என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95595"
- வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் மாறி மாறி நடனம் ஆடினார்கள்.
- மோதலில் திருமண மண்டபத்தின் இருக்கைகள் உடைக்கப்பட்டதுடன் மண்டபத்தின் கண்ணாடிகளும் உடைத்து சூறையாடப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நாகர்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், புறநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நேற்று இரவு அதே மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீட்டார் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் மாறி மாறி நடனம் ஆடினார்கள்.
அப்போது இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி மோதிக்கொண்டதால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட மோதலில் திருமண மண்டபத்தின் இருக்கைகள் உடைக்கப்பட்டதுடன் மண்டபத்தின் கண்ணாடிகளும் உடைத்து சூறையாடப்பட்டது.
இதை பார்த்த மணப்பெண் மயங்கி விழுந்தார். உறவினர்கள் மணப்பெண்ணை சமாதானம் செய்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர்.
ஆனால் அவர்கள் சமாதானம் அடையவில்லை. நீண்ட நேரத்துக்கு பிறகு போலீசார் சமரசம் செய்தவுடன் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- மணமகனின் நண்பர்கள் மேடைக்கு கீழே நாற்காலியில் அமர்ந்தவாறு சில திட்டங்களை தீட்டுவது போன்று காட்சி உள்ளது.
- சிறிது நேரத்தில் மணமேடைக்கு சென்று மாப்பிள்ளைக்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுக்கிறார்கள்
திருமணத்தின் போது மணமகனுக்கு அவரது நண்பர்கள் செய்யும் வேடிக்கையான செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது வேகமாக பரவும் வீடியோ ஒன்றில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதில், மணமக்கள் மேடையில் இருப்பதையும், விருந்தினர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வதையும் காண முடிகிறது. அப்போது மணமகனின் நண்பர்கள் மேடைக்கு கீழே நாற்காலியில் அமர்ந்தவாறு சில திட்டங்களை தீட்டுவது போன்று காட்சி உள்ளது. பின்னர் அவர்கள் ஒரு குளிர்பானத்தில் மது பானத்தை கலக்கிறார்கள்.
சிறிது நேரத்தில் மணமேடைக்கு சென்று மாப்பிள்ளைக்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுக்கிறார்கள். அதை குடித்த மணமகன் சிரிக்க தொடங்குகிறார். இதை பார்த்த மணமகளும் விஷயத்தை புரிந்து கொண்டு சிரிப்பது போன்று காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோ வேடிக்கையாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஏராளமான கமெண்டுகளை பெற்று வருகிறது. 26 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. இப்படிப்பட்ட நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஒரு பயனரும், மாப்பிள்ளையின் ரியாக்ஷன் வேறு லெவல் என ஒருவரும் பதிவிட்டுள்ளனர்.
- நமது திருமண முறையும் மிகுந்த பாரம்பரியம் மிக்கது.
- திருமண சடங்குகள் என்பது மிகவும் தனித்துவமானது.
காதல் என்ற ஒற்றைச் சொல்லை வாழ்வில் கடக்காதவர்கள் வெகு சிலரே. பள்ளிப் பருவத்தில் அரும்பும் இனக்கவர்ச்சி தொடங்கி தங்களது இறுதிக்காலம் வரை காதலை பல்வேறு காலகட்டத்தில் கடந்தே பயணிக்கிறார்கள். காதலும் தன்னை பல்வேறு பரிணாமங்களுக்கு உட்படுத்திக் கொண்டாலும், மனித வாழ்வில் பல்வேறு மகத்துவங்களை நிகழ்த்தியே வருகிறது.
காதலின் பரிணாமம் என்பது சங்க காலம் தொட்டு இந்த காலம் வரை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. சங்க காலத்தில் அரசர்கள் கொண்ட காதலும், காந்தர்வ திருமணமும் எண்ணற்ற இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அரசர்கள் காலம் முடிந்து நமது கருப்பு, வெள்ளை திரைப்பட காலத்தில் காதல் மிகவும் புனிதமானதாக காட்டப்பட்டாலும், நிஜ வாழ்வில் அதை ஏற்றுக் கொண்டவர்களும், காதலில் வெற்றி பெற்றவர்களும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான்.
