search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train"

    • போலீசார் 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

    நெல்லை:

    சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று காலை சென்னையில் இருந்து வழக்கம் போல் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயிலில் கார்டுக்கு முந்தைய முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு நேற்று இரவு ரெயில் வந்தபோது அந்த முன்பதிவில்லாத பெட்டியில் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சிலர் அதில் ஏறியுள்ளனர். அப்போது அவர்களுக்கும், ரெயிலில் ஏற்கனவே பயணித்த கேரளாவை சேர்ந்த பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அந்த ரெயில் நெல்லை சந்திப்பில் இருந்து 9 மணி அளவில் மீண்டும் புறப்பட்டது. அப்போது அவர்கள் இடையே தகராறு முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதைக்கண்ட சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் நெல்லை மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இருபுறத்தில் கேட் மூடப்பட்டு இருந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வந்ததும், ரெயிலில் இருந்து 4 பேர் இறங்கினார்கள்.

    அதில் 2 வாலிபர், 2 இளம்பெண்கள் ஆகியோரும் திருச்சூரை சேர்ந்த நடன கலைஞர்கள் என்பதும், அவர்கள் கோவில்பட்டியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மதுபோதையில் சொந்த ஊருக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் ரெயிலை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து போலீசார் 4 பேரிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இணையதளத்தில் வித்தியாசமான, சுவாரஸ்யமான சில நேரங்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான வீடியோக்கள் உலா வருவது வழக்கம்.
    • ஜம்முவில் இருந்து கத்துவாவிற்கு செல்லும் ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் திடீரென வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குகின்றனர்.

    இணையதளத்தில் வித்தியாசமான, சுவாரஸ்யமான சில நேரங்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான வீடியோக்கள் உலா வருவது வழக்கம். அந்த வகை வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பத் தவறுவதில்லை.

    வியக்க வைக்கும் இந்த வீடியோக்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளும் எழாமலில்லை. அந்த வகையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஜம்முவில் இருந்து கத்துவாவிற்கு செல்லும் ரயிலில் உள்ள பொதுப் பெட்டியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் திடீரென வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குகின்றனர்.

    அவர்களது முக பாவனைகள் வினோதமாக மாறுகிறது. தங்களது உடலை வளைத்து உறுமுவது போன்ற சத்தத்தை வெளியிடுகின்றனர். பேய் பிடித்தது போல அவர்கள் நடந்துகொள்கின்றனர். ஆனால் அருகில் உள்ளவர்கள் எந்த பயமும் இல்லாமல் தங்களது இடங்களிலேயே அமர்ந்து அந்த பெண்களை வேடிக்கை பார்க்கின்றனர்.

     

    இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் அந்த பெண்களை நம்புவதாக இல்லை. டிக்கெட் எடுக்காமல் டிடிஇ இடமிருந்து தப்பிக்கவே இப்படியொரு நாடகத்தை அந்த பெண்கள் அரங்கேற்றியுள்ளனர். அதனாலேயே அருகில் உள்ளவர்கள் பயப்படவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
    • ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.

    சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார ரெயில்கள் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டாலோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோது வழக்கம்.

    ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். இது குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுவதுடன் பயணிகளுக்கு பெரிய சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விடுவதும் வழக்கம்.

    இந்நிலையில் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார ரெயில் சேவை இயங்காது. சென்னை கடற்கரையில் இருந்து நண்பகல் 12.40- க்கு புறப்படும் மின்சார ரெயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக தங்களது பயணத்தை திட்டமிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    12CNI0110502024: சென்னை எழும்பூரில் இருந்து கன்னியா குமரிக்கு தினமும் கன்னியாகுமரி அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. மாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காைல 5.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். விரைவாக வும், சரியான நேரத்துக்கும் சென்று விடுவதால் தெ

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் கன்னியாகுமரி அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    மாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 5.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். விரைவாகவும், சரியான நேரத்துக்கும் சென்று விடுவதால் தென் மாவட்ட பயணிகள் இந்த ரெயிலில் பயணிப்பதையே விரும்புகிறார்கள். எனவே தினமும் இந்த ரெயில் நிரம்பி வழியும்.

    இதே போல் மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு சென்னை வந்தடையும். இதனால் பல்வேறு அலுவல்களுக்கு செல்பவர்களும் இந்த ரெயிலையே நம்பி வருகிறார்கள்.

