search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ukraine russia war"

    • உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% சரிவு ஏற்பட்டுள்ளது
    • உக்ரைனுக்கு உதவ இங்கிலாந்தில் சர்வதேச உக்ரைன் மீட்பு மாநாடு 2023

    ரஷியப் படைகளுக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு அதன் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யப்போவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருக்கிறார்.

    ரஷியாவுடனான போரினால் பொருளாதார ரீதியாக உருக்குலைந்திருக்கும் உக்ரைனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடும் நோக்கில், 61 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களும், உலகளாவிய முதலீட்டாளர்களும் லண்டனில் இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். உக்ரைன் எதிர்பார்க்கும் உதவிகளை திட்டமிடுவதற்காக "சர்வதேச உக்ரைன் மீட்பு மாநாடு 2023" என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

    ரஷிய-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% சரிவு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் தனது நிதியாதாரத்தை வலுப்படுத்த தனியார்துறை முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் உதவியை எதிர்பார்க்கிறது. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட முக்கிய பொது சேவைகளை மேம்படுத்த உக்ரைன் உலக வங்கி கடன்களை பெறுவதற்கு இங்கிலாந்தின் ஆதரவு வழிவகுக்கும்.

    இதுகுறித்து ரிஷி சுனக், "ஒரு துடிப்பான, ஆற்றல்மிக்க, ஆக்கப்பூர்வமான மற்றும் அடங்கிப்போக மறுக்கும் நாடு உக்ரைன். எனவே, எங்கள் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் எதிர்தாக்குதலுக்கான எங்கள் ஆதரவை அளித்து இந்த போரில் அவர்கள் வெற்றிபெறும் வரை உக்ரைனுடன் நாங்கள் நிற்போம்" என கூறியுள்ளார்.

    மொத்த ஆண்டு வருமானம் $1.6 டிரில்லியனுக்கும் அதிகமாக உள்ள 38 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், உக்ரைனின் மீட்பு மற்றும் புனரமைப்புக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. விர்ஜின், சனோஃபி, பிலிப்ஸ், ஹூண்டாய் மற்றும் சிட்டி ஆகிய பல பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தகம், முதலீடு, மற்றும் நிபுணத்துவப்பகிர்வு ஆகியவற்றை ஊக்குவிக்க "உக்ரைன் வணிக உடன்படிக்கை" எனும் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

    மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் புனரமைப்புத் திட்டங்களுக்கு உதவ இங்கிலாந்து ஆரம்பகட்டத்தில் 20 மில்லியன் பவுண்டு, பிறகு தனித்தனியாக 250 மில்லியன் பவுண்டு அளவிற்கு மேம்பாட்டு நிதியையும் வழங்கும். அதில் பாதிக்குமேல், ஐக்கிய நாடுகள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளின் மூலம் மனிதாபிமான நோக்கில் முன்னணியில் நின்று சேவையாற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க பயன்படும்.

    ஒட்டுமொத்தமாக, ரஷிய-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு இங்கிலாந்து உக்ரைனுக்கு 347 மில்லியன் பவுண்டு உதவி செய்திருக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது.

    • எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது
    • ரஷிய ராணுவம் வான்வௌயில் இடைமறித்து அழித்தது

    ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் எதிர்தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், ரஷியாவின் தெற்கு எல்லைப்பகுதியான 'பிரையான்ஸ்க்' பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்க வந்த 3 டிரோன்களை ரஷியா அழித்ததாகக் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பிரையான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் கூறியிருப்பதாவது:-

    நோவோசிப்கோவ் மாவட்டத்தில் உள்ள 'ட்ருஷ்பா' எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் நடத்திய தாக்குதலை ரஷிய வான்வெளி பாதுகாப்புப் படைகள் முறியடித்தன. எங்கள் ராணுவத்தின் நடவடிக்கைக்கு நன்றி. இந்த தாக்குதலில் 3 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனாலும், அவர் சேதத்தின் அளவு குறித்து எதுவும் கூறவில்லை.

    ரஷிய- உக்ரைன் போரில் சமீப காலங்களாக டிரோன் மூலம் நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. உக்ரைனின் கிவ் மற்றும் ரஷியாவின் மாஸ்கோ, இரண்டுமே வாரத்திற்கு பலமுறை, சில டிரோன்களை விரட்டுவதாகக் கூறுகின்றன.

