என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ukraine russia war"
- அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது
- எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பரஸ்பர தாக்குதல் நடத்துவோம்
உக்ரைன்- ரஷியா போர் 500 நாட்களை கடந்து இன்னும் நீடித்து வருகிறது. ரஷிய தாக்குதல் நடத்த தொடங்கியபோது, உக்ரைன் தாக்குதலுக்கு உள்ளாகி வந்தது. தற்போது எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது. மேற்கத்திய நாடுகளும் உதவி செய்து வருகிறது. இதனால் ரஷியாவால் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை.
கடந்த வாரம் அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகளை (cluster bombs) உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தது. அந்த வெடிகுண்டுகள் உக்ரைனை சென்றடைந்து விட்டது. இது ரஷியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.
கொத்து வெடிகுண்டுகள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதை வழங்கியுள்ளது.
இதுகுறித்து ரஷிய அதிபர் புதின் கூறுகையில் ''எங்களிடம் கொத்து வெடிகுண்டுகள் போதுமான கையிருப்பு உள்ளது. அவர்கள் எங்களுக்கு எதிராக அதை பயன்படுத்தினால், நிச்சயமாக பரஸ்பர தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது'' என்றார்.
ரஷிய வீரர்களை வெளியேற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்துவோம் என உக்ரைன உறுதி அளித்துள்ளது.
- ரஷியப் படைக்கு எதிராக உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது,
- உக்ரைன் எதிர்தாக்குதல் வேகம் தற்போது சற்று குறைந்துள்ளது.
ரஷிய- உக்ரைன் போர் 507-வது நாளை எட்டிவிட்டது. ரஷிய படைகளை பின்னுக்கு தள்ளுவதில், உக்ரைன் எதிர்பார்த்ததை விட மெதுவான வேகத்தில் முன்னேறி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் போர் நிலவரம் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நமது தாக்குதலை எதிர்கொள்ள ரஷியா தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறது. முன்னேறும் ஒவ்வொரு 1,000 மீட்டருக்கும் நாம் நமது போர் படைப்பிரிவின் ஒவ்வொருவருக்கும் நன்றி கூற வேண்டும்.
தற்போது பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் பெலாரஸ் பகுதியில் இருந்து இல்லை என முக்கியமான அறிக்கை கிடைத்துள்ளது. அங்குள்ள நிலவரத்தை நான் உன்னிப்பாகக் கண்காணிக்கிறேன். ஆனால் எனது முழு கவனமும் தற்போது போரின் முன்வரிசையை குறித்தே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் படை, பெலாரஸ் துருப்புகளுக்கு பயிற்சி அளிக்க ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது என்று செய்திகள் வெளியாகின. இதன் பின்னணியில் ஜெலன்ஸ்கியின் இந்த உரை பார்க்கப்படுகிறது.
உக்ரைனுக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கி வரும் மேற்கத்திய நட்பு நாடுகள், போரில் வேகமாக முன்னேற உக்ரைனுக்கு அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை என ஜெலன்ஸ்கியின் அலுவலக தலைவர் ஆன்ட்ரி எர்மக் கூறியிருக்கிறார்.
வாக்னர் படையால் கைப்பற்றப்பட்ட கிழக்கு நகரமான பாக்முட் அருகே உள்ள பகுதிகளையும், நாட்டின் தென்கிழக்கில் உள்ள கிராமங்களையும் மீண்டும் கைப்பற்றுவதில் மட்டுமே உக்ரைனின் பல வார கால எதிர்த்தாக்குதல் இருந்து வருகிறது.
கிரிமியா தீபகற்பத்தில் ரஷிய படைகள் நிறுவியுள்ள தரைப்பாலத்தை துண்டிக்க உக்ரேனியப் படைகள் முயற்சி செய்து வருகின்றன.
- கீவ் பகுதியில் ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது
- எதிர்தாக்குதலில் ரஷிய டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளது
ரஷிய- உக்ரைன் போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், இரு தரப்பினரும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா மூன்று நாட்களாக இரவுநேர தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
நேற்றிரவு உக்ரைனின் தலைநகர் கீவை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷியா டிரோன் மூலம் நடத்திய குண்டுவீச்சில் ஒருவர் பலியானார். மேலும், 4 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இதில் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.
