என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"
- விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
- விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளார் முதல்வர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்களை வாகனத்தில் இருந்து இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு வேதனை அடைந்துள்ளதாகவும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 50.000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
- 27 பதிவுரு எழுத்தர்கள் மற்றும் 24 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் கருணை அடிப்படையிலும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- 180 நபர்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை:
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் 414 இளநிலை வரைதொழில் அலுவலர்கள், 33 உதவிப் பொறியாளர்கள், 66 இளநிலை உதவியாளர்கள், 48 தட்டச்சர்கள், 6 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III, 4 தணிக்கை உதவியாளர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திலும், 45 இளநிலை உதவியாளர்கள், 3 உதவி வரைவாளர்கள், 9 தட்டச்சர்கள், 27 பதிவுரு எழுத்தர்கள் மற்றும் 24 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் கருணை அடிப்படையிலும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நெடுஞ்சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 180 நபர்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் ஆர்.செல்வராஜ், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் ரா.செல்வதுரை, சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) ஆர். சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தரமான கல்வியில் ஒரு அளவுகோலை அமைக்கிறது.
- நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முதன்மை திட்டங்களால் நமது மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களை தொடுவார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது.
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலிலும் நமது மாநிலம் மற்ற மாநிலங்களை விட மிகவும் உயர்ந்து நிற்கிறது. தரமான கல்வியில் ஒரு அளவுகோலை அமைக்கிறது.
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலிலும் தமிழ்நாட்டை சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளன.
நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முதன்மை திட்டங்களால் நமது மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களை தொடுவார்கள்.
இவ்வாறு அதில் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.
- காஞ்சிபுரத்தில் மெகஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2,200 கோடி முதலீட்டில் 2,200 பேர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய திட்டம்.
- நமது அரசாங்கமும், தனியாரும் செய்துள்ள கூட்டாட்சி முறையில் உள்ள திட்டம்.
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அவரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஏறத்தாழ 44 ஆயிரத்து 125 கோடி ரூபாய் முதலீட்டுக்காக 15 முதலீட்டு திட்டங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதலை தந்துள்ளது.
இந்த முதலீட்டு திட்டங்களின் அடிப்படையில் ஏறத்தாழ 24 ஆயிரத்து 700 பேர்களுக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது வந்திருக்கக்கூடிய இந்த முதலீடுகளில் குறிப்பாக வாகன உற்பத்தி மின்னணு பொருட்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூறுகள் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆகிய தொழில்கள் குறித்த முதலீடுகள் இந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் சன்தாக் நிறுவனத்துக்கு அவர்களின் முதலீடாக 21 ஆயிரத்து 340 கோடி ரூபாய், வேலைவாய்ப்பாக 1,114 பேர்களுக்கு அந்த வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய திட்டம்.
காஞ்சிபுரத்தில் மெகஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2,200 கோடி முதலீட்டில் 2,200 பேர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய திட்டம்.
ஈரோட்டில் மில்கி மிஸ்ட் உணவு பதப்படுத்தும் தொழிலில் ரூ.1,777 கோடி முதலீட்டில் 2025 பேர்களுக்கு வேலைவாய்ப்பு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோகன் கீரிம்டெக் முதலீடு 1,597 கோடி ரூபாய். வேலைவாய்ப்பு 715 பேர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க முதலீடுகளாக அமைந்திருக்கிறது.
இது தவிர உலகளாவிய திறன் மையங்களுக்கான அவற்றின் விரிவாக்கங்களுக்காக ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.
யு.பி.எஸ். மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா இந்த இரண்டு நிறுவனங்கள் அவர்களது மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
எனவே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஏறத்தாழ ரூ.44 ஆயிரத்து 125 கோடி அளவிற்கு புதிய முதலீடுகள் 15 புதிய நிறுவனங்களில் வந்திருக்கிறது. ஏறத்தாழ 24 ஆயிரத்து 700 பேருக்கு இது வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இது தவிர இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நமது முதலமைச்சர் வரக்கூடிய 17-ந்தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிப்காட் சார்பில் காஞ்சிபுரம் மாவட் டம் ஸ்ரீ பெரும்புதூர் வட்டம் வல்லம் படுகால் பகுதியில் ரூ.706.5 கோடியில் கட்டப்பட்டுள்ள 18 ஆயிரத்து 720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் பாக்ஸ்கான் நிறுவனத்துக்காக கட்டப்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 3 முக்கியமான கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி துறை மூலமாக குறிப்பாக பட்ஜெட்டில் கூட இதுபற்றி அறிவிப்பு வெளியிட்டிருந்தோம்.
