search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99898"

    பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. #DindigulSreenivasan #RahulGandhi
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அணியாகவும், அவரது பேரன் ராகுல்காந்தி ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றனர். இரு துருவங்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு ஓட்டு வேட்டை நடக்கிறது.

    தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி அ.தி.மு.க. என்று தெரிந்ததால்தான் பா.ஜனதா எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. நாட்டில் இன்றைய நிலையை கருதி பா.ம.க. எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்றது போல இந்தமுறையும் எங்களால் தனித்து நின்று வெற்றி பெற முடியும். எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து தனது பேச்சை பேசிக் கொண்டே இருந்தார்.

    இதற்கு முன்பு நடந்த பல கூட்டங்களிலும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையான கருத்துகளை கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் என்றும், ஜெயலலிதாவுக்கு சசிகலா வி‌ஷம் வைத்து கொன்று விட்டார் என்றும், அப்பல்லோலில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என நாங்கள் பொய் சொன்னோம் என்றும், மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை தமிழக கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரசிம்மாராவிடம் மனுகொடுத்துள்ளார் என்றும் தொடர்ந்து பலவிதமான சர்ச்சை பேச்சுகளை பேசி வந்தார். பாராளுமன்ற தேர்தலுக்காக தினசரி பிரசாரத்துக்கு சென்று வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று என்ன பேச போகிறார் என கட்சியினரும் செய்தியாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். #DindigulSreenivasan #RahulGandhi

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #Congress
    ஓசூர்:

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், அவர் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் போட்டியிட வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    கர்நாடக மாநிலம் சாமராஜ் நகரில் நேற்று அக்கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவ், கூறியதாவது:-

    ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வோம்.

    ஏற்கனவே, அவரது பாட்டி இந்திரா காந்தி, தாயார் சோனியா காந்தி ஆகியோரை கர்நாடக மக்கள் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளனர். அந்த வரிசையில், ராகுல் காந்தியும் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    அவரது இந்த விருப்பத்தை முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, தற்போதைய துணை முதல் மந்திரி பரமேஷ்வர் ஆகியோரும் வரவேற்று முன்மொழிந்துள்ளனர்.

    மேலும், காங்கிரஸ் கட்சிக்கு பாதுகாப்பான தொகுதி என்று கருதப்படும் மைசூருவிலிருந்து ராகுலை போட்டியிட செய்வது என்று தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அத்துடன் பீதர், தாவணகெரே ஆகிய தொகுதிகளும் ராகுல் காந்திக்காக, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர். #Congress
    ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு முன்வருமேயானால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். #StellaMariscollege #RahulGandhi #KSAlagiri
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றது எந்த அடிப்படையில் என்று விளக்கம் கோரி அறிக்கை அனுப்பும்படி கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் தாக்கீது அனுப்பியுள்ளார்.



    பொதுவாக, கல்லூரியில் நடைபெறுகிற விழாக்களில் அரசியல் தலைவர்கள் எந்த அடிப்படையில் பங்கேற்று உரை நிகழ்த்துவார்களோ, அதைப்போலத் தான் ராகுல்காந்தியும் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அழைக்கப்பட்டு சிறப்புரை ஆற்றினார்.

    இதில் ஆட்சேபனை செய்வதற்கு தமிழக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?. இத்தகைய தேவையற்ற நடவடிக்கையின் மூலம் ராகுல்காந்தியின் செயல்பாட்டில் குந்தகம் விளைவித்துவிட முடியும் என்று மத்திய - மாநில அரசுகள் கருதுமேயானால் அது பகல் கனவாகத்தான் முடியும்.

    ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு முன்வருமேயானால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எச்சரிக்க விரும்புகிறேன். எனவே, பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கிற நோட்டீசை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #StellaMariscollege #RahulGandhi #KSAlagiri
    ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார். #KSAzhagiri #RahulGandhi

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பங்கேற்போடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்தது முதற்கொண்டு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடையே மிகப்பெரிய கலக்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க.வினர் புலம்பிக் கொண்டிருப்பதை நம்மாலே புரிந்து கொள்ள முடிகிறது.

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக அமைந்துள்ள கூட்டணி நாம் அமைத்ததைப் போல கொள்கைக் கூட்டணி அல்ல. நமது கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக கேள்விகளை தொடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்த அவருக்கு அரசியல் வரலாற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    இலங்கை தமிழர் பிரச்சினையைப் பற்றி தமிழிசை நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இலங்கை தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி செயல்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் இன்றைக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை தமிழிசையால் மறுக்க முடியுமா ?

    தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒப்பந்தம் போட்ட காரணத்தினாலே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜீவ்காந்தி பங்கரவாத அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார். இத்தகைய உயிர் தியாகத்தைச் செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிற ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு என்ன தகுதி இருக்கிறது ? இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து அவர் முன்னிலையில் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியின் துரோகத்தை தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.

    1966-ம் ஆண்டில் தலைநகர் தில்லியில் காமராஜர் குடியிருந்த வீட்டின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சங்பரிவார் கும்பலின் வாரிசாக விளங்கி வருகிற பா.ஜ.க.வினர் அவரது பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள். இவர்களுக்கு எங்களது தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு பேச என்ன உரிமை இருக்கிறது?

    தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2004 பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்ட போகிறது. இந்தியாவின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தியும், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலினும் பதவியேற்கிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும். ஆயிரம் தமிழிசைகள் ஒன்று சேர்ந்தாலும் எந்த சக்தியாலும் இதை தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KSAzhagiri #RahulGandhi

    ‘சென்னை மற்றும் நாகர்கோவில் கல்லூரிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகாது’ என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #SatyabrataSahoo #RahulGandhi
    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் தேதியன்று மதுரை சித்திரைத் திருவிழா நடப்பதால் ஏற்படும் சிக்கல் குறித்து மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. கிடைத்த உடன் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும். பின்னர், ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் அளிக்கப்படும். அதேபோல் தமிழகத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளின் வழக்கு விவரங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட கலெக்டர்கள்) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. தி.மு.க. சார்பில் உளவுப் பிரிவு அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோரி புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்கும்.

    பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்காக இதுவரை 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வீடியோ படம் எடுத்து கண்காணிக்கும் குழு ஒன்று மற்றும் வீடியோ படங்களை கவனித்து நடவடிக்கை எடுக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 500 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளி குங்கும சிமிள்கள், பரிசு பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதிகப்படியான பணம் பரிவர்த்தனை நடைபெற்றால் தகவல் தெரிவிக்க அனைத்து வங்கிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10 லட்சத்து மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுகுறித்து வருமானவரித்துறைக்கு முதலில் தகவல் அளிக்கப்படும்.

    தனி நபர் ரூ.50 ஆயிரம் வரையில் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக யார் கொண்டு சென்றாலும் அதற்கு உரிய ஆவணம் இருக்க வேண்டும். இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். நட்சத்திர பேச்சாளர் ரூ.1 லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 3 ஆயிரத்து 479 ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிமத்தை நீடிப்பு செய்யாத 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 4 துப்பாக்கிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 1,312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை மற்றும் நாகர்கோவிலில் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது, தேர்தல் நடத்தை விதி முறைகள் மீறிய செயலா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது தேர்தல் ஆணையம் விதித்துள்ள 5 கட்டுப்பாடுகளை கணக்கில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், ராகுல் கலந்து கொண்டதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை. முன் அனுமதி பெற்று நடத்துவதில் எந்த தவறும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SatyabrataSahoo #RahulGandhi
    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திடீர் சென்னை வருகையால் திமுக கூட்டணியில் தொகுதிகள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரபூர்வமாக நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். #ParliamentElection #RahulGandhi #MKStalin
    சென்னை:

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகளும், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர, ஏனைய கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டன. எந்த தொகுதிகள் என்று அறிவிக்கப்பட வேண்டியது தான் பாக்கி. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகள் எவை என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடித்து வந்தது.

    தி.மு.க. - காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே சந்தித்து பேசினாலும், முடிவு எட்ட முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில், நாகர்கோவிலுக்கு இன்று (புதன்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வருகை தரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வருகைக்கு முன்னதாக பேச்சுவார்த்தையை முடித்து தொகுதிகள் பட்டியலை வெளியிட தி.மு.க. திட்டமிட்டிருந்தது.



    ஆனால், நேற்று திடீரென ராகுல்காந்தியின் வருகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அவர் சென்னை வந்து 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகே நாகர்கோவில் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

    இதனால், நேற்று இரவு தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வரவில்லை. இன்றும் நாகர்கோவிலில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும் செல்ல இருப்பதால், தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்பு இல்லை.

    எனவே, நாளை (வியாழக்கிழமை) காலை சென்னை அண்ணா அறிவாலயம் வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளை இறுதி செய்ய உள்ளனர். அதன்பிறகு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதிகள் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிடுகிறார். தற்போதைய நிலையில், கரூர், கிருஷ்ணகிரி, தென்காசி, திருச்சி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டு வருவதால் சிக்கல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection #RahulGandhi #MKStalin

    நாகர்கோவிலுக்கு 13-ந் தேதி ராகுல்காந்தி வருகிறார். அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். #Parliamentelection #RahulGandhi
    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி 13-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவிலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்கிவைக்கிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    இதற்கிடையே ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை நடத்த நாகர்கோவிலில் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. குமரி மாவட்டம் வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்தனர்.

