search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96345"

    • வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது.தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு பழனியில் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக பணி தொடங்கியது. ஆனால் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தொய்வடைந்தது. இந்நிலையில் வருகிற 27-ந்தேதி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலையை பாதுகாத்து பலப்படுத்தவும், ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன், ஸ்தபதி மற்றும் ஆன்மிக சான்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த சிலை பாதுகாப்பு குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவில் அர்த்த மண்டபத்துக்குள் சென்று மூலவர் சிலையை பார்வையிட்டனர். தற்போது பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் மூலவருக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவு பழனி முருகன் கோவிலுக்கு திடீரென்று வந்தனர். பின்னர் கருவறை பகுதியில் உள்ள மூலவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து கோவில் அலுவலகத்தில் சிலை பாதுகாப்புக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் சிலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பழனியில் நடந்த இந்த திடீர் ஆய்வால் மூலவருக்கு மருந்து சாத்துவது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள், ஆன்மிக பெரியோர்களிடையே நிலவுகிறது.

    • முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மார்கழி மாத கார்த்திகை உற்சவ விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடைபெற்றது. அதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் நடைபெற்றது. அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து 6.40 மணிக்கு சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் உலா வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு மேல் தங்கரதத்தில் எழுந்தருளி தங்கரத புறப்பாடு நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை, ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கார்த்திகை உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மூலவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
    • ஜனவரி 26-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு 2018-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது.

    பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2 ஆண்டுகளாக திருப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

    கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் அறங்காவலர் குழு சார்பில், அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக மலைக்கோவில் பாரவேல் மண்டபத்தில் காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலசபூஜை, முகூர்த்தக்கால் பூஜை, வேதபாராயணம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து வேத உபசாரங்கள், திருமுறை பாடப்பட்டு கலசங்கள், முகூர்த்தக்கால்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பாரவேல் மண்டபத்தில் இருந்து உட்பிரகாரம் வந்து நவவீரர் சன்னதி முன்பு ஒரு முகூர்த்தக்காலும், யாகசாலை பூஜைக்காக கார்த்திகை மண்டபத்தில் உள்ள ஈசான மூலையில் மற்றொரு முகூர்த்தக்காலும் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு முகூர்த்தக்கால்களை நட்டனர்.

    அப்போது அங்கிருந்த பக்தர்கள் 'முருகனுக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர். அதையடுத்து முகூர்த்தக்கால்களுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோவில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் ராஜகோபுர கலசத்துக்கு ரூ.22 லட்சத்தில் தங்க 'ரேக்' ஒட்டும் பணி மற்றும் ரூ.1 கோடியே 12 லட்சத்தில் கோவில் நீராழிபத்தி மண்டபத்தை சுற்றிய பகுதி, மகா மண்டப பகுதி, தங்க விமானத்தை சுற்றிய பகுதிகளில் பித்தளையால் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடுத்த மாதம் ஜனவரி 18-ந்தேதி கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 26-ந்தேதி பழனி கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 27-ந்தேதி பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்க விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக திருப்பணிகளை கோவில் அலுவலர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    • 80 சதவீத கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்துள்ளன.
    • கோவில் ராஜகோபுரத்தில் கலசம் பொருத்தி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு பாலாய பணிகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் திருப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

    கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் திருப்பணிகளுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக கோவிலில் உள்ள கோபுரங்கள், மண்டபங்கள், சேதமடைந்த சிற்பங்கள், சன்னதிகளின் விமானம் ஆகியவற்றை புனரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

    கோவில்ராஜகோபுரத்தில் கலசம் பொருத்தி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளைமறுநாள்(25-ந்தேதி) காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கிறார். கும்பாபிஷேகத்திற்கு ஒருமாதமே உள்ளதாலும், அதனைதொடர்ந்து தைப்பூசத்திருவிழா தொடங்க உள்ளதாலும் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பல்வேறு ஊர்களில் இருந்து பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்துவர தொடங்கி உள்ளனர். கடும் பனி நிலவி வரும் போதிலும் இரவு பகலாக பக்தர்கள் அதிகளவில் பழனியை நோக்கி நடந்து செல்கின்றனர்.

    • தைப்பூச திருவிழா ஜனவரி 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • திருவிழா தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன்னரே பாதயாத்திரை பக்தர்கள் வருகை தருவர்

    உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வௌிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதில் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்து வரும் பக்தர்களே அதிகம். அதன்படி பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற ஜனவரி 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    வழக்கமாக திருவிழா தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன்னரே பாதயாத்திரை பக்தர்கள் வருகை தருவர். அதன்படி தற்போது பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொடங்கி உள்ளது. குறிப்பாக திண்டுக்கல் சாலை, பழைய தாராபுரம் சாலை வழியாக காவடி எடுத்து பக்தர்கள் வருகின்றனர். இதில் குழுவாக பாதயாத்திரை வருபவர்கள் வேன், லாரி போன்றவற்றில் சமையலுக்கு தேவையான பொருட்களை ஏற்றி வருகின்றனர். வரும் வழியில் சாலையோரம் தங்கி சமைத்து சாப்பிடுவதுடன், மரத்தடியில் ஓய்வு எடுக்கின்றனர்.