தமிழ்நாடு நீரேற்று புனல்மின் திட்டம். தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள். அதற்கான கொள்கை, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்புக்கான கொள்கைக்கும் அனுமதி கொடுத்துள்ளோம்.
பசுமை எரிசக்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். வரக்கூடிய 2030-ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி நிறுவு திறனை நாம் அடைய வேண்டும் என்கிற இலக்கை முதலமைச்சர் நிறுவி இருக்கிறார்கள்.
இப்போது இருக்கக்கூடிய நிலையற்ற பசுமை எரி சக்தியை நாம் சமப்படுத்தப்பட்ட மின்சாரமாக மாற்றுவதற்கு கட்டமைப்பை உருவாக்கி கிரிடில் அதை கொண்டு வருவதற்காக இந்த 3 கொள்கைகளை நாம் கொடுத்துள்ளோம்.
இந்த திட்டங்களில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அள வுக்கு முதலீடுகள் இருப்பதால் தனியார் பங்களிப் போடு செய்வது அவசியமாக இருக்கிறது.
அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் இவைகளுக்காக இருக்கக்கூடிய நீர்த்தேக்கங்களில் கூட்டு முயற்சியில் செயல்படுத்தக்கூடிய திட்டம். அதன் வாயிலாக கிடைக்கும் மின்சாரம் 100 சதவீதம் நமது மாநிலத்துக்கே வழங்க வேண்டும் என்கிற ஒரு திட்டம்.
நமது அரசாங்கமும், தனியாரும் செய்துள்ள கூட்டாட்சி முறையில் உள்ள திட்டம். அது தவிர தனியார் மூலமாக செய்யக்கூடிய முறை என 3 வகையாக பிரித்துக்கொண்டு இந்த கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.
இந்த கொள்கைக்கு பல்வேறு சலுகைகளும், கட்டணங்களும் வழங்கி இருக்கிறோம்.
சிறிய புனல் திட்டமும் கொடுத்துள்ளோம். தூய்மையான மாசற்ற மின்சாரத்தை உருவாக்க இது சரியாக இருக்கும். காற்றாலையை புதுப்பிக்கும் கொள்கை மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நிருபர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்க பயணம் எப்போது? என்று கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் முறையான வகையில் அறிவிப்பு வெளியிடும் என்றார்.
- முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்த விவாதம் இந்த கூட்டத்தில் இடம் பெறும்.
- அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை:
தமிழகத்திற்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். மீண்டும் அவர் அடுத்த மாதம் செப்டம்பர் 14-ம் தேதி சென்னை திரும்புகிறார். இந்த நிலையில் அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டப்பட்டு உள்ளது.
எனவே முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்த விவாதம் இந்த கூட்டத்தில் இடம் பெறும். மேலும், தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள புதிய தொழில்களுக்கான அனுமதியை இந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 5-ம் தேதி கொளத்தூரில் நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆய்வு நிகழ்ச்சியின்போது அவரிடம், 'விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே?' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கோரிக்கை வலுக்கிறது. ஆனால் பழுக்கவில்லை" என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது, வரும் 19-ம் தேதிக்கு மேல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தினார். அதுபோல் அமைச்சர் கீதா ஜீவனும், கூட்டம் ஒன்றில் பேசும்போது உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் என்று அங்கீகரித்துப் பேசினார்.
எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கா செல்லும் நிலையில் அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு விடும் என்ற பலமான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது குறித்தும் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுமா? கோரிக்கை பழுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்குமா? என்ற கேள்வியும் சேர்ந்தே எழுந்துள்ளது.
- மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
- சென்னை கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
அதன்படி, வரும் 16ம் தேதி அன்று சென்னை கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில், திமுக முப்பெரும் விழா குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
- யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
- யானைகள் அழிந்தால் காடுகளும், அதனை சார்ந்து வாழக்கூடிய விலங்குகளும், மனிதஇனமும் அழிந்துவிடும்.
உருவத்திலும், அதன் செயலிலும் நம்மால் பிரமிப்பாக பார்க்கப்படக்கூடிய யானை, தற்போது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் முதன்மையான ஒன்றாக இருந்து வருகிறது.
இதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே சர்வதேச யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ம் தேதி (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது.
யானைகள் அழிந்தால் காடுகளும், அதனை சார்ந்து வாழக்கூடிய விலங்குகளும், மனிதஇனமும் அழிந்துவிடும். எனவே சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்துக்கு சிறந்த அடையாளமாகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்தை காக்கும் பாதுகாவலனாகவும் இருக்கக்கூடிய யானைகளை பாதுகாக்கக்கூடிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.
இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சூழலியற் சமநிலையைப் பேணுவதில் யானைகளின் பங்கு அளப்பரியது. தமிழிலக்கியம் முழுதும் பல்வேறு பெயர்களால் யானைகள் குறிப்பிடப்படுவதில் இருந்தே அவை இம்மண்ணுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவை உணரலாம்.
பல்லுயிர் காக்கும் நமது அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக உயர்ந்து வரும் மகிழ்ச்சிக்குரிய செய்தியை #WorldElephantDay-இல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 19 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- 5 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் அண்ணாநகர் மண்டலம், சூளைமேடு, விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே ரெயில்வே காலனி 3-வது தெருவையும், மாதா கோவில் தெருவையும் இணைக்கும் வகையில் 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம், அம்பத்தூரில் வார்டு-81 மற்றும் 85-க்குட்பட்ட ரெயில்வே சந்திக்கடவிற்கு மாற்றாக 11.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்லும் சுரங்கப்பாதை;
அடையாறு மண்டலம், தொல்காப்பியப் பூங்காவில் பகுதி-1 மற்றும் பகுதி-2 இணைக்கும் வகையில் 9.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொங்கும் ஆகாய நடைபாலம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக 5.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று வழி பெட்டகக் கால்வாய்;
கிண்டி பாலம் சந்திப்பு முதல் சக்ரபாணி தெரு சந்திப்பு வரை உள்ள ரேஸ் கோர்ஸ் சாலையை 20.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுவடிமைப்பு செய்யும் பணி, பெசன்ட் நகர் கடற்கரை, காரல் ஸ்மித் நினைவகத்திற்கு அருகில் 1.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை, தண்டையார்பேட்டை மண்டலம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை (டோல்கேட் மெட்ரோ நிலையம் முதல் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் வரை) மற்றும் அருணாசலேஷ்வரர் கோவில் தெரு (புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் முதல் திட்ட சாலை வரை) 64.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணிகள்;
விரிவாக்கம் செய்யப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி கோவளம் வடிநிலப் பகுதியில் எம்.1. மற்றும் எம்.2 பாகங்களில் 666.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, உலகளாவிய சுற்றுச் சூழல் வசதித் திட்டத்தில் 58.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடப்பாக்கம் ஏரியின் சுற்றுச்சூழல் அமைப்பினை மறுசீரமைக்கும் பணி;
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரை 259.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 364.63 கி.மீ. நீளத்திலான 2,089 சாலைகள் அமைக்கும் பணி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும நிதியில், மாதவரம் மண்டலத்தில் 38.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சி.எம்.டி.ஏ. கனரக மற்றும் இலகுரக வாகன நிறுத்த முனையம், சாலைகள் மற்றும் பல்நோக்குக் கட்டடங்கள் மேம்படுத்தும் பணி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட புலியூர் கால்வாய் (ட்ரஸ்ட்புரம் கால்வாய்) 16.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி; என மொத்தம் 1153.27 கோடி ரூபாய் மதிப்பிலான 19 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சேலம் மாநகராட்சியில் 5.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 4.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 பொருள் மீட்பு வசதி மையங்கள், 11.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமணி முத்தாறு கடைமடை கால்வாய் மறுசீரமைப்பு பணி, திருச்செங்கோடு நகராட்சியில் 4.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம், தாரமங்கலம் நகராட்சியில் 9.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்;
என மொத்தம் 35.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காலனியில் 68-வது தெருவில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 மில்லியன் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய குடிநீர் கீழ்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர்களின் களப்பணிக்காக 1 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவிலான 10 புதிய வாகனங்கள் மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 1 முதல் 15 மண்டலங்களின் பயன்பாட்டிற்காக 28 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவிலான 58 கழிவுநீரகற்று வாகனங்கள், என மொத்தம் 68 வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருப்பெரும்புதூர், மாமல்லபுரம் மற்றும் திருவையாறு ஆகிய 3 புதிய நகராட்சிகளை அமைத்துரு வாக்குவதற்கான உத்தேச ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 29 நபர்களுக்கும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 18 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 97 நபர்களுக்கும், என மொத்தம் 144 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் விதமாக, நகராட்சி நிருவாக இயக்குநகரத்தின் சார்பில் 20 நபர்களுக்கும், பேரூராட்சிகள் இயக்குநர கத்தின் சார்பில் 3 நபர்களுக்கும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 4 நபர்களுக்கும், என மொத்தம் 27 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு சட்டக் கல்லூரி நூலகங்களுக்கு 3.50 கோடி ரூபாய் செலவில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- புதிய கட்டடமானது மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, புதிதாக பல்வேறு இடங்களில் நீதிமன்றக் கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது; அரசு சட்டக் கல்லூரி நூலகங்களுக்கு 3.50 கோடி ரூபாய் செலவில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன; காரைக்குடியில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் புதிய அரசு சட்டக் கல்லூரி துவங்கப்பட்டு, அக்கல்லூரிக்கான சொந்தக் கட்டடத்திற்கு 100.