கீவ் நகர மேயர் விடாலி க்லிட்ச்கோ, "குண்டுவீச்சிற்கு பிறகு சோலோமியான்ஸ்கி, செவ்சென்கிவ்ஸ்கி, போடில்ஸ்கி, மற்றும் டார்னிட்ஸ்கி ஆகிய நகரங்களில் மீட்பு நடவடிக்கைக்காக அவசர உதவிக்குழுவினர் விரைந்தனர்" என தெரிவித்தார்.
உக்ரைன் தலைநகரின் மத்தியில் உள்ள சோலோமியான்ஸ்கி மாவட்டத்தில் ரஷிய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் டிரோன் பாகங்கள் விழுந்ததில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். டார்னிட்ஸ்கி மாவட்டத்திலும் இது போன்று கீழே வீழ்ந்த ரஷிய டிரோன்களால் ஒரு வீடு சேதமடைந்தது. செவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் ஒரு கட்டிடத்தின் பால்கனி தீக்கிரையானது.
இந்த தாக்குதலை ஈரான் நாட்டு ஷாஹெட் டிரோன்கள் மூலம் நடைபெற்ற ஒரு "பெரும் தாக்குதல்" என விமர்சித்துள்ள கீவ் நகர ராணுவ தலைமை அதிகாரி செர்ஹி பாப்கோ, "விமானப்படையின் எதிர்தாக்குல் படை, சுமார் ரஷியாவின் 10 தாக்குதல் இலக்கை அழித்தது" என டெலிகிராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இவையல்லாமல் உக்ரைனின் வேறு சில பகுதிகளான தென்கிழக்கில் உள்ள சபோரிழியாவிலும், தெற்கில் உள்ள மைகோலெய்வ் பகுதியிலும் மற்றும் மேற்கில் உள்ள மெல்னிட்ஸ்கி பகுதியிலும் தாக்குதல் நடந்திருக்கிறது.
நேட்டோவின் உறுப்பினராகும் முயற்சியின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோ உச்சி மாநாட்டிற்காக லிதுவேனியா நாட்டிற்கு சென்றிருக்கும் வேளையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை அதே இலக்குகளுடன் தொடரும் என்று டெலிகிராமில் மெத்வதேவ் பதிவிட்டுள்ளார்.
- போரில் உக்ரைனுக்கு உதவுவதாக நேட்டோ தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
ரஷிய-உக்ரைன் போர் 504வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேட்டோவின் 2-நாள் உச்சி மாநாடு லிதுவேனியா நாட்டில் நடைபெற்று வருகிறது.
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் தீவிரமாக முயற்சித்து வரும் வேளையில், நேட்டோவிடமிருந்து உக்ரைனுக்கு இது குறித்து எந்த அழைப்பும் வரவில்லை. இருப்பினும், போரில் உக்ரைனுக்கு உதவுவதாக நேட்டோ தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்த உதவி 3வது உலகளாவிய மோதலுக்கு வழிவகுக்கும் என சக்திவாய்ந்த ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளரான டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார்.
மாநாட்டின் முதல் நாள் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மெத்வதேவ், "மேற்கத்திய பாதுகாப்பு கூட்டணியில் இருந்து உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதன் மூலம், உக்ரைனில் தன் இலக்குகளை அடைவதில் இருந்து ரஷியாவை தடுக்க முடியாது. ரஷியாவிற்கு போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் இல்லை. முற்றிலும் பைத்தியம் பிடித்த மேற்கத்திய நாடுகளால் வேறு எதையும் செய்ய முடியாது. மூன்றாம் உலகப்போர் நெருங்கி வருகிறது. ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை அதே இலக்குகளுடன் தொடரும்" என்று டெலிகிராமில் மெத்வதேவ் பதிவிட்டுள்ளார்.
