search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரம்ப்"

    • ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை டெக்சாசின் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் நடத்தப்பட்டது.
    • ராக்கெட் சோதனையை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் நேரில் பார்வையிட்டார்.

    வாஷிங்டன்:

    உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.

    உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டின் 6-வது சோதனை தெற்கு டெக்சாசில் உள்ள ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் நடத்தப்பட்டது. ஸ்டார்ஷிப் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இரண்டு நிலைகளையும் வெற்றிகரமாகப் பிரித்தது.

    சூப்பர் ஹெவி பூஸ்டர் என அழைக்கப்படும் முதல் நிலை, ஏவுதளத்திற்குத் திரும்புவதற்குப் பதிலாக மெக்சிகோ வளைகுடாவில் தரையிறங்கியது.

    ஸ்டார்ஷிப் 2-ம் நிலை அதன் பயணத்தைத் தொடர்ந்தது. ஒரு மணி நேரத்திற்குள் உலகத்தை பாதியாகச் சுற்றி ஒரு துணைப் பாதையை அடைந்தது. ஏவப்பட்ட சுமார் 65 நிமிடங்களுக்குப் பிறகு விண்கலம் இந்தியப் பெருங்கடலில் தரையிறக்கப்பட்டது. இதில் ஸ்டார்ஷிப் விண்கலத்தில் வெப்ப கவச் சோதனைகளை நடத்தியது. வளிமண்டல மறு நுழைவின் கடுமையான சூழ்நிலைகளில் வாகனத்தின் செயல்திறன் பற்றிய அத்தியாவசிய தாவுகளை சேகரித்தது.

    இந்நிலையில், இந்த ராக்கெட் சோதனையை அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் எலான் மஸ்க்கும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.
    • ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.

    அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக எக்ஸ் வலைதளம் வாயிலாக அறிவித்துள்ளார். இந்த முதலீடு அமெரிக்காவின் எனர்ஜி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கவுதம் அதானி வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகள். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டாண்மை வலுவடைந்து வரும் வேளையில், அதானி குழுமம் தனது உலகளாவிய வர்த்தக நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 15,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

    • வெளியுறவுத்துறை மந்திரியாக மைக் பாம்பியோ, டிரம்புக்கு நெருக்கமாக இருந்தார்.
    • இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, கடந்த டிரம்ப் நிர்வாகத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக பணியாற்றினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டி யிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்கிறார். அவர் 2-வது முறையாக அதிபராகி உள்ளார்.

    தற்போது தனது அரசாங்கத்தில் இடம் பெற உள்ள மந்திரிகள், ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இதில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்குக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் டிரம்ப் தனது கடந்த அரசாங்க மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த நிக்கி ஹாலே, மைக் பாம்பியோ ஆகியோருக்கு பதவி வழங்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, முன்னாள் தூதர் நிக்கி ஹாலே, முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ ஆகியோரை எனது நிர்வாகத்தில் சேர அழைக்க மாட்டேன். முன்பு அவர்களுடன் பணியாற்றியதை நான் பாராட்டினேன்.

    நமது நாட்டிற்கு அவர்கள் செய்த சேவைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மீண்டும் அமெரிக்காவை சிறந்ததாக்குங்கள். தற்போது மந்திரிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்றார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, கடந்த டிரம்ப் நிர்வாகத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக பணியாற்றினார். இது அமைச்சரவை அந்தஸ்து பெற்ற பதவியாகும். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வில் டிரம்பை எதிர்த்து நிக்கி ஹாலே போட்டியிட்டார்.

    பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியுறவுத்துறை மந்திரியாக மைக் பாம்பியோ, டிரம்புக்கு நெருக்கமாக இருந்தார். ஆனால் அவருக்கு பதவி வழங்கப்பட வில்லை.

    • டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.
    • டிரம்ப்பை பொறுத்தவரை போரை விரும்பாதவர்.

    திருப்பூர்:

    டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகி உள்ளதால் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதகமான சூழல் நிலவும் என திருப்பூர் பின்னலாடை துறையினர் நம்பிக்கை கொண்டுள்ளனர். 2-வது முறையாக மீண்டும் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.

    டிரம்ப்பின் சீன எதிர்ப்பு கொள்கை, நம் பிரதமருடன் அவர் கொண்டுள்ள நட்பு , பைடன் காலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள வரியில்லாத வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை உயிர்ப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளிட்ட காரணங்கள் திருப்பூர் பின்னலாடைத்துறைக்கும் சாதகமானதாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தொழில் துறையினரிடம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து பின்னலாடை துறை ஆலோசகர் சபரி கிரீஷ் கூறியதாவது:-

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை விட, குடியரசு கட்சி ஆட்சி அமையும்போது அண்டை நாடுகளுடன் இணக்கமான போக்கு கடைபிடிக்கப்படுகிறது. டிரம்ப்பை பொறுத்தவரை போரை விரும்பாதவர்.

    உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதனால் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த போர் நின்றால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பெறும். ஐரோப்பாவுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சி பெறும்.

    சீன எதிர்ப்பு கொள்கை கொண்டவர் டிரம்ப். ஏற்கனவே இவரது பதவி காலத்தில்தான், சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. ஜோ பைடன் ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வார்த்தை டிரம்ப்பின் வருகையால் நிறைவேற வாய்ப்பு உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.

    டாலருக்கு மாற்றாக பொதுவான கரன்சியை கொண்டு வர இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதனால் டாலர் ஸ்திரத்தன்மை இழப்பதை டிரம்ப் விரும்பமாட்டார். இந்தியாவில் சில அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்க அழுத்தம் கொடுப்பார். இது போன்ற ஒரு சில பாதகங்களும் உள்ளன.

    சாதக, பாதகங்கள் இருந்தாலும் ஒட்டு மொத்தத்தில் டிரம்ப்பின் வெற்றி இந்தியாவுக்கு நன்மை தருவதாகவே அமையும். நம் நாட்டுடன் குறிப்பாக பிரதமர் மோடியுடன் நல்ல நட்பு கொண்டுள்ளார். அதனால் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு பாதகமான அம்சங்கள் விலகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக கமலா ஹாரிசுக்கு வாழ்த்துகள்.
    • மக்கள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அதிபர் பைடன்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.

    இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உலக வரலாற்றில் சுயாட்சியில் அமெரிக்கா மிகப்பெரிய சோதனையை எதிர்கொண்டு உள்ளது.

    மக்கள் அமைதியாக வாக்களித்து தங்கள் தலைவரை தேர்வு செய்கின்றனர். ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமே எப்போதும் மேலோங்கும்.

    அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப்பை அழைத்து பாராட்டு தெரிவித்தேன். அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடப்பதை, அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற எனது நிர்வாகத்திற்கு உத்தரவிடுவேன் என அவரிடம் தெரிவித்துள்ளேன். மக்களும் அதனை விரும்புகின்றனர்.

    கமலா ஹாரிஸ் எனது கூட்டாளி. பொது சேவகர். அவர் தனது முழுமனதுடன் கடுமையான முயற்சியில் ஈடுபட்டார்.

    தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள். மக்கள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    அமெரிக்க தேர்தல் முறையின் ஒருமைப்பாடு பற்றிய கேள்விகள் இனி வராது என நம்புகிறேன். அந்த முறை நேர்மையானது. நியாயமானது. வெளிப்படையானது என்பதை நம்பலாம்.

    ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என தெரிவித்தார்.

    • அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.
    • பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஸ்கான்சினில் வெற்றி பெற்றதன் மூலம் அதிபர் பதவிக்கு தேவையான 270 தேர்தல் வாக்குகளை டிரம்ப் பெற்றார்.

    இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர். துணை அதிபர் கமலா ஹாரிஸ் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கவும், மாற்றம் குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகை வரும்படி அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளை மாளிகை ஒரு தேதியை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமெரிக்க தேர்தலில் முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியும் உள்ளது.
    • இதைப் பயன்படுத்தி 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது.

    அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டன.

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலுடன், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் (435 உறுப்பினர்கள்) மற்றும் செனட் சபையின் 34 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

    13 மாநில மற்றும் பிராந்திய ஆளுநர் பதவிகள் மற்றும் பல மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது.

    அமெரிக்க சட்டப்படி தேர்தலில் முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியும் உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இ-மெயில் மூலம் நேற்று தனது வாக்கை செலுத்தினார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    முன்கூட்டியே வாக்களிக்காத வாக்காளர்கள் இன்று தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கிவிடும்.

    நாளை காலை அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது தெரியவரும்.

    • அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
    • இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கமலா ஹாரிஸ், ஜார்ஜியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டார். வடக்கு கரோலினாவில் டிரம்ப் ஆதரவு திரட்டினார்.

    இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அயோவா மாகாணத்தில் நடந்த இந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 47 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்புக்கு 44 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்பை விட கமலா ஹாரிஸ் 3 சதவீதம் அதிகம் பெற்றுள்ளார். 2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அயோவா மாகாணத்தில் டிரம்ப் எளிதில் வெற்றி பெற்று இருந்தார். தற்போது அங்கு அவர் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே வேளையில் மற்றொரு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • இந்திய-அமெரிக்கர்களில் அதிகளவில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • குடியரசுக் கட்சிக்கான ஆதரவில் ஒரு சிறிய முன்னேற்றம் உள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு இந்திய வம்சாவளியினர் 62 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் நிறுவனம், யூகோவ் நிறுவனத்துடன் இணைந்து 2024 இந்திய-அமெரிக்க மனப்பாங்குகள் என்ற தலைப்பில் புதிய கருத்துக்கணிப்பை நடத்தியது.

    இந்த கருத்துக்கணிப்பில் பதிவு செய்யப்பட்ட இந்திய-அமெரிக்க வாக்காளர்களில் 62 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர், டிரம்பிற்கு 32 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்திய-அமெரிக்கர்களில் அதிகளவில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவில் ஒரு சிறிய முன்னேற்றம் உள்ளது.

    இந்திய-அமெரிக்க பெண்களிடம் கமலா ஹாரிசுக்கு 67 சதவீதம் பேரும், டிரம்பிற்கு 22 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய-அமெரிக்க ஆண்களில் கமலா ஹாரிசுக்கு 53 சதவீதமும், டிரம்பிற்கு 39 சதவீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர்.

    • சுமார் 2 ஆயிரம் வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
    • 12 சதவீதம் வாக்காளர்கள் இன்னும் தங்களால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் இருவரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் எஸ்.எஸ்.ஆர்.எஸ். என்ற ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

    இந்த முடிவுகள் கமலா ஹாரிசுக்கும், டிரம்புக்கும் மிக நெருக்கமான போட்டி நிலவுவதையும், அமெரிக்கர்களால் வெற்றியாளரை தெளிவாக தேர்வு செய்ய முடியாத சூழல் நிலவுவதையும் காட்டுகிறது.

    இந்த புதிய கருத்து கணிப்பின்படி, அமெரிக்காவில் 48 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதே போல் டிரம்புக்கு 47 சதவீதம் பேர் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    2 கட்சிகளையும் சாராத பொதுவான வாக்காளர்களில் 45 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும், 41 சதவீதம் பேர் டிரம்புக்கும் வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.

    30 வயதுக்கு குறைவான இளம் வாக்காளர்களில் 55 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும், 38 சதவீதம் பேர் டிரம்புக்கும் ஆதரவாக உள்ளனர். 12 சதவீதம் வாக்காளர்கள் இன்னும் தங்களால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    • அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.
    • அமெரிக்காவில் தற்போது 16 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் கமிஷன் தரவுகள் கூறுகின்றன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார்.

    இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மற்றபடி பொதுமக்கள் அனைவரும் தேர்தல் கமிஷன் அறிவித்த நாளிலேயே வாக்களிக்க முடியும்.

    ஆனால் அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.

    வேலை, உடல்நல பிரச்சினைகள் அல்லது பயணம் போன்ற தேர்தல் நாளில் வாக்களிப்பதில் தடைகளை எதிர்கொள்பவர்களுக்கு இது நடைமுறை தீர்வை வழங்குவதோடு மட்டுமல்லாமல், செயல்முறையை அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் வாக்காளர் பங்கேற்பையும் அதிகரிக்கிறது.

    இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின்போதும் முன்கூட்டியே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே இருக்கும். கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களிப்பார்கள்.

    அந்த வகையில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாகாணங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். மற்ற மாகாணங்களில் மக்கள் தபால் மூலம் வாக்களிக்கின்றனர்.

    அமெரிக்காவில் தற்போது 16 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் கமிஷன் தரவுகள் கூறுகின்றன.

    இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    70 லட்சத்து 80 ஆயிரம் பேர் நேரடியாகவும், 1 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரம் பேர் தபால் மூலமும் வாக்களித்துள்ளதாக புளோரிடா பல்கலைக்கழகத்தின் தேர்தல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

    வெற்றியாளரை தீர்மானிக்கும் 7 மாகாணங்களில் ஒன்றான ஜார்ஜியா மாகாணத்தில் நான்கில் ஒரு பங்கு வாக்காளர்கள் (சுமார் 10 லட்சத்து 84 ஆயிரம் பேர்) ஏற்கனவே வாக்களித்துவிட்டதாக அந்த மாகாணத்தின் தேர்தல் அதிகாரிகள் தெரிவிததனர்.

    முன்கூட்டியே வாக்களிப்பதில் குடியரசு கட்சியினர் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. நேரடியாக வாக்களித்தவர்களில் 41.3 சதவீதம் பேர் குடியரசு கட்சியினர் என்றும், 33.6 சதவீதம் பேர் ஜனநாயக கட்சியினர் என்றும் தெரியவந்துள்ளது.

    அதே போல் தபால் மூலம் வாக்களித்தவர்களில் 21.2 சதவீதம் பேர் குடியரசு கட்சியினர், 20.4 சதவீதம் பேர் ஜனநாயக கட்சியினர் ஆவர்.

    முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையில் ஆசிய அமெரிக்கர்களில் வெறும் 1.7 சதவீதம் மட்டுமே வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பல இடங்களில் இந்திய வம்சாவளியினர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த மற்றொரு தரப்பு தகவல்கள்கூறுகின்றன.

    • நாடு முழுவதும் இந்த வகையில் 10 லட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார்.
    • முதல் அதிஷ்டசாலியாக ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளருமானஎலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். அமெரிக்காவில் வரும் நவமபர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு வேட்பாளராக டிரம்ப்பும் களம் காண்கின்றனர்.

    இதில் டிரம்பை ஜெயிக்க வைக்க எலான் மஸ்க் படாதபாடு படுகிறார். டிரம்பின் பிரச்சாரத்துக்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியதோடு மட்டும் நில்லாமல் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் மேற்கூறிய அறிவிப்பை மஸ்க் தற்போது வெளியிட்டுள்ளார்.

     

    டிரம்புக்கு குறைந்த வாக்கு வங்கி இருக்கும் மாகாணங்களில் வாக்காளர்களை ஒருங்கிணைத்து, பதிவு செய்வது, அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய அரசியல் நடவடிக்கை அமைப்பு [பிஏசி] என்ற ஒன்றை ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க் . இதன்படி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி படிவங்களில் கையொப்பம் வாங்கும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

     

    நாடு முழுவதும் இந்த வகையில் 10 லட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார். முக்கியமாக பென்சில்வேனியாவில் இந்த திட்டம் தீவிரத்துடன் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த படிவத்தில் கையெழுத்திடும் நபர்களில் தேர்தல் நடக்கும் நவம்பர் 5 வரை தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும் என்று மஸ்க் அறிவித்துள்ளார்.

    அதன்படி முதல் அதிஷ்டசாலியாக பென்சில்வேனியாவை சேர்ந்த ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த திட்டத்துக்கு ஜனநாயகவாதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    ×