search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "twin towers"

    • கி.பி. 1109லிருந்து கி.பி. 1119க்கு இடைப்பட்ட காலத்தில் இரட்டை கோபுரங்கள் உருவாக்கப்பட்டன
    • கோபுரத்தை சுற்றி நகர நிர்வாக அமைப்பு உயரமான உலோக தடுப்பு அமைக்க உள்ளது

    வட இத்தாலியில் உள்ள போலோனா (Bologna) நகரில் இரு மிக பெரிய கோபுரங்கள் அருகருகே உள்ளன. உலக அளவில் பல வரலாற்று நூல்கள், குழந்தைகளுக்கான பாடல்களிலும், பயண கட்டுரைகளிலும் இந்த இரு கோபுரங்களுக்குமே சிறப்பான இடம் உண்டு.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோபுரங்களில் சற்று உயரமானது "அசினெல்லி" (Asinelli); உயரம் குறைவானது "கரிசெண்டா" (Garisenda). கி.பி. 1109-ஆம் வருடத்தில் இருந்து கி.பி. 1119-ஆம் வருட காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த இரு உயரமான கோபுரங்கள், இவற்றை உருவாக்கிய குடும்பங்களின் பெயர்களாலேயே வழங்கப்படுகின்றன.

    இதில் சிறிய கோபுரமான கரிசெண்டா, 157 அடி உயரம் உடையது. இதை விட உயரமாக, (சுமார் 200 அடி) இருந்த இந்த கோபுரம் 14-வது நூற்றாண்டில் சரியும் அபாயத்தில் இருந்ததால், அதனை தடுக்க செய்யப்பட்ட கட்டிட பணிகளின் காரணமாக தற்போது உள்ள உயரத்தை அடைந்திருக்கிறது. 


    இந்நிலையில், தற்போது 4 டிகிரி அளவிற்கு சாய்ந்துள்ள கரிசெண்டா, சாய்ந்து கொண்டே வருவது அதிகரித்துள்ளதால், இடிந்து விழ கூடிய அபாயத்தை எட்டியுள்ளதாக கட்டிட வல்லுனர்களின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனை நகர செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    2019லிருந்தே கரிசெண்டா கோபுர கட்டித்தின் உறுதித்தன்மை குறித்து ஆராய்ச்சி செய்து வரும் அறிவியல் வல்லுனர் குழு, இதன் வீழ்ச்சிக்கான அபாயம் குறித்து முன்னரே எச்சரித்திருந்தது.

    கடந்த அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட துல்லிய சென்சார் பதிவுகளின்படி, முன்னெப்போதும் இல்லாத அழுத்தம் அதன் தரைப்பகுதிக்கு தரப்படுவதாகவும், அதன் காரணமாக அடித்தளத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கற்களில் தோன்றியுள்ள விரிசல்கள், மெதுவாக மேலே செங்கற்களுக்கும் பரவும் என இக்குழு தெரிவித்தது.

    இத்தகவலையடுத்து, பாதுகாப்பிற்காக கரிசெண்டா கோபுரத்தை சுற்றி ஒரு குறிப்பிட்ட பகுதி வரை உயரமான உலோக தடுப்பு அமைத்து மக்கள் நடமாட்டம் தடை செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கரிசெண்டா திடீரென விழுந்தாலும், அக்கம்பக்கத்திலுள்ள கட்டிடங்களுக்கு சேதாரம் குறைவாக இருக்கும் என நம்பப்படுகிறது.

    இரு கோபுரங்களையும் இணைக்கும் அனைத்து சாலை போக்குவரத்தையும் நகர நிர்வாக அமைப்பு, மூடி விட்டது. 


    இருப்பினும், கோபுரம் கீழே விழ போகும் நாள் அல்லது மாதம் குறித்து இதுவரை காலவரையறை ஏதும் நிபுணர்களால் குறிப்பிடப்படவில்லை. வல்லுனர்கள், இந்த கோபுரம் 3 மாதத்திலிருந்து 10 வருடங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயம் உள்ளதாக மட்டுமே எச்சரித்துள்ளனர்.

    சுமார் 1000 வருடங்களாக அந்நகர மக்கள் பெருமைப்படும் ஒரு வரலாற்று சின்னமாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கலை வடிவமாகவும் விளங்கி வந்த கோபுரம் விரைவில் இடியும் எனும் செய்தி அந்நகர மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் 17-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. #TwinTowers #NineEleven #WorldTradeCenter
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் உள்ளது. அங்கிருந்த 110 அடுக்கு மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-கொய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு தாக்குதல் நடத்தினார்கள். அதன் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    உலகையே அச்சுறுத்திய இந்த பயங்கரவாத தாக்குதலில் 2997 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் இன்னும் பலர் நடமாட முடியாத நிலையில் உள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பழி வாங்க இத்தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி இக்கொடூர சம்பவம் அரங்கேறியது.

    அமெரிக்காவில் பறந்த 4 பயணிகள் விமானத்தை கடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகள் அவற்றில் இரண்டை நியூயார்க் இரட்டை கோபுரம் மீது மோத செய்தனர். உலகின் வர்த்தக மையமாக விளங்கிய அந்த 2 கோபுரங்களும் அடுத்தடுத்த விமான தாக்குதல்களால் முற்றிலும் நிலை குலைந்து சீட்டுக் கட்டுகள் போல் சரிந்து மண்ணோடு மண்ணாகின.

    இத்தாக்குதலால் ஒட்டு மொத்த அமெரிக்காவும் நிலை குலைந்து போனது. இது ஒருபுறம் இருக்க உலகின் மிக பாதுகாப்பான இடமாக கருதப்பட்ட அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினர்.

    வெர்ஜீனியாவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அமெரிக்காவின் வல்லமைக்கு சவால் விடுப்பதாக அமைந்தது. மேலும் கடத்தப்பட்ட 4-வது விமானத்தை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மீது மோதி வெடிக்க வைக்க முயன்றனர்.

    அதே விமானத்தில் பயணம் செய்த நாட்டுப்பற்று மிக்க அமெரிக்க மக்களால் அந்த சதி முறியடிக்கப்பட்டது. இத்தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவுக்கு 10 பில்லியன் டாலர் (ரூ.67 ஆயிரம் கோடி) வரை இழப்பு ஏற்பட்டது.

    சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா இயக்கம், ஒருகட்டத்தில் அமெரிக்காவையே தனது முதல் எதிரியாக மாற்றி, அதன் மீது தனது கோரக்கரங்களை விரித்தது. 

    அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 19 அல்-கொய்தா பயங்கரவாதிகள் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் பலியாகி விட்டனர். இரட்டை கோபுரம் மீதான தாக்குதல் நடந்து இன்றுடன் 16 ஆண்டுகள் முடிந்து 17-வது ஆண்டு தொடங்குகிறது.

    இருந்தாலும் அதில் உயிர் பிழைத்தவர்கள் உடல்நலக் குறைவால் சிலர் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மார்சி பார்ட்ர்ஸ் என்பவரை சிறந்த உதாரணமாக கூறலாம்.

    இரட்டைக் கோபுரத்தில் பணியாற்றிய இவர் விமானத்தை மோதி பயங்கரவாதிகள் தாக்கியபோது உயிர் பிழைத்தவர்களில் ஒருவர் ஆவார். இரட்டை கோபுரம் தாக்கப்பட்டபோது உடல் முழுவதும் புழுதியால் மூடப்பட்டு இவர் நடந்து வந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ இரட்டை கோபுர தாக்குதலின் கோரத்தை உலகுக்கு உணர்த்தியது.

    தாக்குதலில் உயிர் பிழைத்தபோதும் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தனது சொத்தின் பெரும் பகுதியை மருத்துவத்துக்கே செலவு செய்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்தாக்குதலின்போது உயிர் பிழைத்த நூற்றுக் கணக்கானோர் அதன் தாக்கத்தில் இருந்து மனதளவில் மீளாமல் வாழ்ந்து வருகின்றனர்.

    அல்-கொய்தா பயங்கரவாதிகளால் இடித்து தரைமாக்கப்பட்ட இரட்டை கோபுர கட்டிட இடிபாடுகள் கடந்த 2002-ம் ஆண்டு மே மாதம் வரை அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

    விமானம் மூலம் மோதி சேதப்படுத்தப்பட்ட பென்டகன் கட்டிடம் ஒரு வருடத்தில் சீரமைக்கப்பட்டது. ஏற்கனவே இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம் இருந்த பகுதியின் அருகே 2006-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி புதிதாக ஒரு உலக வர்த்தக மைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.

    அக்கட்டிடம் கட்டும் பணி 8 ஆண்டுகள் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

    தாக்குதல்கள் நடந்த இடங்களில் தற்போது நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நியூயார்க்கில் தேசிய செப்டம்பர் 11 நினைவகம் மற்றும் அருங்காட்சியகமும், வெர்ஜீனியா ஆர்லிங்டன் கவுன்டியில் பென்டகன் நினைவகமும், பென்சில்வேனியா ஷாங்ஸ்வில்லே அருகே உள்ள ஸ்டோனி கிரீக் டவுன் ஷிப்பில் பிளைட் 93 தேசிய நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது.

    தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு தினமான இன்று அங்கு அஞ்சலி கூட்டங்கள் நடந்தன. இதில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு தாங்கள் நேசித்தவர்களை நினைவு கூர்ந்தனர். மானுட உலகில் பயங்கவாதத்தின் கோர முகம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவம் ஒரு சோகமான வலி தரும் உதாரணமாக உள்ளது.
    ×