ஆன்மிக களஞ்சியம்

புனித அக்னி குளம் பற்றிய தகவல்

Published On 2023-05-16 10:30 GMT   |   Update On 2023-05-16 10:30 GMT
  • பார்வதி தேவி மீனவ சமுதாயத்தை சேர்ந்த மலையரசன் மகளாக பிறந்து மேல்மலையனூரில் வளர்ந்து வருகிறார்.
  • கடும் பசியில் இருக்கும் சிவனுக்கு பார்வதி தேவி கொடுக்கும் உணவை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டுள்ள பிரம்ம கபாலம் உண்டு விடுகிறது.

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பகுதியினர் இங்குள்ள அக்னி குளத்தில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் இந்த அக்னி குளத்தின் சிறப்பும் புராணமும் தெரிந்திருப்பதில்லை.

பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவபெருமானுக்கு சரஸ்வதி தேவி கொடுக்கும் சாபத்தினால் கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. இந்த கபாலம் சிவனுக்கு படைக்கும் உணவை உண்டு விடுவதால் பசியால் வாடிய சிவபெருமானுக்கு பித்து பிடித்து காடு மலைகளில் சுற்றி திரிந்தார்.

இதை பார்த்த பார்வதி தேவி மகாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார். மேல்மலையனூரில் நடக்கும் மயான கொள்ளையின்போது சிவபெருமானுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என மகாவிஷ்ணு கூறியதுடன் சாப விமோசனத்திறக்காக வழியையும் கூறுகிறார்.

இதன்படி பார்வதி தேவி மீனவ சமுதாயத்தை சேர்ந்த மலையரசன் மகளாக பிறந்து மேல்மலையனூரில் வளர்ந்து வருகிறார். பார்வதி தேவி திருமண வயதை அடைந்திருந்த நேரத்தில் காடுமலைகளில் சுற்றி திரியும் சிவபெருமான் மாசி மாதம் மகா சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார். சிவபெருமான் வந்துருப்பதை அறிந்த கொள்ளும் பார்வதி தேவி மறுநாள் நடக்கும் மயானக்கொள்ளையில் சிவனுக்கு படைக்க சுவையான உணவை கொண்டு வருகிறார்.

கடும் பசியில் இருக்கும் சிவனுக்கு பார்வதி தேவி கொடுக்கும் உணவை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டுள்ள பிரம்ம கபாலம் உண்டு விடுகிறது. உணவை எடுக்க சிவபெருமானின் கரத்தில் இருந்த விடுபட்டு கீழே இறங்கும் பிரம்ம கபாலத்தை பார்வதி தெவி விஸ்வரூபம் எடுத்து தனது காலால் பூமியில் மிதித்து ஆட்கொள்கின்றார். இதன் பிறகு சிவபெருமானுக்கு சாப விமோசனம் ஏற்படுகிறது.

கோபத்தினால் அக்னி பிழம்பாக மாறும் பார்வதி தேவி இங்குள்ள அக்னி குளத்தில் குளித்ததாக புராணம் கூறுகிறது.

இதன் பிறகும் தனியாத பார்வதி தேவியின் கோபத்தை தணிக்க தேவர்கள் ஒன்று கூடி தேர் திருவிழா நடத்தினர். இதில் தேவர்களே தேரின் பாகங்களாக இருப்பது விழா எடுக்கின்றனர். இந்த விழாவே இன்று வரை மேல்மலையனூரில் மாசி திருவிழாவாக நடந்து வருகிறது.

இந்த பகுதி மக்கள் அக்னி குளத்தை புனிதமாக நினைத்து இதில் குளிப்பதை தவிர்த்தனர். மேலும் குளத்தின் நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். பக்தர்கள் நீராடி வேண்டுமென்றால் குளத்தில் எடுத்து வந்து ஒதுக்குப்புறமாக குளித்தனர்.

தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் குளத்தின் மையப்பகுதிக்கே சென்று குளிக்கின்றனர். மேலும் ஒரு படி மேலே சென்று அணிந்திருக்கும் துணிகளை குளத்தின் உள்ளே போட்டுவிடுகின்றனர். இதனால் இதை அறியாத சில பக்தர்கள் குளத்தினுள் இறங்கும்போது துணிகளில் சிக்கி விபத்துகள் பல நேர்ந்து இருக்கின்றன.

இனியாவது பக்கதர்கள் குளத்தின் புனிதத்தை உணர்ந்து குளத்தினுள் இறங்கி குளிப்பதை தவிர்த்தாலே அம்மனின் பூர்ண அருள் கிடைக்கும்.

Tags:    

Similar News