search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புக்கு காங்கிரஸ் துணையாக உள்ளது.
    • காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு சண்டை ஏற்பட்டுள்ளது.

    பெலகாவி :

    கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை விஷப்பாம்பு என்று கூறியுள்ளார். இது பா.ஜனதா கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கார்கேவின் பேச்சுக்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பெலகாவி மாவட்டம் இண்டல்காவில் நடந்த பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி 100 ஆண்டு வாழவேண்டும் என்று நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் மல்லிகார்ஜுன கார்கே, மோடியை விஷப்பாம்பு என்று கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வயதில் மூத்தவர், ஒரு கட்சியின் பெரிய பதவியில் இருப்பவர், பல பொறுப்புகளை வகித்தவர் இவ்வாறு பேசுவது வெட்ககேடானது.

    காங்கிரசின் தலைவராக இருந்தாலும் நீங்கள் ராகுல்காந்திக்கு செருப்பாக தான் இருக்கிறீர்கள். எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புக்கு காங்கிரஸ் துணையாக உள்ளது. குண்டர்களுக்கு துணையாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, எவ்வாறு நல்லாட்சி வழங்க முடியும்?. பா.ஜனதா பற்றியும், பிரதமர் மோடியை பற்றியும் பேசுவதை நிறுத்திவிட்டு சொந்த கட்சி பிரச்சினைகளை முதலில் பாருங்கள். காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. காங்கிரசால் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்க முடியுமா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது சாதி வாரி கணக்கெடுப்புக்கு ரூ.130 கோடி செலவிடப்பட்டது.
    • எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கியுள்ளோம்.

    யாதகிரி :

    யாதகிரி மாவட்டம் ஷாகாப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து திறந்த வாகனத்தில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுப்படுத்தியது. பிறகு சமுதாயத்தை உடைக்க முயன்றது. வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க நினைத்த முயற்சியும் காங்கிரசுக்கு கைகொடுக்கவில்லை. தற்போதும் காங்கிரசார் மீண்டும் தவறு செய்கிறார்கள். இடஒதுக்கீடு விவகாரத்தில் அக்கட்சி தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

    கர்நாடகத்தில் காவி அலை வீசுகிறது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே போன்ற அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் பிரசாரத்திற்கு வரட்டும். உள்ளூர் தலைவர்களும் வரட்டும். ஆனால் காவி அலையை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி நாட்டை ஆண்டுள்ளது. இனி அந்த கட்சியின் விளையாட்டும், பொய்யும் மக்களிடம் எடுபடாது.

    சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது சாதி வாரி கணக்கெடுப்புக்கு ரூ.130 கோடி செலவிடப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையை அமல்படுத்தவில்லை. அதனை அமல்படுத்த காங்கிரசாருக்கு வலிமை இல்லை. நாங்கள் எஸ்.சி., எஸ்.டி. சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம். சமுதாயத்தை உடைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை.

    எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கியுள்ளோம். தேன்கூட்டில் கை வைக்காதீர்கள் என்றனர். ஆனால் தேனீக்கள் கடித்தாலும் பரவாயில்லை என மக்களுக்கு எனது தலைமையிலான பா.ஜனதா அரசு நல்லது செய்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி உடைந்துவிட்டது. அனைத்து சமுதாயத்தினரும் பா.ஜனதாவை ஆதரிக்கின்றனர். இதனால் காங்கிரசார் கடும் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி தருவது உத்தரவாத அட்ைட அல்ல. தேர்தலுக்கு பிறகு அது இருக்காது. ஆட்சி, அதிகாரத்திற்காக சமுதாயத்தை பிளவுப்படுத்தும் வேலையை காங்கிரஸ் செய்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கொரட்டகெரே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் போட்டியிடுகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது நிகழ்வுகளை சந்தித்து வருகிறது.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கர்நாடகத்தில் முற்றுகையிட்டு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    இவ்வாறு வரும் அரசியல் கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதுடன், அனல் பறக்கும் வார்த்தைகளால் சாடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் முன்னாள் துணை முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் நேற்று நடந்துள்ளது. கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

    கொரட்டகெரே தொகுதி யில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் போட்டியிடுகிறார். அவர் கொரட்டகெரே அருகே பைரேனஹள்ளி கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் பிரசாரம் செய்தார். அந்த சந்தர்ப்பத்தில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பரமேஸ்வருக்கு மாலை அணிவித்தும், பூக்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஆதரவாளர்கள் பரமேஸ்வரை தோள்களில் தூக்கி வைத்து உற்சாகமாக நடனமாடியபடி இருந்தனர்.