    போரில் ஈடுபடும் துருப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய அவசியமான ஒன்று எண்ணெய். இதனால், ரஷிய மண்ணில் எண்ணெய் வசதிகள் உள்ள இடங்கள், உக்ரைனின் டிரோன் தாக்குதல்களின் முன்னுரிமை இலக்குகளாகத் தோன்றுகின்றன.

    கிரிமியா தீபகற்பம், ரஷியாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. இதனை மீட்டெடுக்கப்போவதாக கிவ் (உக்ரைன்) பலமுறை கூறியுள்ளது. இதனால், இந்த இடம் தொடர்ச்சியாக குறிவைக்கப்படுகிறது. இந்த தீபகற்பத்தில் ரஷியப் படைகள், 9 டிரோன்களை வீழ்த்தியதாக, அந்த தீபகற்பத்திற்கு ரஷியாவால் நியமிக்கப்பட்ட கவர்னர், செர்ஜி அக்ஸியோனோவ் வியாழக்கிழமையன்று தெரிவித்தார்.

    கடந்த வாரம், ரஷியாவின் தெற்கு நகரமான, 'வோரோனெஜ்' நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை, ஆளில்லா விமானம் ஒன்று தாக்கி இருவர் காயமடைந்தனர். ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும், 'வோரோனெஜ்' நகரில், டிரோன்கள் பற்றிய முதல் தாக்குதல் குறித்த தகவல் இதுவாகும்.

    வழக்கமாக தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் ரஷியாவின் எல்லை பகுதியில் உள்ள நகரங்களை போல் இல்லாமல், இந்நகரம் ரஷியாவிற்கு உள்ளே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்பிரிக்கா தலைவர்கள் புதின் உடன் பேசுவது எப்படி லாஜிக்கல் ஆகும்
    • புதின் உடன் பேச்சுவார்த்தை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா ஆக்கிரமித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன், பதில்தாக்குதல் நடத்தி ரஷியா ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே ஆப்பிரிக்கா தலைவர்கள் இருநாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர். முதற்கட்டமாக நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தனர். அப்போது அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

    ஆப்பிரிக்கா தலைவர்கள் இன்று ரஷிய அதிபர் புதினை சந்திக்க இருக்கிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:-

    ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பிராந்தியத்தில் இருந்து ரஷிய துருப்புகள் வாபஸ் பெற்ற பின்னரே, அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு உள்ளது. ரஷிய அதிபர் புதினை ஆப்பிரிக்கா தலைவர்கள் சந்திக்க இருக்கிறார்கள். இது அவர்களின் முடிவு. இது எப்படி பொருத்தமுடையதாக இருக்கும். உண்மையிலேயே இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ஆக்கிரமிப்புக்காரர்கள் எங்கள் நிலத்தில் இருக்கும்போது, ரஷியாவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் தயாராகுவது, எங்களது நிலத்தை முடக்குவதாகும். அது எல்லாவற்றையும் முடக்குவதற்கு சமம். இது வலி மற்றும் துன்பம்.

    எங்களுக்கு உண்மையான அமைதி தேவை. அதற்கு எங்களது நிலத்தில் இருந்து ரஷியா துருப்புகள் உண்மையாகவே வெளியேற வேண்டும்.

    இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    ரஷிய துருப்புகள் உக்ரைன் எல்லையில் இருந்து வெளியேறும் வரை புதின் உடன் பேச்சுவார்த்தை இல்லை என்பதில் ஜெலன்ஸ்கி உறுதியாக உள்ளார்.

    • பெலாரஸ்க்கு அணுஆயுதங்களை நகர்த்தும் வேலைதொடங்கிவிட்டது
    • ரஷியாவை தோற்கடிக்க முடியாது என்பதை நினைவூட்ட இந்த நடவடிக்கை

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. தோராயமாக 5-ல் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    அதை மீட்பதற்காக உக்ரைன் தற்போது பதில்தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவதால் ரஷியப் பகுதியில் சேத்திற்குள்ளாகி வருகிறது. உக்ரைன் எதிர்தாக்குதல் அதிகரிக்க, ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    நேற்று ஆப்பிரிக்கா தலைவர்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது கிவ் நகர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

    தெற்கு பகுதியில உக்ரைன் எல்லையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து பாதுகாப்பான பகுதியாக வைத்துக் கொள்ள ரஷிய அதிபர் திட்டமிட்டுள்ளார். உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான பெலாரஸ் ரஷியாவுக்கு உதவி செய்து வருகிறது.

    உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி ரஷியாவை தோற்கடிக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் விரும்புகிறது. இதனால் பெலாரஸில் அணுஆயுதங்களை நிலைநிறுத்தி எச்சரிக்கை கொடுக்க புதின் முடிவு செய்தார். பெலாரஸ் அதிபரும் சம்மதிக்க அதற்கான இடத்தை தயார் செய்து வருகிறது ரஷியா. அணுஆயுதங்களை வைப்பதற்கான இடத்தை அமைத்தபின், அடுத்த மாதம் 7-ந்தேதியில் இருந்து பெலராஸில் அணுஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அணுஆயுதங்கள் பெலாரஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது. பெலாரஸில் அணுஆயுதங்களை நிலைநிறுத்துவதே, மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கை செய்வதற்காகத்தான் என புதின் தெரிவித்துள்ளார்.

    ரஷியாவுக்கு மூலோபாய தோல்வியை ஏற்படுத்த முடியாது என்பதை மேற்கத்திய நாடுகளுக்கு நினைவூட்டுவதற்காக, பெலாரஸுக்கு தந்திரோபாய அணுஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளது என புதின் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஏற்கனவே பெலராஸ்க்கு அணுஆயுதங்களை அனுப்பும் பணி தொடங்கிவிட்டது. இருந்தாலும், தற்போது உக்ரைனுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தும் தேவை இருக்காது. நான் ஏற்கனவே பெலாரஸ் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியது தெரியும். அது நடந்துவிட்டது.

    முதல் அணுஆயுத தடவாளங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இது முதல்முறையின் முதல் பகுதி. கோடைக்காலத்திற்குள் அல்லது இந்த வருட இறுதிக்குள் இந்த வேலை முழுமையாக முடிவடையும் என்றார்.

    • நவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன் எதிர்தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
    • சீனாவும் ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கான முயற்சிகளை செய்து வருகிறது.

    ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளை ஆராய்வதற்காக ஆப்பிரிக்கத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்ட தூதுக்குழுவினருடன் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா இன்று உக்ரைன் வந்து சேர்ந்தார்.

    கீவ் புறநகர் பகுதியான புச்சா பகுதி ரெயில் நிலையம் அருகே, உக்ரைன் சிறப்பு தூதுவர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் தூதுவர்கள் அவரை சந்தித்தனர்.

    பிப்ரவரி 2022ல் உக்ரைனின் முழு அளவிலான படையெடுப்பின் உச்சகட்டமாக, புச்சா பகுதியில் நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தெருக்களிலும், வெகுஜன புதைகுழிகளிலும் சடலமாக கிடந்தனர். அந்த பகுதிக்கு ஆப்பிரிக்க தலைவர் வருகை தந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆப்பிரிக்க தூதுக்குழுவில் ஜாம்பியா, செனகல், உகாண்டா, எகிப்து, காங்கோ குடியரசு மற்றும் கொமோரோ தீவுகள் ஆகிய நாடுகளின் மூத்த அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

    தங்கள் தூதுக்குழுவுடன் தனித்தனியான சந்திப்புகளுக்கு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒப்புக்கொண்டதாக ராமபோசா கடந்த மாதம் கூறியிருந்தார். 

    ரஷியாவின் உயர்மட்ட சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெற்று வரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ஆப்பிரிக்க தூத்துக்குழுவினர் இன்று செல்கிறார்கள். நாளை புதினைச் சந்திக்க தயாராகி வருகின்றனர்.

    ஆப்பிரிக்க தலைவர்கள், சமாதானத்திற்கான முன்னெடுப்புகளைத் தொடங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிராமல், ரஷியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான சர்வதேச தடைகளுக்கிடையே ஆப்பிரிக்காவிற்கு மிகவும் தேவைப்படும் உர ஏற்றுமதிகளுக்கு எவ்வாறு பணம் செலுத்த முடியும் என்பதை மதிப்பிடுவதற்காகவும் பேச்சுவார்த்தை நடத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போருக்கு மத்தியில் உக்ரைனில் இருந்து அதிகளவில் தானிய ஏற்றுமதியை உறுதி செய்வது பற்றியும், அதிக கைதிகளை பரிமாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர்கள் விவாதிக்க உள்ளனர்.

    ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷிய படைகளை வெளியேற்றுவதற்காக, மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட நவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன் எதிர்தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. முன்களப் பகுதியில் 1,000 கிலோமீட்டர் (600-மைல்) அளவுக்கு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆப்பிரிக்காவின் இந்த அமைதி முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

    போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி நீண்ட காலம் நீடிக்கும் என மேற்கத்திய நாடுகளின் ஆய்வாளர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சீனாவும் ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால், ரஷியாவும், உக்ரைனும் போர் நிறுத்தத்திற்கு சம்மதிப்பதற்கான அறிகுறி இல்லாததால், சீனாவின் முயற்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

    • போர் நீடித்தால், சித்ரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலும் பல அறிக்கைகள் வெளிவரலாம்.
    • சித்ரவதை செய்த நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    நியூயார்க்:

    ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது 2022ம் வருடம் பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கையை தொடங்கி முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. ரஷியாவுக்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறது.

    இந்நிலையில், உக்ரைன் போரில் கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் போர்க் கைதிகளை ரஷிய படைகள் சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயல் ரஷிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலாக இருக்கலாம் என ஐ.நா. சபை கூறியுள்ளது.

    இதுபற்றி ஐ.நா. சபையின் அறிக்கையாளரான அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் கூறியிருப்பதாவது:

    உக்ரைனில் உள்ள ரஷியப் படைகள், உக்ரைன் குடிமக்கள் மற்றும் ராணுவ போர்க்கைதிகளை தொடர்ச்சியாக, வேண்டுமென்றே உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக சில அறிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் மூலம் அறிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சித்ரவதை நடவடிக்கைகளில் மின்சார ஷாக் கொடுத்தல், முகத்தை மூடி தாக்குதல் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் ஆகியவை அடங்கும்.

    இந்த குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டால், அவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சித்ரவதையின் ஒரு மாதிரியாகவும் இருக்கலாம் என தோன்றுகிறது. இந்த சித்ரவதைகளை பார்க்கும்போது, உயர் அதிகாரிகளிடமிருந்து நேரடி அங்கீகாரம் பெற்று, வேண்டுமென்றே கொள்கை ரீதியாக செய்ததுபோல் தெரிகிறது.

    சித்ரவதை ஒரு போர்க்குற்றம் மட்டுமின்றி இந்த நடைமுறை மனிதகுலத்திற்கே எதிரான குற்றமாகும். உயர்ந்த இடத்திலிருந்து வந்த உத்தரவு அல்லது அரசின் கொள்கை வழிகாட்டுதலுக்கு கீழ்ப்படிந்து கைதிகளை சித்ரவதை செய்வதை நியாயப்படுத்த முடியாது. சித்ரவதை செய்த நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுபவர்கள், உக்ரைனுக்குள் ரஷியப் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள தங்குமிடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உள் உறுப்புகள் சேதம் அடைந்துள்ளன. எலும்பு முறிவுகள், பக்கவாதம் மற்றும் நாட்பட்ட நோய்களின் தாக்கம் காணப்படுகிறது. சிலர் பிரமை பிடித்தவர்கள் போன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    போர் இன்னும் நீண்ட காலம் நீடித்தால், சித்ரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலும் பல அறிக்கைகள் வெளிவரலாம்.

    பொதுமக்கள் மற்றும் போர்க்கைதிகள் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்படுவதையும் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    மேலும், ஐ.நா. மனித உரிமை நிபுணர்களுடன் இணைந்து ரஷியாவிற்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அதில் தங்கள் கவலைகளை தெரிவித்திருப்பதாகவும் அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.

    • மூன்று ஏவுகணைகள் உக்ரைனின் மத்திய கிழக்கில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள தொழில்துறை நிறுவல்களை தாக்கியது.
    • ஒரு ஆளில்லா விமானம் மட்டும் கிரிமியாவின் மையப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைத் தாக்கியுள்ளது.

