search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96345"

    • 5-ந்தேதி மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.
    • சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று (புதன்கிழமை) காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. 7 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், 6 நாட்கள் சாயரட்சை பூஜைக்கு பின்பு சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.

    வருகிற 5-ந்தேதி திருவிழாவின் 6-ம் நாளில் யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டு, மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மறுநாள் 7-ம் நாளில் திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, விஸ்வரூப தரிசனம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 4 மணிக்கு சாய ரட்சை பூஜை நடக்கிறது. அதன்பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனையை தொடர்ந்து 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றப்படும். 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • தீபத்திருவிழா 30-ந்தேதி தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது.
    • டிசம்பர் 6-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் சரவணப்பொய்கையில், 6 செந்தாமரை மலர்களில் 6 குழந்தையாய் தவழ்ந்தபோது கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார். இதனால் முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு.

    முருகப்பெருமானின் அவதார சிறப்பை விளக்கும் வகையில், கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 30-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது. திருவிழாவில் முதல் 6 நாட்களும் சாயரட்சை பூஜைக்கு பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    மேலும் இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பிறகு தங்கரத புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு வரப்பட்டு மூலவர் சன்னதியில் ஏற்றப்படுகிறது.

    பின்னர் மறுநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கார்த்திகை அன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, உடன் விஸ்வரூப தரிசனம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 4 மணிக்கு சாய ரட்சை பூஜையும் நடக்கிறது. அதன்பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனையை தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றுதல், மாலை 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து உபகோவில்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், லட்சுமி நாராயணப்பெருமாள், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்து வரப்படுகிறது.

    • 2006-ம் ஆண்டு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும்.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.இதற்கிடையே பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டன.

    கோபுரங்களை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணி நடந்தது. தற்போது கும்பாபிஷேக பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கோபுரங்களில் வர்ணம் பூசும் பணி முடிவு பெற்றுள்ளன. இந்தநிலையில் தங்க கோபுரத்தை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவில் பணியாளர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரத்தை சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த பணிகள் முடிவு பெற்றவுடன், அடுத்த கட்ட பணிகள் நடைபெறும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • தற்போது கார்த்திகை மாதம் என்பதால் ஐப்பன் சீசன் தொடங்கியுள்ளது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தைப்பூசம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.

    இதேபோல் முகூர்த்தம், மாதப்பிறப்பு, கிருத்திகை, வாரவிடுமுறை உள்ளிட்ட நாட்களில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

    தற்போது கார்த்திகை மாதம் என்பதால் ஐப்பன் சீசன் தொடங்கியுள்ளது. சபரிமலைக்கு சென்றுவிட்டு வரும் அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் பழனியில் காலை, மாலை வேளையில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை, முகூர்த்தநாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர். அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில், அய்யம்புள்ளி ரோடு ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் வருகை அதிகரிப்பால் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் கடும் கூட்டம் காணப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள பொது, கட்டளை, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்தவகையில் சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    • நீல நிற வேட்டி, அணிந்து குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர்.
    • அந்தந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

    உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தமிழ்மாத பிறப்பு, கிருத்திகை ஆகிய நாட்களில் வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இதேபோல் ஆண்டுதோறும் அய்யப்ப சீசன் காலத்தில் வெளியூரை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி நேற்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பழனி முருகன் கோவிலில் குவிந்தனர்.

    குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற பின்பு பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் அடிவாரம் கிரிவீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில், அய்யப்பன் கோவில் ஆகிய இடங்களில் ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    முன்னதாக அதிகாலையிலேயே குளித்து கருப்பு, நீல நிற வேட்டி, அணிந்து குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர். பின்னர் அந்தந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

    சபரிமலை சீசனையொட்டி பழனி அடிவார பகுதியில் பேன்சி பொருட்கள், அலங்கார பொருட்கள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் களை கட்டியுள்ளது.

    • பழனியில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    • ஆகம விதிப்படி சிறப்பு பூஜை செய்யப்பட்டது

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பழனியில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    கும்பாபிஷேக பணியின்போது பழனி மலைக்கோவிலில் உள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலையை பாதுகாத்து பலப்படுத்தவும், ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன், தலைமை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி மற்றும் ஆன்மிக சான்றோர்கள், ஆகம வல்லுனர்கள், மக்கள் பிரதிநிதிகள் என 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் கடந்த மாதம் கோவில் அர்த்த மண்டபத்துக்குள் சென்று சிலையை பார்வையிட்டனர்.

    இந்தநிலையில் சிலை பாதுகாப்புக்குழுவை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன், தலைமை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி மற்றும் ஸ்தபதிகள், கோவில் குருக்கள்கள் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். அப்போது அவர்கள், மலைக்கோவிலில் உள்ள நவபாஷாண மூலவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் கருவறை பகுதியில் இருந்து சீரமைப்பு பணிக்காக அகற்றப்பட்ட தங்க படிக்கட்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மதியம் கோவில் அலுவலகத்தில் சிலை பாதுகாப்புக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் மூலவர் சிலை பாதுகாப்பு குழுவினர், கோவில் அறங்காவலர் குழுவினர், கோவில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    பின்னர் இந்த ஆய்வு குறித்து சிலை பாதுகாப்பு குழுவை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் கூறுகையில், அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி மற்றும் ஸ்தபதி குழுவினர் சிலையை காண வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து அரசின் வழிகாட்டுதல் மற்றும் ஆகம விதிப்படி நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும். மேலும் ஆய்வுக்கு முன்னதாக அர்ச்சகர்கள், குருக்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி ஆகம விதிப்படி சிறப்பு பூஜை செய்யப்பட்டது என்றார்.

