search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • தொழிலாளர்களுக்கு பிடித்த கால்பந்து வீரர்களை பற்றி ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
    • ஸ்விக்கீ, சுமோட்டா, ப்ளிங்க்கிட் உள்ளிட்ட உணவு வினியோக நிறுவன ஊழியர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

    பெங்களூர்:

    கர்நாடகா மாநில சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

    இறுதி கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்திற்காக கர்நாடகம் வந்துள்ள ராகுல்காந்தி பெங்களூரில் சிறுசிறு வேலைகள் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தொழிலாளர்கள் தங்களது அவல நிலையை ராகுல்காந்தியிடம் பகிர்ந்து கொண்டனர்.

    தொடர்ந்து, அங்குள்ள ஒரு உணவகத்தில் தொழிலாளர்களுடன் அமர்ந்து ராகுல்காந்தி மசாலா தோசைகள் மற்றும் காபி ஆர்டர் செய்து சேர்ந்து சாப்பிட்டார். அப்போது ராகுல்காந்தியிடம் தொழிலாளர்கள் கூறுகையில், வேலையில்லா திண்டாட்டத்தால் குறைவான ஊதியம் பெறும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

    அவர்களின் குறைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி தொடர்ந்து அவர்களுடன் உரையாடினார். அப்போது விளையாட்டுகள் பற்றியும் விவாதித்தார்.

    மேலும் தொழிலாளர்களுக்கு பிடித்த கால்பந்து வீரர்களை பற்றியும் அவர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து ஸ்விக்கீ, சுமோட்டா, ப்ளிங்க்கிட் உள்ளிட்ட உணவு வினியோக நிறுவன ஊழியர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

    அப்போது அவர்களின் வாழ்க்கை, நிலையான வேலையின்மை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை பற்றி விவாதித்தனர்.

    • கர்நாடகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
    • இரட்டை என்ஜின் அரசால் மாநிலத்தின் வளர்ச்சியும் இரட்டிப்பாகும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெலகாவி தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நேற்று அமித்ஷா திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார். தெற்கு தொகுதியில் திறந்த வாகனத்தில் நின்றபடி அமித்ஷா பேசியதை தொலைக்காட்சி சேனல்கள் வீடியோ எடுத்தனர். ஆனால் வீடியோ எடுக்க கூடாது என்று மத்திய ஆயுதப்படை வீரர்கள் கூறினார்கள்.

    இதனால் கோபம் அடைந்த அமித்ஷா, வீடியோ எடுக்க அனுமதிக்கும்படி மத்திய ஆயுதப்படை வீரர்களிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அமித்ஷா பேசியதாவது:-

    இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் கர்நாடகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். கர்நாடகத்தில் சாதி மற்றும் மதங்களுக்கு இடையே காங்கிரஸ் தலைவர்கள் சண்டையை ஏற்படுத்தி வருகிறார்கள். தேர்தலுக்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதே காங்கிரசின் வேலையாகும். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இரட்டை என்ஜின் அரசுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இரட்டை என்ஜின் அரசால் மாநிலத்தின் வளர்ச்சியும் இரட்டிப்பாகும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது. மக்களை ஏமாற்றுவதற்காக தான் உத்தரவாத அட்டையே கொடுக்கின்றனர். வருகிற 10-ந் தேதி அனைத்து மக்களும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று பா.ஜனதாவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துமகூரு மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளன.
    • கட்சி தொண்டர்களே என்னுடைய சொத்து.

    துமகூரு :

    ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துமகூரு மாவட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பிரசாரம் செய்த போது பேசியதாவது:-

    துமகூரு மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளன. அதில், 10 தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) வெற்றி பெறுவது உறுதி. 2 தேசிய கட்சிகளும், நமது கட்சி மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஓட்டுப்போட்டால் காங்கிரசுக்கு போடுவது என்று பா.ஜனதா தலைவர்களும், நமது கட்சிக்கு ஓட்டுப்போட்டால் பா.ஜனதாவுக்கு வாக்களித்ததாக ஆகிவிடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

    பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, பல மாநில முதல்-மந்திரிகள் வருகிறார்கள். காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் தலைவர்கள் வருகிறார்கள். ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு பிரசாரம் செய்ய யாரும் தேவையில்லை. எங்கள் கட்சி தொண்டர்களே போதும், அவர்களே நட்சத்திர பேச்சாளர்கள் ஆவார்கள்.

