search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம்"

    • பலவிதமான சாகசங்களை செய்து யூடியூப் சேனலில் பதிவிட்டு பிரபலமாகி வருகிறார்.
    • விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், காட்கேசர், பாலா நகரை சேர்ந்தவர் பானு சந்தர் ரெட்டி. இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பல்வேறு விதமான சாகசங்களை செய்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு பிரபலமாகி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பானு சந்தர் ரெட்டி பரபரப்பாக காணப்படும் ஓ.ஆர்.ஆர் ரிங் ரோட்டுக்கு வந்தார்.

    தான் கட்டு கட்டாக கொண்டு வந்த ரூபாய் நோட்டுகளை மேலே வீசினார். ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து வந்து சாலையில் சிதறியது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் நடந்து சென்ற பொது மக்கள் காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மேலும் பொதுமக்கள் வாகனங்களுக்கு இடை இடையே புகுந்ததால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியது. பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை எடுப்பதை பானு சந்திர ரெட்டி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    பதிவு செய்த வீடியோவை தனது யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனைக் கண்ட போலீசார் பானு சந்தர் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


    • காங்கிரஸ் எம்.பி இருக்கையின் கீழ் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

    இதனால் பாராளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடங்கியது. குளிர்கால கூட்டத்தொடரின் 10-வது நாளான இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.

    அப்போது மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி இருக்கையின் கீழ் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக அவையில் தெரிவிக்கப்பட்டது

    இதுகுறித்து அவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் கூறியதாவது:-

    நேற்று சபை ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் சபையில் நடக்கும் வழக்கமான சோதனையின் போது நடந்ததை நான் உறுப்பினர்களுக்கு இங்கு தெரிவிக்கிறேன். தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஷேக் சிங்விக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண் 222-ல் இருந்து ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு உள்ளது.

    இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டார்கள். அவை தலைவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷமிட்டனர். இதனால் மேல்சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

    அப்போது மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே கூறும் போது,விசாரணை முடிந்து, சம்பவத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வரை, ஒரு உறுப்பினரின் பெயரை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, வழக்கமான நெறிமுறையின்படி சபையில் சோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு இருக்கையில் ரூபாய் நோட்டுகள் இருந்தது. உறுப்பினரின் பெயரை தலைவர் கூறக்கூடாது என்று ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்று புரியவில்லை. அவைத் தலைவர் இருக்கை எண் மற்றும் அந்த குறிப்பிட்ட இருக்கை எண்ணை வகிக்கும் உறுப்பினரை சரியாக சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதில் என்ன தவறு இருக்கிறது? ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அவைத் தலைவரின் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அதே போன்று உறுப்பினர்கள் எழுப்பிய கவலைகளும் மிகவும் உண்மையானவை என்றார்.

    காங்கிரஸ் எம்.பி இருக்கையின் கீழ் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை அபிஷேக் சிங்வி திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இதுகுறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறும்போது, இதுபோன்ற குற்றச்சாட்டை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.

    நான் நேற்று மேல்-சபைக்கு செல்லும்போது ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டுமே எடுத்துச் சென்றேன். மதியம் 12:57 மணிக்கு பாராளுமன்றத்தை அடைந்தேன்.1 மணிக்கு அவைக்கு சென்றேன். பின்னர் 1:30 மணி வரை கேண்டீனில் அமர்ந்திருந்தேன். நேற்று நான் பாராளுமன்றத்தில் இருந்த நேரம் 3 நிமிடங்கள்தான். கேண்டீனில் அமர்ந்திருந்தது 30 நிமிடங்கள்.

    இது போன்ற விஷயங்களில் கூட அரசியல் எழுப்பப்படுவது எனக்கு வினோதமாக இருக்கிறது. எந்த இருக்கையிலும் எதையும் வேறு யாராவது வைக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை இருக்க வேண்டும். இருக்கையைப் பூட்டி, சாவியை எம்.பி.யால் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய இருக்கை இருக்க வேண்டும். மேலும் பாதுகாப்பு நிறுவனங்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதுவும் முழுமையாக அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

    • காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராவார்.
    • விசயத்தில் அரசியல் செய்வது விசித்திரமாக உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அபிஷேக் சிங்வி. இவர் பிரபல வழக்கறிஞர் ஆவார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராவார்.

