என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதல்"

    • பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் டொம்பு சேரி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது33). எலக்ட்ரீசியன் வேைல பார்த்து வந்தார். இவரது அண்ணன் மருதமுத்து (36). இவரது மனைவி வீரலட்சுமி (32). இவரும் அதே பகுதியில் வசித்த பிரவீன் (24) என்பவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இவர்கள் கள்ளத்தொடர்பு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து ஊர் பெரியவர்கள் மூலம் பேசி அவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர்.

    இனிமேல் இதுபோன்று செயல்பட்டால் போலீசில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். ஆனால் அதனையும் மீறி வீரலட்சுமி, பிரவீன் கள்ளத்தொடர்பு தொடர்ந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 26ந் தேதி வீரலட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்த பிரவீனை கணவர் மருதமுத்து கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் மருதமுத்துவை தினேஷ்குமார் (27) என்பவர் பிடித்துக்கொள்ள பிரவீன் கத்தியால் குத்த முயன்றார். ஆனால் தகராறை தடுக்க சென்ற ராஜா மீது கத்திக்குத்து விழுந்தது. பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பிரவீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் உடந்தையாக இருந்த தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.

    • விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
    • அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    அரியானா மாநிலத்தில் வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரை உயிருடன் புதைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் தன் மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததை அடுத்து வீட்டு உரிமையாளர் இப்படி செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

    அரியானா மாநிலம் ரோதக்கில் உள்ள பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம் அருகே வசித்து வருபவர் ஹர்தீப். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். இந்த வீட்டில் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்தீப் என்பவர் வாடகைக்கு குடியேறினார். அவர் அந்த பகுதியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    வாடகைக்கு குடியேறிய அவர் ஹர்தீப் மனைவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் மனைவியுடன் யோகா ஆசிரியர் ஜக்தீப் தனிமையில் சந்தித்ததை ஹர்தீப் கண்டுபிடித்தார். தன்னுடைய வீட்டில் வாடகைக்கு வந்தவர் மனைவியுடன் கள்ளக்காதலை ஏற்படுத்திக் கொண்டு தகாத முறையில் நடந்து கொண்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    இதையடுத்து, யோகா ஆசிரியர் ஜக்தீப்பை தீர்த்தக்கட்ட ஹர்தீப் முடிவு செய்தார். இந்த கொலையில் தான் சிக்கிவிடக்கூடாது என்பதிலும் மிக கவனமாக இருக்க நினைத்துள்ளார். இதற்காக தனது நண்பருடன் தீவிர ஆலோசனை நடத்தி சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் திட்டம் தீட்டினார்.

    அதன்படி ஹர்தீப் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து கொண்டு யோகா ஆசிரியர் ஜக்தீப்பை உயிரோடு குழி தோண்டி புதைக்க முடிவு செய்தார். அதற்காக விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப் போவதாக கூறி பணியாளர்களை அழைத்து வந்து 7 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி தயார் நிலையில் வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தேதி ஜக்தீப் வேலைக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஹர்தீப் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து ஜக்தீப்பை கடத்திச் சென்று, ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டிருந்த 7 அடி பள்ளத்தில் தூக்கி வீசினர். தொடர்ந்து அவரை உயிரோடு புதைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    பின்னர் ஹர்தீப் எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார். இந்த நிலையில் யோகா ஆசிரியர் ஜக்தீப்பின் உறவினர்கள் அவரை காணவில்லை என கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி சிவாஜி காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதில் எந்த துப்பும் துலங்கவில்லை. இதனை தொடர்ந்து அவருடைய செல்போன் அழைப்பு பதிவுகளை வைத்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.

    சந்தேகத்தின் பேரில் ஹர்தீப்பை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் யோகா ஆசிரியரை கை கால்களை கட்டி உயிரோடு புதைத்து கொலை செய்ததாக தெரிவித்தார்.

    இந்த அதிர்ச்சி தகவலை அறிந்த போலீசார் நேற்று முன்தினம் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஹர்தீப் மற்றும் அவருடைய நண்பர் தரம் பால் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவித்தனர்.

