search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • 26-4-2023 கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.
    • இந்தக் கோவிலில் சிவபெருமான், குபேர திசையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் உள்ளது, பழமையான வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணிய சுவாமி ஆலயம். இந்த ஊரைச் சுற்றிலும் முன்காலத்தில் 'பிரம்பு' எனப்படும் முள்செடி காடாக இருந்தால் 'பிரம்பில்' என்றும், தட்சனின் யாகத்தில் பங்கேற்ற சாபம் நீங்க பிரம்மதேவன் சிவபெருமானை வழிபட்ட தலம் என்பதால் 'பிரம்ம மங்களபுரம்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது. 'பிரம்பில்' என்பதே காலப்போக்கில் 'பிரம்பூர்' என்றும், பின்னர் 'பெரம்பூர்' என்றும் பெயர் பெற்றுள்ளது.

    தல வரலாறு

    இந்த ஆலயம் முருகப்பெருமானை மூலவராகக் கொண்டது என்றாலும், ஆதியில் இது சிவாலயமாக இருந்துள்ளது. தாருகாவனத்து முனிவர்களால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவபெருமானை, சூரபத்மனை சம்ஹாரம் செய்து, தெய்வானையை திருமணம் முடித்து திரும்பிய முருகப்பெருமான் வழிபட்டார். அந்த தம்பதிக்கு அருளாசி வழங்கிய ஈசன், தன் மகனை இத்தலத்திலேயே இருந்து அருள்பாலிக்குமாறு கூறினார். அதன்படியே முருகப்பெருமான் இங்கு தங்கியதாக தல வரலாறு சொல்கிறது.

    பிரம்ம தேவன் வழிபட்ட அஷ்ட பிரம்ம தலங்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமின்றி, சூரபத்மனால் அமைக்கப்பட்ட கந்தபுஷ்கரணியை தல தீர்த்தமாக கொண்டது, சூரபத்மன் மயிலாக வந்து முருகனை வழிபட்டு ஞானோபதேசம் பெற்ற தலம், ஆறுமுகங்களுடன் அருளும் இறைவனை வழிபடுவதால் ஆறுபடை வீடுகளையும் வழிபட்ட பலனை தரும் ஆலயம், அகத்தியர் வழிபட்ட தலங்களில் ஒன்று, பிரம்பு என்னும் முள்செடியை தல விருட்சமாகக் கொண்ட ஆலயம், ராஜராஜசோழன் பிரதிஷ்டை செய்த இடஞ்சுழி விநாயர் சன்னிதி அமைந்த ஆலயம் என பல்வேறு சிறப்புகளுடன் விளங்குகிறது, இந்த சுப்பிரமணியர் கோவில்.

    பொதுவாக சிவன் கோவில்களில், சிவன் முதன்மை தெய்வமாக தனிச்சன்னிதியில் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருள்பாலிப்பார்கள். சிவன் சன்னிதிக்கு பின்புறம் அல்லது வடமேற்கு திசையில் முருகனுக்கு தனிசன்னிதி இருக்கும். ஆனால் இத்தலத்தில் முருகப்பெருமான் பிரம்மாவுக்கும், மயிலாக மாறிய சூரபத்மனுக்கும் ஞானோபதேசம் அளித்து ஞானகுருவாக விளங்குவதால், அவரே மூலவராக கிழக்கு நோக்கியும், தெய்வானை தனி சன்னிதியில் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் வடமேற்கில் சிவனார் 'பிரம்மபுரீஸ்வரர்' என்ற பெயரில் கிழக்கு நோக்கியும், ஆனந்தவல்லி அம்மன் தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். தந்தை இருக்கும் இடத்தில் இருந்து மகனும், மகன் இருக்குமிடத்தில் இருந்து தந்தையும் அருள்பாலிக்கும் அமைப்பு இங்கு மட்டுமே உள்ளதாக சொல்கிறார்கள்.

    இத்தல இறைவனை, திருநாவுக்கரசர் வழுவூர் கோவிலில் இருந்து பாடியுள்ளார். ஆனாலும் இந்த ஆலயம் தேவார வைப்புத்தல பட்டியலில் இடம்பெறவில்லை. ஆலயம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தலவரலாற்று கையேட்டில் அப்பாடல் இருக்கிறது. இவ்வாலயம் பற்றி சிதம்பரநாதமுனிவர், தனது ஷேத்திரக் கோவை பிள்ளைத்தமிழில் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

    கிழக்கு நோக்கிய நிலையில் ஐந்து நிலை கோபுரத்துடன், 7 கலசத்துடன் கூடிய பிரமாண்ட கோபுரம், இரண்டு பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என கோவில் பெரியதாக அமைந்துள்ளது. கோவில் நுழைவு வாசலில் விநாயகர், இடும்பன் சன்னிதிகள் உள்ளன. உட்புறம் வசந்தமண்டபம், அதன் எதிரே தீர்த்தக் குளமான கந்தபுஷ்கரணி இருக்கிறது. பிரதான ஆலயத்தில் முருகப்பெருமான் சன்னிதியும், மகாமண்டபத்தில் தெய்வானை சன்னிதியும் உள்ளன. மூலவர், வள்ளி- தெய்வானை உடனாய ஆறுமுகப்பெருமானாக பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்து காட்சி அருள்கிறார். மகாமண்டபத்தில் ராஜராஜசோழன் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்த இடஞ்சுழி விநாயகரின் சன்னிதியைக் காணலாம்.

    வெளிப்பிரகாரத்தின் வடமேற்கு திசையில் பக்தர்களின் கடன் நிவர்த்திக்கு அருள்பாலிக்கும் பிரம்மபுரீஸ்வரர் குபேரலிங்க வடிவிலும், அம்பிகை ஆனந்தவல்லி என்ற திருநாமத்துடனும் எழுந்தருளியுள்ளனர். சிவாலய கோஷ்டத்தில் தெற்கில் அகத்தியர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் பெருமாள், வடக்கில் துர்க்கை மற்றும் தனி சன்னிதியில் சண்டிகேஸ்வரர் இருந்து அருள்பாலிக்கின்றனர். சிவாலயம், முருகப்பெருமான் கோவிலுக்குள் உள்ளதால் தனிக்கொடிமரம் இல்லை. உட்பிரகாரத்தில் சனீஸ்வரருக்கு தனி சன்னிதியும், நவக்கிரக சன்னிதியும், ஐயப்பன் சன்னிதியும் உள்ளது. இவ்வாலய தட்சிணாமூர்த்தி 'குக தட்சிணாமூர்த்தி'யாகவும், சண்டிகேஸ்வரர் 'குக சண்டிகேஸ்வர'ராகவும் விளங்குகின்றனர்.

    சிவன் மற்றும் முருகனுக்குரிய தலமாக இது விளங்குவதால், தினசரி ஐந்துகால பூஜைகளுடன், வழக்கமான நித்ய, வார, பட்ச பூஜைகளும், ஆண்டு உற்சவங்களாக பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சித்ரா பவுர்ணமி, தனுர்மாத பூஜை ஆகியவையும் சிறப்பாக நடத்தப்பெறுகின்றன.

    இக்கோவில் பிற்கால சோழர்களால் படிப்படியாக கட்டப்பட்டுள்ளது. 20-ம் நூற்றாண்டில் மிளகு செட்டியார் என்னும் பக்தரால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதுடன், ராஜகோபுர திருப்பணிகளும் தொடங்கப்பட்டது. ஐந்து நிலைகள் கொண்ட இதன் ராஜகோபுரத்தில் மூன்று நிலைகள் மட்டுமே அவரால் கட்ட முடிந்தது. பின்னர் 1960-ல் மேலும் 2 நிலைகள் கட்டி முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 1994-ல் அனைத்து சன்னிதிகளும் பாலாலயம் செய்யப்பட்டு, முழுமையாக திருப்பணி நடைபெற்று மீண்டும் 2001-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 26-4-2023 (புதன்கிழமை) மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.

    அமைவிடம்

    காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும் இந்த ஆலயம், ஆடுதுறையில் இருந்து பொறையார் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலைகள் சந்திக்கும் மங்கநல்லூரில் இருந்து கிழக்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மங்கநல்லூர், சங்கரன்பந்தல் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் பெரம்பூர் வழியே செல்கின்றது. மயிலாடுதுறை, பொறையார், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதியும் உள்ளது.

    பிரார்த்தனையும் நேர்த்திக்கடனும்

    இவ்வாலய முருகப்பெருமானை, தொடர்ந்து 6 வாரங்கள் 6 அகல்விளக்கு தீபம் ஏற்றி, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும். முருகப்பெருமானுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறப்பற்ற நிலை உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல முருகனை பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும். இழந்தப் பதவியைப் பெற விரும்புபவர்கள், புதிய பதவி கிடைக்க வேண்டுவோரும், நம்பிக்கையுடன் இத்தல முருகப்பெருமானை வணங்கி வரலாம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், முருகனுக்கு காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், சந்தனத்தால் அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.

    இந்தக் கோவிலில் சிவபெருமான், குபேர திசையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவரை திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் வில்வம் சமர்ப்பித்து வழிபட்டால், கடன் நிவர்த்தி மற்றும் தொழில் அபிவிருத்தி ஏற்படும். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகுந்த சக்தி படைத்தவள். சாந்த துர்க்கையாக இருக்கும் அந்த தேவியை செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், துர்க்காஷ்டமியின் போதும் தீபமேற்றி வழிபடுவோருக்கு, வேண்டும் வரம் அருள்வாள். ஆண்டுதோறும் தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று 501 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதில் பங்கேற்றால் சகல பலன்களும் கிடைப்பதுடன், குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து செல்வம் கொழிக்கும்.

    -நெய்வாசல் நெடுஞ்செழியன்

    • இந்த கோவிலில் அட்சய திருதியை விழா நாளை நடக்கிறது.
    • ஊனம்நீக்குதல், திருமணதடை போன்ற தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது.

    தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் உள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே பீடமும், நந்தி பகவானின் தனி மண்டபமும் உள்ளன. கால் ஊன் நீங்கப்பெற்ற சனிபகவானுக்கு சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்து தரிசனம் கொடுத்தார்.

    அவரே இந்த ஆலயத்தின் மூலவர். அத்துடன் சிவபெருமான் சனி பகவானுக்கு இத்தலத்தில் திருமணமாகும் அருளையும் வழங்கினார். மந்தா தேவி, ஜேஷ்டா தேவி என்ற இரு பத்தினிகளை இங்கு மணந்த சனிபகவான் இங்கு ஆதி பிருஹத்சனீஸ்வரர் என்ற பெயருடன் திருமணக் கோலத்தில் தன் துணைவியருடன் தனி கோவிலில் அருள்பாலிக்கிறார். இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டது. எனவே சனி பகவான் அந்த காகத்தினையே தனது வகனமாக இங்கு ஏற்றுக் கொண்டார்.

    சூரிய தேவனின் மகன் சனிபகவான். இன்னொரு மகன் எமதர்மன். இருவரும் பகை கொண்ட நேரம் நிறைய உண்டு. ஒரு சமயம் பகையினால் எமதர்மன் சனிபகவான் காலில் ஓங்கி அடிக்க, அதனால் சனிபகவானின் கால் ஊனமானது. கால் ஊனத்துடன் நிவாரணம் தேடி மனித உருவத்தில் சுரைக் குடுவையில் பிச்சை ஏந்தி பெற்ற அந்த தானியங்களைச் சமைத்து அன்னதானமாக ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் அளித்து வந்தார் சனிபகவான்.

    ஊர் ஊராக சுற்றி வந்த சனிபகவான் விளாமரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். பாதையை கடக்கும் போது ஓர் இடத்தில் விளாமரத்தின் வேரால் தடுக்கப்பட்டு நிலைதடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார். அங்கே சித்திரை திங்கள், வளர்பிறை திருதியையும், நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த புனித நன்னாளில் பல கோடி யுகங்களாக மறைந்திருந்த 'பூச ஞான வாவி' என்ற ஞான தீர்த்தம் சுரந்து சனிபகவானை மேலே எழுப்பி கரை சேர்த்தது. இதனால் சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தியானது.

    விளாவேர் தடுக்கி சனி பகவான் விழுந்ததால் சுரந்த ஞான வாவி தீர்த்தம் குளமாக உருவானது. அதனால் விளம்குளம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி விளங்குளம் என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.

    சனி பகவானின் அருள் :

    அட்சய திரிதியை நாளில் அட்சயபுரீஸ்வரரால் ஊனம் நிவர்த்தி பெற்ற சனி பகவான் கிழக்கு பிரகாரத்தின் வடதிசையில் தனி ஆலயத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகள் செயலற்று போகவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இங்கு சனி பகவான் அருள் பாலிக்கிறார்.

    சனி தோஷம் உள்ளவர்களும், சனி கிரக பாதிப்பு உள்ளவர்களும், சனி பகவானுக்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்துவிட்டு பிரகாரத்தில் காக்கையை அழைத்து உணவு படைக்கின்றனர். காக்கைகள் அந்த உணவை எடுத்து புசித்தால் அவர் களது சனி தோஷம் அறவே விலகிவிட்டது என்று பொருளாம். ஒரு வேளை அந்த உணவை உண்ண தயங்கி பறந்து போனால் அவர்களது தோஷம் விலகவில்லை என்று அர்த்தமாம். எனவே அவர்கள் மறுபடியும் சனி பகவானை தேடி வந்து பிரார்த்தனை செய்து உரிய பயனைப் பெறுவது வழக்கமாக உள்ளது.

    இறைவன் - இறைவி :

    ஆலயத்தில் பிரகாரத்தை அடுத்து உள்ளது வசந்த மண்டபம். இந்த மண்டபத்தின் வலது புறம் அன்னை அபிவிருத்தி நாயகியின் சன்னிதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் தண்டத்தையும், மேல் இடது கரத்தில் தாமரையையும் சுமந்து கீழ் இரு கரங்களில் அபய ஹஸ்த, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள்.

    அடுத்துள்ள மகாமண்டபத்தின் அருகில் உள்ள அர்த்த மண்டப நுழைவுவாயிலின் இடது புறம் இரட்டை விநாயகரும், வலது புறம் மாரியம்மன், பிரதோஷ நாயகர் ஆகியோர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் அட்சயபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் கற்பூரம் ஏற்றுவது கிடையாது. நெய் தீபம் மட்டுமே ஏற்றி தீபாராதனை செய்கின்றனர்.

    பரிவார தெய்வங்கள் :

    இறைவனின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், பிரம்மா, சிவதுர்க்கை, மகாலட்சுமி ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். திருச்சுற்றில் தென் கிழக்கில் வன்னி மரமும், தென் திருச்சுற்றில் ஆலய திருக்குளமான பூச ஞான வாவி குளத்தின் நுழைவுவாயிலும் உள்ளன. மேற்கு திருச்சுற்றில் விநாயகர், நாகர், சுப்ரமணியர், வள்ளி, தேவசேனா ஆகியோர் சன்னிதிகளும் வடக்கு திருச்சுற்றில் சண்டீஸ்வரர் சன்னிதியும் உள்ளன. கிழக்கு திருச்சுற்றில் காலபைரவர், சூரியன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    கி.பி. 13-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாகும். சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் வழிபட்ட தகவல் கல்வெட்டு மூலம் காணக் கிடைக்கிறது. ஆலயத்தின் தல விருட்சம் விளாமரம். ஆலயத்தின் வட திசையில் விருட்சம் உள்ளது. பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது. இங்கு தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், நந்தி பகவானுக்கு பிரதோஷ காலங்களிலும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்திலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    ஆலயத்தின் எதிரே அழகிய சிறிய ஆலயத்தில் விஜய விநாயகர் மேற்கு திசை நோக்கி அமர்ந்து தன் தந்தையை நோக்கியபடி அருள் பாலிப்பதை தனி சிறப்பாக கூறுகின்றனர் பக்தர்கள். சித்திரை திங்கள் வளர்பிறையில் வரும் திரிதியை நாள் அட்சய திரிதியை என அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் அட்சய திரிதியை அன்று சனி பகவான் பலவித ஸ்தூல சூட்டும் வடிவங்களில் சிவபெருமானை நாள் முழுவதும் வழிபடுவதாக ஐதீகம். அட்சய திருதியை அன்று இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    இங்கு அருள் பாலிக்கும் இறைவி அபிவிருத்தி நாயகி தன் பக்தர்கள் அனைத்து நிலைகளிலும் அபிவிருத்தி அடைய அருள் புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை. அட்சய திருதியை நாளில் இறைவனுக்கு சந்தனக் காப்பில் முத்துக்கள் பதித்து வழிபடுதலும், சனி பகவானுக்கு புணுகு கலந்த சந்தனக் காப்பிட்டு வழிபடுதலும் மிகுந்த பலனைத் தரும். சனி பகவான் உடன் இருந்து வழிபடும் நாளான அட்சய திரிதியை நாளில் நாமும் அட்சய புரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் வணங்க செல்வம் பெருகும். வாழ்க்கையில் வளம் கொழிக்கும் என்பது நிச்சயம்.

    அட்சய திருதியை அன்று இந்த ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சனி பகவானின் ஊனத்தை தீர்த்த இறைவன் அட்சய புரீஸ்வரர் தன்னை வணங்குவோரின் உடன் ஊனத்தையும், மன ஊனத்தையும் நீக்குவதுடன் ஏழ்மை என்னும் ஊனத்தை நீக்கி அவர்கள் வளம் பெற்று வாழ அருள் புரியக் கூடியவர் என்பது நிஜமே!

    அட்சய திருதியை திருவிழா

    ஊனம்நீக்குதல், திருமணதடை போன்ற தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இத்திருக்கோவிலுக்கு வெளிநாடு, வெளிமாநிலம் வெளி மாவட்டம் போன்ற பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் அட்சய திருதியை அன்று அட்சய திருதியை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அட்சய திருதியை திருவிழா நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.

    கோவிலுக்கு செல்லும் வழி

    விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்திலும், கிழக்கு கடற்கரை சாலையில் விளங்குளம் சோதனை சாவடியில் இருந்து 2 கி.மீ தூரத்திலும், பேராவூரணியில் இருந்து ரெட்டவயல், பெருமகளூர் வழியாக 20 கி.மீ தூரத்திலும் கோவில் அமைந்துள்ளது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • சோழவந்தானில் பிரதோஷ விழா நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. விழாவையொட்டி சனீஸ்வரன் லிங்கம் நந்திகேசுவரர் சிவனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர்.

    விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் சுவாமியுடன் கோவிலை வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தன. தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர்- எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம். குழும தாளாளர்-சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருது பாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் கோவிலிலும், சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ விழா நடந்தது.

    • ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மீக பயணத்துக்கு இந்த ஆண்டு 300 பேர் அழைத்து செல்லப்படுவார்கள்.
    • ரூ.4 ஆயிரத்து 262 கோடி மதிப்புள்ள 4578 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

    திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீலிவனேஸ்வரர் கோவிலில் ரூ.7 கோடியில் 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டப்படும்.

    விழுப்புரம் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில், கும்பகோணம் கீழப்பழையாறை சோமநாத சுவாமி கோவில், ஈரோடு, வேலாயுதசாமி கோவில், நாமக்கல் தோளூர் நாச்சியார் கோவில், வள்ளிபுரம் நல்லாயி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களில் ரூ.26 கோடி மதிப்பில் ராஜகோபுரங்கள் கட்டப்படும்.

    திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில், திருவாருர் பூவலூர் சதுரங்க வல்லப நாதசாமி கோவில் ஸ்ரீவைகுண்டம் வல்லநாடு திருமூலநாத சுவாமி கோவில் உள்பட 18 கோவில்களுக்கு ரூ.9.20 கோடி மதிப்பில் புதிய மரத்தேர்கள் செய்யப்படும்.

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், மருதமலை கோவில் உள்பட 5 கோவில்களில் ரூ.200 கோடியில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்.

    மேலும் 108 ஆன்மீக நூல்கள் வெளியிடப்படும். ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மீக பயணத்துக்கு இந்த ஆண்டு 300 பேர் அழைத்து செல்லப்படுவார்கள். கட்டணமில்லா இலவச திருமண உதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ரூ.4 ஆயிரத்து 262 கோடி மதிப்புள்ள 4578 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    756 கோவில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. 8 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த கோவில் திருமண வரம் அருளும் முக்கிய கோவிலாக உள்ளது.
    • தேவார பாடல் பெற்ற 61-வது தலமாக உள்ளது.

    திருவாரூா் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் பிரசித்தி பெற்ற வீழிநாதர் கோவில் உள்ளது. டெல்டா மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் முக்கிய ஆலயமாக உள்ள இந்த கோவில் திருமண வரம் அருளும் முக்கிய கோவிலாக உள்ளது.

    திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான திருவீழிமிழலை வீழிநாத சாமி கோவில், சோழவள நாட்டில் காவிரி நதியின் தென்கரையில் உள்ள தேவார பாடல் பெற்ற 61-வது தலமாக உள்ளது. இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    வவ்வால் நத்தா மண்டபம்

    திருவீழிநாதர் கோவிலுக்கு வடக்கு பக்கம் கிழக்கு நோக்கி அம்மனுக்கு தனிக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் கிழக்கு முன் நுழைவாயில், கோபுரம் இல்லாத அமைப்பை உடையது. இந்த வாயிலை கடந்து சென்றால் வடபுறம் வவ்வால் நெத்தி மண்டபம் என்ற திருக்கல்யாண மண்டபம் உள்ளது.

    இந்த மண்டபத்தை வவ்வால் நத்தா மண்டபம் என அழைக்கின்றனர். அதாவது வவ்வால் வந்து தங்க முடியாத மண்டபம் என்ற பொருளில் அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் கூறுகிறார்கள். 175அடி நீளம், 75 அடி அகலம் கொண்ட இந்த மண்டபத்தின் நடுப்பகுதி வவ்வால் நெற்றி அமைப்பில் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. இதன் கிழக்கு மேற்கு பக்கங்களில் மூன்று வரிசையில் தூண்கள் உள்ளன. இது கட்டிட வேலைப்பாட்டில் ஒர் அபூர்வ அமைப்பாகும்.

    விண்ணிழி விமானம்

    இக்கோவிலின் முதல் கோபுர வாசல் 80 அடி உயரமும், 3 தலங்களும், 5 கலசங்களும் கொண்டு சுதை சிற்பங்களுடன் விளங்குகிறது. ராஜகோபுர வாசலை கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், கொடிக்கம்பம், நந்தி, திரு மூல நாதர் கோவில் ஆகியவை உள்ளன.

    நடுப்பிரகாரத்துக்கு மேற்கு பகுதியில் படிக்காசு விநாயகர் கோவில் உள்ளது. அதன்பின்புறத்தில் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் திருஉருவங்கள் தெற்கு நோக்கி உள்ளன. உட்பிரகாரத்தில் வீழிநாதர் உட்கோவில் மாடக்கோவில் அமைப்பில் உயரமாக திகழ்வதை காணலாம். இப்பகுதியே விண்ணிழி விமானம் ஆகும்.

    16 சிம்மங்கள்

    இது 16 சிம்மங்களை தாங்குவது போல அமைந்துள்ளது. இந்த விண்ணிழி விமானத்தை விண்ணுலகில் இருந்து திருமால் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் சுயம்பு லிங்கம் ஆகும். மூலவரின் பின்புற சுவரில் சிவபெருமானும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறாா்கள். இது வீழிநாதர் கார்த்தியாயினியை திருமணம் புரியும் வரலாற்றை கூறும் வகையில் கர்ப்பகிரகத்தின் நடுவில் அமைந்துள்ளது.

    அம்பாள் சன்னதி

    திருவீழிமிழலை வீழிநாதா் கோவிலில் அம்பிகைக்கு தனிக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதில் சுந்தர குஜாம்பிகை அழகு திருமேனியில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாா். திருமால் கைலாயத்தில் சிவபெருமானின் திருக்கோலத்தை தரிசித்த பின் அவரிடம் ஒரு கோரிக்கை விடுத்தாா். எனது சக்கரம்(திருமாலின் சக்கரம்) வலு குன்றியிருக்கிறது. எனவே சிவபெருமானாகிய தாங்கள் அரக்கனை வதம் செய்தபோது பயன்படுத்திய சக்கரத்தை எனக்கு(திருமாலுக்கு) அளிக்க வேண்டும் என கூறினார்.

    அப்போது சிவபெருமான், திருமாலிடம் காவிரிக்கு தெற்கே உள்ள தேஜிநீவனம் என்ற தலத்தை அடைந்து என்னை பூஜிப்பாயாக! என கூறி அருள் புரிந்தார். திருமால் காவிரி தென்கரை வழியே வந்து இத்தலத்தை (திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலை) அடைந்து பத்மதீர்த்தம் அமைத்து அதில் செந்தாமரைகளை உருவாக்கினாா்.

    ஆயிரம் தாமரைப்பூக்கள்

    பின்னர் விண்ணுலகத்தில் இருந்து தான் எடுத்து வந்த விண்ணிழி விமானத்தில் ஈசனை எழுந்தருள செய்து தினமும் ஆயிரம் தாமரைப்பூ

    கொண்டு பூஜை செய்து ஈசனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் பூஜை செய்தபோது இறைவனின் திருவிளையாடலால் ஒரு பூ குறைய மறுமுறையும் எண்ணிப்பார்த்தார்.

    அப்போதும் ஒரு பூ குறைய தாமரை மலருக்கு பதிலாக தனது வலது கண்ணை பறித்து திருவடியில் சாத்தினார். திருமாலின் பக்தியை கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான் உடனடியாக அவர் கேட்ட சக்கரத்தை வழங்கினாா்.

    குழந்தை வரம்

    சிறந்த சிவ பக்தரான காத்தியாயன முனிவர் தனது மனைவியுடன் இந்த ஆலயத்துக்கு வந்து ஈசனையும், அம்பிகையையும் வணங்கி அருந்தவம் புரிந்தார். குழந்தை பாக்கியம் இல்லாததால் அரிய வேள்வியும் செய்தார்.

    அப்போது அங்கு வந்த உமையவள், அன்னபூரணியாக காட்சி அளித்து முனிவரே! தாங்கள் விரும்பிய வரத்தை கேட்கலாம் என கூறினார். அப்போது முனிவர், தாயே... நீயே எனது புத்திரியாக(மகளாக) வரவேண்டும் என கூறினார்.

    திருமணக்கோலம்

    இறைவி முனிவருக்கு அந்த வரத்தை அளித்தார். காத்தியாயன முனிவர் மனைவி சுமங்கலை இருவரும் அருகில் உள்ள தீர்த்த புஷ்கரணிக்கு வந்த போது பெரிய நீலோர்பல மலரில் அம்பிகை அழகிய குழந்தை வடிவில் திகழ்ந்தார். அக்குழந்தையை எடுத்து வந்து கார்த்தியாயினி என பெயரிட்டு வளர்த்து வந்தனர். கார்த்தியாயினி திருமண பருவம் வருவது அறிந்து முனிவர் பரமனை வேண்டி தவம் புரிந்தார். இறைவன், காத்தியாயன முனிவரின் தவத்தை கண்டு மணம் இறங்கி வெளிப்பட்டார்.

    அப்போது பெருமானே! இக்கன்னிகையை தாங்கள் மணக்கோலத்தில் வந்து திருமணம் செய்ய வேண்டும் என பிரார்த்தித்தார். இதனால் இறைவன் சித்திரை மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் கார்த்தியாயினியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

    பொற்காசுகள்

    இதன்படி திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் திருக்கல்யாண விழா நடக்கிறது. உமையம்மை இறைவனை திருமணம் செய்து கொள்ள தவம் இருந்து தம் எண்ணம் ஈடேறிய தலம் இது ஆகும். எனவே திருமணம் ஆகாத பெண்கள் இத்தலத்துக்கு வந்து கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. ஒரு காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் சிவனடியார்களுக்கு தினசரி பொற்காசுகளை படிக்காசுகளாக திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோருக்கு இத்தலத்தில் இறைவன் வழங்கி சிவனடியார்களின் பஞ்சத்தை போக்கியதாகவும் வரலாறு கூறுகிறது.

    12 மாதமும் உற்சவங்கள்

    திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் சித்திரை மாதம் திருக்கல்யாணம், வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடி வெள்ளி, ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, கார்த்திகை மாதம் சோமவாரம், கார்த்திகை மகாதீபம், மார்கழி மாதம் திருவாதிரை உற்சவம், தை மாதம் பொங்கல், கிருத்திகை, தைப்பூசம், மாசி மாதம் மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், இது தவிர பிரதோஷத்தன்று நந்திகேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் 12 மாதமும் உற்சவங்கள் சிறப்பாக நடைபெறும்.

    இக்கோவிலில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும். தல விருட்சம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பலாமரம் ஆகும். தினமும் 6 கால பூஜைகள் இந்த கோவிலில் நடக்கிறது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வர வேண்டும். பின்னர் கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவிலுக்கு சென்று நாச்சியார்கோவிலில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் வழித்தடத்தில் பயணித்து திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலை அடையலாம்.

    • சிவன் கோவில்களில் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது.
    • அபிஷேக பால், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அன்னபூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், தயிர், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், அரிசி மாவு, அபிஷேகப்பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் மற்றும் அபிஷேக பால், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவில், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில், ஓரியூர் சேயுமானவர், மட்டுவார் குழலி அம்மன், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் கோவில், தளிர் மருங்கூர் சிவன் கோவில் ஆகிய பகுதிகளிலும் சோமவார பிரதோசத்தை ஒட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாடுகளுக்கும், குதிரைகளுக்கும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ஆறாவயல் கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 22 ஆம் ஆண்டு குதிரை மற்றும் மாட்டுவண்டி பந்தயம் இன்று காலை நடைபெற்றது.

    இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் கும்பகோணம் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த13 மாட்டு வண்டிகளும், 13 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன. பெரியமாட்டு வண்டி, குதிரை வண்டிகளுக்கு போக வர 8 மைல் தூரமும் சென்று வந்தன.

    பெரியமாடு பிரிவில் முதலாவதாக வெளிமுத்தி வாகினி, 2-வதுவெட்டிவயல் சுந்தரேசன், 3-வது பீர்க்கலைக்காடு, வாளரமாணிக்கம் மாடுகள் பரிசு பெற்றன. சின்னமாடு பிரிவில் முதலாவது ஆலத்துபட்டி, 2-வது கண்டதேவி மருதுபிரதர்ஸ், வெளிமுத்தி வாகினி, 3-வது கோட்டையூர் மாட்டுவண்டிகள் பரிசு பெற்றன. குதிரை வண்டி பந்தயத்தில் முதலாவது உஞ்சனை புதுவயல், 2-வது கார்குடி தேவர்மகன் குனா, 3-வது ஆறாவயல் காளிதாஸ் குதிரை வண்டிகள் வெற்றி பெற்றது.ஆறாவயல் காரைக்குடி சாலையில் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையாக நின்று கண்டு களித்தனர். வெற்றி பெற்ற மாடுகளுக்கும், குதிரைகளுக்கும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    • சிவகாசி மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • தெப்ப உற்சவத்துடன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.

    சிவகாசி

    சிவகாசியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 16 நாட்கள் நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தினர். தேரோட்டம் நடந்தது. கொடி இறக்கி கடைசி திருவிழா நடந்து முடிந்ததை தொடர்ந்து மாரியம்மன் கோவில் வளாக தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது.

    மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் மாரியம்மன் அலங்காரத்துடன் எழுந்தருளி தெப்பத்தை 11 முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் மாரியம்மனை வணங்கி வழிபட்டனர். தெப்ப உற்சவத்துடன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.

    • சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்வது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
    • கோவில் பிரகாரத்தில் கருப்பண்ணசாமி சந்நிதி, குதிரை வாகனம் இருக்கின்றன.

    சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இந்த பச்சைவாழி அம்மன் கோவில் இருக்கிறது இக்கோவிலின் பிரதான தெய்வமான அம்மன் பச்சைவாழியம்மன் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். தல புராணங்களின்படி பச்சைபசேல் என வயல் வெளிகள் சூழ்ந்திருந்த இந்த ஊரையும், அதில் வசித்த மக்களையும் காப்பதற்கு அம்மன் ஒரு பச்சை பச்சை மரத்தில் குடி அமர்ந்தாள். இந்த தகவலை ஊர் பெரியவர் ஒருவர் கனவில் வந்து அம்மன் உரைக்க, விடிந்ததும் அப்பெரியவர் ஊர் மக்களிடம் இந்த கனவை பற்றி கூறிய போது அனைவரும் மெய்சிலிர்த்தனர். பிறகு ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பச்சைவாழி அம்மனுக்கு இங்கு கோவில் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.

    பழமையான இக்கோவில் பிரகாரத்தில் கருப்பண்ணசாமி சந்நிதி, கொடிமரம் மற்றும் குதிரை வாகனம் இருக்கின்றன. கடலூர், பண்ருட்டி, எழுமேடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் சுப காரியத்திற்கு முன்பாக இக்கோவிலுக்கு வந்து அம்மனிடம் உத்தரவைக் கேட்டு அக்காரியத்தை மேற்கொள்கின்றனர். அம்மன் விக்கிரத்தின் தோளின் மீது எலுமிச்சைப் பழத்தை வைத்து, செய்யப்போகும் காரியம் குறித்து மனதில் வேண்டிக்கொள்வார்கள். பழம் கீழே விழுந்தால் அக்காரியம் வெற்றி பெரும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கையாகும்.

    பச்சைவாழியம்மன் காவல் தெய்வமாக இருப்பதால் அம்மனுக்கு பூஜை செய்யும்போது, அந்த தெய்வத்திற்கு மிகவும் பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்வது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். திருமண பாக்கியம் கிடைக்கவும், பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பச்சை புடவை சாத்தி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ஆடி மாதங்களில் வரும் ஆடி வெள்ளி ஆடி அமாவாசை தினங்கள் அம்மனுக்கு விழா கொண்டாடப்படுகிறது.

    கோவில் அமைவிடம்

    அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோவில் கடலூர் மாவட்டத்தில் எழுமேடு என்கிற ஊரில் அமைந்துள்ளது.

    கோவில் நடை திறப்பு

    காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

    கோவில் முகவரி

    அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோவில்

    எழுமேடு

    கடலூர் மாவட்டம் – 607104

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • திருப்பத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது.
    • பக்தர்கள் பழங்களை சூரைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீரணிப்பட்டியில் உள்ளது முத்து மாரியம்மன் கோவில். இங்கு சித்திரை திருவிழாவை யொட்டி கடந்த 9-ந்தேதி உற்சவ அம்பாள் இளையாத்தங்குடியில் இருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கீரணிப்பட்டிக்கு வந்தடைந்தார். பின்னர் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து தினமும் அம்மன் வெள்ளி ரிஷபம், அன்னம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் நடந்தது. 5-ம் நாளன்று பால்குட விழாவும் தொடர்ந்து 6-ம் நாளில் அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதிஉலா வந்தார்.

    7-ம் நாளில் அம்மன் பூப் பல்லக்கிலும், 8-ம் நாளன்று குதிரை வாகனத்திலும் அருள்பாலித்தார். 9-ம் நாளான நேற்று அதிகாலை முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவி யங்களால் அபிஷேகம், அலங்கார தீபாரதனைகள் நடந்தது. பின்னர் அம்மன் திருத்தேருக்கு எழுந்தரு ளினார். அதனை தொடர்ந்து பக்தர்கள் முத்து மாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலையில் பக்தர்கள் வடம் பிடிக்கத் தேரோட்டம் சிறப்பபாக நடைபெற்றது.

    பக்தர்கள் பழங்களை சூரைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கீரணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, இளை யாத்தங்குடி, திருப்பத்தூர், சேவிணிப்பட்டி, கீழச் செவல்பட்டி, செவ்வூர், குருவிக்கொண்டான்பட்டி, விராமதி, இரணியூர், முதலையான்பட்டி, சேத்தம்பட்டி உள்பட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
    • வாயு புத்திரனாகிய ஸ்ரீ ஹனுமன் ஒருவரே வல்லமை படைத்தவர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கோவில்களில் சக்தி வாய்ந்தது, காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோவில். கிஷ்கிந்தை ராஜ்யத்தில், சுக்ரீவனுக்கு மதியூகம் கொண்ட அமைச்சனாக, சொல்லின் செல்வனாக, உற்ற நண்பனாக விளங்கிய அனுமன், ராமரை தரிசனம் பெற்ற பின்னர் ஆஞ்சநேயராகப் பெயர்கொண்டு, சிரஞ்சீவியாகி, இன்றும், அனைவராலும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.

    வாயு புத்திரனாகிய ஸ்ரீ ஹனுமன் ஒருவரே வல்லமை படைத்தவர். விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் இணைக்கும் பிரமாண்ட வடிவம் எடுத்துத் தன் ஆற்றலை நிரூபித்தவர். கொடிய அசுரர்களையும், தீவினை புரிவோரையும் எளிதாக அழிக்கக்கூடிய பலம் பொருந்தியவர் என்றாலும், முனிவர்கள், ரிஷிகள் அனைவரும் போற்றும் வகையில் பணிவையும், எளிமையையும் கைக்கொண்டவர்.

    கொங்குவள நாட்டில் விராட மன்னர் ஆட்சி புரிந்த தலம் தாராபுரம். புராண வரலாற்றில் இடம் பெற்ற ஊர். பஞ்சபாண்டவர் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் முடித்தபின் ஒரு வருடம் அஞ்ஞானவாசம் மேற்கொண்டபோது யாருக்கும் தெரியாமல் மாறுவேடம் பூண்டு வாழ்வதற்காக அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்தான் விராட நகர் என்ற இன்றைய தாராபுரம்.

