search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவரானது பெருமையாக உள்ளது என்று பொதுக்குழுவில் மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார். #DMK #MKStalin #Kanimozhi #DMKThalaivarStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க. ஸ்டாலினை பொதுக்குழுவில் நிர்வாகிகள் மொத்தம் 18 பேர் வாழ்த்தி பேசினார்கள்.

    மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசும் போது கூறியதாவது:-

    இங்கு பேசியவர்கள் தளபதி தியாகத்தை பற்றி பேசினார்கள். கட்சி தலைமை பொறுப்பை அவர் ஏற்றதற்கு பாராட்டு தெரிவித்தார்கள்.

    கலைஞருக்கு பிறகு இந்த பேரியக்கத்தை வழிநடத்த தளபதிதான் இருப்பார் என்பதில் யாருக்கும் கிஞ்சித்தும் சந்தேகம் இருந்தது இல்லை. இன்று அவர் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டு இருப்பது ஒரு சடங்குதான்.

    அவர் நம் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது. ஒவ்வொரு தொண்டனும், அடடா இவர்தான் என் தலைவர் என்று பெருமையோடு சொல்லும் அளவுக்கு தளபதியின் உழைப்பு அமைந்துள்ளது. அந்த தொண்டர்களுடன் நானும் பெருமைக் கொள்கிறேன்.

    காவிரி ஆஸ்பத்திரியில் கலைஞர் அனுமதிக்கப்பட்டபோது ஒருநாள் நலமாகவும், மற்றொரு நாள் உடல்நலம் குன்றி விட்டதாகவும் டாக்டர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு கலைஞர் உடல்நிலை இருந்தது.

    கலைஞருக்கு ஏதாவது ஆகிவிட்டால், அவரது ஒரே ஆசையான அண்ணா நினைவிடத்தில் கலைஞரையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதை நிறைவேற்ற தளபதி முடிவு செய்தார். இதற்காக பலருடன் தளபதி பேசினார்.

    அந்த நேரத்தில் கூட அ.தி.மு.க. அரசு அவரை தத்தளிக்க விட்டதை அருகில் இருந்து பார்த்தவள் நான். முதல்-அமைச்சரை பார்த்து இதுதொடர்பாக கோரிக்கை வைத்தபோது, 1 மணி நேரத்தில் அதிகாரிகளுடன் பேசிவிட்டு கூறுவதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். ஆனால் 1 மணி நேரத்தில் அவர் பேசவில்லை.

    அதற்கு பதில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞருக்கு இடம் இல்லை என்று தலைமை செயலாளரிடம் இருந்து அறிக்கைதான் வந்தது. அது நமக்கு இடிபோல இருந்தது. நாங்கள் துடிதுடித்து போனோம்.

    மெரீனாவில் போய் தொண்டர்களுடன் சென்று உட்காரலாம் என்று நான் ஆவேசமாக கூறினேன். ஆனால் தளபதி அந்த சமயத்தில் ஆவேசப்படவில்லை. அமைதி காத்தார்.

    வக்கீல்களை அழைத்து பேசினார். நீதிமன்றத்தை நாடினார். அங்கு நீதி கிடைத்தது.


    கலைஞரை அண்ணா நினைவிடப் பகுதியில் அடக்கம் செய்யலாம் என்று தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பை கேட்டதும் அந்த இடத்திலேயே தளபதி மனம் உடைந்து அழுதார்.

    இக்கட்டான நேரத்திலும் கூட அவர் கோபப்படவில்லை. நிதானமாக யோசித்து தனது செயல்பாட்டை காட்டினார்.

    அவர் மட்டும் கோபப்பட்டிருந்தால் லட்சோப லட்சம் தொண்டர்கள், இளைஞர்கள் திரண்டிருப்பார்கள். இந்த அரசால் அதை கட்டுப்படுத்தி இருக்க முடியாது. துப்பாக்கி சூடு நடந்திருக்கும். தளபதி கடமை, கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, அதை தவிர்த்தார்.

    கட்சியிலும் தளபதியாக செயல்பட்டு பிரதமரையே திருப்பி அனுப்பியவர், இன்று நமது தலைவராக நிமிர்ந்து நிற்கிறார். அவர் அன்று கோபப்பட்டிருந்தால் தமிழகமே அவர் பின்னால் அணிவகுத்து வந்து இருக்கும்.