    • கொலை செய்யப்பட்ட லோகநாதனும், சத்தியவாணியும் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
    • எப்படியாவது லோகநாதனை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் சதி திட்டம் தீட்டினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கபனாவரா-நெலமங்கலா ரெயில் நிலையங்களுக்கு இடையே கடந்த மாதம் 19-ந்தேதி வயிற்றில் இரண்டாக வெட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த வாலிபரின் தலை, கழுத்து மற்றும் கைகளில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த பகுதியில் இருந்த ரெயில்வே பாலத்தில் ரத்த கறைகளும் காணப்பட்டது. இதையடுத்து போலீசார் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் கொலை செய்யப்பட்ட வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்கத்து மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள போலீஸ் நிலையங்களில் யாராவது மாயமானதாக புகார் வந்துள்ளதா என்று விசாரணை நடத்தினர்.

    அப்போது சூளகிரியைச் சேர்ந்த லோகநாதன் (24) என்ற வாலிபர் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் லோகநாதன் போட்டோவை பெற்று தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபரின் முகத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது இரண்டும் ஒன்றாக இருந்தது. எனவே கொலை செய்யப்பட்டது சூளகிரியை சேர்ந்த லோகநாதன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து லோகநாதன் உடலை அடையாளம் காட்டினர். அதன் அடிப்படையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே தனிப்படை போலீசார் கொலை நடந்த இடம் மற்றும் ஓசூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை செய்யப்பட்ட லோகநாதன் ஒரு பெண்ணுடன் பஸ்சில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண் யார் என்று தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது அவர் ஓசூரைச் சேர்ந்த சத்தியவாணி (27) என்பதும், இவர் பூ வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசாரிடம் சத்தியவாணி சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அந்த விவரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட லோகநாதனும், சத்தியவாணியும் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து சத்தியவாணி லோகநாதனுக்கு தெரியாமல் ஓசூரைச் சேர்ந்த வரதராஜ் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து லோகநாதனுடனும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் சத்தியவாணியில் நடத்தையில் லோகநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அவர் சத்தியவாணியை கண்காணித்தபோது அவர் வரதராஜ் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன் சத்தியவாணியை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். அவருடன் செல்ல விரும்பாத சத்தியவாணி வரதராஜிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து எப்படியாவது லோகநாதனை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் சதி திட்டம் தீட்டினர்.

    அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி சத்தியவாணி-வரதராஜ் ஆகியோர் சூளகிரிக்கு வந்து லோகநாதனை சந்தித்தனர். பின்னர் அவரை ஏமாற்றி பெங்களூருவில் உள்ள ஆளுர் என்ற பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் லோகநாதனை அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சத்தியவாணி, அவரது கணவர் வரதராஜ், ஓசூர் தசனாபூரை சேர்ந்த சீனிவாஸ் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    • புல்லட் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.
    • மனைவிக்கும் சின்னராசுவுக்கும் இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு சின்னராசுவின் மனைவி கலைச்செல்வி நோய் வாய்ப்பட்டு இறந்தார்.

    இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த புல்லட் ராஜா என்கிற நளராஜா (41) என்பவரின் மனைவி கிருஷ்ணவேனியுடன் சின்னராசுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே நளராஜா கடந்த ஜனவரி மாதம் காந்தி நகரைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சதீஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இவர் ஜெயிலில் இருந்ததால் சின்னராசுவும், கிருஷ்ணவேணியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். கண்டிக்கவோ, கேள்வி கேட்கவோ யாரும் இல்லை என்ற தைரியத்தில் கள்ளக்காதல் ஜோடி கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் புல்லட் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் மனைவிக்கும் சின்னராசுவுக்கும் இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்தார்.

    இருந்தபோதிலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சின்னராசு, கிருஷ்ணவேணியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இதை அடுத்து புல்லட் ராஜாவும் அவர்களை பின்தொடர்ந்து சமயபுரம் சென்றார். பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவில் முடி காணிக்கை மண்டபம் அருகே அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

    இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சின்னராசுவை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றார். இதில் பலத்த காயம் அடைந்த சின்னராசு துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய புல்லட் ராஜாவை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகாமையில் வைத்து அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் புல்லட் ராஜா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், நான் ஜெயிலில் இருக்கும்போதே என் மனைவியுடன் சின்னராசு கள்ளத்தொடர்பு வைத்திருந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் ஜாமினில் வந்த பின்னர் இருவரையும் கண்டித்து பார்த்தேன். ஆனால் என்னை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

    இது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் கோவில் அருகாமையில் வைத்தும் அவர்களை கண்டித்தேன். அப்போதும் சின்னராசு என் பேச்சைக் கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை குத்தி கொலை செய்தேன் எனக் கூறியுள்ளார்.

