search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    பூஜையின் போது மகாலட்சுமிக்கு புத்தம் புது ரூபாய் நோட்டுகளை படைப்பது நல்லது. பூஜை முடிந்த பின்னர் இந்த ரூபாய் நோட்டுகளையும், அர்ச்சனை செய்த ரூபாய் அல்லது நாணயங்களையும் ஒரு சிவப்பு துணியில் கட்டி லாக்கரில் வைக்க வேண்டும்.
    மகாலட்சுமி தாயார் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள் தீபாவளி. அதனால் தீபாவளியின் போது மகாலட்சுமி பூஜை முக்கிய இடம் வகிக்கிறது, அன்றைய தினம் மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பான பலனை தரும்.

    தீபாவளிக்கு முன்னதாகவே வீட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வாசல் கதவுகளில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.

    பூஜையறையில் மாக்கோலமிட்டு ஒரு மனையில் மஞ்சள் அல்லது சிவப்புத்துணி போட்டு அதில் பிள்ளையார், மகாலட்சுமி படங்களை வைக்க வேண்டும். சிலை இருந்தால் சிலைகளை வைக்கலாம். பிள்ளையாரை மஞ்சளிலும் செய்து வைக்கலாம். இதில் குலதெய்வத்தையும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு படம் இருந்தால் அதை வைக்கலாம். இல்லை என்றால் ஒரு செம்பில் நீர் மலரிட்டு குலதெய்வமாக பாவித்து வைக்கலாம்.

    பிள்ளையார், மகாலட்சுமி, குலதெய்வம் மூவருக்கும் நல்ல மணமுள்ள மலர்களை சூட்ட வேண்டும். தாமரை மலர் கிடைத்தால் மகாலட்சுமிக்கு சூட்டுவது நல்லது. பிள்ளையாருக்கு மஞ்சள் துண்டு ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, வாழை உள்ளிட்ட பழங்கள் படைக்க வேண்டும்.

    நெய்வேத்தியமாக வடமாநிலங்களில் நெய்யினால் பூரி சுட்டு, உருளைக்கிழங்கு, தக்காளி கூட்டு செய்து படைப்பார்கள். நெய்க்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பு உண்டு. நெய்யில் நிவேதனம் செய்தால் அணுகிரகம் விரைவில் கிடைக்கும்.

    பால் பாயாசம் சேமியா அல்லது அரிசி சேர்த்து செய்து வைக்கலாம். தமிழ்நாட்டில் அரிசி உணவுதான் பிரதானமாக இருப்பதால் அரிசி பாயாசமே செய்து கொள்ளலாம். வெங்காயம், பூண்டு சேர்க்காமல் அன்னம் செய்து படைக்கலாம். முக்கியமாக நெல் பொரி படைக்க வேண்டும். அதில் வெல்லம், பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளலாம்.

    ஒரு பெரிய அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். அதனை தொடர்ந்து 3 தினங்கள் எரியுமாறு பார்த்துக்கொண்டால் மிகவும் நல்லது. மகாலட்சுமி தாயாருக்கு கும்ப கலசம் வைக்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக வைக்கலாம்.

    பின்னர் மகாலட்சுமியின் 108 போற்றிகளை சொல்லி வழிபட வேண்டும். அது தெரியவில்லை என்றால் மிக எளிமையாக ஓம் ஸ்ரீம் நமக என்று சொல்லி வழிபடலாம்.

    வாய்ப்பு உள்ளவர்கள் 108 தாமரை மலர்களை போட்டு அர்ச்சனை செய்யலாம். இல்லை என்றால் குங்கும அர்ச்சனை செய்யலாம். அல்லது 108 வெள்ளி காசுகளை வைத்து அர்ச்சனை செய்யலாம். 108 புது ரூபாய் தாள்களை கொண்டு அர்ச்சிக்கலாம். அல்லது ஒரு ரூபாய் நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

    மகாலட்சுமி தாயாருக்கு மணியடித்து ஆரத்தி காட்டும் போது ஒரு வெடியாவது வெடிக்க வேண்டும்.

    பூஜையின் போது மகாலட்சுமிக்கு புத்தம் புது ரூபாய் நோட்டுகளை படைப்பது நல்லது. பூஜை முடிந்த பின்னர் இந்த ரூபாய் நோட்டுகளையும், அர்ச்சனை செய்த ரூபாய் அல்லது நாணயங்களையும் ஒரு சிவப்பு துணியில் கட்டி லாக்கரில் வைக்க வேண்டும். ஒரு சில நாணயம் நோட்டுகளை மணிபர்சிலும் வைக்கலாம்.