காரணம், நமது நாடு பன்முக கலாசாரம் கொண்ட நாடாக இருப்பினும், இங்குள்ள ஜாதி, மத கட்டுப்பாடுகள் ஏராளம். நமது திருமண முறையும் மிகுந்த பாரம்பரியம் மிக்கது. அந்தந்த ஜாதி, மதம், இனம், மொழி என எத்தனை பிரிவு இருந்தாலும் திருமண சடங்குகள் என்பது மிகவும் தனித்துவமானது.
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளாலும், பல்வேறு மேற்கத்திய கலாசாரத்தாலும் வாழ்க்கை முறை எவ்வளவோ மாறி இருப்பினும், நமது சமுதாயத்தில் உள்ள திருமண சடங்குகளும், நடைமுறைகளும் இன்றும் பழமை மாறாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதனால் நாம் காதலுக்கு எதிரி என்று சொல்லி விட முடியாது. ஏனென்றால் அமரத்துவம் பெற்ற லைலா, மஜ்னு முதல் அம்பிகாவதி, அமராவதி வரை காதலர்கள் இங்குதான் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அதைவிட உலக அதிசயங்களில் ஒன்றான காதலுக்கான அதிசயம் தாஜ்மஹாலின் அமைவிடமே நமது நாடுதான். அந்த அளவுக்கு கலை மற்றும் கலாசாரம் மட்டுமல்ல, காதலும் பொங்கி வளர்ந்தது இந்த பூமியில் தான். காதலின் மகத்துவத்தை நாம் அறிந்ததால் தான் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற மேன்மைமிகு கலாசாரத்திற்கு சொந்தமான பூமியாக பாரத தேசம் திகழ்கிறது.
காதல் புனிதமானதுதான். ஆனால் நாம் அதை கையாளும் விதம் எப்படி என்பதுதான் அதை நிர்ணயிக்கிறது. சமீப காலங்களில் காதலும், இதைத்தொடர்ந்து நடைபெறும் பல்வேறு சம்பவங்களும் பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளன. நவீன கால மாற்றத்தால் காதலும் பரிணாம வளர்ச்சி அடைந்து பெரிதும் மாறிப் போயுள்ளது. 90-களின் மத்தியில் காதலை வெளிப்படுத்தக் கூட தயங்கிய இளைய சமூகம் இன்று மேற்கத்திய கலாசாரமான 'டேட்டிங்', 'லிவிங் டுகெதர்' வரை வந்து விட்டது என்றால் அது நவீன மாற்றமா அல்லது கலாசார சீரழிவா? என பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு சமூக சூழல் மாறிப் போயுள்ளது.
இன்று கல்வி, வேலைவாய்ப்பிற்காக ஆண், பெண் பேதமின்றி அனைவரும் அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறோம். மேற்கத்திய நாடுகளில் நமக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கும் சூழலில், அங்கு செல்லும் நம்மிடம் அவர்களது உணவு, உடை மட்டுமல்ல, கலாசாரமும் தொற்றிக் கொள்வதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. அதில் மிக முக்கியமாக நோய் போல் தொற்றி பரவிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பழக்கம் 'லிவிங் டுகெதர்' கலாசாரம்.
மேலை நாடுகளில் மட்டும் கேள்விப்பட்ட இந்த கலாசாரம் இன்று நமது நாட்டிலும் கால் எடுத்து வைத்து இருப்பது தான் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. திருமண பந்தத்தில் இணையும் மணமக்களுக்கு நமது நாட்டில் சமூக அந்தஸ்தும், பாதுகாப்பும், சட்ட உதவிகளும் கிடைக்கிறது. திருமணப் பதிவு சட்டம் கட்டாயம் என்ற அளவுக்கு இன்றைய சட்டமும், சமூகமும் சென்று கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்ற `லிவிங் டுகெதர்' கலாசாரம் எந்தவிதமான தாக்கத்தை கொண்டு வரப் போகிறதோ என்பதுதான் சமூக ஆர்வலர்களின் அச்சமாக உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், ''மேஜரான ஆண், பெண் இருவரும் சேர்ந்து வாழ்வதை 'லிவிங் டுகெதர்' என்கிறோம். இந்த உறவில் இருந்து அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விலகிச் செல்லும் சுதந்திரம் உள்ளது. ஆனால், அவ்வாறு திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் எழும் பிரச்சினைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எவ்வித சட்டபூர்வ உரிமையும் இல்லை'' என தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு சட்ட ரீதியில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதே வேளையில், இந்த உறவு முறையை இரண்டாகப் பிரித்து ஏற்கனவே உச்சநீதிமன்றமும் ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதாவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமையின் வரம்பிற்குள் 'லிவிங் டுகெதர்' வருகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணமாகாத மேஜர் இருவர் லிவிங் டுகெதர் முறையில் வாழ சட்ட அங்கீகாரம் உள்ளது என்றும், மேஜராகவே இருந்தாலும் திருமணமானவருடன், திருமணமாகாத ஒருவர் சேர்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சட்ட அங்கீகாரம் இருந்தாலும் `லிவிங் டுகெதர்' முறைக்கு சமூக அங்கீகாரம் கிடைக்குமா? என்றால் அது நிச்சயம் கேள்விக்குறிதான்.
''சமூக கட்டுப்பாடுகள் நிறைந்த நமது திருமண சடங்குகள் மூலம் தம்பதிகள் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ வைக்கப்படுகிறார்கள். ஆனால் 'லிவிங் டுகெதர்' போன்ற மேற்கத்திய கலாசார முறைகள் மூலம் எங்கள் உணர்வுகளுக்கு உரிய மதிப்பும், சுதந்திரமும் கிடைக்கிறது'' என்பதே இன்றைய இளைய தலைமுறையினரின் வாதமாக உள்ளது. பிடித்தால் வாழ்கிறோம், இல்லை என்றால் பிரிந்து செல்கிறோம் என்ற பாணியிலான வாழ்க்கை முறை நமது கலாசாரத்திற்கு ஏற்றதா? என கேள்வி எழுப்புகிறார்கள் பெற்றோர்கள் தரப்பினர். திருமணச் சடங்கில் இருக்கும் சமூக பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு இதில் இல்லாததால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதே பெற்றோரின் கவலை. நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தோல்வியில் முடிந்தாலும் அவர்களுக்கு ஜீவனாம்சம், சொத்தில் பங்கு, குழந்தைகளுக்கு சொத்துரிமை போன்ற அடிப்படை சட்டப் பாதுகாப்புகள் ஏராளமாக உள்ளது. எவ்வித சமூக அங்கீகாரமும், சட்டப் பாதுகாப்பும் இல்லாத இந்த வாழ்க்கை முறையால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள் பெற்றோர்கள்.
நமது பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும் என பெற்றோர் கனவு காண்பது மட்டும் அல்ல, அவர்கள் எதை தேர்வு செய்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணித்து வழிநடத்த வேண்டும். அப்போதுதான் 'லிவிங் டுகெதர்' போன்ற மேற்கத்திய கலாசார வாழ்க்கை முறையில் இருந்து நமது எதிர்கால சந்ததியை காப்பாற்ற முடியும் என்பதே உண்மையாகும்.
பிடித்தால் வாழ்கிறோம், இல்லை என்றால் பிரிந்து செல்கிறோம் என்ற பாணியிலான வாழ்க்கை முறை நமது கலாசாரத்திற்கு ஏற்றதா? என கேள்வி எழுப்புகிறார்கள் பெற்றோர்கள் தரப்பினர். திருமணச் சடங்கில் இருக்கும் சமூக பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு இதில் இல்லாததால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதே பெற்றோரின் கவலை.
- அடுத்த நாள் காலை விடிந்து நீண்ட நேரம் ஆகியும் புதிய ஜோடி வெளியே வரவில்லை.
- உறவினர்கள் கதவை தட்டிப்பார்த்து திறக்கவில்லை என்றதும் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர்.
லக்னோ:
உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் யாதவ். இவரது மகன் பிரதாப் யாதவுக்கும் (22), அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி (20), என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த மே 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
மறுநாளான மே 31-ம் தேதி புதுமண தம்பதி வீட்டிற்கு வந்தனர். அன்றிரவு தம்பதியரை மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்தனர்.
