search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • சாமிக்கு மேல் உள்ள 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக உள்ளது.
    • இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவனின் முகத்தோற்றம் சிவசொரூபமாகவே உள்ளது.

    தாணுமாலயசாமி கோவில் கருவறையில் லிங்க வடிவமுள்ள பெருமானின் மீது சார்த்தப்படும் தங்க கவசத்தில் சுவாமியின் உருவமும், ஒன்றின்மேல் ஒன்றாக பதினான்கு சந்திரப்பிறைகளும் அதன் மீது ஆதிசேஷனாகிய பாம்பு காட்சி அளிக்கிறது.

    14 நாட்களில் வருகின்ற சந்திரனின் பிறைகள் உச்சியில் சிறியதில் இருந்து தொடங்கி கீழ்பாகம் பெரிதாகி முடிவில் பவுர்ணமி போன்று இறைவனின் முகம் தெரிவதாக சந்திரனின் வளர்ச்சியை நமக்கு காட்டுகின்றது. 14 நாட்கள் கழித்து அமாவாசையான இருளை காண்கிறோம்.

    இறைவன் மீது கொண்ட பக்தியால் தினந்தோறும் அவரை வழிபட்டு வருவோமானால் முடிவில் மெய்ஞானமாகிய பூரண ஒளியில் இறைவனை காண முடியும். அவரை விட்டு விலக, விலக பக்தியென்ற பேரன்பு குறையும் தருணத்தில் மாயை என்ற இருளில் மூழ்குகின்றோம் என்ற உயர்ந்த தத்துவத்தையும் நமக்கு உணர்த்துகின்றது, பிறைகள் நிறைந்த கவசக்காட்சி. இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவனின் முகத்தோற்றம் சிவசொரூபமாகவே உள்ளது.

    கருவறை திருநடையில் இருந்து இறைவனை நேராக நாம் காணும் போது வலதுபுறம் சற்று தள்ளி இருப்பதை காண முடிகிறது. சிவலிங்கத்தின் அருகே இடதுபுறம் சிறிது இடைவெளியிருக்கும்

    இடத்தில் அரூபமான சக்திக்கு இடமளித்து சக்தியில்லையேல், சிவமில்லை என்ற தத்துவப்படி லிங்க வடிவில் மும்மூர்த்திகளையும் செயல்பட வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார் தாணுமாலய பெருமான். சாமிக்கு மேல் உள்ள 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக உள்ளது.

    • விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார்.
    • தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார்.

    மூலவர்:வீரராகவப் பெருமாள்

    தாயார்:கனக வல்லித் தாயார் (வசுமதி).

    தீர்த்தம்: ஹ்ருத்தபாப நாசினி

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு.

    இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோவில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். கனகவள்ளி அம்மையார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித் தனியே சிறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியைத் திருக்கல்யாணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    இங்குள்ள கல்வெட்டுகள் பொ.ஊ. 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர்களின் இரண்டாவது பாதியைக் குறிப்பிடுகின்றன. இக்கோவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என உள்ளூரில் புழக்கத்திலுள்ள புராணக் கதைகள் தெரிவிக்கின்றன. விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார்.

    தல வரலாறு

    புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய்ப் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இங்கு தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்குப் படைத்த பின்பு உண்பவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாகப் பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர், உண்ட களைப்புத் தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று.

    ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்குப் பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள், தாயாரை மணமுடித்ததாகத் தல வரலாறு.

    அதன் பின்னரே பெருமாள் பெயர் மாறிற்று, அது வரை கிங்கிருஹேசன் எனும் பெயரே பெருமாளுக்கு முக்கியத் திருப்பெயராக விளங்கிற்று.

    இக்கோவிலின் இறைவன் "வைத்திய வீரராகவர்" என்றும் அழைக்கப்படுகிறார். தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இறைவனுக்கு இங்கு சந்தன எண்ணெயால் மட்டும் அபிசேகம் செய்யப்படுகிறது.

    ஐந்தடுக்கு ராஜகோபுரத்துடன் காணப்படும் இக்கோவிலில் வீரராகவப் பெருமாள் வைத்திய வீரராகவப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். பெருமாள் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிக் காணப்படும் வகையில் காணப்படுகிறார். மூலவரின் வலது புறம் சாலி கோத்திர மகரிஷி, இடதுபுறம் பிரம்மாவுக்கு உபதேசிக்கும் ஞான முத்திரையும் நிறுவப்பட்டுள்ளது.

    மூலவர் பெருமாளுக்கு சந்தன தைலத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. கனகவல்லி தாயார் சன்னதி அருகில் ஆழ்வார், கணேசர், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ராமானுஜாச்சாரியார், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், அனுமான் சன்னதிகளும் அமைந்துள்ளன.

    இக்கோவிலில் இடம்பெற்றுள்ள சாலி கோத்திர மகரிஷிக்கு, தை அமாவாசை அன்று பெருமாள் காட்சி தந்ததால் தை அமாவாசை வழிபாட்டுக்கு உகந்ததாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தினத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவதும் சிறந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.

    சிவபெருமான் தனது தோஷம் நீங்க இத்தலத்துப் பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் ஒன்பது கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளைத் தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இத்தலத்தில் அமாவாசை தினம் சிறந்த வழிபாட்டு நாளாகக் கருதப்படுகிறது. இது தவிரப் பிரம்மோற்சவம், சித்திரை உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமை, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற வழிபாட்டுத் தினங்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பக்தவச்சத பெருமாளுக்கும் கண்ண மங்கை தாயாருக்கும் தினசரி ஆறு கால பூஜை பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி விழா கொண்டா டப்படுவது வழக்கம். அதேபோல மார்கழி மாதத்துக்கான பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் காலை ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்து டன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. மாலை சாயராட்சை தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, துளசி, தாமரை உள்பட பல வகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது.

    இரவு அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகா ரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்த நிகழ்ச்சி நடந் தது. அம்மனை வெள்ளி சிம்மா சனத்தில் அம ரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சி யும் அதைத்தொ டர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாரா தனையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வா கத்தினர் செய்திரு ந்தனர்.

    • இந்த ஆலயத்தில் ராஜகோபுரம் 130 அடி உயரம் கொண்டது.
    • இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால், முன்வினை நீங்கும்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 199-வது தலமாகும். பாண்டிய நாட்டு தலங்கள் 14-ல் 9-வது தலம்.

