என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Street Dog"
- கோவில் உள்ளே நாய்கள் வருவதை தடுத்தும், பக்தர்களின் சுகாதாரம் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
- இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுரை:
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபி ஆச்சார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருந்ததாவது:-
திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலில் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் உலக பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இங்கு வந்து செல்லக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் கோவில் முழுவதும் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது. கோவில் சன்னதி முதல் முன்புறம் உள்ள கொடிக்கம்பம் வரை தெரு நாய்கள் வந்து படுத்து கிடக்கின்றது. வரக்கூடிய தெரு நாய்கள் கோவிலுக்குள் அசுத்தம் செய்வதால் ஆகம விதிபடி அதை சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. மேலும் பக்தர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருவதுடன், சில நாய்கள் பக்தர்களை விரட்டி கடிக்க அமைகின்றது.
மேலும் சிலர் பக்தர்கள் என்ற போர்வையில் மது அருந்தி குடித்துவிட்டு கோவிலுக்குள் உள்ளே வந்து படுத்து கிடக்கின்றனர். இதனால் கோவிலின் ஆகம விதிகள் மீறப்படுகிறது. எனவே கோவில் சன்னதியின் புனிதத்தை காக்கும் பொருட்டும், பக்தர்களின் பாதுகாப்பு சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் நாய்களை உள்ளே வரவிடாமல் தடுத்தும் கோவிலில் புனித காக்க வலியுறுத்தி மாநகராட்சி மற்றும் கோவில் உதவி ஆணையரிடம் மனு அளித்திருந்தேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே கோவில் உள்ளே நாய்கள் வருவதை தடுத்தும், பக்தர்களின் சுகாதாரம் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜம்புகேஸ்வரர் கோவிலில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுவது குறித்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வாதிட்டார்.
கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், கோவிலுக்குள் வரும் பக்தர்களின் பாதுகாப்பை கோவில் நிர்வாகம் தான் உறுதிப்படுத்த வேண்டும். இந்த மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர், கோவில் இணை ஆணையர், திருச்சி மாநகராட்சி ஆணையர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாய்கள் கட்டுப்படுத்துவது குறித்து தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் இணைத்து இந்த வழக்கை பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.
- சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
- கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி, தாசில்தார் அலுவலகம் உள்பட பொது இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியானது உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு உள்பட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
இங்கு வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் சமீபத்தில்தான் ரூ.3 கோடியில் புதிய அவசர சிகிச்சை பிரிவு கட்டப்பட்டது. இந்தநிலையில் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்குள் தெருநாய் ஒன்று புகுந்தது. தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கையில் ஏறி படுத்து ஓய்வெடுத்தது.
இதை அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி, தாசில்தார் அலுவலகம் உள்பட பொது இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவுதான், தற்போது நோயாளிகளின் படுக்கையில் தெருநாய் படுத்து ஓய்வெடுத்த சம்பவமும்.
எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.
- நாய் கடித்ததில் காலில் பலத்த காயமடைந்த மேரி குளோரியை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருநின்றவூர்:
பட்டாபிராம், அம்பேத்கர் நகர், சுசில் பிரான்சிஸ் தெருவில் வசித்து வருபவர் மேரி குளோரி(வயது82). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் நேற்று காலை, பாபு நகர் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே வந்த போது தெருவில் சுற்றிய நாய் ஒன்று திடீரென மூதாட்டி மேரி குளோரி மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் நிலை தடுமாறிய மேரி குளோரி கீழே விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டபடி திரண்டு வந்தனர். உடனே மேரி குளோரியை கடித்து குதறிய நாய் ஓடிவிட்டது. நாய் கடித்ததில் காலில் பலத்த காயமடைந்த மேரி குளோரியை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு நாய்கள் தெருக்களில் சுற்றி வருகின்றன. இதனால் விபத்துக்களும், நாய்கள் பொதுமக்களை துரத்தி கடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனை தடுக்க தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கோழிக்கோட்டில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
- மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த ஒருவார காலத்தில் தெருநாய்கள் கடித்து பலர் காயமடைந்துள்ளனர். கோழிக்கோட்டில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் தெருநாய்கள் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கேரளாவில் தெரு நாய் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 பேரை தெருநாய்கள் கடித்தன.
- தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூத்தாலி ஊராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் செல்பவர்களை அது துரத்தி சென்று கடித்தபடி இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 பேரை தெருநாய்கள் கடித்தன. இதனால் சாலைகளில் சிறுவர்-சிறுமிகள், மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்த படி இருந்ததால் கூத்தாலி பகுதியில் 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கடந்த மாதம் கண்ணூரில் 9 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியது. அதேபோல் வீட்டின் முன் விளையாடிய ஒரு குழந்தையை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- பகுதி மக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- மதிவாணன் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பாறைக்குளத்தை சேர்ந்தவர் மதிவாணன்(65). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. இதனால் வேலைபார்க்கும் ஊதியத்தின் பெரும்பகுதியை குடித்து செலவழித்து வந்துள்ளார்.
அதிகளவு மதுபோதையில் பாறைக்குளம் பகுதியில் கிடந்த மதிவாணன் இறந்துவிட்டார். அவரது உடலை தெருநாய்கள் கடித்து குதறியதில் சிதைந்து காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மதிவாணன் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் உணவு உண்ண முடியாமலும், சாப்பிடததால் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது.
- நாய் மிகவும் சிரமப்படுவதை பார்த்த பொதுமக்கள் தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனர்.
கோவை:
கோவை பீளமேடு அருகே சேரன் மாநகரில் குமுதம் நகர் உள்ளது.
இந்த நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று சுற்றி திரிந்தது.
அப்போது அந்த தெருநாய் அந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் உணவினை தேடி கொண்டிருந்தது. அங்கு கிடந்த பிளாஸ்டிக் டப்பாவை பார்த்ததும் நாய் அதனுள் தலையைவிட்டது. எதிர்பாராத விதமாக பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையைவிட்ட நாயால் அதன்பின்னர் வெளியே எடுக்க முடியவில்லை.
இதனால் நாய் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவுடனேயே அந்த பகுதியில் சுற்றி திரிந்து வந்தது. தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் உணவு உண்ண முடியாமலும், சாப்பிடததால் மிகுந்த சோர்வுடன் ஒரு இடத்தில் படுத்தபடியே கிடந்தது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்களுக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. எப்படியாவது நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை கழற்றி நாயை மீட்க வேண்டும் என நினைத்து பல முறை அதனை அகற்ற முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனது.
நாய் மிகவும் சிரமப்படுவதை பார்த்த பொதுமக்கள் தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் நேற்று குமுதம் நகர் பகுதிக்கு வந்து நாயை தேடினர். அப்போது நாய் அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சோர்வாக படுத்திருந்தது.
தொடர்ந்து அவர்கள், குடியிருப்பு வாசிகளின் உதவியோடு, தாங்கள் கொண்டு வந்த வலையை விரித்து லாவகமாக நாயை பிடித்தனர். பின்னர் நாயின் தலையில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவை கழற்றி, நாயை விடுவித்தனர்.
10 நாட்களாக உணவு உண்ணாமலும், தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவில் அவதிப்பட்டு வந்த நாய் துள்ளிகுதித்து ஓடியது. இதனை பார்த்து மக்களும், தன்னார்வ குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாயின் தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவை அகற்ற உதவிய தன்னார்வ குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அலட்சியமாக தூக்கி எறிவதன் விளைவு தான் இது என கூறிய தன்னார்வலர்கள், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகளிடம் கேட்டுக் கொண்டனர்.
- நாய்கள் கடித்து தின்றது அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் தலை என்பது தெரியவந்தது.
- சுடுகாட்டு பகுதியில் இருந்து நாய்கள் குழந்தையின் தலையை எடுத்து வந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் சண்முகாநகர் ராமசிங் வீதியில் அரசு கழிவறை கட்டிடம் உள்ளது.
இதன் அருகே உள்ள காலி இடத்தில் நேற்று ஏராளமான தெரு நாய்கள் உருண்டையான பொருள் ஒன்றை கடித்து குதறி தின்றன.
அப்போது நாய்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு ஒன்றுக்கொன்று குரைத்தன.
