என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"
- அரசு சார்பில் நடந்த இந்த விழாவில் அரசியல் கலப்பது சரியல்ல.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடத்தப்படும்.
சென்னை:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்த நாளை காங்கிரசார் இன்று கொண்டாடினார்கள். இதையொட்டி சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் சின்னமலையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ராஜீவ் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதைத் தொடர்ந்து சத்திய மூர்த்தி பவனில் ராஜீவ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இலவச மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.
செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
மதவாதத்துக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்தவர் கலைஞர். அவருக்கு நாணயம் வெளியிட்டது சிறப்பு. அதே நேரம் அரசு சார்பில் நடந்த இந்த விழாவில் அரசியல் கலப்பது சரியல்ல. இதை காரணமாக வைத்து பா.ஜகவுடன் தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்று ஹேஸ்யமாக சொல்வது தவறு. எங்கள் கூட்டணி உறவு கெட்டியாக உள்ளது.
மதவாதத்தை எதிர்ப்பதில் காங்கிரஸ் எந்த அளவு தீவிரமாக உள்ளதோ அதே அளவுக்கு தீவிரமாக இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எனவே அவர் அந்த பக்கம் போக மாட்டார். முத்தமிழறிஞர் கலைஞரை பற்றி தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்கு முன்பும் பாஜகவினர் எவ்வளவு வசைபாடினார்களோ அதையும் திரும்ப பெற வேண்டும்.
ஒன்றிய அரசு தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் நிதி ஒதுக்கி உள்ளது. டீ செலவுக்குக் கூட போதாத இந்த தொகையால் தமிழகத்தில் எந்த ரெயில்வே திட்டத்துக்கும் பலனில்லை. எனவே மத்திய அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயுடன் ரூ.1 கூடுதலாக சேர்த்து ரூ.1001-ஐ மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடத்தப்படும் இந்த போராட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், விஜய் வசந்த் எம்.பி. மாநில நிர்வாகிகள் டி.செல்வம், தணிகாசலம், தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர் முத்தழகன், தி.நகர் ஸ்ரீராம், இல.பாஸ்கரன், திருவான்மியூர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.
- வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
சமூகநீதியை நிலைநாட்டவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்யவும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும்.
லேட்டரல் என்ட்ரி (நேரடி நியமனம்) என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். தகுதிமிக்க பட்டியல்-பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பதாகும். ஒன்றிய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்பு வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், நியாயமான, சமத்துவமான முறையில் பதவிஉயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும்.
தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற 'கிரீமி லேயர்' முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் கிரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட-நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
- கடந்த 3 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் 693 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
சென்னை:
இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சுப் பணியில் உதவியாளர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
172 உதவியாளர் பணியிடத்திற்கு வழங்கப்பட்ட பணிநியமன ஆணைகளையும் சேர்த்து கடந்த மூன்று ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் 693 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள் மற்றும் 5 தொழில் வழிகாட்டி ஆலோசகர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் விதமாக 7 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ஆலோசகர் பணியிடத்திற்கு உளவியல் முதுகலை பட்டம், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் முதுநிலை பட்டயம், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் பட்டயப்படிப்பு படித்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்புதிய ஆலோசகர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு புனர்வாழ்வு மற்றும் மருத்துவ நிலையத்தில் பணிபுரிவர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- முதலமைச்சரின் 1-வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 3-வது தனி செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலமைச்சரின் 1-வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2-வது தனி செயலாளராக சண்முகம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3-வது தனி செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சரின் தனி செயலாளராக இருந்த முருகானந்தம் தலைமை செயலாளராக ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சரின் தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனி செயலாளர் உமாநாத்துக்கு வணிக வரி, பொதுத்துறை, எரிசக்தி, நெடுஞ்சாலை, தொழில் துறை, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி, விழிப்புப்பணி, நீர்வளத்துறை உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை, கூட்டுறவு, வீட்டு வசதி, முதல்வரின் அலுவலக நிர்வாகம், சட்டத்துறை என 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்ட அனு ஜார்ஜிற்கு 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பயண ஏற்பாடுகள், கால்நடை, பள்ளிக்கல்வி, விளையாட்டு, ஆதிதிராவிடத்துறை உள்ளிட்ட 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமிபதிக்கு 9 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உள்ளிட்ட 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
- மாணவர்களுடன் மனு பாக்கர் உரையாடினார்.
சென்னை:
ஒலிம்பிக் தொடரில் 2 வெண்கல பதக்கங்களை வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் சென்னை வந்தார்.
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற வீராங்கனை மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு துப்பாக்கி பரிசாக அளிக்கப்பட்டது.
பின்னர் அவருக்கு கிரீடம் அணிவித்து பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்தனர்.
அப்போது மாணவர்களுடன் மனு பாக்கர் உரையாடினார். மாணவர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர். அவர் அதற்கு பதில் அளித்து பேசினார்.
மாணவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், எனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தெரியாது. பிரக்ஞானந்தா, நடிகர் விஜயை தெரியும் என்று கூறினார்.
- தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
- நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம்.
சென்னை:
தமிழக ரெயில்வே திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கேள்விகள் எழுப்பி நேற்று கடிதம் எழுதினார். அதற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தனது எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் பதிலளித்து வெளியிட்ட பதிவு வருமாறு:-
தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை முந்தைய ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சராசரி ஒதுக்கீட்டை விட 7 மடங்கு அதிகம். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நிலம் என்பது மாநிலப் பொருளாகும். நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் அரசு எங்களுக்கு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். 2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம். எங்கள் தரப்பில் இருந்து, நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டிற்கு 2 அடி எடுத்து வைப்போம் என்று உறுதியளிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Would like to bring the following facts to the notice of Hon'ble CM Thiru @mkstalin NDA government has allocated a record amount of Rs 6,362 Crore for developing railways in Tamil Nadu. This amount is more than 7 times the average allocation done in UPA era (only Rs 879 Crore… https://t.co/wLh86JREmN
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 19, 2024
- வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
- நிதிப் பற்றாக்குறை காரணமாக முக்கியத் திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில்,
தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
2024-2025 நிதியாண்டில் வழக்கமான ரெயில்வே பட்ஜெட்டில், தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைந்திருப்பதால், அதன் விளைவாக தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்குப் போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
2024-2025 நிதியாண்டுக்கான இந்திய ரெயில்வே-க்கான வழக்கமான பட்ஜெட்டில், சில கணக்குத் தலைப்புகளின்கீழ் தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவும், அதே ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு.
கணக்குத் தலைப்பு 11-புதிய பாதைகள் என்பதன்கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 976.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும், கணக்குத் தலைப்பு 15-இரட்டைப் பாதையாக்கல் என்பதன்கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 2,214.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நிதி ஒதுக்கீட்டில், புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.674.8 கோடி அளவிற்கு அதிரடிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டு, அந்த வகையில், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, திண்டிவனம்-நகரி, அத்திப்பட்டு-புத்தூர், ஈரோடு-பழனி, சென்னை-கடலூர்-மகாபலிபுரம், மதுரை-தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை), ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக் கோட்டை-ஆவடி-ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏழு முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படும்.
அதேபோல், இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 285.64 கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்திருப்பது, தமிழ்நாட்டில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள இரட்டைப் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப்படுத்தும். அந்த வகையில், விழுப்புரம்-திண்டுக்கல், திருவள்ளூர்-அரக்கோணம் (4-வது லேன்), ஓமலூர்-மேட்டூர் அணை, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில், சேலம்-மேக்னசைட் சந்திப்பு-ஓமலூர், காட்பாடி-விழுப்புரம், சேலம்-கரூர்-திண்டுக்கல், ஈரோடு-கரூர், சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர், அரக்கோணம் யார்டு சாலை 1 மற்றும் 2-க்கு, 3 வது மற்றும் 4 வது வழித்தடம் இணைப்பு போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும்.
மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் தொடர்பாக தெற்கு ரெயில்வேயில் நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மின்சாரப் பேருந்து சேவைகள், பெருந்திரள் துரித ரெயில் போக்குவரத்துத் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவுபடுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அப்பணிகளின் விவரங்களை விவரித்துள்ளார்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென ஒன்றிய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த முக்கியத் திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும், இது தொடர்பாக ஒன்றிய ரெயில்வே துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
- அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
- கடந்த 3 ஆண்டுகளில் ஏற்கனவே 2 முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது.
சென்னை:
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சரவை மாற்றத்தின்போது புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து அமைச்சரவை மாற்றமும் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சேலம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
வரும் 23-ந்தேதி தமிழக அமைச்சரவை மாற்றப்படலாம் என்றும் ஏற்கனவே அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ஏற்கனவே 2 முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது.
முதலமைச்சரின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அவரை துணை முதலமைச்சர் ஆக்கவும் வாய்ப்பு உள்ளது.
- கலைஞர் உருவம் பொறித்த நாணயம் இந்தியில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
- அதிமுகவினருக்கு கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை.
சென்னை:
திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கலைஞர் உருவம் பொறித்த நாணயம் இந்தியில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
* நாட்டு நடப்பு தெரிய வேண்டும் அல்லது இபிஎஸ்-க்கு மண்டையில் மூளையாவது இருக்க வேண்டும்.
* ஏற்கனவே அண்ணா, எம்ஜிஆர் போன்றவர்களுக்கு வெளியிடப்பட்ட நாணயத்தை இபிஎஸ் பார்த்திருக்க மாட்டார்.
* எல்லா தலைவர்களின் நாணயத்திலும் இந்தி தான் இடம் பெற்றிருக்கும்.
* இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வந்து வாய்த்துள்ளார்.
* அண்ணாவிற்கு வெளியிடப்பட்ட நாணயத்தில் அவர் தமிழ் கையெழுத்தை கலைஞர் இடம் பெற செய்தார்.
* ஜெயலலிதா அம்மையாரால் உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தி உள்ளனரா?
* இரங்கல் கூட்டம் நடத்தாத அதிமுகவினருக்கு கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை.
* இபிஎஸ் போன்று ஊர்ந்து சென்று பதவி வாங்கும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது.
* சங்கரை போல் எனக்கும் கோபம் வரும், ஆனால் கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும்
* அண்ணா மீது ஆணையிட்டு சொல்கிறேன், நமக்கென்று இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.
- கலைஞரை இந்த அளவுக்கு புகழ வேண்டும், பாராட்டி பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை.
- கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது ஒன்றிய அரசு.
சென்னை:
திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் மறைந்த கே.பி.பி.சாமியின் சகோதரர் திருவொற்றியூர் கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைத்து மணமக்கள் திலீபன்-விஷாலியை வாழ்த்தினார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.
உள்ளபடியே கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசினால் என்ன பேசுவார்களோ அதை விட அதிகமாக, தி.மு.க.காரன் பேசுவதை விட அதிகமாக சிறப்பாக தலைவர் கலைஞரை பற்றி அவர் பேசியது உள்ளபடியே வரலாற்றில் பொறிக்க தக்க உரையாக அந்த உரை அமைந்தது.
கலைஞரை இந்த அளவுக்கு புகழ வேண்டும், பாராட்டி பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. தேவையும் இல்லை அவருக்கு. ஆனாலும் பேசினார் என்றால், உள்ளத்தில் இருந்து உண்மையை பேசினார்.
இதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் நேற்று ஒரு பேட்டி கொடுக்கிறார்.
நாணயம் வெளியிடுகிறார்கள். இந்தியில் இருக்கிறது, தமிழில் இல்லை. தமிழ், தமிழ், தமிழ் என்று முழங்குகிறார்களே, இந்தியில் இருக்கிறது என்று சொல்கிறார்.
முதலில் ஒன்று அரசியல் தெரிந்திருக்க வேண்டும். இல்லை நாட்டினுடைய நடப்பு புரிந்திருக்க வேண்டும்.
அந்த நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்றால் மத்திய அரசு அனுமதி கொடுத்து மத்திய அரசின் மூலமாக நடைபெறுகிற நிகழ்ச்சி அது.
ஏற்கனவே பல பேருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. மறைந்த எம்.ஜி.ஆர்., அண்ணாவுக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நாணயத்தை எல்லாம் ஒருவேளை அவர் பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். அதை எடுத்து பாருங்கள். எல்லா தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடுகிறபோது, ஒன்றிய அரசு இந்தியில்தான் எழுதி அப்புறம் ஆங்கிலத்தில் எழுத்துகள் அமைந்திருக்கும்.
