கன்னி - தமிழ் மாத ஜோதிடம்

பங்குனி மாத ராசிபலன்

Published On 2024-03-13 04:54 GMT   |   Update On 2024-03-13 04:58 GMT

நிதானத்துடன் செயல்பட்டு வெற்றியை நிலைநாட்டும் கன்னி ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம் பெற்று வலிமை இழந்து சஞ்சரிக்கிறார். இடையில் வக்ரமும் பெறுகிறார். எனவே தட்டுப்பாடும், தடுமாற்றமும் அதிகரிக்கும். குடும்பப்பிரச்சினை கொடிகட்டிப் பறக்கலாம். 'கடுமையாக முயற்சித்தும் காரியங்கள் முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. 'ஊர் மாற்றம், இடமாற்றம் செய்யலமா?' என்று யோசிப்பீர்கள். நிதானம், பொறுமையுடன் செயல்பட்டால், நிகழ் காலத்தை வளமாக்கிக் கொள்ள இயலும்.

செவ்வாய் - சனி சேர்க்கை

மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், மாதம் முழுவதும் அங்குள்ள சனியோடு இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரக சேர்க்கையால், உத்தியோகம் மற்றும் தொழிலில் எதிர்பாராத மாற்றம் ஏற்படலாம். உடன்பிறப்புகள் வழியிலும், உறவுகளுக்குள்ளும் பிணக்குகள் ஏற்படும். ஒரு சிலருக்கு ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம்.

பணப் பற்றாக்குறையால் விலை உயர்ந்த பொருட்களை விற்க நேரிடும். தொழில் செய்பவர்கள் 'போதிய மூலதனம் இல்லையே' என்று கவலைப்படுவர். சொத்துக்கள் வாங்கும்போது பத்திரங்களை சரி பார்த்து வாங்குவது நல்லது. இதுபோன்ற காலங்களில் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி கவசம் பாடி சனி பகவானை வழிபடுவதோடு, சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானையும் வழிபாடு செய்யுங்கள்.

புதன் வக்ரம்

மீனத்தில் நீச்சம் பெற்று சஞ்சரித்து வரும் புதன், பங்குனி 13-ந் தேதி வக்ரமும் அடைகிறார். உங்கள் ராசிநாதனாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் புதன் வலிமை இழக்கும்போது, எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். உடல்நலத்தொல்லைகள் அதிகரித்து, உற்சாகம் குறையும். ஒவ்வொரு நாளும் புதிய புதிய பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய சூழல் உருவாகும். நல்ல காரியங்கள் நடைபெறுவதுபோல் நம்பிக்கை ஏற்பட்டு, திடீரென மாறுதல் நிகழலாம். எனவே இதுபோன்ற காலங்களில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையும், ஆன்மிகப் பெரியோர்களின் வழிகாட்டுதலும் உங்களுக்கு கைகொடுக்கும்.

மீனம் - சுக்ரன்

பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தன்னுடைய உச்ச வீடான மீன ராசிக்கு செல்கிறாா். அங்கு புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தன - பாக்கியாதிபதியான சுக்ரன் உச்சம் பெறுவது யோகம்தான். இது ஒரு பொற்காலமாக அமையும். எதைத் தொட்டாலும் அதில் லாபம் கிடைக்கும். சொத்துக்களால் மேன்மை, சொந்தங்களால் நன்மை, உத்தியோகத்தில் உயர்வு, நடத்தும் தொழிலில் லாபம் நிகழும் நேரம் இது. இல்லத்தில் சுபநிகழ்வுகளும் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் உள்ளள நல்ல நிறுவனங்களில் இருந்து பணிக்கான அழைப்புகள் வரலாம்.

பொதுவாழ்வில் உள்ளவர்கள், புதிய முயற்சிகளை யோசித்து செய்வது நல்லது. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பூமி பிரச்சினையும், இடமாற்றமும் உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, கேட்ட சலுகைகள் மறுக்கப்படலாம். கலைஞர்களுக்கு மாத கடைசியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல், நல்ல முன்னேற்றத்தை வழங்கும். பெண்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். சொத்துக்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

மார்ச்: 16, 17, 20, 21, 27, 28, ஏப்ரல்: 1, 2, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

Similar News