search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97582"

    • திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷம் எழுப்பி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    • பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடந்தது. கோவில் சன்னதியில் தொடங்கிய தேரோட்டம் கர்னால வீதி, பேரி வீதி, காந்தி வீதி வழியாக கோவிலின் ரத மண்டபத்தை வந்தடைந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷம் எழுப்பி வடம் பிடித்து தேர் இழுத்தனர். வீதி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், சாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டம் முடிந்ததும் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சாமிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது.

    அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர், 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    நாராயணவனம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மலா் அலஙகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பூர் :

    வைகாசி விசாகத்தையொட்டி திருப்பூர் கொங்கணகிாி முருகன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மலா் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்கள் காலை முதல் நீண்ட வாிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    மதியம் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தோில் எழுந்தருளினார். மாலை 5 மணிக்கு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க பின்னால் இருந்து டிராக்டர் தேரை நகர்த்தியது. தேர் கோவிலை சுற்றிவந்து நிலையை அடைந்தது. தேரோட்டம் முடிந்தவுடன் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • இது வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக திகழ்கிறது.
    • 5-ந் தேதி தசாவதாரம் நிகழ்ச்சி மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் நடக்கிறது.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது கூடலழகர் பெருமாள் கோவில். இது வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக திகழ்கிறது. இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.

    விழாவையொட்டி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதற்காக கூடலழகர் பெருமாள் கோவில் எதிரே பாண்டிய வேளாளர் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரை அலங்கரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் திருவிழாவில் 5-ந் தேதி தசாவதாரம் நிகழ்ச்சி மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • துறையூர் வெங்கடாஜலபதி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
    • ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இன்று தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியினை துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெடிக்கல் முரளி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் துறையூர் ஒன்றிய தி.மு.க. கழக செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சரவணன், நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன் தாஸ், ஒன்றிய துணைச் செயலாளர் விஜய் தர்மன், பெரிய ஏரி பாசன குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேனை செல்வம், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அறந்தாங்கி அருகே விருதபுரீஸ்வரர் கோவில் இரட்டை தேரோட்டம் நடைபெற்றது
    • பக்தர்கள் அரோகரா, விருதபுரீஸ்வரா என்ற நாமத்தைக் கூறி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருப்புனவாசல் ஸ்ரீ விருதபுரீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் ஊர் முக்கியஸ்தர்கள், மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரட்டை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    முதல் தேரில் ஸ்ரீ விருதபுரீஸ்வரர் சாமியும், 2-வது தேரில் ஸ்ரீ பெரியநாயகி அம்பாளையும் எழுந்தருளச் செய்தனர். அப்போது பக்தர்கள் அரோகரா, விருதபுரீஸ்வரா என்ற நாமத்தைக் கூறி தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலை சுற்றி நான்கு வீதிகளிலும் தேர்கள் வலம் வந்தது. திருத்தேர்களில் அமர்ந்திருந்து விருதபுரீஸ்வரர், பெரியநாயகி அம்பாள் சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆலயத்தைச் சுற்றிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருப்புனவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது.
    • இன்று இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து தினந்தோறும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.

    பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் திருமண மேடையில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து திருமணக் கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருவிழாவின் 7ம் நாள் நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்தே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்தும், பாட்டுப்பாடியும் மலைக்கோவிலுக்கு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் பழனியில் இன்று கூட்டம் அலைமோதியது. இன்று இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • மதுரை அருகே திருவாதவூரில் திருமறைநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட கோவிலில் வருடந்தோறும் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அப்போது சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த திரளான கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலை சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு திருமறைநாதர்- வேதநாயகி அம்பாள் மேலூரில் உள்ள மண்டக படியில் எழுந்த ருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    திருவாதவூர் திருமறைநாதர் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. காலை 9 மணியளவில் திருமறைநாதர் பிரியாவிடையுடன் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரிலும், வேதநாயகி அம்பாள் சட்ட தேரிலும் எழுந்தருளினர்.

    அதன்பின் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 9.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். கோவில் ரத வீதியில் பக்தி கோஷத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. காலை 10.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. தேரோ ட்டத்தில் மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்க ணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அறந்தாங்கி அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கள்ளனேந்தல் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்திருவிழா நடைபெறுவது வழக்கம், விழாவினையொட்டி திருத்தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு கடந்த 22-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது.10 நாட்கள் நடைபெற்ற விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    முன்பாக திருத்தேரில் அம்மனை எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் முன்னிலையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • உற்சவ அம்மனை பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர்.
    • வழிநெடுகிலும் பக்தர்கள் தேரின் மீது மலர் தூவி வரவேற்று வழிபட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக திருவிழா நடை பெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நாளை வரை தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 8.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் உற்சவ அம்மனை அலங்கரித்து சன்னதிதெரு, தெற்கு ரதவீதி, நடுத்தெரு வழியாக தேர் நிற்கும் கீழரதவீதிக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன்பிறகு உற்சவ அம்மனை பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர். அதைத்தொடர்ந்து தேரில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், தீபாராதனை போன்றவை நடந்தது.

    அதன்பிறகு 9 மணிக்கு திருத்தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைத்த நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தேரை பக்தர்கள் கீழரதவீதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்து தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் கீழ ரதவீதியில் கொண்டு வந்து பகல் 12.30 மணிக்கு நிலையை வந்தடையும். வழிநெடுகிலும் பக்தர்கள் உயரமான கட்டிடங்களில் இருந்து தேரின் மீது மலர் தூவி வரவேற்று வழிபட்டனர்.

    தேரோடும் வீதிகளில் பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானக்காரம், மற்றும் குளிர்பானங்கள் தானமாக வழங்கப்பட்டன. தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12.30 மணிக்கு அன்னதானமும், காஞ்சிதர்மமும் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 10 மணி வரை 2 மணி நேரம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    10 மணிக்கு பிறகு படகு போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கி நடை பெற்றது.

    • தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம், காஞ்சி தர்மம் நடக்கிறது.
    • நாளை முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடக்கிறது.

    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், அம்மன் வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடைபெற்றது.

    விழாவின் 9-ம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம், காஞ்சி தர்மம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு 7.30 மணிக்கு தேவார இன்னிசை, 8.45 மணிக்கு பக்தி பஜனை, 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அம்மன் ஆராட்டுக்கு எழுந்தருளல், தொடர்ந்து மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனை, 9 மணிக்கு தெப்பத்திருவிழா, 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தேரோட்டத்தையொட்டி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விவேகானந்தா கேந்திரா தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்க வசதியாகவும், சுற்றுலா பயணிகளும் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய வசதியாகவும் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து 2 மணிநேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தகவலை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சேலம் நகரின் மத்தியில் திருமணிமுத்தாற்றின் மேற்கு கரையில் பழமையான பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர், அழகிரிநாத பெருமாள் கோவில்கள் உள்ளன.
    • கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    சேலம்:

    சேலம் நகரின் மத்தியில் திருமணிமுத்தாற்றின் மேற்கு கரையில் பழமையான பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர், அழகிரிநாத பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த விழாவின்போது 2 நாட்கள் தேரோட்டம் நடத்தப்படும். முதல் நாளில் சுகவனேஸ்வரர் தேரும், 2-வது நாளில் பெருமாள் தேரும் வலம் வரும். சைவ, வைணவ ஒற்றுமைக்கு இலக்கணமாக திகழும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா 2 கோவில்களிலும் நடைபெற்று வருகிறது.

    சேர, சோழ, பாண்டிய மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும் போற்றப்பட்ட சுகனவனேஸ்வரர் கோவில், அருணகிரிநாதராலும், அவ்வையாராலும் பாடப்பட்ட தலமாகும். இந்த கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த ரதவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது. 25-ந்தேதி கொடியேற்றமும், தொடர்ந்து காலை மாலை சாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருள்கிறார். பின்பு 9.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். 5 ஆண்டுக்கு பின்னர் இந்த தேரோட்டம் நடப்பதால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சேலம் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோவில் வைகாசி விசாக உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து தேர்வீதிக்கு சாமி எழுந்தருள்கிறார். இதை தொடர்ந்து சிறப்பு பூஜை நடக்கிறது. பின்பு தேரோட்டம் தொடங்குகிறது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். ராஜகணபதி கோவில் பகுதியிலிருந்து புறப்படும் தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ராஜகணபதி கோவில் அருகே நிலை சேர்கிறது.

    அடுத்தடுத்து 2 நாட்கள் தேரோட்டம் நிகழ்வதால் சேலம் மாநகரம் விழா கோலம் பூண்டுள்ளது. 2 கோவில்களிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கோவில்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. தற்காலிக கடைகள் ஆங்காங்கே முளைத்துள்ளன. 2 தேர்களையும் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    தேரோட்டத்தை முன்னிட்டு சேலம் கடைவீதி தேரடியில் தொடங்கி ஆனந்தா இறக்கம், லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், 2-வது அக்ரஹாரம், வரதராஜபெருமாள் கோவில்(பட்டைக்கோயில் ), சின்னக்கடைவீதி, பெரியக்கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் இறக்கம், முதல் அக்ரஹாரம் மற்றும் கடைவீதி ஆகிய பகுதிகளில் 2, 3-ந்தேதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்த்திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் அமைப்பினர் செய்து வருகிறார்கள்.

    • ஏற்காட்டில் சேர்வராயன் கோவில் உள்ளது. ஏற்காடு சுற்றுவட்டார பகுதியில் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது.
    • ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேர்வராயன் கோவில் உள்ளது. ஏற்காடு சுற்றுவட்டார பகுதியில் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோவில் தேரோட்டம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடந்தது.

    விழாவையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சேர்வராயப்பெருமாள், காவிரியம்மாள் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரோட்டம் நடந்தது. தேரை ஏற்காடு எம்.எல்.ஏ சித்ரா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தவள்ளி அண்ணாதுரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சின்னவெள்ளை கோகிலா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பு வெங்கடாஜலம், மஞ்சுளா ராமசந்திரன், செந்தில் பிரபு, தனலட்சுமி சின்னசாமி, ராஜேந்திரன், சிவசக்தி ரவிசந்திரன் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள், மலை கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் ஏற்காட்டை சுற்றியுள்ள 72 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களில் விளைந்த ராகி, கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களை சாமிக்கு காணிக்கையாக படைத்து வழிபாடு நடத்தினர். தேர் வரும் வழியில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டனர்.

    ×