    மூலவர்: ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானைநாதர்

    அம்மன்: சிநேகவல்லி, அன்பாயிரவல்லி

    தல விருட்சம்: வில்வம்

    தீர்த்தம்: சூரிய தீர்த்தம், வருண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், காமதேனு தீர்த்தம்.

    வருண பகவானின் மகனான வாருணி, துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தான். அதனால் அவனை ஆட்டின் தலையும், யானை உடலுமாக மாறும்படி துர்வாசர் சாபமிட்டார். அந்த சாபம் நீங்குவதற்காக திருவாடானை வந்த வாருணி, இத்தல இறைவனை வேண்டி விமோசனம் பெற்றான். ஆடு + ஆனை என்பதே 'திருவாடானை' என்றானது. இங்குள்ள சோமாஸ்கந்தமூர்த்தியை, பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் நிறுவியதாக சொல்லப்படுகிறது. ஈசனை வேண்டி பாசுபத அஸ்திரத்தைப் பெற்றான் அர்ச்சுனன். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவன் அறியவில்லை. அதை அறிவதற்காக இத்தலம் வந்து சிவனை வேண்டினான். சிவனும் கற்றுக்கொடுத்தார். அதற்கு நன்றியாகவே சோமாஸ்கந்த மூர்த்தியை நிறுவினான்.

    சூரியனுக்கு தன்னுடைய பிரகாசமான ஔியால் கர்வம் உண்டானது. அந்த ஆணவத்தால் தன்னுடைய ஒளியை, சிவபெருமானின் முகத்தில் பாய்ச்சினான். அப்போது அந்த ஒளியை நந்தி உள்ளிழுத்துக்கொண்டார். இதனால் ஒளியை இழந்த சூரியன், நந்தியை வேண்டினாா். நந்திேயா, திருவாடானை இறைவனை வேண்டும்படி சொல்ல, நீல ரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டு, தன் ஒளியை மீண்டும் பெற்றார், சூரிய பகவான். இத்தல நாயகியான சிநேகவல்லி அம்மன், சுக்ரனுக்குரிய அதிதேவதை ஆவார். எனவே இந்த ஆலயம் சுக்ரனுக்குரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. ஆதி என்னும் பெயர் கொண்ட சூரியன், நீல ரத்தினக்கல் கொண்டு ஆவுடை அமைத்து வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'ஆதிரத்தினேஸ்வரர்' என்று பெயர். இவர் உச்சிகாலத்தில் நடைபெறும் அபிஷேகத்தின் போது, நீல நிறத்தில் காட்சியளிப்பார். திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள், தங்களுக்கான பரிகாரத்தை இந்த ஆலயத்திற்கு வந்து செய்து கொள்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் அமைந்த 9 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், 130 அடி உயரம் கொண்டது. இத்தல இறைவனை சூரியன், அகத்தியர், மார்க்கண்டேயர், காமதேனு ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர். இந்த ஆலயத்தில் வைகாசி வசந்த விழா 10 நாட்களும், ஆடிப்பூரத் திருவிழா 15 நாட்களும் விமரிசையாக நடைபெறும். அதே போல் நவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி வழிபாடுகளும் சிறப்பாக நடத்தப்படும்.

    இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால், முன்வினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்ர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுக்ரதிசை, சுக்ர புத்தி நடப்பவர்கள் இங்கு வழிபாடு செய்யலாம்.

    மதுரையில் இருந்து தொண்டி செல்லும் வழியில் 100 கிலோமீட்டர் தொலைவில் திருவாடானை உள்ளது. சிவகங்கையில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்குடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், தேவகோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த திருத்தலத்தை அடையலாம்.

    • நவகிரகங்களில் இராகு, செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர்.
    • மூல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும்.

    மூலவர் – சுகவனேஸ்வரர், வனநாதர், கிளிவண்ணமுடையார்

    அம்மன் – சுவர்ணாம்பிகை, மரகத வல்லி, பச்சை வல்லி

    தல விருட்சம் – பாதிரி மரம்

    தீர்த்தம் – அமண்டுகம்

    பழமை – 500-1000 வருடங்களுக்கு முன்

    அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார்.

    பிரம்மதேவன் தன் படைப்பில் ஒவ்வொன்றும் எவ்வாறு வித்தியாசமாக இருக்க முடிகிறது என்ற இரகசியத்தை சொல்ல அதை கேட்டுக்கொண்டிருந்தவர்களில், சிவநெறிகளில் சிறந்த சுகர் என்ற முனிவர் சரஸ்வதியிடம் போய் சொல்லிவிட்டார். கோபம் கொண்ட பிரம்மன், சுகர் முனிவரைக் கிளியாக்கி சாபம் கொடுத்துவிட்டு, பாபநாசப்பகுதியில்(இப்போதைய கோயில் பகுதி) வந்த சுயம்புமூர்த்தியாகிய சிவபெருமானை வழிபட்டுவந்தால் சாபம் நீங்கும் என்றும் கூறினார்.

    அதேபோல் வந்து எண்ணற்ற கிளிகளோடு தானும் ஒரு கிளியாக சுகர் முனிவர், சிவபெருமானை வழிபட்டு வரும் வேளையில் வேடன் ஒருவன் கிளிகளை விரட்டியடிக்க, அவை புற்றின் மீது பதுங்கின. கோபம்கொண்ட வேடன் புற்றை வெட்டினான். கிளிகள் எல்லாம் செத்தன. அப்போது இராசகிளி(சுகர்) மட்டும் சுயம்பு மூர்த்தியின் முடிமீது சிறகை விரித்து, காத்தது. வேடன் கிளியைவெட்ட இரத்தம் பீறிட்டது. கிளி இறக்க சுயம்புவின் தலையில் இரத்தம் பீறிட்டது.

    சுயம்புவாகிய இறைவனை உணர்ந்த வேடன் தன் வாளால் தன்னைத்தானே வெட்டி மாய்த்துக்கொண்டான். சிவனடி சேர்ந்ததால் கிளியுருவம் மறையப்பெற்ற சுகர் முனிவர், "பெருமானே, நீங்கள் சுகவனேஸ்வரராக இத்திருத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருள் தர வேண்டும்" என்று கேட்டுக் கொள்ள, அதன்படியே இறைவனும் அருளியதாக வரலாறு கூறுகிறது.

    நவகிரகங்களில் இராகு, செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர். இந்த கிரகங்களை வழிபடுவதனால் நல்ல வரனும், உத்தியோகமும் கை கூடும்.

    நவகிரக சக்தி மேல் தளத்தில் பல்லி, உடும்பு உருவங்கள் உள்ளன. இங்கு வழிபட, பல்லி விழும் உபாதைகள் நிவர்த்தி பெற்று சுகம் பெறலாம். மூல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளது.

    திருவிழா:

    வைகாசிப் பெருந்திருவிழா -10 நாட்கள்– கார்த்திகை தீபத்திருவிழா, சித்திரைத்திருவிழா ஆகியவையும் சிறப்பாக நடைபெறும்

    கோரிக்கைகள்:

    இத்தலத்தில் உள்ள விகடச்சக்கர விநாயகருக்கு (சகட விநாயகர்)மாலை, தேங்காய், பழம், கடலை சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாரிஷ்ட்ட உபாதைகள் நீங்கும்.

    கல்யாணபாக்கியம், குழந்தைபாக்கியம், உத்தியோக பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்திற்கு வந்து வழிபடலாம். பல்லி விழும் உபாதைகள் விலக இத்தலத்தில் வழிபடுதல் நல்லது. தேவர்கள் பெருமானை அரசமர வடிவில் வழிபட்டது; சேரமானுக்கும், ஆதிசேடனுக்கும் தாண்டவ தரிசனம் தந்தது; ஒளவையார் ஓர் வளர்ப்புப்பெண்ணுக்குத் திருமணம் செய்வித்தது போன்ற பெருமைகளையுடைய தலம்.

    நேர்த்திக்கடன்:

    சுவாமிக்கும் அம்பாளுக்கும் வேஷ்டி சேலை வாங்கி படைப்பது, மஞ்சள் காப்பு, சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம், பால் அபிசேகம் செய்யலாம்.

    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

    • தனது கற்பின் வலிமையால் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கி அனுசுயா பாலூட்டினாள்.
    • ஆதிபராசக்தியின் அருளால் மீண்டும் மும்மூர்த்திகளும் சுய உருவம் பெற்றனர்.

    குமரி மாவட்டம் ஆன்மிக களஞ்சியமாக விளங்கி வருகிறது. இங்குள்ள சுசீந்திரத்தில் தான் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    புராண காலத்தில் ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்ட சுசீந்திரத்தில் தவநெறியில் சிறந்து விளங்கிய அத்திரி-அனுசுயா தம்பதிகள் வசித்து வந்தனர். அனுசுயாவின் கற்பை சோதிக்கும் நோக்கில் மும் மூர்த்திகளும் வயோதிகர் வேடத்தில் வந்து யாசகம் கேட்டனர். நிர்வாணமாக உணவு பரிமாறினால்தான் உண்போம் என்றும் நிபந்தனை விதித்தனர். தனது கற்பின் வலிமையால் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கி அனுசுயா பாலூட்டினாள்.

    பின்னர் ஆதிபராசக்தியின் அருளால் மீண்டும் மும்மூர்த்திகளும் சுய உருவம் பெற்றனர். அனுசுயாவின் கற்பின் மகிமையை போற்றிய மூம்மூர்த்திகளும் அத்திரி-அனுசுயா தம்பதியரின் வேண்டுதலை ஏற்று கிருதயுகத்தில் அரசமரமாகவும், திரேதா யுகத்தில் துளசியாகவும், துவாபர யுகத்தில் வில்வமரமாகவும், கலியுகத்தில் சரக்கொன்றை மரமாகவும் மாறி அருள்பாலித்து வருகின்றனர்.

    அதன்படி ஒன்றின் மேல் ஒன்றாக மும்மூர்த்திகள் சுயம்புலிங்க வடிவில் வீற்றிருப்பதை ஆதி மூலஸ்தானமாகிய கொன்றையடி சன்னதியில் தற்போதும் காணமுடிகிறது. ஆண்டுகள் ஈராயிரம் கடந்த பின்பும் சரக்கொன்றை மரமானது செதில் அரிக்காமல் கறுமை நிறத்தில் காட்சியளிப்பது எங்குமே காணமுடியாத தெய்வீக காட்சியாகும். இது இந்திரன் சாபம் தீர்த்த தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு இன்றளவும் இந்திரன் அர்த்தஜாம பூஜை நடத்தி வருவதாக நம்பப்பட்டு வருகிறது.

    சுசீந்திரம் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை பக்தர்கள் அனைவரும் தொட்டு வணங்கலாம் என்பது சிறப்பம்சம். மேலும், கோவிலில் உள்ள விக்னேஷ்வரி சிலையும் சிற்பியின் சிந்தனை வளத்தை எடுத்துக்கூறிக்கொண்டிருக்கிறது.

    • பன்னிரண்டு படாகையை புதுமணத் தம்பதிகள் கண்டிப்பாக காண வேண்டும்.
    • புதுமணத் தம்பதிகள் சுசீந்திரம் கோவில் சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும்.

    புதுமணத் தம்பதிகள் சுசீந்திரம் கோவில் சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். ஆம்! பெண்ணாசையால் சாபம் அடைந்து விமோசனம் பெற்ற இந்திரனும், கணவனை கண்கண்ட தெய்வமாக போற்றி வாழ்ந்த கற்பரசி அனுசுயாவும், பித்தனை நினைத்து மனம் பித்தாகி முடிவில் பிறை சூடிய பெருமானோடு சேர்ந்த அறம் வளர்த்த நாயகி போன்ற பெண்மணிகளின் தெய்வீக திருப்பாதங்கள் பட்ட இந்த திருத்தலத்தில் பெண்ணின் பெருமை நிலைத்து நிற்பது போன்று பெண்கள் விளங்க வேண்டும் என்பதின் அடையாளமாக மார்கழி திருவிழா தேரோட்டத்தை புதுமணத் தம்பதியினர் கண்டிப்பாக காண வேண்டும் என்பது முன்னோர் வாக்கு.