    இவர் நேற்று மாநிலங்களவைக்கு சென்றிருந்தார். மாநிலங்களவையில் இவருக்கு 222-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று அவரது இருக்கைக்கு அடியில் மாநிலங்களவை பாதுகாவலர்கள் ஒரு கட்டு பணம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

    இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் தன்கர் "பாதுகாப்பு அதிகாரகிள் 222-ம் சீட்டிற்கு அடியில் இருந்த ஒரு கட்டு பணத்தை கண்டறிந்துள்ளனர். இந்த இருக்கை தற்போது அபிஷேக் சிங்விக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

    இதனால் பாராளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லியார்ஜூன கார்கே கூறுகையில் "இது தொடர்பாக விசாரணை நடத்த நான் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. ஆனால், விசாரணையில் இருக்கும்போது தலைவர் எம்.பி.யின் பெயரை குறிப்பிட்டிருக்கக் கூடாது" என்றார்.

    இது தொடர்பாக அபிஷேக் சிங்வி கூறுகையில் "இதுபோன்ற விசயத்தை தற்போது முதன்முறையாக நான் கேட்கிறேன். இதற்கு முன்னதாக இப்படி கேட்டது இல்லை. நான் மாநிலங்களவை சென்றபோது ஒரேயொரு 500 ரூபாய் நோட்டுதான் எடுத்துச் சென்றேன். நான் மாநிலங்களவைக்கு 12.57 மணிக்கு சென்றேன்.

    ஒரு மணி வரை அங்கே இருந்த நிலையில், ஒன்றரை மணி வரை கேன்டீனில் இருந்தேன். பின்னர் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறினேன். 3 நிமிடங்கள் மட்டுமே அவைக்குள் இருந்தேன். 30 நிமிடங்கள் கேன்டீனில் இருந்தேன். இந்த விசயத்தில் அரசியல் செய்வது விசித்திரமாக உள்ளது.

    உண்மையிலேயே இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். யாராவது அங்கு வந்து எந்த இருக்கையில் எதையும் வைக்க முடியும். அதாவது, நாம் ஒவ்வொருவரும் இருக்கையை பூட்டி, சாவியை எம்.பி.யால் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய இருக்கை இருக்க வேண்டும், ஏனென்றால் எல்லோரும் இருக்கையின் மீது எதாவது விஷயங்களைச் செய்து அதைப் பற்றி குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம்" என்றார்.

    பா.ஜ.க. எம்.பி. சுதான்ஷு இது தொடர்பாக கூறுகையில் பணம் தொடர்பாக யாராவது வந்து கேட்பார்கள் என தலைவர் எதிர்பார்த்தார். யாரும் கேட்கவில்லை என்பதால், இந்த விவகாரம் அவைக்கு வந்துள்ளது என்றார்.

    மேலும், கூறுவதையோ தெளிவுபடுத்துவதையோ விட, எதிர்க்கத் தொடங்கிவிட்டனர். அவர்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறது. அங்கே இங்கே எவ்வளவு பணத்தை விட்டுச் செல்கிறோம் என்பது குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. காங்கிரஸ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் இருக்கலாம் என்றார்.

    • உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் 10k என்றும் 1 லட்சம் ரூபாய் 100 k என்றும் குறிக்கப்படுகிறது.
    • பணம் மட்டுமல்லாது பொதுவாகவே 1000 என்பதற்கு k என்ற எழுத்து பயன்பாட்டில் உள்ளது.

    ஆயிரங்களில் பணத்தைக் குறிப்பிடும்போது k என்ற எழுத்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் 10k என்றும் 1 லட்சம் ரூபாய் 100k என்றும் குறிக்கப்படுகிறது.