    ரஷியா உக்ரைனுக்கு இடையே கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது.

    உக்ரைனும் ரஷியாவின் செயலை தடுக்கும் வகையில் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    குறிப்பாக கடந்த சில வாரங்களாக ரஷியா முக்கிய உக்ரைன் நகரங்களுக்கு எதிராக தீவிர இரவு நேர தாக்குதலை நடத்தி வருகிறது. இதை வெற்றிகரமாக உக்ரைன் எதிர் தாக்குதல் மூலம் முறியடித்து வருகிறது.

    இந்நிலையில், ரஷியா நேற்று இரவு நடத்திய தாக்குதலின்போது உக்ரைன் படை ஒரு ஏவுகணை மற்றும் 20 வெடி பொருட்களை அடங்கிய ஆளில்லா விமானங்களை வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மற்ற மூன்று ஏவுகணைகள் உக்ரைனின் மத்திய கிழக்கில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள தொழில்துறை நிறுவல்களை தாக்கியது.

    இதற்கிடையே ரஷியாவால் நியமிக்கப்பட்ட கிரிமியா ஆளுநர் கூறுகையில், " உக்ரைன் தரப்பில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானங்களில் 9 விமானங்களை ரஷிய படைகள் எல்லையில் வீழ்த்தியது" என்றார்.

    இதில், ஒரு ஆளில்லா விமானம் மட்டும் கிரிமியாவின் மையப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைத் தாக்கியுள்ளது. இதில், பல வீடுகளில் ஜன்னல்கள் சேதமடைந்தது.

    • கருங்கடலில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு கலிபர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • ஒடேசாவில் நடைபெற்ற தாக்குதல் குறித்து அந்த பகுதி நிர்வாகம் முகநூலில் பதிவிட்டுள்ளது.

    ரஷியப் படைகள், தெற்கு உக்ரைனின் நகரமான ஒடேசா மீது இரவோடு இரவாக கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ளது. இன்று அதிகாலை கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள வீடுகளை ஷெல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உக்ரைனுக்கு எதிரான 15-மாத கால போரில் ரஷியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருப்பதாக உக்ரைனின் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    "ஏழு வீடுகளின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர் என்றும் கிராமடோர்ஸ்க் மற்றும் கான்ஸ்டான்டினோவ்கா நகரங்களில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின" என்றும் டொனெட்ஸ்க் பிராந்திய ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.

    ஒடேசாவில் நடைபெற்ற தாக்குதல் குறித்து அந்த பகுதி நிர்வாகம் முகநூலில் பதிவிட்டுள்ளது. ஒரு உணவுக்கிடங்கின் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டனர் என்றும் ஏழு பேர் காயமடைந்தனர் என்றும், வீடுகள், ஒரு கிடங்கு, கடைகள் மற்றும் நகர்ப்புற கடைகள் சேதமடைந்தன என்றும் தெரிவித்திருக்கிறது. மேலும், ஆறு பேர் - காவலர்கள் மற்றும் அருகாமை வீட்டில் வசிப்பவர்கள் - காயமடைந்தனர் என்றும் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களில், உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி ஈடுபட்டு வருவதாகவும், அந்த பதிவில் தெரிவித்துள்ளது.

    ஒடேசா நகரம் மீது கருங்கடலில் இருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நான்கு கலிபர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று வான் பாதுகாப்புகளால் இடைமறிக்கப்பட்டன என்று பிராந்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    உக்ரைன் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய அணை உடைக்கப்பட்டது.
    • உக்ரைனும், ரஷியாவும் அணையை குண்டு வைத்து தகர்த்ததாக பரஸ்பர குற்றம்சாட்டியது.

    உக்ரைன்- ரஷியா போர் ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட சோவியத்- காலத்து மிகப்பெரிய அணையான ககோவ்கா அணை ஜூன் 6-ம் தேதி உடைந்து 18 கியூபிக் கிலோமீட்டர் பரப்பளவு நீர், தென் உக்ரைன் பகுதியை மூழ்கடித்தது.

    இதை ஆராய்ந்த நார்வே நிலநடுக்கவியலாளர்களும், அமெரிக்க செயற்கைக்கோள்களும் இது குண்டு வைத்து தகர்த்தது போன்று இருப்பதாக தெரிவித்தன. எனினும், இந்த அணை உடைந்ததற்கு உக்ரைனும், ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டின.