இதனை அப்பகுதியில் மருந்து கடை வைத்துள்ள விக்கி என்பவர் பார்த்தார். நாய்கள் கடித்து கொண்டிருந்தது குழந்தையின் தலை போல இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த அவர் அப்பகுதி பொது மக்கள் உதவியுடன் நாய்களை விரட்டி அடித்தனர்.
அப்போதுதான் நாய்கள் கடித்து தின்றது அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் தலை என்பது தெரியவந்தது. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் தலையை மீட்டனர்.
மேலும் அந்த பகுதியில் குழந்தையின் மற்ற உடல் பாகங்கள் உள்ளதா? என தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. தலை அழுகிய நிலையில் இருப்பதால் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.
அந்த பகுதியில் குழந்தை ஏதாவது கொலை செய்து வீசப்பட்டதா? அல்லது சுடுகாட்டு பகுதியில் இருந்து நாய்கள் குழந்தையின் தலையை எடுத்து வந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தெரு நாய்கள் கடந்த 6 மாதத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறின.
- கடந்த 4 நாட்களில் தெருவில் சுற்றித் திரிந்த சுமார் 100க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து உள்ளனர்.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிகரித்து வந்தது. அவை பொது மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் தொல்லை ஏற்படுத்தி வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.
மேலும் தெரு நாய்கள் கடந்த 6 மாதத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறின. இதைத்தொ டர்ந்து தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த நாய்களை பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 4 நாட்களில் தெருவில் சுற்றித் திரிந்த சுமார் 100க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து உள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கோபிநாத் கூறும்போது, பிடிக்கப்பட்ட நாய்களுக்கு கருத்தடை நடைபெறுகிறது. இதுவரை 14 வார்டுகளில் நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. கருத்தடை செய்த நாய்கள் பாதுகாப்புடன் பிடித்த இடத்தில் கொண்டு சென்று விடப்படும். மீதமுள்ள 13 வார்டுகளில் நாய்கள் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் 26 நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தப்பட்டது என்றார்.
- அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சிறுவனுக்கு வெறிநாய் கடிக்கான ஊசி போடப்பட்டது.
பெங்களூரு
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா கோடாலதின்னே கிராமத்தைச் சேர்ந்தவர் பைரோஜ். இவரது மனைவி பாமிதா. இவர்களது மகன் சமீர்(வயது 5). இந்த சிறுவன் கடந்த மாதம்(அக்டோபர்) 30-ந் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவன் சமீரை ஒரு தெருநாய் கடித்தது. இதையடுத்து பைரோஜ் தனது மகனை ஹொசூரு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுவனுக்கு வெறிநாய் கடிக்கான ஊசி போடப்பட்டது.
ஆனால் நாய் கடித்து 5 நாட்கள் கழித்து சிறுவன் சமீர் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதனால் பதறிப்போன பைரோஜ், தனது மகன் சமீரை சிகிச்சைக்காக கவுரிபிதனூர் டவுனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிறுவன் சமீர் பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் சமீர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுபற்றி பைரோஜிடம் இந்திரா காந்தி ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகையில், 'வெறிநாய் கடிக்கு சரியான முறையில் சிறுவனுக்கு ஊசி போடப்படவில்லை. அதனால் சிறுவனின் உடலில் விஷம் அதிகரித்து ரத்தத்தில் கலந்துவிட்டது. அதனால்தான் சிறுவன் சமீர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டான்' என்று தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பைரோஜ்-பாமிதா தம்பதியும், அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
அதையடுத்து அவர்கள் ஹொசூரு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று தங்களது மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்தும், அவனுக்கு சிகிச்சை அளித்த விவரங்கள் அடங்கிய மருத்துவ ஆவணங்கள் குறித்தும் கேட்டனர். ஆனால் அவை யாவும் ஆஸ்பத்திரியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த மாவட்ட சுகாதார துறை அதிகாரி ரத்னம்மா, உயிரிழந்த சிறுவன் சமீரின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் தங்கள் மகனின் சாவுக்கு காரணமான மருத்துவ ஊழியர்கள் மற்றும் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதுதொடர்பாக மனு ஒன்றையும் கொடுத்தனர்.
அதை பெற்றுக்கொண்ட அதிகாரி ரத்னம்மா சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்