search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • திருமேற்றளியீசுவரர் கோவில் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தின் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ளது.
    • அப்பர்பெருமான் பதிகம் ஒன்றுமாக இரண்டு பதிகங்கள் உள்ளன.

    திருக்கச்சிமேற்றளி - திருமேற்றளியீசுவரர் கோவில் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தின் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ளது.

    காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் ஐந்தில் (திருக்கச்சியேகம்பம், திருக்கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, கச்சி அனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக் காரைக்காடு) இதுவும் ஒன்றாகும்.

    இத்தலத்திற்குச் சம்பந்தர்பதிகம் ஒன்றும் அப்பர்பெருமான் பதிகம் ஒன்றுமாக இரண்டு பதிகங்கள் உள்ளன.

    • கர்நாடக மாநில மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வழிபாடு செய்கின்றனர். மேலும் அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில், இன்று வைகாசி மாத அமாவாசை என்பதால், மாதேஸ்வர மலை கோவிலுக்கு செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் மேட்டூர் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

    இதையடுத்து கர்நாடக மற்றும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் மேட்டூரில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் மேட்டூர் பஸ் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

    • ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்க ப்பட்டுள்ளது.
    • இந்த கோவிலுக்கு திரைப்பட நடிகை நமீதா, தனது கணவர் வீரேந்திரச சவுத்திரியுடன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்க ப்பட்டுள்ளது.

    இந்த கோவிலுக்கு திரைப்பட நடிகை நமீதா, தனது கணவர் வீரேந்திரச சவுத்திரியுடன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

    கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 146 அடி உயரம் கொண்ட முருகன் சுவாமியின் முன் நின்று வணங்கி, மூலவர் சன்னதிக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து மாலை அணிந்து, சாமியின் மேல் வைக்கப்பட்டுள்ள வேலுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஸ்ரீதர் மற்றும் ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.

    • இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘மதங்கீசுவரர்.’
    • இறைவி பெயர் ‘ராஜமதங்கீசுவரி.’ இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு.

    நாகை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் ஒன்றுதான் மதங்கீசுவர சுவாமி ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் 'மதங்கீசுவரர்.' இறைவி பெயர் 'ராஜமதங்கீசுவரி.' கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் முன் முகப்பை தாண்டியதும், விஸ்தாரமான பிரகாரம் காணப்படுகிறது. அதன் வலதுபுறம் அம்பாளுக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.

    இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு. அவை அஞ்சனாட்சி, சங்கீத யோகி, சியாமா, சியாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி, சசிவேசான், ப்ரதானேசி, சுகப்ரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணீ, ப்ரயகப்ரியா, நீபப்ரியா, கதம்பவன வாசினி என்பன. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து காட்சி தரும் அன்னை, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

    பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். திருமணம் நடைபெறாமல் தாமதமாகும் ஆணோ, பெண்ணோ அன்னையின் சன்னிதிக்கு, அஷ்டமி அன்று வருகின்றனர். மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை அர்ச்சகர் வேண்டுதலை வைப்பவரிடமே தந்து விடுகிறார். 11 மாதங்கள் அந்த தேங்காயை வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அதற்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். வேண்டியபடி திருமணம் நடந்ததும், மணமான தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.

    இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. ஆலயத்தின் தலவிருட்சமாக, வன்னி, புரசம், வில்வம் என மூன்று விருட்சங்கள் உள்ளன. இவை ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் உள்ளன. மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். எதிரே அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில், இறைவன் மதங்கீசுவரர் லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    பிரளய காலத்தில் உலகமெங்கும் தண்ணீர் மயமாய் காட்சி தந்தது. அந்த சமயம் பிரபஞ்ச சிருஷ்டிக்காக பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மூவரும் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். அதில் பிரம்மா, சிவனை மதங்க (யானை வடிவில்) ரூபமாய் தியானம் செய்தார். அதே நேரத்தில் பிரம்மாவின் மானஸ புத்திரரான மதங்க முனிவர், பிரம்மதேவனின் ஆணையால், சிவபெருமான் குறித்து தவம் செய்ய பூலோகம் நோக்கி புறப்பட்டார். உலகம் தண்ணீர் மயமாக இருந்ததால் அவருக்கு பூமி தென்படவில்லை. எனவே ஆகாயத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த மதங்க முனிவர், நாரதரிடம் தவம் செய்வதற்கு உரிய இடத்தைக் காட்டுமாறு வேண்டினார்.

    மதங்கரிடம் நாரத முனிவர், "பூமியில் சுவேதவனம் (திருவெண்காடு) என்று ஒரு இடம் உள்ளது. அங்கு பிரம்மதேவர் மகா பிரளய காலத்தில் ஐக்கியமாகி விடுவார். அத்தலம் சிவ சூலத்தால் தாங்கப் பெற்றிருப்பதால், அந்தத் தலம் மட்டும் அழியாமல் இருக்கும். அங்கு புரச மரங்கள் அடர்ந்து இருக்கும். எனவே அப்பகுதியை 'பலாச வனம்' என்பர். அதன் அருகே சென்று தவம் செய்து சித்தி பெறுங்கள்" என்றார்.

    நாரதர் சொன்னபடியே இந்த தலத்திற்கு வந்த மதங்க முனிவர் அங்கு தவம் செய்யத் தொடங்கினார். அவர் தவத்திற்கு இடையூறு விளைவிக்க, மன்மதனும், மோகினி உருவில் மகாவிஷ்ணுவும் வந்தனர். தனது தவத்திற்கு இடையூறு செய்ய வந்த மன்மதனை "சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் நீ அழிவாய்" என சபித்தார் முனிவர்.

    பதறிப்போன மன்மதன், சாப விமோசனம் வேண்டினான். உடனே மதங்கர், "நீ கிருஷ்ண பரமாத்மாவின் புதல்வனாய் பிறந்து சரீரம் பெறுவாய்" என அருளினார்.

    மோகினியை முனிவர் சபிக்க முற்பட்டபோது, பகவான் மகாவிஷ்ணு, மதங்க முனிவருக்கு தரிசனம் அளித்தார். "மதங்கரே! உன் தவத்தை சோதனை செய்து பின், உமக்கு யோக சாஸ்திரம் அருளவே இங்கு வந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்?" என்றார் மகாவிஷ்ணு.

    அதற்கு முனிவர் "தாங்கள் மோகினியாகவே தரிசனம் தந்து கொண்டு, எப்போதும் இவ்விடத்திலேயே தங்கியருள வேண்டும்" என வேண்டினார். மகாவிஷ்ணுவும் அவ்வாறே அருளினார்.

    மதங்க முனிவர் தியானத்தில் இருந்தபோது பரமசிவன் அவருக்கு காட்சி தந்து "என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்டார்.

    மதங்கர், "நான் தவம் செய்த இந்த இடத்தில், யார் ஒருவர் பிறந்தாலும், இறந்தாலும், வசித்தாலும், பூஜித்தாலும் அவர்கள் எல்லா நலன்களையும் பெற்று வாழ வேண்டும். நீங்கள் 'மதங்கேசர்' என்ற பெயர் கொண்டு லிங்க மூர்த்தியாய் இங்கு காட்சி தர வேண்டும்" என வேண்டிக் கொண்டார்.

    மதங்க முனிவர் தவம் செய்த இடம், திருவெண்காட்டில் இருந்து வடமேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாங்கூரின் ஒரு பகுதியாகும். மதங்க முனிவர் வேண்டியபடி சிவபெருமான் மதங்கேசுவரர் என்ற திருநாமத்தில், ராஜமதங்கீசுவரி என்ற திருநாமம் கொண்ட தேவியுடனும் மதங்கருக்கு காட்சி தந்தார்.

    காளியின் ஆலயத்தை அடுத்து மதங்க மகரிஷியின் சன்னிதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் வலஞ்சுழி மதங்க விநாயகர், பிரசன்ன சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் மோகினி உருவில் (பெண் உருவில்) நாராயணப் பெருமாள் நாராயணி என்ற பெயரில் அருள்பாலிக்கும் சன்னிதி உள்ளது.

    தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்க, வடக்கு பிரகாரத்தில் சண்டீசுவரர் சன்னிதி உள்ளது.

    சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் அன்னை மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு வித்யாபியாசம் செய்ததால், இந்த அன்னையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும் என்பது நிதர்சனமான உண்மையே.

    இரட்டை நந்திகள்

    வழக்கமாக சிவாலயங்களில் இறைவனின் கருவறைக்கு எதிரே ஒரு நந்தி தான் இருக்கும். ஆனால் இங்கு கிழக்கும், மேற்கும் நோக்கிய இரண்டு நந்திகள் இருப்பது எங்கும் காணாத சிறப்பம்சமாகும். இதில் கிழக்கு நோக்கி உள்ள நந்தி 'சுவேத நந்தி' எனவும், மேற்கு நோக்கி உள்ள நந்தி 'மதங்க நந்தி' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நந்திகளையும் பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிட்டும் என்கின்றனர். இந்த இரட்டை நந்திகளை 'மாப்பிள்ளை நந்தி' எனவும், 'மாமனார் நந்தி' எனவும் அழைக்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    மயிலாடுதுறையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருநாங்கூர் தலம்.

    -பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

    • இக்கோவிலில் பவுர்ணமி பூஜை, பிரதோஷம் சிறப்புடையதாகும்.
    • 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலின் தல விருட்சம் வில்வமரம் ஆகும்.

    திருமண வரம் தரும் சிவாலயங்களில் பக்தர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற கோவிலாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சந்திரசேகரர் கோவில் உள்ளது.

    கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையவும் திருமணம் நடைபெறாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கவும் மாங்கல்ய பாக்கியம் அருளும் பட்டுக்கோட்டை மங்களாம்பிகா சமேத சந்திர சேகரர் கோவில் முக்கிய பரிகார தலம் ஆகும்.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் மேல்பாகம் கோட்டைத் தெருவில் அமைந்துள்ள சந்திரசேகர சுவாமி(சிவன்) கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். ராஜராஜ சோழன் சோழ நாட்டுக்கு சோழமண்டலம் எனப் பெயர் மாற்றம் செய்து அதை 13 வள நாடுகளாக பிரித்தார். அதில் ஒன்றான பரண்டையூர் நாட்டில் இருந்த செல்லூர் என்ற ஊர் தான் இன்றைய பட்டுக்கோட்டையாகும்.

    குபேரன் சிலை

    அக்காலத்தில் மராட்டிய படை தளபதி பாவாஜி பண்டிதர் என்பவர் பட்டுக்கோட்டையில் கோட்டை கட்டியதாக கல்வெட்டு கூறுகிறது. பட்டுக்கோட்டை சந்திரசேகர சாமி கோவில் முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றழி கோவிலாகும். இக்கோவிலின் 3 அடுக்கு கோபுரத்தை கடந்து ஆலயத்தின் இடது புறம் பங்குனித் திருவிழா முடிந்து பாதுகாப்பாக நாடியம்மன், அய்யனார் உற்சவர் சிலைகள் ஊஞ்சலில் வைக்கப்பட்டுள்ளன. இடது புற பிரகாரத்தில் சப்த கன்னியர் சிலைகள் உள்ளன.

    இக்கோவிலில் உள்ள இறைவன் பெயர் பிறைசூடும் தம்பிரானார். பிற்காலத்தில் அதுவே வடமொழி ஆக்கமாக சந்திரசேகரர் என்று சூட்டப்பட்டது. அம்பாளின் பெயர் மங்களாம்பிகை. அம்பாள் தெற்கு பார்த்த நிலையில் தனி சன்னதியில் நின்றகோலத்தில் உள்ளார். மூலவர் தரிசனம் செய்து வெளியே வந்தால் இடதுபுற சுவரில் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் சிலை புடைப்பு சிற்பமாக உள்ளது.

    பவுர்ணமி பூஜை

    கர்ப்பகிரகத்தின் மூன்று புற கோஷ்டங்களிலும் மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மன் சிலைகள் உள்ளன. வலது பிரகாரத்தில் சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் சிலைகள் உள்ளன. கருங்கற்களால் முழுவதும் கட்டப்பட்ட இந்த கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, கல்வெட்டுகளை தாங்கி வரலாறு கூறி நிற்கும் சிறப்பு பெற்றது.

    இக்கோவிலில் பவுர்ணமி பூஜை, பிரதோஷம் சிறப்புடையதாகும். இவற்றில் கலந்து கொள்வதால் நிறைந்த செல்வம், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு, திருவருள் துணை போன்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    சந்திரசேகர சுவாமி கோவிலில் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் விநாயகரும், வடமேற்கு மூலையில் முருகன் வள்ளி-தெய்வானையுடனும் உள்ளனர். சோழர் காலத்தில் பெரும் போற்றுதலுக்குரிய ஜேஷ்டா தேவியின் சிலை அபூர்வமாக இங்கு உள்ளது. சிலை சிறியதாக இருந்தாலும் ஒரு காலை மடித்து ஒரு காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். இருபுறமும் காளை முகமும், குதிரை முகமும் உடைய மாந்தி, குளிகன் என்ற இரு மக்களுடன் உள்ளார்.

