search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99754"

    அய்யலூர் அருகே இரவு நேரங்களில் களைகட்டும் சூதாட்டம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தோட்டங்களிலும் தோப்பு வீடுகளிலும் இரவு நேர சூதாட்டம் களைகட்டி வருகிறது. கிராம புறங்களில் திரைப்படங்களை காண்பித்து பொதுமக்கள் அங்கு சென்றவுடன் இது போன்ற சூதாட்டம் அமோகமாக நடைபெற்று வருகிறது.

    ஏராளமான விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் வியாபாரிகள் இது போன்ற சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பணத்தை இழக்கும் நபர்கள் மீண்டும் தங்கள் ஆட்டத்தை தொடர்வதற்காக அதே இடத்தில் பணம் கடனாக வழங்கப்படுகிறது.

    வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணத்தை பெற்று விளையாட்டை தொடர்கின்றனர். இதனால் பணத்தை இழப்பதுடன் வீடு மற்றும் உடைமைகளையும் பறிகொடுத்து ஊரை விட்டு ஓடும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

    இது போன்ற சூதாட்டத்துக்கு போலீசாரும் உடந்தையாக உள்ளனர் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே சமூக சீரழிவுக்கு காரணமாக உள்ள சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தருமபுரியில் காய்கறிகளின் வரத்து அதிகரித்து உள்ளதால் விலை குறைந்து உள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி 4 ரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்து உள்ளது உழவர் சந்தை. இங்கு காய்கறிகளின் வரத்து  அதிகரித்து உள்ளதால் விலை குறைந்து உள்ளது.

    இதுகுறித்து உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த மாதத்தில் மழை சரிவர பெய்யாததால் கரும்பு, நெல், மஞ்சள், பருத்தி மற்றும் சோளம் போன்ற பெரிய அளவில் விவசாயம் செய்யும் விவசாயிகள் இப்போது காய்கறி விவசாயத்துக்கு மாறி உள்ளதால் காய்கறிகளின் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை குறைந்து உள்ளது.

    இவ்வாறு கூறினார்.

    காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி ஒரு கிலோ ரூ. 7-க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 18-க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ. 18-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ. 20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முள்ளங்கி ஒரு கிலோ ரூ. 8-க்கும், முருங்கை ஒரு கிலோ ரூ. 15-க்கும், பச்சைமிளகாய் ஒரு கிலோ ரூ. 23-க்கும், புடலங்காய் ஒரு கிலோ ரூ. 18-க்கும், பூசணிக்காய் ஒரு கிலோ ரூ. 16-க்கும், தேங்காய் ஒரு கிலோ ரூ. 35-க்கும், சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ. 22-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வாழைக்காய் ஒரு கிலோ ரூ. 30-க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ. 24-க்கும், கேரட் ஒரு கிலோ ரூ. 36-க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ. 16-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 20-க்கும், முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ. 12-க்கும் மற்றும் பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ. 18-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பது விவசாயிகளை அழிக்கும் செயல் என்று டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாகவும், அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மை என்றால் கண்டிக்கத்தக்கது; உழவர்களுக்கு இதைவிட மோசமான துரோகத்தை இழைக்க முடியாது.

    தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஆண்டு எனப்படுவது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ந்தேதி நெல் கொள்முதலுக்கான விலை அறிவிக்கப்பட்டு, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் தொடங்கப்படுவது வழக்கம்.

    குறுவை நெல் அறுவடை அக்டோபர் மாதத்தில் தொடங்குவதை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பா அறுவடை முடிந்த பிறகு கொள்முதல் அளவு குறைந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் மாதம் வரை இயங்கும். அறுவடை நடக்காவிட்டாலும் உழவர்கள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்படும்.


    ஆனால், நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 112 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை மூடும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட்டதன் அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    ஆகஸ்ட் 31-ந்தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து அரிசியாக்கி விட்டு நெல் கொள்முதல் நிலையங்களை மூடும்படி தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், இது தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அச்சமடைந்துள்ள உழவர் அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இதுபற்றி விளக்கம் அளிக்காமல் அமைதி காப்பது சரியல்ல.

    இந்தியாவில் உழவர்களின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதன் ஒரு கட்டமாக வேளாண்மை விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலைகளை நிர்ணயம் செய்தது.

    அது போதுமானதல்ல என்று உழவர்கள் கூறி வரும் நிலையில், ஒட்டுமொத்த கொள்முதலையே நிறுத்தும்படி மத்திய அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒருபுறம் கொள்முதல் விலையை உயர்த்திவிட்டு, மறுபுறம் கொள்முதலை நிறுத்துவது பசியில் வாடும் மனிதனுக்கு உணவைக் கொடுத்து விட்டு, உயிரைப் பறிக்கும் கொடுமைக்கு இணையானதாகும்.

    மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற நாளில் இருந்தே நேரடி கொள்முதலையும், பொதுவினியோகத் திட்டத்தையும் ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் நேரடி பயன் மாற்றத் திட்டம் ஆகும்.

    உணவு மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் இந்த திட்டத்தை பல மாநிலங்களில் சோதனை அடிப்படையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. நியாய விலைக்கடைகளில் மானிய விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்த பயனாளிகளுக்கு, புதிய முறைப்படி பணமாக மானியம் வழங்கப்படும் என்பதால் நியாயவிலைக் கடைகளே தேவையிருக்காது.

    அதனால் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்ய வேண்டியிருக்காது. இத்திட்டத்தை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தும் நோக்குடன் தான் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.

    நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை தனியார் வணிகர்களிடம் தான் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வணிகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு நெல் உள்ளிட்ட விளைபொருட்ளை அடி மாட்டு விலைக்கு வாங்குவர்.

    அதேநேரத்தில் அரசு நெல் கொள்முதல் செய்யாவிட்டால் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்கு அரிசி கிடைக்காது. இதனால் நியாயவிலைக் கடைகளை மூட வேண்டியிருக்கும். அத்தகைய நிலை ஏற்பட்டால் பொதுமக்களும், விவசாயிகளும் வாழவே முடியாமல் போய்விடும். அதனால் தான் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதை விவசாயிகளை அழிக்கும் சதி என்று குற்றஞ்சாற்றுகிறேன்.

    நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். மத்திய அரசே அவ்வாறு ஆணையிட்டிருந்தாலும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மாநில அரசே அதன் சொந்த செலவில் நெல் கொள்முதல் நிலையங்களை நடத்த வேண்டும்; அவற்றை பொது வினியோகத் திட்டத்தின்படி நியாய விலைக்கடைகளில் வழங்கி உழவர்களையும், மக்களையும் காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss
    ரத்தத்தை வேர்வையாக மண்ணிலே சிந்தி உழைக்கின்ற விவசாயினுடைய நலன் மேம்பாடு அடைய அரசு என்றென்றைக்கும் துணை நிற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #EdappadiPalaniswami
    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், அனுப்பூர் கிராமத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அம்மா பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, இறகு பந்து விளையாடினார். இதனை தொடர்ந்து அங்கு ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, உடற்பயிற்சி செய்து பார்த்தார்.

    இவ்விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் பல்வேறு கிராமங்களில் அம்மாவின் அரசு அமைத்து கொடுத்துள்ளது.


    நம்முடைய மாவட்டம் இன்றைக்கு ஒரு முன்னோடி மாவட்டமாக திகழக் கூடிய அளவிற்கு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்றைக்கு தமிழகத்திலேயே 32 மாவட்டங்கள் இருந்தாலும் நம்முடைய மாவட்டங்களை சேர்ந்தவர் தான் தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இன்றைக்கு இங்கே நிற்கின்றேன்.

    அம்மாவுடைய நல்லாசியோடு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு உங்களுடைய அன்போடு, உங்களுடைய ஆதரவோடு, இன்றைக்கு தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இருக்கின்ற பொறுப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது.

    ஒரு முதல்-அமைச்சர் ஒரு கிராமத்திற்கு வருவார் என்றால் மிக அரிது. நான் ஏற்கனவே பல முறை இந்த பகுதிக்கு வந்து சென்றிருக்கின்றேன். நம்முடைய மாவட்டம் முழுவதும் நான் சென்று வந்திருக்கின்றேன்.

    ஏற்காடு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மலை பகுதியும் சரி, அதன் கீழ் இருக்கின்ற கிராம பகுதியும் சரி, பேரூராட்சியில் இருக்கின்ற பகுதிகளும் சரி எல்லா இடத்திற்கும் நான் வந்து சென்றிருக்கின்றேன்.

    2011-ல் அம்மாவுடைய அமைச்சரவையில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தபோது இந்த பகுதிகளில் சாலைகள் எல்லாம் சிறப்பாக அமைத்து கொடுத்திருக்கின்றேன்.

    நான், இங்கே வருகின்றபோது, விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கையை வைத்தார்கள். அதெல்லாம் அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

    கிராம புற மக்களுடைய வாழ்வாதாரம் முன்னுக்கு வரவேண்டும். கிராமத்தில் இருக்கின்ற மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக கிடைக்கப் பெற வேண்டும். அதுதான் அம்மாவுடைய அரசின் லட்சியம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

    நகரத்தில் வாழ்கின்ற மக்களுக்கு என்ன? என்ன? அடிப்படை வசதிகள் கிடைக்கின்றதோ, அதுபோல் கடைக்கோடி கிராமத்தில் வாழுகின்ற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரம் சிறக்க வேண்டும் என்பது தான் அம்மாவுடைய ஆட்சியினுடைய திட்டம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் ஒரு விவசாயியாக இருந்தவன். இன்றைக்கும் விவசாய தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

    ஆகவே விவசாய பிரச்சனை எந்த அளவுக்கு கடினமானது என்பது பற்றி நான் உணர்ந்தவன். அதுபோல் விவசாய தொழில் எந்த அளவுக்கு சிரமம் என்பதையும் நன்கு அறிவேன்.

    விவசாய பணியில் ஈடுபடுகின்றது எவ்வளவு துன்பம், கஷ்டம் என்பதை நான் நன்கு அறிவேன். ஆகவே எந்த துறையிலும் இவ்வளவு கஷ்டம் கிடையாது. வெயில், மழையிலே நனைந்து பணியாற்றக் கூடியவன் விவசாயி மற்றும் விவசாய தொழிலாளி ஆவார்கள்.

    ரத்தத்தை வேர்வையாக மண்ணிலே சிந்தி உழைக்கின்றவன் விவசாயி. அப்படி உழைக்கின்ற விவசாயினுடைய நலன் மேம்பாடு அடைய அரசு என்றென்றைக்கும் துணை நிற்கும். அவர்களுக்கு தேவையான திட்டங்களை வகுத்து அளிக்கும். எல்லா பகுதிகளிலும் விவசாயம் முன்னுக்கு வரவேண்டும்.

    விவசாயம் செழிப்பாக இருந்தால் தான் நாடு செழிப்படையும். அந்த செழிப்பான ஆட்சி அம்மாவுடைய ஆட்சியிலேயே கிடைக்கும்.

    கிராமம் முன்னுக்கு வரவேண்டும். கிராமத்தில் வாழுகின்ற மக்களுக்கு என்ன? என்ன? தேவை என்பதை அறிந்து பல்வேறு திட்டங்களை வகுத்து அந்த திட்டத்தின் மூலமாக கிராம பொருளாதாரம் மேம்பாடு அடைய அரசு வழிவகுக்கிறது.

    வேளாண்மை துறை இந்திய அளவில் தமிழகத்தில் தான் சிறந்து விளங்குகின்றது. வேளாண் உற்பத்தி, உணவு தானிய உற்பத்தி அதிக அளவு உற்பத்தி செய்து தேசிய விருது பெற்ற அரசு அம்மாவுடைய அரசு. எல்லாதுறையிலும் இன்றைக்கு முன்னணி வகித்து கொண்டிருக்கிறது.

    மக்களுடைய குறைகளை போக்குவதே எங்களுடைய லட்சியம். அதற்காக அம்மாவுடைய அரசு தொடர்ந்து பாடுபடும்.

    வாழ்வாதாரம் முன்னுக்கு வர, அடிப்படை வசதிகள் கிராமத்திற்கு வழங்க அம்மாவுடைய அரசு தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவித்து சிறப்பான வரவேற்பு அளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார். #TNCM #EdappadiPalaniswami
    எருக்கூர் வாய்க்காலில் தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமத்தில் கழுதை வாய்க்கால் உள்ளது. இதன்மூலம் எருக்கூர், அரசூர், கூத்தியாம் பேட்டை, மணலகரம், மாத்தால மடையம், தெற்குவெளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 75, ஏக்கர் நிலபரப்பு பாசனவசதி பெற்று வருகின்றது.

    தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் இதுவரை கடைமடை பகுதியான எருக்கூர் கழுதை வாய்க்காலில் தண்ணீர் வராததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து எருக்கூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், எருக்கூர் கிராமத்தில் முக்கிய பாசன வாய்க்காலாக கழுதை வாய்க்கால் உள்ளது. இதன்மூலம் எருக்கூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் வருமோ வராதோ என்ற அச்சத்துடன் சாகுபடி பணியை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

    இது குறித்து பொதுபணி துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்படையும். எனவே எருக்கூர் கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்ட தக்காளி, வெள்ளம் காரணமாக கேரளாவுக்கு அதிகளவு கொண்டு செல்லாததால் கிலோ ஒன்றுக்கு ரூ. 1 முதல் 2 வரை விற்பனையானது.
    பாவூர்சத்திரம்:

    நெல்லை மாவட்டத்தில் கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, பெத்தநாடார்பட்டி, வெய்க்காலிப்பட்டி, கல்லூரணி, மகிழ்வண்ணநாதபுரம், சுந்தர பாண்டியபுரம், சுரண்டை, மேலப்பாவூர், வெள்ளகால், ராஜபாண்டி, கருமடையூர், மூலக்கரையூர், சாலைப்புதூர், அருணாப் பேரி, ஆவுடையானூர், அரியப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பல்லாரி, மிளகாய், தக்காளி, வெண்டை, சோளம் மற்றும் பல்வேறு வகை காய்கறிகள் பயிரிட்டுள்ளன.

    தக்காளி மட்டும் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்கின்றனர். அப்படி விற்கப்படும் தக்காளிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது.

    நாற்றுப்பாவி 20 நாட்கள் கழித்து வயல்களில் நடவு நட்டு 60 நாட்கள் கழித்து தக்காளிகள் ஓரளவு விளைச்சல் இருக்கும். ஆனால் தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசுவதாலும், ஒவ்வொரு நாள் வெயில் மற்றும் சீதோஷ்ண நிலை மாறி வருவதால் கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடியில் இலை கருகல் மற்றும் மொட்டை நோய் ஏற்பட்டு செடிகள் பட்டுப்போய் காணப்பட்டது.

    நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் பல மருந்துகள் தெளித்து கஷ்டப்பட்டு தக்காளியை விளைவித்தனர். இதனால் தக்காளி மகசூல் தற்போது மிகவும் அதிகளவில் காணப்படுகிறது. ஆனால் மகசூலுக்கு தகுந்தாற்போல் மார்க்கெட்டில் விலை ஒரே நிலையில் இல்லாமல் விற்கப்படுகிறது.

    தற்போது தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. வழக்கமாக கேரளாவுக்கு அதிகமாக காய்கறிகள் கொண்டு செல்லப்படும். ஆனால் மழை வெள்ளம் காரணமாக கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் அங்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் அங்கு இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை.

    இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு மிக குறைவான அளவிலேயே காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதில் தக்காளியும் அடங்கும். பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்பட்ட தக்காளிகள் கேரளாவிற்கு அனுப்பபடாததால் அவை நெல்லை மார்க்கெட்டுகளில் தேக்கமடைந்துள்ளன. கடந்த வாரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் 15-க்கும் அதிகமாக விற்பனையானது. இந்த விலை விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் 20 கிலோ கொண்ட ஒரு டப்பா தக்காளி ரூ. 30 முதல் ரூ. 40-க்கு விற்பனையானது.

    இந்த விலை இறக்கத்தால் கீழப்பாவூர் வட்டார விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர். இதனால் தக்காளிகள் கனிந்து நிலங்களில் விழுந்து அழுகி பாழாகி போகிறது. இதைத் தொடர்ந்து நேற்று தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ. 1 முதல் 2 வரை விற்கப்பட்டது.

    கடந்த வருடம் நாற்று பாவி, நடுவை நட, களை எடுக்க, மருந்து தெளிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவானது. ஆனால் இந்த வருடம் தக்காளி பயிரிடப்பட்ட வயல்களில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த பல மருந்துகள் தெளித்ததால் இந்த வருடம் ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரத்திற்கு மேல் செலவாகி விட்டது. இவ்வளவு பணம் செலவழித்தும் மார்க்கெட்டில் தக்காளிக்கு விலை இல்லாத காரணத்தினால் செலவழித்த தொகையை எடுக்க முடியுமா என அச்சத்தில் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வங்கியில் 200 விவசாயிகள் வாங்கிய ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கான கடனை செலுத்தி இருப்பதாக நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். #AmitabhBachchan #FarmerLoan
    மும்பை:

    இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நேற்று மும்பையில் டி.வி. நிகழ்ச்சி தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்திகளை படிக்கும்போது மிகவும் வேதனை அடைகிறேன். ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என வாங்கிய கடனை கூட திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து பல ஆண்டுகளுக்கு முன்பே வருந்தினேன். அப்போது 40 முதல் 50 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவி அளித்தேன். தற்போது வங்கிகளிடம் இருந்து பெயர் பட்டியலை பெற்று 200 விவசாயிகள் வாங்கிய ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கான கடனை செலுத்தி இருக்கிறேன்.

    மேலும் உயிர் நீத்த ராணுவ வீரர்கள் 44 பேரின் குடும் பங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளேன். அரசிடம் இருந்து அந்த தியாகிகளின் பெயர் பட்டியலை பெற்று அவர்களது மனைவி மற்றும் தாய், தந்தையர்களுக்கு ரூ.1 கோடியை பகிர்ந்து அளித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #AmitabhBachchan #FarmerLoan
    மத்திய அரசு மானித்துடன் கூடிய விலையில் வேளாண் கருவிகள், இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
    பெரம்பலூர்:

    மத்திய அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானிய விலையில் பெற விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தில் 8 குதிரைத்திறன் முதல், 70 குதிரைத்திறன் வரை சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சுழல் கலப்பை, விசைக் களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, தட்டு வெட்டும் கருவி, டிராக்டரில் இயங்கும் தெளிப்பான் ஆகியவை வாங்க விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

    இந்தத் திட்டத்தில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை, மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையுமான தொகை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகப்பட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

    அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் விலைப் பட்டியல்கள், மானிய விவரங்கள் ஆகியவை வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் கிடைக்கும்.

    இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு விவசாய கருவிகள் வாங்கும் மானிய தொகை சம்பந்தப்பட்ட விவசாயகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாக மானிய தொகை வரவு வைக்கப்படும்.

    மானிய விலையில் விவசாய கருவிகள் வாங்க மத்திய அரசின் இணையதள முகவரியில் விவசாயிகள் வேளாண் கருவிகள் வாங்க பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் மானிய விலை வேளாண் கருவிகள் வழங்கப்படும்.

    புகைப்படம் 1, பான் கார்டு ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், நிலவரி ரசீது, வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம், கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ், சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    எனவே ஆன்லைன் மூலம் பதிவு செய்து மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.

    பெரம்பலூர் மாவட்ட வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் இடையே 277 கி.மீ. தொலைவில் 8 வழி பசுமைச்சாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

    இத்திட்டத்திற்காக, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், பாசன கிணறுகள், வீடுகள், வனப்பகுதிகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 8 வழிச்சாலை தொடர்பாக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இது விவசாயிகள் மத்தியில் வரவேற்பையும், நீதியின் மீதான நம்பிக்கையையும், தற்காலிக நிம்மதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    8 வழிச் சாலை பிரச்சனைக்காக இதுவரை போலீசார் என்னை 3 முறை கைது செய்துள்ளனர். நிலத்தை நம்பிதான் குழந்தைகளை காப்பாற்றி வருகிறேன். 3 ஏக்கர் நிலத்தில் 8 வழி சாலைக்காக கல் பதிக்க வந்தபோது, அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதேன். ஆனாலும், போலீசை வைத்து மிரட்டி என்னுடைய நிலத்தை அளந்து, கற்கள் நட்டனர்.

    இந்த நிலத்தையும், பம்பு செட்டையும் நம்பி தான் வாழ்கிறோம். இந்த நிலத்தை ரோடு போட எடுத்துக்கொண்டால், நாங்கள் செத்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை. கோர்ட் தீர்ப்பு கேட்டு அழுதே விட்டேன். செத்து பிழைத்தது போல இருக்கிறது.

    எங்கள் முப்பாட்டன் காலத்தில் இருந்து இந்த நிலத்தை நம்பியே இருந்திருக்கிறோம். எங்களுடைய 4 ஏக்கர் நிலத்தையும், பம்புசெட் கிணற்றையும் அளந்து, கற்கள் நட்டபோது, உயிரே போய்விடும் போல இருந்தது.

    இந்த நிலம் இருந்தால், நாங்கள் மட்டுமா பிழைப்போம். எல்லோருக்கும் சோறு இந்த நிலத்தில் இருந்துதானே கிடைக்கிறது. இதை அழிக்கலாமா என கண்ணீர் விட்டோம். இப்போது, கோர்ட் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

    8 வழிச்சாலை திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட வேண்டும். இந்த தடையை நீக்க அரசு மேல்முறையீடு செய்ய முயற்சிக்கலாம்.

    எனவே, விவசாயிகளின் வேதனையை உணர்ந்து, நிரந்தரமாக தடை விதித்து கோர்ட் நீதி வழங்கும் என நம்பியிருக்கிறோம் என்றனர்.
    8 வழிச்சாலை தொடர்பாக மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்கள் யாரையும் அப்புறப்படுத்தக்கூடாது என்று ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை வரவேற்று சேலத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டினர்.
    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு 274 கி.மீ. தூரத்திற்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7,500 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படுகிறது. மேலும் வனப்பகுதி, பள்ளி கூடங்கள் பல ஆயிரம் வீடுகள், கோவில்கள் இடிக்கப்பட உள்ளன.

    இதற்கான நில அளவீடு நடந்த போது பாதிக்கப்படும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்ததுடன் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நில அளவீடு பணிகள் நடைபெற்றது.

    இதற்கிடையே தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பா.ம.க. இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்கள் யாரையும் அப்புறப்படுத்தக்கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். மேலும் வழக்கு விசாரணை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று கூறினர். இதனை அறிந்த சேலம், தர்மபுரி உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தீர்ப்பை வரவேற்றனர்.

    சேலம் மாவட்டத்தில் 36 கி.மீ. தூரத்திற்கு 8 வழி சாலை அமைக்க நிலம் அளவீடு முடிக்கப்பட்டு முட்டுக்கல் நடப்பட்டது. நேற்று தீர்ப்பு வெளியானவுடன் சேலம் நிலவாரப்பட்டி பகுதியில் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் 100-க்கும் மேபட்டோர் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி மைதானத்தில் திரண்டனர்.

    அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சேலம் வாழப்பாடி அருகே உள்ள குப்பனூர், குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்காபுரம் பகுதியில் பாதிக்கப்படும் மக்கள் கோவில்களில் திரண்டு கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

    இது குறித்து விவாசாயிகள் கூறுகையில், பல தலைமுறைகளாக எங்களிடம் இருந்த ஒரே வாழ்வாதாரமான நிலத்தை போலீஸ் உதவியுடன் பறிக்கும் முயற்சியில் அரசு இறங்கியது. தற்போது நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு ஒரு தற்காலிக நிவாரணியாக உள்ளது. எங்கள் வேதனைக்கு தீர்வு காணும் வகையில் 8 வழி சாலை திட்டத்திற்கு கோர்ட் நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
    வாணியம்பாடி:

    தென் பெண்ணை- பாலாற்றை இணைக்கும் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் சங்க மாநாடு வாணியம்பாடியில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் தனபால் தலைமை வகித்தார். இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி கலந்து கொண்டு, தென் பெண்ணையும், பாலாற்றையும் இணைப்பதன் அவசியம் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் வாணியம்பாடி, ஆலங்காயம், திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜீவாதாரமான தண்ணீரில் முக்கிய பங்கு வகிப்பது பாலாறு. இதன் நீர், 5 மாவட்டங்களில் குடிநீர், விவசாயம், ஆலை பணிக்கு பயன்படுகிறது. ஆனால் தற்போது பாலாற்றில் தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல் உள்ளது. எனவே தென் பெண்ணையுடன் பாலாற்றை இணைக்க கோரினோம். தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆனால் கடலில் வீணாக தென் பெண்ணை நீர் கலக்கிறது. இத்திட்டத்தை அரசு செயல்படுத்திருந்தால் பாலாற்றில் தண்ணீர் இருந்திருக்கும். தண்ணீர் பஞ்சமும் தீர்ந்திருக்கும். வேலூர் மாவட்டத்தில் 39 லட்சம் மக்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 லட்சம் மக்களும், காஞ்சிபுரத்தில் 39 லட்சம் பேரும், மற்றும் கால்நடைகளும் பயன் பெற்றிருக்கும். மத்திய அரசு ரூ.650 கோடியில் தென்பெண்ணை- பாலாறு இணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்களின் நீராதாரத்தை பெருக்கும் வகையில், இத்திட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இதனை செய்யவில்லை என்றால் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட வேண்டிய நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 7 லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த வாணியங்குடி ஊராட்சியில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் லதா தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப மண் பரிசோதனை செய்து விவசாய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாக வேளாண் உதவி அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மூலம் மண்வள அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் அதிக லாபம் பெற மண்ணின் தன்மைக்கேற்ப பயிர் வகைகளை பயிரிட வேண்டும். இந்த திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் 2015-16-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, அதாவது கடந்த 4 ஆண்டுகளில் மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 653 விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்காக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி அலுவலர்களின் ஆலோசனைப்படி விவசாயப் பணிகளை மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×