கன்னி - தமிழ் மாத ஜோதிடம்

2024 ஐப்பசி மாத ராசிபலன்

Published On 2024-10-17 02:33 GMT   |   Update On 2024-10-17 02:37 GMT

உதவி செய்வதால் பிறர் உள்ளத்தில் இடம் பிடிக்கும் கன்னி ராசி நேயர்களே!

ஐப்பசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி சூரியனும் இணைந்திருப்பதால் விரயங்கள் கூடுதலாக இருக்கும். விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நேரம் இது.

பகை அதிகரிக்கும். வீடு மாற்றம் ஏற்படும். நெருக்கடி நிலையை சமாளிக்க தன்னம்பிக்கை அவசியம். அரசு வழி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவது போல் இருந்து கை நழுவிச் செல்லலாம்.

செவ்வாய் நீச்சம்

ஐப்பசி 6-ந் தேதி கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், நீச்சம் பெறுவது நன்மைதான். கடன் சுமை குறையும். வழக்குகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.

வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத சந்திப்பால் புதியவர்கள் அறிமுகம் ஆவர். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணியாளர்களின் ஒத்துழைப்பால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

விருச்சிகம் - புதன்

ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் புதன். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறை வேறும்.

இல்லம் தேடி நல்ல தகவல் வரும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை, உயர் அதிகாரிகள் கற்றுத்தருவார்கள். உடன் பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். வழக்குகள் சாதகமாகும்.

சனி வக்ர நிவர்த்தி

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். இதனால் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான சனி பலம் பெறுகிறார். எனவே எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும்.

எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. கை வலி, கால் வலி, மூட்டு வலி என்று ஏதாவது ஒரு தொல்லை இருந்து கொண்டே இருக்கும். இதனால் மருத்துவச் செலவும் கூடும். உறவினர்கள் மூலமாக மனக்கலக்கம் தரும் தகவல் வந்து சேரலாம். விருப்ப ஓய்வில் செல்வது பற்றி சிந்திப்பீர்கள்.

தனுசு - சுக்ரன்

ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும். வாகன யோகம் உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்.

வீடு கட்டுவது, கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமணத் தடை அகலும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு சென்ற மாதத்தைக் காட்டிலும் சிறப்பான மாதமாக இந்த மாதம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு உத்தியோக முயற்சி கைகூடும். குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக அகலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 20, 21, 25, 26, 31, நவம்பர்: 1, 6, 7.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

Similar News