    அந்த பணத்தை உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஏழ்மையில் இருந்தால் வசதி பெறுவதற்காக அவர்களுக்கு கொடுக்கலாம். அவர்கள் விருத்தி அடைவார்கள். அவர்கள் வசதி அடைய அடைய உங்கள் வாழ்க்கையிலும் செல்வம் செழிக்கும்.

    நிவேதனம் செய்த பின்னர் பிரசாதத்தை குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும்.

    பொதுவாக பூஜையில் வைத்த மலர் மாலை, கலசம் உள்ளிட்டவற்றை 3-வது நாள் எடுப்பது தான் நல்லது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எடுக்கக்கூடாது. இந்த முறை 3-வது நாளாக சனிக்கிழமை வருவதால் அன்று எடுக்கலாம்.

    கலசத்தில் நீர் வைத்திருப்பதால் அதை வீடு முழுவதும் தெளிக்கலாம். அரிசி வைத்திருந்தால் அதனை சமைத்து சாப்பிட வேண்டும். அர்ச்சனை செய்த குங்குமத்தை பெண்கள் திலகமிட பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முறை தீபாவளியன்று மகாலட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 6.10 மணி முதல் இரவு 8.10. மணி வரை. லட்சுமி வழிபாட்டுக்கு பிரதோஷ காலமே உகந்தது என்பதால் மாலை 5.30 மணியில் இருந்தும் இரவு 8.10 மணிக்குள் செய்யலாம்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் மார்க்கெட்டிற்கு வரும் பூக்கள் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    கோவை:

    கோவை பூ மார்க்கெட்டுக்கு கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விழாக்காலங்களில் மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை ஜோராக இருக்கும். நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைக்கு அதிகளவில் பூக்கள் விற்பனையாகின. அதன்பின்னர் விற்பனை சற்று குறைந்தது. அதேபோல் பூக்கள் விலையும் வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்பு வகைகள் வாங்கி வருகின்றனர். இதுதவிர வீட்டில் சாமி கும்பிடுவதற்காக பூக்கள், பழங்களும் வாங்க தயாராகி வருகிறார்கள்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் மார்க்கெட்டிற்கு வரும் பூக்கள் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு கோவை பூ மார்க்கெட்டில் ரூ.40க்கு விற்பனையான செவ்வந்தி இன்று ரூ. 50-க்கும், ரூ.180-க்கு விற்பனையான அரளிப்பூ ரூ.240-க்கும் விற்பனையானது. இதேபோல் 100 ரூபாய்க்கு விற்பனையான ரோஜாபூ ரூ.240க்கும் விற்பனையானது.

    கோவை பூமார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    செவ்வந்தி ரூ.50, ரோஜா-ரூ.240, சம்பங்கி-ரூ.60, மல்லி-ரூ.1000, முல்லை-ரூ.800, கோழி கொண்டை-ரூ.80, அரளி-ரூ.240, தாமரை-ரூ.20, துளசி-ரூ.30, செண்டுமல்லி-ரூ.80, வைலட் செவ்வந்தி-ரூ.120க்கு விற்பனையானது.
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை மீறிய 4 பஸ்களுக்கு அபராதம் விதித்தனர்.
    திண்டுக்கல்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் நேற்று முதல் இயங்கத் தொடங்கியது. இதே போல் ஆம்னி பஸ்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சமயத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி ஒரு சில பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

    திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை கொடைரோடு சுங்கச்சாவடியில் மதுரை இணைப்போக்குவரத்து ஆணையர் பொன்செந்தில்நாதன் உத்தரவின்பேரில் தேனி ஆர்.டி.ஓ செல்வக்குமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் மதுரை, நெல்லை மார்க்கமாகவும் மற்றும் சென்னை, கோவை மார்க்கமாகவும் செல்லும் தீபாவளி சிறப்பு ஆம்னி பஸ்களில் விடிய விடிய தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் தீபாவளி சிறப்பு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அல்லது முறைக்கேடாக அதிகப்பயணிகளை ஏற்றி செல்கின்றனரா? சிறப்பு பஸ்களின் வாகன உரிமை, இன்சூரன்ஸ் மற்றும் முறையாக அரசுக்கு வரி செலுத்தியுள்ளனரா? என்பது குறித்தும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:- இந்த ஆய்வானது 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தினமும் நடைபெறும். அனைத்து ஆம்னி பஸ்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும். தமிழக அரசு உத்தரவை மீறும் ஆம்னி பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆய்வில் ஆம்னி பஸ்களில் தணிக்கை அறிக்கை மூலமாக ரூ.2500 வீதம் 4 பேருந்துக்கு அபதாரம் விதிக்கப்பட்டது.