2008-2012 வரை ரஷிய அதிபராக இருந்தபோது தாராளவாத நவீனத்துவவாதியாக தன்னை காட்டி கொண்ட மெத்வதேவ், சமீப காலமாக மேற்கத்திய நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
உக்ரைனில் உள்ள புது நாஜி குழு (விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அரசாங்கம்) நேட்டோவில் சேர்வதை தடுக்கும் ரஷியாவின் இலக்கு இப்போது, சாத்தியமற்றது. உக்ரைனிய அரசாங்கத்தை அகற்றுவது இப்போது அவசியமாகிறது. நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அதை வலியுறுத்தினோம், என கூறியிருக்கிறார் மெத்வதேவ்.
உக்ரைன் ஏற்கெனவே போரில் "கிளஸ்டர் வெடிகுண்டுகள்" பயன்படுத்தியதாக கூறி வரும் அவர், ரஷியாவும் அதனை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
- இந்த ஏவுகணை 250 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
- பிரான்ஸ் வழங்கும் ஏவுகணைகளை உக்ரைன் தனது சுயபாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பதாக மேக்ரான் கூறினார்.
ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிரான உக்ரைனின் எதிர்தாக்குதல் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நேட்டோ உச்சிமாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வந்திருந்தார்.
அப்போது அவர் பிரிட்டனில் "புயல் நிழல்" (Storm Shadow) என்றும் பிரான்ஸ் நாட்டில் "ஸ்கால்ப்-ஈஜி" (SCALP-EG) என்றும் அழைக்கப்படும் தொலைதூர வழிகாட்டி ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுத்து உதவ போவதாக அறிவித்தார்.
உக்ரைன் தனது நாட்டை மீட்க செய்யும் எதிர்தாக்குதலின் போது ரஷிய ஆக்கிரமிப்புப் படைகளை வலுவாக தாக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் அந்த நாட்டிற்கு உதவும் என கூறினார்.
இந்த ஏவுகணை 250 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இதுவரை உக்ரைனுக்கு வழங்கப்பட்ட எந்த மேற்கத்திய ஆயுதங்களிலுமே இதுதான் மிக தொலைவு சென்று தாக்கப்படும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன், கடந்த மே மாதம் மேம்பட்ட திறன் கொண்ட ஆயுதங்களின் தொகுப்பை வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு பதிலடி கொடுத்த ரஷியா "பிரிட்டன் நேரடியாக மோதலுக்கு இழுக்கப்படும் அபாயம் இருக்கிறது" என எச்சரித்தது. சில மேற்கத்திய நட்பு நாடுகள் கூட உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் சென்று தாக்குதல் நடத்தக்கூடும் என்று கவலை தெரிவித்திருந்தது.
தற்போது பிரான்ஸ் வழங்கும் ஏவுகணைகளை உக்ரைன் தனது சுயபாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பதாக மேக்ரான் கூறினார்.
பிரான்ஸின் வசம் இந்த ஏவுகணைகள் கிட்டத்தட்ட 400 உள்ளது. ஆனால், எத்தனை ஏவுகணைகள் உக்ரைனுக்கு அளிக்கப்படும் என்று மேக்ரான் கூறவில்லை.
- உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி இன்றோடு 500-வது நாள் ஆகியுள்ளது
- உக்ரைன் இந்த போரில் 9 ஆயிரம் பொதுக்களை இழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது
ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. பின்னர் தனது ராணுவத்தின் துணையோடு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் கடுமையாக போரிட்டு வருகிறது.
இந்த ரஷிய- உக்ரைன் போர் உடனே முடிவுக்கு வரும் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்றோடு 500 நாட்கள் கடந்தும் நீடிக்கிறது.
படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைனில் உள்ள ஐ.நா. அமைப்பின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRMMU) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் குடிமக்கள் பயங்கரமான எண்ணிக்கையில் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு நீண்ட போரில் இன்று நாம் மற்றொரு சோகமான மைல்கல்லை அடைந்திருக்கிறோம்" என்று அந்த அமைப்பின் துணைத்தலைவர் நோயல் கால்ஹவுன் (Noel Calhoun) கூறியிருக்கிறார்.