    அதிலும் பன்னிரண்டு படாகையை புதுமணத் தம்பதிகள் கண்டிப்பாக காண வேண்டும். சுசீந்திரம் தேர் திருவிழாவுக்கு புத்தாடை உடுத்தி புது மணத்தம்பதிகள் வருவது நமது மனதை விட்டு அகலாத காட்சியாகும்.

    செண்பகராமன் மண்டபத்தில் ராமாயண காட்சிகள்

    இந்தியாவின் இதிகாசங்களில் முக்கியமானது ராமாயணம். ராமா என்றால் ராமன் என்றும் யணம் என்பதற்கு வரலாறு என்றும் பொருள் ஆகும். இன்றும் ராமாயணம் இந்திய மக்களின் வாழ்வில் மிகவும் ஆழமான தாக்கம் செலுத்துகிறது.

    இதனால் பல கோவில்களில் ராமாயணம் ஓவியங்களாக தீட்டப்பட்டு உள்ளது. சுசீந்திரம் கோவில் மண்டபங்களில் செண்பகராமன் மண்டபம் மிகவும் பெரியது. இந்த மண்டப சுவர்களில் ராமாயண காட்சிகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளது.

    • பரமத்தி வேலூர் தாலுகா கு.அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில்திருவிழா கடந்த சனிக்கிழமை இரவு பூச்சாட்டு தலுடன் தொடங்கியது.
    • அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கு.அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில்திருவிழா கடந்த சனிக்கி

    ழமை இரவு பூச்சாட்டு தலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    2-ந் தேதி வடி சோறு நிகழ்ச்சியும், நேற்று முன் தினம் மாலை பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் பகவதி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் கோயில் முன்பு தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து மாலை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், இரவு மாவிளக்கு களை ஊர்வலமாக கொண்டு சென்றும் அம்மனை வழிபட்டனர்.

    நேற்று காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாலை

    மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடு களை கோவில் திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.

    • பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை ஒன்றாக வழிபடும் ஒரே கோவில் இதுதான்.
    • முக்கிய மூலஸ்தானமாகிய கோவில் சுயம்புவாக கருதப்படுகிறது.

    குமரி மாவட்டத்திலேயே மிக புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகள் முன்னாலேயே தொடங்குகிறது.

    பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை ஒன்றாக வழிபடும் ஒரே கோவில் இதுதான்.

    மகரிஷிகள், துறவியர்கள், சுற்று வட்டாரத்தை ஆண்ட சிற்றரசர்கள், முன்கால சேர, சோழ, பாண்டிய நாட்டு அரசர்கள், வேணாட்டு அரசர்கள், விஜயநகர மன்னர்கள், திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள், திருவிதாங்கூர் மன்னர்கள், முன்னாள் கோவில் நிர்வாகிகளாக இருந்த யோகஸ்தானிகர்கள், ஊர் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோரால் இந்த அழகான கோவிலின் பல பாகங்கள் பல காலங்களில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

    கல்வெட்டுகள்

    கொன்றையடி மிகவும் பழமை வாய்ந்தது. அங்குள்ள கொன்றை மரம் 2000 வருடங்களுக்கு முன் உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியில் அறியப்பட்டது. ஆலயத்தின் உள் கருவான இந்த மையத்தை வைத்துதான் இந்த கோவில் எழுந்துள்ளது. முக்கிய மூலஸ்தானமாகிய கோவில் சுயம்புவாக கருதப்படுகிறது.

    வடகேடம் என்ற அதில் தாணு மாலய மூர்த்தியாக வழிபட்டு வருகிறார்கள். தெக்கேடம் என்ற மகாவிஷ்ணு திருவேங்கிடபெருமாளாக காட்சி தருகிறார். பாறையின் மேல் உயரமாக அமைந்துள்ள கைலாய நாதர் கோவில் மண்டபம் 5-ம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாக கல்வெட்டுகள் சாட்சியம் அளிக்கிறது.

    மணிமண்டபம்

    1238-ம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் கண்டியூர் உண்ணி என்பவரால் கட்டப்பட்டு அதன் நித்திய செலவுக்கு உள்ள வஸ்து வகைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது. அறம் வளர்த்தம்மன் கோவில் 1444-ம் ஆண்டு தேரூரில் உள்ள பள்ளியறை நாச்சியார் குடும்பத்தாரால் கட்டப்பட்டதாகும்.

    வீர பாண்டியன் மணி மண்டபத்திற்கு முன்பாக மிகப்பெரிய அரிய வகை கலை சிற்பங்கள் நிறைந்த செண்பக ராமன் மண்டபம் வேணாட்டு ராஜாவான ராமவர்ம ராஜாவால் 1471-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

    ராஜகோபுரம்

    1545-ம் ஆண்டு மிகவும் எழில்மிக்க ராஜகோபுரம் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. 1888-ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் கோபுரம் சீர் செய்யப்பட்டது. 1587-ம் ஆண்டு கோவில் நிர்வாகிகளான யோகஸ்தானிகர் தெற்கு மண்டபத்தில் புருஷோத்தமரு நீலகண்டரு என்பவரால் பெரிய பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது. முக்குறுணி பிள்ளையார் என்று கூறும் அந்த கணபதியின் நித்திய செலவுக்கு தேவையான வஸ்து வகைகளையும் விட்டுக் கொடுத்துள்ளார்.

    அதனால் அது "நீலகண்ட விநாயகர்" என்று இப்போதும் அழைக்கப்படுகிறது. அவரது செயல்களை பெருமைப்படுத்த கோவில் மேலாளர் அலுவலகத்திற்கு முன்னால் தெற்கு பக்கமாக அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.

    பெண் உருவில் விக்னேஸ்வரி விநாயகர்

    கோவிலின் நவக்கிரக மண்டபத்தின் அருகில் அமைந்துள்ள நீலகண்ட விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இந்த விநாயகர் மகா கணபதி, முக்குறுணி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். சுமார் 6 அடி உயரமுடைய இந்த விநாயகரின் சிலையமைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. தெற்குமண்மடம் ஸ்தானிகராக விளங்கிய நீலகண்டரு என்பவர் இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்ததால் அவரது பெயராலேயே நீலகண்ட விநாயகர் அழைக்கப்படுகிறார். இதேபோல் செண்பகராமன் மண்டபத்தில் விநாயகர் பெண் உருவில் காட்சி அளிக்கிறார். மண்டப தூணில் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. பெண் உருவில் இருப்பதால் இவரை விக்னேஸ்வரி விநாயகர் என அழைக்கிறார்கள். பெண் உருவில் உள்ள விநாயகரை வழிபடுவது நன்மையை கொடுக்கும்.

    • மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமைகளையும் கொண்டது.
    • சர்வ தோஷங்களையும் போக்கும்

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் முக்கிய இடம் வகிப்பது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் ஆகும்.

    சோழ வளநாட்டில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி என்ற ஊரில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. சோழ வள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98-வது தலமாக இந்த கோவில் விளங்குகிறது.

    சர்வ தோஷங்களையும் போக்கும் இந்த கோவிலுக்கு வந்து முறையாக வழிபடுபவர்களுக்கு முற்பிறவியில் செய்த பாவத்தின் தீய விளைவுகள் நீங்கும் என்பது ஐதீகம்.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற குருபரிகார தலமான ஆலங்குடி குருபகவான் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமைகளையும் கொண்டது.

    தல வரலாறு

    இத்திருத்தலம் காவிரி நதியின் கிளை நதியான வெட்டாறு கரையில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. பார்க்கடலை கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்தில் இருந்து காத்ததால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இந்த கோவில் இறைவனுக்கு ஏற்பட்டது. இந்த ஊருக்கும் ஆலங்குடி என்ற பெயர் உண்டானது.

    அசுரர்களால், தேவருக்கு நேர்ந்த இடையூறுகளை களைந்து காத்தமையால் இத்தல விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என பெயர் ஏற்பட்டது. இந்த தலம் அம்மையார் தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்ட சிறப்பையும், திருவிடைமருதூர் மகாலிங்கபெருமானுக்கு பரிகார தலமாகவும் விளங்குகிறது. மேலும் பஞ்ச ஆரண்ய தலங்களில் 4-வதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாகவும் விளங்குகிறது.

    தோஷ நிவர்த்தி

    முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சரான சிவ பக்தர் அமுதோகர் என்பவரால் இந்த கோவில் நிர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் செய்த சிவ புண்ணியத்தில் பாதியை மன்னருக்கு தரும்படி மன்னர் கேட்க அதற்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்தார். இதனால் அமைச்சர் சிரச்சேதம் செய்யப்பட்டார். இதன் விளைவால் அரசனுக்கு தோஷங்கள் ஏற்பட இத்தல மூர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றதாக வரலாறு கூறுகிறது.

    இந்த கோவிலில் கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர், ஏலவார்குழலி அம்மை, உமையம்மை, குருதெட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களின் சன்னதி உள்ளது. நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக இந்த கோவில் உள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் பூளைச்செடி ஆகும்.

    சுயம்பு மூர்த்தி

    இத்தலத்து இறைவன்(சிவன்) சுயம்பு மூர்த்தியாக உள்ளார். எனவே இந்த கோவிலின் காலத்தை கணிக்க இயலவில்லை. இந்த கோவிலில் உள்ள இறைவனை விஸ்வாமித்திரர், அஷ்டதிக்பாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம மகரிஷி மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் பூஜித்துள்ளனர்.

    மேலும் அம்மையின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, இலக்குமி, கருடன், அய்யனார், வீரபத்திரர் ஆகியோர் தங்கள் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்து வழிபட்ட தலமாகவும் இந்த கோவில் உள்ளது. முசுகுந்த சக்கரவர்த்தி, சுவாசனன் மற்றும் சுந்தரர் ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு உள்ளனா். திருஞானசம்பந்தர் தமது பாடல்களால் இத்தலத்தை சிறப்பித்து இரண்டாம் திருமுறையில் பாடியுள்ளார்.

    தீர்த்தங்கள்

    இத்திருத்தலத்தை சுற்றி 15 தீர்த்தங்கள் உள்ளன. முக்கியமாக திருக்கோவிலை சுற்றி அகழியாக அமைந்துள்ள அமிர்த புஷ்கரணி என்ற தீர்த்தம் மிகவும் சிறப்புடையதாகும்.

    பிரம்ம தீர்த்தம், லக்குமி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அமிர்த புஷ்கரணி, ஞான கூபம் கிணறு, பூளை வள ஆறு ஆகிய 15 தீர்த்தங்கள் உள்ளன.

    வழிபடும் முறை

    இக்கோவிலுக்கு 14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவர்களே வருகை தர இயலும். முதலில் கலங்காமற் காத்த விநாயகரை வணங்கி பின்னர் கொடி மரம் சென்று அங்குள்ள துவஜ கணபதியை வணங்கி நேராக சென்று சாமியை (ஆபத்சகாயேஸ்வரர்) தரிசிக்க வேண்டும்.

    பின்னர் குரு தெட்சிணாமூர்த்தியை வணங்கி சங்கல்பம் செய்து அர்ச்சனை போன்றவற்றை முடித்து பிரகாரத்தில் உள்ள சோமாஸ்கந்தர், முருகன், மகாலெட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், உற்சவர் குருமூர்த்தி ஆகியோரை வழிபட்டு ஏலவார் குழலி அம்மை மற்றும் சனிபகவானை தொழுது கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    தொடர்ந்து குருபரிகாரமாகிய 24 நெய் தீபங்களை தீபம் ஏற்றும் இடத்தில் ஏற்றி கோவிலை 3 முறை வலம் வந்து ஒவ்வொரு முறையும் கொடி மரத்தின் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து பரிகாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    பிரசித்தி பெற்ற குருப்பெயர்ச்சி விழா

    ஆலங்குடி குருபகவான் கோவிலில் தினசரி 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. முதலில் காலசந்தி காலை 8 மணி முதல் 8.30 மணி வரையும், 2-வதாக உச்சிக்காலம் நண்பகல் 12.30 மணி முதல் 1 மணி வரையும், 3-வது சாயரட்சை மாலை 5.30 மணி முதல் 6 மணி வரையும், 4-வதாக அர்த்தசாமம் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரையும் நடக்கிறது.

