search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    ருணமோசனம் என்ற இந்த ஸ்தோத்திரத்தினை தினமும் மனமுருகிப் படித்தால் எவ்வளவு பெரிய கடனும் விரைவில் சூரியனைக் கண்ட பனிமலையின் நிலையை அடையும்.
    தேவகாரியங்கள் பூரணத்துவம் பெற சபா மண்டபத்தில் அவதரித்தவரே! மகாவீரரே! என் கடன்களில் இருந்து என்னை விடுக்கும்படி வேண்டிக் கொண்டு பிரார்த்திக்கிறேன்.

    மகாலட்சுமியால் தழுவப் பெற்ற இடது பாகத்தை உடையவரே! பக்தர்கள் கேட்கும் வரத்தைக் தருபவரே! மகாவீரரே! என் கடன்களில் இருந்து என்னை விடுவிக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டு பிரார்த்தனை செய்கிறேன்.

    நரம்புகளை மாலையாக அணிந்து கொண்டவரே! சங்கு, சக்கரம், தாமரை, ஆயுதம் இவைகளைச் தரித்துக் கொண்டவரே! மகாவீரரே! என்னைக் கடன் உபாதைகளில் இருந்து காத்தருள பிரார்த்திக்கிறேன்.

    நினைத்த மாத்திரத்திலேயே பாவங்களை நீக்குபவரே! கத்ரூபுத்திரர்களான நாக விஷங்களால் ஆபத்து ஏற்படாமல் காப்பவரே! மகாவீரரே! கடன் தொல்லையில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    சிம்மத்தின் கர்ஜனையைக் கேட்டால் யானைகள் அஞ்சி ஓடும். அப்பேற்பட்ட பெரிய பயங்களையே போக்கும் மகாவீரரே! கடன் தொல்லைகளில் இருந்து நான் விடுதலை பெற உம்மை பிரார்த்திக்கிறேன்.

    பிரகலாதனுக்கு வரம் அளித்தவரே! லட்சுமிபதியே அசுர வேந்தனான இரண்யகசிபுவின் நெஞ்சை கிழித்தவரே! மகாவீரரான நரசிம்கரே! என் கடன்களில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    குரூரமான கிரக பார்வையால் கஷ்டத்தில் இருக்கும் பக்தர்களுக்கு உபயம் தருபவரே! மகாவீரரான நரசிம்கரே! கடன் உபாதையில் இருந்து நிவாரணம் பெற உம்மை பிரார்த்திக்கிறேன்.

    வேதம், உபிநிஷத் யக்ஞம் இவைகளின் ஈச்வரனே பிரம்மா, ருத்ரன் இவர்களால் நமஸ்கரிக்கப்பட்டவரே! மகாவீரரான நரசிம்கரே! கடன் தொல்லைகளில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    ருணமோசனம் என்ற இந்த ஸ்தோத்திரத்தினை தினமும் மனமுருகிப் படிப்பதற்கு எவ்வளவு பெரிய கடனும் விரைவில் சூரியனைக் கண்ட பனிமலையின் நிலையை அடையும். அதோடு மட்டுமல்லாமல் நியாயமான முறையில் சம்பத்தும் சேரும்.
    தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதையும் பறைசாற்றும் அவதாரம், நரசிம்மர் அவதாரம் ஆகும்.
    இறைவன் எங்கும் நிறைந்துள்ளார் என்பதையும், தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும், அவர்களைக் காப்பது இறைவனின் கடமை, அப்படி தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதையும் பறைசாற்றும் அவதாரம், நரசிம்மர் அவதாரம் ஆகும்.

    யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று நரசிம்மரின் முக்கியமான ஒன்பது வடிவங்கள் இருக்கின்றன. இவைத் தவிர பஞ்சமுக நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர் போன்ற பல வடிவங்களிலும் விஷ்ணுவின் ஆலயங்களில் நரசிம்மர் அருள்பாலிப்பதைப் பார்க்கலாம்.

    நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும். நரசிம்மருக்கு செவ்வரளி போன்ற சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.