    பழனி முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் கூறுகையில், சிலை செய்வதும், பாலாலய பூஜை செய்வதும் ஸ்தபதிகள் தான். அதன்படி ஸ்தபதி குழுவினர் ஆகமவிதியை பின்பற்றியே மூலவர் சிலையை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து தவறான தகவல், வதந்திகளை பரப்புபவர்கள் சுயவிளம்பரத்துக்காக செய்கிறார்கள். எனவே ஆய்வு குறித்து பரப்பப்படும் தவறான கருத்துகளை நம்ப வேண்டாம். அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திதான் ஆய்வு செய்கிறோம் என்றார்.

    • திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது.
    • சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது

    பழனி முருகன் கோவிலில், ஐப்பசி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. அதையடுத்து 6.40 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் உட்பிரகாரத்தில் உலா வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு மேல் தங்கரதத்திலும் எழுந்தருளி தங்கரத புறப்பாடு நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் குவிந்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை, ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    • அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் உள்ளது.
    • சந்திரகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு சம்ரோஷண பூஜை நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய நாட்களின்போது பழனி மற்றும் அதன் உப கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி வருகிற 8-ந்தேதி மாலை 5.47 மணி முதல் 6.25 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்திலும் நடை சாத்தப்படும். சந்திரகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு சம்ரோஷண பூஜை நடக்கிறது. இதைத்தொடர்ந்து கோவில் சுத்தம் செய்யப்பட்டு சாயரட்சை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. மேலும் பெரியாவுடையார் கோவிலில் அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அன்னாபிஷேகம், மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    • சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கந்தசஷ்டி விழாவின் சிறப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் உச்சிகால பூஜையில் சுவாமிக்கு கல்பபூஜை நடைபெற்றது. இதேபோல் தங்க சப்பரம், வெள்ளி சப்பரத்தில் சின்னக்குமாரர் புறப்பாடும் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் இரவு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெற்றது. அப்போது பராசக்திவேல் கொண்டு முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்தார்.

    இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு மேல் மலைக்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. மணமேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் தனுர் லக்னத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமாங்கல்யத்தை தெய்வானை மற்றும் வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என சரண கோஷம் எழுப்பினர். கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் திருமண மந்திரங்களை ஓதினர். முன்னதாக கந்தசஷ்டி விழாவின் சிறப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை தீபாராதனை, மகாதீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சப்பரத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சண்முகருக்கான சன்னதியில் எழுந்தருளினார். திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி கோவில் அன்னதான கூடத்தில் நேற்று திருமண விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் ராஜசேகரன், மணிமாறன், சத்யா, கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள், பழனி நகர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் கந்தசஷ்டி விழாவையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    • இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
    • திருஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதன்படி நேற்று சின்னக்குமாரர் பொன்னூஞ்சலில் எழுந்தருளினார்.

    இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.

    பின்னர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சின்னக்குமாரர் சூரசம்ஹாரத்துக்காக மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் வருகிறார். திருஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பழனி மலை கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை பெரிய நாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு மாலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    • நாளை தங்கரத புறப்பாடு நடைபெறாது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி பூஜை நேர மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. அதன்பின்னர் 2.45 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்படும்.

    எனவே நாளை காலை 11 மணிக்கு பின் அனைத்து கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். அதேபோல் படிப்பாதையில் 11.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும் 10 மணி முதல் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் நிறுத்தப்படும். 4 கிரிவீதிகளிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்து சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோஷன பூஜை நடைபெறும். அதேபோல் அன்றைய தினம் தங்கரத புறப்பாடு நடைபெறாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சூரர் பொம்மைகளுக்கான உடல், கை, தலை போன்றவற்றை தயார் செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது.
    • சூரசம்ஹாரம் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெறுகிறது. அப்போது சூரர்களான தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை முருகப்பெருமான் குத்தீட்டி, வேல் போன்ற ஆயுதங்களால் வதம் செய்வார்.

    இந்தநிலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சூரர்களின் உருவ பொம்மைகள் தயார் செய்யும் பணி பழனியில் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பழனியை சேர்ந்த ராமசாமி மகன் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் குடும்பத்தினர் 3 தலைமுறையாக கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக சூரர்களின் உருவ பொம்மைகளை செய்து வருகின்றனர். அதிலும் இவர்கள் உருவாக்கும் பொம்மைகள் கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது போல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதன்படி சூரர் பொம்மைகளுக்கான உடல், கை, தலை போன்றவற்றை தயார் செய்யும் பணிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் சூரர்களின் பொம்மைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.

    சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட பின் சூரர்களின் பொம்மைகள் விஸ்வ பிராமண மகாஜன சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து அவற்றுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொம்மைகளை செய்தவர்களிடம் அவை மீண்டும் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×