    அந்த வகையில் ஈரோடு, திருப்பூர் பகுதியில் இருந்து தாராபுரம், அலங்கியம், மானூர் வழியாக பழனி வரக்கூடிய பக்தர்கள் சாலையோரம் உள்ள மரத்தடியில் தங்கி உள்ளனர். பாதயாத்திரை குறித்து பக்தர்களிடம் கேட்டபோது, இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவுக்கு முன்பு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. எனவே முன்னதாக வந்து சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு வந்தோம். தாராபுரம்- பழனி இடையிலான பாதயாத்திரை பாதை புதர் மண்டியும், சேதமடைந்தும் உள்ளது. அதை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • பிப்ரவரி 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • திருத்தேரோட்டம் பிப்ரவரி 4-ந்தேதி நடக்கிறது.

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு கோவிலுக்கு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அடிப்படை வசதிகள் குறித்து கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தின்போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதமாக முத்துக்குமாரசாமி தந்த பல்லக்கு, வெள்ளி ஆட்டுகிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் பிப்ரவரி 3-ந்தேதி இரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் வள்ளி-தெய்வானை சமேதமாக முத்துகுமாரசாமி உலாவரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச திருத்தேரோட்டம் 4-ந்தேதி நடக்கிறது.

    வழக்கமாக தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் டிசம்பர் மாத இறுதியில் இருந்தே வரத்தொடங்கி விடுவார்கள். மேலும் பொங்கல் பண்டிகை, தைப்பூச திருவிழாவின்போதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தைப்பூச திருவிழா ஜனவரி 29-ந்தேதி தொடங்குகிறது.
    • விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். வெகுவிமரிசையாக நடக்கும் இந்த திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தற்போதே பல்வேறு இடங்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கும், திருவிழாவுக்கு அனுமதி பெறுவதற்கும் மலைக்கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையொட்டி ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், பூர்ணாகுதி, கலச புறப்பாடு, கலச அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது.

    அதன்பிறகு மூலவர் சன்னதியில் தண்டாயுதபாணி சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் பக்தர்கள் நலனுக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, பிரார்த்தனை நடைபெறுகிறது.

    • இந்த திருக்கோவிலுக்கு தனித்துவம் உண்டு.
    • ஒரு நாளுக்கு ஆறு முறை இத்தல இறைவன் அபிஷேகம் காண்கிறார்.

    முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், பழனி பால தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு தனித்துவம் உண்டு. போகர் என்னும் தலைசிறந்த சித்தரால் நவபாஷாணத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது, இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானின் சிலை. இதற்கு செய்யப்படும் அபிஷேக நீர் அருமருந்தாக இருப்பதாக சொல்கிறார்கள்.

    நவபாஷாண சிலையைச் செய்ய, சுமார் 9 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாராம், போகர். இந்த சிலையின் நெற்றியில் உள்ள ருத்ராட்சம், கண், மூக்கு, வாய், தோள், கை, விரல்கள் அனைத்தும் மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன.

    முருகப்பெருமானின் விக்கிரகத்துக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய நான்கு பொருட்களால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர், அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருட்களில் சந்தனமும், பன்னீரும் மட்டும்தான் முருகப்பெருமானின் தலை முதல் அடி வரை முழுவதுமாக அபிஷேகம் செய்யப்படும். மற்றவை அனைத்தும் தலையில் வைத்து உடனடியாக அகற்றப்பட்டு விடும்.

    ஒரு நாளுக்கு ஆறு முறை இத்தல இறைவன், அபிஷேகம்- அலங்காரம் காண்கிறார். ஒரு முறை அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யப்பட்டு விட்டால், அடுத்த அபிஷேக நேரம் வரை, முருகப்பெருமானுக்கு மாலை சாற்றுவது, பூக்களால் அச்சனை செய்வது என்று எதுவும் செய்யப்படுவது இல்லை.

    முருகப்பெருமானின் புகழ் பாடியவர்களில் முக்கியமானவர், அருணகிரிநாதர். இவர் ஆரம்ப காலத்தில் தவறான வழியில் சென்று, அதில் இருந்து மீள முடியாமல் மனம் வருந்தினார். பின்னர் தற்கொலை செய்து கொள்வதற்காக திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் இருந்து குதித்தார். அப்போது முருகப்பெருமான் அவரை தடுத்தாட்கொண்டு காப்பாற்றி, தன்னைப் பற்றி பாடல்கள் பாடும்படி செய்தார். முருகப்பெருமானைப் பற்றி, அருணகிரிநாதர் பாடிய பாடல்கள், 'திருப்புகழ்' என்ற பெயரில் புகழ்பெற்று விளங்குகிறது.

