search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    சென்னை சேலம் இடையேயான பசுமைவழிச் சாலை தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் இன்று பதிலளித்தார். #greenwayroad #CM #TNassembly
    சென்னை:

    சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

    காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் இந்த திட்டத்துக்கு சுமார் 150 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இது பற்றி கேள்வி எழுப்பினார். மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். இந்த பிரச்சினை பற்றி முதல்வர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    இதற்கிடையே மானிய கோரிக்கை மீது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியசாமியும் எழுந்து இந்த திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.



    இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவு சாலை திட்டம் பற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    'கடந்த 25.2.2018 அன்று, மத்திய அரசின் “பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின்” கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த பசுமை வழிச்சாலை 8 வழிச்சாலையாக, சென்னை அருகிலுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், காஞ்சிபுரத்தில் (59.1 கி.மீ.), திருவண்ணாமலையில் (123.9 கி.மீ.), கிருஷ்ணகிரியில் (2 கி.மீ.), தருமபுரியில் (56 கி.மீ.) மற்றும் சேலத்தில் (36.3 கி.மீ.) ஆகிய மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளதுடன், இவ்வழிப்பாதைக்கு சேலம் முதல் அரூர் வரை என்.எச். 179ஏ என்றும், அரூர் முதல் சென்னை வரை என்.எச். 179பி என்றும் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு தற்போதுள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டர் அல்லது சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார் 350 கிலோமீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணி நேரமாகும்.

    தற்போது, இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் இதன் கொள்ளளவை விட 130 சதவிகிதம் மற்றும் 160 சதவிகிதம் அதிகமாக போக்குவரத்து செறிவு உள்ள காரணத்தினால், இச்சாலைகளில் விபத்துக்கள் மிகவும் அதிகமாக நடைபெறுகின்றன.

    இன்னும் 15 வருடங்களில், இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும், போக்குவரத்தானது 1,50,000 அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு சாலைகளையும் விரிவுபடுத்தினால், போக்குவரத்து செறிவு 60 ஆயிரம் பி.சி.யூ.விலிருந்து 1 லட்சம் பி.சி.யூ. வரை மட்டுமே அதிகப்படுத்தலாம்.

    ஆனால், இந்த புதிய எட்டு வழிச்சாலையின் போக்குவரத்து கொள்ளளவு 80,000 போக்குவரத்து செறிவு ( பி.சி.யூ.) ஆக இருந்தாலும், இச்சாலையானது விரைவு நெடுஞ்சாலையாக உள்ளதால், இதன் போக்குவரத்து கொள்ளளவு 1,50,000 போக்குவரத்து செறிவு ஆகும். எனவே, தற்போதுள்ள இரண்டு நெடுஞ்சாலைகளின் 1 லட்சம் பி.சி.யூ.உடன் சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் பி.சி.யூ. கொள்ளளவு பயன்பாட்டிற்கு வரும். இதனால், விபத்துக்கள் பெருமளவு குறையும். அதே நேரத்தில், பெருகிவரும் போக்குவரத்து செறிவையும் தாங்கி பயன் அளிக்கும்.

    இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், இத்திட்டத்தினால் காடுகளிலுள்ள மரங்கள் அழிக்கப்படும் என்றும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை கல்வராயன் மலை ஆகியவற்றிலிருந்து கனிம வளங்கள் சுரண்டப்படும் என்றும், விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறி, சில அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் மற்றும் சில இடதுசாரி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்தச் சாலையின் நேர்பாடு, குறைவான வனப்பகுதியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கு எடுக்கப்படும் வன நிலத்திற்கு ஈடாக, இரு மடங்கு அரசு புறம்போக்கு நிலம், மாவட்ட நிர்வாகத்தினரால் நில மாற்றம் செய்து, வனத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 2 மடங்காக காடு வளர்க்கப்படும்.

    இச்சாலையினால் சுமார் 10,000-க்கும் குறைவான மரங்கள் வெட்டப்பட உள்ளன. எனினும், இந்த விரைவுச் சாலையில் இரு மருங்கிலும் சுமார் 10 மீட்டர் அகலத்திற்கு 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

    இப்பெருவழிச் சாலை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்களை அளக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    2.5.2018 அன்று சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரம் என்ற இடத்தில் நிலங்களை அளப்பதை சிலர் தடுத்ததினால், காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்த்தனர்.

    திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும், நிலங்களை அளப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 1.5.2018 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இச்சாலையைப்பற்றி தேவையற்ற சந்தேகங்களைப் போக்கவும், சரியான விவரங்களை பொதுமக்களுக்கு கொடுக்கவும் நான் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    தற்போதுள்ள சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவதை விட, இந்த 8 வழி விரைவுச்சாலை திட்டத்தினால் பாதிப்புகள் மிகவும் குறைவாகவும், பயன்கள் அதிகமாகவும் இருப்பதால், இத்திட்டத்தினை செயல்படுத்துவது அவசியமாகும். எனவே, பொதுமக்களும், அமைப்புகளும் உண்மை நிலையினை அறிந்து, எதிர்ப்பினை கைவிட்டு, திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தி.மு.க. ஆட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது, கொடுத்த இழப்பீட்டை விட தற்போது அதிகமாகவே இழப்பீடு தொகை வழங்குகிறோம். உதாரணத்துக்கு 2007-08-ம் ஆண்டு சேலம் அயோத்தியா பட்டிணத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.8 லட்சம் வழங்கப்பட்டது.

    தற்போது ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. காங்கிரீட் வீடுகளுக்கு சதுர அடிக்கு முன்பு ரூ.100 வழங்கப்பட்டது. தற்போது ரூ.340 என்று கணக்கிட்டு வழங்குகிறோம்.

    ஓட்டு வீடுகளுக்கு முன்பு சதுர அடிக்கு ரூ.60 வழங்கப்பட்டது. தற்போது ரூ.200 வழங்குகிறோம். ஒரு தென்னை மரத்துக்கு முன்பு இழப்பீடாக ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது தென்னை மரத்துக்கு ரூ.40 ஆயிரம் கொடுக்கிறோம். இந்த 8 வழிச்சாலை அமைப்பதால் விபத்துகள் வெகுவாக குறையும். பல மாவட்டங்களில், தொழிற்சாலைகள் வளர்ச்சி அடையும்.

    இந்த திட்டத்தால் அதிக நிலம், வீடுகளை எடுப்பதாக தகவல் பரப்புகிறார்கள். அது தவறு குறைந்த அளவு வீடுகளையே எடுக்கிறோம். நான் சேலத்தில் இருப்பதால் 8 வழிச் சாலை அமைக்கும் வி‌ஷயத்தில் என் மீது குற்றச்சாட்டுக்களை கூறுகிறார்கள். எனவே இந்த திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்'.

    இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    இந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #WorldHealthOrganization
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் இந்தியாவில் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆறுகள், கிணறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

    அதில் இந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனியா வி‌ஷம் பரவி கிடப்பது கண்டறியப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 324 கிணறுகளில் உள்ள தண்ணீரில் ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் மிக அதிக அளவில் யுரேனிய வி‌ஷம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோ கிராம் யுரேனியம் இருக்க வேண்டும். ஆனால் அது அளவுக்கு அதிகமாக உள்ளது. இத்துடன் சேர்த்து நைட்ரேட் மாசுவும் கலந்து உள்ளது.

    பல மாநிலங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரில் சரளை கற்கள், சேறு மற்றும் சகதி உள்ளிட்டவைகளின் கலவை உள்ளது. இவை யுரேனியம் அதிகம் உள்ள கிரானைட் பாறைகளில் இருந்து கிடைக்கிறது.

    பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மே.வங்காளம், குஜராத், ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் பரவியுள்ளது.



    இத்தகைய நிலத்தடிநீர் குடிநீர் மட்டுமின்றி விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் யுரேனியத்தின் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும். இதனால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். எனவே இப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் அதிக அளவில் யுரேனியம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. #WorldHealthOrganization
    கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2007-2008-ம் ஆண்டில் 27,209 என்ற அளவில் இருந்தது. அதன் மூலம் ரூ.2,547.14 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, ரூ.8,739.95 கோடி அளவுக்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2 லட்சத்து 42 ஆயிரத்து 855 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.

    உத்யோக் ஆதார் பதிவறிக்கை செயலாக்கத்திற்கு வந்த பிறகு, 2016-2017-ம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 310 அளவுக்கு உயர்ந்தது. முதலீடும் ரூ.36,221.78 கோடி என்ற அளவுக்கு அதிகரித்தது. இதன் மூலம் வேலைவாய்ப்பு 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேருக்கு கிடைத்தது.

    2017-2018-ம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 981 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. முதலீட்டின் அளவும் ரூ.25,373.12 கோடி என்ற அளவுக்கு சரிந்துள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கொள்கை விளக்க குறிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49,329 எண்ணிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

    இதனால், வேலைவாய்ப்பை 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் இழந்துள்ளனர். #tamilnews
    தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர அ.ம.மு.க.வை ஆதரியுங்கள் என்று தினகரன் கூறியுள்ளார். #AMMK #TTVDinakaran
    கரூர்:

    கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் அ.ம.மு.க. சார்பில் இன்று (வியாழக்கிழமை) இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கரூர் வருகை தந்தார்.