    தினமும் கன்னியாகுமரி சென்றடைந்ததும் இந்த ரெயில் நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிப்பு பணிகள் மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் நடக்கும்.

    பின்னர் மாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கன்னியாகுமரி-சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்.12634) என்று சென்னைக்கு புறப்படும்.

    இந்த ரெயில் ரேக்குகள் பகலில் சும்மா நிற்பதாக சொல்லி பெங்களூரு-கன்னியாகுமரி ரெயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    அதாவது காலை 8 மணிக்கு பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைந்ததும் அங்கிருந்து 5.30 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

    பெங்களூரில் இருந்து வரும் ரெயில் தாமதமானால் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு புறப்படுவதும் தாமதமாகும். சுமார் 2 மணி நேரம் தாமதம்.

    அது மட்டுமல்ல பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்றதும் எவ்வித பராமரிப்பும், சுத்தமும் செய்யாமல் சென்னைக்கு புறப்படுகிறது. இது பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அங்கு எந்த பராமரிப்பும் இல்லாமல் உடனடியாக பெங்களூரு புறப்பட்டு செல்கிறது.

    ரெயில்வே துறைக்கு பெங்களூரு-கன்னியாகுமரி வழித்தடத்தில் இயக்கப்பட்ட ஒரு ரேக் அதே போல் கன்னயாகுமரி-சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்ட ஒரு ரேக் மிச்சப்படும்.

    ஆனால் 2 ரேக்கை மிச்சப்படுத்தி 2 ஆயிரம் பயணிகளை ரெயில்வே துறை தவிக்க விடுவது நியாயம்தானா? முன்பு போல் மீண்டும் இயக்காவிட்டால் தென் மாவட்ட மக்கள் போராட்டம் நடத்த தயாராகிறார்கள்.

    • ரெயிலில் 3 நேரமும் சைவ உணவுகளுடன் பயணத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
    • புண்ணிய யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தென் தமிழக பாரம்பரிய உணவுகள் தயாரித்து வழங்கப்படும்.

    திண்டுக்கல்:

    ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. அது தற்போது ஜூன் 6-ந் தேதி நெல்லையில் இருந்து புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் 500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட உள்ளது.

    நெல்லையில் தொடங்கி விருநகர், மதுரை, சென்னை வழித்தடத்தில் 16 இடங்களில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புண்ணிய தலங்களான காசி, அயோத்தி, திருவேணி சங்கமம், கயா போன்ற இடங்களுக்கு செல்கிறது. 16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் 3 நேரமும் சைவ உணவுகளுடன் பயணத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாவலர்கள் பணியில் இருப்பார்கள். புண்ணிய யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தென் தமிழக பாரம்பரிய உணவுகள் தயாரித்து வழங்கப்படும்.

    இதில் பயணிக்க பெரியவர்களுக்கு ரூ.18650, குழந்தைகளுக்கு ரூ.17560 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன் பதிவு தற்போதே தொடங்கி விட்டதால் பயணிகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் ரிஸ்வானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் இருந்து காட்பாடி நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    இதில் ரிஸ்வான் (வயது 22) என்பவர் பொதுப்பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். சிக்னல் காரணமாக மேல்பாக்கத்தில் ரெயில் நின்றது.

    வெகு நேரமாக ரெயில் செல்லாததால் பொதுப் பெட்டியில் பயணம் செய்த ரிஸ்வான் ரெயிலில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் முன்பதிவு செய்த பெட்டியின் அருகே சென்றார்.

    ரெயில் அங்கிருந்து செல்லாததால் ஆத்திரம் அடைந்த ரிஸ்வான் கீழே இருந்த கல்லை எடுத்து முன்பதிவு பெட்டியின் கழிவறையின் கண்ணாடி மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் கழிவறையின் கண்ணாடி உடைந்தது.

    சிறிது நேரத்திற்கு பின்பு ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ரிஸ்வானை பிடித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ரெயில்வே போலீசார் ரிஸ்வானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களுரு:

    ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர்கள் லோகேஷ் (23) கால்டாக்சி டிரைவர். பாலசுப்ரமணியம் (22), சசிகுமார் (20). நண்பர்களான இவர்கள் 3 பேரும் வேலை தேடி பெங்களூருக்கு வந்தனர்.