    இதன் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஐ.நா. சபையின் உதவிகளுக்கான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், இந்த தாக்குதலால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பிரச்சனைகளும் ஏற்படலாம் என தெரிவித்திருக்கிறார்.

    மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

    கோதுமை, பார்லி, சோளம், ராப்சீட், ராப்சீட் எண்ணெய், சூரியகாந்தி விதை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் மற்றும் ரஷியா முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உடைப்பின் காரணமாக, வரப்போகும் பயிரிடும் காலங்களில் இவற்றை விதைப்பதிலும், அறுவடை செய்வதிலும் மிகப்பெரிய சிக்கல் வருவது தவிர்க்க முடியாதது.

    சுமார் 7 லட்சம் பேர் வரை குடிநீருக்காக அணைக்கு பின்னால் உள்ள நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கின்றனர். இந்த உடைப்பின் காரணமாக சுத்தமான குடிநீர் இல்லாமல் மக்கள் நோய்வாய்ப்படும் வாய்ப்பும், குழந்தைகளுக்கு அதிகமான பாதிப்பும் ஏற்படும்.

    ஜெனிவா உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு எதிரான வகையில், சிவிலியன் உள்கட்டமைப்புக்கு எதிராக இந்த பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது.

    "யார் இதை (அணை தகர்ப்பு) செய்திருந்தாலும் ஜெனிவா உடன்படிக்கைகளை மீறியதாகும்" என்றும் கிரிஃபித்ஸ் கூறினார்.

    • உக்ரைன்- ரஷியா இடையிலான போர் பதட்டம் தற்போது அதிகரித்துள்ளது
    • ரஷியா அணு ஆயுதங்களை அடுத்த மாதத்தில் இருந்து பெலாரஸ்க்கு நகர்த்துகிறது

    பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார். மேலும் இதுகுறித்து கூறுகையில் ''அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய ஒரு அவசியத்தை கடவுள் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடந்தால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம்.

    ரஷிய அதிபர் புதினை தனது பெலாரஸ் நாட்டில், தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்துமாறு தாம்தான் கேட்டுக் கொண்டதாகவும், தனது நாட்டின் மீது தாக்குதலோ, ஆக்கிரமிப்போ நடக்க மிகவும் அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால் இதை செய்ததாகவும், இத்தகைய ஆயுதங்களைக் கொண்ட ஒரு நாட்டை எதிர்த்துப் போராட எந்த நாடும் முன்வராது என்றும், இவை தாக்குதலை தடுக்கும் ஆயுதங்கள் எனக் கூறினார்.

    உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையிலும், விரைவில் நேட்டோ மாநாடு நடைபெற இருக்கும் நிலையிலும் அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் கருத்துக்கள் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.

    முன்னதாக,

    புதின் குறுகிய தூர அணு ஆயுதங்களை அதன் நட்பு நாடான பெலாரஸில் வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும், அடுத்த மாதம் 7-ந்தேதியில் இருந்து இந்த பணி தொடங்கும் எனவும், அவற்றை இயக்கும் கட்டுப்பாடுகள் தன்வசம் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ரஷியாவின் இந்த நடவடிக்கை ரஷிய- உக்ரைன் போரில் ரஷியாவிற்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய நாடுகள் எடுத்திருக்கும் நிலைக்கும் இது பதில் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

    ஒரு போர் பின்னணியில், இந்த தந்திரோபாய அணு ஆயுதங்களின் செயல்பாடுகள் எதிரிப்படைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் காணப்படும் அணு ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆயுதங்களின் தாக்குதல் வரம்பு குறைவாகவே உள்ளது. அதேபோல் ஒட்டுமொத்த நகரங்களையும் அழிக்கும் திறனிலும் இவற்றின் அழிவு சக்தி கணிசமான அளவில் குறைவாகவே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சோவியத்-கால அணு ஆயுதங்களில் உக்ரைன் மற்றும் கஜகஸ்தானுடன் இணைந்து பெலாரஸ் நாடும் கணிசமான பங்கை வைத்திருந்தது. 1991-ல் சோவியத் யூனியன் சிதறுண்டதால், அமெரிக்கா முன்னிட்டு ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் வாயிலாக அந்த அணு ஆயுதங்கள் ரஷ்யாவிடம் திரும்ப அளிக்கப்பட்டன.

    • தற்போதைய நிலையில் ராணுவ துருப்புகளை அதிகரிக்க தேவையில்லை
    • ரஷியாவின் பாதுகாப்பிற்காக உக்ரைன் எல்லையில் இன்னும் முன்னேற வேண்டியது அவசியம்

    உக்ரைன் கடந்த சில நாட்களாக எதிர்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதனால் சில கிராமங்களை ரஷியாவிடம் இருந்து மீட்டுள்ளேம் என தெரிவித்தது. அதேவேளையில், பேரழிவு என்ற வகையில் உக்ரைனுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.

    மேலும், இருநாட்டு எல்லையில் எங்களது பாதுகாப்பை அதிகரிக்க, எல்லைப் பகுதியில் உள்ள உக்ரைன் பகுதிகளை இன்னும் அதிக அளவில் கைப்பற்ற ரஷியப்படைகள் முயற்சி மேற்கொள்வார்கள். அதற்கான படைகளை குவிக்க வேணடிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டள்ளார்.

    நேற்று ராணுவ பத்திரிகையாளர்கள் மற்றும் பிளாக்கர்ஸ்களை சந்தித்த புதின் ''உக்ரைன் 160 ராணுவ டாங்கிகள், 360-க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்களை கடுமையான சண்டையில் தற்போது இழந்துள்ளது. அதேவேளையில் கிவ் பகுதி புதிய தாக்குதலில் ரஷியா 54 டாங்கிகளை மட்டுமே இழந்துள்ளது. இதை உடனடியாக தெளிப்படுத்த முடியாது.

    உக்ரைன் மக்கள் ஊடுருவல், ரஷியாவின் பெல்கோரோட் எல்லை பிராந்தியத்தில் உக்ரைன் தாக்குதல் போன்றவற்றை ரஷிய தடுத்து நிறுத்தும். ரஷியாவை பாதுகாக்கும் வகையில் உக்ரைனில் ஒரு பாதுகாப்பான பகுதியை உருவாக்குவது குறித்து ஆலோசனை செய்வோம்.

    தற்போதைக்கு ராணுவ வீரர்களை அதிக அளவில் குவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருந்தால், ரஷியாவின் இலக்கு என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வீரர்கள் அழைக்கப்படுவார்கள். இன்றைய அளவில் அது தேவையில்லை'' என்றார்.

    கடந்த சில நாட்களாக உக்ரைன் கிரெம்ளினை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. குறிப்பாக டிரோன் மூலம் கட்டிடங்கள் தாக்கப்படுகிறது. இதனால் சிலர் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 7 கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் கடந்த சில தினங்களாக உக்ரைனின் பதில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க உக்ரைன் தீர்மானித்து, உக்கிரமான பதிலடி கொடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு எதிர்தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 7 கிராமங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    நேற்று ஒரே நாள் இரவில் உக்ரைன் படைகள் ஜபோரிஜியா பகுதியில் உள்ள பெர்டியன்ஸ்க்கில் ஒரு கிலோமீட்டர் வரை முன்னேறியதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், தெற்கு உக்ரைனில் நடந்த ஏவுகணை தாக்குதலில் ரஷியாவின் மேஜர் ஜெனரல் செர்ஜி கோரியாச்சேவ் கொல்லப்பட்டதாக ரஷிய ஆதரவு வலைத்தள பதிவர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு உக்ரைனில் 35வது படைப்பிரிவை வழிநடத்திச் சென்ற செர்ஜி கோரியாச்சேவ், நேற்று தெற்கு டோனெட்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையின்போது கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சண்டையில்தான் உக்ரைன் தனது எதிர்தாக்குதல் மூலம் 4 கிராமங்களை விடுவித்துள்ளது.

    ராணுவ அதிகாரி கோரியாச்சேவ் இதற்கு முன்பு டிரான்ஸ்னிஸ்ட்ரியா, மால்டோவாவில் அறிவிக்கப்பட்ட ராணுவமயமாக்கப்பட்ட பகுதி மற்றும் தஜிகிஸ்தானில் பணியாற்றியிருக்கிறார்.

    ×