என் மலர்
நீங்கள் தேடியது "யானை"
- ஏதோ விபரீதம் என தெரிந்த யானை சாலையின் ஓரமாக ஒதுங்கி அப்படியே நின்றது.
- யானை உரிமையாளரும், வனத்துறை அலுவலரும் மதுபோதையில் யானையின் மீது படுத்து கிடந்த பாகனை கீழே இறக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான அனுபாமா என்ற பெண் யானை உள்ளது. இந்த யானையை நேற்று காலையில் பாகன் மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார். அருமனை அருகே அண்டுகோடு பகுதியில் யானையின் உரிமையாளர் மகள் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான இடத்தில் யானைக்கு தென்னை ஓலை மற்றும் அதற்கு தேவையான உணவுகளை கொடுத்து விட்டு மாலையில் பாகன் யானையை திரும்ப திற்பரப்புக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது பாகன் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் திடீரென அண்டுகோடு பகுதியில் வைத்து மதுபோதையில் இருந்த பாகன் யானை மீது படுத்து தூங்கினார். அப்போது பாகனுடைய கையில் இருந்த அங்குசம் கீழே விழுந்தது. அந்த அங்குசத்தை யானை எடுத்து பாகனிடம் கொடுத்தது. பாகன் வாங்காததால் அங்குசம் மீண்டும் கீழே விழுந்தது. இதனால் ஏதோ விபரீதம் என தெரிந்த யானை சாலையின் ஓரமாக ஒதுங்கி அப்படியே நின்றது.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து அப்பகுதியினர் அருமனை போலீசுக்கும், களியல் வனச்சரகத்துக்கும் தகவல் தொிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், வனச்சரக அலுவலர் அப்துல் காதர் முகைதீனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் யானையின் உரிமையாளருக்கு தகவல் தொிவித்து அவரும் வரவழைக்கப்பட்டார்.
இதையடுத்து யானை உரிமையாளரும், வனத்துறை அலுவலரும் மதுபோதையில் யானையின் மீது படுத்து கிடந்த பாகனை கீழே இறக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர் இறங்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து மது போதையில் இருந்து தெளிந்த பாகனை கீழே இறக்கினார்கள். இதையடுத்து வனத்துறையினரும், யானை உரிமையாளரும் யானையை வாகனத்தில் ஏற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் பாகனை விட்டுவிட்டு யானை வாகனத்தில் ஏற மறுத்து பிடிவாதம் பிடித்தது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து யானையை அண்டுகோடு பகுதியில் இருந்து அருமனை வழியாக திற்பரப்புக்கு நடத்தி கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் யானையும் பாகனும் முன்னே நடந்து செல்ல வனத்துறையினரும், உரிமையாளரும் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். ஒரு வழியாக யானையை திற்பரப்புக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதுகுறித்து வனத்துறையினர் யானை உரிமையாளர் மற்றும் பாகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சதய விழா கொண்டாடப்படும் ஒரே மன்னர் ராஜராஜ சோழனுக்கு மட்டும் தான்.
- யானைகளில் வலம் வந்த சோழன் இடத்தில் நாம் வசிப்பது பெருமை.
தஞ்சாவூர்:
மாமன்னர் ராஜ ராஜ சோழனின் 1037-வது சதய விழா இன்று தஞ்சை பெரிய கோவிலில் தொடங்கியது. நாளை வரை இந்த விழா நடைபெறுகிறது. இன்று முதல் நாள் விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக நடைபெற்ற மேடை நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-
மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். எத்தனை மன்னர்கள் ஆண்டிருந்தாலும் சதய விழா கொண்டாடப்படும் ஒரே மன்னர் மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு மட்டும் தான். அவர் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு ஆட்சி நடத்தினார். காலத்தால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களை தந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன். இதற்கு தஞ்சை பெருவுடையார் கோவிலே சான்று. 1000 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் மாமன்னர் குதிரை, யானைகளில் வலம் வந்திருப்பார். அந்த இடத்தில் தற்போது நாம் நிற்கிறோம். இது நமக்கெல்லாம் பெருமை. ஒரு மன்னர் போர் தொடுக்கும்போது படைகளுக்கு பின்னால் நிற்க கூடாது. முன் நின்று வழி நடத்த வேண்டும். அப்படித்தான் மாமன்னர் தமது படையை முன்னே நின்று வழி நடத்தியுள்ளார். பல போர்களில் வெற்றி கண்டுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 ஆண்டுகளில் ரூ.9 லட்சம் செலவில் சிகிச்சை அளித்துள்ளனர்.
- கடந்த 2020 மே முதல் கண் குறைப்பாட்டுக்காக உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மதுரை
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். வீதி உலாவின் போது சுவாமி முன்பு செல்வதற்காக யானை, ஒட்டகம் மற்றும் காளை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
பெண்யானை
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கடந்த 2000-ம் ஆண்டு அருணாசல பிரதேசம் மாநிலத்தில் இருந்து பாா்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டு கோயில் நிா்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பார்வதிக்கு கடந்த 2020-ம் ஆண்டு இடது கண்ணில் பாா்வை குறைபாடு ஏற்பட்டது. எனவே அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது தவிர பார்வதிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே பாா்வதிக்கு 2 கண்களிலும் கண்புரை ஏற்பட்டு வெண்படலம் உருவானது. எனவே சென்னையில் இருந்து வந்த நிபுணர் குழு, மதுரையில் உள்ள கால்நடை டாக்டர்களுடன் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்தனா். ஆனாலும் சிகிச்சையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை.
எனவே தாய்லாந்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் பிரத்யேக மருத்துவ குழுவினா் மதுரை வந்து சிகிச்சை வழங்கி சென்றனர்.யானை பாா்வதிக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் எவ்வளவு செலவு ஏற்பட்டது? தாய்லாந்து மருத்துவக் குழுவினருக்கு எவ்வளவு தொகை தரப்பட்டது? என்பவை தொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது.
அதற்கு கோவில் நிா்வாகம் கொடுத்த பதிலில், யானை பாா்வதிக்கு கடந்த 2020 மே முதல் கண் குறைப்பாட்டுக்காக உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை மருந்துகள் வாங்கியது, வெளிநாட்டு- உள்நாட்டு மருத்துவா்கள் விமான கட்டணம் உள்பட மொத்தம் ரூ. 9,08,018 செலவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஹெர்பீஸ் என்ற வைரஸ் தாக்கி யானைக்குட்டிகள் உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது.
- முதலில் யானை குட்டியின் தோல் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த வைரஸ், பின்னர் தீவிரமடைந்து 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனப்பகுதியில் கேரள மாநிலத்தின் எல்லையான செம்பக்காடு, மறையூர், மூணார் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறு குண்டல எஸ்டேட் பகுதியில் அம்மாநில வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 3 யானைக்குட்டிகள் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் உயிரிழந்த யானைக்குட்டிகளின் உடல்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் ஹெர்பீஸ் என்ற வைரஸ் தாக்கி யானைக்குட்டிகள் உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது. இந்த ஹெர்பீஸ் நோய் தொற்றானது 1990 ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட தொற்று நோய் என கண்டறியப்பட்டது.
முதலில் யானையின் தோல் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த வைரஸ், பின்னர் தீவிரமடைந்து 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்த வைரஸ் தொற்றால் ஒரே வாரத்தில் 3 ஆண் குட்டியானைகள் உயிரிழந்தது கேரள வனத்துறை மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதி யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி சுழற்சி முறையில் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகம் கேரள வனப்பகுதியான செம்பக்காடு, மறையூர், மூணார் பகுதியை ஒட்டி உள்ளதால் யானைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய உடுமலை வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ் ராம் தலைமையில் வனத்துறை அதிகாரிகள், வேட்டை தடுப்பு காவலர்கள் உடுமலை தமிழக-கேரள வனப்பகுதியில் யானைகளின் நட மாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- விருதுநகருக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட அந்த யானையை கீழே இறக்க முயற்சித்தனர்.
- ஏற்கனவே இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தபோது கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது.
விருதுநகர்:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விருதுநகரில் உள்ள ஒரு கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ராஜபாளையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான யானை வரவழைக்கப்பட்டது.
விருதுநகருக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட அந்த யானையை கீழே இறக்க முயற்சித்தனர். இறக்கிய பின்னர் அந்த யானை, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு தரையில் படுத்துக்கொண்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் கால்நடை துறை இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் கோவில் ராஜா மற்றும் டாக்டர்கள் விரைந்து வந்து யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
இதுபற்றி கால்நடைத்துறை அதிகாரி கூறியதாவது:-
ஏற்கனவே இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தபோது கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அப்போதும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதே யானைக்கு மூன்று மாதம் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனாலும் யானையின் உரிமையாளர்கள் தொடர்ந்து இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு யானையை அழைத்து வரும் நிலை உள்ளது. தற்போதும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. யானைக்கு 56 வயதாகிறது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளிப்பட்டி, ஆண்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இன்று காலை இரண்டு காட்டு யானைகள் புகுந்தன.
- இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எல்லைபகுதிய்ல் காடுகள் இருப்பதால் அடிக்கடி உணவு தேடியும், குடிநீருக்காகவும் காட்டு யானைகள் ஊருக்கு புகுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் அந்த யானைகள் வயல்கள், தோட்டங்களில் புகுந்து பயிர்களை தின்று மிதித்து நாசம் செய்து விடுகின்றன.பின்னர் வனத்துறையினர் வந்து அந்த யானைகளை காட்டு பகுதிக்குள் மீண்டும் திருப்பி அனுப்புவர்.
இது போன்ற காட்டு யானைகளால் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எப்போதுமே பீதியுடன் வசிக்கும் நிலைதான் உள்ளது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பாரபட்டி அருகே உள்ள சவுளூர், கருப்பனம்பட்டி, பள்ளிப்பட்டி, ஆண்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இன்று காலை இரண்டு காட்டு யானைகள் புகுந்தன.
அவை ஊருக்குள் புகுந்து வீதிகளில் உலா வந்தன. இதனால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வாகன ஓட்டிகள் வந்த வழியே திரும்பி சென்றனர்.
இது குறித்து வன துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வந்து இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர்.
- தஞ்சை பெரிய கோவிலில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மகா நந்திக்கு 2 டன் அளவிலான காய்கறி, பழம், இனிப்பு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
- இந்த கோவில் கஜ பூஜை செய்வதற்கு15 வருடங்களாக யானை இல்லை, யானை இல்லாதது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மகா நந்திக்கு 2 டன் அளவிலான காய்கறி, பழம், இனிப்பு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. 108 பசுக்களுக்கு கோ பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அ.ம.மு.க. மாநகர செயலாளர் ராஜேஸ்வரன் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு மக்கள் நோய் நொடியின்றி எல்லா செல்வங்களும் பெற, விவசாயம் செழிக்க, நீர் பற்றாக்குறை இருக்க கூடாது. அனைத்து ஜீவ நாடிகள் நன்றாக வாழ வேண்டும் என கோரிக்கை வைத்து கோ பூஜை சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
தஞ்சை பெரிய கோயில் உலகப் புகழ் பெற்றது .
இந்த கோவில் கஜ பூஜை செய்வதற்கு15 வருடங்களாக யானை இல்லை.
யானை இல்லாதது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. தஞ்சை மக்களுக்கும் பெரிய கோயிலுக்கும் புகழ் சேர்க்கும் வகையில் பெரிய கோயிலுக்கு யானை அளிக்குமாறு தமிழக அரசுக்கு தஞ்சை மக்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.
தஞ்சை பெரிய கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மாற்று பாதை அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துதிக்கையை உயர்த்தி விநாயகரை யானைகள் வழிபட்டன.
- யானைகள் துதிக்கையால் தண்ணீரை விநாயகர் மீது ஊற்றி அபிஷேகம் செய்தன.
கோவை :
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பை அடுத்த கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து அதற்கு பயிற்சி அளித்து வளர்த்து வருகின்றனர். மேலும் கும்கி யானைகளும் உள்ளன. ஆண்டுதோறும் பொங்கலுக்கு மறுநாள் யானை பொங்கல் விழா கொண்டாடப்படும்.
அதன்படி கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில் யானை பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மலைவாழ் மக்களுடன் சுற்றுலா பயணிகள் சேர்ந்து பொங்கல் வைத்தனர். அதை தொடர்ந்து முகாமில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக வளர்ப்பு யானைகள் துதிக்கையால் தண்ணீரை விநாயகர் மீது ஊற்றி அபிஷேகம் செய்தன. இதை தொடர்ந்து யானைகள் துதிக்கையை தூக்கி விநாயகரை வழிபட்டன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோழிகமுத்தி, வரகளியாறு முகாம்களில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கலீம், கபில்தேவ், முத்து ஆகிய யானைகள் காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் காரணமாக அந்த 3 யானைகளும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளவில்லை. விழாவில் யானைகளுக்கு ஆப்பிள், கரும்பு, வாழைப்பழம், பொங்கல், ராகி உள்ளிட்டவை வழங்கப்பட்டன என்றனர்.
- ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 55 வயதுடைய மங்களம் என்ற பெண் யானை உள்ளது.
- ரூ. 8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், நீச்சல் குளம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம்:
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 55 வயதுடைய மங்களம் என்ற பெண் யானைக்கு கோவில் வளாகத்திலேயே நன்கொடையாளர் ஏற்பாட்டில் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், நீச்சல் குளம் அமைக்கப்பட்டு கான்கீரிட் தளமும், நீச்சல் குளம் கட்டப்பட்டு பாதுகாப்பான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் குளத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம் எம்.பி, அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் உமாதேவி, கோவில் செயல் அலுவலர்கள் ஆறுமுகம், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- காட்டு யானைகள் விரட்டியடிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
- ஈச்சம்பள்ளம் வனப்பகுதியில் சுற்றிதிரிந்த இரண்டு காட்டு யானைகளில் ஒரு காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.
பாப்பாரப்பட்டி:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் விளைப்பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்திருந்தனர். காட்டு யானைகள் விரட்டியடிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையி்ல் அச்சுறுத்தி வந்த காட்டுயானைகளை பிடிக்க வனத்துறையினர் தி்ட்டமிட்டு, ஆனைமலை யானைகள் முகாமிலிருந்து சின்னதம்பி என்ற கும்கி யானையினை இரண்டு நாட்களுக்கு முன்னர் பாப்பாரப்பட்டிக்கு வரவழைத்தனர்.
பின்னர் காட்டு யானைகளை பிடிக்கும் பணியினை வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
மூன்றாவது நாளான இன்று காலை பெரியூர் அருகே ஈச்சம்பள்ளம் வனப்பகுதியில் சுற்றிதிரிந்த இரண்டு காட்டு யானைகளில் ஒரு காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.
யானை மயக்கமடைந்ததும் கும்கி யானை உதவியுடன் காட்டு யானையினை தயாராக இருந்த வாகனத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஏற்றி முதுமலை காப்பு காட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.
- வெளியேறும் உபரி நீர் தொட்டியில் நீர் அருந்திவிட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கிறது.
- ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் சாலையை கடந்து செல்லும் யானையை ஆர்வத்துடனும் பயத்துடனும் அங்கேயே காத்திருந்து பார்த்து செல்கின்றனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், சுற்றிலும் இயற்கை எழில் சூழ்ந்த மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளைக் கொண்ட ஒரு வனப்பகுதியாக உள்ளது. இங்குயானைகள், காட்டெருமைகள், மான்கள், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
கோடை காலத்தில் தான் யானைகள் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியில் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வனப் பகுதிக்குள் இருந்து வெளியேறும் யானைகள் நடமாட்டம் பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி சுற்று வட்டாரங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் கர்நாடகா வனப்பகுதியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வர தொடங்கியுள்ளது.
இவ்வாறு வரும் இந்த யானைகள் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி பென்னாகரம் - ஒகேனக்கல் சாலையை கடந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் தொட்டியில் நீர் அருந்திவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கிறது.
இவ்வாறு யானைகள் வரும் நேரங்களில் அவ்வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையை கடந்து செல்லும் யானையை ஆர்வத்துடனும் பயத்துடனும் அங்கேயே காத்திருந்து பார்த்து செல்கின்றனர்.
- பெரியார் நகர் பகுதிக்கு சென்ற காட்டு யானை வனப்பகுதிக்குள்ளும் காய்கறி தோட்டத்திற்குள் மாறி மாறி சுற்றி திரிந்தது.
- காட்டு யானையை விரட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மஞ்சூர் பகுதிக்கு வந்த காட்டு யானை அந்தப் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் மற்றும் காய்கறி தோட்டங்களில் சுற்றித்திரிந்து வருகிறது. மேல்குந்தா பகுதியை சேர்ந்த குமார் என்ற விவசாயியின் தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் கேரட் பயிர்களை தின்று மிதித்தும் நாசம் செய்தது. இரவு முழுவதும் அட்டகாசம் செய்த யானை அதிகாலையிலேயே தோட்டத்தில் இருந்து வெளியேறியது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மேல்குந்தா பகுதியில் இருந்து பெரியார் நகர் பகுதிக்கு சென்ற காட்டு யானை வனப்பகுதிக்குள்ளும் காய்கறி தோட்டத்திற்குள் மாறி மாறி சுற்றி திரிந்தது. இதைத்தொடர்ந்து நேற்று தொட்ட கம்பை சேரனூர் பகுதிக்குள் விழுந்து அங்கும் மழை காய்கறிகள் மற்றும் தேயிலை தோட்டங்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டு யானையை விரட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் பட்டாசுகள் வெடித்தும் தகரங்களை தட்டியும் சத்தம் எழுப்பி வருகின்றனர். ஆனாலும் ஒற்றை காட்டு யானை என்பதால் அருகில் செல்ல பயந்து கொண்டு தூரத்திலிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காட்டு யானையால் வேறு ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து சீனிவாசன் கூறுகையில் கேரள மாநிலம் இணைய சீகை பகுதியில் இருந்து தனியாக வந்துள்ள இந்த காட்டு யானைக்கு அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம், இரவு நேரத்திற்குள் தோட்டத்திற்குள் வந்து கேரட் பயிர்களை சாப்பிட்டு விட்டு பகல் நேரத்திற்குள் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இருந்தாலும் அந்த யானையை அடர்ந்த விரட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.