    இவர்கள் 3 பேரும் பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே உள்ள சின்னப்பனஹள்ளி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் இரவு இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் யஷ்வந்தப்பூரியில் இருந்து கண்ணூர் நோக்கி ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகத்தில் வந்து கொண்டு இருந்தது. ரெயில் வருவதை அவர்கள் கவனிக்கவில்லை. ரெயில் லோகா பைலட் அதிவேகமாக ரெயிலை இயக்கியதால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் 3 பேரும் அடுத்தடுத்து தூக்கி வீசப்பட்டனர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரெயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌
    • விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் வழியாக கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி தாம்பரம்-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (06001) ஏப்ரல் 18 மற்றும் 20-ந்தேதி ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி-தாம்பரம் சிறப்பு ரெயில் (06002) ஏப்ரல் 19 மற்றும் 21-ந்தேதி ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    இந்த ரெயில்கள் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 19 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரெயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

    சென்னை எழும்பூர்-கோயம்புத்தூர் சிறப்பு ரெயில் (06003) சென்னையில் இருந்து ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06004) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

    இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரெயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
    • யணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    பெரும்பாவூர்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் இருந்து நேற்று காலை 9.30 மணியளவில் விரைவு ரெயில் (ரெயில் எண்.16329) மதுரை நோக்கி புறப்பட்டது. 6-வது பெட்டியில் மதுரை சின்ன கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 23) என்பவர் பயணம் செய்தார். தொடர்ந்து எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்தது. உடனே கார்த்திக் மீட்கப்பட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சு மூலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த ரெயில் பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, ரெயில்வே ஊழியர்கள், போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • தட்சிணாமூர்த்தி தனது வீட்டு தேவைக்காக கடன் வாங்கியிருந்ததாகவும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
    • மன உளைச்சலில் இருந்த வரலட்சுமி தனது தாயாரிடம் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு, மகன், மகளுடன் கோவைக்கு வந்துள்ளார்.

    கோவை:

    சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 50). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி வரலட்சுமி (45). இவர்களுக்கு யுவராஜ் (16)என்ற மகனும், ஜனனி (15) என்ற மகளும் இருந்தனர். வரலட்சுமி தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் யுவராஜ் 11-ம் வகுப்பும், ஜனனி 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    தட்சிணாமூர்த்தி தனது வீட்டு தேவைக்காக கடன் வாங்கியிருந்ததாகவும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில், கடந்த 28-ந் தேதி தட்சிணாமூர்த்தி தனது மனைவியிடம் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு வரலட்சுமி துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    கணவர் மாயமானதில் இருந்தே வரலட்சுமியும், அவரது குழந்தைகளும் கடும் மன உளைச்சலில் இருந்தனர். அவர்களுக்கு வரலட்சுமியின் தாயார் தாராபாய் ஆறுதல் கூறி வந்தார்.

    கடந்த 29-ந் தேதி வரலட்சுமி, தனது தாயாரிடம் வீட்டிலேயே இருந்தால் மிகவும் மன உளைச்சலாக உள்ளது. அதனால் நானும், குழந்தைகளும் சிங்கபெருமாள் கோவிலுக்கு சென்று வருகிறோம் என தெரிவித்தார். அவரும் போய்விட்டு வாருங்கள் என அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து வரலட்சுமி, தனது மகன் யுவராஜ், மகள் ஜனனி ஆகியோருடன் கோவிலுக்கு சென்றார். அன்றைய தினம் முழுவதையும் அங்கேயே இருந்தார். மதியத்திற்கு பிறகு அவரது தாயார் போன் செய்து ஏன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என கேட்டார். அதற்கு வரலட்சுமி தான் கோவிலில் தங்கி விட்டு மறுநாள் வருகிறேன் என தெரிவித்தார்.

    இரவு தாராபாய் தனது மகளை செல்போனில் அழைத்தார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பதறிபோன அவர் உடனே தனது உறவினர்களுடன் கோவிலுக்கு சென்று தேடி பார்த்தார். அங்கு அவர்கள் இல்லை. எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் தாராபாய் சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வரலட்சுமி மற்றும் அவரது மகன், மகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கோவை நஞ்சுண்டாபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகே 3 பேர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் டி.எஸ்.பி. யாஸ்மின், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் உடல்களை பார்வையிட்டு, அவர்கள் யார் என்பதை அறிய அங்கு ஏதாவது கிடக்கிறதா? என தேடி பார்த்தனர்.

    அப்போது செல்போன் மற்றும் சில பொருட்கள் இருந்தன. அதனை வைத்து விசாரித்த போது, இறந்து கிடந்தது மாயமான வரலட்சுமி, அவரது மகன் யுவராஜ், மகள் ஜனனி என்பது தெரியவந்தது.

    மன உளைச்சலில் இருந்த வரலட்சுமி தனது தாயாரிடம் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு, மகன், மகளுடன் கோவைக்கு வந்துள்ளார்.

    கோவைக்கு வந்த அவர்கள் பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். கணவர் மாயமானதாலும், கடன் தொல்லை அதிகரித்ததாலும் இனி இந்த உலகில் வாழ்வதை விட தற்கொலை செய்து கொள்ளலாம் என வரலட்சுமி முடிவெடுத்துள்ளார். அதன்படி கோவை நஞ்சுண்டாபுரம் ரெயில்வே மேம்பாலம் பகுதிக்கு தனது குழந்தைகளுடன் வரலட்சுமி சென்றார்.

    அந்த வழியாக கேரள மாநிலம் சொர்னூர் நோக்கி ஒரு ரெயில் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து வரலட்சுமி, தனது குழந்தைகளுடன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • ரெயிலில் பயணித்த 2 பயணிகள், அதே ரெயிலில் சிக்கி இறந்துவிட்டனர்.
    • 2 பயணிகள் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம காசர்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    சென்னையில் இருந்து கேரள மாநிலம் மங்களூருவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று இந்த ரெயில் மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் பயணித்த 2 பயணிகள், அதே ரெயிலில் சிக்கி இறந்துவிட்டனர்.

    ஜார்க்கண்ட் மாநில எல்லையில் உள்ள ஜாஷ்பூரை சேரந்தவர் சுஷாந்த் சாஹூ(வயது41). இவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இவர் மங்களூருவில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் பயணித்துள்ளார்.

    அந்த ரெயில் காசர்கோடு ரெயில் நிலையத்துக்கு வந்தபோது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக ரெயிலில் இருந்து சுஷாந்த் சாஹூ இறங்கியுள்ளார். அப்போது ரெயில் புறப்பட்டுவிட்டது. இதனால் ஓடும் ரெயிலில் அவர் ஏற முயன்றார். அப்போது சுஷாந்த் சாஹூ தவறி விழுந்து ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கினார்.

    இதில் படுகாயமடைந்த அவர் உடல் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மங்களூரு-சென்னை ரெயில் நிறுத்தப்பட்டது. சுஷாந்த் சாஹூவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காசர்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அந்த ரெயில் புறப்பட்டது. காசர்கோடு-கும்ப்ளா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது அந்த ரெயிலில் இருந்து ஒரு வாலிபர் விழுந்தார். இதனை அந்த பெட்டியில் பயணித்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் ரெயில்வே தண்டவாளத்தில் சோதனை செய்தனர். அப்போது காசர்கோடு ரெயில் நிலையம் அருகே அந்த வாலிபர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கண்ணூர் குத்து பரம்பு பகுதியை சேரந்த ரபி என்பவரிரன் மகன் ரனீம்(18) என்பது தெரிய வந்தது.

    அவர் மங்களூருவில் உள்ள என்நிஜூயரிங் கல்லுரியில் படித்து வந்திருக்கிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து இறந்துவிட்டார். அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம காசர்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.
    • சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது வேப்பம்பட்டு ரெயில் நிலையம். இதன் அருகே ரெயில்வே கேட் உள்ளது.

    இன்று காலை 9.30 மணியளவில் வேப்பம்பட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி திறந்து இருந்த இந்த ரெயில்வேகேட்டை தாண்டி செல்ல முயன்றது.

    ரெயில்வே கேட்டில் தண்டவாளப்பகுதியில் சென்ற போது திடீரென லாரி பழுதாகி நின்றது. லாரியை மேலும் இயக்க முடியாததால் தண்டவாளத்திலேயே நின்றது.

    இதனால் அவ்வழியே மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.

    தொடர்ந்து சென்னைகடற்கரை-திருவள்ளூர் மற்றும் திருவள்ளூர்-சென்னை கடற்கரை மார்க்கத்தில் ரெயில்கள் வந்து கொண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அனைத்து மின்சார ரெயில்கள் மற்றும் சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை அங்கிருந்து அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ரெயில்வே தண்டவாளத்தில் இருந்த லாரியை தள்ளி வெளியேற்றினர். இதன் பின்னரே ரெயில்வே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து காலை 10 மணிக்கு பின்னர் ரெயில் சேவை சீரானது. இதனால் ரெயில்பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரெயில்வே கேட்டில் லாரி பழுதாகி நின்றதும் உடனடியாக ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ×