search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளம்"

    • அரசு நிறுவனங்கள், கேபிள்கள் பதிக்கும் பணிகள் காரணமாகவே சேறு, சகதியாக ரோடுகள் மாறுகின்றன.
    • மாதவரம், புழல், ஐஸ் அவுஸ் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியாகும் சாலைகள் பற்றி ஏற்கனவே பொதுமக்கள் புகார்கள் அனுப்பி உள்ளார்கள்.

    சென்னை:

    சென்னையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், சேறும், சகதியுமாக மாறும் இடங்கள் பற்றி 15 மண்டலங்களிலும் கண்டறியும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளார்கள்.

    மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த ஆண்டின் மதிப்பீட்டின் படி சென்னையில் 320 இடங்களில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் அந்த பகுதிகளில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு திட்ட பணிகள் என்று கூறப்படுகிறது.

    அடுத்த சில நாட்களுக்கு மழை முன்னறிவிப்பு உள்ளது. 4 முதல் 5 செ.மீ. மழை பெய்யும் போது தான் சவால்கள் ஏற்படும் என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

    சேறாக மாறும் சாலை பகுதிகளில் மெட்ரோ வாட்டர், குடிநீர் வாரிய பணிகள் நடந்தால் மணல் அதிகமாக குவித்து வைக்கப்பட்டிருக்கும்.

    அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    மாதவரம், புழல், ஐஸ் அவுஸ் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியாகும் சாலைகள் பற்றி ஏற்கனவே பொதுமக்கள் புகார்கள் அனுப்பி உள்ளார்கள்.

    அரசு நிறுவனங்கள், கேபிள்கள் பதிக்கும் பணிகள் காரணமாகவே சேறு, சகதியாக ரோடுகள் மாறுகின்றன. எனவே நிறுவனங்களிடம் பணிகளின் தற்போதைய நிலை எப்போது முடிவடையும் என்பது பற்றியும் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் ஓடுகின்றன.
    • 10 மாவட்டங்களில் 6 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோபிலி, பராக், குஷியாரா ஆகிய ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் ஓடுகின்றன. அங்குள்ள 10 மாவட்டங்களில் 6 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர்.

    நாகோன் மாவட்டத்தில் அதிகபட்சமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அசாமில் வெள்ளம் மற்றும் புயலில் இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர்.

    • ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • பொதுமக்ள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் கிரீன்பீல்டு, லோயர்பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்ள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இதுமட்டுமின்றி அங்குள்ள கடைகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொருட்களை வாங்க வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். மழை ஓய்ந்த பிறகு கடைகளில் புகுந்த வெள்ளநீரை வியாபாரிகள் வெளியேற்றினர்.

    ஊட்டி பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலைய பாலத்தின் அடியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

    இதில் அந்த வழியாக சென்ற சுற்றுலா வாகனங்கள் சிக்கிக்கொண்டன. மேலும் படகு இல்ல சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன.

    ஊட்டி கமர்ஷியல் சாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. இருப்பினும் ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கனமழையை ரசித்தபடி செல்போனில் வீடியோ பதிவுசெய்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    இதற்கிடையே தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் தென்படுவதால் அங்குள்ள விவசாயிகள் நிலத்துக்கு உரமிட்டு பராமரிக்க தயாாராகி வருகின்றனர். மேலும் அங்குள்ள காய்கறி தோட்டங்களில் தற்போது விதைப்பு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    ஊட்டியில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறித்து நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், பாதாள சாக்கடை குழாய்கள் ஆங்காங்கே நிரம்பி வழிந்து சாலைகளில் கழிவுநீர் வெளியேறுவதால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரை பாதாள சாக்கடைக்குள் விட வேண்டாம்.

    மேலும் ஓட்டல், விடுதிகளின் உரிமையாளர்கள் கட்டிடம் மற்றும் வளாகத்தில் இருந்து வரும் தண்ணீரை பாதாள சாக்கடை குழாய் இணைப்புக்குள் பொருத்தி இருக்கக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொது சுகாதார சட்டப்படி அபராதம் விதிப்பதுடன் கட்டிடத்தில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பும் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • மாவட்ட ஆட்சியர்களும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.
    • மழை நேரத்தில் நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் குறித்து தியாகராய நகரில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும், நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

    மழை நேரத்தில் நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தீவிரமாக உள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

    • கேரளாவில் பெய்துவரும் மழைக்கு 6 பேர் பலியாகினர்.
    • மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    இதற்கிடையே, கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்நிலையில், கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மேலும் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

    கடலில் அலைகள் உயரமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்லக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • சாலைகளில் தேங்கிய மழைநீரில் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடியே சென்றன.
    • கூடலூரை அடுத்த இருவயல் பழங்குடியின கிராமத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அந்த கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே பலத்த மழை கொட்டியது.

    இதனால் ஊட்டி படகு இல்ல சாலை, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    சாலைகளில் தேங்கிய மழைநீரில் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடியே சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. ஊட்டி நகரின் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையான படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள இரும்பு பாலம் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

    ஊட்டியில் இருந்து தூனேரி செல்லும் சாலையின் குறுக்கே சாலையோரம் நின்றிருந்த பெரிய மரம் மழைக்கு முறிந்து விழுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதேபோல் குன்னூர், எடப்பள்ளி, பாரஸ்டேல், பந்துமை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் அந்த பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

    கூடலூர் பகுதியிலும் நேற்று மழை பெய்தது. மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்ப வழிகின்றன.

    கூடலூரை அடுத்த இருவயல் பழங்குடியின கிராமத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அந்த கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர்.

    தகவல் அறிந்த கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், அலுவலர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்று மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர்.

    இதையடுத்து வருவாயத்துறையினர் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்திருந்தாலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், தொடர்ந்து கண்காணிப்பதாகவும் வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கேரளாவில் பெய்துவரும் மழைக்கு 4 பேர் பலியாகி இருந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் இறந்துள்ளனர்.
    • கடலில் அலைகள் உயரமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    புயல் சுழற்சி மற்றும் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று கொச்சி மற்றும் திருச்சூரில் பல மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக பிரதான சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.


    கோழிக்கோட்டில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அங்கும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களுக்குள் தண்ணீர் சென்றது.

    இதனால் நோயாளிகள், பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர். வார்டுகளுக்குள் தேங்கிய தண்ணீர் மோட்டார்கள் மூலமாக அகற்றப்பட்டன. ஆஸ்பத்திரி வார்டுகள் முழுவதும் சகதியாக காணப்பட்டது. இதனால் துப்புரவு பணியாளர்கள் இரவு முழுவதும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள்.

    கேரளாவில் பெய்துவரும் மழைக்கு 4 பேர் பலியாகி இருந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் இறந்துள்ளனர். காசர்கோடு நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாலன்(வயது70), பூத்தோட்ட புத்தன்காவு பகுதியை சேர்ந்த சரசன்(62) ஆகிய இருவரும் மின்னல் தாக்கி பலியாகினர்.

    கால்நடைகளுக்கு வைக்கோல் எடுத்துக்கொண்டு படகில் வந்த போது சரசனை மின்னல் தாக்கியது. இவர்கள் இருவரையும் சேர்த்து கேரள மாநிலத்தில் மழைக்கு பலியானோர் எணணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மீதமுள்ள 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் கடலில் அலைகள் உயரமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

    • இரு பள்ளங்கள் குறுக்கே மேம்பாலம் கட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடியதன் விளைவாக 1½ ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கியது.
    • தொடர் மழையால் சக்கரைப்பள்ளத்தில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பஸ் வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலையில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் மலை கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்துக்கு செல்ல குரும்பூர்பள்ளம் மற்றும் சக்கரைப்பள்ளம் என இரு அபாயகரமான இடங்களை கடந்து செல்ல வேண்டும். குரும்பூர்பள்ளத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் சக்கரைப்பள்ளம் உள்ளது. இந்த 2 பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் பஸ் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதியும் தடைப்பட்டு, மாக்கம்பாளையம் மலை கிராமம் தனி தீவாக மாறும். வெள்ளம் வற்றினால்தான் இயல்பு நிலைக்கு மக்கள் வர முடியும்.

    இரு பள்ளங்கள் குறுக்கே மேம்பாலம் கட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடியதன் விளைவாக 1½ ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் இந்த பணி மெதுவாக நடந்து வருவதால் இன்னும் முழுமை அடையவில்லை.

    இந்நிலையில் மாக்கம்பாளையம், அரிகியம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் சக்கரைப்பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து சென்றது. இதனால் பள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் பஸ் வசதி தடைப்பட்டுள்ளது. இதனால் பஸ் பயணிகள், அப்பகுதி கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் 8 கிலோமீட்டர் தூரம் பயணித்து கிராமத்தை அடைந்தனர்.

    இந்நிலையில் தொடர் மழையால் சக்கரைப்பள்ளத்தில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பஸ் வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் காட்டாற்று வெள்ளத்தை கயிறு கட்டி ஆபத்தான முறையில் இடுப்பளவு வெள்ளத்தை கடந்து சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,

    மாக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து தினமும் வியாபாரம், பிழைப்பிற்காக சத்தியமங்கலம் சென்று வருகிறோம். இதற்காக அடர்ந்த வனப்பகுதியில் 8 கிலோ மீட்டர் நடந்து குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரைப்பள்ளத்தை கடந்து வருகிறோம். மழைக்காலங்களில் இந்த இரு பள்ளங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த சமயம் நாங்கள் உயிரை பணயம் வைத்து காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்வோம்.

    இதற்கு நிரந்த தீர்வாக இரு பள்ளங்களிலும் பாலம் கட்டித்தர வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி தற்போது பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதுவும் மந்தமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிழைப்புக்காக வெளியே சென்றாக வேண்டும். அதனால் தற்போது நாங்கள் காட்டாற்று வெள்ளத்தில் கயிறு கட்டி ஆபத்தான முறையில் சென்று வருகிறோம். இதை தவிர்க்க இரு பள்ளங்களிலும் நடக்கும் பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.

    • திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது
    • இன்று நடைபெறுவதாக இருந்த படகு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.

    தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் படகு போடி நடப்பது வழக்கம்.

    இன்று நடைபெறுவதாக இருந்த படகு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட படகு போட்டி மீண்டும் மே 25-ம் தேதி நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

     கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவந்தபுரம் தற்பொழுது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    இந்த எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை கடலோர மற்றும் மலை மாவட்ட மக்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதிகனமழையின் போது 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் வாகனங்கள் பயணிக்க கலெக்டர் தடை விதித்துள்ளார்.

    நீர்வீழ்ச்சி, நீர்நிலைகள் தொடர்பான சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகனமழை எச்சரிக்கையால், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் சுரங்க பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கொட்டி வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதை அடுத்து, அதை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.

    தொடர் மழையால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
    • மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தோனேசியாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் எரிமலையும் வெடித்திருப்பதால், சாம்பலும் வெள்ளத்தில் கலந்து, பெரும்பாலான இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

    சுமத்ரா மாகாணத்தில் 4 மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்தோனேசியாவில் கனமழை-வெள்ளத்துக்கு 58 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலரை காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • இன்னும் 134 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.
    • படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது.

    தெற்கு பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே சுல் மாநில தலைநகர் போர்டோ அலெக்ரே உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டிவருகிறது.

    இதனால் அந்த நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் அனைத்தும் ஆறுகளாக மாறிவிட்டன. பாலங்கள்,ரோடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 107- ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 134 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களிலும் தெற்கு பிரேசில் பகுதியில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×