search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96033"

    நடராஜர் கோவிலில் உள்ள சித்சபையை 108 முறை வலம் வருவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி ஏராளமான பெண்கள் விரதத்தை கடைபிடித்து வலம் வந்து தரிசனம் செய்தனர்.
    கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் சோமவாரமாக கருதப்படுகிறது. அதன்படி நேற்று கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் அதிகாலையிலேயே நீராடி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விரதமிருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

    இதில் நடராஜர் கோவிலில் உள்ள சித்சபையை 108 முறை வலம் வருவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி ஏராளமான பெண்கள் விரதத்தை கடைபிடித்து வலம் வந்து தரிசனம் செய்தனர்.

    இதே போன்று கோவிலில் உள்ள ஆதிமூலநாதர் சன்னதியையும் பெண்கள் 108 முறை வலம் வந்தனர். அதேநேரத்தில் கார்த்திகை மாதத்தில் நடராஜர் கோவிலுக்கு அதிகளவில் அய்யப்ப பக்தர்கள் வருகை தருவதுண்டு. ஆனால் தற்போது அவர்களது வருகை குறைந்தே காணப்படுகிறது.
    சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலுக்கு நான்கு கோபுர வாசல்கள் உண்டு. அந்த வழியிலேயே நாமும் சென்று வழிபட்டால், நலங்கள் யாவும் வந்து சேரும்.
    சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலுக்கு நான்கு கோபுர வாசல்கள் உண்டு.

    கிழக்கு கோபுர வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு கோபுர வாசல் வழியாக அப்பரடிகளும், வடக்கு கோபுர வாசல் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுர வாசல் வழியாக ஞானசம்பந்தரும் நுழைந்து தில்லை கோவிலில் வீற்றிருந்து அருள் வழங்கும் நடராஜப் பெருமானை வழிபட்டனர்.

    அவர்களின் வழியிலேயே நாமும் சென்று வழிபட்டால், நலங்கள் யாவும் வந்து சேரும். நடராஜரையும், நால்வரையும் நாம் கொண்டாடி மகிழ்வோம்.
    நடராஜரின் அருள் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி நடராஜரை வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் நிறைவேறும்.
    மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
    மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட,
    கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
    குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட குழந்தை முருகேசனாட,
    ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட,
    நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட நாட்டியப் பெண்களாட,
    வினையோட உனைப்பாட யெனைநாடியிது வேளை விருதோடு ஆடிவருவாய்
    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே.

    - நடராஜப் பத்து

    பொதுப்பொருள்: மான், மழு, மதி, புனல் மற்றும் மங்கை சிவகாமியும் ஆட, திருமால், வேதங்கள் பிரம்மன் போன்றோரோடு தேவர்கள், கணபதி, முருகன், ஞானசம்பந்தர், இந்திரனோடு பதினெட்டு சித்தர்கள், நந்தி, நாட்டியப்பெண்களோடு எம் வினைகளும் ஆடி ஓடிட உம்மைப் பணியும் வேளையிது. ஈசனே, சிவகாமி நேசனே, எமையீன்ற தில்லை வாழ் நடராஜனே சரணம். 
    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆருத்ரா தரிசனம் தருவதற்காக மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 1.25 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மாலை 4 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர். அதில் பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர் நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் அளித்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    அந்த சமயத்தில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், அங்கு திரண்டிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையில் நனைந்தபடியே பக்தி கோஷங்களை எழுப்பி நடராஜரை தரிசித்தனர். இதையடுத்து மாலை 4.15 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    வழக்கமாக தரிசனம் மதிய நேரத்திலே நடந்து முடிந்துவிடும். அதே போல் இந்த முறையும் 2 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தாமதமாக மாலை 4.15 மணி அளவில் தான் நடராஜரின் தரிசனத்தை பக்தர்கள் பெற முடிந்தது.

    விழாவில் இன்று (திங்கட்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் ஆருத்ரா தரிசன விழா நிறைவுபெறுகிறது. 
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. விழாவில் நடராஜருக்கு தீப மை வைக்கப்பட்டது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் நகரின் மையப் பகுதியில் உள்ள மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் மார்கழி மாதத்துக்கான பவுர்ணமி கடந்த 21-ந் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணிக்கு தொடங்கி நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று காலையும் ஏராளமானோர் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். அதன்படி நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.

    இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து கடந்த மாதம் 23-ந் தேதி மகா தீபத்தன்று 2 ஆயிரத்து 668 அடி உயர மலைஉச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மை, நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருமஞ்சன கோபுரம் வழியாக நடராஜர் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தீப மை பிரசாதம் 5 நாட்களுக்கு பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து, கோவில் நிர்வாக அலுவலகத்தில் தீப மை பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கீழ்பென்னாத்தூரில் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள நாட்டிய வடிவிலான நடராஜர் சாமிக்கு பல்வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் வீற்றிருக்கும் லிங்க வடிவிலான ஈஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை, தீபாராதனை நடந்தது.
    உத்தமர் கோவிலில் சாமிகள் தனித்தனி கேடயத்தில் புறப்பட்டு கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வீதியுலா வந்து, கோவில் வெளி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசன புறப்பாடு நடைபெற்றது. இதையொட்டி காலையில் ராமர் சன்னதியில் உள்ள மண்டபத்தில் உற்சவர்களான நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் நால்வர் சிறப்பு பூ அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அலங்கார, கும்ப ஆரத்தி உள்ளிட்ட தீபாராதனை மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றது.

    இதையடுத்து சாமிகள் தனித்தனி கேடயத்தில் புறப்பட்டு கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வீதியுலா வந்து, கோவில் வெளி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து நடராஜரிடம் கோபித்து கொண்டு சென்ற அம்பாளை நால்வர் சமாதானம் செய்த ஆன்மிக கதையின் சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்று சாமிகள் கோவில் மூலஸ்தானத்தை சென்றடைந்தனர்.

    இதில் பிச்சாண்டார்கோவில், கூத்தூர், பனமங்கலம், தாளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் உள்ள மாற்றுரைவரதீஸ்வரர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் நால்வர் புறப்பட்டு, கோவிலை சுற்றி வீதி உலா வந்து மூலஸ்தானம் சென்றடைந்தனர். பனமங்கலம் கிராமத்தில் உள்ள வாரணபுரீஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. 
    ஆருத்ரா தரிசனம் அனைத்து நடராஜர் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆருத்ரா தரிசனம் செய்ய சிதம்பர நடராஜர் கோயிலுக்குத்தான் வருவார்கள்.
    ஆருத்ரா தரிசனம் அனைத்து நடராஜர் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆருத்ரா தரிசனம் செய்ய சிதம்பர நடராஜர் கோயிலுக்குத்தான் வருவார்கள்.. இந்நாளில் இத்தலத்தில் உள்ள நடராஜர் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷம். இந்நாளில் தான் சிவப்பெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார்.

    தாருகாவனம் என்ற வனத்தில் தவ வலிமை கொண்ட முனிவர்கள் 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள் கற்று அதன்படி தங்களுடைய பணிகளை செய்துவந்தார்கள். அவர்களுக்கு உலகைக் கட்டி ஆளும் ஈஸ்வரனைப் பற்றிய எண்ணம் இல்லாமல் இருந்தது.அவர்களுக்கு ஈஸ்வரத் தியானத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைத்த சிவன்,திருமாலை அழைத்து அம்முனிவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றார். திருமாலும் அதற்கு சம்மதித்து முனிவரை மயக்கும் வகையில் அழகிய பெண்ணாக உருவெடுத்து சென்றார். சிவப்பெருமானும் பிச்சை எடுப்பவராக வேடம் தரித்து நந்தியையும் உடனழைத்துக்கொண்டு சென்றார்.

    வனத்துக்குள் வந்ததும் நந்தியை ஓரிடத்தில் அமரச் செய்து முனிவர்களின் குடில்களுக்குச் சென்று பிச்சை எடுப்பது போல் சுற்றிக்கொண்டிருந்தார். பரம் பொருள் எம்பெருமானாகிய சிவபெருமான் அந்த வேடத்திலும் அழகில் குறையின்றி இருந்தார். அவரைக் கண்ட முனிவர்களின் மனைவிகள் அவர் மேல் மோகம் கொண்டு அவரையே சுற்றி வந்தார்கள். மறுபுறம் திருமாலின் பெண் வேடத்தில் மயங்கிய இளம் முனிவர்கள் அவள் பின்னாலேயே சுற்றி வந்தனர்.

