search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    பட்டுக்கோட்டையில் நாடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும், இன்னிசை கச்சேரியும் நடைபெற்று வருகிறது. கடந்த 9-ந்தேதி வெண்ணெய்த்தாழியும், 10-ந்தேதி மாவிளக்கு திருவிழாவும் நடைபெற்றது.

    விழாவில் நேற்றுமுன்தினம் அலங்கரிக்கப்பட்ட தேரில் நாடியம்மன் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு விசேஷ பூஜை நடைபெற்றது.

    நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேர் பெரிய தெருவிலிருந்து மணிக்கூண்டு தலையாரித்தெரு வழியாக தேரடித்தெரு சென்று நிலையை வந்தடைந்தது. இன்று (சனிக்கிழமை) காலை மீனாட்சி அம்மன் அலங்காரமும், இரவு முத்துப்பல்லக்கில் நாடியம்மன் கோட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
    நெல்லை மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் இந்து நாடார் உறவின்முறை கமிட்டிக்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.
    நெல்லை மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் இந்து நாடார் உறவின்முறை கமிட்டிக்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் முப்பிடாதி அம்மன் வழிபாட்டு குழுவினர் சார்பில் சிறப்பு பஜனை, 1008 திருவிளக்கு பூஜை மற்றும் இன்னிசை கச்சேரி, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்பிடாதி அம்மன் எழுந்தருளி வீதிஉலா வருதல் ஆகியன நடந்தது.

    9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. அதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேர் முப்பிடாதி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு கீழரதவீதி, செங்கோட்டை ரோடு வழியாக சிவகாமசுந்தரி-சிவகுருநாதர் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் கோவில் வளாகத்தை அடைந்து, தேர் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்றுச்சிறப்பு மிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு நேற்றுகாலை கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது கொடிமரத்திற்கு மெருகேற்றப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. நேற்று காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை மற்றும் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    பின்னர் கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வேதபாராயணம் நடந்தது. சிவாச்சாரியார்கள் முன்னிலையில் பக்தர்கள் கோவில் பிரகாரத்தை வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பெங்களூரு ஆகம பாடசாலை மாணவர்கள் வேத மந்திரங்களுடன் காலை 9 மணியளவில் அதிர்வேட்டுகள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டத்தையொட்டி கடந்த மாதம் 17-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அன்று முதல் மாரியம்மன் உலக மக்கள் நலனுக்காக 15 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார் என்பது ஐதீகம். இந்த நாட்களில் அம்மனுக்கு அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே நிவேதனம் செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் 31-ந் தேதி பங்குனி தேரோட்டத்திற்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து 10 நாட்கள் அம்மன் கமலம், சிம்மம், காமதேனு, மயில், ரிஷபம், கண்ணாடி பல்லக்கு, அன்னம் ஆகிய வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தையொட்டி லால்குடி, அன்பில் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பலர் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். லால்குடியில் இருந்து அன்பில் வரை ஆங்காங்கே பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    சித்திரை தேரோட்டத் துக்காக தஞ்சை பெரியகோவில் தேர் அலங்கார பணிகள் தொடங்கப்படுவதையொட்டி பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
    தஞ்சை பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 88 கோவில்களுள் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா 20 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு சித்திரைப் பெருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் காலை, மாலை வேளைகளில் சாமி புறப்பாடும், பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற 16-ந் தேதி தஞ்சையில் 4 ராஜ வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தேர் அலங்கரிக்கப்படவுள்ளது. இதற்காக நேற்று காலை 8 மணிக்கு மேல் தேரில் பந்தக்கால் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து அலங்கார பணிகள் தொடங்கின. இதையொட்டி சுரேஷ்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர் ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு நேரங்களில் தஞ்சையில் ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 19-ந் தேதி மாலை கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதற் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தினமும் காலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க சப்பரத்திலும், இரவு 7 மணி அளவில் தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி பூத வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், யானை வாகனம் என்று வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 16-ந்தேதி கைப்பார நிகழ்ச்சியும், 20-ந்தேதி பங்குனி உத்திரமும், 22-ந்தேதி பட்டாபிஷேகமும், நேற்று முன்தினம் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.

    இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மகா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதனையொட்டி கோவில் வாசல் முன்பு 5 அடுக்குகளாக வண்ணமயமான அலங்கார துணியை கொண்டு அலங்கரிக்கப்பட்டு பெரிய தேர் தயாரானது. அந்த தேரை இழுத்துச் செல்வது போல மரத்திலான 4 குதிரைகள் இணைக்கப்பட்டு இருந்தது.

    தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5.40 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு காவல் தெய்வமான கருப்பசாமி சன்னதிக்கு வந்தார். அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து தெய்வானையுடன் முருகப்பெருமான் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தேரின் சக்கரத்தில் தேங்காய் சூறைவிடப்பட்டது.



    அதன்பிறகு கோவில் முதல் ஸ்தானிகர் சுவாமிநாதன் தேரில் ஏறி நின்று வெள்ளை துணியை வீசினார். காலை 6.18 மணி அளவில் நிலையில் இருந்து தேர் புறப்பட்டது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர்.

    விநாயகர் எழுந்தருளிய சிறிய சட்டத்தேரானது பெரிய தேருக்கு முன்பாக சென்றது. அதை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். சிறிய சட்டத்தேரும், பெரிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக கிரிவல பாதையில் ஆடி, அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவல பாதையில் 5 மணி நேரம் வலம் வந்த தேர்கள், காலை 10.55 மணி அளவில் நிலைக்கு வந்தன. உடனே பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வாழைப்பழங்களை சூறைவிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
    அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா அடுத்த மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    அவினாசியில் புகழ்பெற்ற அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருணாம்பிகையுடன் அவினாசிலிங்கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு திருமுருகநாதர் வருகை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 11-ந்தேதி சூரிய, சந்திர மண்டல காட்சிகள், 12-ந் தேதி பூத வாகனத்தில் சாமி எழுந்தருளல், அன்ன வாகன காட்சிகள், அதிகார நந்தி, கிளிவாகனம் காட்சிகள் ஆகியன நடக்கிறது. 13-ந் தேதி புஷ்ப பல்லக்கு, கைலாச வாகன காட்சியும் நடக்கிறது.

    பின்னர் 14 -ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடக்கிறது. 15-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 16-ந் தேதி அதிகாலை பூர நட்சத்திரத்தில் சாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 17-ந் தேதி காலை 7 மணிக்கு பெரிய தேர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டம் நடக்கிறது.

    18-ந் தேதி மாலை 4 மணிக்கு அம்மன் தேரோட்டமும், 19-ந் தேதி இரவு தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. 20-ந் தேதி நடராஜர் தரிசனம், 21-ந் தேதி மஞ்சள் நீர் அபிஷேகம் நடக்கிறது. தேர்த்திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் செய்து வருகிறார். தேரோட்டத்தை முன்னிட்டு தேர்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    முன்னதாக தேர்த்திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து அவினாசி தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் தலைமை தாங்கினார். அவினாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசாமி, கோவில் செயல் அலுவலர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ராயம்பாளையம், புதுப்பாளையம், சன்னைமிராசுகள், பொதுப்பணித்துறை, மின் வாரியத் துறை, பேரூராட்சினர், சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

    தேரோட்டம் நடைபெறும் நான்கு ரதவீதிகளில் வைத்து பக்தர்களுக்கு சாப்பாடு கொடுக்கக் கூடாது. பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் உபயோகப்படுத்தக் கூடாது. நான்கு ரதவீதிகளிலும் விளம்பர பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்க நினைப்பவர்கள் தாசில்தாரிடமும், உணவு பாதுகாப்பு தூய்மை அலுவலரிடமும் முன்னதாகவே அனுமதி பெற வேண்டும்.

    தேர் வலம் வரும் வீதிகளில் சிறிது நேரம் கடைகளை அடைக்க கடை உரிமையாளர்களிடம் வேண்டுகோள் வைப்பது, அவினாசியில் தேர்த்திருவிழாவை அனைவரும் அமைதி காத்து ஒற்றுமையுடன் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
    கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்.

    8-ம் நாள் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 5.45 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனி தேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

    பின்னர் காலை 8.40 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆண்டாள் யானையும், 2 வெள்ளைக்குதிரைகள் முன்னே செல்ல ‘கோவிந்தா’ கோஷம் முழங்க நான்கு சித்திரை வீதிகளிலும் தேர் வலம் வந்து காலை 11 மணிக்கு நிலையை அடைந்தது.

    பின்னர் தேரின் முன் பக்தர்கள் சூடம் மற்றும் நெய் விளக்கேற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். மேலும் தேரோட்டத்தை காண வெளிநாட்டு பக்தர்களும் ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்தனர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று (சனிக்கிழமை) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    அத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இவர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.

    முன்னதாக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி, காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பகல் 12.15 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வடக்கு கிரிவீதியில் இருந்த திருத்தேரில் எழுந்தருளினார்.