    பா.ஜனதா, காங்கிரசும் ஊழல் கட்சிகள். ஜனதாதளம்(எஸ்) தான் விவசாயிகள், ஏழைகளுக்கான கட்சியாகும். துமகூரு புறநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். தேர்தலுக்கு முன்பாக வரும் கருத்து கணிப்பு முடிவுகளை நமது கட்சியினர் யாரும் நம்ப வேண்டாம். இந்த முறை நமது கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி.

    நான் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். கருத்து கணிப்பு முடிவுகள் பற்றி ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கவலைப்பட தேவையில்லை. கட்சி தொண்டர்களே என்னுடைய சொத்து. தேசிய கட்சிகளால் கர்நாடகத்திற்கு எந்த பயனும் இல்லை. இதனை மாநில மக்கள் புரிந்து கொண்டு ஜனதாதளம்(எஸ்) கட்சியை நிச்சயமாக ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார்.

    • மண்டியா மாவட்டம் மத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கே.எம். உதய் போட்டியிடுகிறார்.
    • சுரேசை அதிகாரிகள் பிடித்து மத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    மண்டியா :

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இதற்கான பகிரங்க பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் நிறைவடைகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல்கட்சியினர் பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்கொத்தி பாம்பாக இருந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மண்டியா மாவட்டம் மத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கே.எம். உதய் போட்டியிடுகிறார். இவரது நண்பர்களான மத்தூர் தொட்டி வீதியை சேர்ந்த சுரேஷ் பாபு, ரமேஷ் ஆகியோர் வீடுகளில் பணம் பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு வினியோகிக்க இருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் இருவரது வீடுகளில் 20-க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுரேஷ் பாபு வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. மொத்தம் 2 கோடி ரூபாய் பணம் சிக்கியது. அதற்கு உரிய ஆவணங்களும் இல்லை.

    இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதுபோல் ரமேசின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரமும் சிக்கியது. இந்த பணத்தை வாக்காளர்களுக்கு வினியோகிக்க பதுக்கியதாக தெரிகிறது. இதையடுத்து சுரேசை அதிகாரிகள் பிடித்து மத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் சுரேஷ் பாபுவை கைது செய்து, வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் பதுக்கப்பட்டதா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரமேசிடமும் விசாரணை நடந்து வருகிறது.

    • கர்நாடகாவில் 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • நாட்டின் ஒட்டுமொத்த வரைபடத்தை பார்த்தால் 5 முதல் 6 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் உள்ளது.

    மும்பை :

    கர்நாடகாவில் வருகிற 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனக்கு கிடைத்த தகவலின்படி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். நாம் கேரளாவில் இருந்து தொடங்குவோம்.

    கேரளாவில் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறதா? தமிழ்நாட்டில்? கர்நாடகாவை பற்றி தற்போது சொல்லி இருக்கிறேன். தெலுங்கானாவில் பா.ஜனதா இருக்கிறதா? ஆந்திராவில்? ஏக்நாத் ஷிண்டேவின் புத்திசாலித்தனத்தால் அவர்களால் மராட்டியத்தில் ஆட்சியை பிடிக்க முடிந்தது.

    மத்தியபிரதேசத்தில் கமல்நாத் முதல்-மந்திரியாக இருந்தபோது சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்பட்டதால் அங்கு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது.

    ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த வரைபடத்தை பார்த்தால் 5 முதல் 6 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் பா.ஜனதா அல்லாத அரசு தான் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடக காங்கிரஸ் பா.ஜ.க.வின் ஊழல் பட்டியல் என விளம்பரம் வெளியிட்டது.
    • இதுதொடர்பாக கர்நாடக காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    புதுடெல்லி:

    கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் 2019 முதல் 2023 வரையிலான ஊழல் விகிதங்கள் என பட்டியலிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட்டது. மேலும் பா.ஜ.க. அரசாங்கத்தை சிக்கல் இயந்திரம் என குறிப்பிட்டது.

    இந்நிலையில், இந்த விளம்பரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அதில், அதற்கான ஆதாரங்களைத் தெரிவிக்கவும். நீங்கள் வழங்கிய விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள், வேலைகள் மற்றும் கமிஷன் வகைகள் ஆகியவற்றின் விகிதங்களுக்கான சான்றுகள் மற்றும் ஏதேனும் விளக்கம் இருந்தால் அதனை நாளை (மே 7) மாலை 7 மணிக்குள் பொது வெளியில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் வாகனத்தில் சென்றபடி பிரசாரம் செய்தார்.
    • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பான பிரசாரம் செய்து வருகின்றன. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இரு கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் வாகனத்தில் சென்றபடி பிரசாரம் செய்தார். பிரதமர் வாகன பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியதோடு, அவருக்கு ஆரவாரமான வரவேற்பை அளித்தனர். பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது..,

     

    "இதுபோன்ற அன்பை இதுவரை எங்கும் பார்த்ததில்லை. பெங்களூருவில் கிடைத்த வரவேற்புக்கு இணையில்லை. இன்று காலை நான் பொது மக்கள் தரிசனத்தை பெங்களூருவில் பெற்றேன். பெங்களூருவில் நான் பார்த்ததை வைத்து ஒன்றை தெரிந்து கொண்டேன்."

