ஜோதிர்லிங்கக் கோவில்கள்... ஒரு பார்வை
- மகாராஷ்டிராவிலுள்ள ஒளரங்காபாத் என்ற இடத்தில் கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் அமைந்துள்ளது.
- சிவபக்தியுடைய ராவணன் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுக்குள் ஒரு லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பினான்.
இந்தியாவிலிருக்கும் முக்கியமான சிவபெருமானின் 12 தலங்களில் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் அமைந்திருக்கின்றன என்கிறார்கள். இவை இந்தியாவில் அமைந்திருக்கும் இடங்களையும் அவை எப்படி அந்த இடங்களில் அமைந்தன என்பது குறித்த தகவல்களையும் சிவபுராணம் சொல்லுகிறது. அந்த பன்னிரண்டு ஜோதிர்லிங்கக் கோவில்கள் குறித்த சிறு தகவல்களை இங்கே காணலாம்.
1. சோமநாத் ஜோதிர்லிங்கம் கோவில் - சோமநாதம் (குஜராத்)
சோமா என்ற இன்னொரு பெயரைக் கொண்ட சந்திர பகவான் ரோகிணியையும் தக்ஷ மகாராஜாவின் மகளையும் மணந்து கொண்டார். இரு மனைவிகளுக்குள் சோமா ரோகிணியை அதிகமாக நேசித்தார். இதை அறிந்த தக்ஷ மஹாராஜா சோமாவிற்கு சாபம் கொடுத்தார். சந்திரபகவான் ஒளியிழந்து தேயத் தொடகினார். சந்திரனின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட தக்ஷன் ப்ரபாஸா என்ற இடத்தில் சோமாவிற்கு சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்குமென்ற பரிகாரத்தையும் சொன்னார்.
அந்த இடத்திற்கு சென்ற சோமா ஒளியையும், தோற்றத்தையும் முழுமையாக பெற்றான். சந்திர பகவான் ப்ரபாஸாவில் சிவபெருமானுக்காகத் தங்கத் தகடுகளால் ஜொலிக்கும் சோமநாதர் கோவிலைக் கட்டினார். அரபிக்கடலின் தென்மேற்கு திசையிலுள்ள குஜராத் மாநிலத்தில் இந்தக் கோவில் இடம் பெற்றுள்ளது. சந்திர பகவானால் கட்டப்பட்ட சோமநாத் கோவில் சேதமடைந்து பிறகு ராவணன், கிருஷ்ண பரமாத்மா, பீமனால் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோவில் 1026ஆம் ஆண்டில் முகமது கஜினி அழித்தான். அதன் பிறகு சோமநாத் கோவில் பல முறை புதுபிக்கப்பட்டது. தற்சமயமுள்ள சோமநாத் மந்திர் ஏழாவது முறையாக 1950ஆம் ஆண்டில் புதுபிக்கப்பட்டது.
2. மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோவில் - ஸ்ரீசைலம் (ஆந்திரா)
கிருஷ்ணா நதியின் தென்திசையை ஒட்டி ரேஷபாகிரி மலைத்தொடரில் சிவபெருமான் உருவெடுத்து லிங்க வடிவத்தில் மாறினார் என்று சிவபுராணம் சொல்லுகிறது. இந்தக் கோவில் 1404ஆம் ஆண்டில் ஹரிஹர ராயா என்ற அரசனால் கட்டப்பட்டது. 8 மீட்டர் உயரத்தில் இந்தக் கோவிலைச் சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுன கோவிலுள்ள லிங்கம் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முன்காலத்தில் மக்கள் இந்த லிங்கத்தை மல்லிகை மலர்களால் பூஜை செய்து வந்தார்கள். அதனால் இந்த லிங்கம் மல்லிகார்ஜுன லிங்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து திரும்பிய ராமபிரான் இந்தக் கோவிலுக்கு வருகை தந்ததாகவும் அந்தச் சமயத்தில் ஸ்ரீ ராமர் ஸஹஸ்ரலிங்கத்தை நிறுவியதாகவும் புராணம் சொல்லுகிறது. இங்கு இவர் 1001 சிறிய லிங்கங்களை உருவாக்கினார் என்ற பெருமையும் இருக்கிறது. இந்தக் கோவிலில் பிரம்மராம்பிகா தேவியின் (பார்வதி தேவியின் இன்னொரு பெயர்) சன்னதியும் இடம் பெற்றுள்ளது.
