search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • இன்று தமிழர்களின் மனதில் ஐயப்பன் இரண்டற கலந்து நீக்கமற நிறைந்துள்ளார்.
    • பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது.

    ஐயப்பனை கண்கண்ட தெய்வமாக நம்பி வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த தெய்வத்தைப் பற்றி 80 ஆண்டுகளுக்கு முன் கேரள மக்களுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.

    ஐயப்பன் புகழை பாமர மக்களும் உணரும்படி செய்த பெருமை "ஐயப்பன்" நாடகம் நடத்திய நவாப் டி.எஸ்.ராஜமாணிக்கத்தையே சேரும். இந்நாடகம் மூலம் மக்களை அவர் பக்தி பரவசத்தில் மூழ்கச் செய்தார். இவர் 1400 தடவை ஐயப்பன் நாடகங்கள் நடத்தியிருக்கிறார்.

    1942 முதல் 1946 வரை நவாபின் நாடகக் கம்பெனியாக மதுரை தேவி பால வினோத சங்கீத சபையினர் கேரளாவில் நாடகங்கள் நடத்தி வந்தனர். அப்போது கார்த்திகை பிறந்து விட்டால் 'சாமியே சரணம் ஐயப்பா' கோஷம் காதைத் துளைக்கும். செண்டை வாத்தியங்களில் ஒலி காது செவிடுபடும். இது என்னக் கத்தல், இது என்ன வாத்தியம் என்றே நவாபும் அவரைச் சேர்ந்தவர்களும் நினைத்து வந்தார்களாம்.

    நாடகக் கம்பெனி கோட்டயத்தில் முகாமிட்டபோது ஐயப்ப சாமி என்ற பெரியவர் நவாபிடம் வந்து 'ஐயா! நான் நாகர்கோவிலில் இருந்து வருகின்றேன். நீங்கள் நடத்தும் நாடகம் ஒவ்வொன்றும் தெய்வ காவியமாக இருக்கிறது. உங்களுக்கு தெய்வ ஆதரவு இருக்கிறது. ஆகவே கலியுக வரதனாக விளங்கும் ஐயப்பன் சரித்திரத்தையும், நாடகமாக நடத்த வேண்டும். இது மலையாளத்தில் நடந்த உண்மைக் கதை என்றார்.

    நவாப் - "புதிய நாடகம் என்றால் அதிக பொருட் செலவாகும். மேலும் இது மலையாளக் கதை. தமிழ்நாட்டில் எடுபடுமா என்பதையும் பார்க்க வேண்டும்". என்று கூறி விட்டார்.

    அப்பெரியவர், "நீங்கள் நாடகம் நடத்தாவிட்டால் பரவாயில்லை. நான் ஐயப்பன் கதையை கதாகாலட்சேபமாக நடத்தி வருகிறேன். அதை நீங்கள் வந்து கேட்க வேண்டும்" என்று வற்புறுத்தினார்.

    நவாப் தாங்கள் முகாமிட்டிருந்த கம்பெனி வீட்டிலேயே அவர் கதாகாலட்சேபத்திற்கு ஏற்பாடு செய்தார். கதையைக் கேட்டு ராஜமாணிக்கம் உருகி விட்டார். பந்தள அரசனின் மகனாக வளர்ந்து பனிரெண்டே ஆண்டுகள் மானிட உருவில் வாழ்ந்து பல அற்புதங்களைச் செய்து சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பன் சரிதம் எல்லோருடைய உள்ளத்தையும் உலுக்கி விட்டது. ராஜமாணிக்கம் அன்று முதல் ஐயப்பனுக்கு அடிமையானார்.

    என்ன ஆனாலும் இதை நாடகமாகவே நடத்தியாக வேண்டும். கதை எங்கு நடந்திருந்தாலும் அதிலுள்ள நீதி மனித சமுதாயத்திற்கே இன்றியமையாதது. இப்ேபர்ப்பட்ட ஒரு அருள் தெய்வத்தின் கதையை நடத்தி உலக மக்கள் அறிய செய்கிறேன் என்று ராஜமாணிக்கம் உறுதி பூண்டார்.

    1944-ம் ஆண்டு ஆலப்புழையில் ஐயப்பன் நாடகம் அரங்கேற்றப்பட்டது. மக்கள் ஏராளமாக வந்து நாடகத்தைப் பார்த்து பரவசமானார்கள். சபரிமலையே பார்த்தறியாத ஏராளமான பேர் நாடகத்தைப் பார்த்தபின் மலைக்குச் சென்று ஐயப்பனை நேரில் தரிசித்தனர்.

    தமிழ்நாட்டில் முதல் முறையாக ஐயப்பன் நாடகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது. மதுரையில் இந்த நாடகம் நடந்த போது அந்த நகரை இந்நாடகம் ஒரு கலக்கு கலக்கி விட்டது.

    இப்படித்தான் தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தி மக்களிடம் மெல்ல, மெல்ல பரவியது. இன்று தமிழர்களின் மனதில் ஐயப்பன் இரண்டற கலந்து நீக்கமற நிறைந்துள்ளார்.

    சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத்தலமாகும். மகிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது.

    கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் கோவில் காணப்படுகிறது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.

    நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் பழமையான ஆலயங்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் சிதிலம் அடைந்த பகுதிகளை காணலாம்.

    ஆண்டு தோறும் சுமார் 5 கோடி முதல் 7 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.

    சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உச்சரித்து, அதாவது ஐயப்பன் திருவடிகளை சரண் அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

    10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பல்வேறு காரணங்களால் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும், மகர விளக்கன்றும் (ஜனவரி 14 "மகா சங்கராந்தி") மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

    பரசுராமர் செய்த பிரதிஷ்டை

    சபரிமலையில் உள்ள ஐயப்பனின் சிலையை பிரதிஷ்டை செய்தவர் பரசுராமர் என்றொரு கருத்து உண்டு. ஆனால் பரசுராமரின் காலத்தை திரேதா யுகம் என்று இதிகாசம் மூலம் அறிகின்றோம். ஒரு வேளை சாஸ்தாவின் அம்சமாக கேரளத்தில் அவதரித்த ஸ்ரீமணிகண்டன், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதும் ஆன்றோர்களின் கருத்து.

    பாண்டிய வம்சத்து பந்தள மன்னர்கள்

    பாண்டிய நாட்டு மன்னர் ஒருவரை அவரது மந்திரி சூழ்ச்சி செய்து கொல்ல முயன்றார். அவர் மதுரையில் இருந்து தப்பிச் சென்று கேரளத்தை அடைந்தார். பல ஆண்டுகளுக்கு பின் பந்தளத்தில் ஒரு இடம் வாங்கி, ஒரு அரண்மனையை அமைத்தார். கி.பி.903- ல் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது. பின்னால் வந்த மற்ற மன்னர்கள், அரண்மனையை மட்டுமின்றி தேசத்தையும் விரிவுப்படுத்தினர்.

    • மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது.
    • சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது.

    இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.

    பிரமிக்க வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்கம் வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடை நாயகியாக அம்மன் கோவில் கொண்டுள்ளார். சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணா மூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்களும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மனும் உள்ளார்.

    நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.

    இக்கோவில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.

    வழக்கமாக, சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல், மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல், மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை.

    தொல்லியல் துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

    சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.

    இரண்டு நந்தி :

    இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது. கோவில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, வணங்கியுள்ளார்.

    பின், தவறுக்கு பிராயசித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

    • கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்

    கால பைரவாஷ்டமியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் உள்ள மூலவர் பைரவருக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு இரவு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதே போல் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு மாலையில் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

    • கருவறையில் உள்ள மூலவர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    • சிவலிங்கத்தின் மீது, அம்பு பட்ட தடம் உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிசயமங்கை என்ற ஊரில் அமைந்துள்ளது, விஜயநாதேஸ்வரர் கோவில். தேவாரப்பாடல் பெற்ற இந்த ஆலயம் காவிரியின் வடகரைத் தலங்களில் 47-வது தலமாகும். இந்த ஆலயத்தின் மூலவராக விஜயநாதேஸ்வரரும், அம்பாளாக மங்களாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். அர்ச்சுனன் வழிபட்ட தலம் என்பதால் இந்த ஆலயம் 'விஜயநாதேஸ்வரர் கோவில்' என்று அழைக்கப்படுகிறது. அர்ச்சுனனுக்கு 'விஜயன்' என்ற பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    மகாபாரத போர் தொடங்குவதற்கு முன்பாக அர்ச்சுனனை சந்தித்த வேதவியாசர், 'சிவனை நினைத்து தவம் இருந்து பாசுபத அஸ்திரம் பெற்றால், கவுரவர்களை எளிதாக வெல்லலாம்' என்று கூறினார்.

    இதையடுத்து அர்ச்சுனன் வனத்திற்குள் சென்று, சிவனை நினைத்து தவம் இருந்தான். அவனது தவத்தை கலைப்பதற்காக, முகாசுரன் என்ற அரக்கனை துரியோதனன் அனுப்பினான். பன்றி வடிவில் வந்த அந்த அசுரன், அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முயற்சித்தான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன், அந்த பன்றியை தன்னுடைய அம்பால் வீழ்த்தினான். அதே நேரம் இன்னொரு அம்பும் அந்த பன்றியை துளைத்திருந்தது. அர்ச்சுனனை நோக்கி வந்த வேடன் ஒருவன், தான்தான் அந்த பன்றியை வீழ்த்தியதாக கூறினான். அதில் வேடனுக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. கோபம் அதிகமாக தன் கையில் இருந்த அம்பைக் கொண்டு அந்த வேடனை, அர்ச்சுனன் தாக்கினான். அப்போது வேடனாக வந்த சிவபெருமான் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டி, அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை வழங்கினார்.

    அப்போது ஈசனின் அருகில் நின்ற அம்பாள், "ஐயனே.. ஆயுதங்களில் உயர்ந்த பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதி பெற்றவனா?" என்று கேள்வி எழுப்பினாள். அதற்கு சிவன், "அர்ச்சுனன் 'மஸ்ய ரேகை' (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்" என பதிலளித்தார். அப்போது அர்ச்சுனனும், அம்பாளின் முன்பாக பணிவாக குனிந்து நின்று தன்னுடைய கையில் ஓடும் அந்த அதிர்ஷ்ட ரேகையை காண்பித்தான். பின்னர் சிவபெருமானையும், அம்பாளையும் அங்கேயே எழுந்தருளும்படி பணித்தான். ஈசனும் ஒப்புக்கொண்டார். அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்த ஈசன், 'விஜயநாதேஸ்வரர்' என்றும், இந்த திருத்தலம் 'திருவிஜயமங்கை' என்றும் பெயர் பெற்றது.

    சோழர் காலத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த ஆலயத்தின் மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும், நுழைவு கோபுரம் சிறியதாகவும் அமைந்துள்ளது. இத்தல அம்பாள் நான்கு கரங்களுடன் காட்சி தரு கிறாள். முன் இரண்டு கரங்களில் அபய, வரத முத்திரையும், பின் இரண்டு கரங்களில் அட்சரமாலை, நீலோத்பவ மலர் தாங்கியிருக்கிறாள். கோவிலுக்கு எதிரில் வெளியே அர்ஜுன தீர்த்தம் உள்ளது. பிரகாரத்தில் அனுக்கை விநாயகர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியன், நால்வர் திருமேனிகள் உள்ளன. சிவன் சன்னிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.

    கருவறையில் உள்ள மூலவர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் மீது, அம்பு பட்ட தடம் உள்ளது. ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். திருமணத்தடை உள்ளவர்களும் வழிபாடு செய்யலாம். இந்த ஆலயத்தில் திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும்.

    அமைவிடம்

    கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் பயணித்தால் திருவிஜயமங்கை திருத்தலத்தில் கொள்ளிட ஆற்றின் கரையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்புறம்பியத்தில் இருந்து 8 கிேலாமீட்டர் தூரத்திலும் ஆலயத்தை அடையலாம்.

    • குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோவில் பாலஸ்தாபன பூஜை நடந்தது.
    • இதன் ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் ஏடு.ராதா கிருஷ்ணன் தலைமையில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பழமையும் பெருமையும் வாய்ந்த பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பாக நடத்தப் படும் பாலஸ்தாபன பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி காலை 8 மணிக்கு விநாயகர்பூஜை, புண்யா ஹவாசனம்,வாஸ்து சாந்தி செய்யப்பட்டது.

    காலை 11.45 மணிக்கு விமானம், மூலஸ்தான சுவாமிகள், பரிவார மூர்த்திகள், கொடிமரம் உள்ளிட்ட அனைத்திற்கும் கலை இறக்கும் நிகழ்வு நடந்தது. இந்த பூஜையினை முத்துராமன் பட்டர், கார்த்திக் பட்டர் ஆகியோர் செய்தனர். இதன் ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் ஏடு.ராதா கிருஷ்ணன் தலைமையில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

    • இங்கு வில்வம் தல விருட்சமாகும்.
    • சனி தோஷம், இராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.

    மூலவர் - சேவுகப் பெருமாள்

    தல விருட்சம் - வில்வம்

    தீர்த்தம் - புஷ்கரணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர்

    பழமை - 500 வருடங்களுக்கு முன்

    பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து ஒன்றுக்குள் புகுந்து மறைந்தது. அதனை பிடிக்க வேடுவர் முயன்றபோது, புதருக்குள் ஒரு அய்யனார் சிலை இருந்தது. வியப்படைந்த வேடுவன், "சேவுகபெருமாளே. மானைத் தேடிப் போன நான் இன்று முதல் உனக்கு சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றேன்" என்றதுடன், "பெருமாளே" என்று சொல்லியும் வணங்கினான். அன்று முதல் இவர்,"சேவுகப்பெருமாள் அய்யனார்" என்ற பெயரில் காவல்தெய்வமாக அருளுகிறார்.

    சாஸ்தா என்றும் ஐயப்பன் என்றும் போற்றப்படும் தெய்வங்களின் அம்சமான அய்யனார் காவல் தெய்வமாகப் பல தலங்களில் அருள்பாலிக்கிறார். இத்தல சேவுகப் பெருமாள் அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிவனுக்குரிய வில்வ இலையைக் கொண்டு இங்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் பெருமாளின் திருநாமம் பெற்றுள்ளார். சிவவிஷ்ணுவின் கூட்டணியில் பிறந்ததால், இத்தகைய சிறப்பு இவருக்கு தரப்பட்டுள்ளது.

