search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vani Jayaram"

    • தொடக்க கல்வி படித்த பள்ளியை நினைவில் கொண்டிருந்த வாணிஜெயராம் 2015-ம் ஆண்டு பள்ளிக்கு வருகை தந்தார்.
    • படித்த வகுப்பறையில் உள்ள கரும்பலகையிலும், பழைய நினைவுகளை எழுத்து வடிவில் பதிவு செய்தார்.

    வேலூர்:

    சினிமா பின்னணி பாடகிகளில் தனக்கென தனி முத்திரையை பதித்த வாணி ஜெயராம். 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' என்ற பாடல் மூலமாக, மக்களின் மனங்களை கொள்ளை கொண்டு தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டவர். அதோடு, சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றவர்.

    இவர், வேலுார் கொசப்பேட்டை நல்லெண்ண பட்டறை தெருவில், தன் சிறு வயதில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அந்த பகுதியில் உள்ள ஈவெரா அரசு பள்ளியில் படித்தார். கலைவாணி என்ற பெயருடன் தன் ஆரம்பக்கல்வியை பயின்றவர், பின்னாளில் இசைக்குயில் வாணி ஜெயராமாக அழைக்கப்பட்டார்.

    தான் தொடக்க கல்வி படித்த பள்ளியை நினைவில் கொண்டிருந்த வாணிஜெயராம், 2015-ம் ஆண்டு பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது, பள்ளி வளாகத்தில் விளையாடிய இடங்கள், தான் படித்த வகுப்பறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு, தன் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

    அதோடு தான் படித்த வகுப்பறையில் உள்ள கரும்பலகையிலும், பழைய நினைவுகளை எழுத்து வடிவில் பதிவு செய்தார்.

    தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு ஆசிரியர்களுடன் குரூப் படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தார்.

    மக்களின் மனதை தன் இனிய குரலால் மயக்கிய கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைந்தாலும், இந்த பள்ளியில் படித்த அவரின் சிறப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும். 

    • வாணி ஜெயராம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.
    • எந்த மொழியில் பாடல் பாடினாலும், அந்த மொழியின் தொன்மையை உணர்ந்து, அதன் அர்த்தம் மாறாமல் பாடுவதில் வல்லவர்.

    வசீகர குரலுக்கு சொந்தகாரரான வாணி ஜெயராமை விரும்பாத இசை ரசிகர்களே இருக்க முடியாது.

    வாணி ஜெயராம், பள்ளி பருவத்திலேயே இசை மீது அதிக ஆர்வம் காட்டினார். அப்போதே வகுப்பில் மாணவிகள் மத்தியில் இனிமையான பாடல்களை பாடி வியக்க வைப்பார்.

    மேலும் தனது எண்ணங்களை ஓவியமாக தீட்டி ஆசிரியைகளிடம் காட்டுவார். அதனை கண்டு வியந்து போன ஆசிரியர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அவர் மேலும் அந்த துறையில் சிறந்து விளங்க பாராட்டவும் செய்தனர்.

    இளமையிலேயே பாட்டிலும், இசையிலும் சிறந்து விளங்கிய வாணி ஜெயராம், திருமணத்திற்கு பிறகுதான் சினிமா துறையில் பாடல்கள் பாட தொடங்கினார். அவரது பாடலையும், இனிமையான குரல் வளத்தையும் பலரும் பாராட்டினர்.

    இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் ஒருவர். அவர் வாணி ஜெயராமை ஒருமுறை தனது அலுவலகத்திற்கு அழைத்தார்.

    இருவரும் வாணி ஜெயராம் பாடிய பாடல்கள் குறித்து பல மணி நேரம் பகிர்ந்து கொண்டனர். வாணி ஜெயராமின் குரலை பாராட்டிய அப்துல் கலாம், அவரிடம் தனது கவிதை தொகுப்பு ஒன்றை கொடுத்தார்.

    அந்த கவிதை தொகுப்பை படித்து பார்த்த வாணி ஜெயராம் மிகவும் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த அப்துல் கலாம், இந்த கவிதை தொகுப்பை உங்கள் குரலில் பாடலாக பதிவு செய்து தர முடியுமா? என்று கேட்டார்.

    அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட வாணி ஜெயராம், அப்துல் கலாமின் கவிதை வரிகளுக்கு தன் இனிய குரலால் உயிரூட்டினார். இதற்காக அப்துல் கலாம், வாணி ஜெயராமை வெகுவாக பாராட்டினார்.

    வாணி ஜெயராமும் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அவரும் பல கவிதைகளை எழுதி, இசை அமைத்துள்ளார். அவற்றை கேசட்டுகளாகவும் வெளியிட்டுள்ளார்.

    இவ்வாறு வெளியான கவிதைகளில் 30 கவிதைகளை தொகுத்து புத்தகமாகவும் வெளியிட்டார். அது ஒரு குயிலின் குரல் கவி தாய் வடிவில் என்ற பெயரில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது.

    வாணி ஜெயராம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். எந்த மொழியில் பாடல் பாடினாலும், அந்த மொழியின் தொன்மையை உணர்ந்து, அதன் அர்த்தம் மாறாமல் பாடுவதில் வல்லவர்.

    பாடல் வரிகளின் பொருள் உணர்ந்து அவர் பாடுவதால் அந்த பாட்டும் உயிரோட்டமாக இருக்கும். இதற்காக அவர் ரொம்பவே மெனக்கெடுவார். இது பற்றி வாணி ஜெயராம் ஒருமுறை கூறும்போது, எனக்கு மலையாள பாடல்கள் பாடுவதில் தான் சிரமம் என்று கூறியிருந்தார். ஆனால் மலையாள இசையமைப்பாளர்கள், ரசிகர்கள் கூறும்போது, வாணி ஜெயராமை மலையாளி என்றே கூறுவார்கள். அந்த அளவுக்கு அவர் மலையாள பாடல்களை பாடி இருந்தார்.

    கணவர் ஜெயராம் இறந்த பிறகு அவர் வாழ்ந்த வீட்டிலேயே வசிக்க வேண்டும் என்பதில் வாணி ஜெயராம் பிடிவாதமாக இருந்தார். உறவினர்கள் அவரை தங்களோடு வந்து விடும்படி அழைத்த பின்னரும் செல்லாமல் சென்னை நுங்கம்பாக்கம் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    அங்கு கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுப்பது, ஓவியம் வரைவது, வண்ணம் தீட்டுவது என பொழுதை கழித்தார். அதோடு எம்பிராய்டரியிலும் ஆர்வம் காட்டினார். இதனை செய்யும் போது மனதுக்கு நிம்மதியாக இருப்பதாக தனது பணிபெண்ணிடம் கூறுவார்.

    வாணிக்கு 1968-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி ஜெயராமை திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஈருடல் ஓருயிராக வாழ்ந்தனர். வாணிக்கு ஜெயராம் எல்லாமுமாக இருந்தார். அவரது இசை வாழ்க்கையில் பெற்ற பெரும் பாராட்டுக்கும் ஜெயராம் காரணமாக இருந்தார்.

    இதனால் கணவரின் மேல் வாணி கொள்ளை அன்புடன் இருந்தார். இந்த நிலையில்தான் 2018-ம் ஆண்டு ஜெயராம் திடீரென இறந்த போது வாணி இடிந்து போனார். அதன்பின்பு பொது வெளி நிகழ்ச்சிகளை குறைத்து கொண்டார். கணவர் வாழ்ந்த வீட்டிலேயே வாழ தொடங்கினார்.

    கணவர் இறந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களின் திருமணம் நடந்த அதே பிப்ரவரி 4-ம் நாள் வாணியின் உயிர் பிரிந்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.  

    • வாணி ஜெயராமின் உடலுக்கு காவல்துறை சார்பில் 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
    • பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் காவல்துறை சார்பில் 10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் குடும்பத்தினர் முன்னிலையில் வாணி ஜெயராமின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    • சகோதரியின் குடும்பத்தினர் வாணி ஜெயராமின் இறுதி சடங்குகளை நடத்தி வருகிறார்கள்.
    • வாணிஜெயராமின் இசைப் பணிகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார்.

    சென்னை:

    பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று இரவு முதல் அவரது இல்லத்திற்கு திரைஉலகினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் வரத் தொடங்கினார்கள்.

    கவர்னர் ஆர்.என்.ரவி இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, பாடகி சித்ரா, மனோபாலா, இசை அமைப்பாளர்கள் தினா, கணேஷ், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    வாணி ஜெயராம் திருமணத்திற்கு பிறகு வாரிசுகள் இல்லாததால் ஜெயராம் மறைவுக்கு பிறகு, அவரது சகோதரி மட்டுமே துணையாக இருந்து வந்தார். தற்போது சகோதரியின் குடும்பத்தினர் வாணி ஜெயராமின் இறுதி சடங்குகளை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணி பாடகி வாணிஜெயராம், இயற்கை எய்தியதை அடுத்து அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    வாணிஜெயராமின் இசைப் பணிகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்கு பிறகு வாணிஜெயராமின் உடல் இன்று பிற்பகலில் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்படுகிறது. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

    • பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.
    • வாணி ஜெயராம் மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும்.

    டெல்லி:

    பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

    டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை நுங்கம்பாக்கத்தில் பாடகி வாணி ஜெயராம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • திரையுலக பிரபலங்கள அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னையில் உள்ள ஓமத்தூரார் அரசு மருத்துவமனையில் இவரது உடல் பிரேத பரிசோதனையானது  நடைப்பெற்றது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து திரையுலகத்தில் உள்ள பிரபல பாடகர், பாடகிகள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்திருக்கிறார். மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ×