search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீரங்கம்"

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு நேற்று இரவு ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் சீர்வரிசை வழங்கப்பட்டது.
    சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் சார்பு கோவிலாக இருந்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று காலை சமயபுரம் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரை வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி அம்மன் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், அறங்காவலர்கள், அதிகாரிகள் தலையில் சுமந்தும், கையில் ஏந்தியவாறும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக புறப்பட்டு வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்மன் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வந்தனர்.

    அங்கு சீர்வரிசை பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் அலுவலர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.

    இதையடுத்து அம்மனுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன் மற்றும் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் நாளான கடந்த 15-ந் தேதி தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்திரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8-ம் நாளான நேற்று முன்தினம் மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தார். 4.30 மணி முதல் 5.15 மணி வரை ரதரோஹணம்(தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேரில் சிறப்பு அலங்காரத்தில் உபநாச்சியார்களுடன் நம்பெருமாள்.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகள் வழியாக வலம் வந்து, காலை 9 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, விளக்கு மற்றும் சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர். தேர் திரு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடை பெறுகிறது. நிறைவு நாளான நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார்.

    வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம் பெருமாள் உத்திர வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

    திருவிழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் உள்திருவீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று(சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறை சென்றடைந்தார்.

    இன்று காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது.

    21-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நிறைவு நாளான 22-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் தைத்தேர் திருவிழாவின் 4-ம் நாளான நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு 4 உத்திர வீதிகளில் வலம் வருகிறார். 3-ம் நாளான நேற்று காலை நம்பெருமாள் சிம்மவாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு 4.45 மணிக்கு வாகன மண்டபம் வருகிறார். அங்கிருந்து காலை 5.15 மணிக்கு இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து காலை 6 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 12 மணிக்கு வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.

    வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    நாளை(புதன்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 17-ந் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். 18-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருகிறார். 19-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வருகிற 20-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் 4 உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 21-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான 22-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர்திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர்திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வருகிற 22-ந் தேதி வரை 11 நாட்கள் விமரிசையாக திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 20-ந் தேதி நடக்கிறது.

    தைத்தேரோட்ட விழாவை முன்னிட்டு தெற்கு உத்திரை வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி நடைபெற்றது.

    அப்போது முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு முகூர்த்தகாலை கோவில் அறங்காவலர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர். தைத்தேரோட்ட விழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவின் இரண்டாம் நாளான மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும், 14-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வருகிறார். 15-ந் தேதி இரவு 7.15 மணிக்கு கருடசேவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
    கார்கோடகன் தினமும் கமலாலயத்திலிருந்து தீர்த்தம் கொணர்ந்து ஸ்ரீரங்கநாதருக்கு பூஜை செய்கிறான் என்பதற்கு சான்றாக இன்னும் மலைப் பாதையில் குளத்திலிருந்து கோவில்வரை பாம்பு சென்ற வழி காணப்படுகிறது என்பது ஐதீகம்.
    நகரின் கிழக்குப் பகுதியில் நகர் மத்தியில் சுமார் -100 படிக்கட்டுகளை கொண்ட ஸ்ரீரங்கநாதர் கோவில் குடவரையில் அமைந்திருக்கிறது. க்ஷீராப்திநாதர் சிங்கமும் கொண்ட மிக குரூரமான கார்கோடகன் என்ற பாம்பணையில் ஸ்ரீரங்கநாதர் என்ற திருநாமத்தோடு யோகநித்திரை புரிகிறார். திருவடிபுறத்தில் தாமஸகுணம் படைத்த அரக்கர்களான மது, கைடபர் இருவரும் தீச்செயல் புரிய வந்தவர்கள் பகவத் குணவிஷேசத்தால் பக்தர்களாக மாறி பகவத் சரணார விந்தங்களில் மலர் வழிபாடு செய்கிறார்கள்.

    உந்தியில் நான்முகனும், சங்கு, சக்கர, கதை, கத்தி, வில் முதலிய முனிபுங்கவர்கள், சூரிய சந்திரர்கள் யாவரும் தும்புரு முதலிய முனிபுங்கவர்களும், சூரிய சந்திரர்கள் யாவரும் பகவானைத் துதிக்கிறார்கள். ஸ்ரீநரசிம்ம கோவிலில் அமைந்திருப்பது போல் இங்கும் சங்கர நாராயணனுக்கு எதிர்புறத்தில் வாமன திரிவிக்கரம வடிவங்கள் சிற்ப வடிவில் அமைந்திருக்கின்றன.

    இக்குகையில் முக்கிய இடத்தில் பள்ளிகொண்ட பெருமாளும், பக்கங்களில் சங்கரநாராயணரும், வாமனரும் எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த தலத்திரத்தில் கார்கோடகன் தவமியற்றி பகவானை மகிழ்வித்து அவருக்கு படுக்கையானான். தினமும் கமலாலயத்திலிருந்து தீர்த்தம் கொணர்ந்து ஸ்ரீரங்கநாதருக்கு பூஜை செய்கிறான் என்பதற்கு சான்றாக இன்னும் மலைப் பாதையில் குளத்திலிருந்து கோவில்வரை பாம்பு சென்ற வழி காணப்படுகிறது என்பது ஐதீகம்.

    ஸ்ரீமகாலட்சுமி இத்தலத்தில் ஸ்ரீரங்கநாயகி என்ற பெயரால் தனி ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்

    ஸ்ரீரங்கம் ஆலயத்தின் கதவு காலை வேளையில் திறக்கப்படும் போது, சன்னிதி முன்பாக ஒரு பசுவும், யானையும் எதிர் எதிர் திசையில் நிறுத்தி வைக்கப்படும். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    திருமாலின் 108 திவ்ய தேசங்களில் பெருமை வாய்ந்தது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் கதவு காலை வேளையில் திறக்கப்படும் போது, பெருமாளின் சன்னிதி முன்பாக ஒரு பசுவும், யானையும் எதிர் எதிர் திசையில் நிறுத்தி வைக்கப்படும்.

    அப்போது ரங்கநாதரின் சன்னிதியில் இருக்கும் ஐந்து பாத்திரங்களில் கொள்ளிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட நீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து பாடல்களின் வாயிலாக ரங்கநாதரை துயில் எழுப்புவார்கள்.

    பின்னர் இறைவனின் சன்னிதியில் திரையிட்டிருக்கும் திரை விலக்கப்படும். லட்சுமியின் அம்சமான பசு மற்றும் யானையைப் பார்த்து, அன்றைய பொழுதை ரங்கநாதர் தொடங்குவதாக ஐதீகம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் விளங்குகிறது. வைணவ திவ்ய தேசங்கள் 108-ல் இரண்டாவது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் வருகிற 26-ந் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்குகிறது.

    தொடர்ந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதி வரை விழா நடக்கிறது. 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை (பகல் பத்து நாட்கள்) மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டி நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு பொதுஜன சேவை நடக்கிறது. 30-ந் தேதி இரவு 8.30 மணிக்கு முத்துக்குறி, வியாக்யானம், அபிநயம், அரையர் தீர்த்தம் மற்றும் சடகோபம் சாதித்தல் நடக்கிறது. இந்த 5 நாட்களிலும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி முடிய மூலஸ்தான சேவை கிடையாது.

    31-ந் தேதி முதல் பிப்ரவரி 4-ந் தேதி முடிய திருவாய்மொழி என்னும் ராப்பத்து திருநாள் நடக்கிறது. அன்றைய நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு கண்டருளி, மாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடக்கிறது.

    4-ந் தேதியன்று தீர்த்தவாரி, திருமஞ்சனம் மற்றும் திருவாய் மொழித் திருநாள் சாற்றுமறை நடைபெறுகிறது.

    மேற்கண்ட தகவலை ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் இணை ஆணையர் ஜெய ராமன் தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 7-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 18-ந் தேதி நடைபெற்றது.

    இந்த நிலையில் நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. நம்மாழ்வார் பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் வெள்ளை உடை உடுத்தி பன்னிருநாமமும், துளசி மாலையும் தரிசித்து காட்சியளித்தார். அதன்பின் நம்மாழ்வாரை அச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி இருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர்.

    அதன்பின் பல்வேறு வேதங்களை உச்சரித்தவாறு நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர். பின்னர் நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசி மாலையும் அணிவிக்கப்பட்டது. பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை காண்பித்து நம்மாழ்வார் மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர்.

    அதன் பின் காலை 8 மணிமுதல் 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். இதனை தொடர்ந்து நம்பெருமாள் காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    அதன்பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் இன்று(29-ந்தேதி) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. அதன்பின் அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றமறை நடைபெற்றது. இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி காலையில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்தார். அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாள் குளத்தில் புனித நீராடினார்். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருளினார்.

    இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் சந்திரபுஷ்கரணியில் உள்ள நீர் தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. தீர்த்தவாரிக்கு பின் சயனப்பெருமாள் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்பெருமாள் அங்கிருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திற்கு மதியம் சென்றடைந்தார். அங்கு மாலை வரை பொதுஜன சேவை நடைபெற்றது.

    பின்னர் இரவு வரை பொது ஜனசேவையுடன் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுளினார். இதையடுத்து இரவு 11 மணி முதல் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணி வரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பொதுஜன சேவையும், காலை 6 மணி முதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன், பொதுஜன சேவை நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் நாளை(சனிக்கிழமை) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. 
    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது.
    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது. பகல்பத்து. ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    18-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் ரத்தினஅங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெறுகிறது.

    இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை அடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு மாலை 6 மணி முதல் மாலை 6.15 மணிவரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெறுகிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜனசேவையும் நடைபெறுகிறது. இரவு 11.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன் நள்ளிரவு 12.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான நாளை(செவ்வாய்க்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு, மாலை 5.15 மணிமுதல் 6.15 மணிவரை வையாளி வகையறா கண்டருளுகிறார். பின்னர் மாலை 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். அங்கு இரவு 8.15 மணிமுதல் 9.30 மணி வரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    10-ம் திருநாளான 27-ந்தேதி தீர்த்தவாரியும், 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்களை விவரமாக பார்க்கலாம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியுடன் ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இன்று (புதன்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் இரண்டாவது நாள் ஆகும். இன்று மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி மதியம் 1 மணிக்கு பரமபதவாசலில் எழுந்தருளி பிற்பகல் 2.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தை அடைகிறார்.

    அப்போது பொதுமக்கள் அரையர் சேவையுடன் நம்பெருமாளை தரிசிக்க முடியும். இரவு 9.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். வருகிற 26-ந்தேதி வரை நம்பெருமாள் தினமும் இதேபோல் புறப்பாடாகி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    24-ந்தேதி திருக்கைத்தல சேவை என்பதால் மாலை 3 மணிக்கும், 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி கண்டருள்வதற்காக மாலை 4.30 மணிக்கும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். ராப்பத்து உற்சவத்தின்போது இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்து இருக்கும்.

    24-ந்தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், 26-ந்தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 27-ந்தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பரமபதவாசல் திறந்து இருக்கும். 25-ந்தேதி வேடுபறி நிகழ்ச்சியன்று பரமபதவாசல் திறப்பு கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 
    ×