search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    அஞ்சுகிராமம் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
    அஞ்சுகிராமம்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் மிக்கேல் அந்தோணி சேவியர் (வயது 44). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலை மிக்கேல் அந்தோணி சேவியர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

    பின்னர், திருவிழா முடிந்து இரவு வீடு திரும்பினார்கள். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3½ பவுன் நகை மற்றும் ரூ.26 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மிக்கேல் அந்தோணி சேவியர் குடும்பத்தினருடன் திருவிழாவுக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து மிக்கேல் அந்தோணிசேவியர் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார். 
    கொடைக்கானலில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பெருமாள்மலை:

    கொடைக்கானலில் கடந்த மாதம் உகார்த்தேநகர், செண்பகனுர் பகுதிகளில் மற்றும் தனியார் ஹோட்டலில் தங்கிருந்த சுற்றுலாப் பயணியின் அறையிலும் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள நகை, மற்றும் பணம் ஆகியவை திருடு போனது இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது31) என்றும் இவர் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள வீடுகளிலும், தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் அறையில் இருந்த ரொக்கப் பணத்தையும் திருடியுள்ளார் என தெரிய வந்தது.

    போலீசார் அவரிடம் இருந்து 8 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை ரொக்கத்தை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது கூட்டாளிகள் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 இடங்களில் செயின் மற்றும் செல்போன்கள் பறிக்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

    இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியவில்லை.

    மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் செல்லும் இளைஞர்கள் பட்டப்பகலிலும், இரவு நேரங்களிலும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களில் தினமும் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் தனியாக நடந்து செல்லும் ஆண்களை குறி வைத்து செல்போன்களையும் பறிக்கிறார்கள்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் 14 பேரிடம் செயின் மற்றும் செல்போன்கள் பறிக்கப்பட்டன. புரசைவாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம், அயனாவரம், சிந்தாதிரிப்பேட்டை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர்.

    உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் இச்சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க நேற்று இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை மாநகர் முழுவதும் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். 100 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அனைத்து சாலைகளிலும், 10 மணிக்கு பின்னர் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

    மெரினா கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மோட்டார் சைக்கிள்களின் வேகத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

    இது மட்டுமின்றி சென்னை மாநகர் முழுவதும் 740 லாட்ஜுகளில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனையில் நேற்று ஒரே நாள் இரவில் சுமார் 3 ஆயிரம் பேர் சிக்கினர். இவர்களை அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது பிடிபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. இவர்களில் 1,125 பேர் ரவுடிகள்.

    தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் ரவுடிகள் பட்டியலில் சேர்த்து வைத்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ரவுடிகளின் சரித்திர பதிவேடு பட்டியல் தயாரித்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பிடிபட்ட 1,125 பேரும் இந்த ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    குற்றப்பின்னணி கொண்ட 1,325 பேரும், பிடிவாரண்டு குற்றவாளிகள் 32 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 15 பேரும் பிடிபட்டனர்.

    நேற்று இரவு ஒருநாள் மட்டும் மொத்தம் 10 ஆயிரம் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் 1000-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்பட்டன.

    இந்த சோதனையின்போது முறையான ஆவணங்கள் இல்லாத 69 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 79 பேரும், குடிபோதையில் சென்ற 159 பேரும் சிக்கினர்.

    இதற்கிடையே வழிப்பறி சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் பற்றி போலீசார் துப்பு துலக்கினர்.

    இதனை தொடர்ந்து திருவொற்றியூர், சாத்தான் காட்டு பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் பதிவான கேமரா காட்சி போலீசுக்கு கை கொடுத்தது. பார்த்திபன், மணி ஆகிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே வேப்பேரி பகுதியில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்களும் சிக்கினர். சித்தார்த் என்ற வாலிபர் தலைமையில் அப்பகுதியில் கூட்டாக இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிட்லப்பாக்கத்தில் விக்னேஷ் என்ற வாலிபர் பிடிபட்டார். மாங்காட்டிலும் 2 வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கினர். இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

    போலீசார் நடத்திய நள்ளிரவு வேட்டையில் பைக் ரேசில் ஈடுபட்ட 42 பேரும் சிக்கினர். அவர்களது மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பைக் ரேசில் ஈடுபட்டு சிக்கிய இளைஞர்களுக்கும், வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

    சென்னையில் தொடரும் செயின் பறிப்பு மற்றும் செல்போன் திருட்டு சம்பவங்களால் பொது மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். சாலையில் நடந்து செல்லுவதற்கே அச்சமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    எனவே வழிப்பறி சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. #Tamilnews

    மதுரை அருகே வீட்டை உடைத்து ரூ.4½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள அம்பலத்தடியை சேர்ந்தவர் மொக்கச்சாமி. இவர் மதுரை சிக்கந்தர்சாவடியில் தனது மகனுக்கு புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதற்காக நேற்று முன் தினம் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீடு கதவு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைபார்த்த அவரது சகோதரர் தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்து பார்த்த மொக்கச்சாமி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தர்.