    ஆலங்குடி குருபகவான் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் குருப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இதற்காக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆலங்குடி குருபகவான் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    ஆலங்குடி குருபகவான் கோவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணம்-மன்னார்குடி பஸ் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

    இந்த கோவிலுக்கு எர்ணாகுளம், கோவை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ெரயில் மார்க்கமாக வர வசதி உள்ளது. குறிப்பாக எர்ணாகுளம் விரைவு ரெயில் மூலம் நீடாமங்கலம் வந்து பின்னர் கும்பகோணம் செல்லும் பஸ் மூலம் 7-வது கிலோ மீட்டரில் உள்ள ஆலங்குடி குருபகவான் கோவிலை அடையலாம்.

    பஸ் மூலம் வருபவர்கள் தஞ்சாவூர், நீடாமங்கலம் வழியாக ஆலங்குடிக்கு வரலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் மதுரையில் இருந்து தஞ்சாவூர் வந்து அங்கிருந்து நீடாமங்கலம் வழியாக பஸ் மூலம் ஆலங்குடிக்கு செல்ல வேண்டும்.

    • கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.
    • திருவரங்கப் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

    வைணவர்களின் திருத்தலமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பல்வேறு அதிசயங்களையும், ரகசியங்களையும் தாங்கி நிற்கிறது. அதன் தொகுப்பு இதோ...

    * திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 'பூலோக வைகுண்டம்' என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில் தலைமைச் செயலகம் போல் செயல்படுகின்றது.

    * பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், 'மங்களாசாசனம்' பெற்று பாடிய திருத்தலமாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல்.

    * இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோவில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.

    * 1961 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி இங்கு 42 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். தற்போது, இதன் மக்கள் தொகை 3 லட்சத்தைத் தாண்டி விட்டது.

    * கோவில், 'நாழிக்கேட்டான் வாயில்' வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர்.

    * கோவிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், 'சங்க நிதி', 'பதும நிதி' உருவங்களுடன் இருக்கின்றனர்.

    * விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன.

    * மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

    * மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதில் கோவில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்க ப்பட்டதைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது.

    * கோவில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தின் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.

    * இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

    * வருடத்துகொருமுறை,பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

    * கோவிலில் உள்ள நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்ப டாமல் போய்விட்டது. 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது.

    கோவில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோவிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார்.

    ராமானுஜரது திருமேனி 5-வது 'திருச்சுற்று' எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.

    ஐந்து குழி மூன்று வாசல்

    ஸ்ரீரங்கம் கோவிலின் தாயார் சந்நிதிக்கு வெளியே இருக்கும், ஐந்து குழி மூன்று வாசல் அற்புதமானது. இங்குள்ள ஐந்து குழிகள் வழியே, ஐந்து விரல்களை வைத்து தெற்கு பக்கம் பார்த்தால் பரமபத வாசல் தெரியும். இப்படித்தான் தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்பது ஐதீகம். அர்த்த பஞ்சக ஞானத்தைக் குறிப்பதே ஐந்து குழி என்றும் மூன்று வாசல் என்பது பிரம்மத்தின் வழி என்பதும் பெரியோர்கள் வாக்கு.

    கல்லிலே கலை வண்ணம் திருவரங்கம்

    திருச்சியில் காவிரியும் கொள்ளி டமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. அரங்கம் என்றால் ஆற்றிடைக்குறை என்றும் பொருள்படும். சிறப்பு கருதி திருவரங்கம் ஆனது. அங்கு பெருமாள் வந்து தங்கியது ஒரு சுவையான புராணம். திருவரங்கப் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 156 ஏக்கர். கோவில் சுவர்களின் மொத்த நீளம் 32,592 அடி. பெரிய கோவில் 7 திருச்சுற்றுக்களோடு அமைந்துள்ளது. இந்தியாவிலேயே 7 சுற்றுக்களைக் கொண்ட கோவில் இது மட்டுமே. பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். கருவறை விமானத்தில் 4 கலசங்கள் உள்ளன. இவை நான்கு வேதங்களை குறிப்பதாக நம்புகிறார்கள். சுந்தர பாண்டியன் விமானத்துக்கு தங்கம் பதித்தான். அதனால் பொன்வேய்ந்த பெருமாள் என அழைத்தனர்.

    நாம் ஸ்ரீரெங்கநாதரை தரிசிக்க ஏழாம் சுற்றின் தெற்கு வாசலில் உள்ள ராஜகோபுரத்தின் வழியாக நுழைகிறோம். முடிவடையாமல் இருந்த அந்த மொட்டை கோபுரத்தை 1979-ல் தொடங்கி 1987 மார்ச்சில் அஹோபில மடத்து 44-ம் ஜூயர் அழகிய சிங்கர் ஜூயர் 236 அடி உயரத்தில் முழுமையாக்கினார். ஆசியாவிலேயே பெரிய கோபுரமிது. இந்த ஏழாவது திருச்சுற்றில் சித்திரை திருவிழா நடப்பதால் சித்திரை திருவீதி என்று அழைக்கிறோம்.

    பங்குனித் திருநாளில் நம்பெருமாள் உலா வரும் கோரதம் இங்குதான் உள்ளது. கோட்டை வாசல் அருகில் உள்ள கண்ணன் சந்நிதியும் இங்குள்ளது.திருவரங்கப் பெருமாள் தென்திசை நோக்கி பள்ளி கொண்டிரு க்கிறார். குணதிசை முடியை வைத்து, குடதிசை பாதம் நீட்டி, வடதிசை முதுகு காட்டி, தென்திசை இலங்கை நோக்கி அரிதுயிலில் இருப்பதை காணும் பக்தர்கள் பரவசம் அடைகிறார்கள். அரங்கன் மீது கொண்ட காதலால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருவரங்கம் வந்தவர் ஆண்டாள். அவரையே மணக்க விரும்பி அரங்கன் சந்நிதியில் திருமணத்தூணில் புகுந்து மறைந்தார் என்பது வரலாறு.

    திருவரங்கம் கோவிலிலும், சுற்றியுள்ள மண்டபங்களிலும் உள்ள சிற்பங்களை பார்க்கும் போது கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்ற பாடலை நினைவுபடுத்தும்.இங்குள்ள கலைக்கூடத்தில் பழங்கால உலோக சிற்பங்கள் வாள்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. 1966-ல் யுனெஸ்கோ செய்த உதவியால் சிற்பங்களும் ஓவியங்களும் புதுப்பிக்கப்பட்டன. பொதுவாக கோவில்களில் வருடத்தில் ஒன்றோ இரண்டோ விழாக்கள் நடக்கும்.