    முன்னதாக வரும் வழியில் தவுட்டுப்பாளையம், பஞ்சை புகளூர், வெங்கமேடு ஆகிய இடங்களில் அ.ம.மு.க. கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் கட்சியினர் தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தவுட்டுப்பாளையத்தில் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட், நீட், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்கள் எதிர்க்கும் திட்டங்களை கொண்டு வரமாட்டோம் என்று உறுதியளிப்பவர்களே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. பி.ஆர்.பாண்டியன், கர்நாடக முதல்வர் குமாரசாமியை நடிகர் கமலஹாசன் சந்தித்ததை எதிர்த்துள்ளார். அது போல் நாங்களும் குமாரசாமியை சந்தித்ததை எதிர்க்கிறோம்.



    தமிழகத்தில் இருப்பது மக்கள் விரோத ஆட்சி, அடிமைகளின் ஆட்சி, இந்த ஆட்சி எல்லாவற்றையும் பணத்தால் சாதிக்கலாம் என்று எண்ணுகிறது என்றார்.

    கரூர் வெங்கமேடு பகுதியில் டி.டி.வி.தினகரன் பேசும் போது, கடந்த மாதம் கரூரில் காவிரி பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளாக வந்து போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி என்னை அனுப்பி வைத்தீர்கள். இப்போது மீண்டும் கரூர் வந்துள்ளேன். தமிழகத்தில் மக்கள் விரும்பாத, துரோக ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர அ.ம.மு.க.வை ஆதரியுங்கள் என்றார். #AMMK #TTVDinakaran
    தமிழக விவசாயிகளும், கர்நாடக விவசாயிகளும் கலந்து பேசினால் அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து ஆப்பு வைப்பதற்கு இடம் இருக்காது என்று நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாக தெரிவித்தார். #KamalHassan
    சென்னை:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி, இந்திய விவசாய கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஆர்.வி.கிரி உள்பட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்தில் நேற்று சந்தித்தனர்.

    அப்போது காவிரி விவகாரத்துக்காக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசியதற்கு அனைவரும் நன்றி தெரிவித்து வீரவாள், ஏர் கலப்பை, மரக்கன்று ஆகியவற்றை பரிசாக வழங்கினார்கள்.

    விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வழங்கிய வாள், இனி அறுவடைக்கு பயன்படும் என்றும், சமாதானம் தான் என் எண்ணம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

    அதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்காக மேளம் தட்டி மழை பொழிகிறது. இந்த மழை எனக்கு புதிது அல்ல. கர்நாடக முதல்-மந்திரியை சந்திக்க சென்றபோது மழை பெய்தது. முதல்-மந்திரியிடம் உங்களிடம் கொடுப்பதற்கு நீர் இயற்கை தந்திருக்கிறது என்று எடுத்து சொன்னேன். நல்லதொரு மனநிலையில் இருக்கிறார்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    என் குடும்பத்தார் (விவசாயிகள்) போட்ட சோறு என் உடம்பிலும் இருக்கிறது. அவர்கள் உடம்பில் இருப்பதை விடவும் கொஞ்சம் அதிகமாக என் உடம்பில் இருக்கிறது. அவர்கள் வேலை செய்து குறைவாக சாப்பிட்டுவிட்டு, எனக்கு அதிகமாக கொடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நன்றி கடன் செய்வதற்காகத்தான் நான் கர்நாடகம் சென்றேன். நான் சென்றதற்கான காரணம் அது ஒன்றே போதுமானது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத் தொடர்ந்து கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    ஆப்பு வைக்க இடம் இருக்காது

    கேள்வி:- ரஜினியும், கமலும் சேர்ந்து கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ என்ற அச்சம் எழுவதாக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளாரே?

    பதில்:- இதில் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. யாரும், யாருடனும் சேர்ந்து தமிழர்களை வஞ்சிக்கமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கர்நாடக விவசாயிகளும், தமிழக விவசாயிகளும் கலந்து பேசினால் அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து ஆப்பு வைப்பதற்கு இடம் இருக்காது.

    கேள்வி:- கமல்ஹாசன், கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்தது வேடிக்கையாக இருக்கிறது என்று சரத்குமார் கூறி இருக்கிறாரே?

    பதில்:- இதற்கு தீர்வு கிடைக்காது என்று நினைக்கிறார்களா? அப்போது காந்தி யார்? எந்த கட்சி? எந்த மாநில முதல்-மந்திரி? ஆனா எல்லா விஷயத்துக்கும் முந்திரிகொட்டை போல போகும் தலைவர் இருந்தாரே... அவரை யார் என்று கேட்டார்களா.. கேட்கமாட்டாங்க.. அதுபோல யார் வேண்டுமானாலும் போகலாம். அதுக்கு வயது கிடையாது.

