search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    • மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • மின்கம்பத்தில் இருக்கும் ராடு குத்தியதில் ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் இன்று காலை சித்திரை பெருவிழா தேரோட்டம் தொடங்கியது. தஞ்சை மேலவீதியில் இருந்து தேர் காலை 7 மணிக்கு வடம் பிடித்து புறப்பட்டது.

    அப்போது புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு தனியார் நிறுவன பெயர் பலகையில் தேரின் அலங்கார பந்தல் திடீரென சிக்கி கொண்டது. பின்னர் அதனை சரிசெய்து 15 நிமிடங்களுக்கு பிறகு தேர் புறப்பட்டது.

    இதையடுத்து நகர்ந்த தேர் கொங்கனேஸ்வரர் கோவில் அருகே சென்றபோது, மீண்டும் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் சிக்கியது. பின்னர் இடையூறாக இருந்த மின் கம்பி அகற்றப்பட்ட பிறகு தேர் சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் புறப்பட்டு சென்றது.

    ஆனால் அடுத்த 50 அடி தொலைவில் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் வலது புற மின் கம்பத்தில் சிக்கியதால் மீண்டும் தேர் நின்றது.

    இதையடுத்து மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்கம்பத்தில் இருக்கும் ராடு குத்தியதில் ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

    இருந்தாலும் அலங்கார பந்தலை மின் கம்பத்தில் இருந்து அகற்றி சரி செய்யப்பட்டது. தொடர்ந்து காயமடைந்த ஊழியர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இப்படி 3 முறை மின் கம்பங்களில் சிக்கி தேர் அடிக்கடி நின்றதற்கு அலங்காரப் பந்தலின் அகலம் வழக்கத்தை விட அதிகம் என்பதே முதன்மை காரணமாக கூறப்பட்டது. இதனால் அலங்கார பந்தலின் அகலத்தை தொழிலாளர்கள் குறைத்தனர். அதன் பின்னர் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.

    நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
    மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் கபிலா ஆற்றங்கரை ஓரத்தில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. தென்னகத்தின் காசி என்றழைக்கப்படும் இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தேர்திருவிழா நடக்கும். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தேர்திருவிழா எளிமையாக நடந்தது. பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்தாண்டு(2021) 21-ந்தேதி(நேற்றுமுன்தினம்) நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர்திருவிழா நடப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்து. அதன்படி நேற்றுமுன்தினம் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர்திருவிழா நடந்தது. நஞ்சுண்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் 5 தேர்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டு சாமிகளுக்கு அபிஷேகம், பூைஜ செய்யப்பட்டது. காலை 7.30 மணிக்கு விருச்சிக லக்னத்தில் தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்டத்தை ஹர்ஷவர்தன் எம்.எல்.ஏ. வடம் பிடிப்பதன் மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து 5 தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதன்படி முதலில் கணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமி தேர்கள் புறப்பட்டது. இதைதொடர்ந்து கோவில் வீதியில் நஞ்சுண்டேஸ்வரர் எழுந்தருளிய பெரிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேரை வடம்பிடித்த இழுத்தபோது பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சரண கோஷமிட்டனர்.

    இதையடுத்து தேர்கள் கோவில் வளாகத்திற்கு இழுத்து வந்து பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து தேரோட்டம் கோலாகலமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேரோட்டத்தில் மைசூரு மன்னர் குடும்பத்தினர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    துலா உற்சவத்தையொட்டி திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    108 வைணவ திவ்ய தேசங்களுள் 22-வது தலமாகவும், பஞ்ச அரங்கங்களில் 5-வது அரங்கமாகவும் திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பரிமள ரெங்கநாதர் தேரில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    இதை தொடர்ந்து தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து கோவிந்தா, பரிமள ரெங்கநாதா, நாராயணா என பக்தி கோஷமிட்டு இழுத்தனர்.

    தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. மதியம் பரிமள ெரங்கநாத பெருமாள் காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை (17-ந்தேதி) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் அனுமதி இல்லை.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    6-ம் திருநாளான நேற்று (15-ந்தேதி) காலையில் விநாயகர், சந்திர சேகரர் வெள்ளி யானை வாகனத்தில் பிரகாரத்தில் வலம் வந்தார். 63 நாயன்மார்கள் பிரகார விழா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதன் பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதத்தில் பிரகார உலா வந்தனர்.

    இதைத்தொடர்ந்து 7-ஆம் திருநாளான இன்று காலை 6.30 மணி முதல் 7.30மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் விநாயகர் தேர் தேரோட்டம் நடந்தது. கோவில் பிரகாரத்திலேயே தேர் வலம் வந்தது. அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மகா ரதங்களில் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    மேளதாளங்கள் முழங்க தேர் அசைந்தாடி வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள், உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்றனர். தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை (17-ந்தேதி) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் அனுமதி இல்லை. இதுதொடர்பாக பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பக்தர்கள் தங்களது நகை மற்றும் பணத்தை பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் போலீசார் சார்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    தீப விழாவின் உச்ச நிகழ்வாக வருகிற 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.அப்போது பஞ்சமூர்த்திகள் தங்க ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். அர்த்தநாரீஸ்வரர் நடனமாடியபடி காட்சி தருவார்.

    இந்த நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.உள்ளூர் பக்தர்கள் கோவில் வெளியிலிருந்து மகா தீபத்தை தரிசனம் செய்யலாம். அவர்கள் மகாதீபமண்டபத்துக்கு செல்ல அனுமதி இல்லை.

    தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
    சிங்காரவேலர் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலர் கோவில் உள்ளது. இந்த கோவில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா நடைபெறும். சிங்காரவேலர் கோவிலில் உள்ள வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதை முன்னிட்டு காலை 7.10 மணிக்கு வெள்ளி தேரில் சிங்காரவேலர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். பின்னர் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து தேரடியை அடைந்தது.