அடுத்த நாள் காலை விடிந்து நீண்ட நேரம் ஆகியும் புதிய ஜோடி வெளியே வரவில்லை. உறவினர்கள் கதவை தட்டிப்பார்த்து திறக்கவில்லை என்றதும் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர்.
உள்ளே பிரதாப் மற்றும் அவரது மனைவி புஷ்பா இருவரும் சடலமாகக் கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில், இருவரும் உயிரிழந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
தம்பதியின் உடலில் எந்தக் காயமும் இல்லாத நிலையில் பிரதேச பரிசோதனை செய்யப்பட்டது. அதில் புதிய தம்பதி மாரடைப்பால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், முதலிரவு நடந்த அறை காற்றோட்டம் இல்லாத அறை என்பதால் மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய ஜோடிக்கு இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், புதிய தம்பதி மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நாளில் புதிய தம்பதியினர் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- 57-வது வட்ட அ.தி.மு.க. செயலாளருமான சுடலைமணி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
- தங்களது திருமணத்தை நடத்தி வைத்த ஊர் மக்கள் அனைவருக்கும் மணமக்கள் கைகூப்பி நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்பிக்நகர் அருகே உள்ள எம்.சவேரியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கம். இவரது மகள் இசக்கிஅம்மாள் (வயது 39). மாற்றுத்திறனாளியான இவர் அனைவரிடமும் அன்பாக பழகி வந்துள்ளார். இவருக்கு நீண்ட காலமாக திருமணம் நடைபெறாமல் இருந்து வந்தது. இதனால் ஊர் மக்கள் இவருக்கு ஏற்ற ஒரு மணமகனை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில் சென்னை மணலி சின்னமாத்தூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் சதீஷ்குமார் (41). மாற்றுத்திறனாளியான இவருக்கும் நீண்ட காலமாக திருமணம் நடைபெறாமல் இருந்துள்ளது. இதனை அறிந்த ஊர் மக்கள் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பேசி வந்தனர்.
இதில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு எம். சவேரியார்புரத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் இவர்களது திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு ஊர் மக்கள் முன்னிலையில் நேற்று இரவு திருமண விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி 57-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெயலட்சுமி, தூத்துக்குடி தெற்கு பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளரும், 57-வது வட்ட அ.தி.மு.க. செயலாளருமான சுடலைமணி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தனர்.
ஊர் கூடி நடத்திய இந்த திருமண விழாவில் மணப்பெண் தரப்பில் அவரது உறவினர்கள் அழகேசன், பொன்லட்சுமி, மணமகன் தரப்பில் சென்னை ரத்னா உள்ளிட்ட மிகச்சிலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். தங்களது திருமணத்தை நடத்தி வைத்த ஊர் மக்கள் அனைவருக்கும் மணமக்கள் கைகூப்பி நன்றி தெரிவித்தனர்.
- இந்த திருமணம் மூலம் குறைவில்லா சந்தான பாக்கியமும், கன்னிகா தானம் செய்த பலனும் கிடைக்கும்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த தோடு, மொய் பணமும் எழுதினர்.
கோவை,
மரங்களின் ராஜா என்று அழைக்கப்படும் அரச மரத்தை சிவ பெருமானாகவும், மரங்களின் ராணியான வேப்பமரத்தை அம்பாளாகவும், பக்தர்கள் பாவித்து, அரச, வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வருகின்றனர்.
அப்படி செய்வதன் மூலம் குறைவில்லா சந்தான பாக்கியமும், கன்னிகா தானம் செய்த பலனும் கிடைக்கும். அத்துடன் மாதம் மும்மாரி மழை பெய்யும். பெண்களுக்கு ஏற்படும் மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
இப்பலன் அனைவருக்கும் சென்று சேர கோவை நேரு நகர் மேற்கு பகுதியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர் கோவிலில் அரச, வேம்பு திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஐம்பொன் விக்ரக பிரதிஷ்டையும் நேற்று நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள அரச வேம்பு மரத்தின் முன் வேள்விச்சாலை அமைத்து, வேதமந்திரங்கள் முழங்க மங்கல பொருட்கள் சமர்பித்து மஞ்சள் நாணை சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் அனைவரும் வேப்பமரத்திற்கு அணிவித்தனர். வேப்பமரத்தில் அணிவித்த மலர் மாலைகளை, அரசமரத்திற்கு மாற்றி அணிவித்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த தோடு, மொய் பணமும் எழுதினர்.
