search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98381"

    பிளஸ் டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வியடைந்ததால் மன வேதனை அடைந்த மாணவி முத்துலட்சுமி தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் பொன் பலவேசம். பனை ஏறும் தொழிலாளி. இவரது மகள் முத்துலட்சுமி (வயது 16). இவர் குளத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.

    இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது. அதில் கணக்குப்பதிவியல், வணிகவியல் ஆகிய இரு பாடங்களில் மாணவி முத்துலட்சுமி தோல்வி அடைந்தார். இதில் மனவேதனை அடைந்த முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்தார்.

    உடல் கருகி உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி தீக்குளித்தது குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலையில் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மணி (வயது 24). இவர் கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.

    மணியின் குடும்பத்தினர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கரூர் அருகே பெரியாயிபாளையம் பகுதியில் வசித்து வந்தனர். அப்போது இவர்கள் குடியிருந்த வீடு அருகில் ஆனந்த் என்பவரின் குடும்பமும் வசித்து வந்தது.

    ஆனந்தின் மகள் சவீதா (19). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மணியின் குடும்பம் கரூரில் இருந்தபோது மணிக்கும் சவீதாவுக்கும் காதல் ஏற்பட்டது.

    தற்போது மணியின் குடும்பம் சென்னிமலை பகுதிக்கு குடி வந்த பிறகும் மணிக்கும் சவீதாவுக்கும் காதல் நீடித்தது. இவர்களது காதலுக்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.

    எனவே மணியும், சவீதாவும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் சென்னிமலை மலை அடி வாரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.

    சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இருவரின் பெற்றோர்களையும் வர வழைத்து சமாதானம் செய்து காதல் ஜோடியை மணியின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    மாற்றுச்சான்றிதழ் வாங்கி செல்லும்படி வற்புறுத்தியதாக பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கேரள மாநிலம் வல்லிகுன்னு பகுதியை சேர்ந்தவர் ஹரிதா செக்குண்ணி (வயது 23). இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. உளவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மாணவி ஹரிதா செக்குண்ணி, தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி. பாரியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த 14.11.2017 அன்று மாலை என்னுடன் தங்கியுள்ள விடுதி மாணவி, காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விடுதி காப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை.

    அதன் பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த மாணவியை சக மாணவிகளின் உதவியுடன் கால் டாக்சி ஒன்றில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை பெற்றுவிட்டு அதே கால் டாக்சியில் இரவு 11 மணிக்கு விடுதிக்கு திரும்பினோம். அப்போது விடுதியின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.

    நாங்கள் நீண்ட நேரம் கழித்து வந்ததால் விடுதி கண்காணிப்பாளர் பிரேமா எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் கால் டாக்சி டிரைவர் மருத்துவமனையில் இருந்து வருவதாக தெரிவித்ததையடுத்து, நாங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம்.

    இதுதொடர்பாக என்னிடம் விசாரணை நடத்தாமல் 16.11.2017 அன்று மாலை மாற்றுச்சான்றிதழ் பெற்று செல்லுமாறு எங்கள் துறை தலைவர் பேராசிரியர் வேலாயுதம் வற்புறுத்தியதுடன், தகாத வார்த்தைகளை பேசினார். இதனால் மனமுடைந்த நான் மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொண்டேன். இதனால் என்னுடைய கல்வி தடைபட்டு விட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து மாணவி அளித்த மனு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அந்த மனு பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைசாமி ஆகியோர் நேற்று மதியம் ஹரிதா செக்குண்ணியிடம் நேரில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பல்கலைக்கழக துறை தலைவர் வேலாயுதம், விடுதி காப்பாளர் பிரேமா, மேற்பார்வையாளர் தர்மராஜ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, மாணவி அளித்த புகார் தொடர்பாக இரு தரப்பிடமும் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மாணவி ஹரிதா செக்குண்ணியுடன் படித்த சக தோழிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் அவர்கள் கல்லூரிக்கு வந்த உடன் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்றனர். #tamilnews
    கர்நாடகாவில் தனது திருமண நாளன்றும் தேர்வை கைவிடாமல், தேர்வு எழுதிவிட்டு திருமணம் செய்து கொண்ட மாணவிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளன. #karnatakagirlmarriage
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் மாண்ட்யா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்து வருபவர் காவியா. இவருக்கும், லோகித் என்பவருக்கும் பெற்றோர் திருமணம் நிச்சயித்திருந்தனர்.

    இந்நிலையில், திருமண தேதியில் தேர்வு அறிவிக்கப்பட்டது. திருமணத்திற்காக தேர்வை கைவிட மனமில்லாத காவியா, தான் நிச்சயம் தேர்வு எழுத வேண்டும் என தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, காலை 9.15 மணிக்கு மணக்கோலத்தில் தேர்வறைக்குச் சென்ற காவியா, 11 மணிக்குள் தேர்வை முடித்துவிட்டு, குறிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் திருமணமும் செய்துகொண்டார்.


    ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான தினமாக கருதப்படும் திருமண நாளிலும், தனது படிப்பின் மீது இருந்த ஆர்வம் மற்றும் மரியாதையால் தேர்வு எழுத வந்த காவியாவுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. #karnatakagirlmarriage
    உத்தமபாளையம் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 இளம்பெண்கள் மாயமாகினர்.
    தேனி:

    உத்தமபாளையம் அருகில் உள்ள என்.டி.பட்டி ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சுரபியா (வயது21). இவர் கம்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற சுரபியா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி ஆஸ்பத்திரிக்கு போன் செய்து விசாரித்தார். அவர்கள் சுரபியா வேலை முடிந்து சென்று விட்டதாக கூறினர்.

    அக்கம் பக்கம் தேடி பார்த்தும் சுரபியா காணாததால் சுப்பிரமணி கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாயமான சுரபியாவை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் தேசியவிநாயகம் பிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் ஞானசவுந்தர்யா (21). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற ஞானசவுந்தர்யா வீடு திரும்பாததால் ராமசாமி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். அங்கு இல்லாததால் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன ஞானசவுந்தர்யாவை தேடி வருகின்றனர்.
    ×