    உலகில் வாழும் ஜீவராசிகளின் கணக்கு வழக்குகளைத் துல்லியமாகக் கவனித்துப் பாவ புண்ணியக் கணக்கெழுதி, அதற்குரிய பலனுக்குப் பரிந்துரைப்பவர் சித்திரகுப்தன் ஆவார்.
    குடும்பத்தில் கணக்குகளைச் சரியாக கவனித்தால் குடும்பம் செழிக்கும். நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்தால் நிறுவனம் வளர்ச்சி பெறும். அதுபோல் உலகில் வாழும் ஜீவராசிகளின் கணக்கு வழக்குகளைத் துல்லியமாகக் கவனித்துப் பாவ புண்ணியக் கணக்கெழுதி, அதற்குரிய பலனுக்குப் பரிந்துரைப்பவர் சித்திரகுப்தன் ஆவார்.

    பணபலமோ, ஆள் பலமோ, அரசியல் அழுத்தமோ ஏதுமின்றித் தன் கடமையைச் செவ்வனே செய்து வருபவர் இவர். எம தர்மராஜனின் உதவியாளரான இவர், நேர்மையான முறையில் தன் கடமையைச் செய்து வருகிறார்.

    இந்தியாவில் கடம்பூர், கோடங்கிப்பட்டி உள்ளிட்ட 14 இடங்களில் சித்திரகுப்தனுக்குக் கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு பெற்று தனிக்கோவிலாக விளங்குவது, காஞ்சீபுரம் சித்திரகுப்தன் ஆலயம் ஆகும்.

    காஞ்சி மாநகரைப் பற்றி திருவாவடுதுறை ஆதீனம் சிவஞான சுவாமிகள் இயற்றிய காஞ்சிபுராணம் பெருமைப்படுத்துகின்றது.

    சித்திரகுப்தனுக்குப் பல்வேறுவிதமான புராணக் கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக் காண்போம். வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த வைதீகத் தெய்வம் சித்திரகுப்தன் ஆவார். வடஇந்தியாவில் பெரும் வணிகர்களின் மதமாக விளங்கிய சமண மதத்தின் தெய்வமாக இவர் கூறப்படுகிறார். சமண மதம் மட்டுமே இறப்பினை முன்னிலைப்படுத்தி அறம் கூறும் வழக்கத்தினை, தமிழ்நாட்டில் உருவாக்கியது. எனவே, மேலோர் மரபில் கணக்கு வழக்கிற்கான தெய்வமாகச் சித்திரகுப்தன் தோன்றியதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இது வைணவ சமயத்தில் கூறப்படுவது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார்,

    சித்திரகுப்தர் எழுத்தால்
    தென்புலக் கோன்பொறி யொற்றி
    வைத்த விலச்சினை மாற்றித்
    தூதுல ரோடி யோளித்தார் – எனக் கூறுகிறார்.

    சித்திரகுப்தர் எழுதிய கணக்குப்படி எமதர்மராஜன் காலமுத்திரை இடுகிறார். ஆனாலும், திருமாலின் அடியாரைக் கண்டால் எமதூதர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள் என இப்பாடல் குறிப்பிடுகிறது.

    இனி மற்றொரு கதை. கோடிக்கணக்கான மக்களின் பாவ புண்ணியங்களை எழுதும் எமதர்மராஜன் தனக்குப் பெருத்த பணிச்சுமையாக இருந்ததால், தனக்கு உதவும் பொருட்டு, ஒரு உதவியாளர் வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டார். அதன்படி பிரம்மாவிடம் கட்டளையிட, இதனைச் சூரியன் மூலம் நிறைவேற்ற விரும்பினார். சூரியனுக்குள் அக்னியை உருவாக்கினார்.

    சூரியன் வானில் தோன்றும் போது ஒரு வானவில் உருவானது. அந்த வானவில்லே நீளாதேவி என்ற பெண்ணாக மாறியது. அப்போது நீளாதேவி என்ற தேவதை சூரியனின் பேரழகில் மயங்கி தன்னிலையினை இழக்கின்றாள். அதன் பயனாய் மகனாகத் தோன்றியவர் சித்திரகுப்தன். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால், சித்திரகுப்தன் என்ற பெயர் வழங்கப்படுகிறது. சித்திரகுப்தன் கரங்களில் எழுத்தாணியும் ஏடும் இறைவன் தந்தார் என தலபுராணம் கூறுகிறது.

    சித்திரை என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு எனப்பொருள்படும். மனிதர்களின் மனதில் மறைவாக உள்ள விஷயங்களை எழுதுவதால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது என இத்தலபுராணம் கூறுகிறது.

    இவருக்குத் துணையாக எமதூதர், புறா, ஆந்தை, நான்கு கண்கள் கொண்ட இரண்டு நாய்கள் ஆகியவை உதவியாட்களாகப் பணிபுரிகின்றனர்.