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது; உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் வழக்கறிஞர் நலத்திட்ட உதவி 7.50 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது; "வழக்காடுதல் கலை" பயிலரங்கம் கட்டுமானப் பணிகள் 32.25 இலட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருவது போன்ற பல்வேறு நடவ க்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடம் மற்றும் விடுதிக் கட்டடம் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், குதக்கோட்டை கிராமத்தில் 1,76,549 சதுர அடி பரப்பளவில் 76 கோடியே 60 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடம் மற்றும் விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இப்புதிய கட்டடமானது, 26 வகுப்பறைகள், கருத்தரங்குக்கூடம், காணொளி காட்சி அறை, உள்விளையாட்டு அரங்கம், சர்வதேச தரத்தில் மாதிரி நீதிமன்ற அரங்கம், நிர்வாகத் தொகுதிக் கட்டடங்கள், அதிவேக இணைய வசதிகளுடன் கூடிய கம்பியில்லா மண்டலம் அடங்கிய நூலகக் கட்டடங்கள், டால்பி டிஜிட்டல் ஒலிப்பெருக்கி யுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கலையரங்கம், விடுதி காப்பாளர் அறை, 250 மாணவியர்கள் தங்கும் வசதி கொண்ட விடுதிக் கட்டடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப் பெரும்புதூரில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என்று மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் 1 கோடியே 57 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டுத் திடலை முதலமைச்சர் மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சட்டத்துறைச் செயலாளர் சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக்கல்வி இயக்குநர் ஜெ.விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. நிர்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான்.
சென்னை:
திண்டிவனத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், சி.வி.சண்முகம் மீது திண்டிவனம் போலீசார் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஜான் சத்யன் ஆஜராகி, சி.வி.சண்முகத்தின் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றால் அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டும்.
ஆனால் தி.மு.க. நிர்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று வாதிட்டார். அதற்கு நீதிபதி, ''சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான். அவரது பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய முடியுமா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த போலீசார், 'சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, அதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே, இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி பிறப்பித்தார். அதில், முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.
- புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி.
- 1998-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வரலாற்று தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோவில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று இதன் அருகில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளை இணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் கடந்த 30.3.2023 அன்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பாக உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் நடைமுறைகளை தொடங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு இருந்தார்.
அதன்படி புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியும், திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியும், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை இணைத்து நாமக்கல் மாநகராட்சியும், காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சி, 5 ஊராட்சிகளை இணைத்து காரைக்குடி மாநகராட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.
1998-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 4 புதிய மாநகராட்சிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி அருகே அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு அடையும்.
அது மட்டுமின்றி இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலா பயணிகள், வணிக நிறுவனங்கள் தொழில் நடத்துபவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாக அமையும்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
- ரூ.1192.45 கோடி மதிப்பீலான 30 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
- ஜமீன் பல்லாவரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.800.75 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அதில் பெசன்ட்நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய நடைபாதை, யானைக்கவுணி ரெயில்வே மேம்பாலம், மெரினா லூப் சாலை கடற்கரை பகுதியில் நவீன மீன் அங்காடி, புதிய பூங்காக்கள், புதிய விளையாட்டு மைதானங்கள், புதிய பஸ் நிலையங்கள், சுரங்கப்பாதை, புதிய பாலங்கள்,
ஜமீன் பல்லாவரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம், ஆகாய நடைபாதை, ஏரி மற்றும் கால்வாய் சீரமைப்பு, தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள், புதிய அலுவலக கட்டிடங்கள், அறிவுசார் மையங்கள், பொது கழிப்பிடங்கள், புதிய குடிநீர் திட்டப்பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட 104 முடிவுற்ற திட்டப்பணிகள் அடங்கும். இவை மக்கள் செயல்பாட்டுக்கு இன்று கொண்டு வரப்பட்டது.
இது தவிர ரூ.1192.45 கோடி மதிப்பீலான 30 புதிய திட்டப்பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் 144 பேருக்கு பணிநியமன ஆணைகள் மற்றும் 27 பேருக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை வழங்கி 68 புதிய வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்