search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swamithoppu"

    • அப்போது சனாதன தர்மம் உச்சத்தில் இருந்தது. திருவாங்கூர் மகராஜா, அய்யா வைகுண்டரின் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார்.
    • சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர், கடவுள் அவதாரமாக வந்து மக்கள் அனைவரும் சமம் என சொல்லி புது வழிமுறையை கொண்டுவந்தார்.

    'அனைவரும் சமம்' என கூறிய அய்யா வைகுண்டர் சனாதனவாதியா? என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கேள்வியெழுப்பியுள்ளார்.

    திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "1833-ம் ஆண்டு அய்யா வைகுண்டர் அவதரித்தார். அந்த காலகட்டத்தில் அவரது சமூகத்தில் பிறந்தவர்கள் இந்து ஆலயம் அமைந்துள்ள தெருவில் செல்ல முடியாது. கோயிலுக்குள் நுழைய முடியாது. பெண்கள் மார்பில் துணி அணியக் கூடாது. ஆண்கள் தலைப்பாகை கட்டக் கூடாது என்ற நெருக்கடியான காலத்தில் அவர் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள்.

    அப்போது சனாதன தர்மம் உச்சத்தில் இருந்தது. திருவாங்கூர் மகராஜா, அய்யா வைகுண்டரின் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார். சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர், கடவுள் அவதாரமாக வந்து மக்கள் அனைவரும் சமம் என சொல்லி புது வழிமுறையை கொண்டுவந்தார்.

    சமத்துவம், சமதர்மம், சாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டு மனித இனம் ஒன்று என்ற உயர்ந்த குறிக்கோளை கொண்டு வந்தார். அவருக்கு சனாதான வாதிகளால்தான் துன்பம் வந்தது. அதனை எதிர்த்துப் போராடி சமதர்மத்தை நிலைநாட்டியவர். அவரை சனாதனவாதி என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இதுபோல் கால்டுவெல் வட அயர்லாந்தில் பிறந்து லண்டனில் படித்து இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் 18 ஆண்டு காலம் படித்தார். 18 மொழிகளை கற்றுத் தேர்ந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது என்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தார்கள்.

    அதனை மாற்றி திராவிடத்துக்கும், சமஸ்கிருதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, திராவிட மொழி தனி மொழி, உலகில் தோன்றிய மூன்று மொழிகளில் தமிழ் மொழி முதலில் தோன்றியது என்பதை ஆய்வு செய்து, தமிழில் இருந்துதான் பிற மொழிகள் தோன்றின என்பதை நிரூபித்தார். சொல்வதை கேட்க வேண்டும், இல்லை என்றால் சொந்தமாக தெரிய வேண்டும். இரண்டும் இல்லாமல் ஆளுநர் தவறுதலாக பேசுகிறார்" என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அய்யா வைகுண்டர் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு, சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசி உள்ளார்.
    • உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

    சென்னை:

    அய்யா வைகுண்ட சாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசாமி அருளிய 'சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் எழுதிய அந்த புத்தகத்தை வெளியிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். அவர் கூறுகையில்,

    அதர்மத்தை அகற்றுவதற்காக கடவுள் நாராயணன் மனித அவதாரம் எடுத்துள்ளார். அந்த வரிசையில்தான் 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டசாமியாக நாராயணன் அவதாரம் எடுத்து வந்தார். அப்போதிருந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவத்தை கொண்டுவர முயற்சித்தார்.

    சனாதன தர்மத்தை கற்றுக்கொடுத்தார். ஐரோப்பாவை கிறிஸ்தவம் அடையும் முன்பே இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. 1600-ம் ஆண்டுகளில் கிழக்கு இந்திய கம்பெனி இங்கு வந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் ஆட்சியை ஏற்படுத்தியதுபோல இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை அறிந்தனர். அதனால் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டனர் என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் அய்யா வைகுண்டர் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு, சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    * அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசி உள்ளார்.

    * ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பது போல் கவர்னர் பேசி உள்ளது வருந்தத்தக்கது.

    * அய்யா வைகுண்டர் குறித்து கவர்னர் புரிந்து பேச வேண்டும்.

    * உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

    * அய்யா வைகுண்டர் சனாதனத்தை ஆதரித்தவர் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    * அய்யா வைகுண்டரை தனதாக்கி கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம்.

    * கவர்னர் வரலாற்றை தெரியாமல் பேசவில்லை, திரித்து பேசுகிறார் என்று கூறி உள்ளார்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர்.
    • பக்கர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நேற்று ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அய்யாவழி பக்தர்கள் அதிகாலை முதலே குவியத் தொடங்கினர். அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை, கோவை மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் வருகை தந்தனர்.

    அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கினர். இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பு, அன்ன தர்மம் நடந்தது.

    பக்கர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமிதோப்பு குரு பால ஜனாதிபதி அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

    இரவு 7 மணிக்கு பிச்சிப்பூவால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதி மற்றும் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர்.

    • குரு பால ஜனாதிபதி பக்தர்கள் இடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
    • அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அய்யாவழி பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கி சென்றனர்.

    இதையொட்டி நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பும் பின்னர் அன்னதர்மம் போன்றவை நடந்தது. குரு பால ஜனாதிபதி பக்தர்கள் இடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார். இரவு 7 மணிக்கு பிச்சிப் பூவால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதி மற்றும் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சென்னை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களை ேசர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரத வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றது
    • இன்று கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 11-வது நாளான நேற்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

    தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறத்தல், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை ஆகியவை நடந்தது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேரில் எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

    விழாவில் மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவி உடை அணிந்த அய்யாவழி பக்தர்கள், 'அய்யா சிவ சிவ அரகரா அரகரா' என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக சிறுவர்-சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தலைமைப்பதியின் முன்பு இருந்து புறப்பட்ட தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வந்த போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக வைத்து வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் இருந்து சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் நேற்று இரவு 7 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • பக்தர்கள் அய்யா சிவசிவ அரகர அரகரா என கோஷமிட்டனர்.
    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ம் திருவிழாவான நேற்று அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல் நிகழ்ச்சியும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு வாகன பவனியும், மதியம் 1 மணிக்கு உச்சிப்படிப்பும், சிறப்பு பணிவிடையும், அன்னதானமும் நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து முத்திரி கினற்றங்கரையில் 5 முறை சுற்றியபடி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகர அரகரா என கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு குரு பால ஜனாதிபதி தலைமை தாங்கினார்.

    நள்ளிரவு 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வடக்கு வாசலில் தவக்கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து 5-ந்தேதி அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டமும், இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம், இரவு, மூன்று வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    • 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • திருவிழா நாட்களில் 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருட வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்று நிகழ்ச்சியான இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், அதனைத்தொடர்ந்து கொடிபட்டத்துடன் அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற கோஷத்துடன் தலைமைப்பதியை சுற்றிலும் வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜ வேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    2-ம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்தில் பவனியும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.

    வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாகனத்திலும், அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 5-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமைபதி வளாகத்தில் காலை, மதியம் இரவு என 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • 5-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • 2-ந் தேதி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டு வைகாசி திருவிழா 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

    26-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைக்கிறார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்கின்றனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருவதும் நடக்கிறது.

    2-ம் நாள் இரவு அய்யா வைகுண்டசாமி பரங்கி நாற்காலியிலும், 3-ம் நாள் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்திலும்,. 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்திலும், 6-ம் நாள் கற்பக வாகனத்திலும் 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருடவாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஜூன் மாதம் 2-ந் தேதி 8-ம் நாள் திருவிழாவன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

    9-ம் நாள் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம் 5-ந் தேதி (திங்கட்கிழமை) 11-ம் நாள் திருவிழாவன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை, பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம், இரவு மூன்று வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    • முத்திரி பதம் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு முத்திரி பதம் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து திருவிளக்கு ஏற்றப்பட்டு 5 மணிக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றது. 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வாகன பவனி முடிந்தவுடன் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அய்யாவுக்கு பூ, பழம், தேங்காய் பன்னீர் மற்றும் பல தரப்பட்ட பழ வகைகளை சுருள்களாக வைத்து வழிபட்டனர். குருமார்கள் ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த் ஆகியோர் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கினர். குரு பால ஜனாதிபதி தமிழ் புத்தாண்டு வாழ்த்துரை வழங்கினார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் பள்ளி அலங்காரம் மற்றும் பணி விடைகளை செய்திருந்தனர்.

    தமிழ் புத்தாண்டை யொட்டி அய்யா வைகுண் டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ் புத்தாண்டையொட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட் டங்களை சேர்ந்த திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • இந்த ஊர்வலத்தை குரு பால ஜனாதிபதி தொடங்கி வைத்தார்.
    • அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    சாமிதோப்பு தலைமைப் பதியில் அய்யா வைகுண்ட சாமி வடக்கு வாசலில் 6 வருடங்கள் பக்தர்களுக்காக தவமிருந்தார். இந்த தவம் நிறைவு பெற்றபிறகு அந்த தவத்தின் பலனை பற்றி அறிவதற்காக முட்டப்பதி பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால் கலைமுனி, ஞானமுனி ஆகிய இருவரை அனுப்பி சாமிதோப்பில் இருந்து அய்யா வைகுண்டசாமியை முட்டப்பதிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

    முட்டப்பதியிலிருந்து சாமிதோப்பு வந்த கலைமுனி, ஞானமுனி ஆகிய இருவருடனும் மற்றும் தனது பக்தர்களுடன் அய்யா வைகுண்டசுவாமி பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று ஊர்வலமாக முட்டப்பதி நோக்கி சென்றார். அங்கு பக்தர்கள் கடற்கரையில் காத்திருக்க வைகுண்டசாமி திருப்பாற் கடலுக்குள் சென்று திருமாலுடன் ஆலோசனை பெற்று பின்னர் அன்று மாலையே சாமி தோப்புக்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

    அதன்படி ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமைப் பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் செல்லும் முத்துக் குடை ஊர்வலம் நடை பெறுவது வழக்கம். அதே போல் நேற்று காலை 6 மணிக்கு தலைமை பதியிலிருந்து முத்து குடை ஊர்வலம் தொடங்கியது.

    முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், வாகன பவனியும், காலை 6 மணிக்கு தலைமைப்பதி முன்பிருந்து மேளதாளங்கள் முன்செல்ல முத்துக் குடை ஊர்வலம் புறப்பட்டது.

    இந்த ஊர்வலத்தை குரு பால ஜனாதிபதி தொடங்கி வைத்தார். குரு நேம்ரிஷ் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினார். குருமார்கள் பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா.யுகேந்த், டாக்டர் வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலம் சாமிதோப்பில் இருந்து புறப்பட்டு கரும்பாட்டூர், வெள்ளையந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், வழியாக முட்டப்பதி சென்றடைந்தது. ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தர்மம் நடைபெற்றது.

    நண்பகல் ஊர்வலம் முட்டப்பதியை சென்றடைந்து முட்டப்பதி பால் கடலில் பதமிட்டு அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு பணிவிடையும், உச்சி படிப்பும் தொடர்ந்து அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

    மீண்டும் மாலை 4 மணிக்கு முட்டப்பதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு கொட்டாரம், அச்சங்குளம், பொற்றையடி, கரும்பாட்டூர் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊர்வலத்தை தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.
    • நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தர்மம் நடைபெறுகிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்கதர்கள் கலந்து கொள்ளும் முத்துக்குடை ஊர்வலம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முத்துக்குடை ஊர்வலம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    ஊர்வலத்தை முன்னிட்டு சாமிதோப்பு தலைமைப்பதியில் அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, காலை 6 மணிக்கு தலைமைப்பதி முன்பு இருந்து முத்துக்குடைகள், மேளதாளங்கள் முன்செல்ல முத்துக்குடை ஊர்வலம் புறப்படுகிறது. ஊர்வலத்தை தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

    டாக்டர் வைகுந்த் ஊர்வலத்திற்கு தலைமை தாங்குகிறார். பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா.யுகேந்த், பையன் நேம்ரிஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஊர்வலமானது சாமிதோப்பில் இருந்து புறப்பட்டு கரும்பாட்டூர், வெள்ளையந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், வழியாக முட்டப்பதி சென்றடைகிறது.

    ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தர்மம் நடைபெறுகிறது. நண்பகல் ஊர்வலம் முட்டப்பதியை சென்றடைந்ததும் முட்டப்பதி பால்கடலில் பதமிட்டு அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை, உச்சி படிப்பு, அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. பின்னர், ஊர்வலம் மீண்டும் மாலை 4 மணிக்கு முட்டப்பதியிலிருந்து புறப்பட்டு கொட்டாரம், அச்சங்குளம், பொற்றையடி, கரும்பாட்டூர் வழியாக சாமிதோப்பு தலைமைபதியை வந்தடைகிறது. இந்த ஊர்வலத்தில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • 17 நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.
    • 17-வது நாள் பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திரு ஏடு வாசிப்பு விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதை குரு பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விஜயநகரி ராஜபழம், தங்கேஸ்வரி ஆகியோர் திருஏட்டினை வாசிக்கின்றனர். இதையொட்டி மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றன. தொடர்ந்து 17 நாட்கள் மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.

    விழாவில் பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி, மும்பை அய்யாவு, வென்னிமல், மார்த்தாண்டம் செல்லையா நாடார், மகாராஜன் ஆசாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 15-வது நாள் திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், 17-வது நாள் பட்டாபிஷேக விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×