இந்த முறை பரமபதத்தின் மூலம் தூணில் இருந்து தோன்றி பக்த பிரகலாதனை காப்பாற்றி காட்சியளிக்க காரணம் என்ன? தான் (கருடன்) ஏதாவது தவறு செய்து விட்டோமா? அதனால்தான் நம்மீது பயணம் செய்வதை மகாவிஷ்ணு தவிர்த்து விட்டாரோ என்று கருட பகவான் குழப்பம் அடைந்தார்.

    உடனே பூமிக்கு வந்து தென்பெண்ணை நதிக்கரையின் அருகில் உள்ள கருட வடிவிலான பாறையில் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார். கருடனின் கடும் தவத்தை பார்த்த மகாவிஷ்ணு நேரில் வந்து கருடனின் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு கருடன், பக்த பிரகலாதனுக்கு நரசிம்மராக காட்சியளித்த நீங்கள், எனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கூறினார். இதைகேட்ட மகாவிஷ்ணு கருடன் முன்பு நரசிம்மராக காட்சியளித்தார்.அப்போது மகாலட்சுமியும், மகா விஷ்ணுவின் மடியில் அமர்ந்து கருடனுக்கு காட்சியளித்த காரணத்தால் இந்த கோவிலில் லட்சுமி நரசிம்மராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த கோவிலுக்கு பல மகான்கள் வந்து தரிசித்து சென்றுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லை, எதிரிகளால் உண்டாகும் பிரச்சினைகள் விலகும். திருமண தடை நீங்கும். கண் சம்மந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் விரைவில் குணமடைவார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதாகவும் கூறுகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் சாற்றுதல், ஹோமம் செய்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இத்தலத்தில் முருகன், அருணகிரிநாதருக்கு அஷ்டமசித்திகளை வழங்கி திருப்புகழ் பாட செய்துள்ளார். மேலும் இந்த கோவில் நாரதருக்கு பாவ விமோச்சனம் வழங்கிய தலமாகவும் விளங்கி வருகிறது.

    இத்தனை சிறப்புமிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தாண்டும் கந்தசஷ்டி விழாவானது இன்று(வியாழக்கிழமை) காலை கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    இதனைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளிலும் நாகம், பூதம், சிம்மம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முருகன், சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், அன்று மாலை 6 மணிக்கு விராலிமலை கீழ ரதவீதியில் சூரசம்ஹாரமும் நடக்கிறது.

    தொடர்ந்து முருகன் தங்க கேடயத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். 14-ந்தேதி மலைமேல் உள்ள முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    அனைத்து முருகன் கோவில்களில் இன்று கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    சேலம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று காலையில் ஞான ஸ்கந்த குருநாதரிடமிருந்து சக்திவேல் பெற்று மகாலட்சுமி துர்கா பரமேஸ்வரியிடம் வைத்து கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.

    வருகிற 12-ந் தேதி வரை குருகுல பிரார்த்தனை மண்டபத்தில் சக்திவேலுக்கு சிறப்பு பூஜைகளும், தண்டயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. 13-ந் தேதி அதிகாலை சுப்ரபாதமும், 5.30 மணிக்கு ருத்ரஜபமும், 6.45 மணிக்கு கோ பூஜையும், 7 மணிக்கு குருபூஜையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மதியம் விசேஷ அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.

    இதேபோல், சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் பாலசுப்பிரமணிய சாமி கோவில், குமரகிரி பாலதண்டாயுதபாணி கோவில், ஊத்துமலை முருகன் கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று முதல் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. இதையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்தாண்டு கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறாது.

    சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் நேற்று கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. கோவில் முன்பு ஏற்றப்பட்ட திருக்கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மூலவர் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், உற்சவர் சண்முகநாதர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், இரவில் லட்சார்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    விழாவின் முக்கிய நாளான வருகிற 13-ந் தேதி கந்தசஷ்டி விழாவையொட்டி காலை 7 மணிக்கு சஷ்டிபாராயணம் நடக்கிறது. பின்னர் சக்திவேலுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சத்ரு சம்ஹார ஷோமம், 36 தடவை சஷ்டி பாராயணம், 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம், லட்சார்ச்சனை பூர்த்தி செய்து மதியம் 12 மணிக்கு தங்க கவசம் சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் சண்முகநாதர் புறப்பட்டு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மகா அபிஷேகமும், செந்தூர்வேலன் அலங்காரமும், 108 தங்க மலர்களால் அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடக்கிறது.

    வருகிற 14-ந்தேதி பகல் 11 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை வருதலும், 12 மணிக்கு திருக்கல்யாணம், உற்சவமூர்த்திக்கு மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்துள்ளனர். 
    ×