    பணம் மட்டுமல்லாது பொதுவாகவே 1000 என்பதற்கு k என்ற எழுத்து பயன்பாட்டில் உள்ளது. சுருக்கமாக இருப்பதால் இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தாண்டி இதற்குப் பின்னால் காரணமும் இல்லாமலில்லை.

    k என்பது கிலோய் [chilioi] எனப்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்படுகிறது. இதன் உச்சரிப்பு khil-ee-oy என்பதாக இருப்பதால் k என்ற வார்த்தை அதன்மூலம் பொதுப்பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இந்த கிலோய் வார்த்தைக்கு 'ஆயிரம்' என்று அர்த்தம். கிலோய் என்ற வார்த்தையை பிரஞ்சுகாரர்கள் கிலோ என மாற்றி பயன்படுத்தினர். அதன்படி ஆயிரம் என்று பொருள் வருமாறு மெட்ரிக் முறையில் கிலோ என்று கூறப்படுகிறது. கிலோகிராம் [1000 கிராம்], கிலோமீட்டர் [1000 மீட்டர்] என்பவை இதற்கு உதாரணமாகும்.

    • பணப்பையுடன் கூடிய அசல் ஆவணங்களை தவறி விட்டு விட்டார்.
    • பணம், ஆவணங்களை நேர்மையுடன் ஒப்படைத்த அன்சாரியை போலீசார் மற்றும் மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    கரூர்:

    கரூர், வடக்கு பிரதட்சணம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் (வயது 66). பத்திர எழுத்தரான இவர் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்காக, கரூர் பேருந்து நிலையத்தை கடந்து தின்னப்பா தியேட்டர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, வழியில் அவருடைய பணப்பையுடன் கூடிய அசல் ஆவணங்களை தவறி விட்டு விட்டார். இதனை அவ்வழியாக வந்த கரூரை சேர்ந்த வாலிபர் லியாகத் உசேன் அன்சாரி என்பவர் எடுத்து வந்து கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதையடுத்து திருவேங்கடத்தை போலீசார் தொடர்பு கொண்டனர். இதையடுத்து அவரது ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்களை லியாகத் உசேன் அன்சாரி முன்னிலையில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.

    தவறவிட்ட பணத்தை அரை மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொண்ட முதியவர் திருவேங்கடம் காவல்துறை மற்றும் பணத்தை எடுத்து வந்து ஒப்படைத்த லியாகத் உசேன் அன்சாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

    மேலும் சாலையில் கிடைத்த பணம், ஆவணங்களை நேர்மையுடன் ஒப்படைத்த லியாகத் உசேன் அன்சாரியை போலீசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • கணேசன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.
    • பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள உன்னங்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 42).

    இவரிடம் கடந்த 1 ஆண்டுக்கு முன் ஏர்வாடி அருகே உள்ள இளைய நயினார்குளத்தை சேர்ந்த தவசிக்கனி (52), நாங்குநேரி சன்னதி தெருவை சேர்ந்த ஜோதிபாஸ் (42) ஆகிய இருவரும் தலையாரி வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    ஆனால் கணேசனுக்கு தலையாரி வேலை கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கணேசன் இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்டார். அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து கணேசன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தவசிக்கனி, ஜோதி பாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணைக்கு பின் இருவரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

    • கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • மர்ம நபர் தன் முகத்தை மறைக்கவோ, முகமூடி அணியவோ இல்லை.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த அத்தாணி-சத்தியமங்கலம் சாலை கள்ளிப்பட்டி பகுதியில் சாலையோரம் பல வணிக கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.

    இந்நிலையில் சாலையோரத்தில் உள்ள உரக்கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர்கள் இன்று காலை வழக்கம் போல் கடைக்கு சென்றனர். அப்போது 2 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது டேபிள் டிராயரில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    பின்னர் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கோமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் பூட்டி இருந்த உரக்கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகளுக்கு டிப்டாப் உடையணிந்த மர்ம நபர் ஒருவர் வந்தது பதிவாகி இருந்தது. அந்த மர்ம நபர் தன் முகத்தை மறைக்கவோ, முகமூடி அணியவோ இல்லை. அக்கம் பக்கம் பார்த்து நோட்டமிட்டவாறே கடைகளில் அமர்ந்து அடுத்தடுத்து உள்ள 2 கடையின் சட்டர்களையும் இரும்பு கம்பி கொண்டு நெம்பி 2 கடைகளுக்குள் சென்று பணத்தை கொள்ளையடித்து சென்றது சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி உள்ளது.