    "இந்த தேர்தலில் மோடியோ அல்லது பாஜக தலைவர்களோ அல்லது நம் வேட்பாளர்களோ போட்டியிடவில்லை. மாறாக இங்கு கர்நாடக மக்கள் தான் பாஜக வெற்றிக்காக போட்டியிடுகின்றனர். ஒட்டுமொத்த தேர்தல் கட்டுப்பாடு முழுமையாக மக்கள் கையில் இருப்பதை என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது."

    "இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக பாகல்கோட் மக்களுக்கு மூன்று லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பகல்கோட்டை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்தமாக கான்கிரீட் வீடு பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்ட பலன்கள் பாகல்கோட் மக்களுக்கு சென்றடைந்துள்ளது," என்று தெரிவித்து இருக்கிறார். 

    • 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும் அவரது குடும்பத்தையும் கொல்ல பா.ஜனதா சதி செய்கிறது.

    பெங்களூரு:

    224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    தேர்தல் பிரசாரத்தின்போது இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கேவையும் அவரது குடும்பத்தினரையும் கொல்ல பா.ஜனதா சதி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கர்நாடக பொறுப்பாளரும், செய்தி தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா இது தொடர்பாக பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும் அவரது குடும்பத்தையும் கொல்ல பா.ஜனதா சதி செய்கிறது. கார்கேவை கொல்ல பா.ஜனதா சதி செய்தது சித்தாவூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஆடியோவில் அம்பலமாகி உள்ளது.

    கார்கே தலித் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் பா.ஜனதாவால் ஜீரணிக்க முடியவில்லை. மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் மோடி கேலி செய்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய்களை உள்ளடக்கியது.
    • பாலுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும்.

    பெங்களூரு

    மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் பலமான கர்நாடகத்தை நிா்மாணிக்கும் வகையில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. இதில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தினமும் அரை லிட்டர் பால், ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளோம். அத்துடன் ரேஷன் அட்டைகளுக்கு மாதம் 5 கிலோ சிறு தானியங்கள் வழங்கப்படும்.

    கர்நாடகத்தில் 54 லட்சம் விவசாயிகள் கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை பெறுகிறார்கள். சிறுதானியம் சாகுபடி செய்யும் நிலங்களுக்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விவசாய விளைபொருட்களை அரசு பஸ்களில் 50 கிலோ வரை இலவசமாக எடுத்து செல்ல அனுமதி, ஏழைகளுக்கு வீடுகட்ட ரூ.5 லட்சம் மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

    பாலுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும். மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி பெண்களை சமமாக பார்க்கும் நிலையை ஏற்படுத்துவோம். காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய்களை உள்ளடக்கியது. தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் எப்போதும் இந்து மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

    இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.

    • சோனியா காந்தி ஒரே ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டு பேசுகிறார்.
    • உடல்நிலை காரணமாக இந்த முறை சோனியா காந்தி இதுவரை பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். உடல்நிலை காரணமாக இந்த முறை சோனியா காந்தி இதுவரை பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் சோனியா காந்தி நாளை (சனிக்கிழமை) கர்நாடக தேர்தல் பிரசார களத்தில் குதிக்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் உப்பள்ளிக்கு வருகை தரும் அவர், அங்கு நடைபெறும் காங்கிரசின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், "6-ந் தேதி (நாளை) பகல் 12.30 மணிக்கு சோனியா காந்தி உப்பள்ளிக்கு வருகிறார். இங்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அவர் 3.30 மணிக்கு மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்" என்றனர்.

    சோனியா காந்தி ஒரே ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டு பேசுகிறார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் களத்தில் உள்ளார். பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால் அவர் கட்சி மாறி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டின் மகள்கள் மீதான அட்டூழியங்களில் இருந்து பா.ஜனதா ஒரு போதும் பின் வாங்கவில்லை.
    • பா.ஜனதாவின் பெண்கள் தொடர்பான முழக்கம் வெறும் பாசாங்கு தனம்.

    டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள்-போலீசாரால் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கூறும்போது, "மல்யுத்த வீராங்கனைகளை தாக்கியது வெட்கக்கேடானது. நாட்டின் மகள்கள் மீதான அட்டூழியங்களில் இருந்து பா.ஜனதா ஒரு போதும் பின் வாங்கவில்லை. பா.ஜனதாவின் பெண்கள் தொடர்பான முழக்கம் வெறும் பாசாங்கு தனம். நாட்டின் வீரர்களிடம் இதுபோன்ற நடத்தை வெட்கக் கேடானது" என்றார்.

    காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் ஹுடா இன்று அதிகாலை மல்யுத்த வீரர்-வீராங்கனைகளை சந்திக்க சென்ற போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக அவர் கூறும்போது, எங்கள் மகள்களின் (வீராங்கனைகள்) உடல்நிலை குறித்து விசாரிக்க நான் ஜந்தர் மந்தருக்கு சென்ற போது என்னை போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர் என்றார்.

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, டுவிட்டரில் கூறும்போது, பா.ஜனதாவிடம் இருந்து இந்தியாவின் மகள்களை காப்பாற்றுங்கள். இது வெட்கக் கேடானது. அதிர்ச்சி மற்றும் அவமானகரமானது. குற்றவாளி பிரிஜ் பூஷன் சரண்சிங், பா.ஜனதா தலைவராகவும், பா.ஜனதா எம்.பி.யானதால் இந்திய விளையாட்டு வீரர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள்.

    இது இந்திய விளையாட்டுக்கு ஒரு கருப்பு நாள். இந்தியாவின் மகள்களுக்கு யார் நீதி வழங்குவார்கள்? நள்ளிரவில் எங்கள் மகள்களை துன்புறுத்தவும் அவமானப்படுத்தவும் டெல்லி போலீசாருக்கு மோடி அரசு ஏன் உத்தரவிடுகிறது? என்று கூறியுள்ளார்.

    • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சியேயாகும்.
    • கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமைகளைப் புரிந்தன.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சியேயாகும்.

    கர்நாடக மாநிலத்தை மாறி மாறி ஆண்ட காங்கிரசு-பா.ஜ.க. இரு கட்சிகளும், ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக காவிரியின் குறுக்கே பல்வேறு அணைகளைக் கட்டி, காவிரி நீரைத் தடுத்து நிறுத்தி கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமைகளைப் புரிந்தன.

    கடந்த 5 ஆண்டு காலமாக கர்நாடக மாநிலத்தை ஆண்ட பா.ஜ.க., மேகதாது அணை கட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து, தமிழர்களுக்கு எதிரான அதே துரோக வரலாற்றைத் தொடர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு முன்பாகவே மேகதாது அணைகட்ட ரூ.9,000 கோடிகளை ஒதுக்குவதாக காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்துள்ளது, இந்தியக் கட்சிகள் எப்போதும் தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும் எதிராகவே செயல்படும் என்பதையே மீண்டும் ஒருமுறை நிறுவுகிறது.

    மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே அணை கட்ட நிதி ஒதுக்கப்படும் என்ற காங்கிரசு கட்சியின் அறிவிப்பு அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி, இந்திய கூட்டாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.

    அதுமட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பா ளர்களை வெற்றிபெற செய்யத் தேர்தல் பணிக்குழு அமைத்துப் பாடுபட வேண்டும் என்று கர்நாடக மாநில தி.மு.க.வினருக்கு அறிவுறுத்தி தி.மு.க. தலைமை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    மேகதாது அணை கட்டுவதற்கான காங்கிரசு கட்சியின் தேர்தல் வாக்குறுதி தி.மு.க.விற்கு தெரியுமா? தெரியாதா? ஆதரவு தெரிவிப்பதற்கு முன் மேகதாது அணையைக் கட்ட எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது என்ற உறுதிமொழியை காங்கிரசு கட்சியிடம் தி.மு.க. ஏன் பெறவில்லை? காங்கிரசு கட்சியின் வெற்றிக்குப் பாடுபடுவதன் மூலம் காவிரியில் மேகதாது அணை கட்ட தி.மு.க. மறைமுக ஆதரவு அளிப்பது தமிழ்நாட்டிற்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும். கர்நாடக தேர்தலில் காங்கிரசு கட்சியை ஆதரிக்கும் முடிவை தி.மு.க. கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×