    பீரோவில் இருந்து 19 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன்மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும்.

    இதுகுறித்து சமயநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார். #tamilnews
    ஆதம்பாக்கத்தில் பழ வியாபாரி வீட்டில் ரூ.7½ லட்சம், 15 பவுன் நகையை கொள்ளையடித்த வாலிபவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் வருமான வரி துறை காலனி 1-வது தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (29). இவர் தள்ளுவண்டியில் வைத்து பழ வியாபாரம் செய்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    எனவே ஒரு வீட்டில் தனியாக வாழ்கிறார். வீட்டை கவனித்துக் கொள்ள உதவியாளராக செஞ்சியை சேர்ந்த ஏழுமலை (50) என்பவரை தங்க வைத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏழுமலையின் மகன் கார்த்தி (30) என்பவர் தனது தந்தையை பார்க்க வந்தார். பின்னர் இங்கேயே தங்கிவிட்டார்.

    இந்த நிலையில், தர்மராஜ் நேற்று பழ வியாபாரத்துக்கு வெளியே சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பினார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்து உள்ளே பார்த்த போது அங்கு வைத்திருந்த ரூ.7½ லட்சம் ரொக்க பணத்தை காணவில்லை.

    மேலும் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளும் ‘அபேஸ்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவின் வீடியோ பதிவுகளை பார்வையிட்டனர். அதில் ஏழுமலையின் மகன் கார்த்தி தனது லுங்கிக்குள் பணம் மற்றும் நகைகளை மடித்து எடுத்து சென்றது தெரியவந்தது. எனவே அவற்றை கொள்ளையடித்தது இவர்தான் என கண்டு பிடிக்கப்பட்டது.

    அவரை பல இடங்களிலும் போலீசார் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. எனவே அவரது தந்தை ஏழுமலையை பிடித்து போலீசார் செஞ்சிக்கு அழைத்து சென்றனர். அங்கும் கார்த்தி வரவில்லை. ஆகவே தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

    என்ஜினீயர் வீட்டை உடைத்து 10 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை கருப்பாயூரணி மீனாட்சி காட்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி செல்வராணி (வயது 33). ரவிக்குமார் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார்.

    கடந்த 1-ந் தேதி இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தேனிக்குச் சென்றனர். நேற்று வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 10 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரவிக்குமார் கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலகுமார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து பலியான நகை வியாபாரியிடம் தங்க கட்டிகளை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    திருச்சி சின்னக்கடை வீதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 68). நகை வியாபாரியான இவர் திருச்சியில் சொந்தமாக நகைப்பட்டறை வைத்துள்ளார். இவர் வாரந்தோறும் வியாழக்கிழமை திருச்சியில் இருந்து ரெயிலில் சென்னை எழும்பூர் வருவார்.

    எழும்பூர் ரெயில் நிலைய வாகனம் நிறுத்துமிடத்தில் அவரது ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருக்கும். ரெயிலை விட்டு இறங்கியவுடன் தனது ஸ்கூட்டரில் ஏறி சவுகார்பேட்டைக்குச் செல்வார். தனது நகைப்பட்டறையில் செய்த தங்க நகைகளை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளுக்கு சப்ளை செய்வார்.

    அந்த நகைகளுக்கு பதிலாக தங்க கட்டிகளையோ அல்லது ரொக்கப்பணமாகவோ வாங்கிக் கொள்வார். வழக்கம்போல கடந்த மாதம் 24-ந் தேதி அன்று ரெங்கராஜன் சென்னை வந்தார். தான் கொண்டுவந்த நகைகளை சவுகார்பேட்டையில் உள்ள நகைகடைகளுக்கு சப்ளை செய்தார்.

    25-ந் தேதி அன்று இரவு அவர் மீண்டும் திருச்சி புறப்பட்டார். எழும்பூரில் ரெயில் ஏறுவதற்காக தனது ஸ்கூட்டரில் சவுகார்பேட்டையில் இருந்து ரெங்கராஜன் வந்து கொண்டிருந்தார். அன்றைய தினம் இரவு 10.30 மணி அளவில் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஈ.வி.கே. சம்பத் சாலையில் வந்தார்.