    தங்களின் தவ நிலை கலையாத வயது முதிர்ந்த முனிவர்கள் கோபம் கொண்டு அப்பெண்ணையும் அவள் பின்னால் சுற்றிய இளம் முனிவர்களையும்,பிச்சை வேடம் தரித்தவரையும் அக்னியில் அழிக்க ஹோமத்தை வளர்த்தனர். ஹோமத்திலிருந்து முதலில் புலி ஒன்று பாய்ந்து வந்தது. பிச்சை வேடம் தரித்து வந்த சிவப்பெருமான் அப்புலியை தன் நகங்களாலேயே இரண்டாக பிளந்து ஆடையாக்கி கொண்டார். அடுத்ததாக விஷம் கொண்ட பாம்புகள் சீறிப் பாய்ந்தன.சிவப்பெருமானின் அக்னி பார்வையில் அவை சிவனுக்கு அணிகலனாகின.

    இதைக் கண்ட முனிவர்கள் ஆக்ரோஷத்துடன் முன்னிலும் தீவிரமாக யாகம் செய்து அபஸ்மாரம் என்ற பூதத்தை ஏவினர். ஓடி வந்த பூதத்தை வலதுகாலுக்கு அடியில் வைத்து சிவபெருமான் ஏறி நின்றார். இனி எதுவும் ஏவுவதற்கு இல்லை என்ற முனிவர்கள் ஹோம அக்னியையே ஏவினார்கள். சிவபெருமானோ அதை இடக்கையில் ஏந்தினார்.

    கடைசி ஆயுதமாக வேத மந்திரங்களை ஏவினர் முனிவர்கள். அவற்றை சிலம்பாக மாற்றி தன் பாதத்தில் அணிந்து கொண்டார். இனி எதைக் கொண்டு வெல்வது என்று திணறிய முனிவர்களின் முன் தன்னுடைய சடைமுடி எட்டுத்திக்கிலும் விரிந்தாட கோபாவேசத்துடன் அண்டங்கள் எல்லாம் குலுங்க குலுங்க தாண்டவமாடினார் சிவப்பெருமான்.சர்வத்தையே காக்கும் சர்வேஸ்வரனிடமா போர்புரிகிறோம் என்று ஈசனின் காலில் விழுந்து மன்றாடினார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் ருத்ரதாண்டவத்தை ஆனந்த தாண்டவமாக மாற்றி அருள்புரிந்தார்.

    திருவாதிரை நாளன்று சிவபெருமான் நடேசனாக மாறி திருத்தாண்டவம் ஆடியதால் மகிழ்ச்சியில் உலவினார். பாற்கடலில் மகாவிஷ்ணு மகிழ்ச்சியில் திளைக்க என்ன காரணம் என்று ஆதிசேஷன் கேட்டார். சிவபெருமானின் தாண்டவத்தைப் பற்றி பரந்தாமன் சொன்னதும் தானும் அதைக் காண வேண்டும் என்று ஆதிசேஷன் ஆவல் கொள்ள பெருமாளும் ஆசியளித்தார்.

    பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக உருக்கொண்டு பூலோகம் வந்து தவம்புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி,உம்மை போலவே வ்யாக்ரபாதரும் என் திருநடனம் காணவேண்டி விரும்புகிறார். நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார். சிதம்பரம் திருத்தலத்தில் தில்லை அம்பல நடராஜரின் திருநடனத்தை திருவாதிரை திருநாளில் கண்டனர். அதனால் தான் மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசனம் செய்தால் நமது பாவங்கள் விலகி புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

    திருஉத்திரகோசமங்கை கோவிலில் இன்று மரகத நடராஜர் சிலையில் சந்தனம் களையப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாத சாமி கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பச்சை மரகத நடராஜர் பெருமானுக்கு இன்று காலை சந்தனகாப்பு களைந்து அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்கள நாதசாமி கோவில் உள்ளது. இங்கு நடராஜர் சன்னதியில் ஆடும் திருக்கோலத்தில் ஐந்தரை அடி உயர அபூர்வ பச்சை மரகத கல்லினால் ஆன நடராஜர் சிலை உள்ளது.

    ஆண்டு முழுவதும் சந்தன காப்பு செய்யப்பட்டு பாது காக்கப்படுகிறது. சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தையொட்டி சந்தனக் காப்பு களையப் படும்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு நடராஜர் சன்னதி திறக்கப்பட்டது. புஷ்பாஞ்சலியோடு, மரகத நடராஜருக்கு தீபாராதனை நடந்தது. காலையில் நடராஜரின் திருமேனி மீது பூசப்பட்டிருந்த சந்தன காப்பு களையப்பட்டு, சிலை மீது சந்தனாதி தைலம், கஸ்தூரி தைலம் பூசப்பட்டு 32 வகை மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    பச்சை மரகத மேனியாய் அலங்கார கோலத்தில் அருள்பாலித்த மரகத நடராஜரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். 100 ரூபாய், 10 ரூபாய், இலவச தரிசனம் என மூன்று பிரிவுகளாக தடுப்புகள் அமைத்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    100 ரூபாய் சிறப்பு தரிசனம் செய்தவர்களுக்கு இலவசமாக சந்தன பிர சாதம் வழங்கப்பட்டது.