    மெரீனாவில் மறியல் நடந்து இருந்தால் என்னவெல்லாமோ நடந்து இருக்கும். ஏனென்றால் இந்த அரசுக்கு மனசாட்சி இல்லை. அந்த நிலையில் மற்றவர்கள் கஷ்டப்படுவதை தளபதி விரும்பவில்லை.

    எனவே தமிழகத்தை தலைநிமிர்ந்து நடத்த எழுந்து வா தலைவா, எங்களை வழிநடத்து என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார். #DMK #MKStalin #Kanimozhi  #DMKThalaivarStalin
    ஆலந்தலையில் கனிமொழி எம்.பி நிதியில் கட்டப்படவுள்ள ரேசன்கடைக்கான இடத்தை அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கிராமத்தில் அந்த பகுதி மக்கள் ரேசன் கடை, மீன் வலைக்கூடம் ஆகியவற்றிற்கு புதிதாக கட்டிடம் கட்டித் தரக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இவர்கள் கோரிக்கையை ஏற்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தி.மு.க. எம்.பி கனிமொழியிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கனிமொழி எம்.பி தனது நிதியில் இருந்து ரேசன்கடை அமைக்க ரூ10 லட்சம், மீன் வலைக்கூடம் அமைக்க ரூ25 லட்சம் என மொத்தம் ரூ35 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான இடத்தை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆலந்தலை கிராமத்தில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, நகர செயலாளர் வாள் சுடலை, முன்னாள் கவுன்சிலர்கள் கோமதிநாயகம், சுதாகர், ஆலந்தலை ஊர் நல கமிட்டி தலைவர் அந்தோணி, கொம்பீரியர் சபை சந்திரலோபோ, வார்டு செயலாளர் லெவி, பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்று தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DMK #MKStalin
    சென்னை :

    தி.மு.க. மகளிரணி மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * தமிழ்ச் சமுதாயம் விழிப்புடன் இருக்க தன் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்த தலைவர் கருணாநிதி, தன் அண்ணனான அண்ணாவுக்கு அருகில் விழி மூடி, ஓய்வு கொண்டிருக்கிறார். அவர் வழியில், அவர் விட்டுச் சென்ற பணிகளை தொய்வின்றி தொடர்வோம், ஒற்றுமையோடு தி.மு.க.வை காப்போம் என அவர் நினைவு போற்றி உறுதி எடுப்போம்.

    * பா.ஜ.க. ஒப்பற்ற தலைவரும், முன்னாள் பிரதமரும், அனைவராலும் போற்றப்படும் மனிதநேயம் கொண்ட மனிதரும், தலைவர் கருணாநிதியின் உற்ற நண்பருமான அடல் பிகாரி வாஜ்பாய் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.



    * மறைந்த முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு இரங்கலை தெரித்துக்கொள்கிறோம்.

    * கேரள பெருவெள்ளத்தில் சிக்கி பலியான நூற்றுக்கணக்கானோரின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

    * தலைவர் கருணாநிதியின் வழிநின்று தி.மு.க.வின் வளர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும், தமிழ் மொழியின் மேன்மைக்காகவும் மு.க.ஸ்டாலின் அயராது உழைப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.

    அத்தனைக்கும் மேலாக ஓய்வின்றி உழைக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று தி.மு.க. மகளிரணி உளமார விரும்புகிறது, முன்மொழிகிறது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #DMK #MKStalin 
    கருணாநிதி சமாதியில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். #DMK #Kanimozhi #Karunanidhi #memorial
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையோரம் அண்ணா நினைவிடம் அருகே உள்ள கருணாநிதி சமாதியில் ஏராளமானோர் தினமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் அருகில் இருந்து தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில், கிழக்கு மாவட்ட மகளிரணியினர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று மாலை ஊர்வலமாக புறப்பட்டனர். கருணாநிதியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் ஊர்வலத்துக்கு முன்னதாக சென்றது. அதைத்தொடர்ந்து, கனிமொழி எம்.பி. தலைமையில், கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ., மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கருணாநிதி சமாதிக்கு வந்தனர்.