    தேவர்களின் அரசன் இந்திரன் சாஸ்தாவை வளர்த்து வந்தார். அவரால் வளர்க்க இயலாத சூழ்நிலையில் பூலோகத்தில் உள்ள வேடுவ இனத்தவரிடம் ஒப்படைத்து வளர்க்கக் கூறினார். அவர்கள் அவரை அய்யனாராக பாவித்து காட்டில் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டி வணங்கினர். காலப்போக்கில் காடுகள் குறைந்து ஊர்கள் பெருகவே ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக இருக்க வேண்டினர். இவ்வாறு, சாஸ்தாவின் அம்சமான அய்யனார் வழிபாடு உருவாயிற்று.

    அய்யனாரைப் போல அய்யப்பனும் இராகு, மாந்தி போன்ற கோள்களின் தீமையை நீக்கும் கடவுளாகத் திகழ்கிறார். ஐ என்ற முதல் நிலையோடு அப்பன் என்ற தந்தையை உணர்த்தும் சொல் இணைந்து அய்யப்பன் என்ற சொல் விளங்குகிறது. அய்யனார், அய்யப்பன் இரண்டும் ஒருவரையே குறிப்பிடக்ககூடிய சொற்கள். அய்யனார் என்பதில் அன், ஆர் என்பன சேர்ந்திருக்க அய்யப்பனில் அப்பன் சேர்ந்திருக்கிறது. சொல்லில் சேரும் சேர்க்கைகள் தான் வேறாகின்றன. உணர்த்தும் பொருளும் சொற்களின் பொருளும் ஒன்றே. சேரநாட்டு அய்யப்பனும் காடுகளுக்கு இடையே மேடான இடத்தில் தான் வீற்றிருக்கிறான். சபரிமலை அய்யப்பன் வழிபாடும் தமிழகத்தின் அய்யனார் வழிபாடும் ஒன்றுபோல விளங்குகின்றன. இரண்டும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி பெற்று இன்று புகழ் பெற்று விளங்குகின்றன.

    முழுமுதற்கடவுள் மூவருள்ளும் தலைமை பெற்றவர்கள் அரியும் அரனும். இருவரும் ஈன்ற மகனே அரிகரன். அதனால் தான் இந்தப் பகுதியில் (சிவகங்கை மாவட்டத்தில்) சிவன்ராத்திரி அன்று அய்யனார் கோவில்களில் பெரும் சிறப்புடன் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அய்யப்பன் வரலாறு சேரநாட்டுக்குத் தக்கவாறு மன்னன் மகனாகப் பந்தளநாட்டு இளவரசனாக ஐயப்பன் விளங்குவதை எடுத்துரைக்கிறது. அவன் வாழ்வில் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்து அவன் மிகச் சிறந்த தலைவனாக காட்சி தருகிறான். சபரிமலை அய்யப்பன் திருவுருவத்திற்கும் அய்யனார் திருவுருவத்திற்கும் பெரும் வேறுபாடு இல்லை. அய்யனைப் போல அய்யனாரும் வீராசனமாகவே வீற்றிருக்கிறார். இரண்டு கைகளை அபயவரதமாக அல்ல செண்டாயுதத்தைப் பற்றிக் கொண்டு அய்யனார் வீற்றிருப்பார். யோகப்பட்டை அணிந்திருப்பார். தலையில் மகுடம் உண்டு. அய்யானாருக்கும் அய்யப்பனுக்கும் உருவ அமைப்பில் பெரும் வேற்றுமை இல்லை.

    இத்திருகோவில் அமைந்த இடம் வில்வவனமானபடியால், இங்கு வில்வம் தல விருட்சமாகும். பரிவாரத் தேவதைகள் உட்பட இங்குள்ள அனைத்துத் தெய்வங்களும் வில்வ இலைகளினாலேயே அர்ச்சிக்கப் பெறுகின்றன.

    இத்திருக்கோவிலின் தல தீர்த்தம் (புஷ்கரணி) விரிசிலை ஆற்று நீரும், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீரும் ஆகும். பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை உடனாய முருகன், பரிவார தேவதைகள், கருப்பண்ணசாமி, கருப்பர், சப்தகன்னியர், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்து அய்யனார் வீராசனத்தில், தலையில் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார். அய்யனாருக்கு வலதுபுறம் காவல் தெய்வமான பிடாரியம்மன், இடதுபுறம் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் பூவைவல்லி உடனாய தான்தோன்றீஸ்வரர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.

    திருவிழா:

    வைகாசியில் தேர்த்திருவிழா. தேர்நிலைக்கு வரும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் நேர்த்திக்கடனாக தேங்காய்களை அருகிலுள்ள சுவரில் அடித்து உடைப்பர்.

    கோரிக்கைகள்:

    கேட்டதை கொடுப்பதில் வல்லவரான அய்யனார், ஊரைக்காப்பவராகவும், நெல் விளைச்சலைப் பெருக்குபவராகவும், கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் போற்றப் பெறுகிறார். சனி தோஷம், இராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.

    நேர்த்திக்கடன்:

    பிரார்த்தனை நிறைவேறியதும் கன்றுகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோவில்,

    சிங்கம்புணரி,

    திருப்புத்தூர் தாலுகா,

    சிவகங்கை மாவட்டம்.

    • அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார்.
    • அம்மன் 5 முகங்களைக் கொண்டவள்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கடற்கரையோரமாக அமைந்துள்ள இந்த கோவில் தென்னந்தோப்புகள், மரங்கள் நிறைந்த தோட்டங்கள், வயல்வெளிகளுக்கு மத்தியில் இயற்கை எழில் சூழ்ந்து, அழகுற காட்சி அளிக்கிறது. இந்த ஊரின் பெயரைக் குறித்த விளக்கம் கோவிலுடன் தொடர்புடையதாக உள்ளது. மணல்+தைக்காடு=மண்டைக்காடு ஆனது என்றும் மந்தைகள்+ காடு= மந்தைக்காடு என்பது மருவி மண்டைக்காடு ஆனது என்றும் கூறப்படுகிறது.

    புற்று வடிவில் அம்மன்

    இந்த கோவிலில் பகவதி அம்மன் வடக்கு முகமாக புற்று வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார். சுமார் 15 அடி உயரம் கொண்ட பெரிய மண் புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது. அம்மன் 5 முகங்களைக் கொண்டவள். புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் அம்மனுக்கு முன்பாக, வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறார். மேலும் கோவில் வளாகத்தில் பிரசன்ன விநாயகர் சன்னதியும், பைரவர், கடல் நாகர் (கடலில் இருந்து கிடைத்த கடல் நாகர் சிலை) சன்னதிகளும் உள்ளன.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் எந்த ஆண்டு உருவானது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. மண்டைக்காடு காடாக இருந்த போது ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி பரவியதைக் கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில் ஸ்ரீசக்கரம் வரைந்து தியானம் செய்தார். ஒரு நாள் அவர் மாயமாய் மறைந்து விட்டார்.

    சித்தர் ஸ்ரீசக்கரம் வரைந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்டைக்காடு ஊர் சிறுவர்கள், கால்நடைகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள். அப்படி ஒருநாள் கால்நடைகளை அழைத்துச் சென்ற சிறுவர்கள் பனங்காயை தூக்கிப்போட்டு கம்பால் அடித்து விளையாடியுள்ளனர். அப்படி அடித்த பனங்காய் ஒன்று அந்த பகுதியில் இருந்த புற்று மீது விழுந்தது. அதனால் புற்று உடைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், ஊர் மக்களிடம் கூறினர். புற்று இருந்த இடத்துக்கு ஓடி வந்த ஊர் மக்கள் அப்படியே திகைத்து நின்றனர். அப்போது ஒருவர் சாமி ஆடி குறி சொல்லியிருக்கிறார். இந்த புற்று, தேவி பத்திரகாளி என்றும், பூஜைகள் செய்து வழிபட்டால் வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் புற்றின் உடைந்த பகுதியில் சந்தனம் பூசினால் ரத்தம் வருவது நிற்கும் என்றும் அந்த நபர் கூறினார். அதன்படி சந்தனம் அரைத்து புற்றின் மீது பூசியிருக்கிறார்கள். உடனே ரத்தம் வருவது நின்றது என்றும் கூறப்படுகிறது.

    கேரள பக்தர்கள்

    இதேபோல் கேரள மாநிலம் கொல்லம் நகரில் இருந்து பெண் யோகினி மண்டைக்காடு வந்ததாகவும், அந்தப் பெண் கடற்கரையில் தவம் இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததாகவும், அதுவே பிற்காலத்தில் பகவதி தேவியாக வழிபாட்டுக்குரியதானதாகவும் கூறப்படுகிறது. எனவே யோகினியின் பக்தர்கள் இப்போதும் கொல்லத்தில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு வருகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

    கேரளத்தில் இருந்து குமரி மாவட்டம் பிரிந்த காலகட்டத்தில் தமிழக அரசால் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கொடிமரமும் நடப்பட்டது. தற்போது தாமிரத்தகடு பொதியப்பட்ட நிரந்தர கொடிமரம் உள்ளது. இந்த கோவிலின் கருவறை, நமஸ்கார மண்டபம் அல்லது பஜனை மண்டபம் அனைத்தும் கேரள பாணியில் ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரையால் ஆனது. கருவறையில் புற்று வடிவில் காட்சி தரும் அம்மனுக்கு 1909-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 30 முதல் 40 துலாம் அரைத்த சந்தனம் பூசப்படுகிறது. வடக்குத் திருமுகம் வெள்ளியிலானது. வெள்ளி மகுடமும் உண்டு. அர்ச்சனா படிமமும், விழாப்படிமும் கருவறையில் உள்ளன.

    மாசி கொடை விழா

    இந்த கோவிலின் நேர்ச்சைகளாக வில்லுப்பாட்டு, மரம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கை, கால் உறுப்பு காணிக்கை, வெடி வழிபாடு, முத்தப்பம், மண்டையப்பம், பொங்கல், கைவிளக்கு, பூமாலை, குத்தியோட்டம், கறுப்பு வளையல், விளைச்சலில் முதல் பொருள் ஆகியன உள்ளன. வில்லிசைக்கலை என்ற கிராமியக் கலைநிகழ்ச்சி பாடுமாறு நேர்ந்து கொள்ளுதல் இந்த கோவிலின் சிறப்பு. காணிக்கை கொடுப்பவரின் ஊரில் இருந்து மண்டைக்காடு வரையுள்ள இடங்களை பாடுவது இதன் சிறப்பு.

    முள்முருங்கை போன்ற மரங்களில் செய்யப்பட்ட சாயம் பூசப்பட்ட கை- கால் உறுப்புகளை வாங்கி கோவில் தட்டுப்பந்தலில் எறிவது மற்றொரு நேர்ச்சை. 27 நெய் தீபம் ஏற்றி அம்மன் சன்னதியை வலம் வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தலைநோய் தீர அம்மனுக்கு மண்டையப்பமும், அம்மை நோய் வராமலோ, வந்தால் குணமாகவும் முத்தப்பமும் நேர்ச்சையாக படைத்து வழிபடுகின்றனர். இவை தவிர வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் முதலியவையும் நைவேத்தியமாக கொடுக்கப்படுகிறது. எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதும் இந்த கோவிலின் கூடுதல் சிறப்பாகும்.

    கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் நடைபெறும் கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த கோவிலில் திதி அல்லது நட்சத்திரம் அடிப்படையில் அல்லாமல் கிழமையை அடிப்படையாகக் கொண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். மாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமைகளில் விழா நிறைவடையும் வகையில் 10 தினங்களுக்கு முன் கொடி ஏற்றுவிழா தொடங்கும். 6-ம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அன்று வலிய படுக்கை பூஜை என்ற சிறப்பு பூஜை நள்ளிரவு 12 மணிக்கு நடக்கும்.

    இந்த பூஜையில் திரளி கொழுக்கட்டை, அவல், பொரி, முந்திரி, கற்கண்டு, 13 வகை வாழைப்பழங்கள், இளநீர், பிற பழவகைகள் ஆகியவை அம்மனுக்கு முன் குவியலாக படைக்கப்பட்டு அவற்றின் மேல் தீப்பந்தங்கள் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். 9-ம் நாள் திருவிழா அன்று பெரிய சக்கர தீவட்டி நடைபெறும். 10-ம் நாள் திருவிழாவன்று ஒடுக்கு பூஜை நடைபெறும். இதில் சாஸ்தா கோவிலில் தயாரிக்கப்பட்ட பருப்பு உள்பட 11 வகை கறி, குழம்புகள், சாதம் ஆகியவற்றை தலையில் சுமந்து வந்து கோவிலின் கருவறையில் வைப்பார்கள். நள்ளிரவு 1 மணிக்கு பூஜை நடைபெறும். இவற்றை தயாரிக்கும் முறை, கொண்டு வருதல் ஆகியவற்றின் மரபுவழி முறை இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

    பெண்களின் சபரிமலை

    சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் விரதமிருந்து, இருமுடிகட்டி செல்வதைப்போல, மாசிக்கொடை விழாவுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களால் முடிந்த அளவு விரதமிருந்து இருமுடிகட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வருவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்வதி நட்சத்திரம் அன்று நடைபெறும் பொங்கல் விழாவும் இந்த கோவிலின் சிறப்பு நிகழ்வாகும். இதில் கோவிலின் முன்பு 4 திசைகளிலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    பங்குனி மாதத்தில் பரணி நட்சத்திர கொடை விழா அன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்றும் வலிய படுக்கை பூஜை நடைபெறும். திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த கோவிலில் பரணி நட்சத்திரம் தோறும் தங்கத்தேரில் அம்மன் பவனி வருவார். பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற ரூ.1,500 கட்டணம் செலுத்தி தங்கத்தேர் இழுக்க அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு கட்டணம் செலுத்துபவர்களுக்கு பிரசாதம், அர்ச்சனைத்தட்டு, சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும்.

    கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, மதியம் 12.30 மணிக்கு உச்சகால பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு அத்தாள பூஜை நடத்தி நடை சார்த்தப்படும்.

    • 17-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது
    • இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை4.30மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

    சபரிமலை அய்யப் பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும் பாலானவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை வழிபடுவது வழக்கம். இதனால் அன்று முதல் கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவிலின் நடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    அதன்படி வருகிற 17-ந்தேதி முதல் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனை யொட்டி பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கு அடைக் கப்படும் நடை மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது.

    • ஆயில்ய திருவிழா 14-ந் தேதி புணர்தம் நாளில் தொடங்குகிறது.
    • 16-ந்தேதி வரை 3 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும் என்றார்.

    கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு அருகே புகழ்பெற்ற மண்ணார சாலை நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முக்கிய வழிபாடு உருளி கவிழ்த்தலாகும். குழந்தையில்லா தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து நாகராஜாவையும் சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது.

