search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96414"

    கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    திருக்காட்டுப்பள்ளி:

    மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி நீர்வரத்து 65 ஆயிரத்து 239 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 64 ஆயிரத்து 574 கன அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் 29 ஆயிரத்து 950 கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. முக்கொம்பிலிருந்து கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட 63 ஆயிரத்து 547 கன அடி தண்ணீரும் சேர்ந்து கொள்ளிடத்தில் 93 ஆயிரத்து 497கன அடி தண்ணீர் செல்கிறது. கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் கல்லணை அருகே கொள்ளிடக்கரையோரத்தில் இருந்த மாந்தோப்புக்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கல்லணை அருகே சுக்காம்பார் கிராமத்தில் கொள்ளிடக் கரையோர குடியிருப்புகளின் பின் பகுதியை தொட்டபடி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    தற்போது கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இந்த நிலையில் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் (புது ஆறு) தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
    கல்லணை கொள்ளிடம் பாலத்தில் அறிவிப்புகள் அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இளைஞர்களும், பெண்களும் கரை புரண்டு ஓடும் வெள்ள நீர் பக்கம் நின்று கொண்டு செல்பி எடுத்து வருகின்றனர். #Kollidambridge
    பூதலூர்:

    கல்லணையில் இருந்து தொடர்ந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் திறந்து வெளியேறிக் கொண்டுள்ளது. கல்லணையை பார்ப்பதற்காக விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக வந்து கொண்டிருந்தது. அதற்கேற்பு போலீசாரும் பொதுப்பணித்துறையினரும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணிகளில் செயல்பட்டுவந்தனர்.

    பொதுப்பணித்துறை சார்பில் அணைகளில் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பாலத்தில் எட்டி பார்க்காதீர்கள், செல்பி எடுக்காதீர்கள், ஆற்றில் இறங்காதீர்கள் என்ற அறிவிப்பு செய்த வண்ணம் இருந்தனர். வழக்கம் போல் கல்லணையை பார்க்கும் ஆவலில் திருச்சி மற்றும் தஞ்சை பகுதியில் இருந்து வருபவர்கள் கார்கள், இரண்டு சக்கர வாகனங்களை இதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தாமல் பாலத்தில் வந்து விடுவதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    கல்லணையில் ஆங்காங்கு ஆற்றில் இறங்குவது ஆபத்தானது, செல்பி எடுக்கக் கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகள் அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இளைஞர்களும், பெண்களும் கரை புரண்டு ஓடும் வெள்ள நீர் பக்கம் நின்று கொண்டு செல்பி எடுத்து வருகின்றனர். காற்றும் வேகமாக வீசும் நிலையில் கொள்ளிடம் பாலத்தில் நின்று இளம் பெண்கள் செல்பி எடுத்து வருகின்றனர். அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தன்னிலை மறந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பொதுமக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியாமல் போலீசாரும், அதிகாரிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.  #Kollidambridge




    கீழணையில் இருந்து 1,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. #Kallanai #VeeranamLake #Cauvery
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.

    நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கன மழை காரணமாக காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது.

    அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீர் பின்னர் கீழணைக்கு வந்தது. கீழணையில் இருந்து கடந்த 27-ந் தேதி வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் 1,200 கன அடியாக இருந்தது. நேற்று இரவு வரை 1,600 கன அடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக வீராணம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று முன்தினம் ஏரியின் நீர்மட்டம் 37 அடியாக இருந்தது. அது இன்று 39 அடியாக உயர்ந்துள்ளது. படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 45 அடி வரைக்கும் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அதன்பிறகு சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Kallanai  #VeeranamLake #Cauvery


    கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் வருகிற 1-ந் தேதிக்கு பின்னர் வீராணம் ஏரிக்கு வந்து சேரும் என்று கூறப்படுகிறது. #veeranamlake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறுகிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.

    வீராணம் ஏரி நிரம்பி கடல்போல காட்சியளித்தது. பின்னர் தொடர்ந்து மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததாலும் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

    கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து ஏரி வறண்டு காணப்பட்டது. சிறுவர்களின் விளையாட்டு மைதானமாக வீராணம் ஏரி காட்சியளித்தது. விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் கர்நாடகத்தில் பெய்துவரும் தொடர் மழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது.

    இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கல்லணையை வந்தடைந்தது. அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள அணைக்கரை பகுதிக்கு நேற்று காவிரி நீர் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தண்ணீரின் வேகம் குறைந்ததால் அந்த பகுதிக்கு காவிரி நீர் வரவில்லை. நாளை காவிரிநீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அங்கிருந்து கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள கீழணைக்கு காவிரிநீர் வந்து சேரும்.

    அதன்பிறகு கீழணையில் இருந்து செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வரும். இந்த பகுதிகளில் முட்புதர்கள் சூழ்ந்திருப்பதாலும், சரியாக தூர்வாரப்படாததாலும் வீராணம் ஏரிக்கு அங்கிருந்து காவிரி நீர் வேகமாக வருவது தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

    வருகிற 1-ந் தேதிக்கு பின்னர் காவிரி நீர் வீராணம் ஏரிக்கு வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

    ஏரியில் 37 அடி தண்ணீர் நிரம்பிய பிறகு தான் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடிவு செய்யப்படும் என தெரிகிறது. எனவே வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப 1 வாரத்துக்கு மேல் காலம் ஆகலாம்.
    மேட்டூர் அணை தண்ணீரை எதிர்பார்த்து கல்லணையில் மதகுகளுக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது.
    திருக்காட்டுப்பள்ளி:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களின் தண்ணீர் தேவையை பகிர்ந்தளிக்கும் அணையாக கல்லணை உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மேட்டூர் அணை வழக்கத்துக்கு மாறாக ஜூன் 6-ந் தேதி திறக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியும், 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதியும், 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந் தேதியும், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந் தேதியும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதியும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு மிக தாமதமாக அக்டோபர் 2-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.



    தற்போது கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் இந்த அணைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் நாளை(வியாழக்கிழமை) டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். முதல்- அமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கல்லணையில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளின் மதகுகளில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதகுகளை ஏற்றி இறக்கும் எந்திரங்களை துடைத்து மசகு எண்ணெய் வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மதகுகள் அனைத்துக்கும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. கல்லணையில் உள்ள கரிகாலன், அகத்தியர், காவிரி அன்னை, ராஜராஜன் சிலைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலும் மேட்டுர் அணை தண்ணீரை எதிர் நோக்கி புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நாளை(வியாழக்கிழமை) திறக்கப்படும் தண்ணீர் 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கல்லணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×