    முன்னதாக, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கேயே கண்ணீர்விட்டு அழுதபடி இருந்தார். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி வந்த கனிமொழி, தன்னுடைய தாய் ராஜாத்தியம்மாளுடன் சேர்ந்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, சமாதியை சுற்றி வந்தார்.

    அதேபோல், தி.மு.க. பார்வையற்றோர் நற்பணி மன்றத்தினர் ஊர்வலமாக வந்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

    கவிஞர் வைரமுத்து மலேசியா தமிழர்களுடன் இணைந்து கருணாநிதி சமாதியில் நேற்று காலையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கருணாநிதியின் பிறந்தநாளை உலகத்தமிழர்கள் ‘கலைஞர் செம்மொழி திருநாள்’ என்று கொண்டாட வேண்டும் என்பது எங்கள் விண்ணப்பம். ‘பாரத ரத்னா’ விருதுக்கு தகுதியானவர் கருணாநிதி என்று மத்திய அரசே உணரும் என்பதே என் எண்ணம். மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக இருந்து வழிநடத்துவார் என்றார்.  
    விரைவில் நடைபெற இருக்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துரைமுருகன் கட்சியின் பொருளாளராகவும், கனிமொழி துணை பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. #DMK
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு வருகிற 28-ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது.

    அண்ணா காலத்தில் தி.மு.க.வில் தலைவர் பதவி இல்லை. அவர் பொதுச்செயலாளராக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்து வந்தார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட பிறகு, மு.க.ஸ்டாலின் தி.மு.க. செயல் தலைவர் ஆனார்.

    தற்போது கட்சியை நடத்தி வரும் அவர் பொருளாளர் பொறுப்பையும் வகித்து வருகிறார். நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் கட்சி பொறுப்பாளர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள் புதிய தலைவரையும், பொருளாளரையும் தேர்ந்து எடுக்கிறார்கள்.

    தி.மு.க. தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவோர் வருகிற 26-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தி.மு.க. தலைமை கழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். போட்டியிட விரும்புவோர் ரூ.25 ஆயிரம் வேட்புமனு கட்டணமாக செலுத்த வேண்டும்.

    வேட்பு மனுக்களை திரும்ப பெற விரும்புவோர், 27-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் திரும்ப பெற வேண்டும். மனுக்கள் பரிசீலனை 27-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும். தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவோரை பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிய வேண்டும் என்று தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

    தி.மு.க.வை மு.க.ஸ்டாலின் வழிநடத்த வேண்டும் என்று கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புகிறார்கள். எனவே, தி.மு.க. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட யாரும் தயாராக இல்லை. ஆகவே, அவர் தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.


    தி.மு.க.வில் ஒருவர் இரண்டு பதவிகளை வகிக்க கூடாது என்று கட்சியில் விதி உள்ளது. எனவே, மு.க.ஸ்டாலின் தான் வகித்து வரும் பொருளாளர் பதவியை விட்டுக் கொடுக்கிறார். இந்த பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுகிறார். அவரும் போட்டியின்றி தி.மு.க. பொருளாளர் ஆகிறார்.

    கனிமொழி எம்.பி. கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார். டி.ஆர்.பாலு தி.மு.க.வின் முதன்மை செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

    தி.மு.க. பொதுக்குழுவில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரை முருகன் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் பெறப்படுகிறது. கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் புதிய பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவதும் முறைப்படி அறிவிக்கப்படுகிறது. #DMK #MKStalin #DuraiMurugan #Kanimozhi
    கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் தரக்கூடாது என்று அக்கறை காட்டிய தமிழக அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்த அக்கறையை காட்டவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார். #Kanimozhi #EdappadiPalanisamy
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் தரக்கூடாது என்று அக்கறை காட்டிய தமிழக அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்த அக்கறையை காட்டவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மே 22-ந்தேதி 13 பேர் கொல்லப்பட்ட பிறகு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.


    வேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில் முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

    ஆனால் இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30-க்கு தொடங்க இருந்த நிலையில் அரைமணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால் சி.எஸ். வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.

    கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிசாமி அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால் இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிசாமி வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். #Karunanidhi #Kanimozhi #EdappadiPalanisamy
    கனிமொழி எம்.பி. பெயரில் போலி டுவிட்டர் பக்கம் உருவாக்கியது தொடர்பாக தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், வக்கீலுமான செல்வநாயகம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். #MPKanimozhi #FakeTwitter
    சென்னை:

    தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், வக்கீலுமான செல்வநாயகம் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது மகள் கனிமொழி எம்.பி. மிகுந்த மனவேதனையுடன் உள்ளார். இந்த சூழ்நிலையில் கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் அவரது டுவிட்டர் பக்கத்தை போலியாக உருவாக்கி, அதில் சில அவதூறான தகவல்களை வெளியிட்டு உள்ளனர். இதுபோன்ற அவதூறு தகவல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்து மதத்தை பற்றி அவர் சொல்லாத தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரது நன்மதிப்பை குலைக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இதுபோன்ற அவதூறு தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  #MPKanimozhi #FakeTwitter #tamilnews
    கருணாநிதி நன்றாக இருப்பதாகவும், தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டார். #KarunanidhiHealth #KauveryHospital #Kanimozhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி (வயது 94), வயோதிகம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறை தகவல்கள் பரவத் தொடங்கியதால் காவேரி மருத்துவமனை அருகில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது. கொந்தளிப்பில் இருந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார். லேசான தடியடியும் நடத்தப்பட்டது.



    இந்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை வளாகத்தில் பேட்டி அளித்த ஆ.ராசா ‘கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது. நலமாக இருக்கிறார். கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

    இதேபோல் திமுக தலைவர் கருணாநிதி நன்றாக இருப்பதாக  கனிமொழி எம்.பி.யும் கூறியுள்ளார். தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு தற்போது உடல்நிலை சீராகி வருவதாகவும், தொண்டர்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் எனறும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். #KarunanidhiHealth #KauveryHospital #Kanimozhi

    காவேரி ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி நலமாக உள்ளதாகவும், டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கனிமொழி எம்.பி. கூறினார். #Karunanidhi #Kanimozhi
    சென்னை:

    காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து காலை 10.30 மணிக்கு வெளியில் வந்த கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கருணாநிதிக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு தற்போது சீராகி விட்டது. நேற்று இரவு ரத்த அழுத்தம் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இன்று அது இயல்பு நிலைக்கு வந்துள்ளது.

    தற்போது கருணாநிதி நலமாக உள்ளார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார். #DMK #Karunanidhi #Kanimozhi
    தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து, ஈரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றை அளித்தார்.
    புதுடெல்லி:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து, ஈரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றை அளித்தார்.



    அதில், “ஈரானில் பணிபுரியும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் கடந்த 6 மாதங்களாக பணியில் இருந்து நீக்கப்பட்டு மிகவும் பரிதாபமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை பணிக்கு அமர்த்தியவர்கள் அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை பறித்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஊதியம் வழங்காமல் கொடுமை இழைத்து வருகின்றனர் என்று தகவல் வந்துள்ளது. எனவே, வெளியுறவுத்துறை அமைச்சகம் இதில் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட 21 மீனவர்களையும் தமிழகத்துக்கு மீட்டுக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்ததாக கனிமொழி எம்.பி. அலுவலகம் தெரிவித்து உள்ளது. 
    தமிழகம் தலைநிமிர செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என்று விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். #kanimozhi #mkstalin #tngovt

    திருக்கோவிலூர்:

    தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95 -வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மார்க்கெட் தெருவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொன்முடி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் பெண் விடுதலைக்கு வித்திட்டவர் பெரியார். அவரது கனவுகளை சட்டம் இயற்றி நிறைவேற்றியவர் தலைவர் கருணாநிதி. உதாரணமாக பெண்களுக்கு சொத்துரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், சமத்துவபுரம் போன்ற எண்ணற்ற திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தேர்ந்தெடுக்கும் எந்த துறையிலும் அவர் முதன்மையாக விளங்கினார்.

    ஒருகாலத்தில் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்கமுடியும் என்ற நிலை இருந்தது. அதனை மாற்றி இன்று ஏழை வீட்டு பிள்ளைகளும் மருத்துவர் ஆகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. நீட் தேர்வை ஏன் பல மாநில முதல்வர்கள் எதிர்க்கவில்லை என கேட்டபோது அவர்கள் கூறுகையில் எங்கள் மாநிலத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லை. எனவே நீட் தேர்வு வந்தால் எங்கள் மாநில பிள்ளைகள் உங்கள் மாநிலத்தில் படிப்பார்கள் என்றனர். ஆனால் நமது மாநில பிள்ளைகளின் படிப்பு உரிமை போகின்றதே என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க. வுக்கு பினாமி அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகின்றது.

