என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மறியல்"
- டாக்டர் உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்,
- மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் ரமேஷ் (வயது 35). தொழிலாளி.
இவருக்கு வசந்தி என்ற மனைவியும், மணிகண்டன் (17), ரகு (15) என்ற 2 மகன்களும் உள்ளனர். ரமேஷ் வழக்கம் போல் நேற்று காலை விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ரமேஷ் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் மாலை 6 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரமேசுக்கு ஆஸ்பத்திரியில் நர்சுகள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். டாக்டர் உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம், எனவே, ரமேசின் மரணத்துக்கு அங்கிருந்த டாக்டர் சிகிச்சை அளிக்காததே காரணம் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு ஆஸ்பத்திரியை பா.ம.க. மற்றும் ரமேசின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது டாக்டர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ரமேஷின் உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் போலீசாரிடம் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று விருத்தாசலம் நகர பா.ம.க. சார்பில் விருத்தாசலம்-சேலம் சாலையில் உள்ள தென்கோட்டை வீதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இ.கே.சுரேஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரமேசுக்கு உரிய சிகிச்சை அளிக்காத டாக்டர்களை கண்டித்தும், டாக்டர் காலி பணியிடங்களை நிரப்பக்கோரியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக விருத்தாசலம்-சேலம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
- 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரமானது.
பின்னர் சொந்த ஊருக்கு பக்தர்கள் செல்வதற்காக ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் குவிந்தனர்.
விழுப்புரம், சென்னை செல்லும் ரெயிலில் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றனர். ரெயிலில் இடம் கிடைக்காததால் பக்தர்கள், பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதேபோல தற்காலிக பஸ் நிலையத்திலும் பக்தர்கள் குவிந்தனர். போதிய பஸ் வசதி இல்லாததாலும், பஸ்சில் இடம் கிடைக்காமல் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
மதுரை, திருச்சி பகுதிகளுக்கு அதிகாலை 4 மணி முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். திருக்கோவிலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போதிய பஸ் வசதி இல்லாததால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், திருக்கோவிலூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பஸ் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகவும் அவதி அடைந்தனர். மேலும் 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்று விட்டு சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருந்தோம். இதனால் நாங்கள் களைப்பாக உள்ளோம்.
போதிய பஸ் இல்லாமல் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. வரும் நாட்களில் இது போன்று பக்தர்களை காத்திருக்க வைக்காமல் பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
- போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்.
- போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிகுமார். இவர் சரக்கு வாகனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் காளிகுமார் நேற்று அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காளிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
காளிகுமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
அப்போது டிரைவர் காளிகுமாரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முயன்றனர்.
அப்போது கடும் கோபத்தில் இருந்த போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டக்குழுவில் இருந்த ஒரு சிலர் டி.எஸ்.பி. காயத்ரியின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினர். இதில் இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.
அதன்பிறகு போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
- போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி 13-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அதியமான் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சட்ட விரோதமாக மது விற்பனையும், லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இத்தொடர்பாக அதிகாரிகளிடமும் மனுவும் அளித்து இருந்தனர். எனினும் அந்தப் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனையும், மது விற்பனையும் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை அதியமான் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென ஈரோடு-பவானி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை நேரம் என்பதால் பள்ளிகளுக்கு, அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே 24 மணி நேரமும் மது விற்பனையும், சட்டவிரோத மாக லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது. மது குடித்து வரும் நபர்களால் எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
மேலும் கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. எனவே மது விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைப்போல் எங்கள் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றனர்.
இதனை அடுத்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு இருந்தது.
- குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
- பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சபரிநகரில் கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் திடீரென அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு இன்று காலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆறுமுத்தாம்பாளையம் - திருப்பூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார், பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
- மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கரம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி மாணவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ளது மழையூர் கிராமம். இங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பள்ளி முடிந்து வீடு திரும்பினார். அப்போது அங்கு வந்த 6 பேர் அந்த மாணவனை கடத்தி சென்று சரமாரியாக தாக்கினர்.
இதில் அந்த மாணவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாணவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இன்று காலை திரண்டனர்.
மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கரம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது.
தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே மாணவரை தாக்கியவர்கள் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 6 கல்லூரி மாணவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
- கடந்த சில நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் சரவர வினியோகிக்கபப்டவில்லை என தெரிகிறது.
- ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் திடீரென்று ஆலங்குடி சாலையில் திரண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் காந்தி நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் சரவர வினியோகிக்கபப்டவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இன்று காலையும் குடிநீர் சரிவர வரவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் இன்று காலை திடீரென்று ஆலங்குடி சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்டநேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
- குடிபோதையில் பஸ்சை இயக்க அனுமதித்த பஸ்சின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தருமபுரி:
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்ள தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டியில் இருந்து இன்று காலை தனியார் பஸ்சில் அந்த கட்சியின் நிர்வாகிகள் 60-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு சென்றனர்.
அப்போது பஸ் பொம்மிடி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பஸ்சில் பயணித்த கட்சியின் மற்ற நிர்வாகிகள் திடீரென்று சம்பவ இடத்திலேயே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் டி.எஸ்.பி மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் தான் விபத்து அரங்கேறி உள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் விபத்து நடக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் உயிர் தப்பினோம்.
குடிபோதையில் பஸ்சை இயக்க அனுமதித்த பஸ்சின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்சியினர் அனைவரும் சத்தம் போட்டனர்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
- போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வக்கோட்டையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அருகில் உள்ள தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அதே போல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி கேட்டும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் செல்ல வலியுறுத்தியும் இன்று காலை சாலை மறியலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை அறிந்து கந்தர்வகோட்டை காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
- தேசியக்கொடியை முண்டாசாக அணிந்து வந்திருந்ததால் பரபரப்பு
- உறவினர்கள் சொத்துக்களை அபகரித்ததாக மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை.
ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் தவுலத். இவர் இன்று காலை தனது மனைவி, மாமியார், மகள், மற்றும் குழந்தையுடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் தவுலத் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கோஷங்களும் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவ ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று வண்டியில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போராட்ட த்தில் ஈடுபட்ட பெண் கூறியதாவது:-
எங்களுக்கு மேட்டு ப்பாளையம் பகுதியில் 8½ ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்த இடத்தை எனது உறவினர்கள், எனக்கு தெரியாமலேயே தி.மு.க பிரமுகர் ஒருவருக்கு விற்று விட்டனர்.
அதில் எனக்கான பங்கையும் அவர்கள் தரவில்லை. இதுதொ டர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இன்று குடும்பத்துடன் சாலைமறியலில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
- இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.
- 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகாமி. இவரிடம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், அவரது மனைவி கவிதா ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு நிலம் பத்திரப்பதிவு செய்வதற்காக 6 பவுன் நகையை கடனாக வாங்கி யதாக தெரிகிறது. பின்னர் அந்த நகையை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. இதுதொர்பாக கடம்பத்தூர் போலீஸ்நிலையம் மற்றும் போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் சிவகாமி புகார் செய்தார். இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் சிவகாமி தனது மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று புகார் கொடுக்க வந்தார். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த சிவகாமி மற்றும் அவரது உறவினர்கள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.
மேலும் சிவகாமி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் கைதான இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கிடையே கைதான 7 பேரையும் டிசம்பர்4-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டடார். இதையடுத்து புதுப்பெண் உள்பட 5 பெண்கள் புழல் மகளிர் சிறையிலும் மற்ற 2 பேரும் திருவள்ளூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
- பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.
- பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்
திருவள்ளூர்:
வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது48). இவரது மகள்கள் தர்ஷினி (வயது18), தாரணி (12).
மனோகரனின் மனைவி உடல்நிலைபாதிக்கப்பட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்காக இன்று காலை மனோகரன் தனது 2 மகள்களுடன் மின்சார ரெயிலில் செல்ல வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
காலை 11.30 மணி அளவில் அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மனோகரன், அவரது மகள்கள் தர்ஷினி, தாரணி ஆகிய 3 பேரும் கை, கால் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை கண்டு ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களில் தர்ஷினி கல்லூரி மாணவி ஆவார். அவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது தங்கை தாரணி 12-ம் வகுப்பு படித்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தாயை சந்திப்பதற்காக இருவரும் தந்தையுடன் மின்சார ரெயிலில் செல்ல தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி பலியாகிவிட்டனர்.
இதற்கிடையே ரெயில் மோதி ஏற்படும் உயிர் பலிக்கு வேப்பம்பட்டு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதம் என்று கூறி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் சுரேஷ்குமார், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே மேம்பால பணி கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு ரெயில்வே சுரங்கப் பாதை இல்லாததால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இதனால் இதுபோன்ற கோர விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலிகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்