search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மதுரைக்கு மீண்டும் நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
    சேலம்:

    சேலம் புதிய பஸ்நிலையத்தில் 2 பிரிவுகளாக கான்கிரீட் தரைதளத்தை புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இதற்காக மண்பரிசோதனை நடைபெற்றபோது மண் ஈரப்பதம் இருந்ததால், மீண்டும் தார்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் முதற்கட்டமாக புதிய பஸ்நிலையத்தின் முதல் பிரிவில் தரைத்தளம் அமைக்கும் பணி தொடங்கியது.

    இதையடுத்து அங்கிருந்து கடலூர், சென்னை, சிதம்பரம், திருவண்ணாமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்காலிகமாக பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் இருந்து இயக்கப்பட்டன. அதே நேரத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மதுரை, நெல்லை போன்ற ஊர்களுக்கு 2-வது பிரிவில் இருந்து பஸ்கள் சென்று வந்தன. இந்தநிலையில் புதிய பஸ் நிலையத்தில் முதல் பிரிவில் பணிகள் முடிந்து மீண்டும் கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 2-வது பிரிவில் தரைத்தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் அங்கிருந்து இயக்கப்பட்ட மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் தற்காலிகமாக ஜவகர் மில் திடலில் இருந்து புறப்பட்டு சென்றன. இந்த பணிகள் முடிவு பெற்றதால் நேற்று முதல் 2-வது பிரிவில் இருந்து மீண்டும் பஸ்கள் இயக்கப்பப்பட்டன. அதாவது மதுரை, நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கம் போல பஸ்கள் புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் மீண்டும் அனைத்து பகுதிகளுக்கும் முன்பு இருந்தது போலவே பஸ்கள் புறப்பட்டு செல்வதால், பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் இன்றி பஸ்களை இயக்க வசதியாக ஒவ்வொரு பஸ்களும் புறப்படும் 20 நிமிடத்துக்கு முன்பு பஸ் நிலையத்துக்கு கொண்டு வர வேண்டும். கார், இருசக்கர வாகனங்களை பஸ் நிலையத்துக்குள் கொண்டு வரக் கூடாது என போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். 
    கோவை சரவணம்பட்டி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கூறி 3மாத குழந்தையை கழுத்தை அறுத்து தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 26). ரப்பர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வனிதா (22). இவர்களுக்கு 2 வயதில் சசிபிரியா, 3 மாதமே ஆன கவிஸ்ரீ என்ற குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை வீட்டில் தொட்டிலில் தூங்க வைத்த 3 மாத குழந்தையை யாரோ மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டதாக வனிதா சத்தம் போட்டார்.

    இதுகுறித்து கணவருக்கு தகவல் கூறி வரவழைத்தார். அவர் போலீசில் புகார் செய்தார். சம்பவஇடத்துக்கு சரவணம்பட்டி போலீசார் விரைந்து சென்றனர். வனிதாவிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் பெற்ற குழந்தையை கொலை செய்ததாக வனிதா கூறினார்.

    வனிதாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சீனிவாசன் (26) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவர் வேலைக்கு சென்ற பின்னர் வனிதா, கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சீனிவாசனுடன் சேர்ந்து குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக வனிதா ஒப்புக்கொண்டார். வீட்டின் அருகே உள்ள குப்பை மேட்டில் சாக்குபைக்குள் இருந்து, குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். இதையடுத்து அவரையும், சீனிவாசனையும் போலீசார் கைது செய்தனர். வனிதா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனக்கு, பக்கத்து வீட்டை சேர்ந்த சீனிவாசன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பழக்கமானார். அவரது பேச்சு எனக்கு பிடித்து போனதால் நான் அவருடன் நெருங்கி பழகினேன். எனது கணவர் வேலைக்கு சென்ற பின்னர், சீனிவாசன் வீட்டுக்கு வருவார்.

    நாங்கள் உல்லாசமாக இருப்பதற்கு குழந்தைகள் இடையூறாக இருந்தனர். எனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு, என்னால் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை என கூறி மூத்த மகளை திண்டுக்கல்லில் உள்ள எனது தாய் வீட்டில் விட்டு விட்டு வந்தேன். அதன்பிறகு சீனிவாசன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றார். நாங்கள் உல்லாசமாக இருந்த போது குழந்தை கவிஸ்ரீ அழுது கொண்டே இருந்தாள். இது எங்களுக்கு இடையூறாக இருந்தது.

    எனவே குழந்தையை கொன்று விடலாம் என முடிவு செய்தேன். நேற்று சீனிவாசன் வீட்டுக்கு வந்த போது குழந்தையை கொலை செய்யலாம் என கூறி நான் குழந்தையின் கை, கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். சீனிவாசன் குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் ரத்தக்கறை படிந்த எனது நைட்டி, துணிகளை குப்பையில் போட்டு வெளியே சென்று கொட்டினேன்.

    பின்னர் அரிசி சாக்கு பைக்குள் குழந்தையை அடைத்து வீடு அருகே உள்ள குப்பை மேட்டில் வீசி விட்டு எதுவும் தெரியாதது போல வீட்டுக்கு வந்தேன். சீனிவாசன் வீட்டுக்கு சென்ற பிறகு, வீட்டில் இருந்த குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டதாக நாடகமாடினேன். ஆனால் போலீஸ் விசாரணையில் சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டதாக புகார் வந்ததும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். வனிதா முன்னுக்கப்பின் முரணாக பேசியதால் அவர் மீது சந்தேகம் எழவே, அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சிறிது நேரத்துக்கு முன்பு வனிதா, சீனிவாசனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறினார்.

    இதுகுறித்து வனிதாவிடம் போலீசார் கேட்ட போது சீனிவாசன் வீட்டுக்கு வரவில்லை என்றார். சிறிது நேரத்தில் குப்பையை கொட்டுவதற்காக அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும் மழுப்பினார். தொடர்ந்து போலீசார் பல கேள்விகள் கேட்டதும் பதிலளிக்க முடியாமல் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    கொலைக்கு பயன்படுத்திய கத்தி, ரத்தக்கறை படிந்த நைட்டி மற்றும் துணிமணிகள், சாக்குபை ஆகியவற்றை ஆதாரங்களாக போலீசார் கைப்பற்றினர்.

    கைதான வனிதா, சீனிவாசன் ஆகியோரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானதன் காரணமாக கோவை, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைபெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானதன் காரணமாக கோவை, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைபெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடமேற்கு வங்கக்கடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த தாக்கத்தாலும், கர்நாடகத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாலும் தமிழகத்தில் மேற்கு திசை காற்று வலுப்பெற்று உள்ளது.

    இதன் காரணமாக கோவை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) சில இடங்களில் கனமழை பெய்யும். இது தென்மேற்கு பருவமழைதான்.

    தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வானம் மேக மூட்டமாக இருக்கும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். மீனவர்கள் வட மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மத்திய பகுதிக்கும், அந்தமான் பகுதிகளுக்கும் அடுத்த 2 நாட்களுக்கு போகவேண்டாம்.

    கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் இதுவரை தமிழகத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை 143 மில்லி மீட்டர். ஆனால் பெய்த மழை 125. எனவே தமிழகத்தில் மழை குறைவுதான். ஆனால் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட மிக கூடுதலாக பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    பொள்ளாச்சி 10 செ.மீ., சின்னக்கல்லார் 9 செ.மீ., வால்பாறை 8 செ.மீ., தேவலா 7 செ.மீ., நடுவட்டம் 6 செ.மீ., கூடலூர் பஜார் 5 செ.மீ., பாபநாசம்(திருநெல்வேலி), கன்னியாகுமரி, குந்தாபாலம் தலா 3 செ.மீ., ஊட்டி, பெரியாறு, குழித்துறை, பூதப்பாண்டி, மைலாடி, தக்கலை, பேச்சிப்பாறை தலா 2 செ.மீ., இரணியல், கொளச்சல், நாகர்கோவில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையும், கோவை, நீலகிரியில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #RegionalMeteorologicalCentre #Rain
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பிரதேசங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் மாநிலத்தின் மற்ற இடங்களிலும் சென்னையிலும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

    அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், கோவை, நீலகிரியில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு மற்றும் மத்திய வங்ககடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 3 செ.மீ மழையும், சின்னகல்லார், ஏற்காடு, நடுவட்டம் (நீலகிரி) ஆகிய இடங்களில் 2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

    சேலம், ஆத்தூர், தேவலா (நீலகிரி), பண்ருட்டி, ஓசூரில் 1 செ.மீ மழை பெய்துள்ளது.

    வடமேற்கு வங்ககடலில் ஒடிசா கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் கடலோர ஆந்திரா, தெலுங்கானா, ராயலசீமா, ஒடிசா பகுதியில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #RegionalMeteorologicalCentre #Rain
    நெல்லை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. #HeavyRain
    சென்னை:

    தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தான் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்யும். மற்ற மாவட்டங்களில் அதிக அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது.

    இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

    தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    வால்பாறை 17 செ.மீ., சின்னகல்லார் 12 செ.மீ., பெரியாறு 11 செ.மீ., தேவலா 10 செ.மீ., பொள்ளாச்சி 7 செ.மீ., குந்தாபாலம், குழித்துறை தலா 4 செ.மீ, போடிநாயக்கனூர், உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், திருக்கோவிலூர் தலா 3 செ.மீ., மயிலம், ஊட்டி, பூதப்பாண்டி, தக்கலை, கூடலூர், பாபநாசம், செங்கோட்டை, ராதாபுரம், இரணியல், பண்ருட்டி, வந்தவாசி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

    மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. 
    கோவை, திருப்பூர், நீலகிரியில் தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #IndianMedicalAssociation
    கோவை:

    மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவையில் வேலை நிறுத்த போராட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய மருத்துவமனைகள் பங்கேற்றுள்ளன. 3,500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து இந்திய மருத்து கவுன்சில் உறுப்பினர் டாக்டர் தங்கவேலு கூறியதாவது:-

    இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. பல கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டாக்டர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் 450-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. 3500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. அவசர சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டுப்பாளையத்தில் 10 தனியார் மருத்துவமனைகளும் 20 கிளீனிக்குகளும். சிறுமுகையில் 5 மருத்துவமனைகளும் 10 கிளீனிக்குகளும். காரமடையில் 4 மருத்துவமனைகளும் 5 கிளீனிக்குகளும் உள்ளன.

    இங்கு பணியாற்றும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். ஆனால் போராட்டத்தில் பிரசவம் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைகள் வழக்கம் போல் மேற்கொள்ளப்பட்டது.

    புறநோயாளிகள் சிகிச்சை மற்றும் அவசரமில்லா அறுவை சிகிச்சைகள் செய்யப்படவில்லை என்று சங்கதலைவர் திப்பையன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

    இதேபோன்று திருப்பூர், அவினாசி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 450 தனியார் டாக்டர்கள் உள்ளனர். இவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தலைவர் டாக்டர் பாரதி, செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கூறும்போது, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களின் கோரிக்கை நிறைவேற்றகோரி இதற்கு முன்பு ஒருநாள் போராட்டம் நடத்தினோம். அப்போது அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. ஆனால் இன்னும் கோரிக்கைகளின் மீது எந்த நடவக்கை எடுக்கவில்லை. அதனை கண்டிக்கும் வகையில் இன்று ஒரு நாள் வெளிநோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கமாட்டார்கள். அதே சமயம் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் செயல்படும். ஆனால் டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து சிகிச்சை அளிப்பார்கள் என்று கூறினர்.

    நீலகிரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி, கிளீனிக்குகளில் பணியாற்றும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்பட்டது.  #IndianMedicalAssociation

    கண்டக்டர் இல்லாத பஸ்கள் இயக்கப்படுவதை கண்டித்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் கோவை டாடாபாத்தில் உள்ள பவர் ஹவுஸ் அருகில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    உண்ணாவிரதத்திற்கு கோவை மண்டல தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் வில்லியம், அமைப்பு செயலாளர் மோகன் ராஜ், பொருளாளர் நடராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணவிரதத்தை மாநில தலைவர் ராகவேந்திரன் தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி கோவை தலைவர் குப்புசாமி, மாநில அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், இணை பொது செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

    கண்டக்டர் இல்லாத பஸ் இயக்கத்தை கைவிட வேண்டும். 240 நாட்கள் பணி முடித்த டிரைவர்கள், கண்டக்டர்களை முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    போக்குவரத்து கழகத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் வழங்கி, போதுமான தொழில் நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரதத்தை மாநில பொது செயலாளர் பத்மநாபன் முடித்து வைக்கிறார். முடிவில் பெரிய சாமி நன்றி கூறுகிறார்.

    கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. #CentralHomeMinistry
    புதுடெல்லி:

    கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டபோது பரிதாபமாக லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். பேரிடர் கால ஒத்திகை தொடர்பான பயிற்சியின் போது நடந்த இந்த விபத்து நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தது துரதிஷ்டவசமானது என்றும், வருத்தமளிப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், பயிற்சியின்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பங்கேற்கவில்லை எனவும், கல்லூரியில் பயிற்சி அளித்த ஆசிரியருக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படைகளை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #CentralHomeMinistry
    கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர். #CoimbatoreStudent #Logeshwari
    கோவை:

    தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. இதில் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போதோ கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    3 மாடிகளை கொண்ட இந்த கல்லூரியில் 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவது போலவும் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி பெறுவதற்காக மாணவிகள் 2-வது மாடியில் நின்றுகொண்டு இருந்தனர். கீழே மாணவிகளை காப்பாற்றுதவற்காக சிலர் வலையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.

    இந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்த லோகேஸ்வரி (வயது 19) என்பவரும் பயிற்சியில் கலந்துகொண்டார். இவர் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்க தயக்கம் காட்டினார். அப்போது மேலே நின்றுகொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவர் தைரியமாக குதி என்று கூறி உற்சாகப்படுத்தினார்.

    ஒருகட்டத்தில் மாணவியின் கையைப் பிடித்து கீழே குதிக்கவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரியின் தலை முதல் மாடியில் இருந்த சிலாப்பில் இடித்தது. இதில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக அடிபட்டது. இதனை பார்த்துக்கொண்டு இருந்த மாணவிகள் பயத்தில் அலறினர்.



    காயமடைந்த மாணவி லோகேஸ்வரி உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முதலுதவி பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.#CoimbatoreStudent #Logeshwari




    கோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CoimbatoreStudent #Logeshwari
    கோவை:

    கோவையில் தனியார் கலை அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இந்நிலையில், அந்தக் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் சார்பாக, பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றிருக்கிறது.  அந்த கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்றுவந்த  லோகேஸ்வரி  என்ற மாணவி, கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 2-வது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் மாணவி லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்துவிட்டார். மாணவி குதிப்பதற்கு முன்னதாக பயிற்சியாளர் அவரை கீழே தள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மாணவி எதிர்பாராத விதமாக சன்ஷேடில் மோதி கீழே விழுந்தார். அவருடைய தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  #CoimbatoreStudent #Logeshwari #tamilnews
     
    கோவை பி.என்.புதூரில் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தங்கவேலு, கிளை செயலாளர் சந்திரன், தி.மு.க.வை சேர்ந்த பன்னீர், குணசேகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பி.என்.புதூர் சென்னிமலை ஆண்டவர் நகரில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. தற்போது குடியிருப்பு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, தேவையற்ற அசம்பாவிதங்களும் ஏற்படும்.

    மேலும் மதுக்கடை திறக்கப்பட உள்ள இடத்தின் அருகே மைதானம் உள்ளது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் இவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இங்கு டாஸ்மாக் மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    கோவை கவுண்டம்பாளையம் உடையார் வீதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

    நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக மண் பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். இதனை நம்பி 40 குடும்பங்கள் உள்ளன. எங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 10 யூனிட் களிமண் தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் நாங்கள் கணுவாய், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து களிமண் எடுத்து வந்து மண்பானை செய்தோம். தற்போது எங்களுக்கு களிமண் எடுக்க அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால் எங்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது. எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு களிமண் எடுக்க நிரந்தர அனுமதி சான்று வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில், வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் மீது சிலர் கடந்த மாதம் 30-ந்தேதி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார் பதிவு செய்யப்பட்டும் குற்றவாளி கைது செய்யப்பட வில்லை.

    டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைந்த பார்களின் உரிமையாளர்கள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்கின்றனர். இதனை எதிர்க்கும் மதுக்கடை ஊழியர்கள் மீது சில நபர்களை தூண்டி விட்டு தாக்குதல் நடத்துகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் டாஸ்மாக் பார்களின் உரிமையை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று உள்ளது.

    கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாபு (வயது 39) என்பவர் அளித்த மனுவில், சிறு வயதில் ஏற்பட்ட நோய் காரணமாக எனது 2 கால்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளியான எனக்கு வடவள்ளி பஸ்நிலையம் அருகே பெட்டிக்கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இருந்தது.

    கோவை அருகே உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அளித்த மனுவில், நாங்கள் தொழிற்சங்கத்தில் முன்னணி நிர்வாகிகளாக இருந்ததால் எங்களை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உள்ளது. எனவே எங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 
    கோவை மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவியினால் அதை சுற்றி உள்ள பகுதிகளில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
    கோவை:

    கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க இரண்டு ‘ஜாமர்’ கருவிகள் சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. டவர் பிளாக்கில் ஒன்றும், உயர் பாதுகாப்பு பிரிவில் ஒன்றுமாக இரு ‘ஜாமர்’ கருவிகள் உள்ளன. இவை தவிர மேலும் இரண்டு ‘ஜாமர்’ கருவிகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.

    கோவை மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்துதற்கு தடைவிதிக்கப்பட்டாலும் உள்ளே இருக்கும் கைதிகள் செல்போன் பேசுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் அனைத்து பாதுகாப்புகளையும் மீறி செல்போன்களை மறைத்து கொண்டுவந்து கைதிகளுக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் செல்போன் செயல்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய சிறைகளில் ‘ஜாமர்’ கருவிகள் பொருத்தப்பட்டன.

    ஆனால் கோவை மத்திய சிறையில் பொருத்தப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவிகளின் தாக்கம் எல்லையை கடந்து அருகில் உள்ள பாலசுந்தரம் சாலை உள்பட சுற்று பகுதிகளில் யாரும் செல்போன்களை பயன்படுத்த முடியாத அளவிற்கு கடுமையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதைதொடர்ந்து பி.எஸ்.என்.எல். செல்போன் நிறுவனத்தினர் கருவிகளின் மூலம் ‘ஜாமர்’ கருவிகளின் தாக்கத்தை ஆய்வு செய்தனர். இதில் மத்திய சிறையில் பொருத்தப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவிகள் அருகில் உள்ள செல்போன் சேவைகளையும் பாதிப்பதை உறுதி செய்துள்ளனர்.

    இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் கூறியதாவது:-

    கோவை மத்திய சிறையில் பொருத்தப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவியினால் பி.எஸ்.என்.எல். மட்டுமல்லாது மற்ற செல்போன் நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சிறை அருகில் உள்ள பாலசுந்தரம் சாலை, பாரதியார் சாலை, நஞ்சப்பா சாலையில் செல்போனில் டயல் செய்தால் இணைப்பு கிடைக்கும். சில வினாடிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே தொடர்பு தானாக துண்டிக்கப்பட்டு விடும். அல்லது இணைப்பு கிடைத்தாலும் எதிர் தரப்பில் பேசுபவர்களின் குரல் தெளிவாக இருக்காது.இது போன்ற சேவை பாதிப்பு உள்ளது.

    இது தொடர்பாக செல்போன் பயன்படுத்துபவர்கள் ஏற்கனவே புகார் கூறினார்கள். இதுகுறித்து சிறை அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். ஆனால் அவர்கள் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ‘ஜாமர்’ கருவியின் தாக்கம் எவ்வளவு மீட்டர் சுற்றளவுக்கு இருக்கும் என்பதை மத்திய அரசு தொலை தொடர்புத் துறையினருக்கு தான் தெரியும். ‘ஜாமர்’ கருவியின் தாக்கத்தை குறைத்து சிறை வளாக அளவுக்குள் வைத்தால் இந்த கோளாறு தவிர்க்கப்படும்.இது தொடர்பாக தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×