2023-ன் தொடக்கத்தில் சராசரி உயிரிழப்பு எண்ணிக்கை 2022-ஐ விட குறைவாக இருந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாகமீண்டும் ஏறத் தொடங்கியது. ஜூன் 27-ல், கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் மீது நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பின்பு மேற்கு நகரமான லிவிவ் நகர தாக்குதலில் கட்டிடங்களின் இடிபாடுகளில் 10-வதாக ஒரு உடலை கண்டுபிடித்தனர். இந்த தாக்குதலில் குறைந்தது 37 பேர் காயமடைந்திருந்தனர் எனக்கூறிய மேயர் ஆண்ட்ரி சடோவ்யி "படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தனது நகரத்தில் உள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு மீதான மிகப்பெரிய தாக்குதல்" என்றும் கூறியிருந்தார்.
உலக பாரம்பரிய மாநாட்டின் மூலம் "பாதுகாக்கப்பட்ட பகுதி" என அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் சேதமடைந்ததாகவும் யுனெஸ்கோ (UNESCO) தெரிவித்துள்ளது.
பீரங்கிகள், ஏவுகணைகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது. குடியிருப்பை குறிவைத்து தாக்குதல் நடத்துவதால், பொதுமக்களின் மின்சார மற்றும் தண்ணீர் தேவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.
புச்சா மற்றும் மரியுபோல் நகரங்கள், கடந்த ஆண்டு ரஷிய அட்டூழியங்களுக்கு எடுத்துக்காட்டாக மாறியது. அங்கு நடந்த படுகொலைகள் பற்றிய அறிக்கைகள் மற்றும் படங்கள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது ரஷியாவின் மீது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை பற்றிய குற்றச்சாட்டுகளை அதிகரித்தது.
நீண்டு கொண்டே செல்லும் இந்த போர், விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்துதல், கையிருப்பு வைத்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டிருக்கிறது.
- ஆயுதங்களுக்கான தேவை வலுத்திருப்பதாக கூறி அவற்றை வழங்குமாறு அமெரிக்க அதிபருக்கு ஜெலன்ஸ்கி அழுத்தம் கொடுக்கிறார்.
ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ "கிளஸ்டர் குண்டுகள்" என்று அழைக்கப்படும் ஆபத்தான கொத்துக் குண்டுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
உக்ரைனில் போரின் ஆரம்ப நாட்களில், ரஷியா கொத்து குண்டுகளை பயன்படுத்தினால் போர்க்குற்றம் என்று அமெரிக்கா குறிப்பிட்டது. இந்த குண்டுகளை பயன்படுத்துவதற்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையில் நேட்டோவின் முன்னணி நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் தற்போதைய இந்த நடவடிக்கை அமெரிக்காவை அந்த உடன்படிக்கையில் இருந்து வேறுபடுத்துகிறது.
2008ம் வருடம் கையெழுத்திடப்பட்ட கிளஸ்டர் குண்டுகளுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஏற்பட்ட சர்வதேச ஒப்பந்தத்தின்படி, அத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துதல், கையிருப்பு வைத்தல், மற்றும் பரிமாற்றம் செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த உயர்மட்ட தேசிய பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அந்த சந்திப்பின் முடிவில் இந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ரஷிய-உக்ரைன் போரின் தொடக்க காலங்களில், ரஷியா கிளஸ்டர் வெடிகுண்டுகளை பயன்படுத்துவதை குறித்து கேட்டபோது, வெள்ளை மாளிகை, "நாங்கள் அத்தகைய அறிக்கைகளைப் பார்த்தோம். அவை உண்மை என நிரூபிக்கப்பட்டால், அது ஒரு போர்க் குற்றமாக கருதப்படும்" என தெரிவித்திருந்தது.
நேற்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்கிற அமைப்பின் ஆயுதங்களுக்கான இயக்குனர் மேரி வேர்ஹாம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் "ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுமே கிளஸ்டர் வெடிகுண்டுகளை பயன்படுத்துவதால் அப்பாவி பொதுமக்கள் பலியாகின்றனர். இரு தரப்பினரும் கண்மூடித்தனமாக ஆயுதங்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் இந்த ஆயுதங்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 500 நாட்களை நெருங்கும் நிலையில், இந்த ஆயுதங்களுக்கான தேவை வலுத்திருப்பதாக கூறி அவற்றை வழங்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
ஐக்கிய நாடுகளின் மாநாடு நடைபெற்றபோது, இதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் என 100 நாடுகள் கையொப்பமிட்டன. ஆனால் இவற்றால் ஆபத்து அதிகம் இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் இவற்றை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறி அமெரிக்கா, ரஷியா, உக்ரைன் மற்றும் இந்தியா ஆகியவை இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) அளித்த தகவல்களின்படி, மிகவும் ஆபத்தான இந்த கிளஸ்டர் வெடிகுண்டுகள், காற்றில் உடைந்து பல குண்டுகளை பரந்த பகுதிகளில் வெளியிடும். கொத்து குண்டுகளை விமானங்கள், பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு நாடு தனது எதிரி நாடுகளின் மீது வீசி தாக்குதல் நடத்த முடியும்.
- ரஷியா அடிக்கடி உக்ரைனில் மக்கள் வாழும் இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்
நீடிக்கும் ரஷிய- உக்ரைன் போரினால் இரு தரப்பிலும் பெரிய அளவில் உயிர்ப்பலிகளும், கட்டிட சேதங்களும் ஏற்படுகின்றன.
உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் (Lviv) நகரின் மீது நேற்றிரவு நடைபெற்ற ஒரு ராக்கெட் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நகர மேயர் ஆண்ட்ரி சடோவ்யி தெரிவித்துள்ளார். நகரின் பொதுமக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளின் மீதான மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்று என இதனை குறிப்பிட்டுள்ள அவர், தாக்குதல் நடந்த பகுதியில் சுமார் 60 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 50 கார்கள் சேதமடைந்துள்ளதாக கூறினார்.
உக்ரைனின் உள்துறை அமைச்சர் இஹோர் கிளைமென்கோ இந்த தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
டெலிகிராம் சமூக வலைதளத்தில் கிளைமென்கோ, "அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குறைந்தது 7 பேராவது மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் உள்ளதால் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக" பதிவு செய்திருக்கிறார்.
மேயர் சடோவ்யி, தாக்கப்பட்ட இடத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கட்டிடத்தில் உடைந்த ஜன்னல்களை காண முடிகிறது. அக்கட்டிடத்தில் 4 தளங்கள் இருப்பதாக தெரிகிறது. சேதமடைந்த கார்கள் மற்றும் குப்பைகளும் காட்சிகளில் காணப்பட்டன.
பின்னர் பேரழிவின் அளவு தெளிவாக தெரிந்த பிறகு மேயர் மீண்டும் ஒரு புதிய வீடியோ முகவரியை பதிவு செய்தார்.
அதன்படி பல கட்டிடங்களின் கூரைகள் பறந்து சென்றிருப்பதும், ஒரு பள்ளியுடன் பாலிடெக்னிக் விடுதிகளும் சேதமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
லிவிவ் பிராந்திய தலைவர் மாக்ஸிம் கோஸிட்ஸ்க்யி "உக்ரைன் மக்களை அழிப்பதே ரஷியாவின் முக்கிய இலக்கு. ஆனால் நாங்கள் வெற்றி பெறுவோம்", என்று கூறியிருக்கிறார்.
உக்ரைனின் நகரங்கள் மீது பல மாதங்களாக, ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, "ரஷிய பயங்கரவாதிகளின் இரவு தாக்குதலுக்கு உறுதியான பதில் அளிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
ரஷிய ராணுவம் இத்தாக்குதல் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த ஒருவாரத்தில் மட்டும் ரஷிய தாக்குதலில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- சுமார் 40 வீடுகள், பல பள்ளிகள், இரண்டு தீயணைப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக நகர நிர்வாக தலைவர் தெரிவித்தார்.