    32 தூண்கள்

    இக்கோவில் திருமஞ்சன மண்டபம் 32 தூண்களை கொண்டது. தரை கருங்கற்களால் பரப்பப்பட்டது. தரைக்கல்லில் சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டில் சோழர் காலத்தில் இவ்வூர் தலைவனாக இருந்தவர் ராஜேந்திர சுந்தர தோளுடையான் என்பவர். இவர் காலத்தில் ஒரு நிலம் குறித்த வழக்கு வருகிறது. மன்னரிடம் ஒருவர் நில உரிமை கேட்க நில உரிமைக்கான ஓலையை காட்ட வேண்டும் என்று மன்னர் ஆணை இடுகிறார்.

    நில உரிமை கேட்டவரும் மன்னர் கேட்டபடியே நிலத்துக்கான உரிமை ஓலையைக்காட்ட நிலம் கேட்டவருக்கே என்று தீர்ப்பு கூறப்படுகிறது. இந்த தகவல் கோவில் கல்வெட்டில் உள்ளது. நில உரிமைக்கு அக்காலத்திலேயே உரிமை ஓலை(பத்திரம்) இருந்தது நன்கு விளங்குகிறது.

    1200 ஆண்டுகளுக்கு முன்பு...

    அன்னிய படையெடுப்பின்போது பட்டுக்கோட்டையில் இருந்த கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டது. கோவிலும் தாக்கப்பட்டு சேதம் அடைந்தது. கோட்டை இருந்த இடம் இன்று கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் சந்திரசேகர சுவாமி கோவில் நாயக்க மன்னர் காலத்திலும், மராட்டியர் ஆட்சியிலும் புனரமைக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரரை வணங்கி விட்டு வந்தால் சிறிது தூரத்தில் கிணறு உள்ளது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலின் தல விருட்சம் வில்வமரம் ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவாி மாதம் 10-ந் தேதி இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்தது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். திருமணத்தடை நீக்கும் பட்டுக்கோட்டை சந்திரசேகரர் கோவிலுக்கு வந்து முறையாக வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

    கோவிலுக்்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் பட்டுக்கோட்டைக்கு வர வேண்டும். பின்னர் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சாமியார்மடம் பகுதிக்கு செல்லும் பஸ்சில் ஏறி சாமியார்மடத்தில் இறங்கி அங்கிருந்து ½ கி.மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை சந்திரசேகரர் கோவிலை அடையலாம். இதேபோல் பஸ் மூலம் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சாமியார்மடம் செல்லும் பஸ்சில் ஏறி கோவிலை அடையலாம்.

    • தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கின்றன. எல்லா ஆலயங்களிலும் புனிதனும், சக்தியும் இருக்கத் தான் செய்கின்றன.
    • மேல்மருவத்தூர் ஆலயம் மற்ற ஆலயங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. அதை மருவத்தூர் மண்ணை மிதித்து, மருவத்தூர் அன்னையை தொழுவார்கள் மனப்பூர்வமாக உணர்ந்துகொள்கிறார்கள்.

    அம்மா, அம்மா என்று வினாடிக்கொரு முறை நினைத்து வழிபடுகிறோமே - அந்த அன்னை ஆதிபராசக்தி எங்கே இருக்கிறாள்? எந்தெந்த வடிவங்களில் இருக்கிறாள்? அந்த சக்தி தெய்வத்தின் நிதர்சனமான " திவ்ய " தரிசனம் எல்லோருக்கும் கிடைக்குமா? அந்தத் தரிசனம் எப்போது கிடைக்கும் ?- என்று மனிதமனம் சிந்தனை வலையைப் பின்னிய நேரத்தில் 10 பக்க கட்டுரை இயல்பாகக் கிடைத்தது.

    மச்ச புராணத்தில் 108 சக்தித்தலங்களில் 108 வித , விதமான பெயர்களோடு வித, விதமான வெவ்வெறு வடிவங்களில் துடிப்போடு ஆதிபராசக்தி துலங்கி அருள் பாலிக்கிறாள் என்று நூல்களில் படித்து அறிகிறோம். அதில் 72- வது தலமான "சித்தவனம் -" என்பது தான் "மேல்மருவத்தூர்" என்று ஆன்மிக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

    "அன்னை இல்லாத இடம் ஏது? அவள் தூணிலும் இருக்கிறாள் துரும்பிலும் இருக்கிறாள்!!" என்று படிக்காத பாமரன் பட்டென்று கூறிவிடுகிறான்.

    எதையுமே ஆராய்ச்சி செய்து பார்க்கும் படித்த மேதாவிகள் தான் புராணங்களிலும், தத்துவங்களிலும் அன்னையைத் தேடுகிறார்கள்!

    எது எப்படி இருப்பினும், பராசக்தியை தேடுகின்ற பக்தனின் முயற்சிகள் எல்லாமே பராசக்தியால் அங்கீகரிக்கப்பட்டவை தான்!

    சரி, அம்மா, எங்கே இருக்கிறாள்?

    மதுரையில் - மீனாட்சி

    காஞ்சியில் - காமாட்சி

    காசியில் - (விசாலாட்சி அன்னபூரணி)

    நெல்லையில் - காந்திமதி

    மீனாட்சிபுரத்தில் - ஸ்ரீசியாளா (நெல்லை தேவி)

    கன்னியாகுமரியில் - கன்னியாகுமரி அம்மன்

    முப்பந்தலில் - இசக்கி அம்மன்

    மண்டைக்காட்டில்- பகவதி

    வண்ணாரப்பேட்டையில் (நெல்லை) - பேராச்சி அம்மன்

    தெய்வசெயல்புரத்தில் (தூத்துக்குடி) -ஸ்ரீராஜராஜேஸ்வரி

    நயினார்கோவிலில் - ஸ்ரீ சௌந்திர நாயகி

    ஆரல்வாய்மொழியில் - இசக்கி அம்மன்

    நயினார் குளத்தில் (நெல்லை) - பிட்டப்பரத்தி அம்மன்

    காயாமொழியில் - முப்புராதி அம்மன்

    நங்கைநல்லூரில்- ஸ்ரீ ராஜ ராஜேவரி

    திரு ஈங்கோய் மலையில்- ஸ்ரீ லலிதாம்பிகை

    ஏரலில்- குரங்கணி அம்மன்

    படைவீட்டில் - ரேணுகாம்பாள்

    தென்காசியில்- உலகம்மை

    ஸ்ரீவில்லிப்புத்தூரில்- ஆண்டாள்

    சிவகாசியில் - பத்ரகாளி அம்மன்

    கோவில்பட்டியில் - செண்பக வல்லி அம்மன்

    சாத்தூரில் - இருக்கன்குடி மாரியம்மன்

    விருதுநகரில் -(முத்துமாரி அம்மன், வெயிலுகந்த அம்ம)