    அப்போது மர்மநபர்கள் பரமேஸ்வர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில் ஒரு கல் அவரது தலையை பதம் பார்த்தது. இதனால் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே பரமேஸ்வர் தனது கையால் ரத்தம் வெளியேறிய பகுதியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டார்.

    பின்னர் அவரது ஆதரவாளர்கள் அவரை கீழே இறக்கி, அவரை அருகில் உள்ள அக்கிரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக துமகூருவில் உள்ள சித்தார்த்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கொரட்டகெரே போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் அங்கு திரண்டு இருந்த கிராம மக்கள், காங்கிரஸ் தொண்டர்களிடம் விசாரித்து தகவல்களை கேட்டு பெற்றுக் கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காங்கிரஸ் வேட்பாளர் பரமேஸ்வர் மீது திட்டமிட்டே மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

    பைரேனஹள்ளி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் யாரும் அசம்பாவிதங்களில் ஈடுபடக்கூடாது என்று தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    ஏற்கனவே, பரமேஸ்வர் கடந்த 19-ந்தேதி கொட்டகெரே தாலுகா அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய தாலுகா அலுவலகத்திற்குள் சென்ற சமயத்தில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கினார். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    சம்பவம் பற்றி கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து கொரட்டகெரே தாலுகா ரெட்டிஹள்ளி அருகே வெங்கடபுரா கிராமத்தை சேர்ந்த ரங்கதம்மய்யா என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் 2-வது முறையாக நடந்த கல்வீச்சில் வேட்பாளர் பரமேஸ்வர் மண்டை உடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரதமர் மோடி மற்ற தலைவர்களை போன்றவர் அல்ல.
    • பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

    புதுடெல்லி :

    கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை 'விஷப்பாம்பு' என்று காட்டமாக விமர்சித்தார். அக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கார்கே வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

    இந்நிலையில், அவருக்கு ரெயில்வே மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் பற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கலாசாரத்தையும், மனப்பான்மையையும் காட்டுகிறது. தனிப்பட்ட விமர்சனம் செய்வதை காங்கிரஸ் கைவிடவில்லை என்று தெரிகிறது.

    முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஒரு தடவை பிரதமர் மோடியை 'பிறர் வாழ்க்கையுடன் விளையாடுபவர்' என்று கூறினார்.

    தார்மீக அதிகாரம் என்று வரும்போது, பிரதமர் மோடி மற்ற தலைவர்களை போன்றவர் அல்ல. அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் சரியான திசையில் நாட்டை அழைத்துச் செல்கிறார் என்று மக்களுக்கு தெரியும்.

    தனது வீட்டை அழகுபடுத்த ரூ.45 கோடி செலவிட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். தான் வாக்குறுதி அளித்ததற்கு நேர் எதிரான காரியத்தை அவர் செய்கிறார். தனது விருப்பத்தை நிறைவேற்ற அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் அதிகார போதையில் இருந்து வெளியே வரவில்லை.
    • கர்நாடகம் கலாசாரத்தை கொண்ட நாடு.

    பெங்களூரு :

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நான் எனது தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கு சென்று மக்களின் ஆதரவை கேட்கிறேன். அதனால் என்னை மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள். தேசத்துரோகிகள், பயங்கரவாதிகள், அமைதியை சீர்குலைப்பவர்களுக்கு பிரதமர் மோடி சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். நாட்டின் பிரதமர் மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்டு மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார். காங்கிரஸ் கீழ்மட்டத்திற்கு இறங்கியுள்ளது.

    காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் அதிகார போதையில் இருந்து வெளியே வரவில்லை. முன்பு இருந்த அதிகார போதையில் இருப்பது போலவே இப்போதும் பேசுகிறார்கள். கர்நாடகம் கலாசாரத்தை கொண்ட நாடு. அனைவரையும் கன்னடர்கள் மதிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நாங்கள் எதிர்த்தாலும், மூத்த தலைவர்கள் என்பதால் அவரை நாங்கள் மதிக்கிறோம்.

    ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர் இவ்வாறு தரக்குறைவாக பேசலாமா?. பா.ஜனதா வெற்றி பெறும் என்பதால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரக்தியில் உள்ளனர். அதனால் எங்கள் கட்சியின் உள்துறை மந்திரி அமித்ஷா மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. சட்டப்படி என்ன நடைபெறுமோ அது நடக்கும். காங்கிரசாரின் புகாரில் உண்மை இல்லை. அந்த புகார் மனு நிராகரிக்கப்படும். காங்கிரஸ் கட்சி பண பலத்தை கொண்டு தேர்தலை எதிர்கொள்கிறது. முன்பு எங்கள் கட்சி தொண்டர்கள் பலர் அடி-உதை வாங்கியுள்ளனர். அவ்வாறு தற்போது நடைபெறக்கூடாது என்பதால் நாங்கள் முன்எச்சரிக்கையாக கட்சி நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம்.

    எங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்கிறோம். ஒரு அரசியல் கட்சியாக நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறோம். இதில் என்ன தவறு உள்ளது. தேர்தல் ஆணையம் தனது பணியை ஆற்றும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • எனது உயர்விற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தவர்கள்.
    • அமைச்சர் முத்துசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    ஈரோடு :

    ஈரோட்டில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்னுடைய பொதுவாழ்வில் சிவாஜி கணேசன், சோனியாகாந்தி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய 3 பேருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் அவர்களை மறக்கமாட்டேன். எனது உயர்விற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தவர்கள்.

    ஈரோடு கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா சாலை என பெயர் வைத்ததற்கு அமைச்சர் முத்துசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து நிறைவேற்றுவேன். அமைச்சர் முத்துசாமி ஈரோடு மேற்கு தொகுதிக்கு மட்டும் அல்லாமல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    ஈரோடு பகுதியில் பால் உற்பத்தியை அதிகரித்த எஸ்.கே.பரமசிவம், கோபி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் ஆகிய இருவருக்கும் சித்தோடு மற்றும் கோபியில் சிலை வைக்கவேண்டும். இதுதொடர்பாக அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

    இத்தனை ஆண்டுகளாக கோபி எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடியவர் ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு செல்ல வேண்டியவராகவே இருக்கும் நிலையில் அங்கு எந்த பணியும் செய்யவில்லை. ஆனால் அமைச்சர் முத்துசாமி ஈரோட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    • 261 வாரங்களில் 261 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.
    • பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கிறோம்.

    பெங்களூரு :

    பிரதமர் மோடி நேற்று கர்நாடக பா.ஜனதா தொண்டர்களிடையே காணொலி மூலம் பேசினார். இதில் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று சாடினார். இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் ஆகியோருக்கு அடுத்ததாக பிரதமர் மோடி தற்போது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். வருகிற 10-ந் தேதி 40 சதவீத கமிஷன் பா.ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கர்நாடக மக்கள் உத்தரவாதம் அளிப்பார்கள். ராஜஸ்தான், இமாசல பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களை போல் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த அடுத்த சில நாட்களில் காங்கிரசின் உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவோம்.

    கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பா.ஜனதா ஆபரேஷன் தாமரை மூலம் கவிழ்ப்பதற்கு முன் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது நாங்கள் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினோம். நிலையான ஆட்சியை நடத்தினோம்.

    261 வாரங்களில் 261 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அதனால் காங்கிரஸ் அளித்துள்ள உத்தரவாத திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்துவோம். ராஜஸ்தானில் நாங்கள் அளித்த வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்திரா காந்தி நகர வேலை உறுதி திட்டம், சுகாதார உரிமை திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.

    சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் ரூ.25 லட்சம் காப்பீடு, ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். சத்தீஷ்காரில் ரூ.9 ஆயிரத்து 270 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. ராஜீவ்காந்தி கிசான் நியாய் திட்டத்தின் மூலம் ஏக்கருக்கு ரூ.9 ஆயிரம் உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறினோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நான்தான் கொரோனா வைரஸ் என்றார் திக்விஜய் சிங்.
    • கொரோனா வைரசை விட மாநிலத்துக்கு அதிக சேதத்தை காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், காங்கிரசின் கொரோனா வைரஸ் என மத்திய பிரதேச நீர்வளத்துறை மந்திரி துளசிராம் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த திக்விஜய் சிங், பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நான்தான் கொரோனா வைரஸ் என தெரிவித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களின் கருத்தை மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், அவர் (திக்விஜய் சிங்) ஒரு சரியான ஒப்பீடு செய்துள்ளார். ஒப்பிடுவதற்கு அவர் வேறு எந்த வைரசையும் கண்டுபிடிக்கவில்லை. கொரோனா வைரசை மட்டுமே கண்டுபிடித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங் மற்றும் கமல்நாத் இருவரும் கொரோனா வைரஸை விட மாநிலத்துக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று நரேந்திர மோடி கூறுகிறார்.
    • முதல் நாளில் நான்கு வாக்குறுதிகளை அல்ல, ஐந்தாவது வாக்குறுதியும் அமல்படுத்தப்படும் என்றார் ராகுல் காந்தி.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வழங்குகின்றன. அவ்வகையில் காங்கிரஸ் கட்சி இன்று ஐந்தாவது தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருக்கிறது. அதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மங்களூருவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று நரேந்திர மோடி கூறுகிறார். நாங்கள் உங்களுக்கு (மக்களுக்கு) ஏற்கனவே நான்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அவை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த முதல் நாளில், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

    மோடி அவர்களே, நான்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்று சொன்னீர்கள். நான் அதில் மேலும் ஒன்றை சேர்க்கிறேன். முதல் நாளில் நான்கு வாக்குறுதிகளை அல்ல, ஐந்தாவது வாக்குறுதியும் அமல்படுத்தப்படும். கர்நாடகம் முழுவதும் பெண்கள் பொது போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வார்கள்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜனதாவின் கொள்கைகளை மறைக்க ஒன்றும் இல்லை.
    • சாதி, மத அடிப்படையிலான பாகுபாட்டை பா.ஜனதா நம்புவது இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று பெலகாவி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஓட்டு சேகரித்தார். காக்வாட் தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    இந்திய வரலாற்றில் மத ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கட்சி என்று ஒன்று இருந்தால் அது காங்கிரஸ். அக்கட்சி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பெயரில் அரசியல் செய்கிறது. இத்தகைய குறுகிய மனப்பான்மையுடன் அரசியல் செய்யவே கூடாது. முஸ்லிம் சமுதாயத்தை கவரும் நோக்கத்தில் அவர்களுக்கு மத அடிப்படையில் 4 சதவீத இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் வழங்கியது.

    பொருளாதாரத்தில் நலிவடைந்த முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருந்தால் அதை நாங்கள் வரவேற்று இருப்போம். ஆனால் இந்திய அரசியல் சாசனம், மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அனுமதிப்பது இல்லை. பா.ஜனதாவின் கொள்கைகளை மறைக்க ஒன்றும் இல்லை. ஒட்டுமொத்த உலகத்திற்கும் எங்கள் கட்சியின் குணம் என்னவென்று தெரியும்.

    சாதி, மத அடிப்படையிலான பாகுபாட்டை பா.ஜனதா நம்புவது இல்லை. நாங்கள் நீதி மற்றும் மனித தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். 12-வது நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணரின் கொள்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். அந்த கொள்கைகள் அடிப்படையில் தான் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. கர்நாடக மக்கள் பா.ஜனதாவுக்கு மூன்றில் 2 பங்கு இடங்களை வழங்கி தனிப்பெரும்பான்மை பலத்தை வழங்க வேண்டும்.

    இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

    • கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும்.
    • மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும்.

    மைசூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல்கட்சி தலைவர்கள் சவால் விடுவதும், குற்றச்சாட்டுகளை கூறும் சம்பவங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் உப்பள்ளியில் நடந்த வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், சிலர் பா.ஜனதாவில் அனைத்து பதவிகளையும், அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டு வேறு கட்சிக்கு சென்றுள்ளனர். பா.ஜனதாவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற ஜெகதீஷ் ஷெட்டரை வெற்றி பெற விடக்கூடாது. அவருக்கு நாம் யார் என்று பாடம் புகட்ட வேண்டும். இனி அவரது பெயரை நான் குறிப்பிட மாட்டேன். துரோகி என கூறுவேன். கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும். நான் எனது ரத்தத்தில் எழுதி தருகிறேன், கர்நாடகத்தில் இந்த முறை பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.