- மறுநாள் அதிகாலையில் ரித்திகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கண்ணனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ரித்திகா (வயது23). இவரும் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பொத்தை சுத்தி, இந்திரா காலனியை சேர்ந்த அஜித்குமாரும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு ரித்திகா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரித்திகாவும், அஜித்குமாரும் கடந்த 30.4.2021-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனால் ரித்திகாவின் பெற்றோர்கள் ரித்திகாவுடன் பேசாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் சமாதானம் அடைந்த ரித்திகாவின் தாயார் தமிழரசி கடந்த 2 மாதமாக, ரித்திகாவுடன் பேசி வந்துள்ளார். கடந்த 29-ந்தேதி இரவில் ரித்திகா தனது தாயார் தமிழரசிக்கு போனில் தொடர்பு கொண்டு தனக்கும், தனது கணவர் அஜித்குமாருக்கும் தகராறு என்றும், காலையில் ஊருக்கு புறப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே மறுநாள் அதிகாலையில் ரித்திகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தமிழரசி களக்காடு போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 24-ந் தேதி ரமணிக்கும், சஞ்சய்க்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
- திருமணம் ஆகி 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடவள்ளி:
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி (வயது 20). இவர் கோவை பேரூரில் உள்ள கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கோவை மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சஞ்சய் (20). இவரும் ரமணி படித்த கல்லூரியில் படித்தார். ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்ததால் 2 பேருக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் ரமணியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சஞ்சயுடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்த ரமணி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமணி, தனது காதலனான சஞ்சயுடன் வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணிக்கு சென்றதும், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறியிருந்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
மேலும் காதல் ஜோடியினரின் பெற்றோரும் வந்திருந்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது வாலிபரின் பெற்றோர் திருமணத்தை ஏற்று கொண்டனர். ஆனால் பெண்ணின் பெற்றோர் ஏற்க மறுத்து சென்று விட்டனர்.
இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை, வாலிபரின் பெற்றோருடன் அனுப்பினர்.
கடந்த 24-ந் தேதி ரமணிக்கும், சஞ்சய்க்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ரமணியை அவரது தந்தை கருப்புசாமி போனில் தொடர்பு கொண்டு உனது துணிகளை வாங்கி கொண்டு செல் என கூறியுள்ளார். அதற்கு ரமணி, எனக்கு வேலை இருப்பதால் மற்றொரு நாள் வந்து வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த கருப்புசாமி மகள் என்றும் பாராமல் அவரை திட்டியுள்ளார். இதனால் ரமணி கடந்த சில நாட்களாக மன உளைச்சலிலேயே இருந்துள்ளார். கணவர் அவருக்கு ஆறுதல் கூறியும் அவர் சரியாகவில்லை என தெரிகிறது.
ரமணி தொலைதூர கல்வியில் பாதியில் விட்ட படிப்பை தொடர விரும்பினார். இதற்காக நேற்று கணவன், மனைவி 2 பேரும், தொண்டாமுத்தூர் கல்லூரிக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் மாலையில், வீட்டில் இருந்த ரமணி தனக்கு தலைவலிப்பதால் சற்று நேரம் ஓய்வெடுக்கிறேன் என கூறிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.
இரவு சாப்பிடுவதற்காக சஞ்சய் ரமணியை எழுப்ப சென்றார். ஆனால் அவர் எழுந்து இருக்கவே இல்லை. மேலும் மூச்சு பேச்சின்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சியான அவர் மனைவியை தூக்கி கொண்டு பூலுவப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சஞ்சய் கதறி அழுதார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது இளம்பெண்ணின் உடலில் கழுத்து மற்றும் கைகளில் காயம் இருந்தது.