    கைது செய்யப்பட்டுள்ள புல்லட் ராஜாவை இன்று மாலைக்குள் திருச்சி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கொலை வழக்கில் கைதாகி உள்ள புல்லட் ராஜா மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • கடந்த சில ஆண்டுகளாக மனைவி தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக பாறசாலை போலீசில் சுதீர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாணவருக்கு காதலி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீள்வதற்குள் கள்ளக்காதலுக்காக கணவருக்கு மனைவியே விஷம் கொடுத்தள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள முறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுதீர் (வயது 49). கேரள அரசு போக்குவரத்துக் கழக டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மனைவி தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக பாறசாலை போலீசில் சுதீர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    இதற்கு ஆதாரமாக வீட்டின் பீரோவில் இருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் சிரிஞ்சை அவர் காண்பித்துள்ளார். மனைவி பிரியாவுக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது என்றும் அவர் தான் விஷத்தை கொரியர் மூலம் அனுப்பி இருக்கிறார் என்றும் சுதீர் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு வீட்டில் சாப்பிட்டால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் மனைவி உணவில் விஷம் கலந்து கொடுத்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய பாறசாலை போலீசார், பிரியா, முருகன் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழ, கணவருக்கு மனைவி விஷம் கொடுத்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார்.

    கோவை:

    கோவை மலுமச்சம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 29 வயது தேங்காய் வியாபாரி. இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 6 மாதங்களுக்கு முன் தேங்காய் வியாபாரிக்கு அவரது மனைவியின் தங்கையான திருமணமாகாத இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக தேங்காய் வியாபாரியின் மனைவிக்கு தெரியவந்தது.

    அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார். எனவே அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷத்தை கொடுத்து தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி ஆன்லைன் மூலமாக தனது மனைவியை கொல்வதற்கு விஷத்தை வாங்கி உள்ளார். பின்னர் அதனை வீட்டில் மறைத்து வைத்தார்.

    இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து அவரது மனைவி மாயமான தனது கணவர் மற்றும் தங்கையை கண்டுபிடித்து தரும்படி செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியின் தங்கையுடன் ஓட்டம் பிடித்த தேங்காய் வியாபாரியை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் 2 பேரும் மதுரை ஜெய்ஹிந்புரத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போது போலீசார் மனைவியின் தங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த தேங்காய் வியாபாரியை பிடித்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
    • நள்ளிரவு ஆகியும் பாண்டியம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    மதுரை:

    மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலையார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அவருக்கும், அதே மில்லில் வேலை பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. வீட்டினுள் பார்த்தபோது பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த செல்வத்தை காணவில்லை.

    அவர் தான் பாண்டியம்மாளை கொன்றுவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் பாண்டியம்மாளை கொன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்டபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொன்று விட்டதாகவும் செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வடிவேல் முருகனின் ரத்த மாதிரியை ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான மருந்து அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர்.

    இரணியல்:

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆழ்வார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (வயது 32), கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி சுஜா. இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன், திடீரென இரவில் வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தற்போது மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ள வடிவேல் முருகன், தனது மனைவி மீது புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

    தனது மனைவிக்கு திருமணத்துக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் காதல் இருந்ததாகவும் தற்போது அவருடன் சேர்ந்து தனக்கு மெல்லக் கொல்லும் விஷத்தை மனைவி கொடுத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வடிவேல் முருகன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

    அந்த வீடியோவில் வடிவேல் முருகன் தனது மனைவியின் செல்போனை தற்செயலாக பார்த்த போது தான் கொலை சதி பற்றி தெரிய வந்ததாகவும் தனது மனைவி கள்ளக்காதலனுடன் உரையாடிய வாட்ஸ்அப் ஆதாரம் தனக்கு கிடைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

    இந்த உண்மை தனக்கு சரியான நேரத்தில் தெரியாமல் இருந்தால், தான் கொல்லப்பட்டு இருப்பேன் என்றும், அல்லது விபத்தில் சிக்கி இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

    தனது கணவனுக்கு அளித்த மருந்தில் ஏதோ கலந்து கொடுத்ததாக முன்னாள் காதலனுடன் சுஜா பேசிக்கொண்ட தகவல் வாட்ஸ்-அப்பில் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து வடிவேல்முருகன் போலீசிலும் புகார் அளித்தார். தனது மனைவியையும் அவரது காதலனையும் கைது செய்து தனக்கு அளித்த மருந்தை அறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் அவர் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது... வடிவேல் முருகனின் ரத்த மாதிரியை ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான மருந்து அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் காதலன், மாணவர் மெல்லக் கொல்லும் விஷத்தால் கொல்லப்பட்டதாக ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில் தற்போது மனைவியே கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.