ஆனால் அண்ணாவுக்கு நாணயம் வெளியிடுகிறபோது தலைவர் கலைஞர் யாரும் செய்யாத ஒரு ரகசியத்தை செய்தார். அண்ணாவுடைய தமிழ் கையெழுத்து அதில் இடம் பெற வேண்டும் என்று சொல்லி அண்ணாவின் தமிழ் கையெழுத்தை அந்த நாணயத்தில் வெளியிட்டு அதற்கு பிறகு வெளியிடப்பட்டது.
அது மாதிரிதான் கலைஞரின் நாணயத்தை வெளியிடுகிறபோது கலைஞருக்கு ரொம்ப பிடித்த எழுத்து, தமிழ் வெல்லும். ஆக அந்த 'தமிழ் வெல்லும்' என்பது தமிழில்தான் எழுதப்பட்டு உள்ளது. இதை கூட அவர் பார்க்காமல், புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது வருத்தமாக உள்ளது.
ஏன் ராகுல்காந்தியை அழைக்கவில்லை என அவர் கேட்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லிக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை தி.மு.க. நடத்தவில்லை. இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஒன்றிய அரசு. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தான் நிகழ்ச்சி நடந்தது.
கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது ஒன்றிய அரசு. அதனால்தான் ஒன்றிய அமைச்சரை அழைத்து அந்த நிகழ்ச்சியை நாங்கள் சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம்.
இதில் எங்கே பழனிசாமிக்கு வலிக்கிறது? அதைத்தான் நான் கேட்கிறேன்.
எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிட்டார்கள். யார் வெளியிட்டார்கள் தெரியுமா? ஒன்றியத்தில் இருந்து யாரும் வரவில்லை. எடப்பாடி பழனிசாமியே வெளியிட்டார். ஏனென்றால் ஒன்றிய அரசு அவரை மதிக்கவில்லை. அவரை ஒரு முதலமைச்சராகவே நினைக்கவில்லை. ஏன் மனுஷனாகவே நினைக்கவில்லை. வர மறுத்து விட்டார்கள். இதுதான் அவருக்கு இருந்த மரியாதை.
இன்றைக்கு நாம் அழைத்தவுடன் அடுத்த வினாடி ஒரு சொல் கூட தட்டாமல் ஒரு 15 நிமிடம், அரைமணி நேரம் வந்து நீங்கள் நடத்தி விட்டு செல்லுங்கள் என்றோம்.
15 நிமிடம் என்ன... எவ்வளவு மணி நேரம் என்றாலும் இருந்து காத்திருந்து நிகழ்ச்சியை நடத்தி விட்டு போகிறேன் என்று சொல்லி விட்டு வந்தார். அதுதான் தி.மு.க.வுக்கு இருக்கக்கூடிய பெருமை. கலைஞருக்கு இருக்க கூடிய சிறப்பு.
இன்னொன்றும் சொல்ல வேண்டும், அம்மா, அம்மா என்று புகழ்ந்து கொண்டி ருக்கிறார்களே அ.தி.மு.க.வினர். பாக்கெட்டில் படத்தை வைத்துக்கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கிறார்களே அந்த அம்மையார் இறந்து எத்தனை வருடம் ஆகி விட்டது.
நான் கேட்கிறேன். இதுவரைக்கும் அந்த அம்மையரால் வளர்க்கப்பட்டவர்கள் உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தி இருக்கிறார்களா?
ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்துவதற்கு யோக்கியதையற்றவர்கள் கலைஞருடைய விழாவை பார்த்து விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் நான் கேட்கிறேன்.
ராஜ்நாத்சிங்கை நாம் அழைத்ததால் ஏதோ பா.ஜ.க.வுடன் நாம் உறவு வைத்துக் கொண்டோம். உறவு வைக்க போகிறோம். அப்படின்னு ஒரு செய்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
இது மீடியாவுக்கு ஒரு தீனி. ஒவ்வொரு ஊடகங்களும் ஒவ்வொரு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திட்டினாலும் தி.மு.க.தான், வாழ்த்தினாலும் தி.மு.க.தான்.
நாங்கள் ரகசிய உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அம்மையார் இந்திரா காந்தியே சொன்னார். கலைஞரை பொறுத்தவரைக்கும், தி.மு.க.வை பொறுத்தவரைக்கும், எதிர்த்தாலும் கொள்கையோடு எதிர்ப்பார். ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிப்பார் என்று சொல்லி இருக்கிறார். அது போதும் எங்களுக்கு.
மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கூட நாங்கள் தீர்மானம் போட்டுள்ளோம். முதலில் எடிப்பாடி பழனிசாமி அதை படிக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி மாதிரி ஊர்ந்து போய், பதுங்கி போய் பதவி வாங்குகிற புத்தி தி.மு.க.வுக்கு கிடையாது. எல்லோருக்கும் உரிய மரியாதையை நாங்கள் கொடுக்கிறோம்.
அதற்காக நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன். அண்ணா மீது ஆணையிட்டு சொல்கிறேன். நமக்கென்று இருக்க கூடிய உரிமையை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதுதான் அண்ணாவும், கலைஞரும் நமக்கு நமக்கு போட்டுத் தந்திருக்கும் பாதை.
அப்படிப்பட்ட இயக்கத்தை சேர்ந்த குடும்பத்தில்தான் இன்றைக்கு இந்த மண விழா நடக்கிறது.
இங்கே உதயநிதி ஸ்டாலின் பேசுகிறபோது, சங்கருக்கு கோபம் வந்திடும். அந்த பயத்திலேயே வந்தேன் என்று சொன்னார். நானும் அப்படித்தான்.
ஒன்றை மறந்து விடக்கூடாது. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். கட்சிக்கென்று ஒரு பிரச்சினை வருகிறபோது பெரிய கோபம் வந்தே தீர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு, காந்தி, பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேகர் எம். எல்.ஏ., கலாநிதி வீராசாமி எம்.பி., மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் ஜே.ஜே. எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி மாநில மீனவர் அணி தலைவர் இரா. பெர்ணார்டு, மீனவர் அணி நிர்வாகிகள் மதிவாணன், ஜோசப் ஸ்டாலின், பகுதி செயலாளர்கள் தி.மு. தனியரசு, வை. ம. அருள்தாசன், ஏ.வி. ஆறுமுகம், மாவட்ட இளைஞர் அணி. அமைப்பாளர் ஆர்.டி. மதன்குமார், ஆகாஷ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் செல்வ ராஜகுமார், ராமநாதன், இரா. முருகேசன்,அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன் பரசு பிரபாகரன், பி. எஸ். இனியன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக கே.பி.சொக்கலிங்கம் வரவேற்றார். முடிவில் கே.பி.சங்கர் எம்.எல். ஏ. நன்றி கூறினார்.
- கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
- அப்போது பேசிய அவர், கலைஞர் கருணாநிதியின் போராட்டங்கள் மிகவும் வலிமையானவை என்றார்.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலைஞர் நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்றவர் கலைஞர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு சிந்தித்து துணை நின்றவர்.
கலைஞர் கருணாநிதியின் போராட்டங்கள் மிகவும் வலிமையானவை.
மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தவர் கலைஞர்.
மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம்களைக் கொண்டு வந்தவர் கலைஞர்.
தமிழ் இலக்கியம், சினிமாவிற்கு கலைஞர் அளித்த பங்கேற்பு மிகவும் அபரிமிதமானது.
இந்தியாவின் கூட்டாட்சியைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் கலைஞர் என தெரிவித்தார்.
- பல அரசியல் மாறுபாடு இருந்தாலும் நாணயம் வெளியிட்ட ராஜ்நாத் சிங்கே, முதல் தேர்வாக இருந்தார்.
- கலைஞரை இன்று இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்று இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலவேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்த கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரே வந்திருப்பது மிக மிக மிக பொருத்தமானது.
பல அரசியல் மாறுபாடு இருந்தாலும் நாணயம் வெளியிட்ட ராஜ்நாத் சிங்கே, முதல் தேர்வாக இருந்தார். அனைத்து கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் நாணயம் வெளியிடப் பொருத்தமானவர்
'நா-நயம் மிக்க தலைவரான கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது, நாம் கொண்டாடிய கலைஞரை இன்று இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட அனுமதி அளித்த ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி" என்று அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்