    முன்னதாக சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் படி தேரோட்ட நிகழ்ச்சி எளிய முறையில் நடைபெற்றது.
    சிதம்பரத்தில் சிவகாமி சுந்தரி அம்மனுக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவகங்கை குளம் அருகே சிவகாமி சுந்தரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஐப்பசி மாத பூரம் விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் 9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது

    இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிவகாமிசுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தேருக்கு பூஜைகள் நடந்தது. பின்னர் அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கீழவீதியில் இருந்து நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பட்டு வாங்கும் உற்சவமும், நாளை(திங்கட்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
    தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண விழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஐப்பசி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மாலையில் பாகம்பிரியாள் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    9-ம் திருவிழாவான முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு காலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாகம்பிரியாள் அம்பாள் எழுந்தருளினார். இதையடுத்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளில் நடந்த இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, தேரடி மாடனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சங்கரராமேஸ்வரர்- பாகம்பிரியாள் அம்பாள் திருக்கல்யாண வைபவம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் உள்ள மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் 3 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 23-ந் தேதி காலை மாரியம்மன் திருவீதி உலாவும், இரவு பக்தர்கள் மாரியம்மனுக்கு பூவோடு எடுத்து நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள். 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை காலை இரவு நேரங்களில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை மாரியம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து இரவு 7-மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    நேற்று காலை காலை 5 மணிக்கு மாரியம்மன், விநாயகர் திருத்தேருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.30 மணிக்கு முதல் நாள் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சரவணம்பட்டி சிரவை ஆதீனம் குமரகுருபரசாமிகள் ஆகியோர் தலைமையில், புரவிபாளையம் ஜமீன் சண்முக சுந்தரிவெற்றிவேல், கோபண்ணமன்றாடியார் குடும்பத்தினர் ஆகியோர் முன்னிலையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தார். தேரோட்டத்தில் பக்தர்கள் ஒம்சக்தி பராசக்தி என்ற கோ‌‌ஷம் முழங்கினர். விநாயகர் தேர் முன்பு செல்ல பின்னால் 30 அடி உயரம் தேரில் சூலக்கல்மாரியம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் தேர் மீது வாழைப்பழம் வீசி மாரியம்மனை வழிபட்டனர்.

    முதல் நாள் தேர் இரவு கிழக்கு ரதவீதியில் நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தில் முன்னால் அமைச்சர் செ.தாமோதரன், கு.சண்முகசுந்தரம் எம்.பி. மற்றும் இந்துசமய அறநிலைய துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) 2-ம் நாள் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு மேற்கு ரத வீதியில் தேர் நிறுத்தப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) 3-ம் நாள் மாலை 4.30 மணிக்கு தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. இரவு கோவில் முன்பு தேர்நிலையில் நிறுத்தப்படுகிறது.

    2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மாரியம்மனுக்கு மகா அபிஷேக பூஜையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் தக்கார் ஆனந்த், செயல் அலுவலர் சரவணபவன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    மங்கலம்பேட்டையில் மங்களநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    மங்கலம்பேட்டையில் பிரசித்தி பெற்ற மங்களநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 16-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தினசரி காலையில் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டதும், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மங்களநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதையடுத்து காலை 10.30 மணிக்கு கோவிலில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் மங்கலம்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை (வெள்ளிக்கிழமை) விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    சோமரசம்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை செல்வமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    சோமரசம்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை செல்வமாரியம்மன் கோவிலில் கடந்த 12-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு படுகள நிகழ்ச்சியும், கழுவேற்றமும் நடைபெற்றது. நேற்று காலை திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளை தூக்கி வந்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று(புதன்கிழமை) கிடா வெட்டு நிகழ்ச்சியும், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளது.

    இதேபோல சோமரசம்பேட்டை அருகில் உள்ள தாயனூர் மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் சப்பர தேரில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று பக்தர்கள் பால்குடம், கரகமும் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. இன்று(புதன்கிழமை)குட்டி குடித்தலும், நாளை(வியாழக்கிழமை) இளநீர் பூஜையும் நடைபெறுகிறது. நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.
    கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் உள்ள ஜெகநாதபெருமாள் கோவிலில் வைகாசி விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோவிலில் பிரசித்தி பெற்ற ஜெகநாதபெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி பல்வேறு வாகனங்களில் சாமிபுறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக தேரில் பெருமாள், தாயார் எழுந்தருளினர். தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. அப்போது வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் தேரில் எழுந்தருளிய பெருமாளை வழிபட்டனர். மாலை புஷ்ப யாகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சாமி உள்பிரகார புறப்பாடு, திருமஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்த சேவை நடைபெற்றது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்து இருந்தனர்.
    சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    பெரம்பலூர் மாவட் டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ளது மதுரகாளியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டு திருவிழா கடந்த 7-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 14-ந்தேதி மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து சந்தி மறித்தல், குடி அழைத்தல், சிவ வழிபாடு, பெருமாள் வழிபாடு, மாரியம்மன், அய்யனார் மற்றும் மலை வழிபாடுகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் அம்பாளுக்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மதுரகாளியம்மன் பல்வேறு அலங்காரத்துடன் சுவாமியுடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து மதுரகாளியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேச கங்கள் செய்யப்பட்டு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக நிலையை வந்தடைந்தது.

    இன்று அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை 25 -ந்தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் திரு வீதி உலா வருதல் மற்றும் விடையாற்றி விழா நடைபெற உள்ளது. 26-ந் தேதி மூலஸ்தான வழிபாட்டுடன் சுவாமிமலை ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
    ×