    இதற்காக பல நாடுகளில் இருந்து சாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை வழிபாடுகளில் பங்கேற்பது இங்கு சிறப்பு வாய்ந்ததாகும். பண்டைய காலத்தில் ஐப்பசி மாத ஆயில்ய தினத்திற்கு முக்கியத்துவமோ, சிறப்போ இருந்ததில்லை. அதே சமயத்தில் இங்கு நாகர் ஆராதனை மையத்தில் புரட்டாசி மாதம் ஆயில்ய நட்சத்திர தினத்தில் தரிசனம் நடத்துவது என்பது திருவிதாங்கூர் மன்னர்களின் ஒரு விரதமாகவே கடை பிடிக்கப்பட்டு வந்தது.

    ஐப்பசி ஆயில்யம்

    ஒரு முறை வழக்கம் போல் கோவிலுக்கு வர மன்னரால் இயலாமல் போனது. அடுத்து ஐப்பசி மாத ஆயில்ய நாளில் வருகை தந்து வழிபாடு நடத்த தீர்மானித்தார். அந்த ஆயில்யத்திற்கான அனைத்து செலவுகளும் அரண்மனை சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கோவில் சொத்துக்களுக்கு வரி சலுகை வழங்கப்பட்டது. அதன்பிறகு தான் ஐப்பசி ஆயில்யம் மாபெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மன்னரும், குடும்பத்தினரும் பங்கேற்கும் அந்தஸ்து கொண்ட விழாவாக ஐப்பசி மாத ஆயில்யம் பிரபலமானது.

    புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் ஆயில்ய விழா இன்றும் கோலாகலமாக நடைபெறுகிறது. சிவராத்திரி சிவபெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த நாகராஜா கோவிலிலும் அந்த புண்ணிய தினத்தன்று முக்கிய விழாவாக

    கொண்டாடப்படுகிறது. அதன்படி பல கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. நாகராஜா பிரதிஷ்டை சிவாகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் அதன்படி நடைபெறுகிறது.

    சிறப்பு வழிபாடு

    ஆயுள் குறைவு, வம்ச நாசம், தீராவியாதி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் குறையை போக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    ஆரோக்கிய வாழ்வு பெற நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு ஆகியவையும் சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்களும், நீண்ட ஆயுள் பெற நெய், நினைத்த காரியம் கை கூடுவதற்கு பால், கதலிப்பழம், நிலவறை பாயாசமும், குழந்தை பாக்கியத்திற்கு மஞ்சள் பொடி, பால் பூஜை நடத்த தங்கத்திலான சிறிய உருளி வழங்குதல், மரங்களின் செழிப்புக்கு மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் போன்றவை படைக்கப்பட வேண்டும். நாக தோஷ பரிகாரம், சர்ப்ப பலி, மஞ்சள் பொடி காணிக்கை, பால் பழம் நிவேத்யம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் போன்றவை படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    பூஜை நேரம்

    மண்ணாரசாலை கோவிலில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 10 மணிக்கு உச்ச பூஜை, 12 மணிக்கு நடை அடைத்தல், மாலை 5.30 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வேண்டுதலுக்காக சுத்தமான தங்கத்திலும், வெள்ளியிலும் தயாரிக்கப்பட்ட நாகர் வடிவங்கள், நாகர் முட்டை, புற்று, ஆள் வடிவங்கள், விளக்குகள், மஞ்சள் பொடி, உப்பு, நல்ல மிளகு, கடுகு, கற்பூரம், பட்டுத்துணி ஆகிய அனைத்து பொருட்களும் கோவில் கவுண்ட்டர்களில் கிடைக்கும்.

    14-ந் தேதி திருவிழா

    நடப்பாண்டின் ஆயில்ய திருவிழா குறித்து மண்ணாரசாலை நாகராஜா கோவிலின் நம்பூதிரி எம்.கெ. பரமேஸ்வரன் கூறுகையில், ஆயில்ய திருவிழா வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) புணர்தம் நாளில் தொடங்குகிறது. 16-ந் தேதி வரை 3 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும் என்றார்.

    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • குருந்தன்கோடு ஊற்று விளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு ஊற்று விளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜை வழிபாடுகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து ரூ.1000 பணத்தை திருடிச் சென்று உள்ளனர்.

    இது குறித்து கோவில் நிர்வாகி ராமசாமி (வயது 62) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் முன்புறம் உள்ள சதுர வடிவ தெப்பம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது.
    • இத்தல இறைவன் வன்னி மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    மூலவர்: கொற்றவாளீஸ்வரர்

    அம்மன்: நெல்லை அம்பாள்

    தீர்த்தம்: மது புஷ்கர்ணி

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது, கோவிலூர் என்ற ஊர். இங்கு அமைந்துள்ள கொற்றவாளீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி பார்ப்போம்.

    இந்த ஆலயத்தை காளையார்கோவில் பகுதியை ஆட்சி செய்து வந்த வீரபாண்டியன் என்ற மன்னன் கட்டமைத்துள்ளான்.

    இத்தல இறைவன் வன்னி மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    காளீசர் அருளால் வீரபாண்டியன் பெற்றிருந்த கொற்றவாளை, இத்தல இறைவன் மறைத்து விளையாடியதால், அவருக்கு 'கொற்றவாளீஸ்வரர்' என்று பெயர் வந்தது.

    மன்னனுக்கு மீண்டும் கொற்றவாளை வழங்கிய ஈசன் என்பதால், இவருக்கு 'ராஜகட்க பரமேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.

    மதுப்பிரியன் என்ற முனிவரின் தவத்திற்கு அருள்பாலித்த காரணத்தால், இத்தல இறைவன் 'திரிபுவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    இக்கோவிலில் வீணை சரஸ்வதி, ஊர்த்துவ தாண்டவ நடராஜர், மீனாட்சி திருக்கல்யாண திருவுருவம், சர்வ அலங்கார சாரதாம்பிகை, ரிஷப வாகனத்தில் சிவ-பார்வதி, மயில் மீது சண்முகர் ஆகியோரது சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு பிரதோஷம், பவுர்ணமி மற்றும் சிவராத்திரி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    இந்த ஆலயத்தை புதுப்பித்து திருப்பணி செய்தவர், கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவியவரான முத்துராமலிங்க தேசிகர் ஆவார்.

    கோவில் முன்புறம் உள்ள சதுர வடிவ தெப்பம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. இதன் நடுவில் 16 தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் இருக்கிறது. தெப்பக்குளத்தைச் சுற்றி நடந்தால் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

    சிவகங்கையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும், பிள்ளையார்பட்டியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, கோவிலூர்.

    • இந்த திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.
    • தாயாரின் திருப்பெயர் பரிமள ரங்கநாயகி நாச்சியார் ஆகும்.

    இறைவன்: பரிமள ரங்கநாதர்

    இறைவி: பரிமள ரங்கநாயகி நாச்சியார்

    தீர்த்தம்: சந்திர புஷ்கரணி தீர்த்தம்

    மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

    கோவிலின் சிறப்புகள்:

    மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 26வது திருத்தலம். காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது. வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.

    பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். மயிலாடுதுறையில் கங்கையை விட காவிரி புனிதமான நதி. பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி ஆகும். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப் பெயர் பெற்றது.

    அம்பரீஷன் என்ற மன்னன் தன்னுடைய 100வது ஏகாதசி விரதத்தை இத்தலத்தில் முடிக்க விரும்பினான். மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால் தேவர்கள் இவன் 100வது விரதத்தை முடித்தால் தேவலோக பதவி பெற்று விடுவான் என்று பயந்து துர்வாசரிடம் முறையிட அவரும் விரதத்தை தடுத்துவிடுவதாக கூறி இங்கு வருகிறார்.

    ஆனால் மன்னன் ஏகாதசி விரதத்தை முடித்து விடுகிறான். ஏகாதசி விரதம் முடித்து விட்டாலும் துவாதசி நேரத்துக்குள் உணவருந்தினதால்தான் முழு பயன் கிடைக்கும். துவாதசி நேரம் துவங்கியதும் மன்னன் உணவருந்த தயார் ஆனான். அப்போது அங்கு வந்த துர்வாசரை அவரது உள்நோக்கம் அறியாமல் அவரையும் தன்னுடன் உணவருந்த அழைத்தான். அவரும் நதியில் நீராடி வந்து விடுகிறேன், பின்பு உணவருந்தலாம் என்று கூறி நீராட செல்கிறார்.

    தாமதமாக சென்றால் மன்னன் விரதம் முடிக்க முடியாது என்று நினைத்து தாமதம் செய்கிறான். மன்னன் தான் மட்டும் விரதம் முடித்தால் சாபம் இடுவார் என்று கலங்கி வேதியர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் ஆலோசனை படி பெருமாளை வேண்டி உள்ளங்கையில் முழு அளவு தீர்த்தம் மூன்று முறை அருந்தி விரதத்தை முடித்தான்.. இதை உணர்ந்த துர்வாசர் கோபம் அடைந்து ஒரு பூதத்தை ஏவி மன்னனை கொல்ல ஆணையிட்டார். மன்னன் இறைவன் திருவடியில் சரணடைய பூதத்தை பெருமாள் விரட்டினார். மன்னிப்பு கேட்ட துர்வாசரை மன்னித்தார். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் அருள் புரிகிறார். ஏகாதசி விரதம் இருக்க சிறந்த தலம்.

    இந்த ஊரில் கொண்டப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது, ஐப்பசி மாதம் கடைசி நாளில் மயிலாடுதுறையில் உள்ள சிவாவிஷ்ணு கோவில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். பல்லாயிரக்கணக்கான மக்கள் காவேரியில் நீராடுவர்.

    இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

    மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து மாப்படுகை சாலையில் 2 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன.

    கோவில் திறந்திருக்கும் நேரம்:

    காலை 6.00 – 11.30 மற்றும் மாலை 5.00 – 8.30

    கோவிலின் முகவரி:

    அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்,

    திருஇந்தளூர்,

    மயிலாடுதுறை 609003.

    ×