    மதுரை :

    மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது35). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும்(24) திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

    இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி மகளை பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜி.ஆர்.நகர், பொன்விழா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்தநிலையில் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவி ஒருவரிடம் பல மணி நேரம் பேசியது தெரியவந்தது. வைஷ்ணவிக்கும், சிவகங்கையை சேர்ந்த அவரது தாய்மாமா மகன் என்ஜினீயரான வெங்கடேசனுக்கும்(25) கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. செந்தில்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததால் அவர்களால் சரிவர சந்திக்க முடியவில்லை. எனவே அவரது ஒரு கை, காலை வெட்டினால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று வைஷ்ணவி கொடூரமாக எண்ணினார். இதுகுறித்து வெங்கடேசனிடம் தெரிவித்தார்.

    எனவே அவர் தனது நண்பரான, கூலிப்படையை சேர்ந்த சாந்தகுமாரிடம் கூறினார். அதற்கு அவர் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. வைஷ்ணவி தனது நகைகளை கள்ளக்காதலன் வெங்கடேசன் மூலம் சிவகங்கையில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர்கள் தெரிவித்தப்படி சாந்தகுமாரும், மற்றொருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. எனவே நேற்று இரவு வைஷ்ணவி, அவரது கள்ளக்காதலன் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.

    • ஜேக்கப் ஆனந்தராஜ் சொந்தமாக வீடுகள் கட்டி பின்னர் அதனை விற்கும் தொழில் செய்து வந்தார். டவுனிலும் வீடு கட்டி வந்தார்.
    • ஜான்சி அளித்த புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேக்கப் ஆனந்தராஜை தேடி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை பழைய பேட்டையை அடுத்த அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்தராஜ்(வயது 63). கட்டிட காண்டிராக்டர்.

    கடந்த 22-ந்தேதி காலை ஜேக்கப் ஆனந்தராஜ் டவுன் பகுதியில் நடைபெற்று வந்த கட்டிட பணிகளை பார்வையிடுவதற்காக காரில் புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரது செல்போன் 'சுவிட்ச்-ஆப்' ஆகியிருந்தது.

    இதுகுறித்து அவரது மகள் ஜான்சி அளித்த புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேக்கப் ஆனந்தராஜை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் குளக்கரையில் அவர் கொலை செய்யப்பட்டு, உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி நடத்திய விசாரணையில், பேட்டை நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த தேவி(32) என்பவரும், அவரது கள்ளக்காதலனான சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் ஜேக்கப்பும் சேர்ந்து ஜேக்கப் ஆனந்தராஜை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    தேவியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலைக்கான காரணம் குறித்து தேவி போலீசாரிடம் கூறியதாவது:-

    ஜேக்கப் ஆனந்தராஜ் சொந்தமாக வீடுகள் கட்டி பின்னர் அதனை விற்கும் தொழில் செய்து வந்தார். டவுனிலும் வீடு கட்டி வந்தார். அப்போது அவருக்கு எனது தாயுடன் பழக்கம் ஏற்பட்டது. எனது தாய் மூலம் கிடைத்த அறிமுகத்தால் ஜேக்கப் ஆனந்தராஜ் என்னிடம் நெருங்கி பழகினார்.

    நான் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஜேக்கப் ஆனந்தராஜின் அறிமுகம் கிடைத்ததால் 2 பேரும் நெருக்கமாக பழகி வந்தோம். நாங்கள் 2 பேரும் அடிக்கடி காரில் வெளியூர்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தோம்.

    எனக்கு ஏற்கனவே சங்கரன்கோவில் அருகே சம்சிகாபுரத்தை சேர்ந்த பிரின்ஸ் ஜேக்கப்புடன் தொடர்பு இருந்தது. அவரும் அடிக்கடி எனது வீட்டுக்கு வந்து செல்வார். இந்த விஷயம் ஜேக்கப் ஆனந்தராஜிக்கு தெரியாது.