    மேலும் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றனர். இந்த ஆய்வில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாதன் மற்றும் மோட்டார் வாகன அலுவலக பணியாளர்கள் ஈடுபட்டனர்.
    மேலப்பாளையம் சந்தை வாசலில் பொதுமக்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. சந்தைக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், முக்கூடல், வள்ளியூர் உள்ளிட்ட இடங்களில் கால்நடை சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

    இதில் மேலப்பாளையம் சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் நடைபெறும். இங்கு ஆடுகள் மட்டுமல்லாது மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டவையும் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    இதனை வாங்கவும், விற்கவும் ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்வார்கள்.

    ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மேலப்பாளையம் சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

    நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடுப்படுவதையொட்டி இன்று மேலப்பாளையம் சந்தையில் விற்பனை அதிகரித்தது.

    நேற்று இரவு முதலே ஏராளமான வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளுடன் சந்தைக்கு வந்தனர். இன்று காலை வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் அங்கு திரண்டனர்.

    சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. அவை ரூ.5 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கோழிகள் உள்ளிட்டவைகளும் அதிக அளவில் விற்பனை ஆனது.

    கொரோனா தடுப்பு விதிகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு சந்தை வாசலில் சானிடைசர் வழங்கப்பட்டது. சந்தைக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    மாநகராட்சி ஊழியர்களும் மைக் மூலமாக கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.



    நாடெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலாதீபாவளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



    கொரோனா வைரஸ்


    பெரும் தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம் மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளி திருநாளில், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், தடுப்பூசியையும் தவறாமல் செலுத்தி கொண்டு கவனமாக சந்தோசத்துடன் இந்த தீப ஒளி திருநாளை கொண்டாட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளில், சூழ்ச்சிகளும், தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும், அன்பும் நாடி வர இன்பமாய் கொண்டாடுவோம் தீபாவளியை.

    இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தீபாவளி முடிந்து சென்னை திரும்ப வசதியாக 7-ந்தேதி திருநெல்வேலியில் இருந்து 06040 சிறப்பு ரெயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.
    சென்னை:

    தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே நெல்லை, நாகர்கோவிலுக்கு 3 சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    தீபாவளி சிறப்பு ரெயில்களில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வழக்கமாக ரூ.395 டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    ஆனால் சிறப்பு ரெயிலில் ரூ.535 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.140 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் எடுக்க ரூ.15 சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்.

    எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சூப்பர் பாஸ்ட் கட்டணம் ரூ.395. எக்ஸ்பிரஸ் கட்டணம் ரூ.365 ஆகும். ஆனால் தாம்பரம்-நெல்லை தீபாவளி சிறப்பு ரெயிலில் ரூ.495 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.130 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

    அறிவிக்கப்பட்ட 3 சிறப்பு ரெயில்களிலும் சிறப்பு கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களிடம் கூடுதலாக ரெயில்வே துறை வசூலிக்கின்றது. அரசு பஸ்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட சற்று கூடுதலாக சிறப்பு ரெயில்களின் கட்டணம் உள்ளது.

    சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஒரு மணிநேரத்தில் 2 சிறப்பு ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதிகள் நிரம்பி விட்டன.

    ரெயில்

    06037 எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு ரெயில் நாளை (3-ந்தேதி) இரவு 10.05 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயிலில் முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு ஏசி படுக்கை இடங்கள் மட்டுமே உள்ளன. 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்துள்ளது.

    தீபாவளி முடிந்து சென்னை திரும்ப வசதியாக 7-ந்தேதி திருநெல்வேலியில் இருந்து 06040 சிறப்பு ரெயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

    இந்த ரெயிலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பிய நிலையில் 3-ம் வகுப்பு ஏசி படுக்கைகள் 50 மட்டும் காலியாக உள்ளன. இந்த ரெயிலில் ஏசி 3-ம் வகுப்பு கட்டணம் ரூ.1340, 2-ம் வகுப்பு கட்டணம் ரூ.1905, 2-ம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் இருக்கை கட்டணம் ரூ.245 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தாம்பரத்தில் இருந்து 8-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செல்லும் சிறப்பு ரெயிலில் அனைத்து வகுப்புகளும் காலியாக உள்ளன.

    உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ஈரோடு:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் மக்கள் பட்டாசு வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் ஒரு சிலர் அனுமதியின்றி பட்டாசுகளை அதிக அளவில் வாங்கி அதை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்று பட்டாசு பதுக்கி வைக்கும் போது சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக விபத்தும் ஏற்படுகிறது. இதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அரச்சலூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அரச்ச லூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அரச்சலூர் ரவுண்டானா அருகே உள்ள கொங்கு நகரில் ஒரு வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கொங்கு நகரில் உள்ள வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (வயது 45) என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் சிவகாசியிலிருந்து பட்டாசுகளை உரிய அனுமதியின்றி வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிந்தது.

