search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு"

    நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நாய்களின் இயற்கை உபாதையை கழிக்க செய்தால் உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
    பெங்களூரு

    பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு ஆய்வின்படி 80 ஆயிரம் வளர்ப்பு நாய்கள் இருப்பது தெரியவந்தது. கட்டாயம் உரிமம் பெற்றப் பின்னரே வளர்ப்பு நாய்களை வளர்க்க வேண்டும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டது.

    தற்போது வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் அவற்றுக்கு உடல் நலக்குறைவு அல்லது வயது முதிர்ச்சி ஆனால் அவற்றை வீதிகளில் விட்டு விடுகின்றனர். இதனால், சாலைகளில் வளர்ப்பு நாய்கள் இறந்து கிடப்பதை காண முடிகிறது.

    நடைபயிற்சி என்ற பெயரில் சாலை ஓரங்களில் நடைபாதைகளில் நாய்களை அழைத்துச் செல்வோர் அவைகளை இயற்கை உபாதை கழிக்க வைக்கின்றனர். இதனால், நடைபாதைகளில் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற அவலநிலைகளை தடுக்க மாநராட்சி அதிரடியான திட்டம் ஒன்றை தயார் செய்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் அளிக்க மீண்டும் முடிவு செய்துள்ளது. அதாவது, வருகிற 15-ந் தேதிக்குள் வளர்ப்பு நாய்கள் வைத்துள்ள அனைவரும் கட்டாயம் மைக்ரோ சிப் பொருத்தவேண்டியது அவசியம்.

    அலுவலகம், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஒரே ஒரு நாயை மட்டும் வளர்க்க அனுமதி வழங்கப்படும். வெளிநாட்டு நாய்களுக்கு இந்த மைக்ரோ சிப் பொருத்த அனுமதி கட்டாயம். இந்திய நாய்களை வளர்க்க உரிமம் தேவையில்லை. ஆனால், மைக்ரோசிப் பொருத்தவேண்டும். வளர்ப்பு நாய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அதிகாரிகள் வரும்போது அதற்கு இடையூறு செய்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சாலை அருகே நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நாய்களின் இயற்கை உபாதையை கழிக்க செய்தால் உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

    கடந்த 6 மாதமாகியும் தமிழக எல்லையை தாண்டாத பெருமாள் சிலை வழியில் உள்ள சிக்கல்களை கடந்து எப்போது பெங்களூருக்கு கொண்டு செல்லப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    ஓசூர்:

    கர்நாடக மாநில பெங்களூரில் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று 108 அடி உயரத்தில் பெருமாள் சிலை ஒன்று அமைக்க முடிவு செய்தது.

    இந்த பெருமாள் சிலையானது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு மலையில் இருந்து ஒரே கல்லை எடுத்து வடிவமைக்கப்பட்டது. இந்த பெருமாள் சிலையின் பணிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் மாதம் பெங்களூருக்கு லாரி ஒன்றின் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

    ஆனால் சிலையின் எடை அதிகம் என்பதால் இந்த சிலை பாலங்களை கடக்க தேசிய நெடுஞ்சாலை அனுமதிக்கவில்லை. இதனால் பாலங்கள் அருகே தற்காலிக மண்பாதை அமைத்து இந்த சிலை ஓசூருக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கர்நாடக எல்லையான ஓசூர் அருகே உள்ள பேரண்டப் பள்ளிக்கு இந்த பெருமாள் சிலை வந்துவிட்டது.