    கேள்வி:- விவசாயிகளுக்கு தொடர்ந்து நீங்கள் குரல் கொடுப்பீர்களா?

    பதில்:- கண்டிப்பாக குரல் கொடுப்பேன். அதற்கான முதல் கட்டம் தான் இது. ஏற்கனவே நாங்கள் போட்ட கூட்டத்தின்படி தீர்ப்பை கண்காணிக்க ஒரு குழு அமைக்கவேண்டும் என்று தீர்மானித்தோம். அதன் அடிப்படையில் ஒரு புதிய நகர்வாகத்தான் இதனை நான் பார்க்கிறேன்.

    கேள்வி:- காலா படம் திரையிட கர்நாடகாவில் தடை இருக்கிறதே? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- விஸ்வரூபம்-2 படத்துக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. காலாவுக்கும் தடை என்று அறிவித்துவிட்டார்கள். காவிரி பிரச்சினையை எப்படி விவசாயிகள் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டுமோ, அதுபோல பட பிரச்சினையை வியாபாரிகள் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும். இதில் தொழில் விரோதம் எதுவும் இல்லை. ரஜினிகாந்தின் படத்தை பார்க்க பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி நிருபர்களிடம் கூறும்போது, ‘அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் கமல்ஹாசன் தனது முதல் அடியை விவசாயிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவவேண்டும் என்ற கடமையை நினைத்து செய்து இருக்கிறார். கர்நாடகத்துக்கு சென்று தண்ணீர் கேட்டார். அதை குற்றம், துரோகம் என்று சொல்கிறார்கள். துரோகம் செய்தவர்களே துரோகம் என்று சொல்கிறார்கள். விவசாயிகளுக்கு யார் நல்லது செய்தாலும், தலைக்கு மேல் இருகரம் கூப்பி வரவேற்க காத்திருக்கிறோம்’ என்றார்.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், ‘விவசாயிகள் நிலை நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தது போன்றது. விவசாயிகள் தத்தளிக்கும் சூழ்நிலையில் கர்நாடகாவுக்கு சென்று முதல்-மந்திரியை சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. யார் எங்களை காப்பாற்ற வந்தாலும் அதனை வரவேற்கிறோம். விவசாயிகளை காப்பாற்றவேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். இதில் அரசியல் பேசுவது நியாயம் இல்லை. யாரிடமும் யார் வேண்டுமானாலும் பேசலாம். எங்கு வேண்டும் என்றாலும் செல்லலாம்’ என்றார். #KamalHassan
    காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்த, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் அணிலாகவும், பாலமாகவும் செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார். #cauveryissue
    பெங்களூரு:
        
    காவிரி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பெங்களூரு சென்றிருந்தார். இன்று காலை கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன்,

    நான் ஒரு அரசியல் கட்சி தலைவராக இங்கு வரவில்லை, மக்களின் பிரதிநிதியாக வந்துள்ளேன் என்றார். குறுவை சாகுபடிக்கான காலம் வந்துவிட்டதாகவும், அதனை நினைவுபடுத்தி அதற்கு தேவையான தண்ணீரை திறந்து விடக்கோரி, இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறியுள்ளார். மேலும், அரசியல் தேவைகளை விட விவசாயிகளின் தேவையே மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

    இந்த சந்திப்பு மிகவும் நல்ல முறையில் நடைபெற்றதாகவும், இரு மாநிலங்கள் மட்டுமன்றி, தேசிய அளவிலான பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், கர்நாடக முதல்மந்திரி குமாரசாமியுடனான இந்த சந்திப்பு கூட்டணி குறித்தது அல்ல, மக்களின் நலனுக்கானது, காவிரி விவகாரத்தில் அணிலாகவும் பாலமாகவும் செயல்படுவேன் என்றும் கமல் தெரிவித்துள்ளார். #cauveryissue
    எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #MGRcentenaryfunction
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என ஏற்பாடு செய்து மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழ்பாடின.

    இந்நிலையில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 25.02.18 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MGRcentenaryfunction
    தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்தது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்கிறது. கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது.