    இந்நிலையில் டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று நாகர்கோவில் வந்து ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர். விழா மேடை அமைக்கப்பட உள்ள இடம், பொதுமக்கள் வரும் வழி, ராகுல்காந்தி ஹெலிகாப்டர் இறங்கும் இடம் உள்ளிட்டவற்றை அந்த குழுவினர் பார்வையிட்டனர்.

    இதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள், விழா மேடையை எந்த வடிவில் அமைப்பது? ராகுல்காந்தி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி மேடைக்கு வரும் வழியை அலங்கரிப்பது தொடர்பாக ஆலோசித்தனர்.  #Parliamentelection #RahulGandhi
    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. #ParliamentElection #DMK #Congress
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னையில் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிடுகிறார்.

    அ.தி.மு.க.வை தொடர்ந்து, தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிக்க இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

    தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுப்பதற்காக, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கனிமொழி எம்.பி. நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, தொகுதி பங்கீடு, தொகுதிகள் குறித்த செயல் திட்டம் பற்றி கனிமொழி விளக்கி கூறினார். இந்தநிலையில் மீண்டும் ராகுல்காந்தியை கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். நேற்று மாலை 5 மணி தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7 மணிவரை நீடித்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் வழங்கப்பட இருக்கிறது.

    முன்னதாக, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர்.

    டெல்லியில் ராகுல்காந்தியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதற்காக கனிமொழி எம்.பி. நேற்று இரவு உடனடியாக சென்னை புறப்பட்டார். தி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இன்று (புதன்கிழமை) சென்னை வந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் 10 இடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். தொகுதி பங்கீடுக்கான விவரமும் வெளியிடப்படுகிறது. 
    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வீட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட முக்கிய தலைவர்கள் தி.மு.க. கூட்டணி தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினர். #DMKCongressAlliance #Congress #RahulGandhi #DMK
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது.

    இதற்கிடையே, கூட்டணி தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். ராகுல்காந்தி வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஆலோசனையின் நிறைவில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அவர்களுடன் யார் சேர்ந்தாலும் அவர்களும் மூழ்குவார்கள் என தெரிவித்தார்.



    இதுதொடர்பாக, திருநாவுக்கரசர் கூறுகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல், அவர்களுடன் யார் சேர்ந்தாலும் அவர்களும் மூழ்குவார்கள். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை.

    பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எந்த நலன் கருதி சேர்ந்தாலும் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணி என்பது கட்டாய கல்யாணம்.

    தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு முடியும் நிலையில் வந்துவிட்டது; காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்குவது பற்றி இன்றோ அல்லது நாளையோ அறிவிப்பு வெளியிடப்படும்.

    தேர்தல் பரப்புரைக்கு பிரியங்கா காந்தி தமிழகத்துக்கு வருவார். தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட்டு தேர்தல் பணியாற்ற ராகுல்காந்தி அறிவுறுத்தினார் என தெரிவித்துள்ளார். #DMKCongressAlliance #Congress #RahulGandhi #DMK
    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் ராகுல்காந்தி, கனிமொழி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். #ParliamentElection #DMK #Congress
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை தமிழகத்தில் தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்க உள்ளது. தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.



    இந்தநிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுக்க டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து நீண்ட நேர விவாதம் நடந்தது. அப்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, தொகுதி பங்கீடு, தொகுதிகள் குறித்த செயல் திட்டம் பற்றி கனிமொழி விளக்கி கூறினார்.

    இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. தி.மு.க. 25 இடங்களில் போட்டியிட உள்ளது. மீதம் உள்ள 15 இடங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகள் வரை பெறுவதிலேயே குறியாக இருந்தது. தற்போது காங்கிரஸ் தாங்கள் கேட்ட தொகுதிகளில் இருந்து இறங்கி வந்துள்ளது. ஆனாலும் இரட்டை இலக்க தொகுதிகளை பெறுவதில் தான் ஆர்வம் காட்டி வருகிறது. 10-க்கு மேல் ஓரிரு இடங்களையாவது பெற வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுகிறது.

    ராகுல்காந்தி-கனிமொழி சந்திப்பில் தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து மட்டும் பேசப்பட்டது. மற்ற கூட்டணி கட்சிகளின் இடங்கள் குறித்து பேசப்படவில்லை.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து கனிமொழி மீண்டும் ராகுல்காந்தியை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கான தொகுதிகள், இடங்கள் உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள் உறுதி செய்யப்பட இருக்கிறது.

    தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதியான பிறகு, டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் சென்னை வந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர். அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. #ParliamentElection #DMK #Congress

    டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சந்தித்து பேசினர். #RahulGandhi #KSAlagiri
    புதுடெல்லி:

    தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நேற்று மாலை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள்.

    அப்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது.

    இச்சந்திப்பு குறித்து புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல்காந்தியை சந்தித்து தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் பற்றி பேசினோம். தேர்தலில் எப்படி பணியாற்றுவது, கட்சி அமைப்பை எப்படி பலப்படுத்துவது என்பது பற்றி விவாதித்தோம்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தமிழக அரசு நசுக்கி விட்டது என்று ராகுல்காந்தியிடம் கூறினோம். அரசு ஊழியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவை வழங்கி இருப்பதாக ராகுல்காந்தி சொல்ல சொன்னார். எனவே, அரசு ஊழியர்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.

    நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெற வேண்டும், அதற்கான பணிகளை செய்யுங்கள் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டு இருக்கிறார். தேர்தலில் எங்களுக்கு 100 சதவீத வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

    கோஷ்டி பூசல் என்பதை நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) நினைவூட்டி வருகிறீர்கள். நான் கேட்பது என்னவென்றால், கருத்து வேறுபாடு இல்லாத அரசியல் இயக்கம் எங்காவது இருக்கிறதா?. சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதை கோஷ்டி பூசல் என்று சொல்ல முடியாது.

    திருநாவுக்கரசர் 2½ வருடம் தலைவராக பணியாற்றி இருக்கிறார். அவருக்கு வேறு வாய்ப்புகள் வழங்கப்பட இருக்கின்றன. காங்கிரசில் நிச்சயமாக கோஷ்டி பூசல் இல்லை. கருத்து வேறுபாடு இருப்பதில் எந்த தவறும் இல்லை.

    நாங்கள் நிதர்சனமான அரசியல் கட்சி. தேர்தலில் எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? எங்கெல்லாம் தொண்டர்கள் வேகமாக பணியாற்றுகிறார்களோ? அந்த தொகுதிகளைத்தான் கேட்போம்.

    கூட்டணிக்கு இன்னும் அதிகமான கட்சிகள் வருவார்களானால் அவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டியிருக்கும். நாங்களும், தி.மு.க.வும் மட்டுமே கூட்டணி என்றால் பிரித்துக்கொள்ளலாம். கூட்டணிக்கு இன்னும் ஏராளமான கட்சிகள் வர விரும்புகின்றன. 4 மாநில தேர்தல் வெற்றிக்கு பிறகு தமிழ்நாட்டில் பல கட்சிகள் எங்கள் கூட்டணியல் சேர விருப்பமாக இருக்கின்றன.

    ராகுல்காந்தி இந்த மாதம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. திருநாவுக்கரசர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

    வருகிற 7-ந்தேதி நான் பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறேன். அதற்கு முன்னதாக தலைவர்களை சந்திப்பேன். பதவி ஏற்ற பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் நிருபர்கள் “தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. சேர இருப்பதாக கூறப்படுகிறதே, அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேட்டனர்.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், “கூட்டணிக்கு யார்- யார்? வருவார்கள் என்பதையெல்லாம் இப்போதே நாங்கள் சொல்லி விட்டால் நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சென்று தடுத்து விடுவீர்கள். அதனால் இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது அவர்கள் வருவார்கள்” என்று கூறினார்.

    முன்னதாக டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில் ‘தமிழகத்தில் ஊழல் அற்ற, மக்களை மேம்படுத்துகிற ஆட்சியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்’ என்று கூறினார்.
    பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபையில் முன்னர் ராணுவ மந்திரியாகவும் தற்போது கோவா முதல்-மந்திரியாகவும் உள்ள மனோகர் பாரிக்கரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார். #RahulGandhi #ManoharParrikar
    பனாஜி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி கோவாவில் ஓய்வு எடுத்து வருகிறார். இதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், 3 நாள் பயணமாக கோவா சென்றுள்ளார்.



    இந்த நிலையில் கோவா பா.ஜனதா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரை, ராகுல் காந்தி இன்று காலை சந்தித்தார். உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் அவர் வேகமாக குணமடைவதற்காகவும், மரியாதை நிமித்தமாகவும் இந்த சந்திப்பு நடந்ததாக ராகுல்காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #RahulGandhi #ManoharParrikar


    ×