    இதையடுத்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில், வரும் 8-ந்தேதி மாலை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை நெல்லை சென்றடையும்.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    * சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்:06037), இன்று (செவ்வாய்கிழமை) இரவு 10.05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவில்-எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06038), வரும் 5-ந்தேதி மதியம் 3.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை வந்தடையும்.

    * தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (06039), வரும் 8-ந்தேதி மாலை 4 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை சென்றடையும். இதைப்போல் நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் (06040) வரும் 7-ந்தேதி மாலை 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் குவிய தொடங்கியதால் திண்டுக்கல்லில் கூட்டம் அலைமோதியது.
    திண்டுக்கல்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையில் கண்களை கவரும் புத்தாடைகளும், மகிழ்ச்சி பூக்களை தரும் பட்டாசுகளும் முக்கியமானவை. மேலும் இனிப்பு மற்றும் கார வகைகளை வீடுகளில் செய்வார்கள். அதற்கு தேவையான பொருட்களை ஒருசில நாட்களுக்கு முன்பே மக்கள் வாங்கி விடுவார்கள்.

    அதோடு தீபாவளி பண்டிகைக்கு புதிதாக வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதையும் மக்கள் வழக்கமாக்கி கொண்டு உள்ளனர். இதற்கிடையே தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கின்றன. இதனால் தீபாவளி கொண்டாட்டத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

    திண்டுக்கல்லில் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் அதிக அளவில் உள்ளன. இந்த கடைகளில் பொதுமக்களை ஈர்ப்பதற்கு தீபாவளி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர மெயின்ரோடு, ரதவீதிகள், கடைவீதிகளில் ஏராளமான சாலையோர துணி கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சாலையோர கடைகளில் ரெடிமேடு ஆடைகளை கூவி, கூவி விற்றனர். இதனால் திண்டுக்கல் நகர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களும் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு, கடந்த சில நாட்களாக திண்டுக்கல்லுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதிலும் நேற்று ஏராளமான மக்கள் திண்டுக்கல் நகரில் குவிந்தனர். மேலும் ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி சாலையோர கடைகளிலும் ஆடைகளை பேரம்பேசி வாங்கினர். அதேபோல் தீபாவளி பலகாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கினர். இதனால் திண்டுக்கல்லில் தீபாவளி பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கியது. மேலும் முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    தீபாவளிக்கு மறுநாளான 5-ந்தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    சென்னை: 

    தமிழகம் முழுவதும் வருகிற 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். 

    இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாளான 5-ந்தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

    அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5-ந்தேதி அளிக்கப்படும் விடுமுறையை ஈடுசெய்ய வரும் 20-ந்தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    5-ந்தேதி விடுமுறையால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால் சந்தோசமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த விடுமுறையை அளித்துள்ளது.


    மெட்ரோ ரெயில் நீட்டிப்பு சேவைகள் நாளை மற்றும் நாளை மறுநாளும் செயல்படுத்தப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நெரிசல் மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில்கள் நாளை (2-ந்தேதி) மற்றும் 3-ந்தேதி மட்டும் இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில்

    மேலும் நாளையும், நாளை மறுநாளும் இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும்.

    மேற்கண்ட மெட்ரோ ரெயில் நீட்டிப்பு சேவைகள் நாளை மற்றும் நாளை மறுநாளும் செயல்படுத்தப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


    இன்று காலை முதல் மழை பெய்து கொண்டிருந்ததால் தேங்கிய மழை நீரில் நின்று கொண்டே வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் கால்நடை வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூரில் ஆட்டுச் சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையன்று ஆடு, மாடு, கோழி ஆகிய வற்றுக்கான சந்தைகள் நடைபெறுவது உண்டு.

    மேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

    ஆடுகளை வாங்குவதற்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் மேலூர் கால்நடை சந்தையானது களைகட்டி இருக்கும்.

    தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான விவசாயிகள் தங்கள் ஆடு, மாடு, மற்றும் கோழிகளை விற்பனைகாக இன்று கொண்டு வந்தனர்.

    இதனை வாங்குவதற்காக வெளிமாவட்ட வியாபாரிகள் ஏராளமானோர் குவிந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள், மாடுகள், கோழி விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

    இதன் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடைச் சந்தைகள் வியாபாரம் நடைபெற்றுள்ளது. வழக்கத்தைவிட கூடுதலாக விலைக்கு விற்பனை செய்ததால், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று காலை முதல் மழை பெய்து கொண்டிருந்ததால் தேங்கிய மழை நீரில் நின்று கொண்டே வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் கால்நடை வியாபாரம் நடைபெற்றது. சந்தைப்பேட்டை பகுதிகளில் கால்நடைகளை கொண்டு வந்து இறக்கியும் அங்கிருந்து வாங்கிய கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்ல ஏராளமான வேன்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டதால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ×