search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • நாட்டார்மங்கலத்தில் வழிவிடு விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கல கிராமத்தினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நாட்டார் மங்கலத்தில் உள்ள வழிவிடும் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறைஅமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கல கிராமத்தினர் செய்திருந்தனர்.

    • சுவாமி -அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • 4 வீதிகளிலும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வலம் வந்து கலந்து கோவிலை வந்தடைந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்று முடிந்தது.

    தொடர்ந்து இரவு விநாயகர், வள்ளி தெய்வானை உடனடியாக முருகப்பெருமான், சுவாமி -அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதையடுத்து பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினர். தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னி லையில், சிறப்பு நாதஸ்வர கச்சேரி, நாட்டிய நிகழ்வுடன் புஷ்பப் பல்லக்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

    தேரோடும் நான்கு வீதிகளிலும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வலம் வந்து கலந்து கோவிலை வந்தடைந்தனர்.

    இதில் புதுச்சேரி மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா, காசாளர் செந்தில், தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, துணைத் தலைவர் கோவி. நடராஜன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மதுரை தாதம்பட்டியில் பால விநாயகர் கோவில் மண்டல பூஜை நடந்தது.
    • இந்த சிறப்பு பூஜையை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார் கிருஷ்ணகுமார் செய்தார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 8-வது வார்டு தாதம்பட்டி சடையாண்டி கோவில் வளாகத்தில் பால விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடந்தது. இதனை தொடர்ந்து தினமும் மண்டலபூஜை நடந்து வந்தது. 48-வது நாளான நேற்று மண்டல பூஜை நிறைவடைந்தது. இதையொட்டி வெள்ளை நிறபால விநாயகருக்கு பால், பன்னீர், தேன், நெய், திரவிய பொடி, திருநீர் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடந்தது. விநாயகர் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். இந்த சிறப்பு பூஜையை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார் கிருஷ்ணகுமார் செய்தார்.

    • வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து வழிபாடு
    • பகவதி அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்த கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாஅடுத்தமாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னி சைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    1-ம் திருவிழாவான நேற்று மாலை நாதஸ்வர கச்சேரியும் இரவு சமய உரையும் அதைத் தொடர்ந்து பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழி நெடு கிலும் பக்தர்கள் வாக னத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், திருவிழா மண்டகப்படி கட்டளைதாரர் பகவதி பெருமாள் பிள்ளை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேல் சாந்திகள் விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி, கண்ணன் போற்றி, கோவில் கணக்காளர் கண்ணதாசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    2-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர் களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்ன தானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசை கச்சேரி யும் 9 மணிக்கு அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
    • இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் நோய் தீர்க்கும் அம்மன் கோவில்கள் பல இருந்தாலும் அம்மை நோய் தீர்க்கும் முக்கிய ஆலயமாக நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இதனால் இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    முற்காலத்தில் வாழ்ந்த கவுரவ குல கவரை செட்டியார்கள் குதிரை மீது வளையல் வைத்து நாள்கணக்கில் பல ஊர்களுக்கும் சென்று வளையல் வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் சக்தி திருத்தலமான சமயபுரத்தில் பங்குனி பெருவிழாவில் வணிகம் செய்தனர்.

    கனவில் வந்த அம்மன்

    அப்போது ஒரு நாள் அவர்களில் பெரியவர் ஒருவரின் கனவில் சமயபுர மாரியம்மன் இளம் பெண் வடிவத்தில் தோன்றி தனது கைகளுக்கு வளையல் அணிவிக்க கூறினார். பெரியவரும் மகிழ்ந்து அப்பெண்ணின் பொன்நிற கைகளில் வளையல் அணிவிக்க முயன்றார். அப்போது வளையல்கள் உடைந்து கீழே விழுந்தன.

    இதனால் அவர் செய்வதறியாது திகைத்து "அம்மா உன் அழகிய கைகளுக்கு போட வளையல்கள் என்னிடம் இப்போது இல்லை. என் ஊருக்கு வந்தால் வகை, வகையாக வளையல்களை அணிவித்து விடுகிறேன் என்றார். இதைக்கேட்டு அம்மன் வடிவில் இருந்த பெண் சிரித்து மறைந்தாள்.

    அம்மை நோய்

    தெய்வத்தாயை கனவில் கண்ட அந்த பெரியவர் விழித்து எழுந்தபோது அவருடன் வந்தவர்களை அம்மை நோய் தாக்கி இருந்தது. இதைக்கண்டு அந்த பெரியவர் மனம் வருந்தினார். அப்போது அங்கு வந்த சமயபுரம் கோவில் அர்ச்சகர் அந்த பெரியவரிடம் உடைந்த அவரது வளையல்களுக்கு பதிலாக பொற்காசுகளை அளிக்க அம்மன் உத்தரவிட்டதாக கூறினார்.

    மேலும் அம்மை நோய் தாக்கியவர்களுக்கு அன்னையின் அருட்பிரசாதமாக திருநீறு வழங்கினார். இந்த திருநீறை தங்கள் உடலில் அவர்கள் பூசியவுடன் அம்மை நோய் குணமடைந்தது.

    சமயபுரம் மாரியம்மன்

    அப்போது தனது கனவில் வந்த பெண் சமயபுரம் மாரியம்மன் என்ற உண்மை முதியவருக்கு புலப்பட்டது. இதைக்கேட்ட சக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கும்(சக வியாபாரிகளுக்கும்) அன்னை காட்சி அளிக்க வேண்டும் என கேட்டு சமயபுரம் அன்னையை மனமுருகி வேண்டினர்.

    அப்போது ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் தோன்றி பக்தா்களுக்கு காட்சி தந்தார், மாரியம்மன். தங்களது தாய் ஆகாயத்தில் காட்சி தந்ததால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "ஆகாச மாரி... ஆகாச மாரி..." என போற்றிப் புகழ்ந்து வணங்கி துதித்தனர்.

    வசந்த கால வைபவம்

    இதைக்கண்டு மகிழ்ந்த பக்தர்கள் ஆகாச மாரியம்மனை தங்கள் ஊருக்கு வந்து அருள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதை கேட்ட அம்மன் உங்கள் ஊர் எது? என(தனக்கு தெரிந்தும் தெரியாதது போல) கேட்டார். அப்போது வளையல் வணிகர்கள் தங்கள் ஊர் நறையூர்(நாச்சியார்கோவில்) என கூறினர். உடனே மாரியம்மன் தான் முல்லைக்கும், மல்லிகைக்கும், முன்கை வளையலுக்கும் ஆண்டுதோறும் வந்தருள்வேன்" என கூறினார்.

    இதன்படி ஆண்டுதோறும் வைகாசி மாதம் அமாவாசைக்குப்பின் வரும் வெள்ளிக்கிழமை இரவில் சமயபுரத்தில் இருந்து ஆகாச மார்க்கமாக நறையூர் என்ற நாச்சியார்கோவிலுக்கு வருகை தந்து வசந்த கால வைபவம் கண்டு, அங்கு தேரோடும் திருவீதியின் ஈசான்ய பாகத்தில் கோவில் கொண்டு, அலங்கார வல்லியாக காட்சி தருகிறார் சர்வசக்தி ஆகாச மாரியம்மன்.

    ராஜராஜேஸ்வரி அம்மன்

    நிறைமங்கல நாயகியாக குறைதீர்க்கும் தெய்வமாய் அரசாட்சிக் கோலம் கொண்ட அன்னை, தன்னை அண்டி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும், எல்லா பரம்பொருளும் தன்னுள் அடக்கம் எனக் காட்டவும், ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு அலங்காரத்தை ஏற்று காட்சி அளிக்கிறார்.

    அன்னையின் ராஜராஜேஸ்வரி அலங்காரத்துக்கு வெண்பட்டு சேலை பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. அன்று இரவு அன்னையின் அருட்திறம் காட்டும் நீரில் விளக்கு எரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சனிக்கிழமை ஏக இறைவி ஏகாந்த வைபவமும், ஞாயிறு அன்று பெரிய திருவிழா கண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி, அவர்களின் பாவங்களை களைந்து, உடல் உபாதைகளுக்கு நிவாரணம் அளித்து, தீராத வினைகள் தீர்த்து சகல பாக்கியங்களையும் அருளுகிறார்.

    வேறு விழாக்கள் இல்லை

    திருநறையூரில் திருவிழா நாட்களில் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படிகள், அதற்கான பிரத்யேக பிரசாத படையல்கள், கனி வர்க்கங்கள், காணிக்கை சீர்வரிசைகள், பெருமாலை சாத்துபடி, கூட்டு வழிபாடு நடக்கிறது.

    நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் சாம்பிராணி புகையிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி, பலவகை காவடிகள் எடுத்து அங்கப்பிரதட்சணம், மாவிளக்கிடல் என பல வகை வழிபாடுகளை செய்கிறார்கள். சமயபுரம் மகா மாரியம்மன் நாச்சியார் கோவிலுக்கு வசந்த விழா காண வரும் நாட்களில் வேறு எந்த விழாவையும் அவ்வூரில் மக்கள் நடத்துவது இல்லை.

    அகல் விளக்கு சுடர்

    விழா நாட்களில் அம்மன் 6 நாட்கள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். அடுத்து வரும் புதன்கிழமை இரவு பிரியாவிடை நிகழ்ச்சி நடக்கிறது. சமயபுரம் மாரியம்மன் இந்த கோவிலில் குடி கொண்ட அடையாளமாக கோவிலில் பேரகல் விளக்கின் சுடர் 24 மணி நேரமும் காட்சி அளிக்கிறார்.

    பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற நாச்சியார்கோவிலுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) இரவு சமயபுரத்தில் இருந்து அம்மன் ஆலயத்துக்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுதல் நடக்கிறது.

    சமயபுரத்துக்கு அம்மன் புறப்படுதல்

    27-ந் தேதி(சனிக்கிழமை) வீற்றிருந்த திருக்கோலத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார் 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர் மகாராஜாவால் விருது அளிக்கப்பட்ட லட்சுமி அலங்காரம், 29-ந் தேதி(திங்கட்கிழமை) சரஸ்வதி அலங்காரமும், 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மதன கோபால அலங்காரமும், 31-ந் தேதி(புதன்கிழமை) மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், ஜூன் 1-ந் தேதி(வியாழக்கிழமை) ஸ்ரீ சேரசயன அலங்காரம், 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அம்பாள் அந்தம் வரை வளர்ந்தும் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் காட்சி அளிக்கிறார்.

    அன்று இரவு அருள் தீபம் ஏற்றுதல் நடக்கிறது. 3-ந் தேதி(சனிக்கிழமை) ஏகாந்த வைபவம் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சி அளிக்கிறார். 4-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பெரிய திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளை செய்கிறார்கள்.

    5-ந் தேதி(திங்கட்கிழமை) மற்றும் 6-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார். 7-ந் தேதி(புதன்கிழமை) இரவு தேரில் அம்பாள் சமயபுரத்துக்கு எழுந்தருகிறார். நின்ற திருக்கோலத்தில் வெள்ளி குடம் சுமந்தவாறு சமயபுரத்துக்கு அம்மன் புறப்படுகிறார். 16-ந் தேதி(வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன், அறங்காவலர்கள் டாக்டர்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு மற்றும் புராதன கவரையர்கள் செய்து வருகின்றனர்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் கும்பகோணத்தை அடைந்து அங்கிருந்து திருவாரூர் மார்க்கத்தில் 10 கி.மீட்டர் தூரம் பயணித்தால் நாச்சியார்கோவிலை அடைந்து ஆகாச மாாியம்மன் கோவிலை அடையலாம். இதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • ஒருமுறை ததீசி என்ற சிவபக்தருக்கும் திருமாலுக்கும் பகை ஏற்பட்டது.
    • முப்பத்து முக்கோடி தேவர்களால் நடத்தப்பட்ட அபிஷேகம்.

    புராண இதிகாசக் காலங்களில் தத்தாத்திரேயர் பரசுராமர், அகத்தியர், துர்வாசர், திருமூலர் ஆகிய ஞானிமுனிவர்கள் அன்னையை வணங்கி அருள் பெற்றுள்ளனர்.

    அன்னை வழிபாட்டின் வகைப்பாடு

    அன்னையை வீரத்தாயாகப் போற்றி மறக்கருணை நெறியில் வழிபடுவது வடவர் மரபு. அவளை அழகும், அருளும் கொண்டவளாக அறக்கருணை நெறியில் வழிப்படுவது தென்னவர் மரபு.

    இந்த தென்னாட்டு முறைக்கு ஸ்ரீ வித்யை என்று பெயர். இந்த ஸ்ரீவித்யைக்கு மூன்று கோணங்கள் உள்ளன. அவை 1. மந்திரம், 2. தந்திரம், 3. எந்திரம். ஸ்ரீவித்யையில் தேர்ச்சி பெற்றோர் உள்ளத்தால் சாக்தராகவும், நோக்கத்தால் சைவராகவும், அனுட்டானத்தால் வைணவராகவும் விளங்குவர்.

    தென்னிந்தியாவில் அன்னைஅருள்பாலிக்கும் அருள் தலங்களில் அளப்பரிய பெருமை மிக்க தலம். கருணை ஊற்றெடுக்கும் வேற்காட்டுத் தலம். அத்தலத்தின் வரலாற்றையும் பெருமையையும் அறிவதும், அத்தலத்தை நினைப்பதும், அங்கு சென்று அன்னையைத் தரிசிப்பதும் நம்மை உயர்விக்கும் உய்விக்கும்.

    திருவேற்காட்டுத் தலத்தின் வரலாறு

    மண்ணளக்கும் தாய் திருவேற்காட்டில் மகிமையுடன் வீற்றிருக்கிறாள். திருவேற்காடு... புண்ணிய பூமி.... புனிதத்தலம்.... கருமாரியம்மனின் கருணை நிலையம். இது சென்னைக்கு வடமேற்கு திசையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

    அந்த காலத்தில் வெள்வேல மரங்கள் இங்கு அதிகம். எனவே வேற்காடு எனப்பெயர் பூண்டது. நான்மறைகளே வெள்வேல மரங்களாகி நின்ற வரலாறு இதோ!

    வெள்வேல மரங்களின் வரலாறு

    பிரளயம்... அது யுகமுடிவில் வருவது... வெள்ளம் பெருகி உலகை மூழ்க வைப்பது உலகின் முடிவு. அது போன்ற ஒரு முடிவும் ஒரு முறை வந்தது. வெள்ளத்தால் உலகம் முடிவுற்றது. முடிவுக்குப் பின் மீண்டும் தொடக்கமல்லவா? சிவபெருமான் மீண்டும் உலகைப் படைக்க எண்ணினார். வெள்ளம் வற்றியது.

    பின் வேதங்களை குறிப்பிட்ட இடத்தில் மரங்கள் ஆக்கினார். அவற்றின் அடியில் லிங்கம் தோன்றியது. லிங்கத்துடன் அன்னையும் தோன்றினாள். அன்னையின் அருளால் மீண்டும் தேவர்களும், மும்மூர்த்திகளும் தோன்றினர். மீண்டும் அகிலாண்ட இயக்கம் ஆரம்பமானது.

    வெள்வேல மரமும், அதனடியில் லிங்கமும், அன்னையும் தோன்றிய இடம் திருவேற்காடு. தேவர்கள் தோன்றிய அவ்விடத்தின் ஒரு பகுதி தேவர் கண்ட மடு என்று அழைக்கப்பட்டது. வேற்காட்டின் வரலாறு இதுதான். இந்த வேற்காடு பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

    பாலி நதியின் வரலாறு

    அவுணர்கனை அழிக்கப் புறப்பட்டான் முருகப்பெருமான். அந்த அன்பு தெய்வத்திற்கு பாலாபிஷேகம். காமதேனுவின் மகள் நந்தினிப் பசு. அந்த நந்தினியின் பாலில் கந்தக் கடவுளுக்கு அபிஷேகம். முப்பத்து முக்கோடி தேவர்களால் நடத்தப்பட்ட அபிஷேகம்.

    பால் ஆறாகப் பெருகிறது. பெருகிப் பெருகி மண்ணில் பாய்ந்தது. பொங்கி வழிந்து புறப்பட்டது. அதுதான் பாலி ஆறு என்று பெயரும் பெற்றது. அந்த பாலி ஆற்றின் கரையில் அமைந்த தலமே திருவேற்காடு.

    விஷங்கள் தீண்டாத வேற்காட்டின் வரலாறு

    ஒருமுறை ததீசி என்ற சிவபக்தருக்கும் திருமாலுக்கும் பகை ஏற்பட்டது. கார்மேக வண்ணன் கடுங்கோபம் கொண்டான், கடவுளுக்கும் கோபம்... சினத்தீ சிறுமையில் தள்ளும் அதுவும் யார் மேல் கோபம்? சிவத் தொண்டன் மீதா?

    தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதாயிற்றே!

    நீலமேக வண்ணன் ததீசியின் மேல் போர் தொடுத்தான். பல கணைகளை வீசினான். ததீசியை சிவபக்தி காத்தது. கணைகள் வீணாயின. இறுதியில் சக்கரத்தை எடுத்தான் தாமோதரன். ஏவினான் முனிவன் மேல்... சுதர்சனம் ஒளியைக் கக்கிக் கொண்டு ஓடியது. ததீசி முனிவன்மேல் மோதியது. ஆயினும் பயனென்ன? சுதர்சனம் வலிமை இழந்தது. கூர்மங்கி சுருண்டு விழுந்தது.

    தாமரைக் கண்ணன் மனம் தளர்ந்தான். சுதர்சனமின்றிச் சோர்வுற்றான். ஈசனை எண்ணிப் பூசிக்க முனைந்தான். அவன் பூசித்த அந்த இடம் திருவேற்காடு.

    தினந்தோறும் ஆயிரம் மலர்களை எண்ணி வைத்து ஈசனை பூசிக்க எண்ணம் கொண்டான். அதன்படி ஆயிரம் தாமரைப்பூக்கள் அன்றாடம் ஈசனின் திருவடிகளை ஆராதித்தன.

    ஒரு நாள் இறைவன் அந்தத் திருமாலைச் சோதித்தான். சிவ சோதனைக்குத் திருமால் மட்டும் விதி விலக்கா என்ன? ஆயிரம் மலர்களில் ஒன்று குறைந்தது. பூசை பூரணத்துவம் அடையாது நின்றது.

    உடனே உணர்ச்சி பெருக்குடன் ஒரு காரியம் செய்தான். சியாமள வண்ணன். தனது ஒரு கண்ணைப் பெயர்த்தான். உதிரம் கொட்டக் கொட்ட ஆண்டவனின் பரதத்தில் சமர்ப்பித்தான்.

    இறைவன் மாலவனின் தியாகத்தை எண்ணி மகிழ்ந்தான். இழந்த திருச்சக்கரத்தை மீண்டும் வழங்கினான். கண்ணை அர்ப்பணித்த கார்முகில் வண்ணனுக்குக் கண்ணன் என்ற பெயரும் வழங்கினான். இந்த தியாக வரலாற்றை அருகிருந்து கண்ணுற்றான் ஆதிசேடன். இந்த மண் புனிதமானது. எனது தலைவனின் ரத்தம் சிந்திய இடம் இது. எனவே இந்த இடத்தில் எங்கள் பாம்பு இனத்தால் யாரும் இரத்தம் சிந்தக்கூடாது என சங்கல்பம் செய்தான்.

    ஆகையால் தான் இன்று வரை இங்கே எந்த உயிரையும் அரவம் தீண்டியதாக வரலாறு இல்லை.

    ஆயிரம் மலர்கள் வைத்துப்பூசித்த இடம் இன்றும் உள்ளது. அது திருவேற்காட்டின் பகுதி... கண்ணபாளையம்... அரவங்கள் விடம்தீண்டாத வரலாறு இதுதான்.

    அகத்தியருக்குக் காட்சி தந்த அருள் வரலாறு

    ஒரு முறை அம்மைக்கும், அப்பனுக்கும் திருமணம். குழந்தைகள் நடத்தும் கோலாகலத் திருமணம். இறைவனின் இனிய லீலைகளில் ஒன்று. தேவர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், கந்தர்வர், கின்னார், கிம்புருடர் என ஏராளமானோர் திரண்டனர்.

    கைலாயம் கலங்கியது. தெய்வசக்தி ஒரே இடத்தில் திரண்டதால் பூதேவி ஒரு பக்கமாகத் தாழ்ந்தாள்.

    அனைவருக்குமே அம்மையப்பனின் திருமணத்தைக் காண ஆவல். இந்த நிலையில் ஒரு பக்கமாகத் தாழ்ந்தது உலகம். அனைவரும் அஞ்சினர். ஆண்டவனிடம் முறையிட்டனர்.

    அஞ்சாதீர்கள் குழந்தைகளே என்று அபயக்கரம் காட்டினான் எம்பெருமான்.

    ஒரு தட்டு சாய்ந்தால் இன்னொரு தட்டில் எடை கூட்டுகிறோம். அதுபோல ஒரு பக்கம் சாய்ந்த புவியை இன்னொரு பக்கம் எடையேற்றிக் கூட்டுவோம்.

    வடக்கே தாழாதிருக்க தெற்கே எடையை ஏற்றுவோம்.

    தெற்கே எவ்வாறு எடையேற்றுவது? வடக்கே கூடியுள்ள கூட்டத்தைப் போல மற்றொரு கூட்டத்தை நிற்க வைப்பதா?

    தேவையில்லை. ஒரே ஒரு முனிவனை நிற்கவைப்போம். அதுவும் குள்ளமான முனிவனை...

    என்னே அதிசயம். கோடானு கோடி மக்களுக்கு ஒரு குறுமுனி ஈடாவாரா?

    ஆம்! கோடானு கோடி மக்களின் பக்திக்கு ஈடாகத்தான் அந்த குறுமுனிவனின் பக்தி விளங்குகிறது.

    கும்பத்தில் தோன்றிய அகத்தியருக்கு ஈடு இணை யாருமில்லை பக்தியில்.

    எனவே அம்மையப்பன் தனது மைந்தன் அகத்தியனை அழைத்தான்.

    என் கண்ணே நீ தெற்கே நோக்கிச் செல்! அங்கே அறிவிற் சிறந்தோர் ஆயிரமாயிரம்! அங்கு சென்றால் உனக்கு அறிவு உலகத்தின் தலைமை பதவி கிடைக்கும் தித்திக்கும் செந்தமிழால் என்னை தினந்தோறும் பாடிடுவாய்.

    அப்பா தங்கள் திருமணத்தைக் காணும் பாக்கியம் எனக்கில்லையா? சின்ன பிள்ளைதானே எல்லோர் வீட்டிலும் செல்லப்பிள்ளை! இந்த குள்ளப்பிள்ளையிடம் கண்ட குறை யாதோ? என்ற அகத்தியனுக்கு.

    குறையன்றுமில்லை கண்மணியே! உலகம் உன்னால் சமநிலை பெற வேண்டுமல்லவா? அதனால்தான் உன்னை அனுப்புகிறேன். என் திருமணக்கோலத்தைக் காணாமல் போகிறோமே என்று கலங்காதே! கோடானு கோடி மக்கள் காணப்போகும் அந்த அற்புதக் காட்சியை உனக்கு மட்டும் தனியாகக் காட்டுகிறேன். திருவேற்காட்டில் எனது திருமணக் காட்சியை தரிசிப்பாய் என ஆண்டவன் திருவாய் மலர்ந்தருளினான்.

    அந்த அகத்தியன் தென்னாடு வந்தான். தரிசனம் கண்டான். அந்த திவ்ய தரிசனம் அவனுக்கு மட்டுமல்ல. அன்று முதற்கொண்டு இன்று வரை திருவேற்காடு நோக்கி செல்லும் அனைவருக்கும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

    வேலவன் வேல் பெற்ற வரலாறு

    அவுணர்களை மாய்க்க அவதரித்த முருகன் நந்தினிப் பசுவின் பாலால் அபிஷேகம் செய்யப்பட்ட வரலாற்றைக் கண்டோமல்லவா? அந்தப் பாலே ஆறாக பாலி ஆறாகப் பாய்தோடியது அல்லவா? அந்த ஆற்றின் கரையில் அமைந்த திருத்தலம்தான் வேற்காடு என்றோமல்லவா?

    அதே திருத்தலத்தில் வேலவனுக்கு அன்னையின் அருளாசியும் கிடைத்தது.

    வேதபுரீசனாக அப்பன் வேற்காட்டில் அமர்ந்தான்.

    பாலாம்பிகையாக அன்னை அவனுடன் உறைந்தாள். தன்பிள்ளைமேல் கொள்ளைப் பிரியும். என்னதான் ஈசனின் அம்சம் என்றாலும் அவனும் தாய்க்கு மகன்தானே கொடிய சூரனை மாய்ப்பதற்குக் குழந்தை முருகனால் கூடுமோ?

    அன்னையின் பாசம் ஒருநிமிடம் அலைகழித்தது.

    கண்ணுதலான் இதனைக் கவனித்தான்

    அன்னைக்குக் குறிப்புணர்த்தினான்

    கண்ணுதலோன் கண்நோக்க வேற்கண்ணி களிப்புற்றுக் குதூகலித்து அன்பு கூர்ந்து

    மண்ணவரும் விண்ணவரும் வாழ்வுறவும்

    அவுணர்குலம் அறக்களைவாய் என்றுரைத்து

    எண்ணற்ற எழுபரிதிச் செழுஞ்சுடரின் ஒளிவிஞ்சச்

    சுடர்வேலைக் கரத்தெடுத்து

    கண்மணியாம் சேயவனின் கரமீந்து அருள்புரிந்தாள்

    கண்ணுதலோன் உவகையுற்றான்

    என்று தேவி கருமாரியம்மன் புராணம் செப்பும் வண்ணம் வேல் பெற்றான் குமரக்கடவுள். அந்த வேல்&கந்தவேல்-கருமாரி அன்னையின் திருக்கரத்தால் பெற்ற வேல்-திருவேற்காட்டில் வழங்கப்பட்ட வேல் ஆகும். வேல் ஈந்த பாலாம்பிகை அன்னை வேற்கண்ணி எனப் பெயர் பெற்றாள்.

    அந்த வேற்கண்ணியைத் தொழுது பணிந்து அங்கே வேலால் ஒரு தீர்த்தம் செய்தான் வேதவல்லி மகன். அத்தீர்த்தமே வேலாயுதத் தீர்த்தமாகும்.

    • தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் உள்ளன.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களுக்கு சுமார் 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் உள்ளன. இவற்றில் குறைந்த வாடகை, மற்றும் வாடகை இல்லாமலே குத்தகைதாரர்கள் உள்ளனர். இந்துக்கோவில்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக, கோவில்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் நிலங்கள், ஆகியவற்றின் வாடகை, குத்தகை தொகை போன்றவைகளை உயர்த்துவதற்கு இந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இந்துக்கோவில்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில், அவற்றுக்கு நீண்ட காலமாக குறைந்த வாடகை, மற்றும் குறைந்த குத்தகை தொகை செலுத்தி வருகின்றனர். அவற்றை சரிபார்த்து, வாடகை மற்றும் குத்தகை தொகைகளை உயர்த்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாடகை மற்றும் குத்தகை தொகை ஆகியவற்றை உயர்த்தி கோவில்களின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    • எலுமிச்சம் பழத்தை சாறுபிழிந்துவிட்டு அதன் தோலை விளக்காக்கி, அதில் நெய் விட்டு, ராகுகால நேரத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.
    • இரும்பு நல்ல எண்ணெய், எள், கருப்புத்துணி இவையாவும் சனீஸ்வரபகவானுக்கு மிகவும் பிடித்தமானவை ஆகும்.

    திருவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும், சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆகும்.

    சத்யோஜாதம்

    வாமதேவம்

    தத்புருஷம்

    அகோரம்

    ஈசானம்

    ஆகியவற்றை குறிக்கின்றன என ஆகமங்கள் கூறுகின்றன!

    எலுமிச்சை விளக்கு!

    எலுமிச்சம் பழத்தை சாறுபிழிந்துவிட்டு அதன் தோலை விளக்காக்கி, அதில் நெய் விட்டு, ராகுகால நேரத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.

    குரு பரிகார விளக்கு

    கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள ஆலங்குடி குரு தலத்தில் குருபகவானுக்கு இருப்பது நான்கு அகல் விளக்குகளை ஏற்றி இருபத்து நான்கு முறை வலம் வந்து வழிபடுவது குருதோஷ பரிகாரமாக கருதப்படுகிறது.

    சனீஸ்வர பகவான் பரிகார விளக்கு

    இரும்பு விளக்கில் நல்லெண்ணெயை ஊற்றி அதிலே கருப்புத் துணியால் மூட்டை போல் கட்டிய எள்ளை வைத்து அந்தத் துணியின் முனையையே திரியாக கொண்டு சனிக்கிழமைகளில் இந்த விளக்கை ஏற்றி வழிபட சனி பகவானின் அருள் கிடைக்கும். இரும்பு நல்ல எண்ணெய், எள், கருப்புத்துணி இவையாவும் சனீஸ்வரபகவானுக்கு மிகவும் பிடித்தமானவை ஆகும்.

    ஆலயங்களில் விளக்குப்பூஜை

    விளக்குப்பூஜையை ஆலயங்களில் செய்வதே சிறப்புத் தரும் அதிலும் குறிப்பாக அம்மன் ஆலயங்கள் அதிக அருளைத்தரும். திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு அம்மன் ஆலயம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம் ஆகியவற்றை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

    அதிசய நவக்கிர விளக்கு

    திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பஞ்சலி என்ற திருத்தலத்தில் நவக்கிரகங்கள் கிடையாது! அதற்கு பதிலாக ஒன்பது குழிகளே உள்ளன.

    அவற்றில் நெய் வார்த்து, திரியிட்டு, விளக்கேற்றி அந்த ஒன்பது சுடர்களை வணங்க வேண்டும். இதை நவக்கிரக தீப வழிபாடு என்கிறார்கள்.

    • ராமலிங்க சவுடேசுவரி அம்மன் கோவில் விழா
    • பக்தர்கள் நேர்த்திக்கடன் வேண்டுதலுக்காக கத்தியுடன் உடலில் அடித்துக் கொண்டே ஊர்வலமாக வந்தனர்.

    மதுரை

    வில்லாபுரம் மீனாட்சிநகரில் தேவாங்கர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட ராமலிங்க சவுடேசுவரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கரக உற்சவ விழா மற்றும் கத்தி போடும் விழா இன்று நடந்தது. 24-ம் ஆண்டு விழாவையொட்டி வைகை ஆற்றில் இருந்து சவுடேசுவரி அம்மனை கும்பத்தில் அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடன் வேண்டுதலுக்காக கத்தியுடன் உடலில் அடித்துக் கொண்டே ஊர்வலமாக வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயலாளர் ராஜேசுவரி, தலைவர் ராமராஜ், பொருளாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வர்த்தகர்கள் தெரிவிக்கையில் கோவிலில் அனைவரும் சமம் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும்.
    • தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனிமுருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இதனால் உள்ளூர் பக்தர்கள் பெரும்பாலும் கூட்டம் இல்லாத நாட்களில் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    குறிப்பாக செவ்வாய்க்கு அதிபதியாக விளங்கும் முருகப்பெருமானை உள்ளூர் பக்தர்கள் செவ்வாய்கிழமைகளில் அதிகளவு வந்து தரிசனம் செய்கின்றனர். அதன்படி நேற்று உள்ளூர் பக்தர்கள் பழனி மலைக்கோவிலுக்கு வந்தபோது கோவில் கண்காணிப்பாளர் அவர்களை தரக்குறைவாக பேசி சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

    எனவே அனைவருக்கும் பொதுவான கோவிலில் சர்வாதிகாரி போல செயல்படும் கோவில் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அடிவாரம் சன்னதி வீதியில் வர்த்தகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதுகுறித்து வர்த்தகர்கள் தெரிவிக்கையில் கோவிலில் அனைவரும் சமம் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும். தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார். இதனால் அடிவாரம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்த கோவிலில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்.
    • இங்கு அஷ்ட பைரவர்களும் காட்சி தருவது சிறப்பு அம்சம் ஆகும்.

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு அஷ்ட பைரவர்களும் காட்சி தருவது சிறப்பு அம்சம்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப் பாடல்களின் ஆசிரியர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த ஊராகும். புராண காலத்தில் பிரம்மபுரம், வேணுபுரம், தோனிபுரம், சிவபுரம் என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் சுமார் 90 அடி உயரமுள்ள கோபுரங்களுடன் பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த கோவிலில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு அஷ்ட பைரவர்களும் காட்சி தருவது சிறப்பு அம்சம் ஆகும். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்பு ஒரு முறை திருஞானசம்பந்தர் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது பார்வதி தேவியான திருநிலை நாயகி அம்மை ஞானப்பால் வழங்கி அவருக்கு ஞானத்தை ஊட்டியதாக தல வரலாறு கூறுகிறது.

    இந்த தல வரலாறு நினைவு கூறும் விதமாக திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்படுகிறது. திருமுலைப்பால் விழா அன்று திருஞானசம்பந்தர் பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் இருந்து புறப்பட்டு பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருள்வார். அங்கு திருஞானசம்பந்தருக்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காட்டப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் திருஞானசம்பந்தர் புறப்பாடு நடக்கும்.

    அப்பொழுது மலைக் கோவிலிலிருந்து உமாமகேஸ்வரி சாமி அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் எடுத்துவரப்பட்டு தீர்த்தக் குளக்கரையில் எழுந்தருள்வார். இதனை அடுத்து பகல் 12 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் தங்க குடத்தில் உள்ள பாலை கிண்ணத்தில் எடுத்து திருஞானசம்பந்தருக்கு வழங்கப்படும்.

    தொடர்ந்து சிவபெருமானுடன் உமா மகேஸ்வரி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சியளிப்பார். அப்பொழுது சாமி அம்பாள் மற்றும் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படும். இதனை அடுத்து பக்தர்கள் கொண்டுவரப்படும் பாலை சாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    32 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் குடமுழுக்கு விழா

    சீர்காழி சட்டைநாதர் கோவில் இதற்கு முன்பு 25-வது குரு மகா சன்னிதானம் சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் 23.3.1951 அன்று குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. அதற்கு பின்பு 26 ஆவது குரு மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் கடந்த 3.4.1991 அன்று குடமுழுக்கு விழா சீரும் சிறப்புமாக நடந்துள்ளது. அதற்கான இரண்டு கல்வெட்டுக்கள் மலைக் கோவிலில் உள்ளது.

    சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவிற்காக பிரம்மாண்ட யாக சாலை

    சீர்காழி சட்டைநாதர் கோவில் 32 ஆண்டுகளுக்கு பின்பு குடமுழுக்கு விழா நடைபெறுவதை ஒட்டி மேற்கு கோபுர வாசல் அருகே மிக பிரம்மாண்டமான யாகசாலை கொட்டகை அமைக்கப்பட்டு அதில் 82 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது யாகசாலை முன்புறம் செயற்கையாக கைலாய மலை அமைக்கப்பட்டு இந்த மலையின் வழியாகத்தான் பக்தர்கள் அனைவரும் யாகசாலைக்கு செல்லும் வகையில் பிரம்மாண்டமாக உள்ளது

    குடமுழுக்கிற்காக யானை, ஒட்டகம், குதிரை வரவழைப்பு

    சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருக்கடையூர், திருவையாறு, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நான்கு யானைகள், ஒன்பது குதிரைகள், ஒரு ஒட்டகம், காளை மாடு உள்ளிட்டவைகள் வெளி ஊர்களில் இருந்து வரவழைக்கப்பட்டது. இதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள், குழந்தைகள் வியப்போடும், ஆச்சரியத்தோடும் பார்த்துதங்களுடைய செல்போன்களில் செல்பி எடுத்து செல்கின்றனர்.

    அட்டபைரவச் சிறப்புத் தலம்

    காழியின் சிறப்புச் சந்நிதானமாக ஸ்ரீ சட்டைநாதசுவாமி அருளுகின்றபடியாலும், பைரவர்க்குரிய காசி, காழி, நாகை - செங்காட்டங்குடி ஆகியத் தலங்களுள் இதுவும் ஒன்றாகையாலும் பைரவமதம் இங்கே சிறப்புற்று இருந்துள்ளது. சட்டைநாதருக்கு கீழே தென்திசையில் அமைந்துள்ள வலம்புரி மண்டபத்தில் 1.அசிதாங்க பைரவர், 2.குருபைரவர்.3.சண்டபைரவர் 4.குரோதனபைரவர்.5.உன்மத்த பைரவர். 6, கபாலி பைரவர், 7. பீஷண பைரவர், 8, சம்கார பைரவர் என இவ் அட்டபைரவரும் எண் கலையாக விளங்குகின்றனர். சுக்கிர வாரத்திலும் தேய்பிறை அட்டமியிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    3 அடுக்குகளை கொண்ட குன்றுக்கோவில்

    இக்கோவில் மூன்று அடுக்குகளைக்கொண்ட குன்றுக்கோவிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. படைக்கும் தொழிலைச்செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.

    நடு அடுக்கில், உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை "தோணியப்பர்' என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் 'தோணிமலை' என்கின்றனர்.

    சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர்.

    இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, "அம்மா! அப்பா!' என அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார். குளித்து விட்டு வந்த தந்தை, "பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே, " எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.

    அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே" என்று பாடினார். தந்தை அசந்து போனார்.

    தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

    விஷ்ணுவின் தோலை அணிந்த சட்டைநாதர்

    உலகில் எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு உண்டு ஏனெனில் இந்த கோவிலில் சிவன் மூன்று வடிவமாக அருள்பாலிக்கிறார். அதாவது லிங்க வடிவமாகவும், விஷ்ணுவின் தோலை சட்டையாக அணிந்து சட்டை நாதர் என்றும், உமா மகேஸ்வரியுடன் தோணியப்பராகவும் அருள் பாலிக்கிறார். இது இந்த கோவிலின் தனி சிறப்பாகும்.

    • ஏகமுக தீபத்தை, பகவதி தீபம் என்றும், ஸ்ரீதுர்கா தீபம் என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள்.
    • சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும்.

    வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் தீப விளக்கிற்குப் மலர்மாலை சாற்றி பூஜிக்க, சகல நன்மைகள் பெறலாம். வீட்டில் விளக்கேற்றி வரும் இடம் ஒரே இடமாக இருப்பது நல்லது. அடிக்கடி இடத்தை மாற்றக்கூடாது. காலை, மாலை விளக்கேற்றும் போது கல்கண்டை நிவேதனமாகப் படைத்து குழந்தைகளுக்கு கொடுக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

    ஏகமுக தீபம்

    ஏகமுக தீபத்தை, பகவதி தீபம் என்றும், ஸ்ரீதுர்கா தீபம் என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள். சர்வசக்திகளும் தன்னுள் இருக்க, தான் ஒருத்தியே ஏகமாக பிரகாசிப்பதை ஏகமுக தீபம் குறிக்கிறது. எனவேதான் லலிதா சகஸ்ரநாம பூஜைக்கு ஐந்துமுக தீபமும், துர்கா பூஜைக்கு ஏகமுக தீபமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏகமுக தீபத்தில் ஸ்ரீதுர்க்கா தேவியை ஆவாகணம் செய்து சகஸ்ரநாமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இந்த தீப வழிபாட்டால் சிறந்த பலன்களை பெறலாம்.

    மாங்கல்ய பலம் பெருகும்

    சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும். இந்த தீப வழிபாட்டை செய்ய, செய்ய வீட்டில் அஷ்டலட்சுமி வாசம் செய்வதோடு, மாங்கல்யம் பலம் பெற முடியும். இதனால் குடும்பத்தினர் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வசதியாக வாழ்வார்கள்.

    நிம்ப தீபம்

    நிம்பதீபம் என்பது இலுப்பை எண்ணை ஊற்றி ஏற்றப்படும் விளக்கு ஆகும். பேய்கள் அகலுவதற்காக நிம்ப தீபம் ஏற்றுவதுண்டு. மேலும் மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும். நிம்ப தீபத்தை புதுஅகண்டம், அகல் இவைகளில் ஏற்ற வேண்டும். வீடுகளிலும் இத்தீபத்தை ஏற்றலாம்.

    பஞ்ச தீப எண்ணை

    தேங்காய் எண்ணை, விளக்கு எண்ணை, வேப்ப எண்ணை, இலுப்ப எண்ணை மற்றும் பசு நெய் கலந்த எண்ணையே பஞ்ச தீப எண்ணை எனப்படும். பஞ்ச தீப எண்ணையால் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

    இதை ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வெண்குஷ்டம் முதலிய தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுவோர் தங்கள் உபாதைகள் நீங்கிச் சுகம் பெறுவார்கள். நரம்புத் தளர்ச்சி நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த கண் கண்ட மருந்தாகும். தேவி உபாசகர்கள், தங்கள் தேவியை மகிழ்விக்க, பஞ்சமி திதியில் மேற்கண்ட பஞ்ச தீப எண்ணை ஊற்றி, பஞ்ச தீபம்(5-சுடர்) ஏற்றி வழிபட்டு வந்தால் அம்பிகையின் பூரண அருள்கிட்டும்.

    மங்களகவுரீ தீப பூஜை

    ஆவணி மாதம், செவ்வாய்க்கிழமை அம்பிகை அவதரித்த நாள். அன்று ஒளிமயமானதேவியை தீபத்தில் பூஜிப்பது மிகவும் நல்லது. ஆவணி மாதம் எல்லா செவ்வாய்க்கிழமைகளில் தேவியை தீபத்தில் பூஜிக்க வேண்டும். கன்னியாக இருக்கும் போது தந்தை வீட்டில் ஒரு வருஷமும், கணவர் வீட்டில் நான்கு வருஷங்களும் இந்த பூஜையை விரதமாக ஏற்று முடிக்க வேண்டும். இதற்கு சிரவண மங்கள விரதம் என்று பெயர். தீர்க்க சுமங்கலியாக இருப்பதே இதன் முக்கிய பலன்.

    விளக்கொளி பெருமாள்

    சிவபெருமான் ஜோதியாக விளங்கியது போல மகாவிஷ்ணுவும் ஜோதியாக விளங்கியிருக்கிறார். இதை உணர்த்த காஞ்சிபுரத்தில் தீபப் பிரகாசர் என்ற பெயருடன் ஒரு பெருமாள் கோவில் உள்ளது. அங்குள்ள பெருமாளை விளக்கொளி பெருமாள் என்று அழைக்கிறார்கள். தீப பூஜையில் மகாவிஷ்ணுவை ஆவாஹனம் செய்யும்போது இந்தப்பெருமாளை தியானிப்பது மிகவும் விசேஷம். இத்தலத்திற்குத் திருத்தண்கா, தூப்புல் என்ற பெயர் வழங்குகிறது.

    தீப பிரசட்சணம்

    தீபத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தை பிரதசட்ணம் வருவதில் பெரும் புண்ணியம் உண்டு. கன்னிப்பெண்கள் இப்படி தீபத்துடன் பிரதட்சணம் செய்தால் அவர்களுக்கு சீக்கிரமே திருமணம் கைகூடும்.

    திருக்கோவிலூர், தபோவனம் ஸ்ரீஞான ஆனந்த சுவாமிகள் மடத்தில் இந்த வழக்கம் தினமும் பின்பற்றப்படுகிறது. அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பு ஒரு கன்னிப்பெண் 5 முகம் ஏற்றிய தீபத்தை கையில் ஏந்திவர அவர்களுடன் எல்லோரும் சேர்ந்து, தீபஜோதியே வருவாய் என்று பாடிக்கொண்டு ஆஸ்ரமத்தை வலம் வருவார்கள்.

    திருவிளக்கு தந்த அரச பிறவிஷ

    வேதாரண்யம், வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் விளக்கு சற்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தபொழுது விளக்கில் ஊற்றப்பட்டிருந்த நெய்யை உண்ணுவதற்காக சென்ற எலி தன முக்கினால் திரியை அப்பால் நகர்த்திவிட தீபம் சுடர்விட்டு எரிந்ததாம். எலியின் செயல் எப்படியிருந்தபோதும், தீபம் சுடர்விட்டு எரியச் செய்த கைங்கரியத்திற்காக அந்த எலியை இறைவன் அடுத்த பிறவியில் மகாபலி சக்கவர்த்தியாகப் பிறக்கச் செய்தார் என்று அப்பர் சுவாமிகள் தனது திருக்குறுகை பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில் எழுதியுள்ளார்.

    முதலை உணர்த்திய விளக்குத் தத்துவம்

    முற்காலத்தில் சாப்பிடும்போது விளக்கு அணைந்தால் அத்துடன் எழுந்து விடுவது வழக்கம். இதற்கு எடுத்துக்காட்டா ஆதிசங்கரர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

    ஆதிசங்கரர் சிறுவனாக இருந்த போது ஆற்றுக்குச் சென்றார். அப்போது இரவுக் காலம். அவருடைய காலை ஒரு முதலை பிடித்துக்கொண்டது. அப்போது என் தாயாரிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டு சங்கரர் அன்னையிடம் வந்து நடந்ததைக் கூறினார்.

    சங்கரர் ஆற்றிற்குத் திரும்பியபோது அவர் அன்னை ஒரு எரிகிற விளக்கை மரக்காலுக்குள் மறைத்துக்கொண்டு வந்தாள். முதலை சங்கரரின் காலைப் பிடித்து உண்ண ஆரம்பித்தது. பின்னால் நின்ற அன்னை மூடியிருந்த விளக்கை திடீரென்று வெளியே காட்டி உடனே அணைத்து விட்டார். தீய சகுணம் ஏற்பட்டு விட்டதால் முதலை அவரை உண்ணாமல் விட்டது. சங்கரர் உயிர் தப்பினார்.

    அகண்ட தீபம்

    அகண்ட தீபம் என்பது எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் நிரம்ப விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வதைக் குறிக்கும். இந்தச் சிறப்பு வழிபாடு திருநெல்வேலி, நெல்லையப்பர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.

    கோடி தீபம்

    ஆலயங்களில் உலக நன்மைகாக குறிப்பிட்ட காலத்திற்குள் கோடி தீபம் ஏற்றுவதாக வேண்டிக்கொண்டு, வரும் பக்தர்களைக் கொண்டு கோடிதீப ஏற்றுவதுண்டு. இதுபோன்று கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனுக்கு உலக நன்மைக்காக கோடி தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

    ×