இதையடுத்து போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இளம்பெண் உடலில் காயங்கள் இருப்பதால் அவரை யாராவது அடித்தனரா? அல்லது இளம்பெண் தந்தை திட்டிய விரக்தியில் தற்கொலை செய்து கொண்டரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரது சாவில் மர்மம் நீடித்து வருகிறது.
இளம்பெண்ணின் மர்மச்சாவு குறித்து ஆலாந்துறை போலீசார் இளம் பெண்ணின் பெற்றோர், கணவர் ஆகியோரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
திருமணம் ஆகி 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருமணத்தை மறைத்து அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண்ணுடன் மகேந்திர பூபதி பழகினார்.
- மகேந்திர பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை,
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திர பூபதி (வயது 22). கூலி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
ஆனால் திருமணத்தை மறைத்து அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண்ணுடன் அவர் பழகினார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர்.
மகேந்திரபூபதி, சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் சிறுமியை மேட்டுப்பாளையத்தில் உள்ள கோவிலில் வைத்து திருமணமும் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மகேந்திரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விவரம் சிறுமிக்கு தெரியவந்தது. இதேபோல மகேந்திர பூபதியின் மனைவிக்கும், தனது கணவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவி, மகேந்திர பூபதியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகேந்திர பூபதி வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த குற்றத்துக்காக மகேந்திர பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.
- இறுதி நாளான நேற்று வள்ளி திருமணம் எனும் தமிழ் நாட்டிய நாடகம் நடைபெற்றது.
மெலட்டூர்:
மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடக கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பாகவத மேளா நாடக விழா கடந்த 19-ந் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் நாடகம் நடைபெற்று வந்தது.
விழாவின் இறுதி நாளான நேற்று (25-ந்தேதி) வள்ளி திருமணம் எனும் தமிழ் நாட்டிய நாடகம் நடை பெற்றது.
இதனை ஏராளமா னோர் கண்டு ரசித்தனர்.
ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் இயக்குனர் கலைமாமணி குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- கிராம பஞ்சாயத்துதாரர்கள் காதலர்கள் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருவீட்டார்களின் சம்மதம் பெற்றனர்.
- சின்னான், தனலட்சுமி திருமணம் உற்றார் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் புடை சூழ நடைபெற்றது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லையில் சுமார் 3000 அடிக்கு மேலே அடர்ந்த வனப்பகுதியில் மாவடப்பு செட்டில்மெண்ட் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த மலை கிராமத்தை சேர்ந்த சின்னான் - தனலட்சுமி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து காதலர்கள் தங்களது காதல் குறித்தும் பெற்றோர் எதிர்ப்பு பற்றியும் கிராம பஞ்சாயத்தார்களிடம் முறையிட்டு, தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கிராம பஞ்சாயத்துதாரர்கள் காதலர்கள் குடும்பத்தனரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருவீட்டார்களின் சம்மதம் பெற்றனர். பின்னர் சின்னான், தனலட்சுமி திருமணம் உற்றார் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் புடை சூழ நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கிராம மக்கள் மற்றும் உறவினர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து பழங்குடியினர் முறைப்படி பாட்டு, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலாளரும், தளி பேரூராட்சி துணை தலைவருமான செல்வன், வன உரிமை குழு தலைவர்கள் முருகன், குப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- திருவேடகத்தில் ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா- சி.பி.ஆர். சரவணன் இல்ல திருமணத்தை அமைச்சர் பி.மூர்த்தி நடத்தி வைத்தார்.
- சத்ய பிரகாஷ் உள்ளிட்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர்.சரவணன் மகன் எஸ்.வி.விஷ்ணு ராமிற்கும், மாரணி வாரியேந்தல் டி. ண்ணன்-தீபா மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த திருமணம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் சி.பி.ஆர். அருவுகம் மகாலில் நடந்தது. மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான பி. மூர்த்தி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
விழாவிற்கு வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன் மாறன் ஆகியோர் வரவேற்றனர்.
ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டி, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜி.பி.ராஜா, சோழவந்தான் ஒன்றிய கவுன்சிலர்-பேரூர் செயலாளர் எஸ்.என். சத்ய பிரகாஷ் உள்ளிட்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்