    இந்த காட்சி தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் பிடித்து கைது செய்வதோடு, இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • உலர் பழங்கள் விற்பனையில் ஈடுபடலாம் என கூறி ஏமாற்றியுள்ளது.
    • வடமாநிலங்களில் இருந்து நெட்வொர்க் அமைத்து அரங்கேற்றப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் ஆன்லைன் மோசடிக் கும்பல் தொடர்ச்சியாக பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி வருகிறது.

    நேற்று ஒரே நாளில் 3 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக மோசடிக் கும்பல் பணத்தை எடுத்துள்ளது. கொளத்தூரை சேர்ந்த கிரி பிரசாத் என்பவரிடம் பேசிய மோசடிக் கும்பல் அவரிடம் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை வாரி சுருட்டியுள்ளது.

    ராஜமங்கலம் பகுதியில் ஆகாஷ் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.58 ஆயிரமும், அமைந்தகரை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவரிடமிருந்து ரூ.70 ஆயிரம் பணமும் அபேஸ் செய்யப்பட்டது. இவர்களிடம் பேசிய கும்பல் உலர் பழங்கள் விற்பனையில் ஈடுபடலாம் என கூறி ஏமாற்றியுள்ளது.

    இது தொடர்பாக தனித் தனியாக அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற மோசடிகள் வடமாநிலங்களில் இருந்து நெட்வொர்க் அமைத்து அரங்கேற்றப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • எடியூரப்பா மீது சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
    • பெண்னின் வீட்டுக்குச் சென்று தாயையும் மகளையும் தங்களின் இடத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

    பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான 81 வயதான எடியூரப்பா தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது.

    அதன்படி சிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் எடியூரப்பா மீது சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணும் அவரது தாயும் தங்களுக்கு நேர்ந்தது குறித்து வாய் திறக்காமல் இருக்க எடியூரப்பா மற்றும் அவரது சகாக்கள் 3 பேர் அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர் என்று சிஐடி அம்பலப்படுத்தியுள்ளது.

    கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பேஸ்புக்கில் எடியூரப்பாவை குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், எடியூரப்பாவின் சகாக்களான அருண், ருத்ரேஷ், மாரிச்சாமி ஆகியோர் அப்பெண்னின் வீட்டுக்குச் சென்று தாயையும் மகளையும் தங்களின் இடத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

    அங்கு வைத்து பெண்ணின் தாய் பேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவை நீக்க வறுபுறுத்தியுள்ளனர். மேலும் எடியூரப்பாவின் கட்டளைப்படி அவர்களுக்கு ரூ. 2 லட்சம் ரொக்கமாக அளித்துள்ளனர் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கடந்த மாதம் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இவரது கணவன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. மேலும் மகள் திருமணமாகி சென்றுவிட்டார்.
    • கட்டிட வேலைகளில் தினக்கூலியாக பணி செய்து வயிற்றைக் கழுவியும் மகனை வளர்த்தும் வந்தார்.

    திரிபுராவில் தனது 9 வயது மகனை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம் அகார்தலாவில் உள்ள ஜோயாநகர் பகுதியில் சுபர்ணா பால் என்ற பெண் தனது 9 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

    இவரது கணவன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. மேலும் மகள் திருமணமாகி சென்றுவிட்டார். பணத்துக்கு மிகவும் சிரமப்படும் சுபர்ணா, கட்டிட வேலைகளில் தினக்கூலியாக பணி செய்து வயிற்றைக் கழுவியும் மகனை வளர்த்தும் வந்தார்.