3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் - உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)
துஷானா என்ற அரக்கன் அவந்தி நாட்டு மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். அவனுடைய கொடுமையை அழிக்கவும் அவனிடமிருந்து மக்களைக் காக்கவும் சிவபெருமான் இந்த பூமியில் தோன்றினார். துஷானாவைக் கொன்று அவந்தி நாட்டு மக்களை கொடுமையிலிருந்து விடுவித்தார். அதன்பிறகு மக்கள் சிவபெருமானை அங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டதின் காரணத்தால் மஹா கால் லிங்கமாக உருவெடுத்தார்.
மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் மாநகரத்தில் இந்த மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஐந்து பிரிவுகளைக் கொண்டது. மாபெரும் சக்தியைக் கொண்ட சுயம்புவாக தோன்றிய மஹாகால் லிங்கம் கோவிலின் அடித்தளத்தில் உள்ளது. இதற்கு மேல்தளத்தில் விநாயகர், பார்வதி, கார்த்திகேயன் சன்னதிகள் இடம் பெற்றுள்ளன.
மூன்றாவது தளத்தில் நாக சந்திரேஷ்வரர் சன்னதி உள்ளது. இந்தச் சன்னதியின் கதவுகள் நாகபஞ்சமியன்று திறந்து வைக்கப்படுகின்றன. கோவிலின் பிரதான சன்னதியில் 100 கிலோ எடையுள்ள வெள்ளித் தகடுகளால் செய்யப்பட்ட ருத்ரயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு காரகன் சிவபெருமான். இந்தக் கோவிலில் மஹாகாலேஷ்வர் லிங்கத்திற்கு மனிதப் பிணம் எரிக்கப்பட்ட சாம்பலால் அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)
நர்மதை, காவேரி ஆகிய இரண்டு நதிகள் கூடுமிடத்திலுள்ள மன்ஹாடா தீவில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. ஓம் என்ற வடிவத்திலுள்ள இந்தத் தீவின் வடதிசையில் கௌரிசோமநாதர் கோவில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோவிலில் அர்ஜுனன், பீமனின் மூர்த்திகளும் இடம் பெற்றுள்ளன. பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட சித்தநாத் கோவிலும் இந்தத் தீவில் இடம் பெற்றிருக்கிறது. நவராத்திரி, கார்த்திகை, பௌர்ணமி ஆகிய பண்டிகைகள் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோவில் - வாரணாசி எனும் காசி (உத்தரப்பிரதேசம்)
18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருக்கிறது. வாரணாசியை காசி என்றும் அழைக்கிறார்கள். இந்தோரை ஆண்ட அஹில்யாபாய் ஹோல்கர் என்ற மஹாராணி இந்தக் கோவிலைக் கட்டினார். கோவிலின் பிரதான சன்னதியிலுள்ள தங்கத்தகடுகள் மகாராஜா ரஞ்ஜித் சிங்கினால் வழங்கப்பட்டது. இந்தக் கோவிலுள்ளே ஞானவியாபி கிணறு ஒன்று உள்ளது.
விஸ்வநாதர் சன்னதியில் வைக்கப்பட்டுள்ள லிங்கமும் இந்தக் கிணற்றிலிருந்துதான் கிடைக்கப் பெற்றது என்று புராணங்கள் சொல்லுகின்றன. தாமரை புஷ்பம், மந்தாரை புஷ்பம் ஆகியவைகளால் அலங்கரிக்கப்பட்ட லிங்கத்திற்கு தினந்தோறும் பாலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தண்டபாணி, மஹாவிஷ்ணு, காலபைரவன் சன்னதிகளும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருக்கின்றன.
6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோவில் -இமயம் (உத்தரப்பிரதேசம்)
ருத்ர இமயமலைத் தொடரில் இடம் பெற்றுள்ள இந்தக் கேதாரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் வருடத்தில் ஆறு மாதத்திற்கு மட்டும் திறக்கப்படுகிறது. மற்ற ஆறு மாதத்திற்கு மூடி வைக்கப்படுகிறது. பார்வதி தேவி சிவபெருமானுடன் இணைந்து அர்த்தநாரேஷ்வரராக தோற்றமளிக்க கேதாரேஷ்வரரை பிரார்த்தனை செய்தாள். பார்வதியின் வேண்டுதலுக்காக இங்கு சிவபெருமான் கேதாரேஷ்வர லிங்கமாக உருவெடுத்தார். இந்தக் கோவிலினுள்ளே பார்வதி, விநாயகர் சன்னதிகளும் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவர்கள், திரௌபதிதேவி, குந்திதேவி போன்றவர்களின் மூர்த்திகளும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருக்கிறது.
7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோவில் - நாகநாதம் (மகாராஷ்டிரா)
த்வாரகா பெட், த்வாரகா ஆகிய இரண்டு தீவுகளுக்கிடையே நாகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோவில் உள்ளது. சிவபக்தியுடைய சுப்ரியா மற்றும் அவளுடைய தோழிகளையும் தாருகா என்ற அரக்கன் திடீரென்று தாக்கி அவர்களைக் கடத்திச் சென்று தாருகா வனத்தின் சிறையில் வைத்து கொடுமைப்படுத்தினான். சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக தோன்றி அந்த அரக்கன் தாருகாவை அழித்தார். அன்றிலிருந்து மக்கள் சிவபெருமானை நாகேஷ்வர ஜோதிர்லிங்கமாக பூஜித்து வருகிறார்கள்.
சிவ பக்தியுடைய நாமதேவர் சிவபெருமானின் புகழை அந்தக் கோவிலில் பாடி வந்தார். அவருடைய தொல்லையை தாள முடியாத மக்கள் நாமதேவரை கடவுளில்லாத இடத்தில் அமர்ந்து பாடச் சொன்னார்கள். நாமதேவர் கடவுளில்லாத இடத்தை காட்டும்படி மக்களிடம் கேட்டார். எரிச்சலடைந்த மக்கள் தென்திசையில் நாமதேவரை தூக்கிக் சென்று அமர்த்தினார்கள். திடீரென்று கிழக்கு திசையை நோக்கியிருந்த நாகேஷ்வர லிங்கம் தென்திசையை நோக்கித் திரும்பியது. கோவிலின் கோபுரம் கிழக்கு திசையை நோக்கியிருந்தாலும் பிரதான சன்னதி தென்திசையை பார்த்திருப்பது இங்கு விசேஷமானது.
8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் - குண்ருனேசம் (மகாராஷ்டிரா)
மகாராஷ்டிராவிலுள்ள ஒளரங்காபாத் என்ற இடத்தில் கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் அமைந்துள்ளது. தேவகிரி மலைத்தொடரில் சுதர்மா சுதேஹா பிராமணத் தம்பதியர்கள் வசித்து வந்தார்கள். வேதங்களை அறிந்த சுதர்மா தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியமில்லை. இதனால் வேதனையடைந்த சுதேஹா சகோதரி கிரிஷ்னாவை சுதர்மாவுக்கு மணம் செய்து கொடுத்தார். சிவபக்தியுடைய கிரிஷ்னா 101 லிங்கங்களை உருவாக்கி பூஜைகள் செய்த பிறகு ஏல கங்கா நதியில் விசர்ஜனம் செய்தாள். அவளுடைய பக்தியை கண்டு மெச்சிய சிவபெருமான் அவளுக்கு ஆண் குழந்தையை வரமாக கொடுத்தார்.
பொறாமை கொண்ட சுதேஹா அவளுடைய ஆண் குழந்தையைக் கொன்று ஏலகங்கா நதியில் தூக்கி வீசினாள். அனைத்தையும் அறிந்த கிரிஷ்னா சிவபெருமானால் கொடுக்கப்பட்ட குழந்தை அவரால் ரட்சிக்கப்படுவான் என்று மன உறுதியோடு சிவலிங்க பூஜையைத் தொடங்கினாள். லிங்கங்களை நதியில் விசர்ஜனம் செய்யும்போது அவளுடைய ஆண் குழந்தை திரும்பி வருவதைக் கண்டாள். சிவபெருமானும் அவள் முன் காட்சி தந்தார்.
தன் சகோதரியை மன்னிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டாள். தன்னுடைய பெயரில் சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக உருவெடுக்க வேண்டுமென்று அவளுடைய ஆசையையும் தெரிவித்தாள். அவளுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான் அங்கு கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கமாக காட்சி கொடுக்கிறார். இந்தக் கோவிலில் மதிய வேளையில் பஜனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோவில் - திரியம்பகம் (மகாராஷ்டிரா)
நாசிக்கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் த்ரியம்பக் என்ற இடத்தில் இந்தக் கோவில் உள்ளது. 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவில் கண்களின் வடிவத்தில் காட்சி தருவது விசேஷமானது. பிராமணர்கள் நிறைந்த த்ரியம்பக் நகரத்தில் வேத பாடசாலைகள், ஆசிரமங்கள் அதிகமாக இருக்கின்றன.
10. ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கம் கோவில் - ராமேஸ்வரம் (தமிழ்நாடு)
ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கம் கோவில் பழமையான கோவிலாகும் இந்தக் கோவிலில் பிரம்மாண்டமான நந்தி பகவான் இடம் பெற்றிருக்கிறார். சீதாதேவியால் ஸ்தாபனம் செய்யப்பட்ட ராமலிங்கம், அனுமாரால் கொண்டு வரப்பட்ட விஸ்வலிங்கம் ஆகிய இரண்டும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன் ராமேஸ்வரத்தில் சிவபெருமானுக்கு சிறப்புப் பூஜை செய்தார் என்று ராமாயணம் சொல்கிறது.
11. பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோவில் - பீமசங்கரம் (மகாராஷ்டிரா)
திரிபுரசுர அரக்கனின் தவத்தை மெச்சி சிவபெருமான் அவனுக்கு சாவில்லாத வரத்தை கொடுத்து கூடவே ஆண்பாதி, பெண்பாதி உடல் கொண்டவரால் அவனுக்கு சாவு என்று சொன்னார். சிவபெருமானிடமிருந்து வரத்தை பெற்ற திரிபுரசுரன் மக்களை கொடுமைப்படுத்தினான். அவனுடைய கொடுமையை தாளமுடியாத மக்கள் சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தார்கள்.
கார்த்திகை பௌர்ணமியன்று பார்வதி தேவி சிவபெருமானின் உடலில் புகுந்து அர்த்தநாரீஷ்வரராக மாறி திரிபுசுர அரக்கனை கொன்றார். அவனோடு போராடும் சமயத்தில் பூமியைத் தொட்ட சிவபெருமானின் வியர்வைத் துளிகள் பீம நதியாக மாறியது. அந்த இடத்தில்தான் சிவபெருமான் பீமசங்கர் ஜோதிர்லிங்கமாக காட்சி அளிக்கும் கோவில் இருக்கிறது.
12. வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோவில் - பரளி (மகாராஷ்டிரா)
சிவபக்தியுடைய ராவணன் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுக்குள் ஒரு லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பினான். அவனுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான் நேரில் காட்சி கொடுத்து, அவனிடம் சக்தி வாய்ந்த லிங்கத்தை கொடுத்தனுப்பினார். அரக்கர்கள் நிறைந்த இலங்கைக்கு ராவணன் லிங்கம் எடுத்துச் செல்வது தேவர்களுடைய மனம் ஒப்புக் கொள்ளவில்லை.
ராவணனுக்கு தடங்கல்கள் உருவாக்க முடிவெடுத்தார்கள். திடீரென்று கங்கா தேவி ராவணன் வயிற்றுக்குள் புகுந்து கொண்டாள். தண்ணீர் நிரம்பிய வயிற்றின் பாரத்தை குறைக்க ராவணன் கையிலிருந்த லிங்கத்தை பிராமணனிடம் கொடுத்தான். ராவணன் அந்த பிராமணனை மஹாவிஷ்ணு என்று அறிந்து கொள்ளவில்லை. ராவணன் திரும்புவதற்குள் மஹாவிஷ்ணு லிங்கத்தை பூமியில் ஆழமாக புதைத்து விட்டு மறைந்தார்.
மண்ணில் புதைந்த லிங்கத்தை ராவணன் எடுக்க முயன்றும் தோல்வி அடைந்தான். லிங்கத்தை எடுக்க முடியாததால் சலிப்படைந்த ராவணன் இலங்கையிலிருந்து இந்த இடத்திற்கு வந்து பூஜை செய்தான் என்று புராணங்கள் சொல்லுகின்றன. லிங்கம் புதைந்த இடத்தை வைத்யநாத் ஜோதிர்லிங்கம் என்ற பெயரால் அழைக்கிறார்கள். இந்தக் கோவிலைச் சுற்றி 22 கோவில்கள் இடம் பெற்றுள்ளன. சிவகங்கை குளமும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குளத்தில் நீராடினால் தீராத எந்த வியாதியும் மறைந்து விடும் என்ற நம்பிக்கையோடு பக்தர்கள் இங்கு அதிகமாக வந்து செல்லுகிறார்கள்.