    வட, தென் தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழ்நாடு, இலங்கையை ஒட்டியுள்ள கடற்கரைக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அதேபோல், தென் தமிழகத்திலும் இடியுடன் கூடிய லேசான மழை ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் தெளிவாக காணப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘குளச்சல், தக்கலையில் தலா 7 செ.மீ., காஞ்சீபுரம், ஓமலூர், ஆலங்காயம், போளூரில் தலா 4 செ.மீ., சேலம், குழித்துறை, செங்கம், சங்கராபுரத்தில் தலா 3 செ.மீ., சாத்தனூர் அணை, குடியாத்தம், மயிலம், ஆர்.கே.பேட்டை, மரந்தஹள்ளி, ஆத்தூர், இரணியல், வந்தவாசி, நாகர்கோவில், ஏற்காட்டில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பணம் பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை முடங்கி உள்ளது. #BankWorkersStrike
    சென்னை:

    நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் 10,500 வங்கிகளை சேர்ந்த 45 ஆயிரம் பேர் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்றனர். வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பணம் பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை முடங்கி உள்ளது.

    தினமும் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை நடைபெறாமல் முடங்கியதால் தொழில் முனைவோர், வர்த்தக பிரமுகர்கள், சிறு நிறுவனங்கள், தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் 2-வது நாளாக நீடிப்பதால் சுமார் 14 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் தேங்கியுள்ளன.

    வங்கிகள் மூலம் நடை பெறும் அனைத்து பண பரிமாற்ற சேவைகளும் 2 நாட்களாக இல்லாததால் தொழில் சார்ந்த நடவடிக் கைகள், அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

    ஏ.டி.எம்.களில் நிரப்பி வைக்கப்பட்ட பணமும் நேற்றே தீர்ந்துவிட்டன. இதனால் இன்று பெரும் பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் மூடி கிடக்கின்றன. பணம் இருந்த ஒரு சில ஏ.டி.எம்.களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். சிறிய அளவிலான அன்றாட செலவுகளை மேற்கொள்வதற்கு தேவையான பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் தவித்தனர். சென்னையில் பஸ், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.



    பெட்ரோல், டீசல், மளிகை செலவினங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு டெபிட்கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை அதிகமாக பயன்படுத்தினர்.

    வங்கிகள் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பாரிமுனையில் உள்ள குறளகம் அருகில் ஒன்றுதிரண்டு இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அனைத்து வங்கிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் எச்.வெங்கடா சலம் தலைமையில் நடந்த போராட்டத்தில் கோரிக்கை முழக்க கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.#BankWorkersStrike
    கோடை வெயிலின் தாக்கம் காரணமாக முன் கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. #TNschoolOpen
    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு முன் கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டன.

    இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தகவல் வெளியானது.



    இந்த தகவலை மறுத்த பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந்தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புதிய பாடத்திட்டம் காரணமாக கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையனும் கூறினார்.

    இதையடுத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாளையுடன் முடிகிறது. நாளை மறுநாள் (1-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.#TNschoolOpen
    தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

    தென் கிழக்கு அரபிக்கடலில் கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரையையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

    இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதியில் மீனவர்கள் 30-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். அடுத்த 48 மணிநேரத்தில் கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளது. அதன் பின்னர் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும்.

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று(திங்கட்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    பெரியாறு 7 செ.மீ., வத்திராயிருப்பு, பவானி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், பேச்சிப்பாறை, அரியலூர் தலா 2 செ.மீ., ராதாபுரம், ராஜபாளையம், புதுக்கோட்டை, செங்கோட்டை, நத்தம், பேரையூர், சூளகிரி, போடிநாயக்கனூர், பூதப்பாண்டி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப்போகும் இடம் மதுரையா?, தஞ்சாவூரா? என்பது பற்றி எந்த நேரத்திலும் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடலாம் என்று தெரிகிறது.#AIIMShospital
    சென்னை:

    2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் நிலம் வேண்டும். அங்கு மருத்துவ கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, உயர்தர சிகிச்சை போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்படும். மேலும், தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி உள்பட உள்கட்ட அமைப்பு வசதிகளும் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

    இதற்காக தமிழக அரசின் சார்பில் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஐந்தில் ஒரு இடத்தில் தொடங்குவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இவ்வளவு நாளும் கடிதப்போக்குவரத்துகள் நடந்து வந்தன. கோர்ட்டிலும் வழக்கு போடப்பட்டிருந்தன. சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அடிக்கடி டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து விரைவில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா சென்னை வந்தபோதும்கூட, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும் சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி அவரிடம் வலியுறுத்தினர். இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இறுதிநிலை வந்துவிட்டது.

    மதுரையில் உள்ள தோப்பூர் அல்லது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் தற்போது முடிவு செய்திருக்கிறது. கர்நாடக தேர்தலையொட்டி, தேர்தல் முடிந்தபிறகு எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

    இந்தநிலையில், எந்த நேரத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும், உடனடியாக அதைத் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #AIIMShospital
    ×