search icon
என் மலர்tooltip icon
    • வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற சாதனை மலரை அமைச்சர் வெளியிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, 'பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம், வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்' என்றார்.

    பின்னர் 'ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற சாதனை மலரை அமைச்சர் வெளியிட்டார். முன்னதாக திருப்பூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
    • கோவை வேளாண் பல்கலைகழகம் தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு நிலவும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால், விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்பட பல்வேறு நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே தென்னை மரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும் வகையில் கோவை வேளாண் பல்கலைகழகம் சார்பில்தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் தென்னை ஊட்டச்சத்து டானிக் எளிதாக விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து டானிக் மானியத்தில் வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் கூறியதாவது :- தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்பட பல்வேறு நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் கோவை வேளாண் பல்கலைகழகம் தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.ஆனால் தென்னை ஊட்டச்சத்து டானிக் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது. எனவே தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் அதனை கொள்முதல் செய்து தென்னை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்/ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
    • தமிழக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.

    காங்கயம் :

    காங்கயம், சென்னிமலை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தமிழக எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.எஸ்.என்.நடராஜ் வரவேற்றார். கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில்எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்.பி.சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன், காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்ஷன், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி,காங்கயம் யூனியன் கவுன்சிலர் பாப்பினி மைனர் பழனிசாமி , காங்கயம் நகராட்சி கவுன்சிலர் அருண்குமார், அ.தி.மு.க. பிரமுகர்கள் பி.கே.பி. சண்முகசுந்தரம், என்.எஸ்.என். தனபால் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • 10-ம் வகுப்பு தேர்வில் 30 ஆயிரத்து 152 பேர் எழுதினர்.
    • 10-ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 28 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சிப் பெற்றனர்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20ந் தேதி வரை நடந்தது. இத்தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 312 பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 67 மாணவர்கள், 15 ஆயிரத்து 85 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 152 பேர் எழுதினர். இதன் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 152 மாணவ, மாணவிகளில் 13 ஆயிரத்து 785 மாணவர்கள், 14 ஆயிரத்து 538 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சிப் பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.93 ஆகும். இது கடந்த ஆண்டை விட 5.47 சதவீதம் அதிகம். தேர்வு எழுதிய மாணவர்களில் 91.49 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கடந்த ஆண்டு 29வது இடம் பிடித்திருந்த நிலையில் தற்போது 18 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் 47 அரசு பள்ளிகள்,1 அரசு உதவி பெறும் பள்ளி, 104 தனியார் பள்ளிகள்,10 சுயநிதி பள்ளி என மொத்தம் 162 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    • அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
    • வளர்ச்சிக்கு தேவையானவற்றை அரசு செய்ய வேண்டும்

    திருப்பூர்  :

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். திருப்பூர் மாநகரில் பின்னலாடை தொழில் நிலவரம், தொழில் வளர்ச்சி குறித்து கலந்துரையாடினார். தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனையும் சந்தித்து பேசினர்.

    இதுகுறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறும்போது, திருப்பூரின் தொழில் நிலை குறித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரிடம் முறையிட்டோம். தொழில் வளர்ச்சிக்கு தேவையானவற்றை அரசு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். தொழில் வளர்ச்சிக்கு தேவையானவை குறித்து தொழில்துறையினருடன் கலந்து ஆலோசிக்க திருப்பூர் வர வேண்டும் என்று அமைச்சருக்கு அழைப்பு விடுத்தோம். நிச்சயம் திருப்பூர், கோவை வந்து தொழில்துறையை சந்தித்து கலந்துரையாடுவதாக தெரிவித்துள்ளார் என்றார்.

    • பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது
    • இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.இம்மலை மேல் வனப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இந்து அறநிலையத் துறையின் கீழ் அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பஞ்சலிங்க அருவியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.கழிப்பிடம், பெண்க ளுக்கான உடை மாற்றும் அறை மற்றும் அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கடந்த 2008ல் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 13 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.அப்போதைய தி.மு.க., அரசு சார்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டது.பஞ்சலிங்க அருவி மற்றும் அடிவாரத்திலுள்ள கோவிலைச்சுற்றிலும் 50 ஏக்கர் நிலத்தை இந்து அறநிலையத் துறைக்கு ஒப்படைக்கவும் கோரிக்கை எழுந்தது. ஆனால் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

    கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், திருமூர்த்திமலை மற்றும் பஞ்சலிங்க அருவி பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த போதிய இடமில்லை. பல முறை கருத்துரு அனுப்பியும், வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பல்வேறு திட்ட பணிகள் முடங்கியுள்ளது என்றனர்.தமிழக அரசு வனத்துறை இடத்தை இந்து அறநிலையத் துறைக்கு ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. 

    • சுய தகவல் படிவத்துடன் கலந்துகொள்ளலாம்.
    • பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது

    திருப்பூர் : 

    திருப்பூர் பல்லடம் சாலையில்உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 30-க்கும்மேற்ப ட்ட தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களைதேர்வு செய்ய உள்ளனர். அது சமயம் வேலைநாடுபவர்கள் தங்கள்வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்துகொள்ளலாம்.வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள்வருகையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவுசெய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலைபட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சிபெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும் வேலைநாடுபவ ர்களும் வேலையளி ப்போரும்https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரி செய்துபுது ப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம்.தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ண ப்பம் பெற்றுஉதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால்த ங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152-9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • உறவினர்களுக்கு பயந்து காதலர்கள் அவினாசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    • வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி கமிட்டியார்காலனியைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 23) .இவர் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். உறவினர்களுக்கு பயந்து காதலர்கள் அவினாசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் ரஞ்சினியின் தாய்மாமா கிருஷ்ணசாமி மற்றும் தினேஷ்,கோபி ஆகியோர் மதன்குமாரின் அண்ணன் நரேந்திரன் வீட்டுக்கு சென்று உன் தம்பி எப்படிடா எங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி அவரை அடித்துள்ளனர். இதில் நரேந்திரன் காயம் அடைந்தார்.

    இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். காயம் அடைந்த நரேந்திரன் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    • கடையில் இருந்த செருப்புகள் மற்றும் ஷோகேஸ் உள்ளிட்ட அனைத்தும் தீப்பிடித்து எரிந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    அவினாசி :

    அவினாசி கோவை மெயின்ரோட்டில் போலீஸ் நிலையம் எதிரில் நகை கடை, பேக்கரி, ஆயில் ஸ்டோர், ஓட்டல், மளிகை கடைகள், பேன்சி ஸ்டோர் என உள்ளது. அந்த வரிசையில் தனியார் செருப்புக்கடை உள்ளது.

    நேற்று மாலை 6 மணியளவில் அன்சாருதீன் என்பவரது செருப்புக்கடையில் இருந்த யு.பி.எஸ் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து. இதில் ஷோ கேசில் இருந்த செருப்புகள் பற்றி எரிந்தது. அப்போது கடையில் இருந்த ஆக்கிப் (20) என்ற ஊழியர் நெருப்புகளுக்கு இடையில் சிக்கி கொண்டு வெளியேற முடியாமல் தவித்துள்ளார். அப்போது கடையின் முன்நின்றிருந்த சிலர் உதவியுடன் வெளியேற்றப்பட்டார். உடனடியாக கடையில் இருந்தவர்கள் வெளியேறியதால் அவர்கள் தப்பினர். இதுகுறித்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் வருவதற்குள் கடையில் இருந்த செருப்புகள் மற்றும் ஷோகேஸ் உள்ளிட்ட அனைத்தும் தீப்பிடித்து எரிந்தது. மேலும் பக்கத்து கடைகளிலும், செருப்பு கடையின் மேல்தளத்திலும் தீப்பிடித்து எரிந்தது. தீ பரவ ஆரம்பித்தது.உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து கடைவீதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ கட்டுக்குள் வந்தாலும் கடைக்குள் இருந்த பொருட்கள் மீண்டும், மீண்டும் தீப்பிடித்து எரிந்தது. எனவே திருப்பூர் குமார் நகரிலிருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. இதில் பக்கத்தில் இருந்த மற்றொரு செருப்புக் கடையிலும் தீ பரவி கடை பெயர்ப்பலகை உள்ளிட்ட சில பொருட்கள் எரிந்தது. தீவிபத்தால் கடைவீதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது.

    தகவல் அறிந்து வந்த அவினாசி தாசில்தார், போலீஸ் துணை சூப்பிரண்டு பவுல்ராஜ் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தீ விபத்தின் காரணமாக அவினாசி மெயின்ரோட்டில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவினாசி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    • குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.
    • கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள கிரீன் பார்க் லேஅவுட் பகுதியில் புதியதாக பிரகதீஸ் என்பவர் வீடு ஒன்று கட்டி வருகின்றார். இந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.

    உடனே கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குதிரையை ராட்சத கயிறு மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி வெளியே கொண்டு வந்தனர்.குதிரையை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • மொத்தம் 266 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
    • வாகனங்களில் பிரேக் சரியாக உள்ளதா கதவுகள் சரியாக இயங்குகிறதா குறித்து ஆய்வு செய்தனர்.

    உடுமலை :

    உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் ,உடுமலை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா, பள்ளி கல்வி அதிகாரி ஆனந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, கண்காணிப்பாளர்கள் அருணாச்சலம், தங்கராஜ், தீயணைப்பு அலுவலர் கோபால், போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடுமலையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    கூட்டு ஆய்வுக்கு வந்திருந்த வாகனங்கள் 156. சரியாக உள்ள வாகனங்கள் 124, குறைபாடு உள்ள வாகனங்கள், தகுதி சான்று நீக்கம் செய்யப்பட்டவை 32 ,பணிமனையில் வேலைக்காக பணி மேற்கொண்டு வரும் வாகனங்கள் 110 எனமொத்தம் 266 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது வாகனங்களில் பிரேக் சரியாக உள்ளதா கதவுகள் சரியாக இயங்குகிறதா , உறுதியாக உள்ளதா ,தீயணைப்பு கருவிகள் ,முதலுதவி வசதி , அவசரகால கதவுகள் குறித்து ஆய்வு செய்தனர். வாகன ஓட்டுனர்களின் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அவர்களின் உடல் தகுதி திறனும் ஆய்வு செய்யப்பட்டது. அவசரகால மீட்புப் பணி குறித்து ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர்.

    • பிளாக் கவுண்ட் முறையில் 15 கிலோமீட்டர் நடந்து நேரடியாக யானைகள் கணக்கிடப்படும்.
    • யானைகளின் சாணம் மூலமாக மறைமுக கணக்கெடுப்பு நடைபெறும்.

    உடுமலை :

    ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அளவில் நடைபெறும். அதன்படி தென்னிந்தியாவில் கோவா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் 19ந் தேதி வரை நடைபெறுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுகளிலும் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

    முதல் நாளான இன்று பிளாக் கவுண்ட் முறையில் 15 கிலோமீட்டர் நடந்து நேரடியாக யானைகள் கணக்கிடப்படும். நாளை இரண்டு நேர்கோட்டு பாதையில் நடந்து யானைகளின் சாணம் மூலமாக மறைமுக கணக்கெடுப்பு நடைபெறும். நாளை மறு நாள் நீர் நிலைகளுக்கு அருகில் இருந்து நேரடியான முறையில் யானைகளின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்படும் .கணக்கெடுப்பு பயிற்சிக்காக களப்பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் தரவு சேகரிப்பு புத்தகம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் வனக்கோட்ட வன உதவி பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ் ராம் தலைமையில் இப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் உடுமலை பேட்டை வனச்சரகஅலுவலர், அமராவதி வனச்சரக அலுவலர், கொழுமம் வனச்சரக அலுவலர் மற்றும் வந்தரவு வனத்துறை அலுவலர், உயிரியலாளர் மகேஷ் குமார், வனவர்கள் ,வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    ×