    தாராபுரம் நகரானது வளமையான வயல்களால் சூழப்பட்டதாகும். வான் உயர்ந்து வளர்ந்த கனி மரங்களையும் தன்னகத்தே கொண்டது. சோலைகளும், நந்தவனங்களும் சூழ்ந்திருக்க வற்றாத ஜீவநதியான அமராவதி ஆறு இங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது. தாங்கள் புனைவேடம் பூண்டிருந்த காலத்தில் தங்களது உடைமைகளையும், ஆயுதங்களையும் தில்லாபுரியம்மன் ஆலயத்தில் ஒளித்து வைத்திருந்தார்கள் பஞ்ச பாண்டவர்கள்.

    இத்தகைய புராண பிரசித்தி பெற்ற இடத்தில்தான் மாத்வ சம்பிரதாயத்தில் வந்த ஸ்ரீவியாசராஜர் எனும் மகான் இத்தலத்தில் அனுமனை பிரதிஷ்டை செய்ய விரும்பி அவ்வாறே செய்தார். பாரத தேசம் முழுவதும் 732 இடங்களில் அனுமனை பிரதிஷ்டை செய்த அவர் தாராபுரத்தையும் அவற்றில் ஒன்றாகத் தேர்வு செய்திருக்கிறார் என்றால், இத்தலத்தின் பெருமையை எளிதாக உணரலாம். அந்தவகையில் 89வது மூர்த்தமாக விளங்குகிறார் இந்த அனுமந்தசுவாமி.

    இது அடர்ந்த காட்டுப் பகுதியாக விளங்கியதால் 'காடு' என்ற அடைமொழியுடன், இந்த ஆஞ்சநேயர் 'காடு ஹனுமந்தராயன்' என்று போற்றப்பட்டார். 1810ல் கோவை கலெக்டராக விளங்கிய டீலன் துரை தாராபுரத்தில் முகாம் அமைத்திருந்தபோது அவருக்கு ராஜபிளவை என்ற கடுமையான நோய் ஏற்பட்டது. அப்பொழுது அவரைச் சுற்றியிருந்தவர்கள் இந்த ஆஞ்சநேயமூர்த்தியின் பராக்கிரமத்தை விளக்கிச் சொல்ல, அவர்களுடைய யோசனைப்படி அனுமந்தசுவாமியை அவர் தரிசனம் செய்ய, உடனே அந்த நோய் அவரை விட்டு விலகியது.

    இந்த நன்றிக்கடனாக, அவர் சுவாமிக்குத் தன் சொந்தப் பொறுப்பில் கர்ப்பகிரகத்தை கட்டிக் கொடுத்தாராம். திருப்பதி வெங்கடாசலபதியை போன்று 7 அடி உயரம் 2 அடி அகலம் கொண்டு பிரமாண்டமாக விளங்குகிறார் அனுமந்தசுவாமி. இவரது இரண்டு பாதங்கள் வடக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இடுப்பில் மணி சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. இடுப்புப் பட்டையில் கத்தி செருகப்பட்டிருக்கிறது. வலது கை அபயம் காட்டி அருள்கிறது. இடது கையில் சௌகந்தி மலர் ஏந்தியிருக்கிறார். கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகள் அணிசெய்கின்றன.

    திருமுகம் வடகிழக்கு திசை நோக்க, அருள்பாலிக்கிறார். கிரீடத்தின் பின்புறத்தில் பட்டா கத்தி ஒன்றும் உள்ளது. தலைக்கு அருகே வலதுபுறம் சக்கரமும் இடதுபுறம் சங்கும் உள்ளன. ஆஞ்சநேயருக்கு அடுத்து இடது புற மண்டபத்தில் ராமர் சந்நதி உள்ளது. சீதாதேவி, ஆஞ்சநேயர் சகிதமாக ராமர் திருக்காட்சி நல்குகிறார். ராமருக்கு அர்ச்சனைகள் செய்தபின் அனுமனுக்குச் செய்யப்படுகிறது. இது ஆரம்ப காலம் தொட்டு நடைபெறும் இந்தக் கோவிலின் சம்பிரதாயமாகும்.

    துங்கபத்ரா நதிக்கரையில் மந்த்ராலயம் என்கிற தலத்தின் மூல பிருந்தாவனத்திலிருந்து மிருத்திகையை (புனித மண்) கொண்டு வந்து இந்த ராமர் சந்நதியை அமைத்திருக்கிறார்கள். அரச மரம் சுமார் 250 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்றது. நரசிம்ம தீர்த்த குளமும் மிகப் பெரியதாக அமைந்துள்ளது. நவகிரக தோஷங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆஞ்சநேயரும், கணபதியும்தான் என்று சாஸ்திரங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

    நெய்தீபம், வெண்ணெய், வடை மாலை ஆகியவற்றைப் படைத்து 9 வாரங்கள் வழிபட்டு வந்தால் நவகிரக தோஷம் நம்மைவிட்டு நீங்கிவிடும் என்பது ஆயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. ஆஞ்சநேயரின் திருவடிகளை உளமாற துதித்து வணங்கிவந்தால், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கியே செல்லும். தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

    ஆலயத் தொடர்புக்கு தொலைபேசி எண். 0458 220749.

    • கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை போனது.
    • இந்த ஓட்டலுக்கு எதிரில் முனீஸ்வரர் கோவில் பீடம் உள்ளது.

    விருதுநகர்

    சிவகாசி ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்தவர் பால்பாண்டி(29). இவர் அண்ணாநகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு எதிரில் முனீஸ்வரர் கோவில் பீடம் உள்ளது. இங்கு உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் மர்மநபர்கள் உண்டியலை எடுத்துச்சென்று அதில் இருந்த பணத்தை திருடிவிட்டனர். இதுபற்றி அறிந்த பால்பாண்டி சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபரை தேடி வருகின்றனர்.

    ×