- ஜனவரி மாதம் ராணுவ தளத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 89 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ரஷியப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் நகரமான மகிவ்காவில், உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 2 குழந்தைகள் உட்பட 41 பேர் காயமடைந்ததாகவும் ரஷியா இன்று தெரிவித்துள்ளது.
டொனெட்ஸ்க் பகுதி 2014 வருடம் முதல் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளால் ஓரளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக கைப்பற்றுவது ரஷியாவின் முதன்மையான ராணுவ நோக்கமாகும். ஆனால், பல வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட உக்ரைனிய எதிர்தாக்குதலின் மையமாகவும் இந்த தொழில்துறை பகுதி இப்பொழுது மாறி வருகிறது.
உக்ரைன் தாக்குதல் குறித்து ரஷியாவால் நியமிக்கப்பட்ட நகர நிர்வாகத் தலைவர் விளாடிஸ்லாவ் க்ளுயுச்சரோவ் கூறுகையில், "இந்த குண்டுவீச்சில் 2 குழந்தைகள் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காயங்களால் உயிரிழந்துள்ளார். சுமார் 40 வீடுகள், பல பள்ளிகள் மற்றும் இரண்டு தீயணைப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளது" என தெரிவித்தார்.
உக்ரைன் ராணுவம், மகிவ்காவில் ஒரு ரஷிய 'உருவாக்கத்தை' அழித்ததாக கூறியதுடன், வானில் இரவை ஒளிரச் செய்யும் ஒரு தாக்குதல் நிகழ்வின் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட மகிவ்காவில் ரஷிய பயங்கரவாதிகளின் மற்றொரு உருவாக்கம் அழிக்கப்பட்டது" என தெரிவித்தது.
ரஷியாவால் நிறுவப்பட்ட டொனெட்ஸ்கின் தலைவர் டெனிஸ் புஷிலின் கூறும்போது, உக்ரைனியப் படைகள், மகிவ்காவில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியதாக கூறினார்.
உக்ரைன் படைகளின் குண்டு வீச்சு தாக்குதலில் 9 சுகாதார மையங்கள் சேதமடைந்துள்ளதாக கூறியிருக்கிறது. ஒரு மருத்துவமனையின் தரையில் சிதறிக் கிடக்கும் உடைந்த கண்ணாடித்துண்டுகளின் படங்களையும், தாக்குதலின்போது தூக்கி வீசப்பட்ட புத்தகங்களையும் ரஷிய தரப்பு வெளியிட்டது.
ரஷியா, கடந்த ஜனவரி மாதம், மகிவ்காவில் உள்ள ஒரு தற்காலிக ராணுவ தளத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 89 வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் உக்ரைனும் அதன் கூட்டு நாடுகளும், இந்த பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளையும் நேரத்தையும் நிர்ணயிக்க முடியும்.
- ஆக்கிரமிப்பாளருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே நடக்கும் இந்த சண்டையில் இருவரையும் சமமாக நடத்த முடியாது.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையின் விளைவாக உக்ரைன் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்துள்ளன. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக உக்ரைன் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து நிதியுதவியும், ஆயுத உதவியும் வழங்குகின்றன.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், உக்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றியபோது உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷியாவின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பாவின் உறுதியான ஆதரவை தெரிவிக்கவே வந்திருப்பதாக கூறினார்.
ஸ்பெயின் பிரதமர் சுற்றுப்பயணத்தை தொடங்கிய சமயத்தில், போர் தீவிரமாக நடைபெறும் உக்ரைனின் கிழக்கு பிராந்தியான டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படைகள் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் பொதுமக்கள் தரப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்துள்னர்.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
4 லியோபார்ட் டாங்கிகள், கவச வாகனங்கள், நடமாடும் மருத்துவமனை உட்பட உக்ரைனுக்கு அதிக அளவிலான கனரக ஆயுதங்களை ஸ்பெயின் வழங்கும். மேலும் புனரமைப்பு பணிகளுக்காக கூடுதலாக 55 மில்லியன் யூரோக்களை வழங்கும்.
உக்ரைன் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளையும் நேரத்தையும் நிர்ணயிக்க முடியும். மற்ற நாடுகளும் பிராந்தியங்களும் சமாதானத் திட்டங்களை முன்வைக்கின்றன. அவர்களின் அக்கறை பாராட்டத்தக்கது, ஆனால், அதே நேரத்தில், அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
இது ஆக்கிரமிப்பு போர். ஆக்கிரமிப்பாளருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே நடக்கும் இந்த சண்டையில் இருவரையும் சமமாக நடத்த முடியாது. விதிகளை புறக்கணிப்பதை எந்த வகையிலும் ஆதரிக்கக்கூடாது. அதனால்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சமாதான திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ரஷியாவை எதிர்த்து உக்ரைன் தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகிறது.
- அமெரிக்கா முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் உக்ரைனுக்கு திடீரென பயணித்தார்.
கீவ்:
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகிறது.
உக்ரைனுக்கு 50-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள் உள்பட 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கும் என பென்டகன் அறிவிக்கவிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மெதுவாக நகர்ந்து செல்லும் உக்ரைனின் எதிர் தாக்குதலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி அமைந்துள்ளது.
உக்ரைனுக்குள் ரஷிய படையெடுப்பிற்கு பிறகு அமெரிக்க அதிபரின் சிறப்பு அதிகாரத்தின் மூலம் அமெரிக்கா, ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவது இது 41-வது முறையாகும்.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரான மைக் பென்ஸ், உக்ரைனுக்கு திடீரென பயணித்தார். தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து கலந்துரையாடினார்.
இதுதொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனின் எதிர்காலம் குறித்தும், இருதரப்பு மக்களிடையேயான தொடர்பு, பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு குறித்து நாங்கள் விவாதித்தோம் என தெரிவித்துள்ளார்.
- யெவ்ஜெனி பிரிகோசின் பெலாரசுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
- கிளர்ச்சியில் ஈடுபட்ட தனது செயலை நியாயப்படுத்தினார்.
மாஸ்கோ :
உக்ரைன் போரில் ரஷியாவுடன் இணைந்து செயல்பட்டது, வாக்னர் குழு என்ற கூலிப்படை. இதன் தலைவரான யெவ்ஜெனி பிரிகோசின், தங்கள் வீரர்களை ரஷிய ராணுவம் கொன்றதாக குற்றம்சாட்டி அந்நாட்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியை அறிவித்தார். அதேவேகத்தில் பின்வாங்கி, கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார்.
அவர் அண்டை நாடான பெலாரசுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு சென்றதை பிரிகோசினோ, பெலாரஸ் அதிகாரிகளோ உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், ஒரு சுயேச்சையான பெலாரஸ் ராணுவ கண்காணிப்பு அமைப்பான பெலாரஸ்கி ஹாஜுன், பிரிகோசினின் ஜெட் விமானம், பெலாரஸ் தலைநகரான மின்ஸ்க் அருகே நேற்று காலை வந்திறங்கியதாக தெரிவித்துள்ளது.
பிரிகோசின் நேற்று முன்தினம் வெளியிட்ட ஓர் ஆடியோவில், கிளர்ச்சியில் ஈடுபட்ட தனது செயலை நியாயப்படுத்தினார். ரஷிய ராணுவத்தை அவர் மீண்டும் விமர்சித்தபோதும், புதினுக்கு எதிராக தான் புரட்சி செய்ய முயலவில்லை என்று கூறினார்.
அன்று இரவு தொலைக்காட்சியில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரிகோசினின் பெயரை குறிப்பிடாமல், கிளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் உக்ரைனின் கைப்பாவையாக செயல்பட்டதாக விமர்சித்தார். அதேநேரத்தில், பெரிய ரத்தக்களறியை தவிர்த்ததாக தனியார் படை வீரர்களை பாராட்டவும் செய்தார்.
இதற்கிடையில், தனியார் படையின் கிளர்ச்சி குறித்த குற்றவியல் விசாரணையை ரத்து செய்வதாக ரஷிய அதிகாரிகள் நேற்று அறிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்