    மாநில உரிமை பறிபோவது குறித்து எதிர்த்து பேச துணிவு இல்லை. ஓ.பி.எஸ்.ஐ. போல் இ.பி.எஸ்.சும் விரைவில் தியானத்தில் ஈடுபடுவார்.

    8 வழிச்சாலை தொடர்பான அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆகும். இந்த திட்டத்தால் எவ்வளவு பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும். விவசாயம் பாதிக்கும் என்ற நிலையை இந்த அரசு உணரவில்லை. இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களை சந்திக்க செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரையும் அரசு கைது செய்து அடக்குமுறையை கையாளுகின்றது. ஒரு திட்டத்தை கொண்டு வரும் முன்னர் அது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் அதனை செயல்படுத்த வேண்டும். 8 வழிச்சாலை குறித்து தெளிவான அறிக்கை இல்லை. அதில் யார்? யாரை சந்தித்து எந்த எந்த அதிகாரிகள் பேசினார்கள் என்ற விபரங்கள் சரியாக இல்லை. அந்த அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆகும்.

    தமிழகத்தில் சாலைகள் அமைப்பதில் ரூ.1500 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக முதல்வர் மீது தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு சொல்லியிருக்கின்றார். அதற்கு இதுநாள்வரை பதில் இல்லை. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. இந்த அரசை மக்கள் தூக்கியெறிய தயாராகிவிட்டனர்.

    சத்துணவு, முட்டை, பருப்பு என பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கும் உணவில்கூட ஊழல் செய்யும் இந்த ஆட்சியை மக்கள் ஓட, ஓட விரட்டியடிப்பார்கள். அதே சமயம் விரைவில் தமிழகம் தலைநிமிர செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க பாடுபடுவோம்.


    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வினரும் தமிழகத்தில் தீவிரவாதம் தோன்றியிருப்பதாகவே பேசுகின்றனர். ஆட்சி பொறுப்பில் இருக்கும் அவர்களுக்கு யார் தீவிரவாதி, சமூக விரோதி என்று தெரியவில்லையா? அதனை யார்? யார்? என்று அறிவிக்க வேண்டும். எனக்கு தெரிந்தவரையில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வும் தான் தீவிரவாதம் என்பேன்.

    தமிழகத்தில் தீவிரவாதம் என்ற ஒரு பொய்யான வதந்தியை பரப்பிவிட்டு அடக்குமுறையில் ஈடுபடுவதுடன், மக்களை அச்சத்திற்குள்ளாக்குகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    கவர்னர் கிரண்பேடியால் புதுவை மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார். #Kanimozhi #GovernorKiranBedi

    புதுச்சேரி:

    தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கருத்தரங்கம் புதுவை கம்பன் கலையரங்கில் நடந்தது.

    கருத்தரங்கிற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மாற்று திறணாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    ஜனாதிபதி, கவர்னர் பதவிகள் நியமன பதவிகளாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரைகள் படி அவர்கள் செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுவை கவர்னர் கிரண்பேடியால் புதுவை மாநில வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா இந்து, இந்தி, இந்துஸ்தாகளை உருவாக்க முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி நடந்தால் சிறு பான்மையின மக்கள், தலித் மக்கள், பெண்கள் ஆகியோர் அடிமைகள் ஆக்கப்படுவார்கள்.


    எனவே மத்தியில் ஆளும் மதவாதிகளை தூக்கி எறிய வேண்டும், நமது உரிமைகள் நிலைபெற மத்தியில் ஆட்சி மாற்றம் வரவேண்டும்.

    கருத்தரங்கில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க. செயல் திட்டகுழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கருத்தரங்கை தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இது நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் பயனடைவார்கள். சென்னை-சேலம் பசுமை வழிசாலை திட்டத்தில் மக்களின் கருத்தை கேட்காமல் அரசு செயல்பட்டு வருகிறது என்றார். #Kanimozhi #GovernorKiranBedi

    ×