    கடந்த 22-ந்தேதி பிரின்ஸ் ஜேக்கப்பும், நானும் எனது வீட்டில் உல்லாசமாக இருந்தோம். அப்போது அங்கு ஜேக்கப் ஆனந்தராஜ் திடீரென வந்தார். அவர் என்னை உல்லாசத்திற்கு அழைத்ததால், பிரின்ஸ் ஜேக்கப்புக்கு கோபம் வந்தது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே பிரின்ஸ் ஜேக்கப் ஆத்திரத்தில் ஜேக்கப் ஆனந்தராஜை மிதித்து கீழே தள்ளினார். நான் அவரது கைகளை பிடித்து கொண்டேன். பின்னர் பிரின்ஸ் ஜேக்கப் அங்கு கிடந்த நைலான் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி கட்டிலுக்கு அடியில் வைத்தோம். மறுநாள் அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் பேட்டை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள குளக்கரையில் அவரது உடலை மொபட்டில் எடுத்து சென்று வீசினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து தேவி கூறியவற்றை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய சகோதரி சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் சங்கீதாவுக்கும் 1.1/2 வருடங்களாக நட்பாக பழகி வந்தனர். . இது பற்றி கணவனுக்கு தெரிய வந்தது. இதனால் சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோடு கிராமத்தில் தங்கி வசித்து வந்தனர்.

    கடந்த 24- ந் தேதி அன்று சங்கீதாவை பார்க்க மணி சென்றுள்ளார். இது பற்றி கணவனுக்கு தெரிந்ததால் சங்கீதா நேற்று எலிபேஸ்ட் சாப்பிட்டார். பின்னர் அவரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் கோபமடைந்த சங்கரும் கல்லாநத்தம் சென்று கேட்டார். அப்போது மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர். இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தீர்த்துக்கட்டினேன்.
    • சிவக்குமார் தொடர்ந்து மனைவி புஷ்பாவிற்கு தொல்லை கொடுத்து வந்தார்.

    ஏற்காடு.

    சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் கும்மிப்பாடி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). கூலிதொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (51) என்பவருடைய மகன் தங்கராஜ் (35). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பா (வயது 32).

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமாருக்கும், தங்கராஜிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் மற்றும் அவரது தந்தை மாணிக்கம் ஆகியோர் சேர்ந்து சிவக்குமாரை கொடுவாளால் வெட்டினர். மேலும் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.படுகாயம் அடைந்த சிவக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தங்கராஜ், அவரது தந்தை மாணிக்கம் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர்.

    இதில் சிவக்குமாரை எதற்காக கொலை செய்தோம் என்பது குறித்து தங்கராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    எனது மனைவி புஷ்பாவுக்கும், சிவக்குமாருக்கும் வேலைக்கு சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி புஷ்பாவிடம் என்னை பற்றியும், எனது குடும்பத்தை பற்றியும் சிவக்குமார் தவறாக பேசி, பொய்களை சொல்லி புஷ்பா மனதில் தவறான எண்ணத்தை விதைத்தார். இதனால் வீட்டில் தினமும் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சிவக்குமார் நல்லவர்போல் நடிக்கிறார். அவரை நம்பாதே, அவர் சொல்வதை கேட்காதே என நாங்கள் பலமுறை அறிவுரை கூறினோம்.

    ஆனால், சிவக்குமார் தொடர்ந்து எனது மனைவி புஷ்பாவிற்கு தொல்லை கொடுத்து வந்தார். எனது மனைவி நல்லவள். தொடர்ந்து ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டு எனது மனைவியின் மனதை மாற்றினார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

    இதை அறிந்த நான், எனது மனைவியையும், சிவக்குமாரையும் கண்டித்தேன். மேலும் சிவக்குமாரிடம் எனது மனைவியுடன் உள்ள தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு எச்சரித்தேன். ஆனால் சிவக்குமார் கேட்கவில்லை.

    இதனால் நானும், எனது தந்தை மாணிக்கமும் சேர்ந்து, சிவக்குமாரை வெட்டிக் கொன்றோம். போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க தலைமறைவாக இருந்தோம். ஆனால் எங்களை போலீசார் பிடித்துவிட்டனர்.

    இவ்வாறு தங்கராஜ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

    கைதான தங்கராஜ், மாணிக்கம் ஆகிய இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×