search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women injured"

    கடலூர் அருகே புதுவைக்கு வேலைக்கு சென்ற போது வேன் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 17 பெண்கள் படுகாயமடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள கலையூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் புதுவை மங்களம் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் ஒரு வேனில் கலையூரில் இருந்து புதுவைக்கு செல்வார்கள்.

    அதன்படி இன்று காலை கலையூர் கிராமத்தை சேர்ந்த கவுரி (வயது 30), சிவரஞ்சினி (33), அருணா (22) உள்ளிட்ட 17 பெண்கள் ஒரு வேனில் புதுவைக்கு புறப்பட்டனர். வேனை அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (28) ஓட்டி சென்றார். அந்த வேன் கடலூர் அடுத்த பள்ளிப்பட்டு- தென்னம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்த பெண்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். வேனின் இடிபாடுக்குள் சிக்கிய பெண்களை வெளியே மீட்டனர்.

    இந்த விபத்தில் வேனில் வந்த கவுரி, சிவரஞ்சனி, அருணா, பாத்திமா உள்ளிட்ட 17 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். டிரைவர் ஆனந்த குமாரும் காயம் அடைந்தார். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கீழ்வேளூர்:

    நாகையை அடுத்த நாகூர் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்தவர்கள் சிவக்குமார் மனைவி கலா (வயது 35). ஆறுமுகம் மனைவி சுமித்ரா(35). புஷ்பராஜ் மனைவி மகேஸ்வரி(30). ரத்தினவேல் மனைவி ஜெயபிரியா(35). ரமேஷ் மனைவி இன்பவள்ளி(36). இவர்கள் அனைவரும் மீன் வியாபாரிகள்.

    இன்று காலை நாகையில் இருந்து லோடு ஆட்டோவில் மீன் ஏற்றிக் கொண்டு வாஞ்சூரில் விற்பதற்காக வந்துள்ளனர். லோடு ஆட்டோவை மேலவாஞ்சூர் ஆசாரி தெரு பக்கரி சாமி மகன் நாகராஜ்(36) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    நாகூர் புதிய பஸ் நிலையம் அருகில் லோடு ஆட்டோ வந்தபோது முன்னால் சைக்கிளில் சென்ற வடக்கு பால் பண்ணைச்சேரி கீழத் தெரு சிவக்குமார் மகன் இசால் (வயது17) மீது மோதாமல் இருக்க நாகராஜ் பிரேக் போட்டுள்ளார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ தலை கீழாக கவிழ்ந்தது. நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததால் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த கலா உள்பட 5 பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் நாகராஜ், இசால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்த 7 பேரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகூர் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×