search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.கே.மணி"

    10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.
    சென்னை:

    வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்  நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் வன்னியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற முடியாத நிலை உள்ளது. இந்த வருடம் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் கல்வி நிலையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

    10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. 

    இந்நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
     
    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது என்றார். வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து என்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். இந்த விவகாரத்தை தமிழக அரசு முறையாக கையாளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    கொளத்தூர் பேரூராட்சியில் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். #gkmani
    சேலம்:

    பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் கொளத்தூர் பேரூராட்சியில் முதலில் குடிநீர் கட்டணம் ரூ.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு ரூ.60 -ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது வீடுகளுக்கு ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும், கடைகளுக்கு ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டு, இக்கட்டணம் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து முன்தேதியிட்டு செலுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.  

    இக்கட்டணத்தை பொதுமக்களால் செலுத்த இயலாத நிலை உள்ளது. எனவே, உயர்த்திய குடிநீர் கட்டணத்தை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை ஒன்று திரட்டி எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார். #gkmani
    கிருஷ்ணகிரி அணை நீரை ஏரிகளுக்கு நிரப்ப வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை வீணாக ஆற்றில் கலக்க செய்யாமல் அதை மக்களுக்கு பயன்படும் வகையில் ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் சுப.குமார், மாநில துணை தலைவர் மேகநாதன், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பு.தா.அருள்மொழி, கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி அணையில் உடைந்த மதகை சரி செய்யாமல் இருப்பதை கண்டித்தும், அணையில் இருந்து வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்காததை கண்டித்தும், அணையின் நீரை 52 அடியாக உயர்த்தி உடனடியாக மதகு அமைக்க வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகு உடைந்து தண்ணீர் வீணாகி சென்றது.

    அணையின் நீர்மட்டம் 52 அடியாக இருந்ததை மதகு உடைந்ததின் காரணமாக 42 அடியாக்கி உள்ளார்கள். தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. தண்ணீரை வீணாக்க கூடாது. மற்ற மாநிலங்களை போல தமிழக அரசு அணைகளை கட்டவில்லை. கால்வாய்களை வெட்டவில்லை.

    இருக்க கூடிய அணையை பாதுகாத்து தண்ணீரை சேமிக்க வேண்டும். தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பா.ம.க. சார்பில் மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். மாவட்டத்தில் முதல் கட்டமாக 28 ஏரிகளையும், அடுத்த கட்டமாக 25 ஏரிகளையும் நிரப்பிட வேண்டும். குறிப்பாக போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் உள்ள ஏரிகளை நிரப்ப வேண்டும். எண்ணேகொல்புதூர் திட்டத்தை படேதலாவ் ஏரியுடன் இணைக்க வேண்டும்.

    ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை கொடியாளம் அருகில் தடுத்து பக்கத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பினால் சூளகிரி சுற்று வட்டார பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கணேசன், பா.ம.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி வரதராஜன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
    ×