    ஆனால், வருடத்தில் 322 நாட்களும் பெருமாளுக்கு விசேஷம் என்பது திருவரங்கத்தில்தான். இதில்21 நாள் நடக்கும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமானவை. அதுமட்டுமல்ல, பெருமாள் வீதியில் உலா வரும்போது அவருக்கு முன்பாக தமிழ் மறை ஓதுவரும் இங்குள்ள சிறப்பாகும்.ஆழ்வார்களிடையே அரங்கனை தவிர மற்றொரு பெருமானைப் பாடாமல் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீரெங்கத்திலேயே வாழ்ந்து மறைந்தவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்தான். அவர் திருவரங்கத்தின் பெருமை உணர்ந்தே, இந்திரலோகம் கூட வேண்டாம்... அரங்க மா நகரமான திருவரங்கம் போதும் என்றார். கி.பி. 10-ம் நூற்றாண்டு வரை இந்தக் கோவிலுக்கு வரலாற்று சான்றே இல்லை.

    எல்லாம் இலக்கியச் சான்றுகளே. கோவிலின் மூன்றாம் சுற்றை திருமங்கை மன்னன் கட்டியதாக கூறுகிறது. ஆதித்ய சோழன் கா லம் தொட்டு 644 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலமாகவே சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள் செய்த திருப்பணிகளையும், கொடுத்த நிலம், பொன் போன்றவையும் அறிய முடிகிறது. இது குறித்து கல்வெட்டுகள் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மராட்டியம், ஒடியா முதலிய 6 மொழிகளில் கிடைக்கின்றன.

    கம்பீரம் காட்டும் ராஜகோபுரம்

    ஸ்ரீரங்கம் கோவில் ஏறத்தாழ 156 ஏக்கர் பரப்பளவில் அதா வது 6,31,000 சதுர மீட்டர் கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. மையப் பகுதியில் ரெங்கநாத சுவாமி சன்னதி உள்ளது. இது தெற்கு நோக்கிய வண் ணம் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்துடன்கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

    கோவிலைச் சுற்றி உட்புற மாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோவில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என முழு நகரத்தையும் உள்ள டக்கியுள்ளது.

    ஸ்ரீரங்கம் கோவில் வளாகத் துக்குள் அமைந்துள்ள ஏழு மதில் சுற்றுக்களும், ஏழு லோகத்தை குறிப்பதாக சொல் லப்படுகிறது. மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று- பூலோ கம், திரிவிக்ரம சோழன் திருச்சுற்று புவர்லோகம், அகலங்கனென்னும் கிளிச் சோழன் திருச்சுற்று சுவர் லோகம், திருமங்கை மன் னன் திருச்சுற்று -மகர்லோகம், குலசேகரன் திருச்சுற்று -ஜநோ லோகம், ராஜமகே ந்திர சோழன் திருச்சுற்று -தபோ லோகம், தர்மவர்ம சோழன் திருச்சுற்று -சத்யலோகம்.

    தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ராஜகோபுரம்

    பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தல மாகவும், சோழநாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும் திகழ்கிறது. பரந்து விரிந்த இக் கோயில் வளாகத் தில் அமைந்துள்ள ஏழு சுற்று மதில்களின் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது. இது 17 -ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதானாலும், 1987 -ம் ஆண்டு தான் முழுமை யாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழநாட்டு காவிரி ஆற்ற ங்கரையில் அமைந்து ள்ள முதல் திவ்யதேச தலம்.

    கட்டுமான பொருட்கள்

    ஸ்ரீரங்கம் கோவிலின் பிரமாண்டமான ராஜகோபு ரத்தை கட்டுவதற்கு 1.7 கோடி எண்ணிக்கையிலான செங்கற்கள், 20,000 டன் மணல், 1,000 டன் கருங்கல், 12 ஆயிரம் டன் சிமெண்ட், 130 டன் இரும்பு கம்பி கள், 8,000 டன் வர்ண பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராஜ கோபு ரத்தின் மொத்த எடை 1.28 லட்சம் டன் ஆகும்.

    சகல சவுபாக்கியம் தரும் கோவில்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ரெங்க நாதப்பெருமாள் புஜங்க சயனத்தில் தெற்கு நோக்கி ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார். உற்சவராக நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்க நாச்சியார், தீர்த்தம் சந்திர புஷ்கரணி, காவிரி கொள்ளிடம், கோவிலின் விமான மாக பிரண வாக்ருதி, தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது.

    சூரிய குலத்தைச் சேர்ந்த மனுகுமாரன் பிரம்மனை நோக்கித் தவம் புரிந்து திருமாலின் திருவாரா தன விக்ரகத்தை கேட்டு வாங்கி அயோத்தியில் வைத்து வழிபட்டு வந்தார். இந்த விக்ரகத்தை ஸ்ரீராம பிரானும் வழிபட்டார். ஸ்ரீராமன், ராவணனை வென்று சீதா பிராட்டியை மீட்டு அயோத்திக்கு வந்த போது தம் முன்னோர்கள் வழிபட்டு வந்த திருமாலின் திருவாராதன விக்ரகத்தை, அன்பு காணிக்கையாக விபீஷணனுக்கு வழங்கினார். விபீஷணன் அதை எடுத்து இலங்கைக்குக் கொண்டு செல்லும் போது காவிரி, கொள்ளிடம் நதிக்கரையில் வைத்து இளைப்பாறினார்.

    மறுபடியும் அந்த விக்ரகத்தை எடுக்க முயன்றபோது விக்ரகத்தை எடுக்க முடிய வில்லை. தான் இனிமேல் இங்கு தான் நிரந்தரமாக இருக்கப் போவதாக பெருமாளே விபீ ஷணனிடம் கூறியதால் விபீஷணனும் மனம் உவந்து அந்த விக்ரகப் பெருமாளை வணங்கி விட்டு இலங்கைக்கு சென்றான். பெருமாளும் விபீஷணனுக்கு அருளும் வகையில் இலங்கையை நோக்கித் தன் பார்வை வரும்படி சயனித்துக் கொண்டார்.சோழநாட்டு அரசனான தர்மவர்மன் பெருமாளுக்கு முதலில் சிறு கோவிலைக் கட்டினார். இதற்கு பிறகு சேர, பாண்டிய அரசர்களும் இக்கோவிலைக் கட்டி முடிக்க அரும்பாடுபட்டார்கள்.