    இவரது அமராவதியில், பிரபாவதி, நீலாவதி, கர்ணீகை என்ற மூன்று தேவியரோடு வாழ்ந்து கொண்டு மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களின் விதியை வெகு துல்லியமாகக் கணக்கெடுத்து வருகின்றார் என்பது புராணம்.

    இதேபோல, இவரின் பிறப்பினைக் கூறும் கதை இது. சித்திரகுப்தன் காமதேனுவின் கருவில் தோன்றிய மகன் என்று புராணத்தில் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் சித்திரகுப்தனுக்குப் பசும்பால், பசுந்தயிர், பசுநெய் ஆகியவை சித்திரகுப்தனுக்குப் பயன்படுத்துவதில்லை.

    சித்திரகுப்தனுக்கு ஆலயம் அமைப்பதை ஹேமாத்திரியின் சதுர்க்க வர்க்க சிந்தாமணி என்ற சிற்பநூல் கூறுகிறது.

    தனிக்கோவிலாக, சித்திரகுப்தனே கருவறையில் வீற்றிருக்கும் பிரதான தேவதையாக விளங்குவது காஞ்சீபுரம் சித்திரகுப்தன் ஆலயம் ஆகும்.

    சென்னிச்சோழன் அமைச்சராக இருந்த கனகராயன் என்பவன் சித்திரகுப்தனுக்கு ஆலயம் எழுப்பியதை வரலாறு எடுத்துக் கூறுகிறது.

    மூன்று நிலைகள் கொண்ட புதிய ராஜகோபுரம் நம்மை வரவேற்க, நேர் எதிரே மூலவராக சித்திரகுப்தன் எளிய வடிவில் அமர்ந்த கோலத்தில் அருள் வழங்குகின்றார். தன் வலது கரத்தில் எழுத்தாணியும், இடது கரத்தில் ஏடும் தாங்கி, தென்முகமாய்க் காட்சியளிக்கின்றார்.

    இவரைத் தரிசிக்கும் போதே, நமது வினைகள் அனைத்தும் நம் கண் முன்னே நிழலாடுகின்றன. நாம் இப்பூவுலகை விட்டு அகலும் முன்பு வரை நம் வாழ்வில் புரிந்த அத்துணை பாவ, புண்ணியங்களையும் இவர் தன் பதிவேட்டில் எழுதி வருவது நம் நினைவிற்கு வருகிறது. ஒரு செயலைத் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பாவக் கணக்கிலும், புண்ணியக் கணக்கிலும் பிரித்தெழுதும் இவரின் கடமையை நினைத்து நம் சிந்தனை செல்கின்றது. இதனால் சிறு தவறு கூட தவறியும் செய்து விடக்கூடாது என்ற எண்ணமே நம்மிடம் மேலோங்கி நிற்கிறது.

    கருவறையின் வலதுபுறம் வடலூர் ராமலிங்க சுவாமிகளின் சன்னிதி, அதனருகே சித்திரகுப்தன், அவரது துணைவியார் கர்ணீகை அம்பாள் ஆகிய உற்சவ திருமேனிகள் எழிலுடன் காட்சி தருகின்றன. ஐயப்பன் சன்னிதி வடக்கு முகமாய் அமைந்துள்ளது. அதன் எதிரில் துர்க்கை சன்னிதியும், அருகே நவக்கிரக சன்னிதியும் அமைந்துள்ளன. ஆலயத்தின் பின்புறம், தீப மண்டபம் அமைந்துள்ளது.

    அமைவிடம்

    காஞ்சீபுரம் பேருந்து நிலையத்தின் வெகு அருகில், நெல்லுக்காரன் தெருவில் தெற்கு முகமாக சுமார் 6000 சதுர அடியில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
    கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
    மனித வாழ்க்கையில் தாய்க்கு இணையான ஒரே உயிரினம் பசு. குழந்தைப் பருவத்தில் நமது வாயால் அம்மா என்று சொல்லும் முன் பலப்பல குழந்தைகளின் காதில் பசு எழுப்பும் அம்மா என்ற அந்த அமுதக் குரல் காதுகளை நிரப்பி இருக்கும்.

    * கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும்.

    * முன்னோருக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன்களான திதி , கர்மா செய்யாமல் இருந்தால் ஏற்படும் பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். மேலும் பித்ரு தோஷங்களும் நீங்கும்.

    * பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

    * கோமாதாவை சிரத்தையுடன் வணங்கிட பிரம்மா, விஷ்ணு, முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும்.

    * உண்பதற்கு பசுவிற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம்), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) நம்மை பிடித்த தீராத பாவங்கள் விலகும்.

    * பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.

    * பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

    * " மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது. பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு மடங்கு பலன்களை அள்ளித் தரும்.

    * மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு, எமன், எம தூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.

    * ஒருவர் இறந்த பின் பூலோகத்தில் இருந்து அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை (மலம் , சலம் , சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இந்த துன்பம் நிச்சயம் ஏற்படாது. அவரால் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விட உதவுகிறது என்கிறது கருட புராணம்.

    * கோமாதா நம் குலம் காக்கும் தெய்வம். கோமாதவை வழிபட நம் குலம் செழிக்கும். வாழ்வு வளம் பெருகும்.
    முழுமுதற்கடவுள் விநாயகர் நம்முடைய அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டுபவர். விநாயகரை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    முழுமுதற்கடவுள் விநாயகர் நம்முடைய அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டுபவர். விநாயகப்பெருமானை வழிபடும் போது மிகவும் பணிவுடன் உடலைச் சாய்த்து நின்று முதலில் கைகளால் நம் நெற்றியின் இருபொட்டுகளிலும் குட்டிக்கொள்ளவேண்டும்.

    பின் வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் போட வேண்டும். அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கி மூன்று முறை வலம் வரவேண்டும்.

    ஆனைமுகனிடம்  நமது  தீவினைகளை சிதற வேண்டுமென வேண்டி சிதறுத் தேங்காயை உடைக்கவேண்டும்.
    நந்திதேவரை வணங்குவதும், அவரை பிரதட்சணம் செய்வதும் எண்ணிலா நற்பலன்களைக் கொடுக்கும். நந்தியை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
    சிவாலயங்களில் ஈசனை தரிசனம் செய்யும் முன்பு நந்திதேவரை வணங்கி அவர் அனுமதியுடன் பெருமானை தரிசனம் செய்வது நம் வழக்கம். மேலும் பிரதோஷ காலத்தில், நந்தி எம்பெருமானுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இத்தகைய நந்திதேவரை வணங்குவதும், அவரை பிரதட்சணம் செய்வதும் எண்ணிலா நற்பலன்களைக் கொடுக்க வல்லது. நந்தியை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

    3 முறை பிரதட்சணம் செய்தால் - நாம் விரும்பும் இஷ்ட சித்தி கிடைக்கும்.

    5 முறை பிரதட்சணம் செய்தால் - எடுத்த காரியத்தில் ஜெயம் கிடைக்கும்.

    7 முறை பிரதட்சணம் செய்தால் - அனைவரும் போற்றக் கூடிய சற்குணங்கள் கிடைக்கும்.

    9 முறை பிரதட்சணம் செய்தால் - உலகம் மெச்சும் புத்திரப் பிராப்தம் கிடைக்கும்.

    11 முறை பிரதட்சணம் செய்தால் - நோய் நொடி இல்லாத ஆயுள் விருத்தி கிடைக்கும்.

    13 முறை பிரதட்சணம் செய்தால் -  எண்ணிய பிரார்த்தனை சித்தி அடையும்.

    15 முறை பிரதட்சணம் செய்தால் - கணக்கில்லா தனப்பிராப்தி கிடைக்கும்.

    17 முறை பிரதட்சணம் செய்தால் - கிடைத்த தனம் விருத்தி அடையும்.

    108 முறை பிரதட்சணம் செய்தால் - அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.

    1008 முறை பிரதட்சணம் செய்தால் - ஒரு வருட தீட்சையாகப் பலன் கிடைக்கும்.
    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய முன்னுதித்த நங்கை அம்மனுக்கு சுசீந்திரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி கடந்த 7-ந் தேதி சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டன. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்து மலர்தூவி வழியனுப்பி வைத்தனர்.

    அங்கு விழா முடிந்து சாமி சிலைகள் மீண்டும் ஊர்வலமாக புறப்பட்டு நேற்று முன்தினம் மாலை பத்மநாபபுரம் வந்தடைந்தது. பின்னர் சரஸ்வதி அம்மன் சிலை தேவாரக்கட்டு கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. வேளிமலை முருகன் வேளிமலை குமாரசாமி கோவிலுக்கு சென்றது.

    சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரத்திற்கு புறப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் சிலை மேளதாளத்துடன் சுசீந்திரம் வந்தடைந்தது. குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் நவராத்திரி குழு தலைவர் வீரபத்திரபிள்ளை மற்றும் ஊர் பொதுமக்கள் நான்கு ரதவீதிகள் வழியே அம்மனுக்கு திருக்கண் சார்த்தி வரவேற்பு அளித்தனர். கோவில் முன்பு அம்மனுக்கு தமிழக மற்றும் கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் நடந்தது.

    அம்மனுக்கு ஆறாட்டும், அபிஷேகமும் செய்யப்பட்ட பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான நேற்று அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பவுர்ணமி ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறை விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு அங்கு கோபுரப்பட்டி பெருமாள் கோவில் உற்சவர்கள் ஆதிநாயக பெருமாள் மற்றும் ஆதிநாயகித் தாயாரை எழுந்தருள செய்தனர்.

    அங்கு தினமும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வந்தன. முதல் நாள் காரியசித்தி, தடங்கல்கள் நீங்க ஹோமம், தொழில், விவசாயம் சிறக்க, தனவிருத்திக்கான ஸ்ரீயாகம், 2-ம் நாள் விவாஹ பிராப்தி, கல்வி, செல்வம் பெருக ஸ்ரீலட்சுமி நாராயண யாகம், 3-வது நாளான நேற்று முன்தினம்் தைரியம், வழக்குகளில் வெற்றி பெறவும் வீரலட்சுமி யாகம், நன்மக்களை பெற சந்தான யாகமும் நடைபெற்றது.

    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான நேற்று காலை 6 மணிக்கு திருமண தடை நீங்க, தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்க, நினைத்த காரியங்களில் வெற்றிபெற, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற ஸ்ரீநரசிம்ம, சுதர்சன, தன்வந்திரி யாகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பவுர்ணமி ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காவிரி தாய்க்கு மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பக்தர்கள் காவிரி ஆற்றில் மலர் தூவி வணங்கினர். இத்துடன் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு விழா நிறைவடைந்தது.
    கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரசோழன் கங்கை நதி வரை போர் நடத்தி வெற்றி பெற்றதற்காக அடையாள சின்னமாக இந்த கோவிலை கலை நயத்துடனும் மிக பிரமாண்டமாகவும் கட்டினார்.

    போர் கைதிகள் மற்றும் வீரர்களை கொண்டு 4½ ஏக்கர் பரப்பளவில் தற்கால பொறியியல் வல்லுனர்களுக்கு சவால் விடும் வகையில், சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வியந்து பார்த்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் கடந்த 33 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகின்றனர்.அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 22-ந்தேதி கணக்க விநாயகருக்கு அபிஷேகமும், 23-ந்தேதி பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.

    தொடர்ந்து 34-வது ஆண்டாக நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் இருந்து 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ எடை கொண்ட பச்சரிசியை 6 கொதிகலன் நீராவி அடுப்பில் வைத்து சமைத்தனர். பின்னர் சமைத்த சாதத்தை அருகில் ஓலைப்பாயில் ஆற வைத்தனர்.

    பிரகதீஸ்வரருக்கு படைப்பதற்காக சாதம் குவித்து வைக்கப்பட்டு இருந்த காட்சி.

    பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடையில் சாதத்தை சுமந்து பிரகதீஸ்வரர் மூலஸ்தானத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பிரகதீஸ்வரருக்கு சாதம் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பிரகதீஸ்வரருக்கு காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்ட பூமாலை அணிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் சிவாய நம... நமச்சிவாய நம... என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து இருந்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு பிரகதீஸ்வரர் மீது சாத்தப்பட்ட சாதத்தை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இந்த சாதத்தை சாப்பிடுவதால் நோய்கள் குணமாகும் என்றும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பின்னர் பக்தர்களுக்கு வழங்கிய சாதம் போக மீதம் உள்ள சாதத்தை அருகில் உள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது.

    அன்னாபிஷேகத்தில் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் பாரதிராஜா, அன்னதான கமிட்டி பொறுப்பாளர் கோமகன், தொல்லியல் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு 1 டன் பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளன்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். அதேபோல தஞ்சை பெரியகோவிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நேற்று மாலை அன்னாபிஷேகம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்காக பக்தர்களால் 1,000 கிலோ(1 டன்) அரிசியும், 1000 கிலோ காய், கனிகளும் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை பச்சரிசி சாதம் தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் பலவகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடை பெற்றது. அன்னாபிஷேகத்தையொட்டி பெருவுடையாரை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்த வண்ணம் இருந்தனர். மாலை 4.30 மணிக்கு அன்னாபிஷேகம், மற்றும் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தஞ்சையில் உள்ள கொங்கனேசுவரர் கோவில், காசி விசுவநாதர்கோவில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இன்று பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
    அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கங்கை கொண்டசோழபுரம். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் தனது ஆட்சிக்காலத்தில் ஆயிரம் வருடத்திற்கு முன் கங்கை வரை படையெடுத்து சென்று வடபுறத்து மன்னர்களை வெற்றிக்கொண்டதன் அடை யாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி அங்கு பிர கதீஸ்வரர் கோவிலை கட்டி னார்.

    இங்கு பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ள 13½ அடி உயர மும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் தான் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என போற்றி வணங்கப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு இக்கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. கங்கை கொண்டசோழபுரம் பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ் வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடத்தப் பட்டு வருகிறது.

    அன்னாபிஷேக தினத் தன்று 100 சிப்பம் மூட் டை கொண்ட 2,500 கிலோ பச்சரிசியைக் கொண்டு கோவில் வளாகத்தில் சமைத்து, பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டு 50 வகையான பழங்கள், வில்வ இலை உட்பட 11 வகை இலைகள், 21 வகை பூக்களால் அலங்க ரித்து. (சந்த்ரோதயா காலத்தில்) மாலை 6 மணியளவில் மகா தீபாராதனை நடந்தப்படும்.



    அதன்படி ஐப்பசி பவுர்ணமியான இன்று கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று கணக்க விநாயகருக்கு முதல் அபிஷேகம் நடைபெற்றது. கங்கை நீர், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்பட 21 வகையான பொருட்களால் இந்த அபி ஷேகம் நடந்தது.

    தொடர்ந்து இன்று காலை முதல் அன்னாபிஷேகத்திற் காக கோவில் வளாகத்தில் சாதம் தயாரிக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதனை காணவும், அன்னாபிஷேகத் தில் பங்கேற்கவும் காலை முதலே ஏராளமான பக்தர் கள் பிரகதீஸ்வரர் கோவிலில் குவிந்தனர்.

    ஐப்பசி பவுர்ணமி அன்று சிவ ஸ்தலத்திற்கு சென்று வழிபடுவது (பாவ விமோச னம்) புண்ணியம், அதைவிட சிவலிங்கத்திற்கு அன்னம் சாத்தப்பட்டு ஒவ்வொரு சாதத்து பருக்கையும் சிவ அம்சம் பெற்று, சிவஸ் வரூப மாக மாறுவதால் அன்று அன்னாபிஷேகத்தை தரி சிப்பது, கைலாயம் சென்று தரிசிப்பதற்கு ஈடானதாகும் என ஐதீகம்.

    கோடி சிவஸ்தலத்திற்கு சென்று தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதால், ஆயி ரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர். தொடர்ந்து இரவு 9 மணியளவில் அன்னாபிஷேக சாதத்தை பக்தர்களுக்கு விநியோகித்துவிட்டு, சகல ஜீவராசிகளுக்கும் சிவ அருள் கிடைக்கவும், ஏரி மற்றும் குளங்களிலும், பூமிக்குள் இருக்கும் உயிரினங்களுக்காக, குழி தோண்டி புதைக்கப்பட்டும், பூமியில் வாழும் மிருகங்கள், பறவைகள், கரையான்கள் உட்பட உயிரினங்களுக்கு வயல் வெளிகளில் மற்றும் திறந்த வெளியில் இரைத்தும் அன் னாபிஷேக சாதம் விநியோ கிக்கப்படும். தொடர்ந்து நாளை பிரகதீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது.

    அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தீர்த்தக்கட்டங்கள், படித்துறைகளில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். இது தொடர்பாக போலீசார் எடுத்த கணக்கெடுப்பு விவரம் வருமாறு:-

    நெல்லை புறநகர் மாவட்டத்தில் உள்ள 25 தீர்த்தக்கட்டம் மற்றும் படித்துறைகளில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 693 ஆண்களும், 6 லட்சத்து 9 ஆயிரத்து 800 பெண்களும் என 10 லட்சத்து 95 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். இதேபோல் நெல்லை மாநகரில் உள்ள 4 படித்துறைகளில் மட்டும் 2¼ லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 27 படித்துறைகளில் மொத்தம் 9 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×