    அப்போது அங்குள்ள வேகத்தடையில் ஏறும்போது, அவரது ஸ்கூட்டர் நிலை தடுமாறி கீழே சாய்ந்தது. ரெங்கராஜனும் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் இரவே ரெங்கராஜன் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்தநிலையில் ரெங்கராஜன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் வைத்திருந்த ½ கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை சில மர்மநபர்கள் கொள்ளையடித்ததாகவும், அந்த மர்ம நபர்களை ரெங்கராஜன் விரட்டிச் சென்றபோது, கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்றும் அல்லது தங்க கட்டிகளை கொள்ளையடித்த மர்மநபர்கள் தாக்கியதில் அவர் இறந்திருக்கலாம் என்றும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், ரெங்கராஜனின் உறவினர்கள் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

    கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் வேப்பேரி உதவி கமிஷனர் சார்லஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வீரக்குமார், சித்தார்த் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    ரெங்கராஜன் சவுகார்பேட்டையில் இருந்து புறப்பட்டபோது, அவருடன் மகேந்தர் என்ற வாலிபர் ஸ்கூட்டரில் பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார். மகேந்தர் சவுகார்பேட்டை நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்தவர் ஆவார். சூளை பகுதியில் மகேந்தர் ஸ்கூட்டரில் இருந்து இறங்கிவிட்டார்.

    அதன்பிறகு ரெங்கராஜன் மட்டும் தனியாக ஸ்கூட்டரில் வந்துள்ளார். சூளை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். வாலிபர் மகேந்தர் ஸ்கூட்டரில் இருந்து இறங்கியபிறகு ரெங்கராஜனை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்துள்ளனர்.

    வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் காட்சியிலும் அதே 4 பேரும் ரெங்கராஜன் வந்த ஸ்கூட்டரை பின்தொடர்ந்த காட்சி பதிவாகி இருந்தது. இதனால் குறிப்பிட்ட 4 பேர் மீதும், வாலிபர் மகேந்தர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மகேந்தரை பிடித்து விசாரித்தார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்களை மகேந்தர் வெளியிட்டார்.

    ரெங்கராஜனை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த 4 பேரும் கொள்ளை ஆசாமிகள் என்று தெரியவந்தது. வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் மகாவீர் காலனி அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 ஆசாமிகளும் ரெங்கராஜனை வழிமறித்து தாக்கி உள்ளனர்.

    அவர் வைத்திருந்த ½ கிலோ தங்க கட்டிகளை கொள்ளையடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை ரெங்கராஜன் தனது ஸ்கூட்டரில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போதுதான் வேகத்தடையில் சிக்கி நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து ரெங்கராஜன் பலியாகியிருக்கிறார்.

    இந்த கொள்ளை திட்டத்திற்கு மூளையாக வாலிபர் மகேந்தர்தான் செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. ரெங்கராஜன் தங்க கட்டிகள் கொண்டு செல்லும் தகவலை அவர்தான் கொள்ளை கும்பலுக்கு தெரிவித்துள்ளார். இதனால் முதலில் வாலிபர் மகேந்தரை போலீசார் கைது செய்தனர். அவர் சென்னை விநாயகபுரத்தைச் சேர்ந்தவர். அவர் சொன்ன தகவலின்பேரில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மம்முட்டியான் என்ற ராஜ்குமார் (32), சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த முகமது சித்திக் (28), ஆனந்த் (28) ஆகியோரையும் வேப்பேரி போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் இம்ரான், நூரு, பீட்டர், ‘ஸ்பென்சர்’ ரகுமான் ஆகிய மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இம்ரான்தான் முக்கிய குற்றவாளி ஆவார். அவர்தான் கொள்ளை திட்டத்தை வகுத்துக்கொடுத்து கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட தங்க கட்டிகள் இம்ரானிடம் இருப்பதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கொள்ளையடித்த தங்க கட்டிகளை தன்னிடம் வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக ரொக்கப்பணமாக எங்களுக்கு கூலியாக கொடுத்தார் என்று இம்ரானை பற்றி கைதானவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் இம்ரான் உள்பட மேலும் 4 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    முத்துப்பேட்டை அருகே மளிகை கடையில் ரூ.46 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(48). இவர் கடைத்தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் செல்வராஜ் கடையில் இருந்தபோது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் தங்களிடம் 100 ரூபாய் நோட்டுகள் 20 உள்ளது. திருமணத்திற்கு மொய் கவரில் வைக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டாக தாருங்கள் என்று கேட்டுள்ளனர்.

    செல்வராஜிம் 100 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தார். அப்போது செல்வராஜ் கடை கல்லாவில் இருந்த பணத்தை கவனித்த வாலிபர்கள் மளிகை சாமான்கள் வாங்குவது போல் நடித்து 10 கிலோ வெங்காயம் கேட்டுள்ளனர்.

    இதனையடுத்து அருகில் இருந்த கடையில் செல்வராஜ் பல்லாரியை எடுக்க சென்றபோது வாலிபர்கள் கடை கல்லாவில் இருந்த ரூ.46 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றனர். பின்னர் அங்கு வந்த செல்வராஜ் வாலிபர்கள் 2 பேரையும் காணாததால் குழப்பமடைந்தார்.

    கடையில் கல்லாவில் இருந்த பணத்தை பார்த்த போது அது கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சிய அடைந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடிவருகின்றனர்.

    சென்னை கொடுங்கையூரில் செல்போன் கடையில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    பெரம்பூர்:

    சென்னை கொடுங்கையூரில் செல்போன் கடை நடத்தி வருபவர் பிரேம்குமார். இவர் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் 2 கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர்.

    அவர்கள் செல்போன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கொடுங்கையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கமுத்து, ஏட்டு மணிவண்ணன் ஆகியோர் ரோந்து வாகனத்தில் வந்தனர்.

    அப்போது செல்போன் கடையின் ‌ஷட்டர் கொஞ்சமே திறந்திருந்ததால் சந்தேகம் அடைந்தனர். அருகே சென்ற போது உள்ளே கொள்ளையர்கள் 2 பேர் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ‌ஷட்டரை வெளிப்புறமாக பூட்டிவிட்டு எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு விரைந்து வந்தார்.

    உடனே போலீசார் 3 பேரும் ‌ஷட்டரை திறந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டினார்கள். போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் புளியந்தோப்பு பி.எஸ். மூர்த்தி நகரை சேர்ந்த மதன்குமார், வ.உ.சி. நகரை சேர்ந்த அபிமன்யூ என்று தெரிய வந்தது. இது தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று இதேபோல் கொடுங்கையூர் ஜி.என்.டி. சாலையில் 2 கடைகளில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    சூலூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் ஜீவா நகரை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பிரீத்தி (வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அருண்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பிரீத்தி பட்டுப்புடவை மற்றும் கவரிங் நகை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

    பள்ளி விடுமுறையையொட்டி ராஜபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு மகன்களை அனுப்பி வைத்தார். பள்ளி திறக்க உள்ள நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் சென்றார்.

    நேற்று காலை அக்கம் பக்கத்தினர் பிரீத்தியின் வீட்டை பார்த்தபோது வீடு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து செல்போன் மூலம் பிரீத்திக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே கோவை விரைந்து வந்தார்.

    வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவை உடைக்கப்பட்டிருந்து. உள்ளே சென்று பார்த்தபோது பள்ளியில் மகன்கள் வாங்கிய 3 தங்கப்பதக்கம், விலை உயர்ந்த செல்போன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவை, ரூ.20 ஆயிரம் உண்டியல் பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ஆண்டிப்பட்டி அருகே பெட்டி கடையை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வருசநாடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொம்மையசாமி (வயது35). இவர் அதே பகுதியில் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தான் வாங்கிய நபரிடம் பணத்தை திருப்பி தருவதற்காக ரூ.1 லட்சம் பணத்தை கடையில் வைத்திருந்தார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து பொம்மையசாமி வருசநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மோப்பநாய் வைத்தும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆண்டிப்பட்டி பகுதியில் அதிகரித்து வரும் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    ஈரோட்டில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 37 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே தண்ணீர்பந்தல்பாளையம், கணபதி நகரை சேர்ந்தவர் பிலிப்மேத்யூ(வயது65). ஜவுளி வியாபாரி.

    பிலிப்மேத்யூவுக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம் ஆகும். ஈரோட்டுக்கு வந்து ஜவுளி வியாபாரம் செய்து இங்கு வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் பிலிப் மேத்யூ கேரளாவில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கேரளா சென்று விட்டார்.

    இதற்கிடையே மேத்யூ பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் மேத்யூ வீட்டின் முன் பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து மேத்யூவுக்கு போனில் தகவல் கொடுத்தார்.

    திடுக்கிட்ட மேத்யூ கேரளாவில் இருந்து தண்ணீர்பந்தல் பாளையத்தில் உள்ள வீடுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவை உடைத்து அதில் இருந்த 28 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

    இதே போன்று அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    தண்ணீர்பந்தல் பாளையம், கணபதி நகரை சேர்ந்தவர் பழனிசாமி. சாயபட்டறை உரிமையாளர். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பழனிசாமி திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்துக்காக தனது குடும்பத்துடன் சென்று இருந்தார்.

    இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பழனிசாமி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் நகையையும், மகன் கல்வி கட்டணத்திற்காக வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் அள்ளி சென்றனர்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் கைரேகை நிபுணர்களும் தடயங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    இரு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஓரே கும்பலாக இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டின் அருகே வைக்கபட்டுள்ள சி.சி.டி.வி.கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.

    தொடர்ந்து அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த இது துணிகர கொள்ளையால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். நேற்றும் இதேபோல் மொடக்குறிச்சி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது குறிப்பிட்டத்தக்கது. #tamilnews
    ×