search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voters list release"

    கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2019 சிறப்பு சுருக்க முறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று வெளியிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2019-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) வெளியிடப்பட்டு கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை வைக்கப்படவுள்ளன.

    மேலும் வருகிற 8, 22-ந் தேதிகள் மற்றும் அக்டோபர் மாதம் 6, 13-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டங்களிலும் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வருகிற 9, 23, மற்றும் அக்டோபர் மாதம் 7, 14-ந் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடை பெறவுள்ளன.

    மேலும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 250 வாக்குச்சாவடி மையங்களும், 159 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கரூர் சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குச்சாவடி மையங்களும், 94 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 253 வாக்குச்சாவடி மையங்களும், 195 வாக்குச்சாவடி அமைவிடங்களும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 267 வாக்குச்சாவடி மையங்களும், 160 வாக்குச்சாவடி அமைவிடங்களும் என மொத்தம் 1,031 வாக்குச்சாவடி மையங்களும், 608 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன.

    பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். நேற்று முதல் அடுத்த மாதம் அக்டோபர் 31-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக் களை அளிக்கலாம்.

    மேலும் http://www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி (கரூர்), லியாகத் (குளித்தலை), தேர்தல் வட்டாட்சியர் விஜயகுமார், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி நேற்று வெளியிட்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 82 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 52 ஆயிரத்து 72 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 29 ஆயிரத்து 988 பேரும், 3-ம் பாலின வாக்காளர்கள் (இதரர்) 213 பேரும் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி, ஓசூர் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 1850 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    அங்கு பொதுமக்கள் சென்று தங்களது பதிவுகள் மற்றும் திருத்தங்களை சரிபார்த்து கொள்ளலாம். 1.1.2019-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுபடி 1.9.2018 முதல் 31.10.2018 -ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்ய விண்ணப்ப படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அரசு வேலை நாட்களில் பெறப்படும்.

    மேலும் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் வருகிற 9-ந்தேதி, 23-ந்தேதி, அக்டோபர் மாதம் 7-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 4 நாட்களில் நடைபெற உள்ளது. இந்த முகாம் நாட்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளிக்கலாம்.

    மேலும் இ-சேவை மையங்களின் மூலமும் பொதுமக்கள் நேரடியாக உரிய படிவங்களை பதிவேற்றம் செய்து இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன், ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், தனி தாசில்தார் தணிகாசலம், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் ரமேஷ், மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 
    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 11 லட்சத்து 2 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர்.
    சிவகங்கை:

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 11 லட்சத்து 2 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட 11 ஆயிரத்து 751 பெண்கள் அதிகமாக உள்ளனர்.

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ், சிவகங்கை தாசில்தார் ராஜா மற்றும் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், அ.தி.மு.க. நகர செயலாளர் ஆனந்தன், தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் பெரோஸ்காந்தி, பா.ஜ.க. இளைஞரணி தலைவர் நாகேசுவரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.

    பின்னர் நடந்த நிகழ்ச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட, அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 5 லட்சத்து 45 ஆயிரத்து 300 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 57 ஆயிரத்து 51 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 48 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 2 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பட்டியல் படி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட 11 ஆயிரத்து 751 பெண்கள் அதிகமாக உள்ளனர். 
    திருவண்ணாமலை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சத்து 34 ஆயிரத்து 221 வாக்காளர்கள் உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சத்து 34 ஆயிரத்து 221 வாக்காளர்கள் உள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.



    மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜானகி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேல், அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.

    பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தற்போது ஆண்கள் 9 லட்சத்து 54 ஆயிரத்து 913 பேர், பெண்கள் 9 ஆயிரத்து 79 ஆயிரத்து 243 பேர் மற்றும் இதர பிரிவினர் 65 பேர் என மொத்தம் 19 லட்சத்து 34 ஆயிரத்து 221 வாக்காளர்கள் உள்ளனர்.

    வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு, சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தற்போது முதல் தொடங்குகிறது. 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று வரை பிறந்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்த்தல், திருத்தம், நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்ய வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வாக்குச்சாவடி மையம், தாசில்தார் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் இதற்காக சிறப்பு கிராம சபை கூட்டம் வருகிற 8-ந் தேதி, 22-ந் தேதி, அக்டோபர் மாதம் 6-ந் தேதி மற்றும் 13-ந் தேதி ஆகிய தேதிகளில் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும். அன்று அந்தந்த பாகத்தின் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் சரிபார்த்து கொள்ளலாம்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் வருகிற 9-ந் தேதி, 23-ந் தேதி, அக்டோபர் மாதம் 7-ந் தேதி, 14-ந் தேதி நடைபெறும். அன்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய மற்றும் ஆட்சேபனை தெரிவிக்க தேவையான படிவங்கள் பெற்று ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை பெறப்படும் படிவங்கள் அனைத்தும் கள விசாரணை செய்யப்பட்டு வருகிற ஜனவரி 4-ந் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வாக்காளர்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கலெக்டர், திருவண்ணாமலை ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள டான்காப் கிடங்கில் அமைக்கப்பட்டு உள்ள வைப்பு அறையில் பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவின் போது வாக்காளர்கள் தங்கள் வாக்குபதிவினை சரிபார்க்கும் எந்திரங்கள் 3200 ( voter verifiable paper audittrial ) அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வைக்கப்படுவதை தொடங்கி வைத்தார். இந்த வைப்பு அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் பணியாளர்கள் எந்திரங்களை தூக்கி சென்றனர். மேலும் தொடர்ந்து அந்த வைப்பு அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 
    ×