    ஆனால் இந்த லாரி அங்குள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை கடந்தால் மட்டுமே பெங்களூருக்கு கொண்டு செல்ல முடியும். இதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி தரவில்லை என்பதால் ஆற்றின் குறுக்கே தற்காலிக மண்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆனால் ஆற்றின் குறுக்கே பாதை அமைத்தால் தங்களுக்கு வரும் தண்ணீர் தடைபடும் என்று அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பாதையின் கீழே தண்ணீர் போக குழாய் அமைத்து தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றின் குறுக்கே மண்பாதை அமைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    கடந்த 6 மாதமாகியும் தமிழக எல்லையை தாண்டாத இந்த பெருமாள் சிலை வழியில் உள்ள சிக்கல்களை கடந்து எப்போது பெங்களூருக்கு கொண்டு செல்லப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    மண் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று 10-வது நாளாக பெருமாள் சிலை அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை அந்த பகுதியில் செல்பவர்கள் திரளாக வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
    18-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பெங்களூருவில் 8,514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் கூறினார். #LokSabhaElections2019
    பெங்களூரு:

    பெங்களூரு மாநகராட்சி கமிஷனரும், பெங்களூரு நகர மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மஞ்சுநாத் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெங்களூரு நகரில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்திய என 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 3 தொகுதிகளுக்கும் வருகிற 18-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெங்களூரு வடக்கு தொகுதியில் 31 பேரும், பெங்களூரு மத்திய தொகுதியில் 22 பேரும், பெங்களூரு தெற்கு தொகுதியில் 25 பேரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

    பெங்களூருவில் 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 72 லட்சத்து 64 ஆயிரத்து 796 வாக்காளர்கள் உள்ளனர்.

    தேர்தல் ஆணைய வழிக்காட்டுதலின்படி படம் பொறிக்கப்பட்ட வாக்குச்சீட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. நாளை (அதாவது இன்று) மாலை 5 மணிக்குள் இந்த பணி முழுவதுமாக முடிக்கப்பட்டு விடும். மேலும் வாக்குச்சாவடியை கண்டுபிடிப்பது, வாக்களிப்பது எப்படி?, புகார்கள் தெரிவிப்பது எப்படி? என்பன போன்ற அம்சங்கள் அடங்கிய வழிக்காட்டு புத்தகம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

    தேர்தல் அடையாள அட்டையை பிறரிடம் கொடுப்பது குற்றமாகும். இவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 3 தொகுதிகளையும் சேர்த்து பல்வேறு செயல்களுக்காக அனுமதி கேட்டு ‘சுவிதா’ செயலி மற்றும் நேரில் வந்தவர்களிடம் இருந்து 1,298 விண்ணப்பங்கள் வந்தன. இதில், 1,202 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 49 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு, 47 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ‘சி-விஜில்’ செயலி வழியாக மொத்தம் 101 புகார்கள் வந்தன. இதில் 29 புகார்கள் நிராகரிக்கப்பட்டன. 69 புகார்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

    3 பாராளுமன்ற தொகுதிகளிலும் பணம்-பரிசு பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள், செலவு கணக்கீடு குழு உள்பட மொத்தம் 551 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பெங்களூரு நகரில் உள்ள 3 தொகுதிகளிலும் இதுவரை ரூ.3.20 கோடி ரொக்கம், ரூ.5.75 கோடி மதுபானம், 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை பறக்கும் படை, போலீசார் உள்பட பல்வேறு குழுவினர் சார்பில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கலால் சட்டத்தின் கீழ் மொத்தம் 2,573 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியானது உதவி தேர்தல் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 11-ந் தேதி நடந்த பயிற்சியில் 42 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். வாக்குச்சாவடியில் ஊழியர்களை நியமிக்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

    3 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 28 உதவி தேர்தல் அதிகாரிகளின் அலுவலகத்திலும் தபால் ஓட்டுகள் செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 5,499 தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு நகரில் மொத்தம் 8,514 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பெங்களூருவில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்காக 6,869 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன. மொத்தம் 982 கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் உள்பட 1,437 வாகனங்கள் தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண்கள் அதிகாரியாகவும், ஊழியர்களாகவும் பணி செய்ய உள்ளனர்.

    பெங்களூரு நகரில் மொத்தம் 477 வாக்குச்சாவடிகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. 1,234 பேர் நுண்பார்வையாளர்களாக செயல்பட உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ‘வீல்சேர்’, பூதக்கண்ணாடி வசதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளை அழைத்து வருவதற்காக வாடகை கார் வசதிகள் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 16-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

    தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களை கேட்டு பெறவும், புகார்களை அளிக்கவும் பெங்களூரு மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் தொடர்பு மையம தொடங்கப்பட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களும், 24 மணிநேரம் செயல்படும் இந்த மையத்தை 1950 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். இதுவரை 34 ஆயிரத்து 5 அழைப்புகள் வந்துள்ளது.

    15-ந் தேதிக்குள் (நாளை) வேட்பாளர்கள் தேர்தல் செலவு விவரங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள், கட்சிகள் உணவு வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாகன கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 16-ந் தேதியில் இருந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட இருக்கிறது. ஓட்டல்களில் தங்கும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.



    16-ந் தேதி மாலை 6 மணியுடன் பகிரங்க பிரசாரம் ஓய்கிறது. வாக்குப்பதிவு தினத்தில் வாக்குச்சாவடியை சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் பிரசாரம் செய்யவும், செல்போன் பயன்படுத்தவும், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் கூறிய ஆவணங்களை தவிர்த்து பிற ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது. வாக்குப்பதிவுக்கு பிறகு மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசாரின் உதவியுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

    பெங்களூரு வடக்கு தொகுதியில் பதிவாகும் வாக்குகள் விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் இந்தியன் உயர்நிலைப்பள்ளி(பெங்களூரு வடக்கு), பேலஸ் ரோட்டில் உள்ள மவுண்ட் கார்மல் பெண்கள் பி.யூ. கல்லூரி (பெங்களூரு மத்திய தொகுதி), ஜெயநகரில் உள்ள எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. பி.யூ. கல்லூரி (பெங்களூரு தெற்கு) ஆகியவற்றில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையானது மே மாதம் 23-ந் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019

    கர்நாடகாவில் மாணவர்களுக்கான தேர்வில், மாநில முதல்வரை கேலி செய்யும் வகையில் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். #BangloreTeacherDismissed
    பெங்களூரு:

    பெங்களூருவில் மவுண்ட் கார்மெல் ஆங்கில உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளியில் தற்போது 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கன்னட மொழிப்பாடத் தேர்வுக்காக தயாரித்த வினாத்தாளில், ‘சரியான விடையை தேர்வு செய்க’ எனும் தலைப்பில்,  அரசியல் தலைவர்களை கேலி செய்யும் வகையில் ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது.

    ‘விவசாயிகளின் நண்பன் யார்?
    அ) மண்புழு, ஆ) முதல்வர் குமாரசாமி, இ) பாஜக தலைவர் எட்டியூரப்பா’ என அந்த கேள்வி இருந்தது.

    அந்த கேள்வி இடம்பெற்றிருந்த வினாத்தாளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி மற்றும் பாஜக தலைவர் எட்டியூரப்பா ஆகியோர் குறித்த மீம்ஸ்களும் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன.



    இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராகவேந்திரா கூறுகையில், ‘இந்த கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியரை உடனடியாக பணியில் இருந்து நீக்கி விட்டோம். பள்ளியின் தலைமைக்கு தெரியாமலேயே இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கட்சியினரையும், அரசியலையும் ஊக்குவிக்கும் எண்ணத்தோடு பள்ளி நிர்வாகம் செயல்படவில்லை என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன்’ என்றார். #BangloreTeacherDismissed 

    மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. #IPL2019 #CSK #RCB
    சென்னை:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் உலக கோப்பை முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டி வந்தது. ஆனால் முதல்முறையாக இந்த ஆண்டு உலக கோப்பைக்கு முன்பாக ஐ.பி.எல். நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். முடிந்து அடுத்த இரண்டரை வாரங்களில் உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதனால் இந்த ஐ.பி.எல்.-ல் முன்னணி வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி நல்ல ஆட்டத்திறனோடு தேசிய அணிக்கு திரும்ப முயற்சிப்பார்கள். அந்த வகையில் இந்த ஐ.பி.எல். தனித்துவம் பெற்றுள்ளது.

    தொடக்க லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று கோதாவில் இறங்குகின்றன.

    பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சீசனில் அம்பத்தி ராயுடு (602 ரன்), ஷேன் வாட்சன் (555 ரன்), கேப்டன் டோனி (455 ரன்), சுரேஷ் ரெய்னா (445 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் அளித்த கணிசமான பங்களிப்பு கோப்பையை வெல்ல உதவிகரமாக இருந்தது. இந்த முறையும் இவர்களை தான் சென்னை அணி அதிகமாக நம்பி இருக்கிறது. சென்னை அணியில் 12 வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். இதில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு 39 வயது ஆகிறது. ஆனாலும் அவர்களின் அனுபவம் அணிக்கு அனுகூலமாக இருக்கும்.

    உள்ளூரில் ரசிகர்களின் ஆரவாரம் சென்னை அணிக்கு எப்போதும் கூடுதல் உத்வேகம் அளிக்கும். காவிரி நதிநீர் பிரச்சினை போராட்டம் காரணமாக கடந்த ஆண்டில் சென்னையில் ஒரு ஆட்டம் மட்டுமே நடந்தது. எஞ்சிய ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த முறை இங்கு 7 லீக்கிலும் சென்னை அணி விளையாட இருப்பது சாதகமான அம்சமாகும்.

    பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வலுவாகவே இருக்கிறது. ஆனால் சென்னைக்கு எதிராக மோதுவது என்றாலே பெங்களூரு அணி வதங்கி போய் விடுகிறது. சென்னைக்கு எதிராக இதுவரை 22 ஆட்டங்களில் மோதியுள்ள பெங்களூரு அணி அதில் 7-ல் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 14-ல் தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. அதுவும் சென்னை அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களிலும் பெங்களூரு அணிக்கு தோல்வியே மிஞ்சியது. இந்த தோல்விப்பயணத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் பெங்களூரு அணியினர் ஆயத்தமாகியுள்ளனர்.

    சென்னை வீரர் சுரேஷ் ரெய்னாவும், பெங்களூரு கேப்டன் விராட் கோலியும் சாதனையின் விளிம்பில் உள்ளனர். ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு ரெய்னாவுக்கு 15 ரன் தேவைப்படுகிறது. 52 ரன்கள் எடுத்தால் கோலி இந்த இலக்கை அடைவார்.

    பொதுவாக சேப்பாக்கம் ஆடுகளம் வேகம் குறைவாக இருக்கும். அதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்த ஸ்டேடியத்தில் பெங்களூரு அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், டேவிட் வில்லி, மொகித் ஷர்மா அல்லது ஹர்பஜன்சிங்.

    பெங்களூரு: பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஹெட்மயர், ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், பவான் நெகி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஷிவம் துபே அல்லது மொயீன் அலி.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #IPL2019 #CSK #RCB
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இன்று பெங்களூரு எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #BengaluruFC #FCGoa #ISLFinal
    மும்பை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி தொடங்கியது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை குறுக்கிட்டதால் சில காலம் இடைவெளி விட்டு நடந்த இந்த போட்டியில் லீக் ஆட்டம் முடிவில் பெங்களூரு, எப்.சி., எப்.சி. கோவா, மும்பை சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. ஆகிய 4 அணிகள் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறின. ஜாம்ஷெட்பூர் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, எப்.சி.புனே சிட்டி, டெல்லி டைனமோஸ் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. மற்றும் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணிகள் முறையே 5 முதல் 10 இடங்களை பெற்று அரை இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

    பெங்களூரு எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதியின் முதல் சுற்றில் பெங்களூரு அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோவ்வியும், 2-வது தகுதி சுற்றில் பெங்களூரு அணி 3-0 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றது. கோல் வித்தியாசம் அடிப்படையில் பெங்களூரு எப்.சி. அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் இடையிலான 2-வது அரைஇறுதியின் முதல் சுற்றில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றியும், 2-வது சுற்றில் கோவா அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியும் கண்டது. கோல் வித்தியாசம் அடிப்படையில் கோவா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் 2-வது இடம் பெற்ற பெங்களூரு அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதேபோல் 2015-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கோவா அணி 2-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

    கோவா அணியில் பெர்ரான் கோரோமினாஸ் (ஸ்பெயின்) 16 கோல்கள் அடித்து இந்த போட்டி தொடரில் முன்னிலை வகிக்கிறார். அந்த அணியில் இடம் பிடித்துள்ள எடு பெடியா 7 கோல்கள் அடித்துள்ளார். அவர்கள் இருவரையும் தான் அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. பெங்களூரு அணியில் கேப்டன் சுனில் சேத்ரி (9 கோல்கள்), மிகு (5 கோல்கள்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். லீக் ஆட்டம் முடிவில் சமபுள்ளிகள் பெற்ற (10 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி) இந்த இரு அணிகளும் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    பெங்களூரு, கோவா அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 3 முறையும், கோவா அணி ஒரு தடவையும் வென்று இருக்கின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் சந்தித்த 2 ஆட்டத்திலும் பெங்களூரு அணியே வெற்றி கண்டது. எனவே அந்த ஆதிக்கத்தை பெங்களூரு அணி இறுதிப்போட்டியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ISL2018 #Bengaluru #NorthEastUnited
    பெங்களூரு:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், பெங்களூரு எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டம் பெங்களூருவில் நேற்று இரவு நடந்தது. கவுகாத்தியில் நடந்த முதலாவது சுற்றில் பெங்களூரு எப்.சி. அணி கடைசி நிமிடத்தில் செய்த தவறால் 1-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியிடம் தோல்வி அடைந்தது. எனவே இந்த ஆட்டத்தில் குறைந்தது 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் களம் கண்டது. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ‘டிரா’ செய்தாலே இறுதிப்போட்டியை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் களம் இறங்கியது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடிய பெங்களூரு அணி கடைசி நேரத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. முடிவில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெங்களூரு அணியில் மிகு 72-வது நிமிடத்திலும், டிமாஸ் டெல்காடோ 87-வது நிமிடத்திலும், சுனில் சேத்ரி 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கவுகாத்தி அணியால் கடைசி வரை பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை.

    எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டம் கோவாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. மும்பையில் நடந்த முதல் சுற்றில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை வென்று இருந்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி 5 கோல்களுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.
    அம்மாபாளையத்தில் இருந்து பெருமாள் சிலை புறப்படும்போது திடீரென 15 டயர்கள் பஞ்சரானது. இதனால் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. #Vishnustatue
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில் இருந்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெருமாள் சிலை பெங்களூஐரு ஈஜிபுரா எனும் இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட முழுமையாக செதுக்கி முடிக்கப்பட்டதாக பிரமாண்ட பெருமாள் சிலை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.

    கொரக்கோட்டையில் இருந்து கடந்த மாதம் 7-ந்தேதி சிலையின் பயணம் தொடங்கியது. பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு திருவண்ணாமலை வந்த பெருமாள் சிலை நேற்று முன்தினம கிரிவலப் பாதையில் இருந்து திண்டிவனம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செங்கம் நோக்கி சென்றது.

    இரவு 7 மணியளவில் செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் சிலை வந்தடைந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட பெருமாள் சிலையை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் நேற்று அம்மாபாளையத்தில் இருந்து சிலை புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

    அப்போது லாரியில் பொருத்தப்பட்டுள்ள 240 டயர்களில் 15 டயர்கள் திடீரென பஞ்சரானது. இதற்கான மாற்று டயர்கள் அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து எடுத்துவர வேண்டி உள்ளது. எனவே இந்த டயர்கள் இன்று அம்மாபாளையம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றை லாரியில் பொருத்திய பிறகுதான் மீண்டும் சிலை பயணம் தொடரும்.

    இதையடுத்து இந்த சிலை கோணான்குட்டை கேட், கரியமங்கலம், கொட்டக்குளம், மண்மலை கிராமங்கள் வழியாக செங்கம் செல்ல வேண்டி உள்ளது.

    ஏற்கனவே வந்தவாசியில் இருந்து பெருமாள் சிலையுடன் புறப்பட்ட லாரியின் டயர்கள், திருவண்ணாமலை வருவதற்குள் பல்வேறு இடங்களில் பஞ்சரானது.

    தற்போது அம்மாபாளையத்தில் இருந்து செங்கம் இடையே உள்ள 18 கி.மீட்டர் சாலையானது குண்டும், குழியுமாகவும், மண் சாலையாகவும் உள்ளது. 3 இடங்களில் வேகத்தடை உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சாலையை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆனால் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெருமாள் சிலை இந்த 18 கி.மீ தூரத்தை கடந்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையான ஆனந்தவாடி கிராமம் வரை 30 கி.மீ தூரம், சாலை சேதமடைந்துள்ள நிலையில் உள்ளது. மேலும் 3 இடங்களில் பாலம் உள்ளது.

    இதனால் பெருமாள் சிலை திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையை கடந்து செல்லவே பல நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை குறித்து சிலை கொண்டு செல்லும் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். #Vishnustatue



    புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. #ProKabaddiLeague
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் இன்று இரவு அரங்கேறுகிறது.

    ரோகித் குமார் தலைமையிலான பெங்களூரு புல்ஸ் அணி லீக் சுற்றில் 13 வெற்றி, 7 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (பி) முதலிடம் பிடித்ததுடன், முதலாவது தகுதி சுற்றில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சுனில் குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி லீக்கில் 17 வெற்றி, 3 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (ஏ) முதலிடத்தை பெற்றது. பின்னர் முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்சிடம் தோல்வி அடைந்தாலும், 2-வது தகுதி சுற்றில் உ.பி.யோத்தாவை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இவ்விரு அணிகளும் முந்தைய சீசனில் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு வந்திருந்தாலும் அதில் தோற்று இருந்தன. அதனால் தற்போது முதல் முறையாக கோப்பையை வெல்வதில் இரு அணியினரும் வரிந்து கட்டி நிற்பார்கள். சமபலம் பொருந்திய அணிகள் என்பதால் ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.

    இந்த சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் லீக் ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இறுதிப்போட்டி குறித்து குஜராத் கேப்டன் சுனில் குமார் கூறுகையில் ‘இந்த சீசன் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முதல்முறையாக கேப்டனாகி அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றுள்ளேன். தொடர் முழுவதும் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நாங்கள், கோப்பையை வெல்ல ஆவலாக இருக்கிறோம். பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் நாங்கள் சில தவறுகளை இழைத்து விட்டோம். அந்த தவறு மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்வோம்’ என்றார்.

    பெங்களூரு புல்ஸ் கேப்டன் ரோகித் குமார் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணி நல்ல நிலையில் உள்ளது. இந்த அருமையான வாய்ப்பை நாங்கள் நழுவ விடமாட்டோம். இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் எங்களுடைய நோக்கம் கோப்பையை வெல்வது தான். எங்களது ரைடை வலுப்படுத்துவதிலும், டேக்கிள்சை பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடினோம். இறுதிப்போட்டியிலும் நிச்சயமாக எதிரணிக்கு கடும் சவாலாக விளங்குவோம்’ என்றார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாகும். இதில் கோப்பையை வெல்லும் அணி ரூ.3 கோடியையும், 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.1.80 கோடியையும் பரிசாக பெறும்.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #ProKabaddiLeague
    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தினர். #RobertVadra #EnforcementDirectorateRaid
    புதுடெல்லி:
     
    ராபர்ட் வதேரா ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ராபர்ட் வதேரா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பிகனீர் பகுதியில் நிறைய அரசு நிலத்தை வாங்கினார். ஏழை கிராம மக்களின் மறுவாழ்வுக்காக உதவுவதாக கூறி அந்த நிலங்களை அவர் வாங்கி இருந்தார். ஆனால் பின்னர் அந்த அரசு நிலங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ராஜஸ்தான் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்தனர். குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனாலும் அவர் ஆஜராகாவில்லை.



    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ராபர்ட் வதேராவின் அலுவலகம் மற்றும் பெங்களூரில் ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமானவர்களின் அலுவலகங்களுக்கும் சென்ற அமலாக்க துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 

    இந்த சோதனை தொடர்பாக எவ்வித முன் அறிவிப்பும் வழங்கவில்லை என வாத்ராவின் வக்கீல் குறைகூறியுள்ளார். 

    ஏற்கனவே, நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமான வரி தொடர்பான வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மீண்டும் விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், வதேரா அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #RobertVadra #EnforcementDirectorateRaid
    பெங்களூருவில், இந்திய அறிவியல் கழக ஆய்வகத்தில் நேற்று நடந்த வெடிவிபத்தில் ஆராய்ச்சியாளர் இறந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். #Scientist #Explosion #IndianInstituteScience
    பெங்களூரு:

    பெங்களூரு சதாசிவநகரில் இந்திய அறிவியல் கழகம் அமைந்துள்ளது. இங்கு விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்கள் பல்வேறு துறை தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். இங்கு விண்வெளி என்ஜினீயரிங் துறையின் கீழ் அதிவேக மற்றும் அதிர்வு அலைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வதற்கான ஆய்வகம் தொடங்கப்பட்டது.

    தனியார் நிறுவனம் அமைத்த இந்த ஆய்வகமானது இந்திய அறிவியல் கழகத்தில் விண்வெளி என்ஜினீயரிங் துறையில் பேராசிரியராக பணியாற்றும் ஜெகதீஷ் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆய்வகத்தில் நேற்று 4 ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். மதியம் திடீரென்று ஆய்வகத்தில் ஏதோ வெடித்தது போன்று சத்தம் கேட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது, ஒருவர் 20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து இறந்து கிடந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அறிந்தவுடன் சதாசிவநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முதற்கட்டமாக போலீசார் நடத்திய விசாரணையில் ஆராய்ச்சியாளரான மனோஜ் (வயது 30) என்பவர் இறந்ததும், அதுல்யா, நரேஷ் குமார், கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இருப்பினும் ஆய்வகத்தில் எப்படி வெடிவிபத்து நிகழ்ந்தது? என்பது தெரியவில்லை. ஆனாலும் ஆய்வகத்தில் உள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், ஹீலியம் போன்ற கியாஸ் சிலிண்டர்களில் ஏதேனும் ஒரு சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷனர் நிரஞ்சன்ராஜ் அர்ஸ் கூறுகையில், ‘இந்திய அறிவியல் கழகமும், தனியார் நிறுவனமும் சேர்ந்து நடத்தும் ஆய்வகத்தில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. வெடிவிபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. கியாஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆய்வகத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்கிறார்கள். இந்த ஆய்வின் முடிவில் தான் வெடிவிபத்துக்கான சரியான காரணம் தெரியும்’ என்றார். இந்த சம்பவம் நேற்று இந்திய ஆய்வு கழகத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. #Scientist #Explosion #IndianInstituteScience
    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கோவாவில் நேற்றிரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி.யை வீழ்த்தியது. #ISL2018 #BengalureFC #GoaFC
    கோவா:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்றிரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி.யை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் ராகுல் பெகே (34-வது நிமிடம்), சுனில் சேத்ரி (77-வது நிமிடம்) கோல் போட்டனர்.

    6-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் (இரவு 7.30 மணி) சந்திக்கின்றன. 
    ×