    மாலை 4.30 மணிக்கு விநாயகர், அஸ்திரதேவர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். அவர்களுக்கு தீபாராதனை நடைபெற்று சிறிய தேர்களை பக்தர்கள் இழுத்து சென்றனர். தொடர்ந்து தேரில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பட்டத்து குருக்கள்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் தேர் முன்பு சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது.

    இதையடுத்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    அப்போது பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’, ‘வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என்று சரண கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். தேர் நகர முடியாமல் நின்றபோது பழனி கோவில் யானை கஸ்தூரி அதனை முட்டித் தள்ளியது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரி வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் தேர் வலம் வந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் மாலை 6.40 மணிக்கு தேர் நிலை வந்து சேர்ந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக் கல்யாணம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    பங்குனி உத்திரத் திருவிழாவின் 7-ம் நாளான இன்று காலை 4.30 மணிக்கு தீர்த்த வாரிக்கு எழுந்தருளலும், காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளல், பகல் 11.45 மணிக்கு மேல் 12.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினர்.

    இதனையடுத்து மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பழனி கோவிலுக்கு தீர்த்தம் எடுத்தும், காவடி சுமந்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் வெள்ளம் கடல் போல் காட்சியளிக்கிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செப்புத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் ஆண்டாள்- ரெங்கமன்னார் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று மாலை ஆண்டாள் கோவில் முன்பு உள்ள திரு ஆடிப்பூர கொட்டகையில் நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று காலை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி அதி காலை 5 மணிக்கு ஆண்டாளும், ரெங்கமன்னாரும் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஆண் டாள் கோவில் முன்புள்ள செப்பு தேர் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் செப்புத் தேரில் வைத்து நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆண்டாள் அணிந்து கொள்ள திருப்பதியில் இருந்து பட்டு வஸ்திரமும் இன்று ஆண்டாளுக்கு கொண்டு வரப்படுகிறது.

    செப்புத் தேரோட்ட நிகழ்ச்சியில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச் சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், ஆண்டாள் கோவில் பட்டர்கள், வேத பிரான் பட்டர், ஸ்ரீராமுலு, அனந்த ராமகிருஷ்ணன் முத்து பட்டர், சுதர்சன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு டி.எஸ்.பி. ராஜா, நகர் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, இன்று நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது. நாளைதேரோட்டம் நடக்கிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் உற்சவரான நம்பெருமாள் ஸ்ரீரங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் உபநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து திருச்சி விகையில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள திருகொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார்.

    இதைத்தொடர்ந்து ஆதி பிரம்மோற்சவத்தின் 9-ம் நாளான இன்று (வியாழக் கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று நம்பெருமாள்-தாயார் சமேதராக காட்சி அளிக்கும் சேர்த்தி சேவை நடக்கிறது.

    இன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தங்க பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. சித்திரை வீதிகள், உள்திருவீதி வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே தாயார் சன்னதியை காலை 9.30 மணிக்கு பல்லக்கு வந்து சேருகிறது. பின்னர் சமாதானம் கண்டருளி தாயார் சன்னதி முன்மண்டபத்திற்கு பகல் 12 மணிக்கு சேருகிறது. மதியம் 12.30 மணி முதல் 1.15 மணிவரை முதல் ஏகாந்தம், 1.30 மணிவரை தளிகை அமுது செய்து புறப்பாடும், பிற்பகல் 2 மணிக்கு பங்குனி உத்திர மண்டபத்தை பல்லக்கு அடைகிறது.

    பின்னர் அங்கிருந்து தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு சேர்த்தி மண்டபத்தை சேருகிறார். அங்கு பிற்பகல் 3 மணி முதல் இரவு 10.30 மணிவரை நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலிக் கின்றனர். நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவையையொட்டி, இன்று தாயார் மற்றும் பெருமாள் சன்னதிகளில் மூலஸ்தான சேவை கிடையாது. இரவு 10 மணிக்கு சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி தாயார் சன்னதி சேருகிறார்.

    இரவு 11.30 மணிக்கு 2-வது ஏகாந்தம் நடக்கிறது. நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் (அதாவது நாளை) திருமஞ்சனமும், அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணிவரை 3-வது ஏகாந்தமும் நடக்கிறது. காலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    பங்குனி உத்திர 10-ம் திருநாளான இன்று அதிகாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோரதத்திற்கு சென்றடைகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் ரதயாத்திரையும், தொடர்ந்து ‘கோ’ ரதம் என்னும் பங்குனி தேரோட்டமும் நடக்கிறது.

    நாளை மறுநாள்(சனிக்கிழமை) ஆளும் பல்லக்கு புறப்பாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில் இணை ஆணையர் ஜெயராமன் செய்து வருகிறார். 
    ×