    பழனி முருகனின் கையில் ஒரு தண்டாயுதம் இருக்கும். மதுரையில் மீனாட்சி அம்மனின் கையில் இருப்பது போல, முருகப்பெருமானின் தண்டாயுதத்திலும் கிளி ஒன்று இருக்கிறது. இந்த கிளி, அருணகிரிநாதரின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. முருகனால் புகழ்பெற்று விளங்கிய அருணகிரிநாதரின் மீது, சம்பந்தாண்டான் என்ற புலவன் பொறாமை கொண்டான். ஒரு முறை பிரபுடதேவராய மன்னனுக்கு ஏற்பட்ட நோயை தீர்க்க யாராலும் முடியவில்லை. அப்போது சம்பந்தாண்டான் நயவஞ்சகமாக, தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரை பறிந்து வந்தால்தான், மன்னனின் நோயை குணப்படுத்த முடியும் என்றான். அருணகிரிநாதரால் மட்டுமே இது முடியும் என்று கூறினான்.

    அதைக் கேட்டதும் அருணகிரிநாதர், திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் இருந்து, கூடுவிட்டு கூடுபாயும் வித்தை மூலமாக தன்னுடைய உடலில் இருந்து உயிரை ஒரு கிளி மீது செலுத்தி, விண்ணுலகம் சென்றார். அவர் வருவதற்கு முன்பாக சம்பந்தாண்டான், கோபுரத்தின் மீது இருந்த அருணகிரிநாதரின் உடலை எடுத்து எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர், கிளி ரூபத்திலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு அருள் செய்து, கிளி உருவத்தில் இருந்த அவரை தன்னுடைய தண்டத்திலேயே இருத்திக்கொண்டாராம்.

    • வருகிற 25-ந்தேதி முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
    • ஜனவரி 18-ந்தேதி பூர்வாங்கு பூஜைகள் நடைபெற உள்ளன.

    பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி நடைபெற உள்ளது என கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், பழனி தண்டாயுதபாணிசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நடைபெற உள்ளது.

    அடுத்த ஆண்டு ஜனவரி 18-ந்தேதி காலை 9 மணிமுதல் பூர்வாங்கு பூஜைகள் நடைபெற உள்ளன. ஜனவரி 23-ந்தேதி முதல்கால வேள்வி பூஜைகளும், ஜனவரி 26-ந்தேதி காலை 9.05 முதல் 11 மணிக்குள் அனைத்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையடுத்து ஜனவரி 27-ந்தேதி காலை 8.30 மணிக்குமேல் 9.30 மணிக்குள் தங்ககோபுரம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார். கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் அறங்காவலர் குழுவினர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.

    • மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இன்று தங்க ரத புறப்பாடு நடைபெறாது.

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டு தலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மலைக்கோவிலில் தினமும் மாலை சண்முகார்ச்சனை, சின்னக்குமார சுவாமி தங்கசப்பரத்தில் யாகசாலை புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாலையில் சாயரட்சை பூஜையைத் தொடர்ந்து மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்பட்டது.

    பின்னர் பரணி தீபத்தில் இருந்து சுடர் பெறப்பட்டு மலைக்கோவிலில் 4 திசைகளிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன.

    திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கே சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைக்கு சின்னக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மேள தாளம் முழங்க சிவாச்சாரியார்களால் கோவில் முன்பு உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்பட்டது. பின்னர் பனை, தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையில் எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பழனி மலைக்கோவிலைத் தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவில், திரு ஆவினன்குடி கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.விழாவை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் இன்று தங்க ரத புறப்பாடு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையிலேயே ஏராளமாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    • கார்த்திகை தீபத்திருவிழா 6-ம்தேதி நடைபெறுகிறது.
    • திருக்கார்த்திகை தீபம் அன்று தங்கரத புறப்பாடு நடைபெறாது.

    பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில்களில் தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு வழக்கமாக 5.30 மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடைபெறும்.

    மேலும் அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது. அதாவது அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்ல வேண்டும்.

    இதேபோல் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், மதியம் 2 மணிக்கு குடமுழுக்கு நினைவரங்க படிப்பாதை தற்காலிகமாக அடைக்கப்படும். தொடர்ந்து 6 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள். பிற பாதைகளான மின்இழுவை ரெயில், ரோப்கார் சேவை வழக்கம்போல் செயல்படும். திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளன்று மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.

    • 5-ந்தேதி பரணி தீபம் கொண்டுவரப்பட்டு மூலவர் சன்னதியில் ஏற்றப்படுகிறது.
    • சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி மலைக்கோவிலில் விநாயகர், சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரர், துவார பாலகர்கள் மற்றும் மயில்வாகனம், கொடிமரத்துக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சியை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் செய்தனர்.

    7 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகருக்கு தீபாராதனை, 6.45 மணிக்கு தங்க சப்பரத்தில் சின்னக்குமாரர் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 7.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.

    6-ம் திருநாளான 5-ந்தேதி சாயரட்சை பூஜையின்போது யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டுவரப்பட்டு மூலவர் சன்னதியில் ஏற்றப்படுகிறது. அதேபோல் திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகார திருமண மண்டபத்தில் சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    7-ம் திருநாளான திருக்கார்த்திகை அன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு உடன் விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. பின்னர் மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றுதலும், மாலை 6 மணிக்கு மலைக்கோவில் மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில்களில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலான அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    ×