    அருப்புக்கோட்டையில் - முத்துமாரி அம்மன்

    இராமநாதபுரத்தில்- பர்வதவர்த்தனி அம்மன்

    பரமக்குடியில்- முத்தால அம்மன்

    காரைகுடியில்- கொப்புடைய அம்மன்

    மடப்புரத்தில் - காளி

    சங்கரன்கோவிலில் - கோமதி அம்மன்

    தாயமங்கலத்தில் - முத்துமாரி அம்மன்

    வீரபாண்டியில் - கௌமாரி அம்மன்

    நந்தத்தில் -மாரியம்மன்

    சோழவந்தானில்- ஸ்ரீ ஜனக மாரியம்மன்

    திண்டுக்கல்லில்- கோட்டை மாரியம்மன்

    சேலத்தில்- அன்னதான மாரியம்மன்

    பெங்களூரில் - அன்னம்மா

    சாக் கோட்டையில் - அம்பாள்

    திருவாடானையில் - ஸ்ரீ சிநேகவல்லி அம்மன்

    புத்தூரில் -ஸ்ரீ திரௌபதி அம்மன்

    சிக்கலில் - ஸ்ரீ தேவசேனை

    சிதம்பரத்தில் - சிவகாமசுந்தரி

    திருக்கடவூரில் - அபிராமி

    திருச்சானூரில் - பத்மாவதி தாயார்

    அலர்மேலுமங்காபுரத்தில் -அலமேலுமங்கா

    திருப்பூரில் - (பட்டத்தளர்ச்சி அம்மன், ஓடைக்காடு பத்ரகாளி அம்மன்)

    பல்லடத்தில்- பொங்காளி அம்மன்

    அவினாசியில்- கருவலூர் மாரியம்மன்

    சத்திய மங்கலத்தில்- பண்ணாரி அம்மன்

    பொள்ளாச்சியில் - சூலக்கல் மாரியம்மன்

    ஈரோட்டில் - சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன்

    கோவையில் - கோணியம்மன் தண்டு மாரியம்மன், சௌடாம்பிகை அம்மன்

    பேரூரில் -பச்சைநாயகி அம்மன்

    மேட்டுப்பாளையத்தில்- வனபத்ர காளியம்மன்

    ஊட்டியில் -காளி - மாரி

    திருச்சியில்-சமயபுரம் மாரியம்மன்

    புதுக்கோட்டையில்-ஸ்ரீ மாதா புவனேஸ்வரி

    கன்னிவாட்யில் - ராஜ காளி அம்மன்

    தஞ்சையில் - முத்து மாரியம்மன், பங்காரு காமாட்சி அம்மன்.

    புன்னை நல்லூரில் - முத்துமாரி அம்மன்

    பெரியபாளையத்தில் - பெரியபாளையத் அம்மன்

    மேல்மலையனூரில் - அங்காளபரமேஸ்வரி

    ராசிபுரத்தில் சேலம் - சுமங்கலி அம்மன்

    திருவண்ணாமலையில் - உண்ணாமலை அம்மை

    திருவானைக்காவில் - அகிலாண்டேவரி

    வேளாங்கண்ணியில்- ஆரோக்கிய மாதா

    தொட்டியங்குளத்தில் - மாரியம்மன்

    செந்தூரில் -சந்தன மாரியம்மன்

    மணப்பாறையில் -முத்து மாரியம்மன்

    சிறுவாச்சூரில் - மதுர காளியம்மன்

    செங்கையில் - (மணபாத்தம்மன் நாகாத்தம்மன்)

    பெருங்கரையில் -சதுரங்க நாயகி

    பட்டுக்கோட்டையில் - காளியம்மன்

    நாட்டரசன்கோட்டையில் - அம்மன்

    ஆத்தூரில் - சோமசுந்தரி அம்மன்

    வேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) - தையல் நாயகி அம்மன்

    நாகப்பட்டினத்தில் -ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன்

    திருக்குற்றாலத்தில் - ஸ்ரீ குழல்வாய் மொழி அம்மன்

    திருச்சி, குளித்தலை மேட்டு மகாதான புரத்தில் - அம்மன்

    திருவிடைமருதூரில் - ஸ்ரீ மூகாம்பிகை

    கங்கை கொண்டானில் - ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்

    உறையூரில் -வெக்காளி அம்மன்

    மாயவரத்தில் - ஸ்ரீ அபயாம்பிகை அம்மன்

    பாபநாசத்தில் நெல்லை - உலகாம்பிகை

    திருவொற்றியூரில் -ஸ்ரீ வடிவுடையம்மன்

    கும்பகோணத்தில்- ஸ்ரீ மங்களாம்பிகை

    திருக்கருகாவூரில் (தஞ்சை ) -ஸ்ரீ கர்ப்பரட்சகாம்பிகை (கருகாத்த )அம்மன்

    திருவையாறு தலத்தில் - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி

    மயிலாடுதுறையில் -( ஸ்ரீ அஷ்டாத சபுஜ மகாலஷ்மி துர்க்கா தேவி)

    சென்னையில் -(மயிலை கற்ப காம்பாள், கோல விழி பத்ரகாளி அம்மன், முண்டக கண்ணியம்மன் முப்பத்தம்மன், ரேணுகா பரமேஸ்வரி அம்மன்)

    திருவேற்காட்டில்- கருமாரி அம்மன்

    மாங்காட்டில் - காமாட்சி அம்மன்

    மைசூரில் - சாமுண்டீஸ்வரி

    கொல்லூரில் - மூகாம்பிகை

    சோற்றானிக் கரையில் - பகவதி

    கொடுங்கல்லூரில் - பகவதி

    காம்புழாவில்- பகவதி

    காளஹஸ்தியில் - ஸ்ரீ ஞான பிரஸன்னாம்பிகை

    விஜயவாடாவில் - கனக துர்க்கா

    கல்கத்தாவில் - காளி

    சிருங்கேரியில் - சாரதாம்பாள்

    தங்க வயலில் - கங்கையம்மன்

    மங்களூரில்- மங்களாம்பிகை

    குஜராத்தில் - ஸ்ரீ சந்தோஷி மாதா

    மலேசியாவில் - மகாமாரியம்மன்

    சிங்கப்பூரில் - வீரிமா காளியம்மன்

    சபரிமலையில் - ஸ்ரீ மாளிகைபுரத்து மஞ்சள் மாதா

    - என்று உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அன்னை ஆதிபராசக்தி மேல்மருவத்தூரில் "சுயம்பு" உருவில் கொலுவிருந்து, அருள்திரு அடிகளார் தேகத்தில் தங்கி, அவருடைய ஆன்மாவில் ஜக்கியமாகி, "பேசும்" தெய்வமாகவும் "நடமாடும்" தெய்வமாகவும் இருந்து அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறாள்.

    தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கின்றன! எல்லா ஆலயங்களிலும் புனிதனும், சக்தியும் இருக்கத் தான் செய்கின்றன!

    ஆனால் மேல்மருவத்தூர் ஆலயம் மற்ற ஆலயங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது! அதை மருவத்தூர் மண்ணை மிதித்து, மருவத்தூர் அன்னையை தொழுவார்கள் மனப்பூர்வமாக உணர்ந்துகொள்கிறார்கள்.