    அது நாளடைவில் மிகப்பெரிய கோவிலாக உருவெடுத்து இன்றைக்கு வைண வத் தலங்களில் முதலாவது கோவிலாக, புகழ்பெற்ற 108 வைணவ தலங்களில் முன்னிலையில் நிற்கிறது.பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பா ணாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். கம்பனது ராமாயணம் அரங்கேறியதும் இங்கே தான்.

    ஸ்ரீராமானுஜர் இறுதியில் திருநாடு அடைந்தாலும் அவரது திருமேனியை வசந்த மண்டபத்தில் - கெடாதவாறு மூலிகைச் சாந்து பூசி இன்று வரை வைத்திருக்கிறார்கள். இத்தலத்திலுள்ள மூலவரை - வெள்ளியன்று அதிகாலை விஸ்வரூப தரிசனம் கண்டு வந்தால் திருமணமாகாதவர்களுக்கு சுக்கிர தோஷம் விலகி திருமணம் நடக்கும். பணக்கஷ்டம் உள்ளவர்கள் அந்த சங்கடத்திலிருந்து மீண்டு விடுவார்கள். வெளி நாடு சென்று முன்னுக்குவர வேண்டும் என்று துடிப்பவர்கள், வேலை தேடுபவர்கள், சொந்தத் தொழில் செய்ய ஆசைப்படுபவர்கள் அனைவருக்கும் யோகத்தையும் சவுபாக்கியத்தையும் தரக் கூடிய கோவில் என்பது மிகப் பெரிய சிறப்பு.

    வளரும் நெற்குதிர்கள்

    20 அடி விட்டமும் 30 அடி உயரமும் கொண்ட 5 பிரம்மாண்ட நெற்குதிர்கள் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு அருகே அமைந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த நெல் சேமிப்பு கிடங்கிகள் வட்டவடிவமாக அமைந்தவை. மொத்தமாக 1500 டன் அளவுக்கு இந்த கிடங்கியில் நெல் சேமிக்க முடியுமாம். எந்தக் காலத்திலும் இந்த குதிர்களில் நெல் இல்லாமல் போனதே இல்லை என்ற பெருமையைக் கொண்டதாம் இவை. அதுபோல எத்தனை நெல் கொட்டினாலும் விரிவடைந்து ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டது என்றும் அதிசயமாக இந்தக் குதிர்களைச் சொல்கிறார்கள்.

    • சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
    • பேளூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சித்திரை 3ஆம் தேதி முதல் பத்தாம் தேதி வரை சூரியனின் கதிர்கள் தான்தோன்றீஸ்வரர் மீது விழுவது சிறப்பாகக் கூறப்படுகிறது. மா, பலா, இலுப்பை இந்த மூன்று மரமும் சேர்ந்து ஒரே மரமாக காட்சியளிக்கிறது. கோவிலின் தலவிருட்சமான இந்த மரம் கோவிலுக்கு மற்றொரு சிறப்பு.

    தல வரலாறு

    பல வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில், மிளகு வியாபாரம் செய்து கொண்டிருந்த மாணிக்கம் செட்டியார், அவரது மிளகு வியாபாரத்திற்காக தினமும் மிளகு மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று சந்தையில் விற்று வருவார். ஒரு நாள் கலைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓய்வு எடுத்தார். அப்போது சமையல் செய்ய சுண்டைக் காய்களை ஒரு கல்லில் நறுக்கும் போது ஒரு குரலானது அவருக்கு கேட்டது. 'எனக்கு கல்லடி பட்டு தலை வலிக்கிறது, உன் மிளகை அரைத்து பற்று போடு' என்றபடி குரல் ஒலித்தது.

    மனிதர்களே இல்லாத இடத்தில் குரல் மட்டும் வருவதை கேட்டு பயந்த அந்த வியாபாரி, பயத்தில் 'என்னிடம் மிளகு இல்லை உளுந்து தான் இருக்கின்றது' என்று கூறிவிட்டு ஊருக்கு திரும்பி விட்டார். வீட்டிற்கு வந்ததும் மிளகு மூட்டைகளை திறந்து பார்த்தால் அதிர்ச்சி அடைந்தார். மிளகு முழுவதும் உளுந்தாக மாறி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அந்த வியாபாரி மீண்டும் அந்தக் குரல் ஒலித்த இடத்திற்கே சென்று இறைவனை வேண்டினார். அப்பொழுது மறுபடியும் அந்த குரல் ஒலித்தது.

    'நீ சுண்டக்காய் நறுக்கிய இடத்திலிருந்து மண்ணை எடுத்து உளுந்தின் மீது தூவு' என்று கூறியது அந்த குரல். இதன் படி செய்ய உளுந்து மீண்டும் மிளகாக மாறியது. இதன் பிறகு தான் அந்த வியாபாரி, தான் சுண்டக்காய் நறுக்கிய கல்லை உற்று நோக்கினார். அது ஒரு சுயம்பு வடிவமான லிங்கம் என்று தெரியவந்தது. இதன் காரணமாகத் தான் அந்த மிளகு செட்டியார் இந்த கோயிலை கட்டியதாக ஒரு வரலாறு கூறுகிறது. இன்றளவும் அந்த மலையில் உள்ள மண் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்தக் கோவிலில் கல்யாண விநாயகர் என்று அழைக்கப்படும் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என இரட்டை விநாயகர்கள் உள்ளனர். சங்கட சதுர்த்தி அன்று இந்த இரட்டை விநாயகரை அருகம்புல் அல்லது வெள்ளெருக்கு மாலை சூட்டி வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த விநாயகர் சன்னதி முன்பாகவே திருமணங்கள் நடைபெறும். இந்த கோவிலில் வசிஷ்டரும், அருந்ததியும் நேரடியாக இருந்து ஆசிர்வாதம் செய்வதால், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு இங்கு கிடையாது.

    தரிசன நேரம்: காலை 6 மணி முதல் -1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் – 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

    சேலத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், வாழப்பாடியில் இருந்த இருந்து வடக்கு பகுதியில் 6 கிலோமீட்டர் தூரத்திலும், பேளூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    ×