    கலெக்டர் வீரராகவ ராவ், எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு இருந் தது. வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு கோவில் அலுவலக ஊழி யர்கள் குடிநீர் வினி யோகம் செய்தனர்.

    அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் மற்றும் வளாகத்திற்குள் 28 கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளதா என்பதை போலீசார் கண்காணித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சி யார் ஆலோசனையின் பேரில், கோவில் நிர்வாக செயலாளர் பழனிவேல்பாண்டியன் தலைமையில் அலுவலக மேலாளர் சுவாமிநாதன், சரக அலுவலர் ராமு, கண்காணிப்பாளர் கிரி, பேஷ்கார் கண்ணன் உள்பட கோவில் நிர்வாகிகள் செய்தனர்.
    சிதம்பரம் நடராஜர்கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையில் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழிமாதம் ஆருத்ரா தரிசம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக் கான மார்கழிமாத ஆருத்ர தரிசனவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்தி களின் வீதிஉலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடந்தது.

    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் சாமிகள் எழுந்தருளினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளான 4 வீதிகளிலும் வலம்வந்தது. இந்த தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் மழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நடராஜர் கோவிலின் முக்கிய வாயிலான கீழகோபுரவாசலில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தேர் திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. தேர் வலம்வரும் 4 வீதிகளிலும் அந்த பகுதி பெண்கள் வண்ண கோலமிட்டிருந்தனர். மேலும் விழாவின் சிகரநிகழ்ச்சியான ஆருத்ர தரிசனம் நாளை நடைபெறுகிறது.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் வாகனங்கள் நிறுத்தி வைக்க இட வசதியும் ஏற்படுபத்தப்பட்டிருந்தது. தேர் திருவிழாவை தொடர்ந்து சிதம்பரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    திருஉத்தரகோசமங்கை திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டுள்ள சந்தனக்காப்பு இன்று (சனிக்கிழமை) களையப்படுகிறது.
    வைகை என்னும் பொய்யா குலக்கொடி-வேகவதி-புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி இவ்வாறு அன்று வாழ்ந்த தமிழ் புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டது வைகை ஆற்றின் முகத்துவாரமான ராமநாதபுரம். இங்கு மகுடமாக அமைந்திருப்பது திருஉத்தரகோசமங்கை திருத்தலம். இலக்கிய சிறப்பும், இதிகாச பெருமையும் கொண்டு விளங்கும் இந்த திருஉத்தர கோசமங்கை, தொல்காப்பிய காலத்துக்கு முந்தைய தொன்மை வாய்ந்தது.

    இந்து மத வேதங்களிலும் புராணங்களிலும் உலகில் சிவபெருமான் உறையும் முதல் திருத்தலம் இதுதான் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தகோவில் ஆதிசிதம்பரம், பூலோக கைலாயம், சிற்றம்பலம், பொன்னம்பலம் என்றெல்லாம் புகழ்ந்து போற்றப்படுகிறது. இந்த புண்ணிய தலமான திருஉத்தரகோசமங்கை ராமநாதபுரத்தில் இருந்து தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ளது.

    உயர்ந்து நிற்கும் கோபுரம், மாட வீதிகள், மணிமண்டபங்கள், எழிற்கூடங்கள், நீண்ட நெடிய தாழ்வாரங்களுடன் கண்ணைக்கவரும் வகையில் காட்சி தருகிறது. மண்எட்டும் புகழ் பரப்பும், விண் எட்டும் கோபுர விமானம், கர்ப்ப கிரகம் அன்றைய தமிழர்களின் நுண்ணிய கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. தமிழ் வளர்த்த சமயக்குரவர்கள் நால்வர்களில் ஒருவரான மாணிக்க வாசகர் அவருடைய தெய்வீக பாடல்களில் ‘மண் முந்தியோ மங்கை (திரு உத்தரகோசமங்கை) முந்தியோ’ என்று பாடல்களில் குறிப்பிட்டு கூறுவதில் இருந்து இந்த ஊர் பிரபஞ்சத்தின் முதல் பூபாகம் என்று உறுதிபட நம்புகிறார்கள்.