    1. குருவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சக்தி தலம் மேல்மருவத்தூர்!

    2. அன்னையின் உரு, அருள்திரு அடிகளார் அவர்களின் அருள் காட்டுதலில் – ஆன்மீகத் தொண்டுகள் செய்து வரும் இலட்சக்கணக்கான ஆடவர்- மகளிர் சக்தி தொண்டர்களை கொண்டது மேல்மருவத்தூர்!

    3. ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு "அன்னையின் அருள்வாக்கு விதிகளுக்கு மட்டும்" உட்பட்ட அருள் சித்தர் பீடம் மேல்மருவத்தூர்!

    4. ஆதிபராசக்திக்கு விரதமிருந்து, சக்திமாலை அணிந்து சக்தி இருமுடி செலுத்தும் சக்தி தலம் மேல்மருவத்தூர்!

    5. அன்னையின் அருள்வாக்குப் படி எல்லா காரியங்களும் நடைபெறுவதால் – "தெய்வீக நிர்வாகம்" நடக்கும் சக்தி தலம், மேல்மருவத்தூர்!

    6. சமுதாயத் தொண்டுகளுக்கும், கல்வி மருத்துவ பண்பாடு அறத் தொண்டுகளுக்கும் தமிழகத்தில் முதன்மையான ஆலயம், மேல் மருவத்தூர்!

    7. ஜாதி, மத, இன வேறுபாடில்லாமல், ஏழை- பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் "ஒரே தாய்!! ஒரே குலம் !!" என்ற ஒரே சிந்தனையுடன் "செந்நிற" ஆடை அணிந்து எல்லோரும் ஆன்மீகப் பணிகளைச் சமமாக செய்ய வாய்ப்புகள் தரும் சக்திதலம், மேல்மருவத்தூர்!

    8. 'சமுதாயத்திலும், ஆன்மிகத்திலும், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!" என்று வாயளவில் பேசாமல், செயல் அளவில் பெண்களுக்கு எல்லாவற்றிலும் (வழிபாட்டு பூசைகளில், கேள்வி பூசைகளில், அமைப்பு , நிர்வாகத்தில்) அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் சக்தி தலம் , மேல்மருவத்தூர்!

    9. வித்தியாசமான எளிய பூஜை, திருஷ்டி முறைகளும், வேள்வி முறைகளும் கொண்டு, "சப்தகன்னிமார்களுக்கு " சந்நிதியும், ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை முதலியவற்றைமாய்க்கும் அதர்வண பத்ரகாளி சந்நிதியும் அமைந்த சக்திதலம், மேல்மருவத்தூர்!

    10. 1800 -க்கு மேற்பட்ட ஓம் சக்தி மன்றங்களின் வாயிலாக வழிபாடும், சமுதாயத் தொண்டும் செய்து, அதை நிர்வகித்து வரும் தலைமை சித்தர்பீடம், மேல்மருவத்தூர்!

    11. "உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!" என்ற உயர்ந்த இலட்சியத்திற்கு - தனது வியர்வைத் துளிகளால் அபிடேகம் செய்து வரும் அருள்திரு. அடிகளார் அவர்களால் அகிலம் முழுமைக்கும் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டு வரும் அற்புத சக்தி தலம், மேல்மருவத்தூர்!

    இத்தனை சிறப்பு அம்சங்கள் மேல்மருவத்தூரில் இருப்பதால் தான் "தொண்டு" -என்பது இங்கே தவிர்க்க முடியாததாகிவிடுகிறது!

    • இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
    • திருமுறைத் தலங்களின் பட்டியலில் 24-வது திருமுறை தலமாகத் திகழ்கிறது இந்த கோவில்.

    கபாலீஸ்வரர் திருமாலை

    மூலப் பரம் பொருளே முக்கண்படைத்த முழு முதல்வன்

    ஆலக் கணத்தியுள் ஞான சம்பந்தர் அருள் மொழியிற்

    சாலப் புகுந்தவன் பூங்கோதை வாழ்வு தழைவித்தவன்

    காலக் கடவுள் மயிலா புரியிற் கபாலியன்றே

    சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீசுவரர் கோவில் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

    மயிலாப்பூர் பகுதியில் மயிலாப்பூர் காரணீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோவில், மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோவில், மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோவில், மயிலாப்பூர் வாலீசுவரர் கோவில், மயிலாப்பூர் மல்லீசுவரர் கோவில். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் எனப்படுகின்ற சப்த சிவத்தலங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் தரிசிக்கலாம் என்பர். இவை ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்துள்ளன.

    இவற்றைச் சப்த ரிசிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கவுதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர். இந்த சப்த ஸ்தான சிவாலயங்களின் வரிசையில் ஒரு சிவாலயமாக கபாலீஸ்வரர் கோவில் சிறப்பு பெற்றுள்ளது.

    இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது.

    இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ள பகுதி மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

    ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை ஆண்ட பல்லவர் காலத்தில் சைவ சமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையில் இருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோவில் கட்டப்பட்டது.

    திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலே, சிவனேசர் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார்.

    சம்பந்தர் மயிலாப்பூர் வந்த போது, சிவனேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப்பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோவிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைய கபாலீசுவரர் கோவிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோவில் இருப்பதைக் காணமுடியும்.

    திருமுறைத் தலங்களின் பட்டியலில் 24-வது திருமுறை தலமாகத் திகழ்கிறது இந்த கோவில். திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய நாயன்மார்களின் பாடல் பெற்ற திருத்தலம் இது. பெரிய புராணம் போன்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்திற்கான திருப்புகழ் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் அவதரித்த திருத்தலம் இது.

    பார்வதி அன்னை சிவபெருமானை நோக்கி, மயில் வடிவில் இருந்த நான் உங்களை வழிபட்ட இத்தலத்திற்கு மயிலாபுரி என்கிற பெயர் வரவேண்டும். மயில் வடிவில் இருந்து இங்கே நான் ஏற்படுத்திய தீர்த்தத்திற்கு மயில் தீர்த்தம் என்கிற பெயர் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் இத்தலத்திற்கு மயிலாபுரி என்கிற பெயர் வந்தது. மயிலாப்பூர் என்றாகி, மயிலை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. பண்டைய புராண வரலாறுகளில் ஒன்று சிவன் பிரம்மாவை சபித்தது.

    பிரம்மாவிற்குக் கோவில் கிடையாது என்றும், பிரம்மனுக்கு உதவியாகப் பொய்ச் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜையில் சேர்க்கக்கூடாது என்றும் கூறிய சிவபெருமான். பைரவரை உருவாக்கி பிரம்மாவின் ஒரு சிரத்தை கொய்யச் சொன்னார். அதனால் ஐந்து தலைகள் பெற்றிருந்த பிரம்மா, நான்கு தலை கொண்டவராக ஆனார். அதன்பிறகு விமோசனம் வேண்டி சிவபெருமானைப் பிரம்மா வழிபட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

    இங்கே சிவபெருமானை வழிபட்டு நான்காவது தலையை பெற்றார் பிரம்மா. நான்முகனான பிரம்மா, சிவபெருமானை நோக்கி, இத்தலத்தில் நான் உங்களை வணங்கியதாலும், நீங்கள் பிரம்ம கபாலம் ஏந்தியதாலும் இனி இத்தலத்திற்குப் பிரம்ம கபாலீஸ்வரம் என்றும், உங்களுக்கு கபாலீஸ்வரர் என்கிற பெயரும் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அப்படியே ஆகட்டும் என்று சிவபெருமான் அருளினார். இத்தலத்தில் பிரம்மாவை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். இத்தலத்தில் சிவபெருமானை வேதங்கள் வணங்கின. ராமபிரான் ஜடாயுவிற்கு இறுதி கடமைகளைச் செய்த பின்பு, இங்கே வந்து கபாலீஸ்வரரை வணங்கினார். ராமபிரான் முடிசூட்டிக் கொண்ட பின்பு மீண்டும் இங்கே வந்து ஐப்பசி திருவோண விழாவில் கலந்துகொண்டு வழிபட்டார்.

    முருகப்பெருமான் தாய் தந்தையரை வழிபட்டு பேறு பெற்றதால் சிங்காரவேலர் என்று போற்றப்படுவது போன்று, எண்ணற்ற சிறப்புகள் இத்தலத்திற்கு உள்ளன. இத்தலத்தில் அருள்கின்ற ஸ்ரீ கற்பகாம்பாள் அன்னை, நாம் கேட்டவைகளை கொடுப்பதோடு, கேட்க மறந்தவைகளையும் கொடுக்கிறாள்.

    இக்கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர விழாவில் அறுபத்து மூவர் விழா சிறப்பானது.

    அதிலும் நாளை நடைபெறும் அறுபத்து மூவர் வீதி உலா மிக, மிக கோலாகலமானது. ஒரு முறை நேரில் அதை பார்த்து அனுபவித்தால் தான் அந்த மகிமை உங்களுக்கு புரியும்.

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் நிரந்தரமாக கோவில் தேர் இருக்கும்.
    • தேர் செய்வதற்கு பனைமரம் புளியாமரம் காட்டுவாமரம் போன்ற மரங்களை பயன்படுத்தி ஒர் புதிய அழகான தேர் உருவாக்கப்படுகிறது.

    மேல்மலையனூரில் வருடந்தோரும் மாசி மாதம் தேர்திருவிழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்கதர்கள் சாமி திரசனம் செய்வார்கள்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் நிரந்தரமாக கோவில் தேர் இருக்கும். ஆனால் மேல்மலையனூரில் மட்டும் வருடந்தோறும் ஒர் புதிய தேர் செய்யப்படுகிறது. இந்த தேர் 15 நாட்களில் பச்சசை பனைமரங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது.

    தேர் செய்வதற்கு பனைமரம் புளியாமரம் காட்டுவாமரம் போன்ற மரங்களை பயன்படுத்தி ஒர் புதிய அழகான தேர் உருவாக்கப்படுகிறது. மேல்மலையனூர் தேர் சக்கரம் தேவர்களாக பாவிக்கப்படுகிறது.

    • பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது.
    • மகாராஜா ரஞ்சித்சிங் கோவிலுக்கு 820 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார்.

    விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே, இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். வெள்ளித்தகடு பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது இவர் காட்சியளிக்கிறார். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது, அவர்களை எரித்து அழித்த இடம் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே, இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வந்தது. விசாலாட்சி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது. கங்கை நதியின் மேற்குக்கரையில் காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கைநதி ஓடுகிறது. இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால் உத்தர வாகினி என்று அழைக்கின்றனர்.

    தீர்த்தக் கட்டங்கள்: கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும். இதற்கு பஞ்சதீர்த்த யாத்திரை என்று பெயராகும். அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் அஸ்சங்கமேஸ்வரர் எனப்படுகிறார். முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது. இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள ஆதிகேஸ்வரரை வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள பிந்துமாதவர் மற்றும் கங்கேஸ்வரரை வணங்க வேண்டும். பஞ்ச தீர்த்தக்கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள மணிகர்ணிகேஸ்வரரையும், அம்பாளையும் வழிபட வேண்டும்.

    மகாராஜா ரஞ்சித்சிங் கோவிலுக்கு 820 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். காசியில் மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்ஹேஸ்வர் என்றுமே அழைக்கப்பட்டார். இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன்பிறகே சூட்டப்பட்டது. பொதுவாக வயதானவர்களே இந்த தலத்திற்கு போய்வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இளைஞர்களும் இங்கு சென்றுவரலாம். ஏனெனில் காசி விஸ்வநாதர் ஆலயம் ஒரு அறிவுத் திருத்தலம் ஆகும். கல்வியும் ஞானமும் தரும் புண்ணிய ஸ்தலம் இது. காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டிவிநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் என்னைப் போல் அரைகுறையாகத் தான் இருக்கும் என்று சொல்லாமல் சொல்வதைப் போல இந்த விநாயகரின் வடிவமைப்பு அமைந்துள்ளது. எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விநாயகரையும் வழிபடவேண்டும்.

    பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது. காசி என்றால் மிகப் பிரகாசம் என்று பொருள். பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர். பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால் இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர். சிவபெருமான் விரும்பி மகாமயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர். கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில்சுமந்துகொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர். வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.

    பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது. அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது என்பர். இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது. அதிக வெப்பகாலம், அதிக மழைக்காலம், தவிர ஆண்டு முழுதும் காசியாத்திரைக்கு ஏற்ற காலங்கள் ஆகும். முன்பெல்லாம் கால்நடையாகவோ, மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் யாத்திரை போவார்கள். ஆனால் தற்போது ரெயில், பேருந்து, விமானம் மூலம் யாத்திரை செய்வதால் எப்பொழுது வேண்டுமானாலும் காசியாத்திரை மேற்கொள்ளலாம்.

    நம் நாட்டில் உள்ள முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும். நம் நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது, காசி - இராமேசுவரம் யாத்திரை மேற்கொள்ளும் சிறப்புமிக்க தலம் காசி ஆகும். பூலோகக் கைலாசம் என்று சைவர்கள் போற்றும் தலம். காசிக்கு நிகரான தலம் மூவுலகிலும் இல்லை என ஆன்மீகவாதிகள் கூறுவர். ஈசன் காக்கும் மகாமயானம் இங்கே உள்ளது. காசியில் இறப்போர் உடனே மோட்சம் அடைவார்கள். காசி என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும். இங்கே இறக்கும் உயிர்களுக்குச் சிவபெருமான் காதில் ராமமந்திரம் ஓதி மோட்சம் அடைய வழி செய்கின்றார். காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும். நம் நாட்டிலுள்ள புனிதத்தலங்களில் தலை சிறந்த தலம் காசிப்பதியே ஆகும். லோகமாதா அன்னபூரணி காசியம் பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார். காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், காசியில் காவாசி அவினாசி என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர். தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.

    கங்கையின் மகிமை உணர்ந்தவர்கள், சிவகங்கை, நூபுரகங்கை, கங்கைகொண்ட சோழபுரம் எனவும் தங்கள் ஊர்களுக்குப் பெயரிட்டு மகிழ்கின்றனர். மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும். அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி. மகாராஜா ரஞ்சித் சிங், காசி விசுவநாதர் ஆலய விமானத்தைப் பொன் தகடுகளால் வேய்ந்தார்.

    இன்றும் கோபுரம் தங்கமாக ஒளிர்கிறது. கோவில் தூண்களில் சிற்பங்கள் உள்ளன. காசியில் மீட்டருக்கு ஒரு கோவில் எனப் பலகோவில்கள் உள்ளன. கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர். விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும். சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில். காசியின் கங்கைக் கரையில் நம் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால் நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம்.

    • கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோவில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
    • அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.

    திரிம்பகேஸ்வரர் கோவில், திரிம்பாக் திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான இந்துக் கோவில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோவில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

    இது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.

    இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.

    • 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 65-வது திவ்ய தேசமாகும்.
    • சுமார் 600 அடி உயரம் உள்ள மலை மீது இந்த கோவில் அமைந்திருக்கிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம். மலையின் மீது யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். மலையின் அடிவாரத்தில் உற்சவர் மட்டும் அருள்பாலிக்கிறார். இவரது பெயர் 'பக்தவச்சலப் பெருமாள்'. மலையின் ஒரு பகுதியில் யோக ஆஞ்சநேயரும் தரிசனம் தருகிறார்.

    108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 65-வது திவ்ய தேசமாகும். தொண்டை நாட்டில் உள்ள 22 திவ்ய தேசங்களில் இந்த சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. ஏனெனில் காஞ்சிபுரத்திற்கும், திருப்பதிக்கும் இடையில் இந்த திவ்ய தேசம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தை பராங்குச சோழன் என்ற மன்னன் 3-ம் நூற்றாண்டில் கட்டியிருக்கிறான். எனவே இவ்வாலயம் சோழசிம்மபுரம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் சோளிங்கபுரம் என்றானது. அதுவே மருவி 'சோளிங்கர்' என்று அழைக்கப்படுகிறது.

    தல வரலாறு

    பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தரிசிக்க, வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் ஆகிய சப்த ரிஷிகளும் விரும்பினர். ஆனால் பிரகலாதனுக்கு காட்சி கொடுத்த உக்கிர கோலத்தை நீக்கி, சாந்தமாக காட்சியளிக்க வேண்டும் என்று அவர்கள் நரசிம்ம பெருமாளை வேண்டினர். அதற்காக அவர்கள் 7 பேரும் நரசிம்மரை நினைத்து தவம் இருந்த தலம் இதுவாகும். ஒரு காலத்தில் விஸ்வாமித்திர முனிவர், இத்தலத்தில் சிறிதுநேரம் நரசிம்மனை வழிபட்டு, 'பிரம்மரிஷி' பட்டத்தைப் பெற்றார். அதுபோல் தங்களுக்கும் நரசிம்மரின் தரிசனம் உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, சப்த ரிஷிகளும் இந்த தலத்தை தேர்வு செய்து தவம் இயற்றினர். இதையடுத்து சப்த ரிஷிகளின் விருப்பப்படி, நரசிம்மர் தன்னுடைய கோபத்தை தணித்து யோக நிலையில் காட்சி அளித்தார். அந்த கோலத்திலேயே இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் செய்கிறார்.

    சுமார் 600 அடி உயரம் உள்ள மலை மீது யோக நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. அடிவாரத்தில் இருந்து இந்த ஆலயத்தை அடைவதற்கு 1,305 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். மலையின் மீது ஒரு ஏக்கர் பரப்பளவில், 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் யோக நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. இங்கே சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் யோக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். இந்த நரசிம்மப் பெருமாளை, திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

    மூலவரான யோக நரசிம்மர் கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்துள்ளார். இவர் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார். இவரது வடிவத்தை சிலா வடிவம் என்று போற்றுகின்றனர். அருகில் தாயார் அமிர்தவல்லி இருக்கிறார். ஊரின் மையத்தில் உற்சவருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் அனைத்தும் அங்குதான் நடைபெறும். இங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, மலை மீதுள்ள யோக நரசிம்மர் ஆலயம்.

    இந்த மலை மீது 24 நிமிடங்கள் இருந்தாலே, ஒருவர் முக்தியை அடைவார் என்று சொல்லப்படுகிறது. மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது, நரசிம்மர் அவதாரம். இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார் என்று பறைசாற்றிய அவதாரம் இது. அதோடு தன் பக்தர்களுக்காக உடனடியாக காட்சி தந்து அருள்பாலிப்பவர். எனவே நரசிம்மரை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டிய வரம் உடனடியாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பெருமாளுக்கு, ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வழிபாட்டு நடைமுறைகள் இருக்கின்றன. சில கோவில்களில் மொட்டை போடுவார்கள், சில கோவில்களில் உண்டியல் காணிக்கை செலுத்துவார்கள். ஆனால் சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயத்தில் இவை எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒரே கல்லின் மீது குன்றுபோல் அமைந்த இந்த மலை மீது 1,300 படிகளைக் கடந்து வந்து யோக நரசிம்மரை தரிசித்தாலேயே போதுமானது, பக்தர்கள் கேட்கும் வரங்களை அவர் அளித்து விடுவார்.

    இத்தல இறைவனுக்கு கற்கண்டு, வெல்லம், வாழைப்பழம், தயிர்சாதம் நைவேத்தியமாக படைக்கிறார்கள். வேட்டி-சேலையும் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் இத்தல நரசிம்மருக்கும், தாயாருக்கும் அபிஷேகம் நடைபெறும். அப்போது இறைவனை அபிஷேகிக்கும் பால், தயிர், தேன், சர்க்கரை, ஆகியவற்றை பிரசாதமாக வழங்குகிறார்கள். மனவளர்ச்சி குன்றியவர்கள், பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதி இருப்பவர்கள், யோக நரசிம்மரை வழிபட்டால் விரைவில் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தாம்பத்ய பிரச்சினை, குழந்தையின்மை, திருமணத்தடை நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இந்த கோவிலுக்கு மலையேறும் பக்தர்கள், மலைப்பாதையின் வழியில், சிறுசிறு கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து வழிபடுகிறார்கள். இதனால் புதிய வீடு கட்டும் யோகம் வாய்க்கும் என்று நம்புகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கார்த்திகை மாதத்தில்5 வெள்ளிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷ பூஜைகள் செய்யப்படும். சித்திரை மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். வைகாசியில் நரசிம்மர் ஜெயந்தி, காஞ்சி கருடசேவை, ஆடிப் பூரம், ஆவணியில் பவித்ரோற்சவம், புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாளமாமுனி உற்சவம், மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து உற்சவம், தை பொங்கல் விழா, மாசியில் தொட்டாச்சாரியா உற்சவம் போன்றவை நடைபெறுகின்றன. யோக நரசிம்மராக கண் மூடிய நிலையில் இருக்கும் இத்தல மூலவர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து அடியாளர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். குறிப்பாக கார்த்திகை ஞாயிற்றுக்கிழமையில் இந்த நரசிம்மரை வழிபடுவது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.

    சங்கு, சக்கரத்துடன் ஆஞ்சநேயர்

    யோக நரசிம்மர் அருளும் மலைக்கு எதிரில் 406 படிகளுடன் அமைந்த அழகிய குன்றின் மீது, யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களுடன் இருக்கும் இவர் ஒரு கையில் சங்கும், மற்றொரு கையில் சக்கரமும், மீதமுள்ள இரண்டு கரங்களில் ஜெபமாலையும் தாங்கி காட்சி தருகிறார். சிறிய மலையில் இருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாம்.

    சப்த ரிஷிகள் இந்த மலையில் தவம் இருந்தபோது, அவர்களுக்கு காலன், யோகன் என்ற இரண்டு அரக்கர்களால் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பெருமாள், ஆஞ்சநேயரை இத்தலம் சென்று சப்த ரிஷிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி ஆணையிட்டார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து, இரண்டு அரக்கர்களுடன் போரிட்டார். ஆனால் அரக்கர்களை வெல்ல முடியவில்லை. இதையடுத்து பெருமாளிடம் இருந்து அவரது சங்கு, சக்கரத்தை வாங்கி, அதனைக் கொண்டு இரண்டு அரக்கர்களையும் விரட்டியடித்து, ரிஷிகளுக்கு பாதுகாப்பு அளித்தார். அதன்பிறகுதான் சப்த ரிஷிகளுக்கு பெருமாள், யோக நரசிம்மராக இங்கு காட்சியளித்தார். அந்தக் காட்சியை ஆஞ்சநேயரும் கண்டுகளித்தார்.

    அப்போது நரசிம்மர், "நீயும் இங்கு யோக நிலையில், என்னுடைய சங்கு, சக்கரத்தை ஏந்தி இரு. என்னுடைய பக்தர்களின் குறையை போக்கி அவர்களுக்கு அருள்புரிவாயாக" என்றார். அதன்படியே நரசிம்மர் கோவிலுக்கு அருகில் உள்ள குன்றில், ஆஞ்சநேயரும் யோக நிலையில் அருள்பாலித்து வருகிறார்.

    அமைவிடம்

    வேலூரில் இருந்து 52 கிலோமீட்டர் தூரத்திலும், ராணிப்பேட்டையில் இருந்து 29 கிலோமீட்டர் தூரத்திலும், திருத்தணியில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்திலும் சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம் இருக்கிறது.

    • ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி.
    • கோவிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி.

    மூலவர்: காசி விஸ்வநாதர்

    அம்மன்/தாயார்: விசாலாட்சி

    தீர்த்தம்: கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.

    பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன்

    புராண பெயர்: வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம்.

    திருவிழா: தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்ஸவம்), ஹோலிப் பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி.

    தல சிறப்பு: இந்தியாவில் 12ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா பீடமாகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.

    ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள். காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.

    இந்த கோவிலை முதன்முதலில் கட்டியது யார் எனக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். முகலாய சக்ரவர்த்தி அக்பர் தனது வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார். தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துள்ளார். ஆனால் காசி விஸ்வநாதர் கோவிலின் பழங்கால வரலாற்றிலும் கல்வெட்டுகளிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதுமில்லை. கி.பி 1034ம் ஆண்டு முதல் காசி விஸ்வநாதர் கோவில் பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தள்ளப்பட்டுள்ளது. இதை இந்துக்கள் திரும்பத் திரும்ப கட்டி வந்துள்ளனர். 1669-ல் அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோவில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார். இப்போதும் இந்த மசூதி இருக்கிறது. சிருங்கர் மண்டப சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம். இதிலிருந்து காசி கோவில் ஒரு புண்ணி சத்திரம் மட்டுமல்ல ஒற்றுமையின் சின்னம் என்பதும் நமக்கு புரிகிறது.

    இங்கு அன்ன பூரணி, சத்திய நாராயணர், டுண்டி ராஜவிநாயகர், சாட்சி விநாயகர், இராமர், அனுமன், சனிபகவான், துர்காதேவி, கவுடி மாதா, பைரவர், மகாகாளர், மகா காளி, பாண்டுரங்கன், நீலகண்டர், தண்டபாணீச்வரர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். விசுவநாதர் கோவில் கர்ப்பகிருகம் வடநாட்டுப்பாணியில் கோபுரம் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது. மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.

    கோவிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி. ஆதி விசுவநாதர் கோவிலிருந்த இடத்தில் மசூதி உள்ளது. அந்த நந்தியின் அருகேதான் ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோவில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார். இந்த கோவில் மிகவும் சிறிய கோவில் தான். குறுகலான பாதையில் சென்று கோவிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்னபூரணி கோவிலும், விசாலாட்சி கோவிலும் தனியே சிறிது தொலைவில் உள்ளன. விசாலாட்சி கோவில் நமது தென்னாட்டுப் பாணியில் உள்ளது. இங்கே நவக்கிரகங்களும் உள்ளன. அன்னபூரணி அம்பாள் கோவிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள்.

    பிரார்த்தனை:

    வியாச காசியில், வியாசர் வழிபட்ட சிவலிங்கத்தை வழிப்பட்டால் தான், காசிக்கு வந்த முழுப் பலனையும் அடையலாம். காசிக் காவலர் பைரவர் கோயிலில், காசிக் கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டால், நம்மைத் தீய சக்திகள் அண்டாது. கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. விசுவநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. ஞான வாவியைத் தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது - என்று முனிவர்கள் பலர் கூறியுள்ளனர்.

    நேர்த்திக்கடன்:

    பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் தம் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

    ×