    இந்நிலையில் நேற்று(ஜூன் 10) மாலை வீட்டில் வைத்து தனது 9 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மகனின் பிணத்துக்கு அருகிலேயே பிரம்மை பிடித்து உட்கார்ந்திருந்திருக்கிறார் அபர்ணா. கொலை குறித்து தகவலறிந்து வந்த போலீசாரிடம், தானே தனது மகனை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மேலும் அவர் போலீசாரிடம், மகன் தனது சொல் பேச்சு கேட்பதில்லை எனவும் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்பதால் மன உளைச்சலில் இருந்ததாக கூறினார். அதைத்தொடர்ந்து, வீட்டில் வைத்திருந்த பணத்தை திருடியதால் மிகுந்த ஆத்திரத்தில் மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். ஏறக்குறைய உலகின் அனைத்து குற்றங்களுக்கும் காரணமாக உள்ள பணத்தால் மற்றொரு ஏழைக் குடும்பம் நிர்மூலமாக்கியுள்ளது என்றே இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

     

     

    • இதுவரை இல்லாத அளவுக்கு நகை மற்றும் பணம் சிக்கியிருக்கிறது.
    • டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்கள் முதலிடம் பிடித்துள்ளன.

    புதுடெல்லி:

    வரலாற்றிலேயே முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் ரூ.1,100 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்து சாதனை படைத்து இருக்கிறது.

    நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களின்போது வாக்காளர்களுக்கு பணம், மது, ேபாதைப்பொருட்கள், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் என இலவசங்களை வழங்குவதை தடுக்க தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த படையினர் கணக்கில் வராத பணம் மற்றும் பொருட்களை எடுத்துச்செல்வோரிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அந்தவகையில் தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தல் காலத்திலும் இந்த சோதனை நடவடிக்கைகள் நடந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் மத்திய விசாரணை அமைப்புகள் இந்த கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டன.

    வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற இந்த மத்திய விசாரணை அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றவர்களிடம் இருந்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    தேர்தல் கமிஷனின் இந்த கண்டிப்பான நடவடிக்கைகளால் இதுவரை இல்லாத அளவுக்கு நகை மற்றும் பணம் இந்த முறை சிக்கியிருக்கிறது.

    அந்தவகையில் கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை ரூ.1,100 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

    இவ்வளவு அதிகமான பணம் மற்றும் நகை சிக்கியிருப்பது இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறை ஆகும். கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இது 182 சதவீதம் அதிகம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்தவகையில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ரூ.309 கோடி மதிப்பிலான நகை-பணம் சிக்கியிருந்தது.

    இந்த ஆண்டு அதிக பணம் மற்றும் பொருட்கள் சிக்கியதில் டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்கள் முதலிடம் பிடித்துள்ளன. இந்த மாநிலங்களில் தலா ரூ.200 கோடிக்கு அதிகமான பணம் மற்றும் நகைகள் சிக்கியுள்ளன.

    ரூ.150 கோடிக்கு அதிகமான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு 2-ம் இடத்தை பிடித்து இருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் கூட்டாக ரூ.100 கோடிக்கு அதிகமான பணம் மற்றும் பொருட்கள் சிக்கியிருக்கின்றன.

    நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,100 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • மாணவ, மாணவிகள் போலியான நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
    • வெளிநாட்டு வேலை மற்றும் படிப்புக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதனை மாணவர்கள், இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாட்டிற்கு வேலை மற்றும் படிக்க விண்ணப்பிக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் போலியான நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெளிநாட்டு வேலை மற்றும் படிப்புக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதனை மாணவர்கள், இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே கல்வி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பக் கட்டணம் மற்றும் முதலீடுகள் செலுத்துவதை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.

    ஆசை வார்த்தைகளை விளம்பரப்படுத்தும் போலி நிறுவனங்களை நம்பி கல்வி தொடர்பான ஆவணங்கள் மற்றும் தொகை செலுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த நிறுவனங்களால் வெளிநாட்டில் வேலை, கல்லுாரிகளில் சேர வாய்ப்புகள் வாங்கித்தர அலைக்கழிக்கப் படும்போது இந்நிறுவனங்களுக்கு அளித்த ஆவணங்கள் மற்றும் முதலீடுகள் திரும்ப பெறுவது கடினமான பணியாகும். மேலும் இந்த பரிமாற்றத்திற்கு முறைப்படி சிவில் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டி உள்ளதால் காலதாமதம் ஏற்பட்டு பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே இளைஞர்களும் மாணவ, மாணவிகளும் மற்றும் பெற்றோர்களும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×