    இந்த திருத்தலத்தின் வேதகால புராண நிகழ்வுகளும், இறைவனின் திருவிளையாடல்களும் இந்த உத்தரகோசமங்கை மண்ணில்தான் நடைபெற்றுள்ளன என்று இந்து சமய ஆன்மிக அறிஞர்கள் உறுதிபட நம்புகிறார்கள்.இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்புவாக உருவானது. ராமபிரானின் மூதாதையர்களினால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் பகுதியில் முனிவர்களும், ரிஷிகளும் தங்கி இறைவனை வழிபட்டதாக வேத வரிகளில் காணப்படுகின்றன. இறை வழிபாட்டை துறக்காத 1000 முனிவர்கள் சிவபெருமானை துதிக்கவும், தவம் செய்யவும் இந்த இடத்தை தான் தேர்வு செய்தார்கள்.

    புராண புகழ்பெற்ற இந்த கோவிலின் தல விருட்சம் இலந்தை மரம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

    இந்த கோவிலின் நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகத கல்லினால் ஆன ஆளுயர ஆடும் திருக்கோலத்தில் உள்ள விலை மதிக்க முடியாத அபூர்வ நடராஜர் சிலை உள்ளது. தமிழர்களின் கலைத்திறனுக்கும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுக்கும், கட்டியம் கூறும் வகையில் கண்கவர் காட்சியளிக்கும் அபூர்வ சிலை இது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சைக்கல் இயல்பாகவே மென்மையானது.

    ஒளி, ஒலி அதிர்வுகளை தாங்க முடியாத தன்மை உடையது. இதன் காரணமாக மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்று சொல்வார்கள். எனவே இந்த நடராஜர் சிலையை ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து பாதுகாக்க சந்தனக்கலவையை பூசி வருகிறார்கள். வருடத்தில் ஒருநாள் அதுவும் சிவனுக்கு உகந்த நாளான திருவாதிரை நாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனக்கவசம் களையப்படும்.

    இதன்படி ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று(சனிக்கிழமை) காலை சந்தனம் களையும் அற்புத நிகழ்ச்சி 10.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. காலை 11.30 மணி முதல் அபூர்வ மரகத நடராஜருக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சந்தனாதி தைலம் பூசப்படும். தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்கு மரகத நடராஜர் வைக்கப்பட்டு இரவு 11.30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா அன்று மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படும்.

    இதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை நடத்தப்பட்டு அருகில் உள்ள கல்தேர் மண்டபத்தில் கூத்தர்பெருமான் எழுந்தருளும் ஆருத்ரா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆருத்ரா தரிசன விழாவில் ராமநாதபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய வந்து அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்வார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு ஆகியோர் செய்து வருகின்றனர். 
    சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இரவு தங்கம், வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு மேல் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.

    சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடக்கிறது.

    பின்னர் காலை 6 மணி முதல் 10 மணிவரை திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும், 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. 24-ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
    ஆருத்ரா தரிசனம் அன்று (23.12.2018) நடராஜர் சன்னிதியில் சிவபுராணம் பாடி மனமுருகி வழிபட்டால் ஆடலரசன் அருளால் அகிலம் போற்றும் வாழ்வு அமையும்.
    இறைவனது தரிசனம் பார்த்தால் எடுத்த பிறவிக்கும் பலன் கிடைக்கும். அடுத்தடுத்து வரும் சம்பவங்களும் அனுகூலமாகவே நடைபெறும். “கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்” என்று ஒருசிலரை வர்ணிப்பது வழக்கம். அவர்களெல்லாம் இறைவனது தரிசனம் பார்த்து தகுந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டவராக இருப்பர்.

    அந்த அடிப்படையில் நடராஜர் தரிசனம் கொடுப்பது வருடத்திற்கு இரண்டு முறையாகும். ஒன்று ஆனித் திருமஞ்சனம், அடுத்தது மார்கழித் தரிசனம். இந்த ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதம் 8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை (23.12.2018) வருகின்றது. அன்றைய தினம் நடராஜர் சன்னிதியில் சிவபுராணம் பாடி மனமுருகி வழிபட்டால் ஆடலரசன் அருளால் அகிலம் போற்றும் வாழ்வு அமையும்.
    ×