    இந்த நிலையில் நேற்று காலை மைசூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் எடியூரப்பாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து கூறியதாவது:-

    எடியூரப்பா இந்த முறை பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் ரத்ததால் எழுதி தருவதாக கூறியுள்ளார். அந்த கட்சி 40 சதவீத கமிஷன் பெற்றுள்ளது. இதனால் 40 சதவீத கமிஷன் போல் 40 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். கர்நாடகத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என நான் எனது ரத்தத்தில் எழுதி கொடுக்கிறேன்.

    இரட்டை என்ஜின் அரசு இட ஒதுக்கீடு விவகாரத்தில் மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. பா.ஜனதா ஒரு துரோக கட்சி என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் தேன் கூட்டில் கைவைத்து பா.ஜனதாவினர் ஏமாற்றியுள்ளனர்.

    அமித்ஷாவும், நீங்களும் இடஒதுக்கீடு விவகாரத்தில் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது பொய் சொல்லி ஏமாற்றுகிறீர்களா?. லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் பிச்சைக்காரர்களா?. அந்த சமுதாயத்தினருக்கு தலா 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக நீங்கள் நாடகமாடுகிறீர்கள்.

    வருகிற மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும். அனைவருக்கும் சம பங்கீடு கொடுப்போம். இதையே நாங்கள் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதாவில் இருந்து வந்த தலைவர்களை வைத்து காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது.
    • பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் தான் கர்நாடக முதல்-மந்திரியாக வருவார்.

    பெங்களூரு

    கா்நாடக சட்டசபை தேர்தலையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். அவர் நேற்று 2-வது நாளாக பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பாகல்கோட்டையில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வளர்ச்சி பின்னோக்கி செவ்லும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அரசியல் இதுவரை இல்லாத அளவுக்கு முன்னிலைக்கு வரும். ஊழல் அதிகமாக நடைபெறும். குறிப்பிட்ட சமூகத்தை கவரும் அரசியலை அக்கட்சி செய்யும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வன்முறையால் கர்நாடகம் பாதிக்கப்படும். பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ள முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி ஆகியோரால் காங்கிரசுக்கு எந்த பலனும் கிடைக்காது.

    கர்நாடகத்தில் லிங்காயத் தலைவர்களை காங்கிரஸ் எப்போதும் அவமதித்து வந்துள்ளது. லிங்காயத் சமூகத்தில் வீரேந்திர பட்டீல், நிஜலிங்கப்பா ஆகிய 2 தலைவர்களுக்கு மட்டுமே காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவி வழங்கியது. அவர்களையும் அக்கட்சி அவமதித்து கட்சியை விட்டு நீக்கியது. அக்கட்சி நீண்ட காலம் ஆட்சி செய்தது.

    பா.ஜனதாவில் இருந்து வந்த தலைவர்களை வைத்து காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது. இதை பார்க்கும்போது, அக்கட்சியில் தலைவர்கள் இல்லாமல் திவாலாகிவிட்டதை காட்டுகிறது. ஜனதா தளம்(எஸ்) கட்சியை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியை விட்டு அகற்றியது. இப்போது காங்கிரஸ் கட்சி எங்கள் கட்சியின் சில தலைவர்களுடன் ஆட்சியை பிடிக்க பார்க்கிறது. ஆனால் இதை வட கர்நாடக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது வட கர்நாடகத்தில் கலசா-பண்டூரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நாட்டை 60 ஆண்டு காலம் ஆட்சி செய்தது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி வந்த பிறகு நாங்கள் செய்த பணிகளில் 10 சதவீதத்தை காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்யவில்லை.

    கர்நாடகத்தில் லம்பானி, குருபா மலைவாழ் மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரத்தை வழங்கினோம். அந்த மக்கள் வசித்த குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றியுள்ளோம். இதை இந்த இரட்டை என்ஜின் அரசு தான் செய்து காட்டியுள்ளது. காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் சண்டை போட்டு கொள்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வராது.

    பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் தான் கர்நாடக முதல்-மந்திரியாக வருவார். ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம். அந்த கட்சிக்கு நீங்கள் போடும் ஓட்டு காங்கிரசுக்கு செல்லும். காங்கிரசுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், கர்நாடகத்தை மேலும் வளர்ச்சி அடைய செய்வோம். பிரதமர் மோடி, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்துள்ளார்.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    ×